திருவையாறு


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் .

குறிப்புரை :

மாதர்ப்பிறை - அழகுடைய பிறை . பிறைக்கு அழகு முழுமுதற் பொருளின் தலைமேல் வாழ்தலும் , வளராத் தேயாச் சிறப்பும் , பாம்பினை அஞ்சாமையுமாம் . ` அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே ` ( புறநானூறு கடவுள் வாழ்த்து ). என்னும் அதன் சிறப்புணர்க . பிறைக்கண்ணி - பிறையாகிய கண்ணி . தலை மாலை . கண்ணி - தலையில் அணிவது ; ஒரு பக்கம் காம்பு மட்டும் சேர்க்கும் பூந்தொடை . போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய பூவும் புனலும் . புகுவார் - அடியவர் . யாதும் என்பது ஆதும் என்றாதலுண்டு ` சென்று ஆதுவேண்டிற்று ஒன்று ஈவான் ` ( தி .6 ப .20 பா .9) ` நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதியான் ` ( தி .2 ப .84 பா .8) என அரசும் கன்றும் அருளிய வற்றாலும் அறிக . நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் ` ஆதும் இல்லை ` ` ஆதும் ஓர் பற்றிலாத பாவனை ` எனல் காண்க . ` யாதே செய்தும் யாம் அலோம் நீஎன்னில் ` ஆதே ` ` ஏயும் அளவில் பெருமையான் ` ( திருக்குறுந்தொகை ) என்பதில் அதுவே என்னும் பொருட்டு ஆதலின் அதுவேறு . சுவடுபடாமை :- ` பங்கயம் புரைதாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் கைகளும் மணிபந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தருகவும் ` ` மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும் ` ` உடம்பு அடங்கவும் ஊன் கெடவும் `, சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும் ` ( தி .12. அப்பர் . 357-360) உறுப்பழியவும் நின்ற சுவடு தோன்றாமல் , தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வாராய்ச் செல்லும் தூய்மை தோன்றல் . பிடி - பெண் யானை . களிறு - ஆண் யானை ; களிப்புடையது என்னும் காரணப்பொருட்டு . பிடியும் களிறும் சத்தியும் சிவமும் ஆகக் கண்டதால் திருப்பாதம் சிவாநந்தம் ஆகிய முன் கண்டறியாதன வற்றைக் கண்டேன் என்று தம் பேரின்ப நுகர்ச்சியைப் புலப்படுத்தினார் . பின் உள்ள எல்லாவற்றினும் பிறையும் பெருமாட்டியும் முதலடியிற் கூறப்பெற்றிருத்தல் அறிக . காட்சியருளிய பிறை சூடி ( சந்திரசேகரர் ) கோயில் , அகச்சுற்றின்கண் தென்மேற்கு மூலையில் உளது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை , பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி , ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

போழ் இளங் கண்ணியினானை - இளம் பிறையாகிய தலை மாலையினை அணிந்தவனை . பூந்துகிலாள் - இடப்பால் உள்ள நாய்ச்சியார் . வாழி போற்றி என்று ஏத்தியும் வட்டம் இட்டு ஆடியும் வருவேன் . ஆழிவலவன் - திருமால் . ஆழி - சக்கரம் . வலவன் - வலக்கையில் ஏந்தியவன் . பெடை என்றதால் கோழி சேவலைக்குறித்தது . கொழிப்பது கோழி . இதே பா .4 காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் , இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க . இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

எரி - நிலவு . ஏந்து இழையாள் - அம்பிகை . இலயம் - கூத்துக்கு ஒத்த தாளலயம் முகமலர்ச்சி . அகத்துவகையைக் குறித்தது . அருவி - ஆற்றிற்கு அடை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

பெய்வளையாள் - முற்பாக்களிற் போலக் கூறிக் கொள்க . பெய்வளை - செயப்படுபொருளில் வந்த வினைத்தொகை . துறை - ` மதுத்திவலை சிந்து பூந்துறை ` ( தி .3 ப .92 பா .8) தோளைத் தொழுவேன் , குளிரத் தொழுவேன் . அறை குயில் - பாடும் குயில் . ஆலும் - ஒலிக்கும் . ஆலல் என்பது அகலல் என்பதன் மரூஉ . மயிலுக்குத் தோகையும் குயிலுக்கு வாயும் அகலுதல் கொள்க . தி .3 ப .52 பா .1 இல் யாம் எழுதிய உரையைக் காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

ஏடு - இளைது . ( சிந்தாமணி 446, 1552 பார்க்க ). இளைது - இளது - ஈள்து - எள்து - ஏடு என மருவிற்று . இன்றேல் , நச்சினார்க்கினியர் ` ஏட்டைப்பட்டு ` என்பதற்கு ` இளைத்து ` என்றுரையார் . காடு , நாடு , மலை எல்லாம் சிவமயம் . ` மண்ணாகி விண்ணாகி மலையுமாகி ` ( தி .6 ப .94 பா .2). ` ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு ` ` பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லானும் ஐயாருடைய ஐயனே ` ( தி .2 ப .6 பா .1) எனக் காழிவேந்தர் அருளியதும் உணர்க . ஐந்தொழிற் கூத்து எங்கும் நிறைந்த சிவமூர்த்திக்கே உரியது . தில்லை முதலிய இடங்களிலே தான்திருக்கூத்துண்டு என்பது சாத்திரம் உணரார் கூற்று . மயில் - ஆண் . பிணைந்து - இணைந்து ; பின்னி .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்ல நிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

தண்மை - குளிர்மை . மதி - பிறை . நிறைமதி அன்று . தையல் நல்லாள் - நாய்ச்சியார் . உள்மெலி சிந்தையன் - உள்ளம் குழைந்த திருவடி நினைவினன் . உணரா - உணர்ந்து ; உருகா - உருகி ; செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் . அண்ணல் - தலைவன் . அமர்ந்து - விரும்பி . உறைகின்ற - எழுந்தருளியிருக்கின்ற . வண்ணம் - அழகு ; நிறமும் ஆம் . நீருறை மகன்றில் ( குறுந்தொகை 57 ) துணைபிரி மகன்றில் ( சிந்தாமணி 302 ) என்றதோ வேறோ தெரியவில்லை . ` பகரத்தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்தேத்தத் தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே ` எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் ( தி .1 ப .66 பா .3) அருளியதிலும் ` பகன்றில் ` என்றே காணப்படுகின்றது . இதில் அதன் பெருமை புலனாகின்றது . பக + அன்றில் . மக + அன்றில் இரண்டும் துணை பிரியா மகன்றில் . மகன்று - மகனை ( ஆணை ) யுடையது . துணைபிரியா மகன்றில் என்றதை நோக்கி , பகு + அன்றில் எனப் பிரித்து , துணை பிரி அன்றில் எனலாம் . பகன்றில் என்பது மகன்றில் என மருவியுமிருக்கலாம் . பிரியாத இயல்பு நோக்கி , பகா அன்றில் என்றிருந்தது பகன்றில் என மருவியதெனலும் கூடும் . யாது பகன்றிலொடு ஆடி வைகி வருவது ?

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறை யில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப் படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்த அணிகலன் களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவன வற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாத வற்றைக் கண்டேன்.

குறிப்புரை :

கடி - விளக்கம் . காரிகையாள் - நாய்ச்சியர் . வடிவு - கண்ணுக்குத்தோன்றுவது . உருவுதோன்றாது ; அதுகருத்துக்குத் தோன்றுவது . ( தொல்காப்பியம் பொருள் . 244. ) வண்ணம் :- முற்பாட்டின்குறிப்பில் அறிக . வேண்டுவ வாய்சொல்லி - வேண்டுவனவற்றை வாயாற் சொல்லி . வேண்டுவது உள்ளம் . சொல்வது வாய் ( நா ). ` மெய் வாய் கண் மூக்குச் செவி ` என்புழி வரும் வாய் சுவையுணர்ச்சிக்குரியது . சொல்வதற்குரியது நாவே . இரண்டும் வாய் என வழங்கப்படும் . அடியிணையில் கழலை ஆர்த்தல் . வீரக் கழலை வலக்காலில் மட்டும் கட்டுதல் தொன்மையது . இடிகுரல் அன்னது - இடியோசை போலும் ஓசையது . இடிகுரல் - ஆறன்றொகை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரை யில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.

குறிப்புரை :

பெரும்புலர்காலை :- ( தி .4 ப .31. பா .4) கொய்யா - கொய்து . செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் . அருங்கலம் - பண்புத்தொகை . ( யாப்பருங்கலம் ). அரிய பூண் . விலை மதிப்பருமை , பெறலருமை முதலியன கொள்க . கலமும் பொன்னும் மணியும் உந்தும் ஆறு . கலை - ஆண் முசு . கருங்குரங்கு .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி , அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன் , பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது , சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

முற்பிறை - தலைநாட் பிறை . மொய் - அடர்ந்த . பற்றிக் கயிறறுக்கில்லேன் . கயிறு - பாசம் . உன் திருவடியைப்பற்றி உலகினோடுள்ள பாசத்தை அறுக்கமாட்டேன் . ` பற்றுக பற்றற்றான் பற்றினை ` என்றதற்கமையப் பற்றி என்றார் . ` அப்பற்றைப் பற்றுக ( இப் ) பற்று விடற்கு ` என்றதற்கிணங்க கயிறு அறுக்கில்லேன் என்றார் . பாசம் என்னும் வடசொற் பொருள் குறித்துக் கயிறு எனப்பட்டது . ( திருக்குறள் 350 ) ` சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றி இப்பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான் பற்றிபே ரானந்தம் பாடுதும் காண் அம்மானாய் ` ( தி .8 திருவா . 194). அற்று - ஒரு பற்று மில்லா தொழிந்து . ` அற்றவர்க்கு அற்ற சிவன் ` ( தி .3 ப .120 பா .2). அற்று என்பற்கு விளங்கி எனலும் உண்டு . பொருள் புலப்படவில்லை என்புழி அறவில்லை என்று உலகிற் பலர் வழங்குகின்றனர் . நற்றுணையாகிய பேடை . நாரைக்குப் பேடை துணை . துணைக்கு நன்மை அடை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ , இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

திங்கள் மதி - ஒரு பொருட் பல பெயர் . திங்கள் சாந்திர மானம் பற்றிய திங்களை விளைவிப்பது . காரணப் பெயர் . மதி பிறை என்னும் பொருட்டு . சந்திரனுக்கு வடமொழியில் மதி என்னும் பெயரில்லை . இரண்டும் தமிழ்ச் சொல்லே . தேன்மொழி - தேமொழி . இனி எனக்கு எந்தை எங்கு அருள் நல்கும் கொல் என்று கொள்க . அங்கு - அக்கோயிலின் வழியில் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி , வீணாகக் கழிக்கப்படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன் , எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும் பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை , ஏறு தழுவ , இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

வளர்மதி - வளர்பிறை . ` நிறைநீர நீரவர் கேண்மை பிறை மதிப் பின்னீர பேதையார் நட்பு ` ( திருக்குறள் 782 ). வார்தல் நீளமாய் வளர்தல் . களவு படாததோர் காலம் காண்பான் - களவை அடையாததொரு காலத்தைக் காணும் பொருட்டு . காண்பான் - வினையெச்சம் ( நன்னூல் . 343 ). காட்சி - தரிசநம் என்பர் வடநூலார் . கடைக்கண் - (- கடைவாயிலின்கண் ) நிற்கின்றேன் . கடைக்கணிக்கின்றேன் என்றது எழுதினோரால் பிழைபட்ட பாடம் . முற்பாடல் பலவற்றில் வருவேன் என்றார் . இதில் வந்து நிற்கின்றேன் என்றார் . ` ஞாலமே விசும்பே இவை வந்து போம்காலம் ` களவு படுங்காலம் . ` பரம்பரனைப் பணியாதே பாழுக் கிறைத்த எத்தனையோ காலம் ` களவுபட்டன . ` கால வரையறையைக் கடந்து காலத்தினையும் தோற்றித் தொழிற்படுத்தும் கால காலனாகிய முதல்வனாற் செய்யப்படும் காரியத்திற்குக் காலம் வேண்டா ` ( சிவஞானபாடியம் . சூ . 2. காலதத்துவம் ). அதனால் அவனது அழியாத இன்ப நிலையைப் பெற்றவர்க்குரியது களவு படாததோர் காலம் என்று உபசரிக்கப்பட்டது . அதைக் காண்பதற்காக இறைவன் கோயிற் கடை வாயிலின் கண் நிற்கின்றேன் என்றார் . இடையறவுபடாது நெடுங்காலம் காண எனலுமாம் . அளவு படாததோரன்புக்கும் அவ்வாறு உரைத்துக்கொள்க. திருவடிக்கன்பு அளவுபடாதது. ஏனையனைத்தும் அளவுபடுவனவேயாகும். நாகு - பெடை. ஏறு - ஆண் (எருது).
சிற்பி