திருக்கானூர்


பண் :

பாடல் எண் : 1

திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே. 

பொழிப்புரை :

கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன்.

குறிப்புரை :

திருவின் நாதனும் - திருமகள் கணவனாகிய திருமாலாயும். உருவனாய் - உலகத்தின் உயிரெலாம் படைக்கும் பிரமனாயும்; உலகத்தின்கண் உள்ள எல்லா உயிர்கட்கும் உரு உடம்போடு வந்து அருள் செய்பவனாயும் எனலுமாம். கருவனாய் - எல்லாவற்றிற்கும் கருப்பொருளாயும். முளைத்தவன் - தோன்றியவன். பரமனாய - மேலானவனாகிய. பரஞ்சுடர் - சிவபரஞ் சுடரேயாவன்.

பண் :

பாடல் எண் : 2

பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென்று கவன்மி னேழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பி லொதுங்கியே. 

பொழிப்புரை :

அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்; தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்).

குறிப்புரை :

பெண்டிர் - மனைவியர். பெருந்துணை - உற்ற விடத் துதவும் பெருமைக்குரிய நண்பர் முதலாயினார். நன்னிதி - நல்ல செல்வம். உண்டின்றே என்று - இன்று உள்ளதே என்று. உகவன்மின் - மகிழ்வு கொள்ளாதீர். ஏழைகாள் - அறியாமையுடையவர்களே. கண்டு கொள்மின் - உள்ளவாறு உணர்ந்து வழிபடுங்கள். கானூர் முளை - கானூரில் தோன்றியிருப்பவன். புண்டரீகப் பொதும்பில் - திருவடியாகிய தாமரைக் காட்டில் தங்கி. கண்டுகொள்மின் என்க. ஒதுங்கி - உலக பந்தபாசங்களின்றும் நீங்கி.

பண் :

பாடல் எண் : 3

தாயத் தார்தமர் நல்நிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.

பொழிப்புரை :

பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக.

குறிப்புரை :

தாயத்தார் - முன்னோர் தேடிய பழம்பொருளின் பாகஸ்தர். தமர் - சுற்றத்தார். இம்மாயத்தே - இப்பொய்மையின் கண்ணே. கிடந்திட்டு - பொருந்தி வருந்திக்கொண்டு. மயங்கிடேல் - அறிவு மயங்காதே. காயத்தே - உன் உடலிடத்தே. உளன் - அருவமாய் எழுந்தருளியுள்ளான். வாயத்தால் - உண்மை அன்பால். மாய - அழிய.

பண் :

பாடல் எண் : 4

குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே. 

பொழிப்புரை :

இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர் முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும்.

குறிப்புரை :

குறியில் - குறிக்கோள் இல்லாத சமண்நெறி என்க. நின்று - மேற்கொண்டு ஒழுகி. கூறை - ஆடை. இலா - இல்லாத. சமண் நெறி - சமண்சமய ஒழுக்கம். நிறைகழல் - காலில் நிறைந்து அணியும் கழல். அறியலுற்றிரேல் - நீவிர் அறிய விரும்பினீரேயானால். கானூர் முளையவன் - கானூரின்கண் எழுந்தருளியுள்ளவன். செறிவு செய்திட்டிருப்பது - பொருந்தி எழுந்தருளியிருப்பது. என் சிந்தையே - என் சிந்தையின் கண்ணேயாகும்.

பண் :

பாடல் எண் : 5

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று வியந்திட லேழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும்.

குறிப்புரை :

பொத்தல் - ஓட்டைகளை உடைய. மண்சுவர் - மண்சுவராலாகிய. பொல்லாக் குரம்பை - தீமைகளை விளைக்கின்ற சிறுவீடு போன்றதாகிய உடலை. ஒன்பது ஓட்டைகளையும் அழிந்து படக்கூடிய தன்மையையும் உடையது உடல். உயிர் அதனுள் இருந்து நீங்குவதாகிய இயல்புபற்றி உடலை வீடு என்றார். மெய்த்தன என்று - உண்மையானது என்று. வியந்திடல் - வியவாதே. ஏழைகாள் - அறிவில்லாதவர்களே. சித்தர்களும் பத்தர்களும் வாழ்கின்ற கானூர் என்க. கருமம் - நாம் செய்தற்குரிய செயல்.

பண் :

பாடல் எண் : 6

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்
செல்வம் மல்கு திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக லும்மிசை வானவா
சொல்லி டீர்நுந் துயரங் கள்தீரவே. 

பொழிப்புரை :

கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில் இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக.

குறிப்புரை :

கல்வியாகவும், ஞானமாகவும், கலைப்பொருளாகவும் ஆயவன் என்க. கல்வி - நூல்களும் அறிதற்குரியனவும். ஞானம் - கல்வியால் விளையும் அறிவு. கலைப்பொருள் - கல்வி முதலிய கலைகளால் உணரப்படும் பொருள். எல்லி - பகல். இசைவு ஆனவா - நமக்குப் பொருந்தியவாறு. சொல்லிடீர் - அவன் புகழைச் சொல்லுவீராக. தீர - நீங்க.

பண் :

பாடல் எண் : 7

நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதங் கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி யாது திசைதிசை
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே. 

பொழிப்புரை :

நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் `சேர்தும்` என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர்.

குறிப்புரை :

பார் - உலகம் (மண்). அருக்கன் - சூரியன். கார் - மேகங்கள். மாருதம் - காற்று. நீர், பார், நெருப்பு, அருக்கன், கார்மாருதமாய் முளைத்தவன் என்க. சேர்வு - தங்கியிருக்கும் ஓரிடம். ஒன்றறியாது - ஒன்று எனவைத்துக்கொள்வதை அறியாமல். திசைதிசை - பல திசைகளிலும். ஓர்வு - ஆராய்ச்சி.

பண் :

பாடல் எண் : 8

ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. 

பொழிப்புரை :

வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன்.

குறிப்புரை :

ஓமத்தோடு - வேள்வி முதலிய செய்தலோடு கூடியவனாய; ஓம் என்கிற அந்தமந்திரத்தை முதலிலுடைய வேதமும் எனலுமாம். அயன் - பிரமன். வீமப்பேரொளி - மிக்க பேரொளி. காமற் காய்ந்தவன் - மன்மதனை எரித்தவன். சேமத்தால் இருப்பாவது - பாதுகாவலோடு கூடிய அவன் இருக்குமிடமாவது. சிந்தை - மனம்.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

வன்னி கொன்றை யெருக்கணிந் தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவ னொண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.

பொழிப்புரை :

இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன்.

குறிப்புரை :

எருக்கு - எருக்க மலர். `வெள்ளெருக்கரவம் விரவும் சடை` என்றார் பிறிதோரிடத்தும். மலை - கயிலைமலை. உன்னியே சென்று - நினைவு கூர்ந்தவனாய் அருகிற் சென்று. எடுத்தவன் - தூக்கியவன். ஒண்திறல் - விளங்கிய வலிமை. தன்னை - இராவணனை. வீழ - கீழே விழும்படி. கன்னிமாமதில், சமாதி என்னுமலங்காரம்; புதிய மதில் என்றும், பிறர் நெருங்கா மதில் என்றும் பொருள்படுதல் அறிதற்குரியது.
சிற்பி