திருவாப்பாடி


பண் :

பாடல் எண் : 1

கடலக மேழி னோடும் பவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரு மொள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி மன்னுமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

ஏழு கடலும் காற்றும் விண்ணும் , உடல்களில் உள்ள உயிர்களும் , உலகமும் , தீயும் ஆகிநின்று , பெரிய மலர்கள் மணம் வீசும் மாலைக்காலமும் , குளிர்ந்த சந்திரன் ஒளிவிடும் இரவும் , சூரியன் ஒளிவிடும் பகற்காலமும் ஆகி , நிலைபெற்று நின்ற ஆப்பாடியார் இதழ் விரிகின்ற கொன்றைப் பூமாலையைச் சூடியவராவார் .

குறிப்புரை :

கடல் அகம் ஏழ் - நீரும் ( ஏழுகடலும் ). பவனமும் - காற்றும் . விண்ணும் - ஆகாயமும் . உடலகத்து உயிரும் . பாரும் - மண்ணும் . ஒள் அழல் - ஒளியையுடைய தீ . இறைவனுடைய எட்டுருவான பாரும் , நீரும் ( கடலேழும் ), காற்றும் ( பவனமும் ) விண்ணும் , இயமானனும் , நெருப்பும் , மதியும் பகலும் கூறினார் ஆதலின் , ` பவனம் என்ற பாடமே உண்மையானது . இரண்டாவதடியிற் பாரும் என்றதாலும் புவனம் என்றது பொருந்தாது . மாலை தண்மதி :- ` மாதர்ப் பிறைக்கண்ணியான் `.

பண் :

பாடல் எண் : 2

ஆதியு மறிவு மாகி யறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க ராகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்புமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிந் திருப்பவராய் , ஒளியை உட்கொண்ட ஞானச்சுடராய் , தூய வழிக்குச் செலுத்தும் ஒப்பற்றவராய்ப் பாதி பெண் உருவினராய் , வழிபடுபவர்களுக்குத் துணைவராய் வேதியர்கள் வாழும் சேய்ஞலூரை அடுத்த ஆப்பாடியில் உறையும் பெருமான் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

ஆதியும் , அறிவும் , அறிவினுள் செறிவும் , சோதியுள் சுடரும் , தூநெறிக்கு ஒருவனும் . பாதியிற் பெண்ணும் , பரவுவார் பாங்கரும் ஆகி , ஆப்பாடியிலுள்ளார் என்று கொள்க . ` ஆகி ` ஆறும் ஆப்பாடியார் என்னும் வினைக்குறிப்பொடு முடியும் . முற்பாட்டில் ஆகி மன்னும் ஆப்பாடியார் என்றதுபோல ஆகிவிரும்பும் ஆப்பாடியார் எனலுமாம் . ஆதி - முதல் . அறிவு - சிவஞானம் . அறிவினுட் செறிவு - சிவஞான யோகம் . செறிவு - யோகம் ` சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றி ` ( தி .8 திருவாசகம் ) எனச் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கும் உணர்த்துகின்றுழி யோகத்தைச் ` செறிவு ` என்றது காண்க . சோதி - அபரஞானம் . உட்சுடர் - பரஞானம் . முறையே ஞானப்ரகாசமும் சிவப்ரகாசமும் ஆம் . சோதியுட் சோதி - அறிவுக்கறிவு எனலுமாம் . தூநெறி - சைவ சித்தாந்தச் செந்நெறி . அந்நெறிக்கு ஒருவன் பரமசிவன் .112. பாதியிற் பெண் - அர்த்தநாரீ . பரவுவார் பாங்கர் :- ( தி .4 ப .48 பா .3.) ( பால் + கு + அர் ) பக்கத்தார் . ` வாழ்த்துவார் வாய் உளான் `. வேதியர் - மறையோர் . சேய்நல்லூர் , சேய்நலூர் , சேய்ஞலூர் , சேய் - சண்டேசுரர் . ஆப்பாடி - அவர் மேய்த்த ஆக்களின் பாடி .

பண் :

பாடல் எண் : 3

எண்ணுடை யிருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாட றன்னைப் பரவுவார் பாங்க ராகிக்
கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப் பேணுமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

மிக மேம்பட்டதாக எண்ணப்படும் இருக்கு வேதமாய் , அவ்வேதம் குறிப்பிடும் பரம்பொருளாய் , பண்ணோடு பாடல் பாடுபவர் துணைவராய் , நெற்றிக்கண்ணராய் , உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும் எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

எண் - கணக்கு , எண்ணம் , இருக்கு - முதல் மறை . திருஞான சம்பந்தரை முதன் மறைப் பிள்ளையார் எனச் சேக்கிழார் பெருமான் கூறியருளியதுணர்க . இருக்கின் உட்பொருள் - அம் முதன் மறையின் மறைபொருள் ( இரகசியார்த்தம் ). பண்ணொடு பாடல் தன்னை - பண்ணும் பாடலுமாயிருப்பவனை , ` வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனைப் பண்ணில் வருபயன் ஆனானை ` ( தி .6 ப .60 பா .6). ` பண்ணின் இசையாக நின்றாய் போற்றி ` ( தி .6 ப .55 பா .7). ` கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற பண்ணவன் காண் பண்ணவற்றின் றிறலானான் காண் ` ( தி .6 ப .52 பா .1). ` பழுத்த பண்களாகிச் சோதியார் இருளாகிச் சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் ` ( தி .6 ப .26 பா .6). பரவுவார் பாங்கர் :- ( தி .4 ப .42 பா .7). நெற்றியில் ஒரு கண்ணாகி , கருதுவார் கருதலாகாப் பெண்ணொரு பாகமாதல் :- அம்மையப்பர் என்பதன் உண்மையை ஞானிகள் அல்லாதார்க்கு அறிதலும் எண்ணுதலும் இயலாமை உணர்த்திற்று . ஆகிப் பேணும் ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 4

அண்டமா ரமரர் கோமா னாதியெம் மண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தைக்
கண்டவன் றாதை பாய்வான் காலற வெறியக் கண்டு
சண்டியார்க் கருள்கள் செய்த தலைவராப் பாடி யாரே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களுமாய் , தேவர் தலைவராய் , எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின் திருவடிகளை மனத்துள்கொண்டு , அப்பெருமான் குறிப்பினாலே மணலிலே மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைக்க அதனைக் கண்ட அவன் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர , விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக் கண்டு அவனுக்குச் சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப் பெருமானாவார் .

குறிப்புரை :

பல்வேறு அண்டங்கள் . ஆர் - ஆர்கின்ற , பொருந்துகின்ற . அமரர் - தேவர்கள் . கோமான் ( கோமகன் ) கோவாகிய மகன் , மகன் - தேவன் , கோ - தலைவன் , கோமகன் - தேவாதி தேவன் , மலை மகள் , திருமகள் , கலைமகள் என்று தேவி என்ற பொருளில் வழங்குதலுணர்க . ஆதி - முதல்வன் , எம் அண்ணல் - எம் பெருமான் . பாதம் கொண்டவன் - திருவடி பெற்றவர் ; சண்டேசுவர நாயனார் . குறிப்பி னாலே - சிவலிங்க பாவனையாலே . தாபரத்தைக் கூப்பினான் - தாபரத்துள் ஒன்றான மணலைச் சிவலிங்காகாரமாகக் குவித்து வழிபட்டார் . கண்ட அவன் தாதை என்றோ அவன் தாதை கண்டு என்றோ கொள்ளலாம் . தாதையாகிய பாய்வான் , பாய்வான் கால் ( சீறிப் ) பாய்வானது கால் . அற - அற்று வீழும்படி . எறிய - ` பெருங் கொடு மழுவால்வீச ( தி .4 ப .49 பா .3). கண்டு - சிவபெருமான் சண்டேசுரரின் திருவருளுறைப்பைத் திருவுளத்திற் கொண்டு . சண்டியார்க்கு - சண்டேசுர நாயனார்க்கு . அருள்கள் :- ` அடுத்த தாதை இனி உனக்கு நாம் ` எனப் பெற்றமை ; சிவமயமாய்ப் பொங்கி யெழுந்த திருவருளில் முழுகப் பெற்றமை ; யாவரும் துதிக்கச் சிவப்பிரகாசத்தில் தோன்றப் பெற்றமை ; தொண்டர் தலைமை ; சிவன் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் ஆகிய அனைத்துக்கும் உரிமையுற்றமை சண்டீசனும் ஆம் பதப்பேறு என்பன . அற எறியக் கண்டு செய்த தலைவர் ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 5

சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரைமேன் மன்னி
அந்தமோ டளவி லாத வடிகளாப் பாடி யாரே.

பொழிப்புரை :

சிந்தித்தல் , தெளிதல் , தெளிவினுள் விளங்கும் தூய நிலையாகிய நிட்டை , இவற்றால் பயனாகிய வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய் , முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல் வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

சிந்தை - ( கேட்டற்குப்பின் ) சிந்தித்தல் . தெளிவு - ( சிந்தித்தற்குப் பின்னதாகிய ) தெளிதல் . ( தி :- 4 ப .40 பா .2, ப .41 பா .5) தெளிவினுள் சிவமாதல் :- தெளிவினுள் விளங்கும் தூய நிலை ; நிட்டை . கேட்டல் :- ஞானத்திற் சரியை . சிந்தித்தல் :- ஞானத்திற் கிரியை . தெளிதல் :- ஞானத்தில் யோகம் . நிட்டை கூடல் :- ஞானத்தில் ஞானம் உபாயச் சரியையிற் சரியை முதல் உபாய ஞானத்தில் ஞானம் ஈறாகிய பதினாறு வகையும் அவற்றினின்று விரியும் பல வேறு வகையும் , உண்மைச் சரியையிற் சரியை முதல் உண்மை யோகத்தின் ஞானம் ஈறாகிய பன்னிரு வகையும் அவற்றினின்றும் விரியும் பல வேறு வகையும் , உண்மை ஞானத்திற் சரியை முதலிய ( இக் கேட்டல் சிந்தித்தல் , தெளிதல் ஆகிய ) மூவகையும் இவற்றினின்று விரியும் பல வேறு வகையும் , ஞானத்தின் ஞானங்களின் பல வேறு வகையும் கடந்து அவற்றுள் முடிவாகிய ஞானமே பரமுத்தியைத் தருவது . அம் முடிவான ஞானமே தெளிவினுட் சிவம் . அது தரும் பரமுத்தியே வந்த நற்பயன் ஆம் . வாள் நுதல் - ஒளியுடைய நெற்றியாள் ; உமையம்மையார் . மந்தம் - தென்றல் . மண்ணியாறு . அந்தம் - முடிவு . அளவு - பிரமாணம் ; எண் . அடிகள் - கடவுள் . மன்னி அந்தமும் அளவும் இல்லாத ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 6

வன்னிவா ளரவு மத்த மதியமு மாறுஞ் சூடி
மின்னிய வுருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட விருந்தவாப் பாடி யாரே.

பொழிப்புரை :

வன்னி , ஒளிபொருந்திய பாம்பு , ஊமத்தை , பிறை , கங்கை இவற்றைச் சூடி மின்னல்போல ஒளிவீசும் வடிவினை உடைய ஒளிமயமாய் , ஞானத்தின் பயனாகிய பரமுத்தியாய்ப் பார்வதி பாகராய் , தியானிப்பவர் தியானத்தில் இருப்பவராய் , இனிய இசைகளை அடியார்கள் பாடுமாறு ஆப்பாடியார் இருக்கின்றார் .

குறிப்புரை :

வன்னி - வன்னியிலை . வாள் அரவு - கடும் பாம்பு . மத்தம் - ஊமத்தம்பூ . மதியம் - பிறை . ஆறு - கங்கை . மின்னுருவொளி , மெய்ப்பொருட் பயன் :- மெய்ப்பொருள் - மேற்குறித்த முடிவான ஞானம் . பயன் - பரமுத்தி . கன்னியோர் பாகம் - ` அர்த்தநாரீசுவரன் `. ` பான்மொழிகன்னி ` ( சித்தியார் ) கருதுவார் கருத்துமாதல் :- ` வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான்றன்னை ` ` அடியேன் மனத்துள் அமர்கருத்தனை ... ... புத்தூர்ச் சென்று கண்டுய்ந்தேனே `. தொண்டர் இன்னிசை பாட இருந்த ஆப்பாடியார் . சூடி ஆகி ... ... இருந்த ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 7

உள்ளுமாய்ப் புறமு மாகி யுருவுமா யருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமா யருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தவாப் பாடி யாரே.

பொழிப்புரை :

உள்ளும் புறமுமாய் , அருவும் உருவுமாய் , வெள்ளமும் கரையுமாய்க் கிரணங்கள் விரிகின்ற சூரியனாய் , கள்ளமும் கள்ளத்து உள்ளாருமாய்க் கருத்துள் இருப்பவராய்ச் செல்வ வடிவினராய் , தம்மைப் பலவகையாலும் அனுபவிக்கும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு கொள்ளத் தம்மை வழங்கிக் கொண்டு இருப்பவர் ஆப்பாடிப் பெருமான் ஆவார் .

குறிப்புரை :

உள்ளும் புறமும் , உருவும் ( அருவுருவம் ) அருவும் , வெள்ளமும் கரையும் , விரிகதிர் ( த் திங்களும் ) ஞாயிறும் , கள்ளமும் கள்ளத்துள்ளாரும் , கருத்தும் அருத்தமும் ஆகி , அருளுகின்றவர்க்கு அள்ளல் செய்து இட்டு இருந்த ஆப்பாடியார் . அள்ளுவார் - அள்ளிக் கொள்வார் . அள்ளல் செய்து - அள்ளி . இட்டு - கொடுத்து . ` இட்டார்க்கு இட்ட பயன் ` உருவும் அருவும் கூறியதால் , அரு வுருவமும் ஞாயிறு கூறவே திங்களும் கொள்ளப்பட்டன .

பண் :

பாடல் எண் : 8

மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித்
தியக்கமா யொருக்க மாகிச் சிந்தையு ளொன்றி நின்று
இயக்கமா யிறுதி யாகி யெண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமா யடக்க மாய வைவராப் பாடி யாரே.

பொழிப்புரை :

மயக்கமும் தெளிவுமாகிப் பெரிய மலைகளும் காற்றுமாகி , அசைவும் அசைவின்மையுமாகி , அடியவர் சிந்தையுள் பொருந்திநின்று , அதனை இயக்குபவராய் , உலகுக்கெல்லாம் இறுதியாய் , எண் திசைகளுக்கும் தலைவராய் , நோயற்றவராய்ப் பொறிவாயில் ஐந்தும் அவித்தவராய் , உள்ளவர் திருவாப்பாடிப் பெருமான் ஆவார் .

குறிப்புரை :

மயக்கம் - கலக்கம் . தெளிவு - விளக்கம் . வரை - மலை . வளி - காற்று . தியக்கம் - அசைவு . சோர்வு :- புறத்துச் சென்று அசைந்து அலைந்து சோரும் நிலையை . ஒருக்கம் - ஒருங்குறல் , ஒற்றுமை செய்தல் . ` உருத்திரசன்மர் எனவுரைத்து வானில் ஒருக்கவோ என்றதோர் சொல் ` ( திருவள்ளுவமாலை . பாயிரம் . 1). அகத்துள் ஒருங்குறும் நிலைமை . இயக்கம் - இயங்குதல் . செலவு . இறுதி - முடிவு . எண் திசைக்கு இறைவர் - ` அட்டதிக்குப் பாலகர் `. அயக்கம் - ` நோயின்மை . நிராமயம் `. ( தமிழ்ச் சொல்லகராதி . மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு . பக்கம் . 225. பார்க்க ). ` குன்றுகள் அயக்கலின் ` ( கம்ப . சேது . ப . 10) என்றதாலும் அடக்கத்திற்கு முரணாவது அசைவு ஆதலாலும் அசைத்தல் என்றல் சிறந்தது . அசைத்தல் , அசைக்கல் , அசக்கல் , அசக்கம் , அயக்கம் என முறையே மருவிற்று . மயக்கமும் தெளிவும் , மால்வரையும் வளியும் , தியக்கமும் , ஒருக்கமும் , இயக்கமும் , இறுதியும் , அயக்கமும் , அடக்கமும் முரணாவன . மலையும் வளியும் பொருத வரலாறுண்டு . மயங்குவது மயக்கம் . தியங்குவது தியக்கம் . ஒருங்குவது ஒருக்கம் . இயங்குவது இயக்கம் . அடங்குவது அடக்கம் . அயங்குவது அயக்கம் . தெளிதல் - தெளிவு . இறுதல் - இறுதி . சிந்தையுள் ஒன்றி நிற்றல் - தோற்றம் . இயக்கம் - நிலை இறுதி - முடிவு ; முத்தொழில்கட்கும் முதலாதல் உணர்த்திற்று . சிந்தை ஈண்டு ஆன்மா . இறைவன் ஒன்றிநிற்கும் இடம் அதுவன்றி வேறில்லை .

பண் :

பாடல் எண் : 9

ஆரழ லுருவ மாகி யண்டமேழ் கடந்த வெந்தை
பேரொளி யுருவி னானைப் பிரமனு மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப்
பேரரு ளருளிச் செய்வார் பேணுமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

பெரிய தீத்தம்பத்தின் உருவினராய் ஏழுலகமும் கடந்த எம் தந்தையாராகிய பேரொளிப் பெருமானைப் பிரமனும் திருமாலும் முடி அடி காணமுடியாதிருந்த சிறப்பினை முன்நின்று துதித்துப் புகழ்ந்து , திருவடிகளை வணங்குபவருக்கு , ஆப்பாடியை விரும்பி உறையும் அப்பெருமான் பெருமளவில் அருள் செய்பவராவார் .

குறிப்புரை :

ஆர் அழல் :- பெருந்தீ என்றபடி . எங்கும் நிறைந்த தீயும் ஆம் . ` ஏழண்டத்தப்பாலான் ` ( தி .6 ப .8 பா .5). பேர் ஒளி உருவினான் :- ` ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ` சீரவை - கனங்கள் ; சீர்மைகள் . பரவுதலும் ஏத்துதலும் சென்று அடிவணங்குதலும் சிவபெருமானுடைய பேரருள் பெறும் வழிகள் ஆகும் . பேரருள் - ` பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் ஆகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் `.

பண் :

பாடல் எண் : 10

திண்டிற லரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை
எண்டிற லிலனு மாகி யெடுத்தலு மேழை யஞ்ச
விண்டிறல் நெரிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட் டுகந்த பரமராப் பாடி யாரே.

பொழிப்புரை :

மிக்க உடல் வலிமையை உடைய இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட , அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்த பெருமான் திருஆப்பாடியார் ஆவார் .

குறிப்புரை :

திண்மை - உறுதி . திறல் - வலிமை . சீகயிலாயம் :- ஸ்ரீ என்பதைச் சீ எனல் தமிழ் வழக்கு . சீபாதம் , சீபஞ்சாக்கரம் , சீராமன் , சீதரன் , சீராகம் , சீமான் , சீமாட்டி ( சீமதி ). சீகாழி , சீகாளத்தி . சீபருப்பதம் . திரு எனல் . இதனின் வேறு . எண் திறல் இலன் - எண்ணத் தக்க வலிமை இல்லாதவன் . ஏழை - உமாதேவியார் . விண்டு - நீங்கி . இற - ஒடிய . கடுத்து - சினந்து . பண் திறல் - பண்ணுந்திறனும் . பண்ணின் திறனுமாம் . ` பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ` ( தி .4 ப .48 பா .3.) என்றும் ` பண்திறல் கேட்டு உகந்த பரமர் ` என்று ( ஈண்டு ) ம் உள்ளவாறு நோக்கின் , இத் தலத்தில் இறைவர் திருப்பெயர் ` பாடலுகந்தார் ` ( தி .4 ப .49 பா .6.) என்று தெளிவுறும் . பாலுகந்தநாதர் என்பது ஆப்பாடி என்றது நோக்கியாக்கியதுபோலும் .
சிற்பி