பொது


பண் :

பாடல் எண் : 1

புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனுமாகிய இருவரும் அழகு பொருந்திய ஒளிச்சுடர் நிறம் உடைய பெருமானைப் புகுந்து அணைந்து விரும்பி மலரிட்டு வணங்கிலராய் , மகிழ்ந்து பொருந்தி மணமலர்களைக் கொய்து அருச்சித்திலராய் ஆணவமிகுந்து காண முயன்று காண்கிலராயினார் .

குறிப்புரை :

புக்கணைந்து - இறைவன் இருக்குமிடத்தே உள்ளே புகுந்து நெருங்கி . புரிந்து - விரும்பி . அலர் - மலர் . நக்கு - மனம் மகிழ்ந்து . அணைந்து - நந்தவனமடைந்து . நறுமலர் - மணமலர் . சொக்கு - அழகு . மிக்கு - பிறரின் தருக்கால் மிக்கு . இருவர் - திருமால் , பிரமன் .

பண் :

பாடல் எண் : 2

அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்
செலவு காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலக மூர்த்தியாகிய ஒளிநிற வண்ணம் உடைய இறைவனைப் பூவும் நீரும் கொண்டு அபிடேகித்துத் தெளிவடைந்திலராய்த் திருச்சாந்து தீட்டித் திரிந்திலராய்ச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார் ..

குறிப்புரை :

அலர் - பூ . ஆட்டி - அபிடேகித்து . தெளிந்திலர் - அறிவு தெளியப்பெற்றாரில்லை . திலகமண்டலம் - பொட்டு . தீட்டி - எழுதி . ஒப்பனை செய்து . திரிந்திலர் - வலமாகச் சுற்றவும் செய்யாதவர்கள் . ஒளிநிறம் - ஒளிவடிவான நிறம் . செலவு காணலுற்றார் - மேலும் கீழுமாகிய வான் நிலம் சென்று காணத் தொடங்கினர் . இருவர் - திருமால் , பிரமன் .

பண் :

பாடல் எண் : 3

ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலகங்களைக் காவல்கொள்ளும் கபாலியாகிய பெருமானின் திரு வேடத்தைக் காணலுற்றார்கள் . சாணநீரோடு , திருவலகும் கைகளிற் கொண்டு வணங்காதவராய்ப் பூக்கள் பெய்த கூடையைப் புனைந்து சுமந்திலர் . முனைப்புடன் காணமுயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

ஆப்பி - பசுவின் சாணம் . அலகு - கூட்டுதல் . திருவலகிடுதல் , திருமெழுக்கிடுதல் ஆகிய சரியைத் தொண்டுகள் . பூப்பெய் கூடை - பூக்கள் பறித்துப்பெய்து நிரப்பிய கூடை . புனைந்து - திரு மாலை தொடுத்து . சுமந்திலர் - பெருமானுக்குச் சுமந்து செல்லாதவராயினர் . காப்புக்கொள்ளி - காவல் மேற்கொண்டு . கபாலி தன் வேடத்தை - பிரம கபாலத்தைச் சுமந்துகொண்டு திரியும் பிக்ஷாடனரின் திருவுருவத்தை . ஓப்பிக்காணலுற்றார் - பாதுகாத்துக் காணத் தொடங்கினர் . காப்பு - திருநீறு .

பண் :

பாடல் எண் : 4

நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் நெய்யும் பாலும் கொண்டு அபிடேகித்து நினைந்திலராய்ப் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலராய் ஐயனாகிய வெப்பமுடைய அழலின் நிறம் கொண்ட இயல்புடைய பெருமானது மெய்ம்மையைக் காணலுற்றுக் காண்கிலராயினார் .

குறிப்புரை :

ஆட்டி - அபிடேகம் செய்து . நினைந்திலர் - நினையாராயினர் . பொக்கம் - வஞ்சக வார்த்தை . போக்கி - நீக்கி . ஐயன் - தலைவன் . வெய்ய - வெம்மையை உடையதான . அழல்நிற வண்ணன் - நெருப்புப்போலும் சிவந்த ஒளிவடிவாய்த் தோன்றியவன் . மெய்யை - உண்மையின் வடிவானவனை .

பண் :

பாடல் எண் : 5

எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் எருக்க மாலை கொண்டு இண்டை புனைந்து வழிபடாதவராய் அழகு பெருக்குதற்பொருட்டுக் கோவணம் கிழித்து உடுத்தாதவராய் ஆணவத்தினாற்சென்று சடைதாழ்கின்ற அண்ணலாராகிய பெருமானைத் தத்தமில் நெருக்கிச்சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

எருக்குக் கொண்டு - வெள்ளெருக்குப் பூவைக் கொண்டு . கண்ணியாகிய இண்டை - தலைமாலையாகிய இண்டை . புனைந்திலர் - கட்டிச் சூட்டினாரில்லை . பெருக்கக் கோவணம் - பெரிதாய்க் கோவணத்தை . பீறி - கிழித்து . உடுத்திலர் - சூட்டினாரில்லை . தருக்கு - செருக்கு . தாழ் - தொங்குகின்ற . நெருக்கி - நெருங்கி .

பண் :

பாடல் எண் : 6

மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறிவுடன்கூடி ஒளிநிற வண்ணனாகிய பெருமானை , மரங்களில் ஏறி மலர்பறித்திட்டிலராய் , நிரம்ப நீர் சுமந்து அபிடேகித்து நினைந்திலராய் ஆணவம் நிரம்பக் காண முயன்று காண்கிலர் ஆயினர் .

குறிப்புரை :

மரங்கள் - பூமரங்கள் . நிரம்ப - நிறைய . ஆட்டி - அபிடேகித்து . நினைந்திலர் - நினையாதவராயினார் . உரம் - செருக்கோடு கூடிய வலிமை . நிரம்ப - முழுமையாய் .

பண் :

பாடல் எண் : 7

கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கட்டுவாங்கமும் கபாலமும் கைக்கொள்ளாதவராய் , எட்டுறுப்புக்களும் நிலத்துப்படக்கிடந்து அடிதாழாதவராய் இறைவன் சேவடியும் திருமுடியும்காணுதற்குச் சென்றெய்திப் பொருந்திய துயரங்கள் உற்றார் அடிமுடி காண்கிலர் .

குறிப்புரை :

கட்டுவாங்கம் - கையில் அணியும் ஓர் ஆயுதம் . கபாலம் - மண்டையோடு . கைக்கொண்டிலர் - தாங்கியிருக்கும் உண்மையை உணராராயினர் . அட்டமாங்கம் கிடந்து - எட்டு உறுப்புக்களும் நிலத்திலே படிய வீழ்ந்து . அடி வீழ்ந்திலர் - திருவடிகளை வணங்காராயினர் . சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் . காணிய - காணும் பொருட்டு . பட்டகட்டம் - உண்டான துன்பங்கள் பலவற்றையும் .

பண் :

பாடல் எண் : 8

வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமல ரிண்டை புனைந்திலர்
எந்தை யேறுகந் தேறெரி வண்ணனை
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் வெந்த திருநீறு விளங்க அணியாதவராய் , மணமிக்க மலர்களால் இண்டை மாலை புனையாதவராய் எந்தையாகிய ஏறுகந்து ஏறும் எரிவண்ணனாகிய பெருமானின் ஆதியும் அந்தமும் காண இயலாதவர் ஆயினார் .

குறிப்புரை :

வெந்தநீறு - திருநீறு . கந்தமாமலர் - மணம் பொருந்திய சிறந்த மலர் . இண்டை - தலைமாலை . எந்தை - எனக்குத் தந்தையாவான் . ஏறு உகந்து ஏறு - இடபத்தை விரும்பி ஊர்ந்து செல்லும் . அந்தம் - அடி முடிகளின் முடிவிடங்கள் .

பண் :

பாடல் எண் : 9

இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் இளமையோடுகூடி எழுந்து கரிய குவளை மலர்களைப் பிளந்து இதழ்களால் பிணைத்துத் திருவடியில் இட்டு வணங்காதவராய் களவு செய்யும் தொழிலை உடைய காமனைக் காய்ந்த பெருமானது அளவினைக் காண முயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

இளவெழுந்த - எழுந்த இளமைத்தன்மையோடு கூடி எழுந்த . இரும் - கரிய . பிளவுசெய்து - விரித்து . பிணைத்து - கட்டி . களவுசெய்தொழில் - காதலுணர்ச்சியைத் திருட்டுத் தனமாய்ச் செய்யும் . காய்ந்தவன் - சினந்து எரித்தவன் . அளவு - அடிமுடியின் அளவுகள் .

பண் :

பாடல் எண் : 10

கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி யழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கண்டி அணிந்து கபாலம் கையிற்கொள்ளாதவராய் வெண்மை விரிந்த சங்கம் விம்முமாறு வாயில் வைத்தூதாதவராய் அண்டமூர்த்தியாகிய தீ நிறவண்ணனை மண்ணில் கிண்டியும் விண்ணில் பறந்தும் காண முயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

கண்டி - உருத்திராக்கமாலை . பூண்டு - அணிந்து . விண்ட - வாய் விரிந்த . வான் சங்கம் - வெள்ளிய சங்கு . விம்ம - ஒலிக்க . வாய் வைத்திலர் - வாயின்கண் வைத்து ஊதினாரில்லை . அண்டமூர்த்தி - எல்லா உலகங்களின் வடிவானவன் . கெண்டி - கிண்டி .

பண் :

பாடல் எண் : 11

செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.

பொழிப்புரை :

செங்கண் உடையவனாந் திருமாலும் , பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறு பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் ` இங்கு உற்றேன் ` என்று இலிங்க வடிவில் தோன்றினான் .

குறிப்புரை :

செங்கணான் - திருமால். இலிங்கத்தே - சிவ இலிங்கத் திருவுருவத்தின்கண்ணே. பொங்கு - மிக்க. புண்ணியமூர்த்தி - புண்ணியந்திரண்ட வடிவான தலைவன்.
சிற்பி