திருக்குறுக்கைவீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

ஆதியிற் பிரம னார்தா மர்ச்சித்தா ரடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவ ருணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ்சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஆதிப்பிரமர் வண்டுகள் மலர்களைக் கோதி ஒலிக்கும் சோலைகளால் சூழப்பட்ட குறுக்கைவீரட்டனார் திருவடிக்கீழ் அர்ச்சனை செய்தார் . வேதம் ஓதிய நாவினை உடைய பிரமனார் தம்மை வழிபாட்டால் உணருந்தன்மையைச் சிவபெருமான் உணர்ந்தவராவர் . அப்பெருமான் சூரியன் முதலிய ஒளிப்பொருள்களுக்கு ஒளிதருபவராய் ஆரேனும் அமர்ந்திருந்து சொல்லும் நிலையைக் கடந்த பெருமையுடையவர் .

குறிப்புரை :

ஆதியில் முதற்கற்பத்தில் , முதற்படைப்பில் , படைப்பின் தொடக்கத்தில் , நூறுகோடி பிரமர்களுள் ஆதியிற்றோன்றிய பிரமனார் அடியிணைக்கீழ் அர்ச்சித்தார் . மேல் திருமால் அருச்சனை புரிந்தது கூறப்படும் . ( தி .4 ப .49 பா .5) அடியிணைக்கீழ் அர்ச்சிக்கப் பெற்றவர் வீரட்டனார் . வேதநாவர் பிரமனார் . வேதநாவர் - உணரும் ஆறு வீரட்டனார் உணரலுற்றார் . சோதி - ஞானசோதி . சுடர் - இன்பச் சுடர் . ` சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற்பணை முலை மடந்தை பாதியே `. சொல்லினை இறந்து நின்றார் :- ` நால்வேதத்து அப்பால்நின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை ` ( தி .6 ப .95 பா .4). பல மலர்களைக் கொழுதி வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த திருக்குறுக்கை வீரட்டனார் . பிரமனாரும் வேதநாவரும் அர்ச்சித்தாரும் ஆகியவர் உணருமாறு வீரட்டனார் உணரலுற்றார் . உணருமாறுணரல் :- ` விளம்புமா விளம்பு , பணியுமாபணி , கருதுமாகருது , உரைக்குமாவுரை , நணுகுமாநணுகு , ( நுன கழலிணை என் நெஞ்சினுள் இனிதாய்த் தொண்டனேன் ) ` நுகருமாநுகர் , புணருமாபுணர் , தொடருமாதொடர் , விரும்புமா விரும்பு , நினையுமாநினை ` என்று திருவிசைப்பாவில் முதற்றிருப் பதிகத்துள்ளவாறுள்ளது . அர்ச்சித்தாராய் , அடியிணைக் கீழ் ஓதிய வேதநாவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 2

நீற்றினை நிறையப் பூசி நித்தலு நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டு மந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

திருநீற்றை உடல்நிறையப் பூசி நாடோறும் செய் கடன்களைச்செய்து , காவிரி நீரை நிறைத்து அபிடேகம் செய்யும் மார்க்கண்டேயருக்குப் பிரமனால் குறிப்பிடப்பட்ட வாழ்நாள் முடிந்து விட்டது என்று அவரைக் கொல்வதற்காகத் தருமராசருடைய ஆணைப்படி வந்த கூற்றுவனைக் குறுக்கை வீரட்டனார் தண்டித்தார் .

குறிப்புரை :

நித்தலும் - நாடொறும் . நியமம் - செய்கடன் , நிச்சயம் ; நியதி . நீற்றினை நிறையப் பூசிச் செய்து . ஆற்று நீர் காவிரி நீர் . பூரித்து - நிறைத்து . ஆட்டும் - அபிடேகஞ்செய்யும் . அந்தணனார் - மார்க்கண்டேய முனிவர் . கொல்வான் - உடல் வேறும் உயிர் வேறும் ஆகக் கூறுசெய்ய . சாற்றும் நாள் - சிவபிரான் மிருகண்ட முனிவர்க்குச் சொல்லிய பதினாறாண்டு . வரையறுத்தல் பிறவினை . வரையறுதல் தன்வினை . அற்றது காலம் . பதினாறென்றுவரையறுத்தது திருவருள் . தருமராசன் - நடுவன் . சமன் :- ( ஞமன்போல ). ` விரிசீர்த் தெரிகோர் சமன் போல ஒரு திறம் பற்றல் இலியரோ ` என்றதன் ( புறநானூறு . 6 ) உரையை நோக்குக . கூற்று - தருமராசன் ஏவலாளருள் ஒருவன் . குமைப்பர் - அழிப்பர் . இது திருநீற்றினை நிறையப் பூசுதலும் , நியமம் தவறாமையும் , அபிடேகம் முதலியனவும் இறவாத இன்ப அன்பு வாழ்வைக் கொடுத்த உண்மையை ( மார்க்கண்டேயர் திவ்விய சரிதத்தை ) உணர்த்திற்று .

பண் :

பாடல் எண் : 3

தழைத்ததோ ராத்தி யின்கீழ் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே யாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தழைகள் நிரம்பிய ஆத்தி மரத்தின் கீழே மணலால் இலிங்கம் அமைத்து எம்பெருமானை அவன் திருநாமங்களைக் கூறி அழைத்து விசாரசருமன் பசுவின் பாலைக் கறந்து கொண்டு அபிடேகம் செய்ததனைக் கண்டு தவறு செய்த தன்னுடைய தந்தையின் கால்களைப் பெரிய வளைந்த மழுவாயுதத்தால் வெட்ட அவ்விசார சருமனுக்குக் குறுக்கை வீரட்டனார் சிவானந்தமாகிய அமுதத்தைக் குழைத்துக் கொடுத்துள்ளார் .

குறிப்புரை :

இது தி .12 சண்டேசுர நாயனார் புராணம் உணர்த்திற்று . தழைத்தல் - தழைமிகுதல் . ஆத்தி - சிவபூசைக்குரிய மலர்களைத் தரும் சிறந்த சில மரங்களுள் ஒன்று . ` ஆத்தி சூடி ` ` கொன்றை வேய்ந்தோன் ` என்னும் சிறப்பு , எல்லா மரங்களுக்கும் இல்லை . தாபரம் - மாபரனாகிய பரசிவத்துக்கு ஆதாரமாய்ப் புறத்தே நிற்கும் திருமேனி திருவேடம் ஆகிய இரண்டனுள் ஒன்றான சிவலிங்கத் திருமேனியை . மணலால் - மண்ணியாற்று மணலால் . கூப்பி - சிவலிங்காகாரமாகக் குவித்துச் செய்து . அழைத்து - துவாதசாந்தத்தினின்று புட்பாஞ்சலியுடன் சிவாகம விதிப்படி எழுந்தருளப்பண்ணி , ( சித்தியார் . சூ 8:- 19) அங்கே - எங்கும் உள்ளவன் இங்கும் உளன் என்னுந் தெளிவினார்க்குச் சிவன் மந்திரத்தால் உருக்கொண்டு உறையும் அத்தாபரத்திலே . ( சித்தி . 12:- 4). ஆவினதுபால் , ஆவினது இனியபால் . ` கறந்து கொண்டு ` என்றது சிவபூஜார்த்தம் என்பதைக் குறித்தது . ` கொண்டு ` என்றதில் விருப்பும் ` கண்டு ` என்றதில் வெறுப்பும் புலப்படல் உணர்க . பிழைத்த - சிவாபராதம் செய்த . தன் தாதை - தன்னைத் தந்தவன் . தாதா ( - கொடையாளன் ) என்பதன் தற்பவம் . ` தந்தை ` தமிழ்ச்சொல் . ` தாதை ` வட சொல் . தாள் - கால் . பெரிய கொடிய மழு . ` குழைத்தது ஓர் அமுதம் ` :- ` சிவாநந்தாமிர்தம் .` ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` என்பதில் , ` சோறு ` என்றதும் அது .

பண் :

பாடல் எண் : 4

சிலந்தியு மானைக் காவிற் றிருநிழற் பந்தர் செய்து
உலந்தவ ணிறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில் , சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

இது கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் உணர்த்திற்று . சிலந்தியும் :- திருநிழற்பந்தர் செய்யற்பாலதல்லாத இழிந்த சிற்றுயிரும் பேரறிவுடைய மக்கள் செய்யுஞ் சிவ புண்ணியத்தை மேற்கொண்ட உயர்வு குறித்து நின்றது . உலந்து - யானையால் அழிக்கப்பெற்றுக் குறைந்து . அவண் - திருவானைக்காவில் . கோச்செங்கணான் ஆகிய சிலந்தி . இறந்தபோதே என்றது துறக்க நிரயங்களிற் செல்லாமல் மீண்டும் நிலத்திற் போந்து கருப்பாசயத்தைத் தலைப்பட்டமை குறித்தது . இறந்த போதே அப்பிறவி நினைவுடன் பிறப்பித்திட்டார் என்க . ` கலந்த நீர்க் காவிரி ` என்றது திருவானைக்காவில் இறைவனைத் தன்பால் கலந்துகொண்டு அவனுக்குச் செழுநீர்த் திரள் என்று பெயர் வழங்கச் செய்த பெருமை காவிரிக்கு உண்மை குறித்தது . சோணாட்டுச் சோழர் :- சோலைவளநாடு என்பதன் மரூஉ சோணாடு . சோலைவளநாட்டரசர் என்பதன் மரூஉ ` சோழர் `. ` வளவன் ` என்னும் பெயர்ப் பொருளும் ஈண்டுணர்க . கோச்செங்கணார் தோற்றத்தால் அக்குலத்தின் அவர் முன்னோரும் பின்னோரும் பெருஞ்சிறப்புற்றது குறிக்கச் ` சோழர் தங்கள் குலம் ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 5

ஏறுட னேழ டர்த்தா னெண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை யர்ச்சித்தா னடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை யீண்டக்
கூறுமோ ராழி யீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின்கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க , அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

ஏறு உடன் ஏழ் அடர்த்தான் :- நப்பின்னை முதலிய மகளிர் மணங்குறித்துக் கண்ணன் எழுவிடை அடர்த்த வரலாறு பாகவதத்திற் கூறப்படுகின்றது . ஈண்டுத் திருமாலைக் குறித்து நின்றது . அவன் ஆயிரம் பூக்களை எண்ணிக் கைக்கொண்டு , கங்கைச்சடைப் பெருமானை , திருவடியிணைக்கீழ் அருச்சனை புரிந்தான் . ஆயிரத்துள் ஒன்று குறைய , வேறும் ஒரு பூ வேண்டி , தன் மெய்யிலுள்ள செந் தாமரை மலர் போலும் கண்ணைப் பறித்து அருச்சித்தான் . அவன் மெய்யன்புக்கு இரங்கி , அவன் வேண்டிய ஆழிப்படையை அருளினார் குறுக்கை வீரட்டனார் . ( தி .4 ப .65 பா .9) ` பொய்விடை யேழடர்த்தோன் ` ( பாரதம் . 18 போர்ச் . 146 ).

பண் :

பாடல் எண் : 6

கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகையேந்தி யெழிறிகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் மீது நாடோறும் ஒரு கல்லினை எறிந்த பின்னரே தாம் உண்ணும் நியமத்தைக் கொண்ட சாக்கிய நாயனார் இவ்வுலகிலிருந்து அரிசிச் சோறு உண்ணாமல் மேம்பட்ட வீட்டுலகை ஆளுமாறு செய்தவர் , இரவிலே உள்ளங்கையில் தீயை ஏந்தி அழகிய கூத்து நிகழ்த்திக் கொல்லிப்பண்ணை விரும்பிப் பாடும் குறுக்கை வீரட்டனாராவர் .

குறிப்புரை :

கஞ்சி உண்ணும் சாக்கியனார் , வார்கொண்ட வன முலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்து அன்பு மலரால் வழிபட்டார் . நன்ஞானம் அடைவதற்கு நாடிய பல வழியும் மெய் வழியாகத் தோன்றவில்லை . மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழி உணர்வாராய் , சாக்கியமும் , பிறவும் பொருளல்ல எனத் தெளிந்து , திருவருள்கூட ` ஈறில்லாத சிவ நன்னெறியே பொருள் ; சைவ நெறியே மெய்ந்நெறி ; சிவமே பொருள் ; பிற சமயப் பொருள் எல்லாம் அவமே ` என்று உய்வகை யுணர்ந்தார் . கஞ்சியுண்ணும் அவர்க்கு நெற் சோற்றுணவும் வேண்டாதவாறு பிறவி தீர்த்து , சிவலோகம் ( நீள் விசும்பு ) ஆளவைத்துப் பழவடிமைப் பாங்கு அருளினார் குறுக்கை வீரட்டனார் . எல்லி - இரவில் . ` ஆங்கு ` ஏழனுருபின் பொருட்டு . கையில் எரியேந்தி , எழில் திகழ் நட்டம் - அழகு பொலியும் ஆட்டம் . கொல்லிப் பண்ணு கந்தநாதர் ( தி .4 ப .48 பா .10.).

பண் :

பாடல் எண் : 7

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும் , நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த , காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து , தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து , அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

இது கண்ணப்பநாயனார் புராணம் உணர்த்திற்று . கைக்கொண்டு காவல் செய்தற்குரியன கருவியாகிய வில்லும் அம்பும் . கையின் கண்ணதாயது . ஊன்பொறை . தோலாற்றைக்கப்பட்ட பெரிய செருப்பும் தொட்டு . தூயவாயினின்றும் வெளிப்படும் நீர் , வாயாகிய கலசத்திலிருந்து நன்னீர் அபிடேகம்புரிந்து . தீப்பெருங் கண்கள் .... பெரிய நெற்றித் தீக்கண்ணும் சூரிய நேத்திரமும் சிவந்த குருதி (- ரத்தம் ) நீர் ஒழுக்கக் கண்டு வருந்தித் தன் கண்ணை இடந்து அப்புகின்ற அரும்பெருந்தொண்டினையும் ஏற்றுக்கொண்டார் திருக்குறுக்கை வீரட்டனார் . ` கண்கள் ` என்பது எவற்றை ?

பண் :

பாடல் எண் : 8

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக் காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம் , தேவர் உலகம் , நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

நிறைமறை :- ` நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி `. குறைவிலா நிறைவினனாகிய பரமசிவனாற் செய்யப்பட்டமையானும் இறுதிக் காலத்துப் பரமசிவனிடத் தொடுங்கிப் படைப்புக் காலத்து முன்போலவே தோற்றுதலானும் உபசாரமாக நித்தம் என்று கூறப்படுவதாலும் , எல்லாச் சமயநூற் பொருளியல்பு களெல்லாம் முற்றுணர்வுடைய அம் முதல்வனாற் செய்யப்பட்ட வேதம் கூறும் பொருளியல்பின் ஏகதேசமாய்க் காணப்பட்டு அதனுள் அடங்குதலானும் , வேதத்தினடங்காதபொருள் வேறின்மையானும் ` நிறைமறை ` என்றருளினார் . நிறைகாடு எனின் தாவரங்கள் நிறைந்த காடென்றதாம் . திருமறைக்காட்டிலே எலியாயிருந்து , திருவிளக்கு நெய்யுண்ணப் புகுந்து , சுடர் சுட மூக்கால் தூண்டிய அபுத்திபூருவ புண்ணியத்தின் பயனாக மறுமையில் மூவுலகாளும் மாவலி வேந்தான வரலாறு இதிற் குறிக்கப்பட்டது . விண் - துறக்கம் . நீண்ட வானுலகு - பேரின்ப வெளி . குறைவு அற - நிறைவு உற .

பண் :

பாடல் எண் : 9

அணங்குமை பாக மாக வடக்கிய வாதி மூர்த்தி
வணங்குவா ரிடர்க டீர்க்கு மருந்துநல் லருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலா மடியார்க் கென்றும்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பார்வதியைப்பாகமாகத் தம் திருமேனியில் அடக்கிக் கொண்ட வடிவினராய் , தம்மை வணங்குபவர்களுடைய துயரம் போக்கும் மருந்தாகியவராய் , நல்ல மேம்பட்ட தவத்தை உடைய கணம்புல்ல நாயனாருக்கு அருள்கள் செய்து , தம்மிடம் அன்பு பூணும் அடியவர்களுக்கு , நல்ல பண்புகளை அருளுவார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

அணங்கு - தெய்வம் . உமை - ` உமா ` வடசொல் திரிபு . பாகம் - இடப்பால் . ஆதிமூர்த்தி - முதலுரு . வணங்குவார்கள் - அடியார்கள் . இடர்கள் - பிறவி முதலிய துன்பங்கள் . மருந்து - அமிர்து . நல் அருந்தவத்த கணம்புல்லர் - பிறவிப் பிணி தீர்க்கும் அரிய தவத்தை உடைய கணம்புல்ல நாயனார் . ` கையணிமான் மழுவுடையார் கழல்பணி சிந்தனையுடைய செய்தவத்துக் கணம்புல்லர் திருத்தொண்டு விரித்துரைப்பாம் ` ( தி .12 பெரிய . ஐயடிகள் . 8). அருள்கள் :- ` பெருஞ்செல்வம் , அதன் பயன் , நல்குரவு , விளக்கெரித்தல் , புல் விலைப்பொருள் , அதுவிலைபோகாமை , புல்விளக்கு , முடிவிளக்கு , வினைத்தொடக்கெரித்தமை , மங்கலமாம் பெருங்கருணை , சிவலோக வாழ்க்கை , மெய்ப்பொருளாவன ஈசர்கழலென்னும் விருப்பு ` ( தி .12 பெரியபுராணம் ) காதல் - சிவபத்தி . குணங்கள் :- எண்குணங்கள் . ` எண் குணத்துளோம் ` ( தி .6 ப .98 பா .10) ` எட்டுக்கொலாம் அவர் ஈறில் பெருங்குணம் ` ( தி .4 ப .18 பா .8). ` காதலாம் அடியார் ` என்றதில் உள்ள காதல் எத்தகையது ? ` காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது ....... நச்சிவாயவே ` என்றருளிய திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்த காதல் இது . மாதர் காதல் வேறு , ஞான போதர் காதல் வேறு . கருதல் என்பதன் மரூஉவே காதல் . கட்டு நெறியும் வீட்டு நெறியும் கருதாமல் எய்துவன அல்ல . ` கருதியது முடித்தலும் காமுறப்படுதலும் ` ( சிறுபாண் . 213) ` தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்மையையும் , ( நுகர் தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்று அறாக்கால் பிறப்பு அறாமையின் கருதியது முடிக்க வேண்டும் என்றார் .) அங்ஙனம் தானே இன்பம் உறாதே அம் மகளிரும் தம்மாலே மிக்க இன்பத்தைப் பெறும் தன்னை விரும்பப்பட்டிருத்தலையும் ` ( நச்சினார்க்கினியர் உரை ).

பண் :

பாடல் எண் : 10

எடுத்தன னெழிற் கயிலை யிலங்கையர் மன்னன் றன்னை
அடுத்தொரு விரலா லூன்ற வலறிப்போ யவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இலங்கையின் மன்னனாகிய இராவணனைப் பொருந்திய கால் விரலால் அழுத்திய அளவில் அலறிப் போய் அவன் செயலற்று விழுந்து , செருக்கினை விடுத்துக் கை நரம்புகளை வீணை நரம்புகள் ஆக்கி ஒலித்து வேத கீதங்களைப் பாட , அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும் நீண்ட ஆயுளையும் நல்கினார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

இலங்கையர் மன்னன் எழிற் கயிலை எடுத்தனன் . எடுத்தனனாகிய அம்மன்னன்றனை அடுத்து , ஒரு விரலால் ஊன்ற அவனும் அலறிப்போய் வீழ்ந்து , எடுத்த கயிலையை விடுத்தனன் . எடுக்கும் முயற்சியை விடுத்தனனுமாம் . கையில் உள்ள யாழ்நரம்பால் வேத கீதங்களைப் பாடக் கொற்றவாளும் நாளும் குறுக்கை வீரட்டனார் கொடுத்தனர் . போயவனும் எனலும் ஆம் . போயவன் - போனவன் . யகரமெய் இறந்தகாலங் காட்டும் இடைநிலை , ( போ + ய் + அவன் = போயவன் ). வீரட்டனார் கொடுத்தனர் என , ` ஆர் ` ஈற்றிற்கேற்ப ` அர் ` ஈறு கொள்ளப் பட்டது . பலர்பாலுணர்த்தியதன்று .
சிற்பி