திருக்கச்சிமேற்றளி


பண் :

பாடல் எண் : 1

மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்த னோடும்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாட லிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

காஞ்சிமா நகரிலே தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப் பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய் , பிறையை அணிந்த சடையிலே கங்கையைச் சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார் .

குறிப்புரை :

வாழ்வாரும் கொண்டாரும் ஆகிய இறையவர் காஞ்சி மாநகர் தன் உள்ளால் இலங்கும் மேற்றளியனார் என்று இயைத்துரைத்துக் கொள்க . பிச்சையேற்றலுக்கென்று அகம் ( தொறும் ) மறை பாடித் திரிந்து வாழ்வார் . சடைமுடிமேற் பிறை சூடி . பெய்வளை ( கங்கை ) யாளொடும் பிறைசூடி , கண்டத்திற் கறைகொண்டார் . அது என்ற மூன்றும் முதனிலைப் பொருளன . சுட்டுவன அல்ல . கறை - நஞ்சின் கறுப்பு . கண்டம் - ( திருநீல ) கண்டம் . பெய்வளையாள் :- வளைகளைப் பெய்த கைகளையுடைய கங்கை . ` தன் ` சாரியைகள் . பாடல் ஆடல்கள் இலங்கும் தளி , மேற்றளி , தளியனார் . நகரில் இறையவர் ( தங்கியவர் ) என்றுமாம் . பாடலும் ஆடலும் இலங்கும் இடம் மேற்றளி . தளி - கோயில் , நகரின் மேற் கெல்லையில் உள்ளது பற்றித் திருக்கச்சிமேற்றளி என்பர் . காஞ்சி :- காஞ்சி என்னும் மரம் பற்றிய காரணப் பெயர் . இதனை வடசொல்லாகக் கொண்டு பல பொருள்கூறுங் கற்பனை வேறு இவ்வுண்மை வேறு . ` ஆலவாயில் ` ` வன்னியூர் ` ` குற்றாலம் ` முதலிய தமிழ்ப் பெயர்களையும் வடமொழி யறிவிற்கேற்ப மொழிபெயர்த்த திறத்தை அறிக . வாயாற் சொல்லாது உளத்தி லெண்ணியவற்றை வாயாற் சொன்னவாறு அறிவார் என்னும் பொருளதாய்ச் ` சொன்னவாறறிவார் ` என்றதை ` உக்தவேதி ` என்றால் , சொன்னதை அறிதலில் வியப்பென்னை? மொழி பெயர்ப்பின் குறைகட்கு ஈதும் ஒரு சான்றாகும் .

பண் :

பாடல் எண் : 2

மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் றந்தை யிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

முருகனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் , எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய் , ஆன்மாக்களுக்குத் தலைவராய் , பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

மால் - மேகம் . அன ( அன்ன ) - ஒத்த மாயன் - திருமால் . மகிழ்ந்தனர் :- ` அரியலால் தேவியில்லை `. ` காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் ` ( தி .4 ப .32 பா .7). ` மாலினைமாலுற நின்றான் ` ( தி .4 ப .28 பா .1). விருத்தர் ஆகும் பாலனார் :- ` விருத்தனாய்ப் பாலனாகி ` ( தி .4 ப .22 பா .9. பசுபதியார் - பசுக்களுக்கெல்லாம் தலைவர் . ` பசு , பாசவேதனை யொண்டளை யாயின தவிரவ்வருள் தலைவன் `. ( தி .1 ப .12 பா .3) ` பசுபதியதன் மிசைவரு பசுபதி ` ( தி .1 ப .22 பா .5)- நோக்குக :- ( தி .4 ப .110 பா .1, 10.) பசுபதியைப் பாசுபத வேடத்தானை ( தி .6 ப .91 பா .2). பசுவேறும் எங்கள் பரமன் , விடையேறி வருவான் என்பனவும் பசுபதி என்னும் பொருளனவேயாகும் . சித்தாகிய சிவன் சித்தாகிய ஆன்மாக்கள் இடத்திலேதான் நீங்காதிருப்பவன் . ` ஆவியுள்நீங்கலன் , ` ஆன்மாவின் இடமதாகி உசிர்ப்பெனும் உணர்வும் உள்ளார் ` ` ஊனாகி , உயிராகி , ..... உணர்வாகி ` பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலாற் செற்றார் ` என்றதால் , திருநீறு இறவாமை அருளும் என்பது விளங்கிற்று . ` பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு `. ஏலம் - வாசனைப் பொருள் . ` ஏலவார் குழலாள் உமைநங்கை ` நற்கடம்பன் - ` நன்கடம் பனைப் பெற்றவள் பங்கினன் `. கடம்பன்தந்தை - கடப்ப மலர் மாலையைச் சூடிய முருகனைத் தந்தவன் .

பண் :

பாடல் எண் : 3

விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

எண்ணும் எழுத்துமாய் விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார் .

குறிப்புரை :

விண்ணில் வாழும் தேவர்கள் விரும்பி ( மண்ணில் ) வந்து இறைஞ்சுவார்கள் , வாழ்த்துவார்கள் , பண்ணின்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைப் பாடுவார்கள் . அவ்வாழ்த்தும் பாட்டும் கேட்பார் மேற்றளியனார் . கண்மணி போல்பவர் , எண்ணும் எழுத்தும் ஆயவர் . ` எண் ஆனாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல் பானாய் ` ( தி .4 ப .13 பா .1). ` எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் ` ( தி .4 ப .90 பா .6). ` எண்ணானாய் எழுத்தானாய் ` ( தி .6 ப .12 பா .5). என்றதன் கருத்து ; நாதம் விந்து தத்துவங்களாய் விளங்கும் இறைவனது நிலை உணர்த்தியதாகும் .

பண் :

பாடல் எண் : 4

சோமனை யரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய் , இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எந்தையாராய் , பிறையைப் பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார் .

குறிப்புரை :

சோமன் - சந்திரன் , பிறையும் அரவும் புனலும் சூடும் வாமன் , ( சத்திமான் . சத்திக்குத் தலைவன் , வாமதேவன் ) தேவர்கள் வலங்கொண்டு வந்து போற்றியது , முருகனை அருளி அசுரரை அழித்தற்பொருட்டு , அவ்வாரே நிகழ்தற்கண் மன்மத தகனம் இடைப் பட்டது . ஏமம் - யாமம் , இன்பம் , இன்பக் கூத்து , ` ஆநந்த தாண்டவம் `, ஏமம் - காவல் எனக்கொண்டு , உயிர்க்காவலாய் அதனுள் நின்றாடுவோன் என்பதும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 5

ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய் , எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய் , அருச்சுனனோடு எதிர்த்துப் போரிட்ட வேடராய் , உலகங்களிலும் , ஊழிகளிலும் , உடம்பினுள்ளும் , உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

ஊனவர் :- ` ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனது என்று அவரவரைக் ` கூத்தாட்டுவானாகி நின்றாய் ` ( தி .8 திருவாசகம் ) ` ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி ` ( தி .6 ப .62 பா .2). ஊனும் உயிரும் உலகமும் ஊழியும் ஆனவர் என்க . தானவர் - தானஞ்செய்பவர் ; கொடையர் . ` சிவோதாதா `. ( தி .6 ப .44 பா .7) கொடையரும் கொடுக்கப்படும் பொருளுமானவர் , தனஞ்சயன் - அருச்சுனன் ; வெற்றித்திருவினன் . கானவர் - ( வனசரர் ) வேடர் ; காட்டுள் வாழ்வினர் . ` ஏனம் ஒன்றின் காரணமாகிவந்து வேடடைந்த வேடனாகி விசயனோடு எதிர்ந்த தென்னே `, ( தி .1 ப .48 பா .6, தி .6 ப .34 பா .3, தி :-7 ப .57 பா .6, ப .66 பா .4, ப .98 பா .9) பார்க்க . காளகண்டர் :- திருநீலகண்டர் . ஏனம் - பன்றி ( முளை ) க் கொம்பு . ` ஏன முளைக் கொம்பு `. அக்கு - எலும்பு . ஓடு - தலையோடு : வற்றலோடு .

பண் :

பாடல் எண் : 6

மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாக ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய் , திருமாலாகவும் , இந்திரனாகவும் , பிரமனாகவும் , நிலமாகவும் , நாடாகவும் எண் திசைகளாகவும் புனித நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும் , அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார் .

குறிப்புரை :

மாயன் - கரியன் . மாலன் - இந்திரன் . மலரவன் - பிரமன் . மண் - நிலம் . தேயம் - நாடு , எண்டிசை . தீர்த்தம் :- ` மூர்த்தி தலம் தீர்த்தம் ` திரிதருகின்ற காயம் : - இயங்குதிணைக்குரிய உடல் . காயத்துள்ளார் - ஜீவர் . ஏய - மேனோக்கிய , ` கார்நினைந்து ஏத்தரு மயிற்குழாம் இருந்த `. ( சிந்தாமணி , நாமகள் , 58 ) மென்றோளி - காமாட்சியம்மையார் . பாகர்தளியனார் என்க .

பண் :

பாடல் எண் : 7

மண்ணினை யுண்ட மாயன் றன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

உலகை விழுங்கிய திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய் , இன்னிசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய் , முக் கண்ணராய் , அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

` மண்ணினைஉண்ட மாயன் ` - ` உலகமுண்ட திருமால் `. மாயனைப் பாகங்கொண்டது :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .4; ப .32 பா .7; ப .88 பா .1) பண்பாடி ஆடும் தொண்டர் உள்ளங்கவர் கள்வர் . பக்தர்கள் சித்தங்கொண்ட பரமன் விரும்பியது பண்பாடியாடும் பரிசு . அதனைச் சமயகுரவர் நால்வரும் வற்புறுத்தியருளுகின்றனர் . ` ஆடுகின்றிலை கூத்து : உடையான் கழற்கு அன்பிலை ; என்புருகிப் பாடுகின்றிலை ` ( தி .8 திருவாசகம் ). ` ஆடிப்பாடி அண்ணாமலைகைதொழ ஓடிப்போம் நமது உள்ளவினைகளே ` ( திருக்குறுந்தொகை ). முக்கண்ணர் . எண் - எண்ணம் . அவரளவை எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

பார்வதிபாகராய் , முருகனை மகனாகக் கொண் டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சிநகரிலே , சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார் .

குறிப்புரை :

செல்வி :- ` உடையாள் ` ` உடையாள் உன்றன் நடுவிருக்கும் ` உமாதேவியே உடையாள் , அவளது ஓர் அம்சமே திருமகள் . ` மகாலட்சுமி ` என்று பார்வதியைத்தான் நம் முன்னோர் வழிபட்டனர் . சிவபூசையில் , அதற்குரிய திரவியங்களை அருளும் வண்ணம் அம்பிகையின் அம்சமான மகாலட்சுமியையே வழிபடச் சிவாகமங்கள் விதித்துள்ளன . ` பாதியில் உமையாள் தன்னைப் பாகமாவைத்த பண்பன் ` . சேந்தன் - முருகக்கடவுள் . மல்லிகைக் கண்ணி - மல்லிகைப் பூமாலை , சிவபிரான் மல்லிகை மாலை அணிதல் உணர்த்தப்பட்டது , ஆசிரியர் காலத்திலே காஞ்சியிற் கரையிலாக் கல்வியுடையவர் பலர் இருந்தனர் என்றோ கலை பல விளங்கின என்றோ கருதலாம் . எல்லி - சூரியன் ; ` அருக்கனாவான் அரனுரு ` ஆதலின் , அவன் விளங்க அவனுள்ளே சிவன் நின்றான் என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 9

வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்
கூறியல் பாகம் வைத்தார் கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

தனக்கு இணையில்லாதபடி ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

இணைவேறு இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாள் - ஒப்புரைக்க வேறு எப்பொருளும் இல்லாமல் , எக்காலத்தும் விளங்குகின்ற ஒளியையுடைய இடையினாள் . கூறு இயல்பாகம் - திருமேனியின் ஒரு கூறாக இயன்ற ( இடப் ) பக்கம் , கோள் - வலிமை . அரா - பாம்பு , மதியம் - பிறை , ஆறு - கங்கை , அணி - அழகு , ஏறு - விடை .

பண் :

பாடல் எண் : 10

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

காஞ்சியில் இலங்கும் மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு , என்றும் நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த , அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட , அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு இன்னருள் செய்தவராவர் .

குறிப்புரை :

தென்னவன் - தென்னிலங்கை மன்னவனாகிய இராவணன் , சேயிழை - செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும் , ` ஆயிழை ` ` சேயிழை ` ` விளங்கிழை ` முதலியன தொல் வழக்கே , சேயிழையாள் எனப் பொருள்பட்டு , அன்மொழித் தொகையாயிற்று . மன்னவன் - என்றும் நிலையாயிருப்பவன் . நெரிய - நொறுங்க , கன்னலின் - கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் , கீதம் - சாமகானம் , இன் - இனிமை ( வாளும் , நாளும் , பேரும் , பிறவும் ). அவற்கு - அவ்விராவணனுக்கு , இத்தன்மையனுக்கு என்னும் அண்மைச் சுட்டு ஏலாது .
சிற்பி