திருக்குரக்குக்கா


பண் :

பாடல் எண் : 1

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.

பொழிப்புரை :

மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி , தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல் , கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய , குற்றங்கள் கெடும் .

குறிப்புரை :

மரக்கொக்காமென - மரத்தின்கண்ணே உறையும் கொக்குப் போல . வாய்விட்டலறி - ஓலமிட்டு . சரக்கு காவி - இவ்வுலக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பச் சரக்குகளைச் சுமந்து . சினமென்னும் சரக்கை ஏற்றி என்றார் பிறிதோரிடத்தும் . அயராது - வருந்தாது . கால்பரக்கும் - பல கால்வாய்களாகப் பிரிந்து விரியும் .

பண் :

பாடல் எண் : 2

கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
முட்டா றாஅடி யேத்த முயல்பவர்க்
கிட்டா றாஇட ரோட எடுக்குமே.

பொழிப்புரை :

கட்டப்பட்ட கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும் நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த முயலும் அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன் .

குறிப்புரை :

கட்டாறே - கரையாகக் கட்டிவிடப்பட்ட வழி யிலேயே . கழி - செல்லுகின்ற . கொட்டாறே - கொட்டித் தோண்டுமிடந் தோறும் . முட்டாறா - குற்றம் நீங்கிய நெறியிலே . இட்டாறா - விருப்பத்தின்படியே .

பண் :

பாடல் எண் : 3

கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

கையனைத்தும் - இரு பக்கங்கள் எங்கணும் . கலந்தெழு - சென்று பரவித்தோன்றுகின்ற . செய் - வயல் . கொய் - மீன் இனங்களில் ஒன்று . செம்புனல் கொணரும் என்க . ஐயன் - அழகியன் அல்லது தலைவன் . அல்லல் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 4

மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே.

பொழிப்புரை :

அனைத்துத் திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின் கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும் .

குறிப்புரை :

அனைத்துத்திசையும் மிக்கு - எல்லாத் திசைகளிலும் சென்று மிகுந்து . அருவிகள் புக்குக் காவிரிபோந்த - பல அருவிகளைக்கொண்டு பெரிதாகிக் காவிரியாறு ஓடிவந்த . புனற்கரை - தண்ணீர்க் கரையில் . இனம் - கூட்டம் .

பண் :

பாடல் எண் : 5

விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

வெள்ளம் பொருந்தி விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து , மாமுழவுகள் கொட்ட ஓங்கும் குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை .

குறிப்புரை :

வெள்ளம் விட்டு - வெள்ளமாய்ப் பெருகி . விரிந்து எழு - பரந்து தோன்றுகின்ற . காவிரி இட்ட நீர் - காவிரியாறு தந்த தண்ணீர் . கொட்ட - அடிக்க . மாமுழவு - பெரிய முழவு என்னும் வாச்சியம் . ஓங்கும் - ஒலி மிகுகின்ற . இட்டமாயிருப்பார்க்கு - விருப்பமாயிருப்பார்க்கு .

பண் :

பாடல் எண் : 6

மேலை வானவ ரோடு விரிகடல்
மாலும் நான்முக னாலும் அளப்பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

மேல் உலகத்திலுள்ள தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும் , நான்முகனும் ஆகியவராலும் அளக்க வியலாத பெருமான் உறைவதும் , அழகு மிக்க மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

மேலைவானவரோடு - மேல் உலகின்கண் உள்ளவராய தேவரோடு . விரிகடல் மால் - விரிந்த திருப்பாற் கடலின்கண் உறங்கும் திருமால் . அளப்பொணா - அளத்தற்கரிய . கோல மாளிகை - அழகிய மாடவீடுகள் . கோயில்பாலராய் - கோயிலுக்குச் சென்று வழிபடும் பாலராய் .

பண் :

பாடல் எண் : 7

ஆல நீழ லமர்ந்த அழகனார்
கால னையுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைக ளாலுங் குரக்குக்காப்
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.

பொழிப்புரை :

கல்லால நிழற்கீழ் அமர்ந்த அழகரும் , காலனை உதைத்தலைக் கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர் .

குறிப்புரை :

ஆலநீழல் - கல்லாலின் நிழலில் . காலனை - இயமனை . கருத்தனார் - கருத்தாயிருப்பவர் . கோலமஞ்ஞைகள் - அழகிய மயிலினங்கள் . ஆலும் - ஆடும் . குரக்குக்காப்பாலர் - குரக்குக்காவை அடைந்தவர் . பரிவோடு - இரக்கத்தோடு .

பண் :

பாடல் எண் : 8

செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்க ரையரெம் மாதி புராணனார்
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

செவ்வானத்தைப் போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும் , அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும் , ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும் , கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம் .

குறிப்புரை :

செக்கர் அங்கெழு - அந்திவானத்தின் அழகு கெழுமிய . அக்கரையர் - அக்குமணிகளை இடையிலே கட்டியவர் . ஆதி புராணனார் - பழமையான முதல்வர் .

பண் :

பாடல் எண் : 9

உருகி யூன்குழைந் தேத்தி யெழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா
இரவு மெல்லியு மேத்தித் தொழுமினே.

பொழிப்புரை :

திருநீலகண்டன் கழலணிந்த பாதங்களை நீர் உருகி , உடல் குழைந்து ஏத்தி எழுவீராக . நம் செழுங்கோயிலாகிய குரக்குக் காவில் வீற்றிருக்கும் பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக .

குறிப்புரை :

உருகி - மனமுருகி . ஊன்குழைந்து - உடல் வாடி . ஏத்தி எழுமின் - வாழ்த்திச் செல்லுங்கள் . குராவனம் குரவனம் என்றாயது . குராமரங்கள் நிறைந்த சோலை . ஆழ்ந்த வளவிய கோயில் என்க . குரவன் அம்செழுங் கோயில் எனப்பிரித்து குருநாதனாகிய பெருமான் எழுந்தருளிய அழகிய வளவிய கோயில் எனலுமாம் . எல்லி - பகல் .

பண் :

பாடல் எண் : 10

இரக்க மின்றி மலையெடுத் தான்முடி
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடம்
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற வானுல காள்வரே.

பொழிப்புரை :

மலையெடுக்கலுற்ற இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல் வருத்தியவனுக்கு இடமாகிய , குரங்குச்சாதி குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு ஆள்வர் .

குறிப்புரை :

முடி உரத்தை - தலைகளோடு வலிமையையும் . ஒல்க - குறைய . அடர்த்தான் - நெரித்தான் . குரக்கினம் - குரங்குக் கூட்டங்கள் . குரங்குக்கா என்ற ஊர்ப்பெயர் காரணம் குறித்தது . குரங்குகள் விளையாடும் சோலை என்க . வரத்தன் - மேன்மையுடையவன் . வரம் அருள்செய்பவன் . பெற - வணங்குதலைப்பெற . வரதன் - தகர ஒற்று விரித்தல் விகாரமுமாம் .
சிற்பி