திருவேதிகுடி


பண் :

பாடல் எண் : 1

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும் , கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும் , விரிந்த சடையினை உடைய தலைவனுமாய் , வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான , நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவோம் நாம் .

குறிப்புரை :

விண்ணவர் கோன் ஆகிய ஐயன் , அவன் கையது நாகம் ; கனல் ; சூலம் . கால் எரிநாகம் ; எரிகால் நாகம் - நஞ்சு கக்கும் பாம்பு . கனல் - தீ . விடு சூலம் - விடுகின்ற சூலம் . கனல் விடு சூலம் என்னின் , கால் எரியைத் தனியாகக் கொள்ளலாம் . காலெரி நாகம் கனல்விடு சூலம் என்று இரண்டே கொள்ளலாம் . சூலமது என்றதில் ` அது ` என்பது சுட்டுச் சொல்லன்று . சூலம் என்னும் முன்மொழிப் பொருளதாயே நின்றது . வெய்யது - வெம்மையுடையது ` வேலை ` ஈண்டுப் பாற்கடல் . வெய்யதாய நஞ்சு என்க . நஞ்சு உண்டகோன் . விரி சடைக்கோன் . ` விண்ணவர் கோன் ` ( தி .4 ப .89 பா .8.) செய்யினில் - வயலில் . நீலம் - நீலோற்பலம் . ` மணம் கமழும் திருவேதிகுடி ` என்றதால் நீர் நில வளம் உணர்த்தப்பட்டது . ஆராவமுது ` அத் தலத்தின் இறைவன் திருப்பெயர் . இறைவி திருப்பெயர் ( தி .4 ப .90 பா .7) இல் ` மடமொழி மங்கை ` என்றதும் அறிக . ` மங்கையர்க்கரசி ` என்று இக்காலத்தில் வழங்குகின்றது . நாம் அடைந்து ஆடுதும் . ஆடுதும் - ஆடுவோம் . பேரின்ப வெள்ளத்தில் முழுகுவோம் ; இன்பக் கூத்தாடுவோம் ; பெரிதும் இனியாய் நீ எனப் பேசுவோம் .

பண் :

பாடல் எண் : 2

கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப் படையையும் ஏந்தி , மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும் , வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம் .

குறிப்புரை :

கைத்தலைமான்மறி - சிறிய தலையையுடைய மான் கன்று . ஏந்தியகையன் என்றமையால் , கையின் கண் என்றோ கையின் கண் தலை (- பிரம கபாலம் ) என்றோ உரைத்தல் பொருந்தாது . கை (- சிறுமை ) யுடைய ( பிரமன் ) தலை எனலாம் எனின் , ` பொய்த்தலை யேந்தி ` எனப் பின் வருதலால் அதுவும் பொருந்தாது . கனல் மழுவன் - எரிமழுவுடையவன் . ` எரியும் மழுவினன் ` ( தி .4 ப .90 பா .8). பொய்த் தலை - இறந்த மலரவன் தலை மெய்த்தலையாகாது தலைபோல வைக்கப் படுவதைப் பொய்த்தலை என்பது வழக்கு . நற்பூதி - அழகிய திருநீறு . பாசம் போக்கிப் பராவணமாக்கும் நலம் . அணிந்து - அழகுறப் பூசி . பலிதிரிவான் - பலிக்காகத் திரிபவன் . செய்த்தலை - வயலின் கண் . ` வயற்கணே கயற்கணம் பாயுந் திரிசிராமலை ` ( செவ்வந்திப் புராணம் ). உகளும் - துள்ளும் . ` வயலுகளுஞ் சேல் அன்ன நீள் விழியாய் ` ( தஞ்சை வாணன் கோவை ) அத்தன் - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 3

முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பி னிலையி லவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

முன்னும் பின்னும் தானே உலக காரணனாய் , மனனசீலனாய் , நம் பழைய வினைகளைப் போக்குபவனாய் , அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய் , தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய் , நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம் .

குறிப்புரை :

` முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ` ஆதலின் , ` முன் முதல்வன் `. ` பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன் ` ஆதலின் ` பின்முதல்வன் ` முன்னும் முதல்வன் ; பின்னும் முதல்வன் . யாரினும் முன்ன எம்பிரான் ` ` முழுதும் யாவையும் இறுதியுற்றநாட்பின்ன எம்பிரான் ` ( தி .8 திருவாசகம் 103). ` முன்னவனே பின்னும் ஆனவனே ` ( ? 147) ` முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கும் முற்றும் இற்றால் பின்னும் ஒருவர் சிற்றம் பலத்தார் தரும் பேரருள் ` ( தி .8 திருக்கோவையார் . 160) முன்பு வலிமை . முன்பின் முதல்வன் - வலிமையுடைய முதலோன் . இப் பொருள் சிறப்புடையதன்று . முனிவன் - மனனசீலன் . பாசப் பொருளனைத்தும் முனிதலையுடையவன் . மேலைவினை - ஆகாமிய கருமம் ; சஞ்சித கருமமும் ஆம் . ` மேல் ` காலத்தால் இறந்ததையும் இடத்தால் எதிர்வதையும் குறிக்கும் . கீழ் , முன் , பின் எல்லாம் அன்ன . கழித்தான் - தீர்த்தான் . அன்பின் நிலையில் - மறக்கருணையில் . அன்பு இல்லாத நிலை எனலுமாம் . அவுணர்க்கு அன்பிருந்தால் அழிப்பரோ பிறவுயிர்களை ? முப்புரத்தை நீறாக்கின வரலாறு . திரிபுரத்தைப் பொடி செய்தான் என்பது பெருவழக்கு . நன்மலர் மேலவன் :- நான்முகன் இது தல வரலாறு ஏற்பட்ட பின்னர்ப்பாடியதாகும் . வேதி (- பிரமன் ). ` விசும் பினை வேதி தொடர ஓடரங்காக வைப்பான் ` ( தி .4 ப .4 பா .9) விழுதிகுடி , வீதி குடி , வேதிகுடி என மருவியதெனல் , குடி என முடியும் ஊர்ப் பெயர்களால் உணரப்படும் . கிள்ளுகுடி இலந்தங்குடி ஆலங்குடி எட்டிகுடி . அன்பன் :- ` அன்பே சிவம் ` உடையன் - ` சுவாமி ` பொன்னை - மேரு மலை வில்லாளனை . ஆகுபெயர் .

பண் :

பாடல் எண் : 4

பத்தர்க ணாளு மறவார் பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய் , பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய் , கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம் .

குறிப்புரை :

பத்தர்கள் பிறவியை அறுப்பான் . நாளும் மறவார் பிறவியை அறுப்பான் . அவ்விருதிறத்தார் பிறவி ஒன்றையே அறுப்பான் . மற்றையோர் பிறவியை அறுக்கமாட்டான் . ` இறைவனடி சேராதார் ` ` பிறவிப் பெருங்கடல் நீந்தார் ( சேர்ந்தார் ) நீந்துவார் `. நாளும் மறவார் - இடைவிடாது நினைப்பவர் . ஒன்று அறுப்பான் :- ஒன்றாக ( ஒருசேர ) அறுப்பான் ; ஒன்றையே அறுப்பான் ; ஒன்றியிருந்து அறுப்பான் . ஒன்று - ஒருமையையுடையது ; பண்பி . ஒருமை - பண்பு . முத்தர்கள் - பாச நீக்கம் உற்றவர்கள் . பாரிடமுன் - மண்ணுலகில் . முன்னம் - முன்னர் . பணி செய்துயர்த்தான் - பணிசெய்துயரச் செய்தான் . பணி செய்துயர்தல் முத்தர் செயல் . உயர்த்தல் இறைவன் செயல் . கொத்தன கொன்றை - கொத்துக்களையுடையனவாகிய கொன்றை ; கொன்றைப் பூங்கொத்துக்கள் .

பண் :

பாடல் எண் : 5

ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயிறிரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும் , மழு ஏந்திய பெருமான் , பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி , கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ , அடையாளங்களையோ , பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது . அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம் .

குறிப்புரை :

ஆன் - விடை . அணைந்து - சார்ந்து . ஏறுங்குறியும் குணமும் அறிவார் ஆர் ? குறி - பெயர் ; அடையாளம் . குணம் - எண் குணமும் சத்துவம் முதலியனவும் , செம்மை , நன்மை முதலியனவும் . அவர் - அப்பரம சிவனாருடைய . கை - திருக்கையில் . மான் அணைந்து ஆடும் . மதியும் புனலும் சடைமுடியில் உடையன் என்று கொள்க . தேன் - பூக்களில் . ஆகு பெயர் . தேனுக்காகப் பூவில் அணைந்து ஆடிய வண்டு எனவும் தேனை அணைந்து ஆடிய வண்டு எனலும் ஆம் . தேன் - பெடைவண்டு ; வண்டினத்துள் ஒன்று . ஆன் - ` ஆனைந்து `; ( பஞ்சகௌவியம் ). மழுவன் - மழுப்படை யுடையவன் . ` ஆனிடையஞ்சுங்கொண்டு அன்பினால் அமர ஆட்டி ` ( தி .4 ப .55 பா .3) ` அஞ்சணையஞ்சுமாடி ` ( தி .4 ப .53 பா .7). ` பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிறவி ` ( தி .8 திருவாசகம் 561) இல்லாத கடவுள் . ` ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லான் ` ( ? 235) ` மைப் படிந்த கண்ணாளும் தானும் ` எனத் தொடங்கும் திருத்தாண்டகத்துள் , குறி , குணம் இன்மை கூறப்பட்டது . ` ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரிலான் ` ( கந்தபுராணம் ) ` எண்ணானாய் எழுத்தானாய் ` ( தி .6 ப . 12 பா . 5.)

பண் :

பாடல் எண் : 6

எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி
நண்ண வரிய வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு , அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திரு வேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவ பெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம் .

குறிப்புரை :

எண்ணும் எழுத்தும் :- ` எண்ணிடை யெழுத்துமானார் ` ( தி .4 ப .43 பா .3), எண்ணையும் ` எழுத்தையும் குறியையும் அறிபவர்தாம் மொழிய வானவர் தாம் பணிவார் . பண்ணினிசை மொழிபாடிய வானவர் தாம் பணிவார் . ` குறிகளும் அடையாளமும் கோயிலும் நெறிகளும் , அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ` ( தி .5 ப .90 பா .6) அவர் வினைகளைத் தீர்க்கும் பிரான் . திண்ணென்னும் வினைகள் :- தீர்க்கத் தீராதவாறு உறுதியாகப் பற்றித் தொடரும் வினை , ` பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே ` ( பட்டினத்தார் பாடற்றிரட்டு ). நண்ண அரிய - பாற்கடல் கடைந்து அடைந்ததுபோல் எளிதில் அடைதற்கு அரிய சிவாமிர்தம் . அறிபவர் வானவர் பணிவார் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம் . செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய் , சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .

குறிப்புரை :

ஊர்ந்த விடையுகந்து ஏறிய செல்வன் :- உகந்து விடை ஏறியூர்ந்த செல்வன் ; விடை உகந்து ஏறி ஊர்ந்த செல்வன் . ஊர்ந்த விடை ஏறிய செல்வன் என்று உள்ளவாறே கொள்ளின் , ஊர்தல் ஏறுதல் இரண்டும் வெவ்வேறு காலத்தன ஆகும் . ஆர்ந்த - நிறைந்த ; செவிக்கினிதாக அருந்திய ( மொழி ). மடமொழி - மடப்பம் பொருந்திய சொல் . ` மட மொழி மங்கை ` என்பதும் ` மங்கையர்க் கரசியம்மை ` என்று இத்தலத்தில் இறைவி திருப்பெயராக வழங்குவதும் நோக்கத்தக்கன . மகிழ்ந்து உடையவன் . புனல் சேர்ந்த சடை . சேர்ந்த சடையுமாம் , சேராதது சடையாகாது . சடைச் செல்வப்பிரான் :- சடையுடையார் எய்தும் அழியாத பேரின்பச் செல்வத்தைக் குறித்தது . வேதிகுடியைச் சார்ந்த வயல் . ` வயல் அணிதண்ணமுது ` என்றாலும் வயல் சார்ந்ததும் அச்சார்பு அணியாவதும் வேதிகுடிக்கே ஆயினும் , அச்சார்பும் அணியும் அங்குத் திருக்கோயில்கொண்ட பெருமானுக்கும் உரிய ஆதலின் , ` சார்ந்த வயல் அணிதண்ணமுது ` எனப்பட்டது .

பண் :

பாடல் எண் : 8

எரியு மழுவின னெண்ணியு மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் றேயமும் நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு வேதிகுடி
அரிய வமுதினை யன்பர்க ளோடடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

கொடிய மழுவை ஏந்தியவனாய் , பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய் , தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய் , விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் .

குறிப்புரை :

எரியும் மழுவினன் - ` கனல் மழுவன் ` ( தி .4 ப .90 பா .2). எண்ணியும் திரியும் பலியினன் ; மற்றொருவன் தலை - பிரம கபாலம் , பலி கொள்ளத்திரிதல் இழிவுண்டாக்குவது என்று எண்ணியும் பலிக்காகத் திரியுமவன் . தேயம் :- ` தேஎம் ` என்பது தேயம் எனத்திரிந்தது . ` செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப ` ( பொருநராற்றுப்படை 134) ` தேயமும் நாடும் ` முறையே பெரியனவும் சிறியனவுமான இடப் பிரிவுகளை உணர்த்தி நின்றன . தேயமெல்லாம் உடையான் . நாடெல்லாம் உடையான் . விரியும் பொழில் வேதிகுடி . சேறுதிகழ் வேதிகுடி . அதில் உள்ள அரிய அமுது . ( தி .4 ப .84 பா .8). அன்பர்கள் - அன்பு மிக்க தொண்டர்கள் . ` அன்பரொடு மரீஇ ` ( சிவஞானபோதம் . 12 ) ` இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து `.

பண் :

பாடல் எண் : 9

மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை யாராவமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

நீலகண்டனாய் , வேதம் ஓதும் நாவினனாய் , பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய் , மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய் , சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவ பெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் .

குறிப்புரை :

மை அணி கண்டன் - மேகம் போலும் அழகிய கண்டன் . நஞ்சணிந்த கண்டன் . ` மைவானமிடற்றானை அவ்வான் மின் போல் வளர்சடைமேல் மதியானை மழையாயெங்கும் பெய்வானை ` ( தி .6 ப .50 பா .6) ` மேகம்போல் மிடற்றார் ` ( தி .4 ப .58 பா .7). மறைவிரிநாவன் - வேதங்களையும் ஆகமங்களையும் விரித்துரைத்த நாவினன் . ` மறையுங் கொப்பளித்த நாவர் ` ( தி .4 .24 பா .4). மதித்து - முத்திதரத்தக்கது இதுவே என மதித்து . உகந்த - விரும்பிக் கொண்ட நீற்றன் . மெய் - திருமேனி . அணி - அழகுறப் பூசிய . விழுமிய - சிறந்த . வெள்மழுவாட்படை :- வெண்மை குற்றம் இன்மையைக் குறித்த அடை . அநீதியாக அப் படையை ஆளாதவன் என்றவாறு . அவர் மகனாரும் அம்மழுவைப் பிழையாத தாதைதாளை வீசினாரல்லர் . ` பிழைத்த தன்தாதை தாளைப் பெருங்கொடுமழுவால் வீசக் குழைத்ததோ ரமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனார் ` ( தி .4 ப .49 பா .3). செய்ய கமலம் - செந்தாமரை .

பண் :

பாடல் எண் : 10

வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி குடியுடைய
அருத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய் , பிறகு அவற்றைப் பொருத்தியவனாய் , தவறாத அருளுடையவனாய் , பூதப் படையை உடைய புனிதனாய் , தேவர்கள் தலைவனாய் , திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .

குறிப்புரை :

வருத்தனை - இராவணனைத் துன்புறுத்தியவனை. வாள் அரக்கன் முடி பத்தும் இருபது தோளொடும் இறுத்த பொருத்தனை. பொருத்தன் - பொருத்துதலைச் செய்தவன். பொய்யா அருளன் - பொய்க்காத கருணையுடையவன். இஃது இராவணனுக்கு இரங்கியவாறு குறித்தது. பூதப்படையுடைய திருத்தன் (-தீர்த்தன்). அருத்தன் - பொருளன். மெய்ப் பொருளானவன்; செல்வன். வருத்தன் முதலிய ஏழும் இறைவனையே குறித்தன.
சிற்பி