திருஅவளிவணல்லூர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர் . முப்புரிநூல் அணிந்த திருமார்பினர் . திருவெண்ணீறு பூசியவர் . இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர் . ஆகாயத்தில் திரிந்த பொன் , வெள்ளி , இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை , மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருஅவளிவணல்லூர் ஆகும் .

குறிப்புரை :

கொம்பு - பூங்கொம்பு . இரிய - தம்மைப் பிரியும்படி . ( தாமும் பிரிந்து வந்து வண்டு ) உலவு - திரிகின்ற . கொன்றை - கொன்றைமாலை . புரிநூலொடு - பூணூலொடு . குலாவி - மார்பின்கண் பூண்டு . தம் பரிசினோடு - தம் பரிசுடையாரென்னும் தன்மையோடு . நீறு தட வந்து - திருநீறு பூசி . இடபம் ஏறி , கல் - மேருமலை . வரை - தாம் வரைந்து கொண்டவில் ஆக , ( மதில் எய்த பெருமான் ) கம் - ஆகாயத்தின்கண் . பருத்த . செம்பொன் , ( வெள்ளி , இரும்பு இவற்றால் ) ஆகிய . நெடும்மாடம் - நெடிய மாடங்களையுடைய . மதில் - திரிபுரங்கள் , எரிய அம்பு எய்த பெருமான் உறைவது அவளிவணல்லூரே . செம்பொன் - எனவே . வெண்பொன் , கரும்பொன்னும் உபலக் கணத்தாற் பெற்றாம் , தேனுக்காகக் கொன்றை மரம் சென்று , பூக்கள் பறிக்கப்பட்டு மாலையாகச் சிவபெருமான் மார்பிற் கிடத்தலால் , வறுங் கொம்பைப் பிரிந்த வண்டு , அம்மாலையிற் சுற்றித் திரிகின்ற மார்பினன் என்பது ` கொம்பு ..... கொன்றை ` என்றதன் கருத்து . அது கொண்டு கருதின் ` தமக்கு இன்பம் கிடைக்குமென்று உலகப் பொருளிற் சென்ற மனம் , திரும்பிச் சிவபெருமானை யடையின் பல்வகை இன்பங்களும் பெறலாமென்று உலாவும் ` - எனவும் ஓர் பொருள்தொனிக்கின்றது . பல்வகை இன்பமும் சிவன் அருளுவன் என்பதை , ` அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே யன்பொடு தன்னையஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத்துள்ளமள் ளூறுந் தொண்டருக் கெண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும் பவளவா யவர்பணை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே .` என்னும் திருவிசைப்பா ( தி .9) வால் அறிக . தம் பரிசுடையார் என்பது தலத்து இறைவன் திருப்பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
ஈமமெரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்
தூய்மையுடை யக்கொடர வம்விரவி மிக்கொளிது லங்க
ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

ஓமை , கள்ளி , வாகை முதலிய மரங்கள் நிறைந்ததும் , கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் சிவபெருமான் . தூய்மையான எலும்பும் , பாம்பும் கலந்து ஒளி துலங்க , ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஓமை கள்ளி , வாகை இம்மரங்களையுடையவனாகிய இடங்களும் , கூகை முரல் ஓசை - கோட்டான்கள் கத்தும் ஓசையும் . ஈமம் - கொள்ளிகளும் . எரி - நெருப்பும் . சூழ் - சூழ்ந்த - சுடலையாகிய , ( வாசம் - தாம் வாசஞ்செய்யும் ). முதுகாட்டில் நடம் ஆடி . தூய்மையுடைய அக்கொடு - அக்குப்பாசியோடு அரவம் - பாம்பும் . ( விரவி ) கலந்து ஒளிமிக்கு . துளங்க - விளங்க . ஆமை யோட்டோடு பூணும் , அடிகள் உறைவது அவளிவள்நல்லூரே . துளங்க - துலங்க . லள ஒற்றுமை - அசைய எனினுமாம் . சுடலையாகிய முதுகாடு இருபெயரெட்டுப் பண்புத்தொகை . வாசம் - இடைப்பிறவரல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

நீறுடைய மார்பிலிம வான்மகளொர் பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவி னின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர் . சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர் . கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இமவான் மகள் - உமாதேவியாரை . ஓர்பாகம் , நிலைசெய்து - பிரியாமற்கொண்டு , கூறுடைய வேடமொடுகூடி அழகாயதொரு கோலம் - ஒருபாதி ஆணாகிய தோற்றத்தோடு கூடி அழகாகியகோலம் . ஏறு - எவற்றினும் சிறக்க உடைய ( வ ) ரேனும் . இடுகாடு - இடுகாட்டில் , ( இரவில் நின்று நடம் ஆடும் . ஆறு உடைய ) வார் - நெடிய . சடையினான் . உறைவது - தங்குவது , அவளிவள் நல்லூரே . இக்கோலம் ஏற உடைமை , இடுகாட்டில் இரவில் நின்று நடமாடுதற்கு ஏற்றதன்றாயினும் , ` இன்ன தன்மையனென்று அறியொண்ணா இறைவன் ` ஆகலின் , ஆயிற்றென்க . ஏற உடையர் - ஏறுடையர் என்றாயது . ` தொட்டனைத்தூறும் ` என்ற திருக்குறளிற் போல , ஏறுடையர் . வார்சடையினான் - என வந்தது ஒருமை பன்மை மயக்கம் ; பன்மை - உயர்வுபற்றியது .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமில ரென்றுலகு பேணிப்
பணியுமடி யார்களன பாவமற வின்னருள்ப யந்து
துணியுடைய தோலுமுடை கோவணமு நாகமுட றொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

பிணியும் , இறப்பும் , பிறப்பும் இல்லாதவர் என்று உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும் அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து , இன்னருள் புரிபவர் . கிழிந்த தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன் , பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பிணியும் , இறப்பும் பிறப்பும் உடைய நமக்கு , இவையில்லாதவனாகிய சிவபெருமான் தஞ்சமாவரென்று உலகத்தில் பாராட்டி வணங்கும் அடியார்களின் ( அவற்றிற்குக் காரணமான ) பாவம் நீங்க உடையவன் இனிய அருள்தந்து உறைவது ( அவளிவணல்லூர் ) ` எல்லார் பிறப்பும் இறப்புமியற் பாவலர்தஞ் சொல்லால் அறிந்தோநம் சோமேசர் - இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகி லேவாழ்ந் திறந்தகதை யுங்கேட் டிலேம் ` - சோமேசர் முதுமொழி வெண்பா . எனவும் , ` ... மற்றத்தெய்வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்கும்மேல் வினையும் செய்யும் ` ( சித்தியார் சுபக்கம் . சூத் . 2.25) எனவும் வரும் பாடல்கள் இங்கு அறியத்தகும் . இவற்றையுடைய பிறதேவர்களைப்பற்றிக் கரையேறுவோ மென்பது ` குருடும் குருடும் குருட்டாட்டமாடிக் , குருடும் குருடும் குழிவீழ்ந்தவாறே ` என்றபடியேயாம் என்க . பயந்து - பயன் பெறத்தந்து , துணியும் - கிழித்தலையுடைய . தோலும் , கோவணமும் , உடையும் , பாம்பு உடலில் தொங்க அணியும் ஆபரணமும் ஆக ( அவை தனக்கு அழகு செய்வனவாக உடையவன் ) அடியார்கள் பாவம் அற இன்னருள் பயந்து , தோல் முதலியவை தனக்கு அழகு செய்வனவாக உடையவன் என வினை முடிபு செய்க . இப்பாடலுக்குப் பொழிப்பு உரைக்கப்பட்டது . துணி - துணித்தல் . முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

குழலின்வரி வண்டுமுரன் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமிலராவர்
அழலுமழு வேந்துகையி னானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலை கட்டி , சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ` இவரே முழுமுதற் கடவுள் ` என்று தொழுது போற்றுவர் . அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு , உள்ளத்தால் வரும் துயரும் , உடலால் வரும் நோயும் இல்லை . அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன் , நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அமரர்கூடி , குழலின் - புல்லாங்குழலின் ஓசைபோல , வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற , மெல்லியன - மெல்லியன ஆகிய ( பூவுலக ) மலர்களும் . பொன்மலர்கள் - ( வானுலக மலர்கள் ஆகிய ) பொன் மலர்களும் கொண்டு ( கட்டிய ) இண்டை - இண்டைமாலையை . கடவுள் என்று - ( இவரே ) கடவுள் என்று , கழலின்மிசை - திருவடியில் , புனைவார் - சாத்துவார்கள் ,. தொழுதலும் வழிபாடும் உடையார் - இவற்றின் பயனாக . இவர்கள் உள்ளம்பற்றி வரும் துன்பமும் , உடலம்பற்றிவரும் நோயும் இலராவர்கள் . ( அங்ஙனமாக அருள்புரிந்து ) கொதிக்கும் மழுவை ஏந்திய கையையுடைவன் உறைவது அவளிவள் நல்லூரே . இது பின்னீரடிக்கும் பொழிப்பு உரை . தேவர்கள் பொன்னுலகத்தவர்கள் . அவர்களுக்குக் கற்பகவிருட்சம் தருவது பொன்மலர் ஆதலால் அம்மலர்களையும் இங்கு நந்தவனங்களில் வண்டு மொய்க்கும் மலர்களையும் கலந்து இண்டைகட்டிப் புனைகின்றனர் . பொன் மலர்களில் வண்டு மொய்க்காதாகலின் இங்ஙனம் கொள்க . அமரர்கூடி வண்டு முரல் மெல்லியன ( மலர்களும் ) பொன்மலர்கள் கொண்டு இண்டைகட்டி ` இவரே ( சிவ பெருமான் ) கடவுளென்று ( உணர்ந்த உள்ளத்தினராய் ) கழலின் மிசை புனைவார் ` என்பது முன்னிரண்டடியின் பொருள் . இண்டை - மாலை விசேடம் . வழிபாடு - நூல் வழி , ஆசிரியன் கற்பித்தவழி ( ஆசரணை ) முறையே நியமமாகச் செய்யும் சரியை கிரியை முதலியன . அசுரர்களால் வரும் துன்பமும் , அவர்கள்பேரால் வரும் நோயும் அமரர்க்கும் உண்டு . ஆகலின் அவை இலராவர் எனத் தேவர்கள் இங்கு வந்து வழிபட்டுப் பேறுபெறுமாறு கூறியபடி . குழலின் - ஐந்தனுருபு ஒப்புப் பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தவருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி தாகியொரு நம்பன்
மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக லத்தொடுவ ளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத் தொழுது போற்ற , நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள்செய்து , கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மை யாகவும் விளங்குபவர் சிவபெருமான் . மதம் பிடித்த யானை அஞ்சும்படி , வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து , உமை நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அமரர் - துஞ்சல் இலராய் - சோம்பலின்றி . நின்று தொழுது ஏத்த அருள்செய்து . நஞ்சம் உண்டு , ( அதனால் ) மிடறு - கழுத்து . கரிது ஆய - கரியது ஆகிய . வெளிது ஆகி - ஏனைய திருவுருவம் படிகம்போல வெண்மையுடையது ஆகப்பெற்று ( உடைய ) ஒப்பற்ற . நம்பன் - சிவபெருமான் . சதாசிவ மூர்த்தியின் திருவுருவம் படிகம் போன்றது ஆதலின் , வெளியது ஆய ஒரு நம்பன் என்றார் . மஞ்சு - மேகம் ; இங்கு வானத்தைக் குறித்தது , உற - பொருந்த . நிமிர்ந்தமை - யானையுரிக்கும் அவசரம் . மதவேழம் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்து ( அதன்தோலை உரித்து ) உமைநடுங்க . அகலத்தோடு - மார்பில் . அளாவி - சேர்த்துப் ( போர்த்த ). உரியான் - தோலையுடையவன் . அஞ்ச ( உரித்த ) மதவேழ உரியான் என்க . போர்த்த . உரித்த , என ஒருசொல் வருவித்துரைக்கப்பட்டது . அன்றி வினை முடிபு கொள்ளுமாறு இல்லை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடுமிசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடும்
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
ஆடரவ மார்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

மொந்தை , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு போலப் பாய , பெரிய இடப வாகனத்தோடு , சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நெருப்பையேந்தி இரவில் நடனமாடி , படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

மொந்தை , குழல் , யாழ் முதலிய வாத்தியங்கள் முழவினோடும் . கூடு அரவம் - ஒத்துவரும் ஓசைகளாக . இசைசெய்ய - ஒலிக்க . பீடு அரவம் ஆகு - பெரிய ஓசைதரும் . படர் - பரவுகின்ற . அம்பு செய்து - தோள்வீசி யாடும்போது சடையில் உள்ள கங்கைநீர் ததும்பும் . ஆதலால் அதனை அம்புசெய்து - என்பதனால் தெரிவித்தார் . அம்புசெய்து - தண்ணீர் விசிறச்செய்து எனக் கொள்ளல் வேண்டும் . பேர் இடபமோடும் - பெரிய இடபவாகனத்தோடும் . காடு - சுடுகாட்டில் . அரவம் ஆகு - சட சட ஒலிக்கும் ஓசையையுடைய . கனல் கொண்டு - நெருப்பையேந்தி , இரவில் நின்று நடம் ஆடி . அரவம் ஆர்த்த - பாம்பைக் கச்சாகக் கட்டிய பெருமான் . இதன் கருத்து ; மொந்தை முதலிய வாத்தியங்கள் ஒலிக்கச் சடையிற் கங்கைநீர் ததும்பக் கனலேந்தி , இரவில் , இடபமோடும் நின்று நடம் ஆடிப் பாம்பைக் கட்டிய பெருமான் உறைவது அவளிவள்நல்லூர் என்பதாம் . அறக்கடவுளே இடபமாகலான் மகா சங்கார காலத்தும் அழியாது நிற்க , அதனோடும் நின்று நடம் ஆடி என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஒருவரையு மேல்வலிகொ டேனெனவெ ழுந்தவிற லோனிப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ வெனவெ குண்ட
கருவரையு மாழ்கடலு மன்னதிறல் கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடைய வராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து , இக்கயிலை மலையின் மேல் ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு , மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும் , ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி , அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மேல் - எனக்குமேல் , ஒருவரையும் , வலிகொடேன் - வலிமையுடையவராகக் காணப்பொறேன் என எழுந்த . விறலோன் - வலியோனாகிய ( இராவணன் ) ` இப்பெருவரையின் மேல்ஓர் பெருமானும் உளனோ ` எனக் கோபித்த . கருவரையும் - கரியமலையும் . ஆழ்கடலும் , அன்ன - போன்ற . மலைபோன்ற ( திறல் ) வலிமை . கடல் போன்ற கைகள் என்க . உடையானை - உடையவனாகிய இராவணனை . அரு , வரையில் - ( கயிலை ) மலையின் கீழ் . ஊன்றி - விரல் ஊன்றி . அடர்த்தான் உறைவது அவளிவள்நல்லூரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனும்
செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிக நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும் , வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத , அதனால் விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும் , பிறர்க்கு அரிய வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தித் தேடியும் , சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பொறி - புள்ளிகளையுடைய . வரி - நெடிய . நாகம் - பாம்பாகிய . உயர் - உயர்ந்த . பொங்கு - உடல் பெருக்கும் . அணை - மெத்தையை . அணைந்த - சேர்ந்த . புகழோன் - திருமால் . வெறி - வாசனையறிகின்ற . வரிய - கீற்றுக்களையுடைய . ( வண்டு ) அறைய - ஒலித்து ஊத . விண்ட ( அதனால் ) விரிந்த , தாமரை மலர்மேல் வசிக்கின்ற . விழுமியோன் - பிரமன் . அரிய செறிவு - பிறர்க்கு அரியதாகிய வலிமையையுடைய . தோற்றம் ஒடு - தோற்றத்தோடு . ஆற்றல் மிக நின்று , வினைமுடிக்கும் திறன் மிக . நின்று - ( தேடும் தொழிலில் ) நின்றும் சிறிதேயும் ( அவர்களால் ) அறிவு அரியன் ஆய - அறிய முடியாதவனாகிய . பெருமான் உறைவது அவளிவள் நல்லூரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயி னின்றடிசி லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப் பள்ளி இடமாக நின்று , சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும் போலிச் சமணர்களும் தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை உடையவர்கள். இவர்கள் ஒழியுமாறு, பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கழியருகு - ஆற்றங்கழி யருகிலிருக்கும் . பள்ளி - சமணப்பள்ளி இடமாகநின்று . அடும் - சமைத்து உண்பதற்குரிய ( மீன்கள் ) கவர்வார் - கொள்பவர்களாகிய அமணரும் , வீதி யோரங்களில் உச்சிவேளையில் நின்று உணவின் பொருட்டாக வருபவர்களாகிய , புத்தரும் . உச்சிப் பொழுதில் பிச்சை பெற்று உண்பது , புத்த சந்நியாசியின் முறை . ` அங்கையிற்கொண்ட பாத்திரம் உடையோன் கதிர்சுடும் அமையத்துப் பனிமதிமுகத்தோன் .` ( மணிமேகலா தெய்வம் ... தோன்றிய காதை . 59 - 60.) என்பது அறிக . தொழுது ஏத்தும் அழி அருவி தோய்ந்தபெருமான் - தொழுதேத்தும் அன்பர்கள் தம் கண்களின்றும் அழிந்து வருகின்ற அருவி போன்ற கண்ணீரில் நீராடிய பெருமான் . உறைவது அவளிவணல்லூர் . ` பாந்தள் பூணாம் பரிகலம் கபாலம் , பட்டவர்த்தனம் எரு தன்பர் வார்ந்த கண்ணருவி மஞ்சனசாலை மலைமகள் மகிழ் பெருந்தேவி ...` என்னும் திருவிசைப்பா ( தி .9) வால் தோய்தல் அறிக . பழியருகினார் - பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை யுடையவர்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

ஆனமொழி யானதிற லோர்பரவு மவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழி களாயபுகழ் தோணிபுர வூரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்க டீயதிலர் தாமே.

பொழிப்புரை :

பொருளுடைய புகழ்மொழிகளால் மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற அவளிவணல்லூர் என்னும் திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால் புகழ்போற்றும் தோணி புரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன் போன்ற இனிமையான மொழிகளால் ஆன இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர் . அவர்களைத் தீமை அணுகாது .

குறிப்புரை :

ஆன - பொருளுடையதாகிய . மொழியான - புகழையுடைய . திறலோர் - மெய்ஞ்ஞானிகள் . பரவு - துதிக்கின்ற . அவளிவள்நல்லூர் மேல் . தோணிபுரவூரன் , ஞானசம்பந்தன் . தேனமொழிமாலை புகழ்வார்கள் துயர்கள் தீயது இலர்தாம் ஏ - என்பது வினை முடிபு . போன மொழி - திசைகள் தோறும் பரவிய வார்த்தை . நன்மொழிகளாய - நல்ல வார்த்தைகளாகிய , புகழ் . என்பது :- ` இசையாற்றிசை போயதுண்டே ` என்னும் சிந்தாமணி போன்றது . புகழ்த் தோணிபுரம் - புகழையுடைய தோணிபுரம் சந்தம் நோக்கித் திரியாதாயிற்று . ஞானம் மொழிமாலை நலநாடு புகழ் - சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் . மொழியை மலராகவும் , பதிகங்களை மாலையாகவும் உணர்த்தினமையால் ( சிவ ) ஞானம் - மணம் ஆகிறது . ஏகதேச உருவகம் . தேன் - இனிமையையுடைய . துயர்கள் தீயது இலர் - துன்பங்களும் , அவற்றின் காரணமான வினையும் இலர் ஆவர் .
சிற்பி