திருநாகேச்சரம்


பண் :

பாடல் எண் : 1

கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடறர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்
இச்சையான் மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே.

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.

குறிப்புரை :

கச்சை சேர் அரவர் - அரவக்கச்சை யுடுத்தவர். கறை - நஞ்சின் கறுப்பு. அணிமிடறர் - `திருநீலகண்டர்` பிச்சை கொண்டு உண்பர்:- தாருகவனத்து வரலாறு; விடையேறி மாதொடும் சென்று ஊர் தொறும் ஆன்மாக்களின் சீவபோதமாகிய பிச்சை ஏற்றுச் சிவபோத மாகிய சிவபுண்ணியம் அருளும் உண்மை. பேரருளாளர்:- பெருங் கருணையுடையவர். பிச்சை கொண்டு உண்பது உயிர்களைக் காக்கும் பேரருளாண்மையாலன்றிப் பசியாலன்று. இச்சை - உள்ளன்பு. தம்மை இரவொடு பகலும் நச்சுவார்:- `ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்` (1). நச்சுவார் (நத்துவார்) - விரும்புவார். `நச்சினார்க்கினியர்` என்பது இறந்தகாலத்தது. இது முக்காலத்திற்கும் உரித்து. நாகவீச்சரவனார் = சாளரந்தோறும் தோன்றுஞ் சந்திரவுதயம் போலும்` என்புழிப்போலப் பெற்ற தமிழ்ப் புணர்ச்சி.

பண் :

பாடல் எண் : 2

வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

வேடு ளு வேந்து. இரண்டும் மறுதலை. `இழிகுலமாகிய எயினர் பாவை நான் முழுதுலகருள் புரிமுதல்வர் நீர் எனைத்தழுவுதல் ... பழி` (கந்த. வள்ளியம்மை 90) `ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன்` (நீதி நெறி விளக்கம் 30) `வெண்குடை நிழற்றிய வொருமை யோற்கும், கடுமாப்பார்க்கும் கல்லா வொருவற்கும், உண்பது நாழி உடுப்பவை யிரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே` (புறநானூறு. 189). `மன்னவன்றன் மகன் வேடரிடத்தே தங்கி வளர்ந்தவனையறி யாது மயங்கி நிற்ப` (சித்தியார்) சிவஞானபோதம். சூ. 8. உரை காண்க. முதல்வன் மன்னவன். ஆன்மா; மன்னன் மகன். ஐம்பொறிகள் வேடர். திருவலிவல மும்மணிக் கோவையின் முதற்பேரகவலிற் பார்க்க. வேள் + து = வேடு. (ஆள் + தூஉ = ஆடூஉ, மகள் + தூஉ = மகடூஉ. அலிதூஉ) விருப்பினது. மெய்வேடர். மெய்வேடரல்லர் வேடராக விரும்பிக் கொண்ட வேட்டுவவடிவத்தர். வேடு - வேடுவ மரபு. வேடர். வேடருறும் வேடம் பூண்டவர் எனலுமாம். காடு உறுபதியர் - காடாகவுற்ற பதியினார். `கோயில் சுடுகாடு`. பதியாகவுற்ற காட்டினார் எனலுமாம். `கடிபுனற் கங்கை நங்கை. சேடு (- பெருமை) எரிசடையர்`:- (தி.4 ப.65 பா.7.) சிவபெருமானே பிறவிக் கடல் கடத்தும் பெரும்புணையாகிய திருவடியினன் என்று நூலெ (உலகெ)லாம் போற்றுதலின், தீவினைதீர்க்கவல்ல நாடறி புகழர்` என்றார். `நாடறி புகழர்` என்னும் செந்தமிழ்த் தொடர் இனியதோ ராட்சி. `இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் (திருக்குறள். 1-10) திருவொற்றியூரொருபாவொருபஃது. 8. காண்க.

பண் :

பாடல் எண் : 3

கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையர் போலும்
சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க் கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.

குறிப்புரை :

கல் + துணை + வில் - மேருமலையாகிய (போர்க்குத்) துணைக்கருவியானவில். துணை அளவுமாம். `கற்றுணைப்பூட்டி` கடியரண் - காவல் மும்மதில்; திரிபுரம். பொற்றுணைப்பாதர் - பொன்னையொத்த திருவடித்துணை. அதள் - தோல். சொற்றுணை மாலை - பாமாலை. தொழுது எழுவார்கட்கெல்லாம் நற்றுணை ஆவர். பூமாலை கொண்டு போற்றுவார்க்கேயன்றிப் பாமாலை கொண்டு, பணிவார்க்கும் நற்றுணையாவர். `சொற்றுணை வேதியன்` `நற்றுணை யாவது நமச்சிவாயவே`. பிறவி தீர்க்கும் நலமே எல்லாவற்றினும் பெரிதாதலின், நற்றுணை என்றார் (தி.4 ப.66 பா.3).

பண் :

பாடல் எண் : 4

கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலும்
செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரா னெம்மை யாளு மிறைவனே யென்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் நாகவீச் சரவ னாரே.

பொழிப்புரை :

பார்வதி பாகராய், காளை எழுதிய கொடியினராய், செம்பொன்போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.

குறிப்புரை :

கொம்பு - பூங்கொம்பு. அன்னாள் - நிகர்த்தவள். கொடியுடைவிடையர் - விடையெழுதிய கொடியுயர்த்தவர். `ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர் கெழுகொடியும் அவ்வேறென்ப` (புறம்) விடைக்கொடியுயர்த்தியதன் குறிப்பு:- மும்மலத்தின் இழிந்த பசுக்களைத் தன் திருவடிக்கே உயர்த்தும் பேரருட்டிறம் உணர்த்துங் குறிப்பு. செம்பொன்போலும் திருவுருவர். `ஆர்` உவமவுருபு. `பொன்னார் மேனியன்` `காச்சிலாத பொன்னொக்கும் கனவயிரத்திரள் ஆச்சிலாத பளிங்கினன்` (தி.2 ப.9 பா.2) `செம்பொன் மேனி` எனத் திருமுறையிற் பயின்றதறிக`. எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று நாகேச்சுரவனாரை நம்புவார்க்கு அன்பர்.

பண் :

பாடல் எண் : 5

கடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான் .

குறிப்புரை :

கடகரியுரியார் - மதயானைத் தோலுடுத்தவர். கரத்தையுடையது கரி. ஆளர் - ஆள்பவர். படவரவு - படத்தையுடைய பாம்பு. அரவு அரையர் - அரவைக் கட்டிய அரையினர். பாரிடம் - பூதங்கள். குடமுடை முழவம் - `குடமுழா` இது சிற்சில திருக்கோயில்களில் இன்றும் காணப்படும். `கூடுமே குடமுழவம் வீணைதாளம் குறுநடைய சிறு பூதம் முழக்க. மாக்கூத்து ஆடுமே`. (தி.6 ப.4 பா.5). `மாக்கூத்து` - `மகாதாண்டவம்`, `மாநடம்`. கூளிகள் - பேய்கள். பூதங்களும் பாடுவன எனினும், ஈண்டுப் பாரிடம் ஆர்ப்பக் கூளிகள் பாட என்றதால், பேய்களே கொள்ளப்படுவன. பேய்கள் பாடப் பல் பூதங்கள் துதிசெய ... ... மாநடம் ஆடும் வித்தகனார்`. (தி.2 ப. 102 பா. 7). `பூதகணம் ஆட ஆடும் சொக்கன் காண்` (தி.6 ப. 87 பா. 2) `பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்` (தி.5 ப.29 பா.10)`பயின்ற பல்பூதம் பல்லாயிரங்கொள் கருவி நாடற்கரியதொர் கூத்தும்` (தி.4 ப.2 பா.8) என்பவற்றில், பூதங்கள் பாடலும் ஆடலும் இறைவன் ஆடுங்கால் அன்றிப் பலி கொள்ளுங்காலும் உள்ளமை உணர்க.

பண் :

பாடல் எண் : 6

பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் நான்மறை யவன்ற னோடும்
முறைமுறை யமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக் கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

இளம்பிறை சூடியார் (சந்திரசேகரனார்), மங்கை பங்கினர். வேதவாக்கினார். திருமாலும் மறையவனும் தேவர்களும் முறை முறையாகக்கூடித் தம் முடிதாழ்த்து அடி வணங்க அருள் புரிந்து நின்ற நறைமலர்க் கழலடியிணையர் திருநாகேச்சுரத்திறைவர். இறைவன் சடையிற் பிறையுற்றது. ஒருபாகத்திற் பெண்ணினல்லாள் உற்றாள். திருவாயின் மொழிந்தனவே மறைகளெல்லாம். மொழியிலுற்ற மறைகள். மறைகள் உற்ற மொழி. மால் + மறையவன் - அரியும் அயனும். `முறை முறை` என்ற அடுக்கு (தி.4 ப.29 பா.4). வணங்க வரும் திரளின் இடையீடின்மையும், அந்நிலையுள் ஒரு வரிசை அவரவர் தகைமைக்குத்தக முன்பின் புகலும் பிறவும் குறித்து நின்றது. `நறவு அமர்கழல்`:- `கழல்` ஆகுபெயராய்த் தனக்கு இடமாய திருவடியையும், அத்திருவடியிற் சேர்க்கும் மலர்கள் நறவு அமர்ந்தன வாதலையும் குறித்தல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்
குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சைய ரிரிய வன்று வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணி கண்டராய் உள்ளார்.

குறிப்புரை :

வஞ்சகர்க்கு அரியர்:- `கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான்`. `வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான்`. `வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார், நஞ்ச நெஞ்சர்க் கருளும் நள்ளாறரே` (நஞ்ச நெஞ்சு = நைந்த நெஞ்சு). `வஞ்சம் கொண்டார் மனம் சேரகிலார்` `வஞ்சமனத்திறையும் நெஞ்சணு காதவன்` `வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பலி` என்றனவும் பிறவும் திருமுறையிற் காண்பன. `மருவினோர்க்கு எளியர்`:- `சார்ந்தவர்களால் நலம் இலன்` (தி.4 ப.11 பா.6). குஞ்சரத்து உரியர் - யானைத் தோலினார். குஞ்சரம் - குஞ்சத்தையுடையது. புதரிற் சஞ்சரிப்பது எனல் பொய்யுரை. கு - புதர், சரம் - சஞ்சலிப்பது என்பார். `குஞ்சரம்` `சரம்` என்பனவற்றிலுள்ள சகாரம் இரண்டும் வெவ்வேறாதலை உணரார். கூற்று - உடலையும் உயிரையும் கூறுசெய்யும் தெய்வம். குமைப்பர் - அழிப்பர். `கோடுவெளிற்றறி விரண்டும் குமைப்ப` (தணிகைப்புராணம் காப்பு) `விஞ்சையர்` என்றது அவர் முதலிய தேவர்களை. இரிய - ஓட. வேலை - கடல். `வாய்` ஏழன் உருபின் பொருட்டாயதோரிடைச்சொல். நஞ்சோ அமுதோ வந்தது வாய் தானே! அதனால் வேலையது வாய் என ஆறன்தொகையுமாம்.

பண் :

பாடல் எண் : 8

போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் நாகவீச்ச சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய், மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

போகம் - இன்பம். புணர்வுமாம். மோடி - (காடு கிழாள்). துர்க்கை. புணர்ந்தாலும் புனிதம் உடையவர். வேகம் - விரைவு. திருவெண்ணீற்றை வெண்பொடி எனல் `வெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான் பெண்படி செஞ்சடையான்` என்று சொல்லுஞ் சுந்தரம் ஈண்டுணரத்தக்கது. திருமால் ஒரு பாகம் இருப்பது முன்னரும் கூறப்பட்டது. (தி.4 ப.32 பா.7) `மற்றையொரு பாலும் அரியுருவம் திகழ்ந்த செல்வர்` (தி.6 ப.58 பா.3). பருப்பதம் - மேருபருவதம். வில்லர் - (மேருவை) வில்லாக உடையவர். பருப்பத வில் - மேருவில். வில்லர் - வில்லுடையார். நாகநாண் உடையர்:- அம் மேருவில்லிற் பூட்டிய நாண் பாம்பாதலைக் குறித்தது. `எரிகாற்றீர்க்கு அரிகோல் வாசுகி நாண் கல்வில்லால் எயில் எய்தான்` (தி.1 ப.11 பா.6) `குன்றவார்சிலை நாண் அரா` (தி.2 ப.50 பா.1).

பண் :

பாடல் எண் : 9

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

குறிப்புரை :

கொக்கரை, தாளம். வீணை பாணிசெய் குழகர். திருக்கூத்தாடுங்கால் இயம்பும் கருவியும், கொட்டும், தட்டும், இசைக்கும் பிறவும் திருமுறையுட் பயின்றுள. அக்கு அரை அணிவர்:- `அக்கரவம் அரைக்கசைத்த அம்மான்` தண்ணார் `அக்குலாம் அரையினர்` `அக்கு` `அக்கு ஓட்டினைச் சேய் அரைகரம் கொண்டார்` (காஞ்சிப்புராணம்). ஐந்தலை அரவர்:- `அஞ்சு கொலாம் அவர் ஆடரவின்படம்` `பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின் பல்`. (தி.4 ப.18 பா.5, 9), வக்கரை திருவக்கரை என்னுஞ் சிவதலத்தில் எழுந்தருளி இருக்கும் நினைவு வல் + கரை - வற்கரை. மரூஉ. மாதர் - தாருக வனத்து முனிபத்தினியர். மையல் - மோகம். நக்கர் - `நக்நன்` `சொக்கலிங்கம் உண்டே துணை` (இரட்டையர் பாடல்).

பண் :

பாடல் எண் : 10

வின்மையாற் புரங்கண் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையா லமரர் தங்க டலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையா லளிப்பர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.

குறிப்புரை :

வின்மை - (மேரு) வில்லின் வன்மை. வில்லின் தன்மை வின்மை. அத்தன்மை ஈண்டு வன்மையாகும். வாளா இருந்தே மூளாத் தீ, புரம் உறச் செய்ததே வன்மை. தன்மை - தானாம் இயல்பு. எல்லாத் தேவருள்ளும் (மாந்தருள்ளும்) மற்று எவ்வுயிருள்ளும் இருந்து தானாதலின், தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் என்றார். உம்மை இறந்தது தழீஇயிற்று. வன்மை - ஆற்றல்; வலி. தொலைவித்து - தோற்கப்பண்ணி. ஆங்கே - அப்பொழுதே, அவ் விடத்தே, (தி.4 ப.65 பா.9.) இல் `அங்கு` என்றதன் குறிப்புரையை நோக்குக. நன்மை - சாமகானங் கேட்ட இன்ப நலம். அளிப்பர் - அன்பின் முதிர்ச்சியான அளியால் அருள்கள் செய்வார்.
சிற்பி