திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே ! தீயில் கூத்து நிகழ்த்துபவனே ! கிட்டுதற்கு அரிய அமுதமே ! கூரிய மழுப்படையை ஏந்துபவனே ! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே ! ஆயிரம் பெயர் உடையவனே ! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே ! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே ! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன் .

குறிப்புரை :

ஆரார் - பொருந்தார் ; பகைவர் . ` நீறாக ` என்னும் ஈறு கெட்ட செயவெனெச்சம் செயப்படுபொருளாய் நின்றது , ` உண்ணக் கண்டேன் ` என்பதிற்போல . ` நோக்கும் ` என்றது , இயைந்து செய்யுங் குறிப்பை உணர்த்திற்று . இனி , ` நீறாம்படி கருதிய ` என்றும் ஆம் . ` அனலாடீ ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் . குறள் - குறுகிய வடிவம் . ` ஆயிரம் ` என்றது அளவின்மையைக் குறித்தது . ` ஐயாறன்னே ` என்பதில் னகரம் , விரித்தல் . அரற்றி - வாய்விட்டு அழைத்து . நைகின்றேன் - மனம் உருகி நிற்கின்றேன் . ` இன்னதொரு தவப்பயன் இருந்தவாறு நன்று ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க . ` நைகின்றேனே ` என்னும் ஏகாரம் , தேற்றம் .

பண் :

பாடல் எண் : 2

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே ! பழையோய் ! பிறைசூடி ! முதல்வா ! முக்கண்ணா ! அம்பு பூட்டிய வில்லினனே ! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ ! என்று இரங்கி அருள்புரியும் ஐயாறனே ! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன் .

குறிப்புரை :

` தீ வாயின் நீறா ` என இயையும் . தீர்த்தன் - தூயோன் . மூவா - முதிராத ; என்றும் இளைதாய் இருக்கும் . ஈண்டும் , ` சூடீ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ஏ ஆர் சிலை - அம்பு பொருந்தும் வில் ; இது , ` பினாகம் ` என்னும் பெயருடையது ` ஆவா ( ஆ ஆ )` என்பது , அவலப் பொருளும் , வியப்புப் பொருளும் தருவதோர் இடைச்சொல் ; ஈண்டுப் பிறர் பொருட்டுத் தோன்றும் அவலப் பொருள் தந்தது . இனி , ` ஆ வாஎன்று அருள் புரியும் ` எனக்கொள்ளினும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.

பொழிப்புரை :

அழகிய நறுமணப் பொடி பூசியவனே ! அடியவர்களுக்கு ஆரமுதே ! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே ! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே ! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே ! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

அம் சுண்ணம் - அழகிய நறுமணப் பொடி ; இது பொன்நிறம் உடையது ; ` திருப்பொற் சுண்ணம் ` என்றது காண்க ( திருவாசகம் .) நாவலர்கள் - பொருள் விரிக்க வல்லவர்கள் ; அவர்கட்கே நான்மறையை உரிமையாக்கினார் என்க . ` அடியார்கட்கு ஆரமுது ` என முன்னர் அருளிச்செய்தமையால் , இங்கு , ` என் நெஞ்சுணர ` என ஒருசொல் வருவித்துரைக்க . உணர - உணருமாறு . உணராதவாறு புக்கிருக்குங்கால் இன்பம் செய்யாமையின் , ` உணரப் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே ` என்றருளிச்செய்தார் . அஞ்சாதே - அஞ்சாதபடி . ஆளுதல் - காத்துப் பணிகொள்ளுதல் . ` காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் ` ( தி .4. ப .1. பா .5.) என முதற்றிருப்பதிகத்தே அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 4

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

பழைய மேல் கடலே ! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே ! விளங்கும் இளம் பிறை சூடீ ! உலகம் முழுதும் நிறைந்தவனே ! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே ! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே ! ஐயாற்றை உகந்தருளி உறை விடமாகக் கொண்டவனே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

தொல்லை - பழமை . தொடு கடல் - வளைந்த கடல் . இனி , ` சகரர்களால் தோண்டப்பட்ட புதிய கடல் ` எனக் கொண்டு , ` இது கீழ்க்கடல் ` எனவும் , பழைய கடல் மேற்கடல் எனவும் ` குணாஅது கரைபொரு தொடுகடல் ` எனவும் ` குடா அது தொன்றுமுதிர் பௌவம் ` எனவும் , ( புறம் - 6.) கூறியாங்கு உரைத்தலும் ஒன்று ; இப் பொருட்கு , ` தொல்லைக் கடல் தொடுகடல் ` எனத் தனித்தனி முடித்து , அவைகளை வேறு வேறு கடலாக உரைக்க . ` எல்லை ` இரண்டனுள் முன்னது உலகத்தையும் , பின்னது உறைவிடத்தையும் குறித்தன .

பண் :

பாடல் எண் : 5

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

சடையில் முடி மாலை அணிந்தவனே ! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே ! அடியவரால் வணங்கப் படுபவனே ! துருத்தியிலும் நெய்த்தானத்திலும் உறைபவனே ! நீல கண்டனே ! தீக் கண்ணனே ! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

இண்டை - முடிமாலை . ` இருசுடரை உடைய ` என்க . ` தொண்டர் தொழப்படுவாய் ` என்றது , பிறர் தொழ வாராமையைக் குறித்தருளியவாறு . துருத்தி , நெய்த்தானம் சோழநாட்டுத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 6

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

பகைவர் திரிபுரத்தை எரித்தவனே ! ஆன்மாக்களுக்குத் தலைவனே ! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே ! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே ! விரைந்து செல்லும் காளை வாகனனே ! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே ! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே ! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

பற்றார் - பொருந்தாதவர் ; பகைவர் . பண்டரங்கன் - பாண்டரங்கம் என்னும் கூத்தை உடையவன் . கற்றவர்கள் இறைவனையே துதித்தல் பற்றி , ` கற்றார்கள் நாவினாய் ` என்றார் . கடு விடை - விரைந்து செல்லும் எருது . ` ஒன்றை ஊர்தியா உடையாய் ` என்க . பற்று ஆனார் - அன்பர் ஆயினார் ; இதனுள் , ` பற்று ` என்பது , பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்ற ஆகுபெயர் , ` இல்லதென் இல்லவள் மாண்பானால் ` ( குறள் - 53.) என்பதிற்போல . அற்றார் - களைகண் இல்லாதவர் ; ` திக்கற்றவர்க்குத் தெய்வம் துணை ` என்னும் பழமொழியையும் நினைக்க .

பண் :

பாடல் எண் : 7

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

தேவர் தலைவனே ! விளங்கும் பிறை சூடியே ! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே ! ஏகம்பத்தில் உறைபவனே ! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே ! ஆன்மாக்களின் தலைவனே ! வெள்ளிய நீறணிந்தவனே ! அண்ணால் ! ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

எண்ணார் - மதியாதவர் ; பகைவர் . எயில் - மதில் ; அரண் . ஈண்டும் , ` பாடீ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` அண்ணா ` என்பது , ` அண்ணல் ` என்னும் பொருளுடைய ` அண்ணன் ` என்பதன் விளிப் பெயர் ; ` பெருமையுடையவனே ` என்பது பொருள் . ` என்று என்று இவ்வாறு சொல்லி அரற்றி ` என உரைக்க .

பண் :

பாடல் எண் : 8

அவனென்று நானுன்னை யஞ்சா தேனை
அல்லல் அறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

வீணன் என்று சொல்லுமாறு , உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே ! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே ! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே ! ஆதியே ! ஐயாற்றுப் பெருமானே ! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

` உன்னை அஞ்சாதேனை , ` நான் அவன் ` என்று அல்லல் அறுப்பானே ` எனக் கூட்டுக . அவன் - அவம் உடையவன் ; வீணன் ; பயனற்றவன் . ` நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால் மோதுவிப்பாய் ` என்று அஞ்சிப் பிழையா தொழுகும் அறிவில்லேனாகிய என்னை , ` இவன் , அறிவது அறிந்து பயன் எய்தும் அறிவு இல்லாதவன் என்று கருதித் திருவுளம் இரங்கிக் கொடிதாகிய சூலை நோயைக் கொடுத்து நல்லறிவு பெறுவித்துப் பின்னர் அந்நோயையும் தீர்ப்பவனே ` என இத்தொடரின் பொருளை விரித்துரைத்துக் கொள்க . ` தீர்ப்பவன் ` என எதிர்காலத்தாற் கூறியது , அன்னதோர் அருள் அவனுக்கு என்றும் உள்ள இயல்பாதலை நினைந்து , இதனுள் , இறைவன் கூற்றில் , ` இவன் ` எனப் படர்க்கையாக அருளற்பாலதனைத் தம் கூற்றாக ` நான் ` எனத் தன்மையில் அருளிச் செய்தார் என்க . ` சிவன் ` என்றது ஈண்டு , ` இன்பத்திற்குக் காரணன் ` எனப் பொருள்தரும் . என்று - என்று உணர்ந்து . எல்லாம் -( உனது புகழ்கள் ) பலவும் . சொல்ல - சொல்லி ஏத்த . செல்வம் - திருவருட்செல்வம் . பவன் - விளங்கித் தோன்றுவோன் . இறுதியில் உள்ள ` அவன் ` என்பது , ` அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது ` ( தாயுமானவர் - 13.) என்பதிற்போல - பலர்அறி சுட்டுப்பெயர் . ` என்று ` என்பதனை , ` ஆதியே ` என்பதனோடுங் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 9

கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.

பொழிப்புரை :

கச்சியில் ஏகம்பத்து உறைபவனே ! கயிலாயனே ! குடந்தை நாகைக் காரோணனே ! நித்திய கல்யாணனே ! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே ! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே ! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே ! அச்சம் , நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

நிச்சல் மணாளன் - என்றும் அழகன் ; என்றும் ஒரு படியனாய் இருப்பவன் ; அழிவில்லாதவன் . ` நித்தமணானர் நிரம்ப அழகியர் ` ( தி .8 திருவாசகம் அன்னைப்பத்து . 3) என்றதும் காண்க . உச்சம் போது ஏறு - ( கடகரியும் பரிமாவும் தேரும் போன்ற ) ஊர்திகள் எல்லாவற்றினும் மேலாக விரைந்து வருகின்ற இடபம் ; இனி , ` உச்சிப் போதின்கண் வெயில்போலும் வெள்ளிதாகிய இடபம் எனலுமாம் . ` நினைத்தல் , உள்குதல் ` என்பவற்றை முறையே , ` ஞாபகம் கொள்ளல் , தியானம் செய்தல் ` என்னும் பொருளுடையனவாகக் கொள்க . ` பிணி ` என்பதன் பின் , ` இரண்டும் ` என்னும் செவ்வெண்தொகை விரிக்க .

பண் :

பாடல் எண் : 10

வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
சுலாவாய தொல்நெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே ! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே ! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே ! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே ! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே ! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே ! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

` சொல்லாடுதல் ` என்பதுபோல . ` வில்லாடுதல் ` என்பது ஒருசொல் ; வில்லை ஆளுதல் என்பது பொருள் . வேடனாகியது அருச்சுனனின் பொருட்டு . சொல்லாய சூழலாய் - சொல்லாகிய இடத்தில் உள்ளவனே ; ` யான் இவ்வாறெல்லாம் சொல்லும் சொற்களாகியும் இருப்பவனே ` என்றபடி . சுலாவு ஆய - பரத்தல் பொருந்திய தொல் நெறி - தொன்று தொட்டு நல்லோர் பலரும் அடிப்பட்டுச் சென்றநெறி . ` எல்லாம் ஆய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் . ` உயிர் ` என்பது ` உயிர்போன்றவன் ` என உவமையாகுபெயர் . அல்லா வினை - சார்தற்கு உரியதல்லாத வினை ; இஃது இனச்சுட்டில்லா அடை . எனவே , ` வினை ` என்றது நல்வினை , தீவினை ஆகிய இரு வினையையும் குறித்தருளியதாம் . நல்வினையும் பிறப்பிற்கு வித்தாகலின் சார்தற்கு உரியதாகாதாயிற்று ; ` இருள்சேர் இருவினையும் சேரா ` ( குறள் - 5) என்றருளினார் திருவள்ளுவ நாயனாரும் .
சிற்பி