திருவெண்ணி


பண் :

பாடல் எண் : 1

முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெம்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

முத்தினை , பவளத்தை , முளைத்த எம் பூங்கொத்தினை , சுடரை , சுடர்போல் ஒளி உடைய பித்தனை , கொல்லும் நஞ்சு போல்பவனை , வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது .

குறிப்புரை :

முளைத்த - எல்லார்க்கும் முன்னே தோன்றிய . எம் தொத்தினை - எங்கள் கொத்தினை ; உறுப்புக்கள் பல மலராக அமைந்த பூங்கொத்துப் போன்றவன் என்க . சுடரை - ஒளிவடிவானவனை . அல்லது சூரிய சந்திரர்களாகவும் நெருப்பாகவும் விளங்குகின்றவனை என்க . சுடர்போல் - சூரிய சந்திரர்கள் போல அன்பர்க்குச் சந்திரனைப் போன்றவனாகவும் ( அல்லாதவர்க்குச் சூரியன் போன்றவனாகவும் இருப்பவன் ). ஒளிப்பித்தனை - ஒளியையுடைய அடியர்மாட்டுப் பேரன்புடையானை . பித்தினை என்பதும் பாடம் ; பேரன்புக்குக் கோசரமாவன் என்பது கருத்து . கொலும் நஞ்சினை - அல்லார்க்கு நஞ்சுபோல்வான் . வானவர் நித்தன் - வானவர் அமர நிலை எய்தச்செய்தவன் . நெருநல் - நேற்று . கண்ட - தரிசித்த . வெண்ணியிது என்று ஒருசொல் கூட்டி முடிக்க . அல்லது கண்டது என்று வினை முற்றாக்கியும் முடிபுரைக்கலாம் . முன் நாள் கண்டகாட்சி உள்ளத்தே நின்று களிப்பைத்தர அதனாற் பாடியது இத்திருப்பதிகம் எனக் கொள்க : அடுத்த பாட்டின் கருத்தும் காண்க .

பண் :

பாடல் எண் : 2

வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.

பொழிப்புரை :

வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும் , வெண்திங்களைச் சூடியவரும் , கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும் , கபாலத்தைக் கையில் ஏந்திய வரும் , ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும் .

குறிப்புரை :

தொல்நகர் - மிகப்பழைய நகர் . மேய - எழுந்தருளிய . திங்களார் - பிறையணிந்தவர் . கண்ணித்தொத்த - கொன்றைக் கண்ணி அணிந்த கொத்தாகிய . கபாலியார் - பிரமகபாலமேந்தியவர் . தம்மை - அப்பெருமான்தமை . அண்ணித்திட்டு - இனித்து . நேற்றுக் கண்ட காட்சியை நினைந்திருந்த எனக்கு நாவில் அமுது அண்ணித்து ஊறும் என முடிக்க . என் நாவுக்கு - உருபு மயக்கம் .

பண் :

பாடல் எண் : 3

காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடும்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

காற்றும் கனலும் ஆவான் ; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான் ; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன் . கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன் . இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது .

குறிப்புரை :

காற்றினை - காற்று வடிவானவனை . கனலை - அனல் வடிவினனை . கதிர்மாமணி - ஒளியையுடைய சிறந்தமணி போன்றவனை . நினைப்பார் - தன்னை நினைப்பாரின் . வினை நீக்கிடும் - வினைகளைப்போக்கும் . நீற்றினை - திருநீறணிந்தவனை - அல்லது ; நினைப்பவர் வினையை நீறாக்கியவனை என்க . குணமுடை - அபயமாக அடைந்தவரைக் காக்கும் குணமுடைய . வீற்றினை - வீறு . பெருமை - பெருமை வடிவினனை . ` தொழுதெழுவார் வினை வளம் நீறெழ நீறணியம்பலவன் ` என்னும் ( தி .8) திருக்கோவையார் ஒப்பிடத்தக்கது .

பண் :

பாடல் எண் : 4

நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

நல்லவனை , விளங்கும் நால்வேதங்களை ஓதும்பிரானை , சொல்வடிவானவனை , ஒளியை , சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை , திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது .

குறிப்புரை :

நல்லன் - நன்மையே வடிவானவன் . திகழ் - விளங்குகின்ற . ஓதியை - ஓதியவனை . சொல்லனை - சொல் வடிவானவனை . சுடரை - ஒளி வடிவானவனை . சுடர்போல் ஒளிர் கல்லன் - சூரியன் போல ஒளிவிடும் வெள்ளிப் பனிமால்வரையை இருப்பிடமாகக் கொண்டவன் . கல் - மலை . கடி - விளக்கம் . அல்லது காவல் . மா - பெரிய . வில்லன் - திரிபுரமழிக்க எடுத்த இமயவில்லை உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணிமேனியனை , பூவிதழும் ( பிறவும் ) சென்னியிலே வைத்த அமுதனையானை , படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை , இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும் . சடைநெருங்கிய சென்னியில் அமுது ( நீர் - கங்கை ) வைத்தவனை - எனினும் அமையும் . ( வைத்த அமுதினை என்பதை அருங்கேடன் என்பது போலக் கொள்க )

குறிப்புரை :

சுடரைப்போல் ஒளிர் - சூரியனைப்போல் வெள்ளிதாய் ஒளிவிடுகின்ற . சுண்ண வெண்ணீற்றனை - திருவெண்ணீற்றுப் பொடி அணிந்தவனை . அடர் - பூவிதழ் . அடியார் சூட்டும் பூவிதழும் , இலையும் சென்னியில் ஏற்றருளும் அமுது போன்றவன் என்க . அடரும் சென்னியில் அமுதுவைத்தவனை எனினும் அமையும் . அமுது - தண்ணீர் , கங்கை . படரும் - விரிந்துள்ள . செஞ்சடை - சிவந்த சடை முடியின்மீது . பால்மதி - பால்போன்ற வெண்மையான சந்திரன் . சூடியை - சூடியவனை . இடரை நீக்கியை - துன்பங்களை நீக்கியவனை .

பண் :

பாடல் எண் : 6

பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாதனை நல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

பூதங்களுக்குத் தலைவனை , பூக்கள் நிறைந்த புகலூரனை , மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை , தலைவனை , நான்மறை ஓதியவனை , வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .

குறிப்புரை :

பூதநாதன் - பூதகணங்களுக்குத் தலைவன் . பூதம் - உயிர் எனினும் அமையும் . தாதெனத் தவழும் மதி - மகரந்தம் போன்ற மஞ்சளும் வெண்மையுங்கலந்த நிறமுடைய பிறைமதி . சூடி - சூடியவன் . தவழும் - தவழ்கின்ற பிள்ளைமதி எனற்கேற்பத் தவழ்தல் கூறப்பட்டது . நாதன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 7

ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும் , மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை , கருத்துள் இருப்பவனை , திருநீலகண்டனை , கண்ணுதலானை , நிருத்தம் ஆடுவானை , நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன் .

குறிப்புரை :

ஒருத்தி - பார்வதி . ஒருபாகத்து - இடப்பாகத்தே . அடக்கியும் பொருந்திய - கூட்டியும் ஒன்றாகச் செய்த ; முன்பே ஒன்றாந் தன்மையோடிருந்ததேயன்றி தன்னுடம்பினொரு கூறாந் தன்மையை அளித்தும் ஒன்றாகச்செய்த . புனிதன் - தூயன் . புரி - முறுக் கேறிய . கருத்தன் - கருதுவார் கருத்துள் நிற்பவன் . கண்ணுதல் நிருத்தன் - கண்ணுதலை உடைய நிருத்தன் . நிருத்தன் - ஆடல் வல்லான் .

பண் :

பாடல் எண் : 8

சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

சடை உடையவனை , சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை , உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை , பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .

குறிப்புரை :

சரிகோவணம் - இடுப்பினின்று கீழே சரிந்துள்ள கோவணம் . ஆடைகொண்டுடையன் - ஆடையாகக்கொண்டவன் . உணர்வார் - உணர்பவர் . வினை - பழவினைகளை . வாளொடு - மழுப்படையனை என்க . படை - ஆயுதம் . மழுவாளொடு பிற படையும் உடையவர் என்க . பாய்தரும் விடை - பாய்ந்து செல்லும் எருது .

பண் :

பாடல் எண் : 9

பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை , கங்கை யாளைச் சடையிற் கொண்டவனை , அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை , திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன் .

குறிப்புரை :

பொருப்பன் - கயிலைமலைக்குரியவன் . புன்சடை - மெல்லிய சடையிடத்து . அரும்பனை - அரும்பு அனை எனப்பிரித்து அரும்பை ஒத்த இளந்திங்கள் என்க . திங்களாகிய கண்ணியை உடையவன் . பருப்பதம் - அவன் எழுந்தருளிய திருக்கயிலைத் திருமலை . அதனை ஏத்தித் தொழும் தொண்டர்களிடத்து விருப்புடையவன் என்க . ஸ்ரீ பருப்பதம் எனக் கோடலும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 10

சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.

பொழிப்புரை :

வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன் ; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான் ; காலன் அஞ்சும்படி உதைத்தவன் ; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன் . இப் பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம் .

குறிப்புரை :

வஞ்சனை ( யைச் ) சூல வல்ல எம் சுந்தரன் - என மாறுக . சூலுதல் - தோண்டுதல் , களைதல் . அடியரை வஞ்சிப்பார் செய்யும் வஞ்சனைகளைக் களையவல்லவன் என்றபடி ; இது நாவுக்கரசரது அனுபவம் . கோலமா அருள் செய்தல் - பக்குவர்க்குத் தன் திருமேனி காட்டி ஒப்பற்ற சிவஞானத்தை விளங்கச்செய்தல் . கண்டம் இருள் ஆம் வேலை நஞ்சு என்க . வேலை - ( பாற் ) கடல் .

பண் :

பாடல் எண் : 11

இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்திறல் வாட்டினார்
சிலையி னால்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னால்தொழு வார்வினை தாவுமே.

பொழிப்புரை :

இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார் , வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும் .

குறிப்புரை :

இலையினார் - அடியார் இடும் வில்வம் வன்னி முதலிய பச்சிலைகளைச் சூடியவர் . திறல் - வலிமை . சிலை - வில் . தலையினால் தொழுதல் - தலைதாழ்த்தி வணங்குதல் . தாவும் - கெடும் , ஒழியும் ; தபு - என்பதன் அடியில் தோன்றியது . குறிப்பு : இத் திருப்பதிகம் அப்பர் பெருமான் அள்ளூறித் தித்திக்கப் பாடியது : இக்ஷுபுரி என்னும் பெயர் இதனால் வந்தது போலும் . இறைவன் திருவுரு கரும்பின் அடையாளம் உடைத்து என்பர் .
சிற்பி