திருமழபாடி


பண் :

பாடல் எண் : 1

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன் . நெற்றிக்கண்ணன் . பார்வதி பாகன் . விடமுண்ட நீலகண்டன் . காளையை இவர்ந்து எங்கும் திரிபவன் . ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன் . பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்

குறிப்புரை :

` கண் நிறைந்தான் ` எனச் சினைவினை முதன்மேல் நின்றது . ` நிறைந்தான் ` என்பதே பாடம் எனலுமாம் . ` திரிவான் ` என்றது , பழித்ததுபோலப் புகழ்ந்தது ; ` அடியார்க்கு அருள் செய்தற்பொருட்டு எவ்விடத்தும் தோன்றி நிற்பான் ` என்றபடி . ஏழ்மலை , ஏழு தீவுகளைச் சூழ்ந்தவை ; மாறு - பகை . அட்டான் - அழித்தான் . மணாளன் - அழகன் , தலைவனுமாம் . ` தான் , ஏ ` அசை நிலைகள் .

பண் :

பாடல் எண் : 2

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன் . முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன் . கூத்தாடுபவன் . தான் கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலைஉடையவன் . தீயினை உள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள் . எலும்பையும் , பாம்பையும் அணிந்தவன் . அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன் . கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன் .

குறிப்புரை :

கொக்குவடிவாய் இருந்தமையின் , ` குரண்டன் ` எனப் பெயர்பெற்ற அசுரனை அழித்து , அவன் இறகைச் சிவபிரான் தலையில் அணிந்தனன் என்பது புராணவரலாறு . கொல்லை , முல்லைநிலம் . ` அரைமேல் அக்கு ஆடல் உடையான் ` என மாறுக . ` அக்கு ` இரண்டனுள் முன்னதனை எலும்பாகவும் , பின்னதனைச் சங்குமணியாகவுங் கொள்க . மற்று , வினைமாற்று ; அதனால் , ` அடங்கியிருந்த ` என்னும் பொருள் தோற்றியது . ` மற்று ` என்றது இனவெதுகை .

பண் :

பாடல் எண் : 3

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன் . பார்வதி பாகன் . பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன் . பல ஊர்களிலும் பிச்சை எடுக்கும் மேம்பட்டவன் . பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . பிறையைச் சடையில் அணிந்தவன் . எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன் குற்றமே இல்லாதவன் .

குறிப்புரை :

படிறன் - வஞ்சன் ; என்றது , பாம்பையும் அஞ்சுவித்து ஆட்டுதல்பற்றி . பல் ஊர் - பல ஊர்களில் . பலி தேர் - பிச்சையை நாடிச் செல்கின்ற . பரமன் - மேலானவன் ; ` பலி தேர்தலும் மேன்மை யுடையனாதலும் ஆகிய மாறுபட்ட இயல்புகளை ஒருங்குடையவன் ` என்றபடி , ` ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு - நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் ` ( சிவஞானத்தி - சுபக்கம் சூ -1 - 51) என்றது காண்க . செற்றார் - பகைத்தார் . செற்றான் - அழித்தான் . ` மற்று ` என்றது , அசைநிலை .

பண் :

பாடல் எண் : 4

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன் . உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன் . கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன் . தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன் . வில்லால் முப்புரங்களை அழித்தவன் . பிறையைச் சடையில் வைத்தவன் . பார்வதியின் தலைவன் .

குறிப்புரை :

கொலை ஆன - கொல்லுதல் பொருந்திய . குமைத்தான் - அழித்தான் . ` திரிபுரங்கள் ` எனப் பன்மை தோன்றக் கூறியது , ` ஒரு வில்லினால் மூன்று அரண்களை அழித்தான் ` என்னும் நயந்தோன்றுதற் பொருட்டு . ` மலையார் ` உயர்த்தற் பன்மை .

பண் :

பாடல் எண் : 5

உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன் . மகிழ்வோடு பிறருக்கு அருள் செய்பவன் . அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன் . நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன் . இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன் . தேவர்களுக்குத் தலைவன் . எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல் வைத்தவன் .

குறிப்புரை :

உலந்தார் - இறந்தார் . அங்கம் - எலும்பு . நலம் திகழும் - அழகு விளங்குகின்ற . உம்பரார் - மேலிடத்து இருப்பவர் . மலர்ந்து ஆர் - விரிந்து பொருந்தின ; என்றது எங்கும் நிறைந்த என்ற படி . ` எங்கும் ஆம் அண்ணல் தாள் ` ( சிவஞானபோதம் சூ .2. அதி . 1)

பண் :

பாடல் எண் : 6

தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கி நற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்த மலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய் , எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய் , அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய் , நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்திய மானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

தாமரையான் - பிரமன் . சாய்த்தான் - கிள்ளினான் தகவு - தகுதி ; மெய்யுணர்வு . இருக்கை - இருப்பிடம் ; ` இருக்கையாக ` என ஆக்கம் , வருவிக்க ; இத்தொடரால் , ` பிரமன் தலையைக் கிள்ளியது மெய்யுணர்வு பெறுவித்தற் பொருட்டு ` என்பது குறித்தவாறு . ` பூ மலர் ` வினைத் தொகை ; ` பூத்த மலர் ` என்பது பொருள் ; ` திருமாலின் உந்தியிற் பூத்த மலர் ` என்க . ` அதன்கண் தோன்றிய பிரமனால் ஏத்தப்படுபவன் ` என்றதனால் , அக்காரணக் கடவுளர் இருவர்கட்கும் காரணமாய் நிற்பவன் என்பது போந்தது ; ` முழுவதும் - படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை - காப்போற் காக்கும் கடவுள் ` ( தி .8 திருவா . திருவண் .12 - 14.) என்றருளினமை காண்க . ` மெய்யுணர்வு பெற்றபின்பு அவன் ஏத்துவானாயினன் ` என்பது கருத்து ஆகையால் , ` அப் பூ மலரான் ` என எடுத்துக்கொண்டு உரைக்க . இனி , ` மலரான் ` என்பதில் உள்ள ` ஆன் ` என்பதனை மூன்றாம் வேற்றுமை உருபாகக்கொண்டு உரைத்தலுமாம் . இப் பொருட்கு , பூ - பொலிவு ; ஏத்துதலுக்கு , ` யாவராலும் ` என்னும் வினை முதல் வருவிக்கப்படும் . புணர்ச்சிப் பொருள் - சார்தற்குரிய பொருள் ; என்றது , ` நற்பொருள் ` என்றபடி ; நன்மை - இன்பம் . ஏ - அம்பு . மருவ - பொருந்த . சிலை - வில் . இத் தொடரால் , ` வேகியாயும் ( உக்கிரவடிவம் உடையவனாயும் ) நிற்பவன் ` என்பது உணர்த்தியருளியவாறு . ` மா மருவும் கலை ` என்றது , ` விலங்குத் தன்மை பொருந்திய கலை ` என , மானை வெளிப்படுத்தி நின்றது .

பண் :

பாடல் எண் : 7

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் . நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி , ஒளியாகி , ஆகாயமும் ஆகி , நிலமாகி , ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய் , நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

நிழல் - ஒளி . உம்மை , சிறப்பு . பார் - பூமி . பௌவம் - கடல் . பகல் - பகலவன் ; சூரியன் . வான் - மேகம் . இவையெல்லாம் , இறைவன் பெரும்பொருள்கள் பலவுமாகி நிற்கும் பெருநிலையை விளக்குதற்குச் சிலவற்றை எடுத்தோதியருளியவாறு . ` ஆரேனும் ` என்றது , ` உலகியலில் எத்துணைத் தாழ்வுடையராயினும் ` என்றருளிய தாம் . ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங் காண் - ஆரேனுங் காணா அரன் ` ( திருக்களிற்றுப்படியார் . 15). ` அணு ` என்றது , ` நுட்பம் ` என்னும் பொருட்டாய் , சத்தியைக்குறித்தது . ஆதி - உலகிற்கெல்லாம் முதல் ; இதனானே ஐந்தொழில் குறித்து எழும் சத்தி , ` ஆதி சத்தி ` எனப்படுதல் உணர்க . ` வாரார்ந்த வனமுலையாள் பங்கன் ` என்றதும் , அச்சத்திக்குச் சத்திமானாய் நிற்கும் நிலையைக் குறிப்பித்து அருளியதேயாம் .

பண் :

பாடல் எண் : 8

பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய் , ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய் , யானைத் தோலை விரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த் தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

பொன் இயலும் - பொன்னால் இயல்வது போலும் . மின் இயலும் - மின்போல அசைகின்ற . தாங்கரிய சிவம் - பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருள் ; என்றதனால் . ஞாயிற்றின் ஒளி நேரே கண்களால் ஏற்க வியலாததுபோல அவனது பேரருளும் , பேராற்றலும் உயிர்களால் நேரே ஏற்றுக் கோடற்கு இயலாதன . ஆகவே , சத்தியென்னும் நிலை வாயிலாகவே ஒருவாறு ஏற்கப்படும் என்பதாம் . ` மங்கை ஓர் கூறன் ` என்றதும் , இக்கருத்துணர்த்தும் குறிப்பினது என்க . ` பாலுண் குழவி பசுங்குடர் , பொறா தென - நோயுண் மருந்து தாயுண்டாங்கு ... திருந்திழை காணச் - சிற்சபை பொலியத் திருநடம் புரியும் - அற்புதக்கூத்து ` ( சிதம்பர மும்மணிக்கோவை - 1.14 - 21.) என இப்பொருள் விளக்கப்பட்டமை காண்க .

பண் :

பாடல் எண் : 9

ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய் , கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய் , பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் , காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

அடையலர் - பகைவர் . ` அக்காலன் ` என்பதில் , அகரம் பண்டறிசுட்டு . ` காளை ` என்றருளியது . கண்ணைப் பெயர்த்து அப்பும் வீர அன்பினை விரும்பினமைபற்றி . ` பிட்சாடன வடிவிற் சென்ற பொழுது , விடையேறிச் சென்றனன் ` என்பதும் புராண வரலாறு . இனி , ` ஏறி ` என்னும் எச்சம் , ` திரியும் ` என்றதனைச் சிறப்பித்து அடையாய் நின்றதெனக் கொள்ளாது , ` வேறு பொருள்மொழியாய் எண்ணின்கண் நின்றது ` எனக்கொண்டு உரைத்தலுமாம் ; வினையெச்சங்கள் இவ்வாறு நிற்றலும் , ` வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய ` ( தொல் . சொல் . 457.) என்பதனாற் கொள்ளப்படும் . பலி திரியும் - பலிக்கு ( பிச்சைக்கு ) த் திரியும் ; வருமொழி வினையாயவழி வேற்றுமைக்கண் ஒற்றுமிகாமையும் உண்டென்க .

பண் :

பாடல் எண் : 10

ஒருசுடராய் உலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை
யீடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய் , உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று , ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும் , அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து , திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய் , தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான் .

குறிப்புரை :

ஒருசுடர் - ஒப்பற்ற பேரொளி . ஓங்காரத்தின் ( பிரணவ மந்திரத்தின் ) உட்பொருள் , பொருள்களும் பொருள்களைப் பற்றிய நினைவும் தோன்றி நின்று அழிதலைக் குறிப்பது . அத் தோற்றம் முதலிய மூன்றனையும் நிகழ்விக்கும் தலைவன் இறைவனே யாதலின் , அவனே அவ்வுட்பொருளாவன் என்க . ` விரி சுடர் ` என்றது , ஞாயிறு முதலியவற்றின் ஒளியையும் , ` விளங்கு ` என்றது , அவ்வொளிகளை உடைய பொருள்களாகிய ஞாயிறு முதலியவற்றையும் என்க . ` வேள்வு ` என , விவ்விகுதி நீக்கி , வுவ்விகுதி கொடுக்கப்பட்டது . ` ஓடா இலங்கை ` என இயையும் . ` கோன் ` என்பதனோடு இயைப்பினும் அமைவதேயாம் . ஈடு - வலிமை . மருசுடர் , ` மருவு சுடர் ` என வினைத் தொகை . ` சுடர் மருவு மாணிக்கம் ` என்பது கருத்து . ` மாணிக்கக் குன்று ` என்றது , உவமையாகு பெயர் .
சிற்பி