திருச்சேறை


பண் :

பாடல் எண் : 1

பெருந்திரு விமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் றவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பா லங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு , மிக்க செல்வத்தை உடைய , இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய , பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டார் .

குறிப்புரை :

பெருந்திருவையுடைய இமவான் :- ` பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலம் `. திரு - செல்வம் . இமவான் - மலை யரசன் . பெண்கொடி - பார்வதி . தம்மைப் பிரிந்த பின்னை என ஒரு சொல் வருவிக்க . பெண்கொடி தவங்கள் செய்ய மணம் புணர்ந்து பாகமாக வைத்தார் சேறைச் செல்வனார் . துன்பம் சுடச்சுட நோற்க வேண்டி யிருத்தலின் `. வருந்துவான் தவங்கள் என்றார் . புனல்காலே யுண்டியாய் வற்றி வருந்திச் செய்தற்குரிய பெரிய தவங்களைச் செய்ய என்க . காமத்தால் மணம் புணரவில்லை . தவத்திற்கிரங்கி அவள் வேண்டுகோளின்படி மாமணம் புரிந்தாரென்க . வேண்ட முழுதும் தரும் இறைவன் பார்வதி தவஞ்செய்து வேண்டிய மணத்தை மறுத்தல் கூடாமை அறிக . மன்னும் - நிலைபேறுடைய . மக்களது நில்லாத ஊன் மேனி போன்றதன்மையால் மன்னும் அருந்திருமேனி என்றார் . பாகமாக - இடப்பக்கமாக . திருந்திட - ஈருருவாக இருந்தவர்கள் ஓருரு வாகத் திருந்தி அமைய . செந்நெறிச் செல்வனார் - செம்மையான ஞான நெறியால் காண்பதற்குரிய சிவபிரான் .

பண் :

பாடல் எண் : 2

ஓர்த்துள வாறு நோக்கி யுண்மையை யுணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை யாளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத , உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி , மயக்கம் தரும் அவர்கள் , சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை , வயிற்று வலியால் , அழுந்திய நிலையிலிருந்து எடுத்து , என்னை அடியவனாகக் கொண்டு , பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி , அடியேனுக்கு அருள் செய்தவராவர் .

குறிப்புரை :

உண்மையை யுள்ளவாறு நோக்கி ஒர்த்துணராக் குண்டர் . உண்மையை - சைவசித்தாந்தத் தத்துவங்களை ; சிவமாகிய செம்பொருளை . சைவசித்தாந்தம் அல்லாதன எல்லாம் பூருவ பட்சம் ஆதலின் , உண்மை எனப்பட்டது . பொருளல்லவற்றைப் பொருளாக உணரலாகாது என்பார் உளவாறு நோக்கி என்றார் . இப்பியை வெள்ளி யெனவும் , பழுதையைப் பாம்பு எனவும் நோக்குவது திரிபுணர்ச்சி . ஓர்த்தல் - ஆராய்தல் , நோக்குதல் - உள்ளத்தால் நோக்குதல் . நோக்கல் - நோக்கம் . உணராக் குண்டர் என்றது , மெய்யுணர்ச்சி யின்றித் திரிபுணர்ச்சியால் தம் நெறியே மெய்நெறியென மருளுகின்ற சமணரை . ` ஓர்த்துள்ள முள்ளதுணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு ` ( குறள் - 356) பொய்யை மெய்யெனக் காட்டித் தம்மை வஞ்சித்த கொடுமையாற் சமணரைக் ` குண்டர் ` என்றார் . குண்டர் - இழிந்தவர் . உண்மையறியாப் பருவத்தில் நிகழ்ந்ததை நினைத்து மயக்கில் வீழ்ந்தழுந்துவேனைப் பேர்த்தெனை ஆளாக் கொண்டு அருள் செய்தார் என்றார் . பொய்யை மெய்யாகக் காட்டும் நெறியை மெய்யென நம்பி அச் சமணத்து வீழ்ந்தேன் என்பார் , ` மயக்கில் வீழ்ந்தழுந்துவேனை ` என்றார் . பேர்த்து - மீட்டு . வயிற்று நோயோடு பிறவிப் பிணியும் தீர்த்தருள் செய்தமை யுணர்த்தியவாறு . வான் பிணிகள் - பெரிய நோய்கள் . பிறவிக்கு ஏதுவாய கட்டுக்களைத் தீர்த்தார் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

ஒன்றிய தவத்து மன்னி யுடையனா யுலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்து நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று , தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று , அவனுக்கு அருள்கள் பல செய்தார் .

குறிப்புரை :

ஒன்றிய தவத்து - பலவழியில் செல்லாது மனம் ஒருமையுற்ற தவத்தில் ; மன்னி - நிலைபெற்று . உடையவனாய் - சுவாமியாகி . உலப்பில் காலம் - முடிவில்லாத காலம் . தவஞ் செய்த காலத்தின் மிகுதி குறித்தது . விசயன் - அருச்சுனன் . விசயனிடம் சென்ற சிவன் , அவன் தோற்க வெற்றிகொண்டான் ஆதலின் , வென்றிகொள் வேடன் என்றார் . தவத்திற்கிடையூறாக வந்த பன்றியைக் கொன்ற வெற்றி . தெய்வ வடிவு நீங்கி மனிதருள் தாழ்ந்த வேடனானதும் தண்மை மிக்க கயிலாயத்தை விடுத்து வெம்மை மிக்க கானகத்து விரும்பிச் சென்றதும் தன்னடியார்க்கு எளியனாம் ஆண்டவனது தன்மையை விளக்கின . தவம் செய்யும் காலத்தும் நீண்ட வில்லையுடையனாதலின் ` நீள்சிலை விசயன் ` என்றார் . தங்கழல்கள் ஏத்தும் விசயனாதலின் , வேடனாகிக் கானகத்து விரும்பிச் சென்று அருள் செய்தார் .

பண் :

பாடல் எண் : 4

அஞ்சையு மடக்கி யாற்ற லுடையனா யநேக காலம்
வஞ்சமி றவத்து ணின்று மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றல் உடையவனாய் , பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில் நிலைபெற்ற பகீரதனுக்காக , மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார் .

குறிப்புரை :

அஞ்சையும் - ஐம்பொறிகளையும் . புறப்பகையை வென்றார்க்கும் வெல்லுதற்கரிய அகப்பகையை , ஐம்பொறிகளையும் வென்ற சிறப்புத்தோன்ற ` ஆற்றலுடையனாய் ` என்றார் . ஆற்றல் - மனவலிமை . தவமறைந்து அல்லவை செய்வோர் உலகத்துப் பலராதலின் அவர்களை விலக்க வஞ்சமில் தவத்துள் நின்று என்றார் . மன்னிய - நிலைபெற்ற . பகீரதற்கு - பகீரதனுக்காக , பகீரதன் பொருட்டுக் கங்கையை ஏற்றார் என்க . வெஞ்சின முகங்களாகி - கொடிய கோபமுற்ற பல முகங்களாகி , விசை - வேகம் . தாங்கற் கரியளாகப் பாய்ந்த கங்கையை எளிமையாகச் சடையில் ஏற்றுத் தம் ஆற்றலைக் காட்டினார் என்க .

பண் :

பாடல் எண் : 5

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் றாதை தாளை
எறிந்த மா ணிக்கப் போதே யெழில்கொள்சண் டீச னென்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , மண்ணியாற்றின் நிறைந்த , சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்குப் பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய . அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார் .

குறிப்புரை :

கூப்பி - குவித்து . நேசம் - அன்பு . ஆ - பசு . ஆட்ட - திருமஞ்சனம் ஆட்ட . நிறைந்த மாமணல் என்றது சிவலிங்கரூபமான சிறப்பு நோக்கி . கறுத்த - சினந்த . தாதை - ( தாதா ) தந்தை ஆகிய எச்ச தத்தன் . தாள் - கால் . மாணி - பிரமசாரி . ` அப்போதே ` என்றது தாதை தாளை எறிந்ததற்கும் சண்டீசனாம் பதம் பெற்றதற்கும் கால இடையீடு இன்மையுணர்த்திநின்றது . எழில் - அழகு . இறைவன் சூடிய எழில் மிக்க மாலைகளை யேற்றுக் கொள்ளுதற்குரிய பதவி ஆதலின் எழில் கொள் சண்டீசன் என்றார் . பிதாவைக் கொலைபுரிந்தானைக் குற்றங் கடிந்தானாக்கி ` அரனடிக்கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும் ` என்பதைக் காட்டியவாறு .

பண் :

பாடல் எண் : 6

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும் , உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி , யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச , ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார் .

குறிப்புரை :

கதிர் - ஒளிக்கதிர் . வெடிபடுதமருகம் - வெடி போன்ற ஒலியை யுண்டாக்கும் உடுக்கை . சூலமும் தமருகமும் கையின்கண் தரித்ததோர் கோலம் என்க . காலபயிரவன் - உலகிற்கு இறுதிக் காலத்தையுண்டாக்கும் வயிரவன் . வேழம் - தாருகவனத்து முனிவர்கள் அனுப்பிய யானை . அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட கோலம் உமாதேவியார் அஞ்சத்தக்க சிரிப்பு . இறந்த யானையின் தோலைக்கண்டு அஞ்சுதல் பேதைமை என எள்ளிய குறிப்பு . மணியாய் விள்ளச் சிரித்தருள் செய்தது பெருஞ் சிரிப்பு . விள்ளுதல் - மலர்தல் , அகலமாதல் . திரிசூலத்தின் ஒளிப் பெருக்கம் உணர ` விரித்த பல் கதிர் கொள் சூலம் ` எனப்பட்டது . கையிற் சூலமும் உடுக்கையும் தரித்ததொருகோலம் ( அழகு ) கால பயிரவனாரது . இத் திருப்பாடலை நாடோறும் மறவாது போற்று வோர்க்கு வறுமை முதலிய துன்பம் நீங்கும் . செல்வம் முதலிய பெருகி இன்பம் ஓங்கும் .

பண் :

பாடல் எண் : 7

சுற்றுமுன் னிமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை யுயக்கொ ளென்ன மன்னுவான் புரங்கண் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்ன மொள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி , தூய மலர்களைத் தூவி , ` எம்மைக் காப்பாற்றுவாயாக ` என்று வேண்ட , வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து , தேவர்களுக்கு அருள் செய்தார் .

குறிப்புரை :

சுற்றும் - சூழும் , முன் - திருமுன்னர் . இமையோர் - தேவர் ; துவாதசாந்தத்தில் உள்ளம் வைத்துச் சுழுமுனை நாடியில் மட்டும் வாயுவை மேலேற்றி நிறுத்தி , விழித்தகண் இமைத்தலின்றித் தியானம் புரிவோர் . தூ - தூய்மை . ` எம்மை உய்யக்கொள் ` என்று தனித்தனி வேண்டினர் இமையோர் . திரிபுரத் தசுரர் கொடுமை தாங்காமல் , எம்மை உய்யக்கொள் என்றனர் இமையோர் . உற்றுச் சென்றார் . ஒரு நொடியின் முன்னம் சென்றார் . அழல் வாயின் வீழச் சென்றார் . செற்றது புரத்தை . அருள் செய்தது இமையோர்க்கு .

பண் :

பாடல் எண் : 8

முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை யடிமுடி யறியா வண்ணம்
செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , ` எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க , முன்னர் எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார் .

குறிப்புரை :

முந்தி - முன் . படைத்தவன் - பிரமன் , மால் - விண்டு . இருவரும் ` யாமே கடவுள் ` எனச் செருக்குற்றுத் தேடியலைந்து உண்மை கண்டு , எம் தனிநாதனே சிவன் என்று நெஞ்சாரநினைந்து உணர்ந்து போற்றி நின்று ஏத்தினர் . இறைஞ்சி நிற்றல் :- காயத்தின் செயல் . ஏத்தல் - வாக்கின் வினை ` எம்தனிநாதன் ` என்று அறிந்து நினைந்தது மனத்தின் வினை . அந்தம் - முடிவு . இல் - இல்லாத . சோதி - ஞானப் பேரொளி . அடி முடி - ஆதியும் அந்தமும் . செந்தழல் - செய்ய தீயுருவம் .

பண் :

பாடல் எண் : 9

ஒருவரு நிகரி லாத வொண்டிற லரக்க னோடிப்
பெருவரை யெடுத்த திண்டோள் பிறங்கிய முடிக ளிற்று
மருவியெம் பெருமா னென்ன மலரடி மெல்ல வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன் , விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும் , தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம் பெருமானே ! என்று வழிபட , தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து , அவனுக்குச் சிறந்த அருள் செய்தார் .

குறிப்புரை :

ஒருவரும் நிகர் ( ஒப்பு ) இல்லாத ஒள்திறல் அரக்கன் - எவரும் இணையாதல் அல்லாத ஒளியும் வலியும் உடைய இராவணன் . பெருவரை - திருக்கயிலைமலை . திண்மை - உறுதியுடைமை . பிறங்கிய - ஒளியுடன் விளங்கிய . இற்று - ஈண்டுச் சிந்தி என்னும் பொருட்டு . என்ன - என்று போற்றி வணங்க . மலரடியை வலி செய்யாதவாறு எடுத்து .
சிற்பி