திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

உயிரா வணமிருந் துற்று நோக்கி
யுள்ளக் கிழியி னுருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.

பொழிப்புரை :

அயிராவணம் என்ற யானையை இவராது காளைமீது இவர்ந்து தேவர்களுடைய நாட்டை ஆளாமல் திருவாரூரை ஆண்ட ஐயுறாத தன்மையை உடைய நுண்மணல் உருவினனாகிய உண்மைப் பொருளே ! உயிர்ப்பு இயங்காது மூச்சை அடக்கித் தியானம் செய்து உள்ளமாகிய துணியில் உன்படத்தை எழுதிச் சமாதி நிலையில் இருந்து உயிரை உன்னிடம் அடிமை ஓலை எழுதி ஒப்படைத்து உன் கையில் வழங்கி உன்னால் சிறப்பு வகையில் உணரப்படும் அடியாரோடு உடனாய் இருத்தி . என் தலைவனே ! நீ வழங்கிய அருளாகிய கண் கொண்டு உன்னை உணராதவர்கள் உன் இன்பத்தைப் பெறுதற்கு உரியவர் அல்லர் .

குறிப்புரை :

உயிரா வணம் ( வண்ணம் ) - உயிர்ப்பு இயங்காத படி ; மூச்சை அடக்கி . உற்றுநோக்கி - ஒன்றுபட்டுக் கருதி ( தியானித்து ). கிழி - படம் . உள்ளமாகிய படத்தில் . ` உருவெழுதி ` என்றது , உள்ளம் வேறாகாது நீயே ஆக அழுந்தி ; அஃதாவது சமாதி நிலையைப் பொருந்தி . ` உயிரை உன்கைத் தந்தால் ` என்க . ஆவணம் செய்து தந்தால் - அடிமை ஓலை எழுதி , ( அதனோடே ) கொடுத்தால் ; என்றது , ` சிறிதும் பற்றின்றிக் கொடுத்தால் ` என்றபடி . கையாவது , அருள் ; ` நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் - நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் ` ( திருக்களிற்றுப்படியார் - 78) என்றது காண்க . உணரப்படுவார் - உன்னால் சிறப்பு வகையில் உணரப்படுபவர் . இஃது என் அருளிச்செய்தவாறெனின் , ` ஒன்றியிருந்து நினையும் நினைவு நிலையில் யான் என்னும் முனைப்பு நீங்கி அருள் வழியில் நிற்கப் பழகி , பின்னர் உணர்வு நிலையில் அவ்வாறே நிற்கப்பெற்றால் , தன்னால் சிறப்பு வகையில் உணரப்படுவாராகிய அவரோடு உடனாய் விளங்கி நிற்பன் இறைவன் என்றருளிச் செய்ததாம் . உடம்பு நின்றநிலைபற்றிக் கூறலின் , ` உணரப்படு வாரோடு ஒட்டி வாழ்தி ` என , அவர்வழி நிற்பான்போல அருளிச் செய்தார் . ஆகவே , உடம்பு நீங்கியபின் , ` தன்னோடு ஒட்டி வாழச் செய்வான் ` என்பது உணர்ந்து கொள்ளப்படும் . அயிராவணம் - சிவபிரானது யானை ; இஃது இரண்டாயிரங்கோடுகளை உடையது . ` அயிராவணமே ` என்றது , உவம ஆகுபெயர் . இனி , இதற்கு , ` ஐயுறாத தன்மையே ( உண்மைப் பொருளே )` என்றுரைத்தலும் ஆம் . நுண் மணலாலியன்ற சிவலிங்கத் திருமேனியனே என்று உரை செய்தல் இத்தலச் சிறப்பிற்கு ஏற்றதாகும் . ` அயிராவணம் ஏறாது ` என்பது முதல் ` அம்மானே ` என்பது காறும் உள்ளவற்றை முதற்கண் வைத்துரைக்க . ` வாழ்தி ` என்பதன்பின் , ` இங்ஙனம் என்பது வருவித்து இயைக்க . அல்லாதாரே - உனது இன்பத்தைப் பெறுதற்கு உரியர் அல்லாதவரே .

பண் :

பாடல் எண் : 2

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.

பொழிப்புரை :

தீ வினையை உடைய மனமே ! உனக்கும் எனக்கும் முற்பட்ட பகை ஏதேனும் உண்டோ ? கொடி போன்ற இடையையும் மெல்லிய தோள்களையும் மடப்பத்தையும் உடைய இளைய மகளிர் நம் மூப்பினை நோக்கி இகழ்வதன்முன் பயன்பட நினைவாயாக . உலகிலுள்ள தேவர்கள் எல்லோரும் எஞ்சாது கூடித் தலையால் முழுமையாக வணங்கி முன்னிடத்தை அடைந்து அழுது அவன் திருவடிக்கண் பூசனை புரியுமாறு அவன் உகந்தருளியிருக்கின்ற ஆரூரை நினையாது பிறிதொன்றனைப் பழுதுபட நினையாதே !

குறிப்புரை :

எழுதுவோர் , மடலேறும் ஆடவர் . ` கொடி இடையார் ` என்பது , ` மகளிர் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` கொடியிடை யாராகிய இளையார்கள் ` என இயையும் . ஏழை - எளிமை . அவர் இகழ்தல் , முதுமை நோக்கியென்க . ` பழுதுபட நினையேல் ` என்பது , ` பயன்பட நினை ` எனப் பொருள்தந்து நின்றது . பாவிநெஞ்சு - பாவத்தை உடைய மனம் . ` பகை தான் உண்டோ ` என்றது பழுதுபட நினைத்தலை உட்கொண்டு . முழுதுலகில் - உலகம் முழுவதிலும் . அழுதல் அன்பின் செயல் . ` திருவடிக்குச் செய்ய ` என இயையும் . போலும் , அசைநிலை . ` இருக்கின்றான் ஊராகிய ஆரூர் பழுதுபட ( பயன்படா தொழியுமாறு வேறொன்றை ) நினையேல் ` எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 3

தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்
ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே.

பொழிப்புரை :

தேரூர் , மாவூர் , திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி , நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள் . அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய் ?

குறிப்புரை :

` தேரூர் , மாவூர் , திங்களூர் ` மூன்றும் வைப்புத் தலங்கள் . கார் - நீர் . சாயல் - அழகு . கண் ஆர்ந்த - கண்ணுக்கு நிறைந்த . ` கழனி ஓரூர் ` என இயையும் . ` ஓரூர் ` என்புழி நின்ற ஊர் , ஆகுபெயர் . ` ஓரோர் ஊர் ` எனற்பாலதாய அடுக்குத் தொகுத்தலாயிற்று . தேரூரார் , மாவூரார் , திங்களூரார் முதலாக ஓரோர் ஊராராக உலகில் உள்ளவரெல்லாம் ஒருங்குகூடி ` திங்கள் சூடி உமையாட்கு மணவாளனாய் இருப்பவனே ` என்று வாழ்த்தி , ` ஆரூரா ஆரூரா ` என்கின்றார்கள் ; நீ எங்கே உள்ளாய் ; ( அவர்கள் கண்டிலரே ) எனக் கொண்டு கூட்டியுரைக்க . இங்ஙனம் அரிது பொருள்கொள்ள அமைதலும் அருட்டிருப் பாடல்களுக்கு இயல்பென உணர்க .

பண் :

பாடல் எண் : 4

கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே.

பொழிப்புரை :

தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ ? ஊர்வது காளையோ , யானையோ ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன் . அவர் திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ ?

குறிப்புரை :

கோவணம் - கீழ் வாங்கிக்கட்டும் உடை . பொருந்தாதார் வாழ்க்கை - நன்மக்களோடு கூடாதவர் வாழ்க்கை ; இரந்து உயிர்வாழ்தல் . திருந்தாமை - அழகன்மை . இது பண்பியை உணர்த்திற்று . மேலனவற்றோடு இயைய , ` திருந்தியதோ ` என்பது வருவிக்க . வைத்து - படைத்து . ` செந்தீ வண்ணர் அம்மானார்தாம் ( தலைவர் தாம் , ஆயினும் ) அவருக்கு உடையாவது கோவணமோ ` தோலோ - ஊர்வது கொல்லேறோ , வேழமோ - பொருந்தாதார் வாழ்க்கையை மேற்கொண்டிருத்தல் அழகோ . அழகன்றோ - ஊர் பூவணமோ , புறம்பயமோ அன்றாயின் , ஆரூர் ( அப்பெயர் சொல்லப் படுதலின் ) உரிமையானதோ , ஒற்றியோ - ஆமாறு ( உண்மை ) அறியேன் எனக்கொண்டு கூட்டுக .

பண் :

பாடல் எண் : 5

ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்
எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே
புகலூர்க்கே போயினார் போரே ரேறி
ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.

பொழிப்புரை :

மழுப்படையை ஏந்திய பெருமான் இன்னம்பரில் இருந்தார் . ஒளி வீசும் பவள நிறத்தை உடைய அவர் குடமூக்கில் இருந்தார் . நீண்ட சடையை உடைய அப்பெருமானார் வளையல் அணிந்த கைகளை உடைய பார்வதி பாகராக வலஞ்சுழிக்கு வந்தார் . அங்கிருந்து புறம்பயத்துக்கும் அடுத்துப் புகலூருக்கும் போயினார் . போரிடும் காளை மீது இவர்ந்து தம் இருப்பிடத்தை முடிவு செய்தவர் போலத் திருவாரூரிலே குடிபுகுந்துவிட்டார் . அப்பெருமானார் செய்வன யாவும் கண்கட்டுவித்தை போல உள்ளன .

குறிப்புரை :

` மழுவாளராய் ` எனவும் , ` பவள வண்ணராய் ` எனவும் , ` வார்சடையாராய் ` எனவும் எச்சமாக்குக . இன்னம்பரார் முதலிய மூன்று வினைக் குறிப்புக்களிடத்தும் , ` ஆயினார் ` என்பது விரிக்க . ஆய்ந்தே - நிலையாக வாழ்தற்குரிய ஊரைத் தேடிக் கொண்டே . ` பல ஊர்களில் தங்கித் தங்கி , ஆரூரில் குடி புகுந்து விட்டார் ` என்பதாம் . இங்ஙனம் கூறியது பலவிடத்துப் பொதுநிலையில் இருக்கக் கண்ட அவரை , திருவாரூரில் சிறந்து வீற்றிருக்கக் கண்டமைபற்றி என்க . ` திருவாரூர் கோயிலாக் கொண்டது ` எனப் பின்னரும் அருளிச் செய்வார் . இவ்வாறு புக்கதை , ` கண்மாயம் ` என்றது , பிற தலங்களினின்றும் சென்றமை அறியப்படாமையால் என்க . கண் மாயம் - மறைந்தவாறு அறியாதபடி மறைதல் .

பண் :

பாடல் எண் : 6

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.

பொழிப்புரை :

கருப்பையில் துளியாய்ப்புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம் . ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன் . மீண்டும் அடியேனுக்கு ஒரு பிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா ! திருத்தெங்கூராய் ! செம்பொன் ஏகம்பனே ! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன் .

குறிப்புரை :

` கருவாகி ` என்றது , கருப்பையில் துளியாய்ப் புக்க நிலையை . ` குழம்பியிருந்து ` என்பது தொகுத்தலாயிற்று , குழம்பி யிருத்தலாவது , ` கை , கால் , தலை ` முலியன பிரிந்து தோன்றாது நெகிழ்ந்த பிண்டமாய் இருத்தல் . கலித்து - தழைத்து ; அவை பிரிந்து தோன்றி , ` மூளை ` என்புழியும் உம்மை விரிக்க . கருமை , இங்குப் பசுமையைக் குறித்தது . ` ஒன்றாகி ` என்பதனை , ` ஒன்றாக ` எனத் திரிக்க . ` உருவாகி ` என்றது , ` மகனாகி ` என்றவாறு , ` உயிரார் ` என்புழி , ஆர்விகுதி , இழித்தற்கண் வந்தது . கடைபோகாமை இழிபென்க . ` உயிராரும் ` என்னும் சிறப்பும்மையை , ` வளர்க்கப்பட்டு ` என்பதனோடு கூட்டுக . ` கருவாகி ` என்பது முதல் , ` வளர்க்கப்பட்டு ` என்பதுகாறும் , உயிர் , மகனாய்த் தோன்றுதற்கண் உள்ள அருமையை எடுத்தோதியவாறு . அங்ஙனம் தோன்றியும் , அந் நிலையிலே நிலைத்து நில்லாது நீங்குதல்பற்றி , ` கடைபோகார் ` என்றருளிச் செய்தார் . கடைபோதல் - தான் உள்ள துணையும் அவ்வொரு நிலையிலே நிற்றல் . எந்த நேரத்திலும் இறப்பு உளதாதலைக் குறித்து இரங்கியவாறு . இரக்கத்திற்குக் காரணம் , பின்னர் அருளினார் . மருவு ஆகி - பொருந்துதல் ஆகி , ` நின் அடியே மருவாகி ` எனக் கூட்டுக . ` மறவாவண்ணம் ` என்புழி , ` நினைந்து ` என்பது எஞ்சி நின்றது . எனவே , ` இறவாது இப்பிறப்பிலே இருப்பேனாயின் மறத்தல் நிகழாமைபற்றிச் செம்மாந்திருப்பேன் ; அது கூடாதாகலின் , ஒருகால் மீளப் பிறப்பு உண்டாகுமாயின் , மறவாமை கூடுங்கொலோ என நினைந்து மனங் கலங்குகின்றேன் ` என்றருளியவாறாம் . ` துறக்கப் படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இறப்பன் , இறந்தால் இருவிசும் பேறுவன் ; ஏறிவந்து பிறப்பன் ; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோஎன்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே .` ( தி .4. ப .113. பா .7.) எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச்செய்தார் . இதனுள்ளும் , உடலைத் துறத்தல் முதலிய பலவற்றிற்கும் உடம்பட்டு , பிஞ்ஞகன்பேர் மறத்தல் ஒன்றிற்கும் உடம்படாது இரங்கியருளினமை காண்க . மணவாளன் - அழகன் . திருத்தெங்கூர் , சோழநாட்டுத்தலம் . ` செம்பொன்போலும் சிறந்த ஏகம்பம் ` என்க .

பண் :

பாடல் எண் : 7

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

பொழிப்புரை :

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு , அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு , அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள் . தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள் . உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள் . தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள் . கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள் . அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது . செய்யுளாகலின் சுட்டுப்பெயர்கள் ` தலைவன் ` என்பதற்கு முன்வந்தன . நாமம் , ` சிவன் ` என்பது , இச்சொற்றானே வசீகரித்தலையுணர்த்துவது என்றபடி , ` நிறைந்த மங்கலத்தினன் ` என்பது பொருள் . வண்ணம் , பொன் வண்ணம் . ஆரூர் - எல்லாம் நிறைந்த ஊர் . ` பெயர்த்தும் ` என்பதை , ` பெயர்ப்பவும் ` எனத்திரித்து , ` கேட்டவற்றை மீள நினையாது மறக்குமாறெல்லாம் செய்து அவள் மனத்தை யாம் மாற்றவும் ` என உரைக்க . இவ்வாறின்றி , ` பின்னை வண்ணங் கேட்டாள் ; பெயர்த்தும் ஆரூர் கேட்டாள் ` என முன்னே கூட்டியுரைப்பாரும் உளர் ; அவர்க்கு , ` பிச்சியானாள் ` என்பதற்கு முன்னும் ஒரு சொல் வேண்டப் படுவதாம் . ` அவனுக்கு ` என்னும் நான்காவது ஏழாவதன் பொருளில் வந்தது . பிச்சி - பித்தி , நீத்தது மனத்தால் என்க . அகலிடத்தார் ஆசாரமாவது , கன்னியர் இல்வரை இகந்து செல்லாது நிற்றல் . அதனை அகன்றமையாவது தானே இல்லிறந்து சென்று ஆருரை அடையத் துணிந்தமை , தன்னை மறந்தமையாவது , தலைவனையே நினையும் நினைவிலே தான் இது செய்கின்றமை அறியாதொழிந்தமை . தன் நாமமாவது , கன்னி ( நிறை அழியாதிருப்பவள் ) எனப்படுவது . ` தாள ` என்புழி இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது . ` தாளே ` என்னும் ஏகாரம் , பிறவற்றினின்று பிரித்தலின் பிரிநிலை . தலைப்பட்டாள் - அணைந்தாள் . தாளைத் தலைப்பட்டமையாவது , தனக்கென ஒன்றின்றி அவன் வழியளா யொழிந்தமை . இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும் , பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க . நாமம் பொதுவில் உணரப்படுவது , வண்ணம் சிறப்பாக ஆய்ந்துணரப்படுவதும் , பித்து அதனில் அழுந்துதலும் ஆதல் உணர்க . அன்னை திரோதான சத்தியும் , அத்தன் தடத்த சிவனும் என்க . அகலிடத்தார் ஆசாரம் , தன் முனைப்பில் நின்று வினைகளையீட்டியும் நுகர்ந்தும் பிறப்பிறப்புக்களில் உழலுதல் . தன்னை மறத்தல் , தானொரு பொருள் உண்மையையும் , உண்டாகி அறிந்து நிற்றலையும் மறந்து முதல்வன் ஒருவனையே அறிந்து நிற்றல் . தாள் - முதல்வனது உண்மை இயல்பு ; அஃது இன்ப வடிவினதாதல் அறிக . ` நாமம் கேட்டல் ` முதலிய நான்கையும் , ` சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 8

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமானே ! நீ கூத்தாடுவாய் , வேதம் வல்லார் விதிப்படி செய்ய வேண்டும் அளவிற் குறையாமல் உன் நிவேதனத்திற்குரிய அவியைச் சமைப்பார்கள் . தும்புருவும் நாரதன் முதலியோரும் உன் பெருமையைப் பாடுவர் . தேவர்களும் தேவேந்திரனும் உன்னை முன் நின்று துதிப்பார்கள் . திருமாலும் பிரமனும் உன்னைத் தேடுவார்கள் . மலைமகளும் கங்கையும் உன்னைத் தழுவுவார்கள் . இவ்வளவு செய்திகளையும் அடியேன் அறிந்துள்ளேன் . ஆதலின் நாய்போலும் அடியவனாகிய நான் செய்யும் சிறுபணிகள் உனக்கு ஏற்குமோ ? ஏலாவோ ? அறியேன் .

குறிப்புரை :

அளவில் குன்றா - விதிப்படி செய்யவேண்டும் அளவில் குறையாமல் . ` குன்றாது ` என்பது ஈறு குறைந்து நின்றது . அறிந்தேன் - கண்டேன் . ` நாரதாதி ` என்புழி , ` வல்லுநர் ` என்பது வருவிக்க . கூடுமே - உனக்கு ஏற்குமோ , குற்றேவல் - சிறு பணிகள் . குடி கொண்டீர்க்கு என்பது ஒருமைப் பன்மை மயக்கம் . ` நீ நட்டம் ஆடுவாய் ; மறையோர் அவி அடுவார் ; நாரதாதியர் உன்னைப் பாடுவார் ; அமரர்களும் , அமரர்கோனும் உன்னைப் பரவுவார் ; திருமாலும் நான்முகனும் உன்னைத் தேடுவார் ; மலைமகளும் , கங்கையாளும் உன்னைத் தீண்டுவார் ; இவைகளை எல்லாம் கண்டேன் ; ஆதலின் , நாய் போலும் அடியவனாகிய யான் செய்யும் சிறு பணிகள் உனக்கு ஏற்குமோ ` என முடிக்க . இத்திருப்பாடலால் , சுவாமிகள் இறைவனது பெருமையையும் , உயிர்களது சிறுமையையும் உள்ளவாறுணர்ந்து நின்ற மெய்யுணர்வும் , அவ்வுணர்வினால் இறைவனுக்குச் செய்த உண்மைத் திருத்தொண்டின் ஆர்வமும் இனிது புலனாகும் .

பண் :

பாடல் எண் : 9

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்
உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமானே ! கங்கை தங்கும் செந்நிறச் சடையனே ! நெற்றியில் கண்ணுடையவனே ! நிலாத்திங்கள் துண்டம் ஆகிய பிறை சூடியே ! உன்னைத்தேடி நீ இருக்கும் இடத்தை ஆராய்ந்தவாறே , ஓர் ஊர்கூட எஞ்சாமல் உலகம் முழுதும் எங்கும் திரிந்து , உன்னைக் காண்பதற்குத் தேர்கள் உலவும் பரந்த விதிகளிலே காத்திருந்து , திருமாலும் பிரமனும் கூட முயன்றும் காண இயலாதவர்களாய் , ` தேவர்கள் தலைவனே ` ஆரூரா ! ஆரூரா ! என்று அழைக்கின்றார்கள் .

குறிப்புரை :

நிலா - சந்திரனது ஒளி . திருமாலும் நான்முகனும் , நின்னை ஓர் ஊரும் ஒழியாமே தேடி , எங்கும் ஒற்றித்து , உலகமெலாந் திரிதந்து தேர்ந்துங் காணாது , தேரூரும் நெடுவீதி பற்றி நின்று , ` ஆரூரா ஆரூரா ` என்று ஓலமிட்டு நிற்கின்றார்கள் ; அவர்கள் அங்ஙனம் நிற்குமாறு நீ ஆரூரிடத்தினையாய் உள்ளாய் என முடிவு செய்க . ` ஒற்று வித்து ` என்பது ` ஒற்றித்து ` எனக் குறைந்து நின்றது . ஒற்று வித்தல் - ஒற்றரை விடுத்து உண்மையறியச்செய்தல் .

பண் :

பாடல் எண் : 10

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

பொழிப்புரை :

நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து , பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து , சேற்றூரில் பலர் காண நின்று , தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று , பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி , பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற் காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார் .

குறிப்புரை :

பழையாறு , சேற்றூர் , மணற்கால் , தளிச்சாத்தங்குடி இவை வைப்புத்தலங்கள் ; ` தனிச்சாத்தங்குடி ` என்பதும் பாடம் . தாம் ( திருவாரூர்ப் பெருமானார் ) ` நல்லூரில் நட்டம் இட்டு , பழையாற்றில் ஏறேறி , பல்லூரில் பலிதிரிந்து , சேற்றூரில் பலர்காண நின்று , தலையாலங்காட்டில் ஊடே மறைந்துநின்று , பெருவேளூர்த் தளியிலே ( கோயிலிலே ) விரும்பித் தங்கி , பட்டீச்சுரத்தில் இராப் பொழுதைக் கழித்து , மணற்காலில் நுழைந்து , தளிச்சாத்தங்குடி வழியாக யாவருங் காண நடந்து , ஒரு நொடிப்பொழுதில் திருவாரூரை அடைந்தார் ` என முடிவு கூறுக . இடையில் வேண்டும் சொற்கள் , சொல்லெச்சமாக வந்து இயையும் . நல்லூர் , தலையாலங்காடு , பெருவேளூர் , பட்டீச்சரம் இவை சோழநாட்டுத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 11

கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்
கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடி
உமையவளை யச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த் தானந்
திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடரவேறி
யப்பனார் இப்பருவ மாரூ ராரே.

பொழிப்புரை :

கரிய படப்புள்ளிகளை உடைய , கோபிக்கும் பாம்பினைக் கையில் கொண்டு , பார்வதியை அச்சுறுத்திய பெரிய மலையைப் போன்ற மத யானை பிளிறும்படியாக அதன் தோலை உரித்துச் சிவந்த தம் மேனி மீது பொருந்தப் போர்த்து ஒளி பொருந்திய திருமேனியை உடைய செல்வராம் சிவபெருமானார் திருத்துருத்தி , திருப்பழனம் , திருநெய்த்தானம் , திருவையாறு என்ற திருத்தலங்களை உறைவிடமாகக் கொண்டு இந்நாளில் தசை மடிப்பால் கீற்றுக்கள் அமைந்த பிடரியை உடைய வெண்ணிறக் காளையை அது சுமக்குமாறு இவர்ந்து , இப்பொழுது திருவாரூரை உகந்தருளியிருக்கிறார் .

குறிப்புரை :

` கருந்துத்தி ` என்பது வலித்து நின்றது . ` கருநாகம் ` என இயையும் . துத்தி - படத்தில் உள்ள புள்ளிகள் ; கதம் - சினம் . அரிப்பு எருத்தம் - ( தசை மடிப்பால் ) கீற்றுக்கள் அமைந்த பிடர் . அடர - சுமக்க . பருவம் - காலம் ; ஊழி . இது முதலாகப் பல திருப்பதிகங்களிலும் , திருவாரூர் சிவபெருமானது முதலிடமாக இனிதெடுத்து விளக்கி யருளும் குறிப்புக் காணப்படுதல் , மிகவும் உற்று நோக்கத்தக்கது , ` திருவாரூர்த் திருமூலட்டானம் ` எனக் கூறப்படுதலும் கருதத்தக்கது . தில்லையே , ` கோயில் ` என வழங்கப்படினும் , திருவாரூர் அதனினும் பழைய கோயிலாதல் திருப்பதிகங்களாலும் , நாயன்மார்களது வரலாறுகளாலும் இனிது கொள்ளக்கிடக்கின்றது . துருத்தி , பழனம் , நெய்த்தானம் , ஐயாறு இவை சோழநாட்டுத் தலங்கள் .
சிற்பி