திருஇன்னம்பர்


பண் :

பாடல் எண் : 1

என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை ; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான் ; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன் .

குறிப்புரை :

என்னில் - என்னைக்காட்டிலும் . ஆரும் - யாரும் . இனியார் - இனிமையைச் செய்வார் . என்னிலும் இனியான் - எனக்கு என்னிலும் இனியான் . என்னுளே - என் உடம்பிற்குள்ளே . உயிர்ப் பாய் - பிராணனாய் . புறம்போந்து - வெளிவந்து . உள்புக்கு - உள்ளே சென்று மீளத்தங்கி . என்னுளே - என் உள்ளத்திற்குள்ளே . நிற்கும் - நிலைத்து எழுந்தருளியிருப்பான் ; அவன் யாரெனில் இன்னம்பர் ஈசன் என்க . ஆன்மார்த்த சிவபூசையில் உள்ளக் கமலத்து வீற்றிருக்கும் இறைவினை வெளியில் மந்திர பூர்வகமாக வெளிக்கொணர்ந்து ஆவாகனம் செய்து மீண்டும் தனக்குள் ஒடுக்கும் நிலையைக் குறித்தது . உயிர்ப்பு - உச்சரிக்கப்படும் மந்திரம் .

பண் :

பாடல் எண் : 2

மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

கள்ளுண்பவர்களும் , பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை ? தட்டி முட்டித் தள்ளாடி விழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ ?

குறிப்புரை :

மட்டு - கள் . வாட்கணால் கட்டுண்பார்கள் - வாள்போன்ற கண்களால் பிணிக்கப்படுவார்கள் . மட்டுண்பார்களும் கட்டுண்பார்களும் தள்ளாடித் தடுமாறும்போது இன்னம்பர் ஈசனை யன்றிக் கருதுவது என் என முடிக்க . உயிர்கொண்டு போம் பொழுது ஈசனையன்றி உற்றார் இல்லை என்றபடி . தட்டிமுட்டித் தள்ளாடி என்றது - கண் பார்வையும் உடல் வலியும் இழந்து நிற்கும் முதுமை நிலையைக் குறித்தது . எட்டு மூர்த்தியர் என்பது இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலைகருதி வழிபடற்பாலர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

கண்ணியும் கொன்றையும் , தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர் , அனல் , சூலம் , மான் மறி கூடிய கையை உடையவர் , என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும் .

குறிப்புரை :

கனலும் - விளங்கும் . கண்ணி - தலைமாலை ; கொன்றை பின் வருதலின் தும்பை முதலியன கொள்க . சூடும் - அணியும் . புரிசடை - முருக்குண்ட சடை . அனல் , சூலம் , மான் மறி இவற்றை ஏந்திய கையினர் என்க . இன்னம்பர் ஈசன் கையினர் எனலும் என் மனத்துக்கனலும் எனப் பூட்டுவிற் பொருள் கோளாய்ப் பாடலின் முதற்சீரோடு இயைக்க .

பண் :

பாடல் எண் : 4

மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின் அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன் .

குறிப்புரை :

மழைக்கண் - கார்காலத்து மழையின்கண் . மா - சிறந்த . ஆலும் - ஆரவாரிக்கும் . மகிழ்ச்சியான் - மகிழ்ச்சியோடு . அழைக்கும் - அழைக்கின்ற . தன் - அப்பெருமான் தன் . அடியார்கள் தம் - அடியார்களுடைய . அன்பினை - அன்பை . குழைக்கும் - குழையச் செய்யும் . தன்னைக் குறிக்கொளவேண்டி - தன்னையே குறிக்கோளாக அடையவேண்டி . இழைக்கும் - தன் உருவைப் பொருந்தச் செய்யும் . இன்னம்பர் ஈசன் என்மனத்துத் தன்னைப் பொருத்துவான் என்க .

பண் :

பாடல் எண் : 5

தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

தென்னவனும் , எனையாளும் சிவனும் , மன்னவனும் , மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும் , உலகத் தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும் , ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான் .

குறிப்புரை :

தென்னவன் - அழகியவன் . சிவனவன் - சிவன் . மன்னவன் - தலைவன் . மதி - மதித்தற்குரிய . அம் - அழகிய . மறை - வேதங்கள் . முன்னம் மன்னவன் - உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன் ; வனம்சேர் பூழியான் - சுடலைப் பொடிபூசி . பூழி - விபூதி . இன்னம் இன்புற்ற - ( இனன் - சூரியன் ) சூரியன் வழிபட்டு இன்புற்ற . சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் எய்தி மருவி இன்னம்பர் ஆயிற்று என்பர் .

பண் :

பாடல் எண் : 6

விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும் , தன்னடியார் மனத்து அன்பினை அளப்பவனும் . தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொள வேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன் .

குறிப்புரை :

விளக்கும் - தோன்றச் செய்யும் . பிறர் உள்ளத்தில் வேறுபட விளக்கும் என்க . பிறர் - தன்னிடம் அன்பு பாராட்டாதவர் . தன்னடியார் மனத்து அன்பினை அளக்கும் என்க . அளக்கும் - உள்ளவாறறியும் . என்னைக் குறிக்கொளவேண்டி இளக்கும் என்க . குளக்கும் - தன்னோடு தொடர்பு கொள்ளும் . குளக்கும் என்றதைக் குழக்கும் என்பதன் போலியாகக் கொண்டு என்னை வசீகரிக்கும் என்றலும் ஒன்று .

பண் :

பாடல் எண் : 7

சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

கங்கையாள் சடைக்கண் உள்ளாள் ; அவன் கையது அனல் . அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க , இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன் ; நமக்கு துன்பக் காலத்துப் பற்றுக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன் .

குறிப்புரை :

சடைக்கணாள் புனலாள் - சடையின்கண் தங்கியிருப்பவள் கங்கை . அனல் கையது என்க . கங்கையாகிய மங்கை கடைக் கண்ணால் நோக்க இமவான்மகள் படைக்கணால் பருகப் படுவான் எனக் கூட்டுக . அகரம் தொகுத்தல் விகாரம் . இமவான் மகள் மங்கை - பார்வதி . நோக்க - பார்க்க . படைக்கணால் - வேல் கணை வாள் முதலிய ஆயுதங்கள் போன்ற தன் கண்களால் . பருகப்படுவான் - பார்த்து உண்ணப்படுபவன் . நமக்கு இடைக் கண்ணாய் நின்ற - நமக்குத் துன்பத்துக்கண் தோன்றி நின்ற .

பண் :

பாடல் எண் : 8

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

தூமலர்களைத் தூவித் தொழுது , துதித்து , நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும் , வாளா பொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன் .

குறிப்புரை :

தொழுது - வணங்கி . தூமலர் - தூய்மையான மலர்கள் . துதித்து நின்று - போற்றியுரைத்து நின்று . காமுற்று - அன்பு கொண்டு . பொழுதுபோக்கி - இறைவனைத் தொழாது இறைவன்புகழ் பேசாது வீண்பொழுதுகடத்தி . புறக்கணிப்பார் - வெறுப்பவர் . கீழ்க்கணக்கு - சிறுவரிகளாய் எழுதும் குறிப்பு .

பண் :

பாடல் எண் : 9

விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமும்
திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இள வேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன் , நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே .

குறிப்புரை :

வெண்பிறை விரியும் தண்ணிள வேனிலில் என்க . வெண் பிறை விரியும் - வெள்ளிய பிறைமதி தோன்றும் . தண் - குளிர்ந்த . இள வேனிலில் - இளவேனிற்காலத்து மாலை நேரத்தே . புரியும் காமனை - காமத்தை விளைப்பவனாகிய மன்மதனை . வேவப் புருவமும் திரியும் - வெந்தழியப் புருவநெரிப்புச் செய்பவன் . எல்லையில் - அழிவில்லாத ; நெறிகடந்த எனினும் ஆம் . நோக்கிய - பார்த்த .

பண் :

பாடல் எண் : 10

சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே ! சனியும் , ஞாயிறும் , வெள்ளியும் , திங்களுமாகிய கோள்களை முனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ ?

குறிப்புரை :

சனி , வெள்ளி , திங்கள் , ஞாயிறு இவற்றை முனிபவனாய் என்க . இராவணன் நவக்கிரகங்களை அடிமையாக்கி ஆண்டவன் என்பதைக் கருதியது . முனிபவன் - வெறுப்பவன் . கனிய ஊன்றியகாரணம் - மனம் பண்படத் திருவிரலால் ஊன்றிய காரணம் . என்கொலோ - யாதோ ? தேவர்களை அடிமையாக்கிக் கொடுமையே செய்த இராவணனைத் திருந்தும்படி ஊன்றிய காரணம் என்னவோ என வினவினார் .
சிற்பி