திருஅவளிவணல்லூர்


பண் :

பாடல் எண் : 1

தோற்றினா னெயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை யழிக்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

தீத்தொழிலை உடைய இராவணன் கோபத்தால் தன் பற்கள் உதட்டைக் கவ்வ வெகுட்சியடைந்த போது அவன் கோபத்தைத் தணிக்க வேண்டித் தேரோட்டி உறுதியாகக் கோபத்தை விடுக்குமாறு சொல்ல , தற்பெருமை உடையவனாகிக் கயிலையைப் பெயர்க்க விரைந்து எழுந்த அவனுடைய ஆற்றலை அழித்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

எயிறு - பல் . எயிறுகவ்வித் தோற்றினான் ஆகிய அரக்கன் தொழிலுடைய அரக்கன் , ஈண்டுத் தொழில் என்பது பொதுமை குறிப்பினும் தீத்தொழிலே கொள்க . தேற்றும் பொருட்டுச் சென்று சிக்கெனத் தவிரும் என்று சொல்ல ( வும் கேளானாகி ), வீற்றினை - தற்பெருமையை ; வெடு வெடுத்து எழுந்தவன் - விடு விடு என்று சொல்லி வெருண்டும் விரைந்தும் புடை பெயர்ந்தவன் , எழுந்தவன்றன் ஆற்றலை - எழுந்த இராவணனது வலியை , அவளிவணல்லூரார் :- ஊர்ப்பெயரின் உண்மைக் காரணம் புலப்பட்டிலது .

பண் :

பாடல் எண் : 2

வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்த செயல் பெரிய குற்றமாயிற்று . ஆதலால் அச் செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நன்மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்டினாராக , ` நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் ` என்று விரும்பி நோக்கி , இராமபிரான் அம்பினால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமானாவார் .

குறிப்புரை :

மிகச் சழக்காயிற்று என்று அரக்கர் எல்லா ( ரு ) ம் வெம்பினார் . சழக்கு - குற்றம் ; அபராதம் , ` செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும் ` என்ன - செம்பாலாக்கிய கோயிலைச் சிதைக்கவுறுதி கொண்டு , கொண்ட அவ்வுறுதியின் நீங்காது சிதைத் தொழித்துவிடும் என்று வேண்டிக்கொள்ள . சழக்காயிற்றென்றதும் சிதையும் என்றதும் அரக்கர் தொழிலே . அதுகேட்ட சிவபிரான் , நம்பினார் (- நசையுற்றார் ) என்று திருவாய்மலர்ந்து , இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மையால் , பெருங்கண்ணோட்டஞ் செய்தருளி , ஓர் அம்பினால் அழிய எய்தார் அவளிவள் நல்லூரார் . இராமன் வாயிலாக அவனுயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்தருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு ஈதொரு சான்று . பொன் , வெள்ளி , இரும்பு என்பவற்றின் ஆய மும்மதில் திரிபுரத்தன . செம்புமதில் யாண்டுங் கூறப்பட்டிலது . ` செம்பினால் எடுத்த கோயில் ` என்றதன்றி மதில் என்றிலது . அரக்கர் ` வெம்பினார் ` என்றும் ` கோயிலைச் சிதையும் ` என்றும் ` நோக்கி அம்பினால் அழிய எய்தார் ` என்றும் உள்ளவாற்றால் இதில் முப்புர தகனம் கூறப் பட்டிலது . இப் பதிகம் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுதலின் , இதிலும் அதுவே கொள்ளப்பட்டது .

பண் :

பாடல் எண் : 3

கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகில்
தோட்பெரு வலியி னாலே தொலைப்பனான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

புகழாந் தன்மை என்மாட்டு இருக்குமாயின் எந்நிலையிலும் அப்புகழ் கீழ்ப்பட நினைக்கலாமோ ? ` என் தோள் வலிமையாலே இம்மலையை இடம் பெயர வைக்கிறேன் ` என்று தன் விருப்பம் நிறைவேற இராவணன் செயற்பட்ட அளவிலே அவன் நடுநடுங்கி விழுந்து அடியவனாகுமாறு கருதி விரலால் அழுத்திய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

கீழ்மையுற நினைக்கலாமோ ? புகழாந்தன்மை இருப்பதாகில் , ( புஜபல பராக்கிரமம் என்னும் ) தோளினது பெரிய வலிமையாலே , ` நான் , கயிலையைத் தொலைப்பன் ` என்று அதை எடுக்கக் கையை வைத்த அளவில் , அரக்கன் ( இராவணன் ) நடு நடுங்கி விழுந்து ஆளாம்படி திருவுளங்கொண்டு , அவனைத் திருக் காற்பெரு விரலால் ஊன்றத் தொடங்கி யருளியவர் அவளிவள்நல்லூரார் . வேட்படவைத்தவாறே :- வேள் - மண் , மன்மதன் . மண்பட ; மன்மதன் படவைத்தவழி .

பண் :

பாடல் எண் : 4

நிலைவலம் வல்ல னல்ல னேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் றன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

நிலைத்த வெற்றியை அடையவல்லவன் அல்லனாய் , நேர்மையை நினைக்காமல் , வில்லின் வெற்றியைக் கொண்ட செல்வராய தம்முடைய கயிலைமலையைத் தலைகளின் வலிமையை நினைத்துப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அன்று உடல் வருந்திக் குலையச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

நிலைத்த வெற்றியை அடைய வல்லவன் அல்லன் ; நேர்மை ( ஒழுங்கு ) என்பதே நினைக்கமாட்டேன் ; ( வெற்றிக்கு நேர்மை ஒரு காரணம் ) வில்வலிமையுற்ற செல்வன் . தன் பத்துத்தலை வலிமையொன்றையே எண்ணி , கனத்த கயிலாய மலையை எடுக்க நினைந்து புகுந்து தாக்கினான் . அவனை அக்காலத்தில் , அலையவும் குலையவும் செய்தருளினார் அவளிவள் நல்லூரார் , தலைவலம் :- தலையாயவலிமை என்றலுமாம் . எவர்க்கும் இல்லாத பத்துத் தலையுடைய தன் வலிமை என்றதே முற்குறித்த பொருள் , மேல் ( சிரம் பத்தால் எடுக்குற்றானை அவ்வலிதீர்க்கவல்லார் என்றலும் ` வன்மையே கருதி ` என்றும் வருதல் காண்க ).

பண் :

பாடல் எண் : 5

தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி ( ய் ) யாற் சிரம்பத்தா லெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும் , செருக்கினாலே தன்னை உண்மையான வலிமை உடையவன் என்று கருதி மிகப் பெரிய தேரை ஊர்ந்து சென்று சிவந்த கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை நோக்கித் தன் பத்துத் தலைகளாலும் அதனைத் தூக்க முற்பட்ட இராவணனுடைய வலிமையைப் போக்கிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

தவ்வுதல் - ஒடுங்குதல் , குறைதல் . தவ்வலி - ஒடுங்கும் வலி ; குறைந்த வன்மை . ஒன்றன் - ஒன்றனையே துணையாக உடையவன் , தன் வலியையே தனக்குத் துணையாக உடையவன் , தன் குறை வலியை நிறை வலியாக எண்ணிக் கொண்டு , அதனையே துணையாகக்கொண்டு ` இராவணேசுவரன் ` ` திரிலோகாதிபதி ` எனுந் தனது பெருமையொன்றாலே , அப்பொய்வலியை மெய்வலியாகவும் அவ்வலிமைத்துணை தனக்கு உள்ளதாகவும் கொண்டு மிகப் பெரிய தேரைக்கடாவி ; செய்ய கடிய கொடிய கண்களால் நோக்கிப் பத்துத் தலைகளாலும் எடுக்கலுற்றவனை , அவ்வலியை ஒழிக்க வல்லவர் அவளிவள் நல்லூரார் . அடுத்ததில் , ` வன்மையே கருதிச் சென்று ` என்றது காண்க .

பண் :

பாடல் எண் : 6

நன்மைதா னறிய மாட்டா னடுவிலா வரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக் கருதித்தா னெடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

நியாய உணர்வில்லாத இராவணன் தனக்கு நன்மையாவது இன்னது என்று அறிய இயலாதவனாய் , தன் உடல் வலிமையையே பெரியதாகக் கருதித் தன் வலிமையைச் செயற்படுத்த முற்பட்டு , கல்லாந் தன்மையுடைய மலையை ஓடிச்சென்று தூக்கமுற்பட்டு வருந்தி , வாயினால் அம்மையோ என்று அலற வைத்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகிறார் .

குறிப்புரை :

நன்மையே அறிகிலாதவன் , நியாயம் இல்லாதவன் , அரக்கர் கோமகன் தனது வலிமையையே துணையாக நினைந்து போய் , அவ்வலிமைதன்னைக் கடாவலுற்று ஓடிக் கல்லாந் தன்மையதாகக் கருதி மலையை எடுத்தான் . கடவுள் அவனது வலியை ஒழித்தார் . அம்மா என்று அலறினான் . அவ்வாறு நிகழச்செய்தவர் அவளிவணல்லூரார் .

பண் :

பாடல் எண் : 7

கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

` சிவபெருமான் வெகுளும் வகையில் அவனை எதிர்த்துச் செயற்படுபவர்கள் அழிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தால் இதற்கு முன் எல்லாச் செயல்களிலும் வெற்றியையே அடைந்த தாங்கள் தோல்வி தரக்கூடிய இச்செயலைத் தவிர்த்து விடுங்கள் ` என்ற தேரோட்டி சொல்லை மதியாது செருக்குக் கொண்ட மனத்தினனாய்த் தன் உடல் வன்மையால் கயிலையைப் பெயர்க்க மிகவும் முயல , அவ்விராவணன் உடம்பை அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நசிந்தும் போகுமாறு செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

கதம் - கோபம் . பட - தோன்ற . போதுவார்கள் - புகு தருவார்கள் . மரூஉ . போதும் - புகுதும் . சிதம் - வெற்றி ; அறிவு ; வெண்மையுமாம் . நீர்கள் :- ` நீன் ` ஒருமை . நீ + இர் = ` நீயிர் ` பன்மை . ` நீயிர் ` என்பதன் மரூஉ ` நீர் ` அதனொடு அஃறிணைக்கே உரிய ` கள் ` சேர்ந்து ` நீர்கள் ` என்று வழங்கிப் , பின் ` நீங்கள் ` என்று மருவிற்று . நீ + இர் = நீயிர் , நீவிர் என யகரம் வகரம் ஆம் மெய்யிரண்டும் இடை யுடம்பாக அடுத்தலும் இவன் ( இ + அன் ) என வகரம் உடம்படு மெய்யாதலும் அறியின் வரையறையின்றி வருதல் புலப்படும் . ` சிக்கென ` ( தி .4 ப .59 பா .2.) மதம் - செருக்கு . அதம்பழம் - அத்திப் பழம் ; அளிந்த பழம் , ` ஆற்றயலெழுந்த வெண்கோட் டதவத்தெழு களிறு மிதித்தவொரு பழம்போலக் குழையக் கொடியோர்நாவே காதலர் அகலக் கல்லென்றவ்வே `, ( குறுந்தொகை , 24 உரை ) என்புழி ` அதம்பழத்துருவு செய்தார் அவளிவணல்லூராரே ` என்றதை எடுத்துக் காட்டியுள்ளார்கள் புகழுடலெய்திய , உ . வே . சாமிநாத ஐயர் அவர்கள் . ( அருங்கலச் செப்பு ) அதம்பழத் துருவு செய்தல் அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நலிந்தும் போகப் பண்ணுதல் .

பண் :

பாடல் எண் : 8

நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா வரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி யூன்றினா னுகிரி னாலே
பாடிமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

பல நாடுகளிலும் சுற்றித் திரிந்த நியாய உணர்வில்லாத இராவணனை இவ்விடத்தை விட்டு விரைந்தோடு என்று அதட்டிக் கால்விரல் நகத்தினாலே அவனை ஊன்ற , நசுங்கிய அவன் மிகுதியாகப் பாடி உயிர் பிழைப்பேன் என்று எண்ணி , பாடிப் பணிய அவனுக்குப் பலநன்மைகளைச் செய்தவராய்ப் படமெடுத்து ஆடும் பாம்புகளை மிகுதியாக அணிந்தவராகிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

நாடுகளிலே மிகத்திரிகின்ற நியாயமில்லாத அரக்கர் கோமகனை விரைந்தோடு என்று அதட்டித் திருக்காற் பெருவிரலாலே சிறிதே ஊன்றினார் . அது பொறுக்கமாட்டாமல் , நான் கயிலைமலை யாண்டவனைப் பாடியுய்வேன் என்று பணிந்தான் . பணியவே , நாளும் வாளும் தேரும் பேரும் ஆகிய நல்ல திறங்களைக் காட்டினார் . ஆடுகின்ற அரவம் மிகப் பூண்டவராகிய அவளிவணல்லூரார் .

பண் :

பாடல் எண் : 9

ஏனமா யிடந்த மாலு மெழிறரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி நன்மையை யறிய மாட்டார்
சேனந்தா னிலாவ ரக்கன் செழுவரை யெடுக்க வூன்றி
ஆனந்த வருள்கள் செய்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

பன்றி வடிவெடுத்துப் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும் , அழகிய தாமரையில் உறையும் பிரமனும் ஞானம் உடையவராய்த் தமக்கு நன்மை எது என்று அறியமாட்டாதவராய் இருந்தனர் . பருந்துபோலப் பல இடங்களிலும் உலாவும் தன்மையை உள்ள இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க அவனை அழுத்திப் பின் அவனுக்கு மகிழ்ச்சி தரும் அருள்களைச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

பன்றியுருக்கொண்டு , நிலம் அகழ்ந்த திருமாலும் அழகுதரும் தாமரைப் பூவில் வாழும் நான்முகனும் முழுமுதல்வனைக் காணவேண்டும் என்னும் அறிவுடையராகியும் சிவத்தை அறிய வல்லரல்லராயினர் . சேனம் - பருந்து . நிலா - நில்லாத . பருந்து போல நாடுமிக்குழிதர்கின்ற . ( தி .4 ப .59 பா .8) அரக்கன் . ` சேனை ` சேனம் என்றாகும் . சேனை + தான் = சேனந்தான் ( பனை + தாள் = பனந்தாள் ), சேனை இல்லாத அரக்கன் எனலும் பொருந்தும் . செழுவரை - செழிப் புடையதாய கயிலைமலையை , எடுக்க - எடுத்தலால் . ஊன்றி - திருக்காற்பெருவிரலால் அழுத்தி , ஆனந்த அருள்கள் :- ` நற்றிறங்கள் ` ( தி .4 ப .59 பா .8.)

பண் :

பாடல் எண் : 10

ஊக்கினான் மலையை யோடி யுணர்விலா வரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினா னஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினா ரமுத மாக வவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

ஓடிச் சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அறிவில்லாத இராவணனைக் கால்விரலால் அழுத்திப் பத்துத் தலைகளும் நொறுங்கச் செய்து அவன் அஞ்சுமாறு அவனுடைய நோன்பின் பயன்களுங் கெட நோக்கிய பெருமான் பின் அவனை அழுத்தியதால் ஏற்பட்ட துயரைப் போக்கி அமுதம் போல் உதவி அவனை அழியாமற் காத்தார் அவளிவணல்லூரார் .

குறிப்புரை :

அரக்கன் ஓடி மலையை ஊக்கினான் , தன்னை - அவனை . இது தவறு என்னும் உணர்ச்சி சிறிதும் இல்லாத இராவணனை . அவனை விரலினாலே தாக்கினார் ( சிவபிரான் ). இதிலும் ( தி .4 ப .59 பா .8) நல்லூரார் என்றதற்கேற்ப ` ஆர் ` ஈறின்மை அறிக . பத்துத் தலையும் தகர்ந்தொழிய நோக்கி ஊன்றினார் . தன்னை - அவனை , அஞ்ச ஊன்றி நோக்கினார் என்க . நோன்பு - தவம் , விரதம் , இற - கெட , ஊன்று - ஊன்றியதால் உண்டான வருத்தத்தை , சொல்லி - நீக்கி , ஊன்றுதலை நீக்கி எனலுமாம் . சொல்லி - சாமகானம் பாடி என்று பொருத்தலும் கூடும் . ` துணைவனுக்குற்ற துன்பம் சொல்லிய தொடங்கினானே ` ( சிந்தாமணி , 1146) என்புழி , சொல்லிய - தீர்த்தற்கு என்றெழுதிய நச்சினார்க்கினியர் உரையை உணர்க . அமுதம் ஆக ஆக்கல் :- இறப்பில்லையாகச் செய்தல் .
சிற்பி