திருஆலவாய்


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

பொழிப்புரை :

வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட , அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே ! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே ! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே ! கபாலி என்னும் பெயரையுடையவராய் , மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே ! நீர் மதுரையம் பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றா யுள்ளது .

குறிப்புரை :

விழுமியார்கள் - மெய்ஞ்ஞானிகள் . வீடு அலால் - முத்திப்பேற்றையன்றி . அவாய் , ( வேறொன்றை ) அவாவி - விரும்பி ( நிற்றல் ) இல் ஆய் - இல்லையாகி . நின் - உனது . கழல் - திருவடிகளை . ( பாடல் வாயிலாய் ) ஆல - கொண்டாட . பரவநின்ற பண்பனே - துதிக்கின்ற பண்பையுடையவனே . காடு அலால் - முதுகாட்டைத் தவிர . அவாய் - விரும்பி ( நிற்றல் ). இல்லாய் - இல்லாதவனே . நீள் - நெடிய . கபாலிமதில் - கபாலி என்னும் பெயரையுடையமதில் , விழுமியார்கள் நின்கழல்பரவநின்ற பண்பனே . காடு அல்லால் விரும்புதலில்லாதவனே , நான்மாடக்கூடலாகிய திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே , குலாவி விளையாடியது எம்மால் அறியுந் தரத்ததன்று என்றவாறு . வீடல் ஆல ஆய் இல்லாய் - இறத்தல் அகல ( பிறத்தற்கு வாயிலான ) தாயில்லாதவரே . விழுமியார்கள் - மெய்யுணர்தலிற் சீரியோர்கள் . நின்கழல் - தேவரீர் திருவடித் தாமரைகளை . பாடல் - பாடுதலையுடைய . ஆலவாய் இல்லாய் - கல்லால மரத்தினகமே இல்லமாகக் கொண்டவரே . பரவ நின்ற பண்பனே - மண்ணும் விண்ணும் மற்றும் வாழ்த்த நின்றருளிய பண்புடையவரே . காடு அல்லால் அவாய் இல்லாய் - மகா சங்கார காலத்தில் யாவும் ஒடுங்கும் காடு அல்லாமல் வேறு யாதும் விரும்பியில்லாதவரே . கபாலிநீள் கடிமதில் - நீண்ட கபாலிஎன்று வழங்கப்பெறும் கடிமதில் ( சூழப் பெற்ற ). கூடல் - நான்மாடக் கூடல் ( என்றும் திருமருதந்துறை மதுரை என்றும் பெயர்கொண்ட நகரின் ) கண் உள்ள , ஆலவாயிலாய் - திருவாலவாய் என்று வழங்கப்பெறும் திருக்கோயிலை உடையவரே . குலாயது என்ன கொள்கை - ( கால்மாறி ) ஆடுவதற்கு என்ன கருத்து ? வீடல் ( வீடு + அல் ) - அழிதல் . ஆல - அகல . அகலல் என்றதன் மரூஉவே . ஆலல் என்பது . மயிலின் தோகை சுருங்கி யிருந்து அகலும் போது செய்யும் ஒலியை அகவுதல் என்பர் . அகலுவது தோகை , அகவுவது மயில் . இரண்டற்கும் சிறிது வேறுபாடு இருந்தும் , இரண்டும் ஒருசேரக் கருத்துள் வரும் வண்ணம் ` மயில் ஆல ` என்பது மரபு . திருஞானசம்பந்த சுவாமிகளே , ` மயில் ஆலச் செருந்திகாலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடு ` ` வண்டு பாட , மயில் ஆல , மான்கன்று துள்ள , வரிக்கெண்டை பாயச் சுனைநீல மொட்டு அலரும் கேதாரம் ` என்று அருளியதில் , ` ஆல ` என்ற சொல்லாட்சி உள்ளதை அறிக . ` அகன்றோர் ` என்பதன் மரூஉவே ஆன்றோர் . ` அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் ` ( புறம் . 128) என்புழி , ஆலும் என்பது ஒலிக்கும் என்ற பொருளதாய் நின்றதும் ` ஆலோலம் ` என்னும் வழக்கும் உணர்க . ஆலோலம் ( அகல ஓலம் , ஆல ஓலம் , ஆலோலம் ) என்று மருவும் முன்பு இருந்த வடிவம் உய்த்துணர்தற்பாலது . ` பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும் ` ( புறம் . 116) என்புழி ` ஆலவும் ` என்ற பொருள் பயப்பதுணர்க . : முயங்கல் ஆன்றிசின் ` ( புறம் . 151) என்புழி , ` அமைந்தேன் ` என்று பொருளுரைத்ததும் , அதற்குரிய அடிச்சொல் ( பகுதி ) ஆங்கு இல்லாமையும் , அதன் அடி ` அகல் ` என்பதும் , அஃது அகன்றிசின் என்பதின் மரூஉவே என்பதும் அறிதல் சிலர்க்கே எளிது . ` ஆனாது உருவும் புகழும் ஆகி ` ( புறம் . 6) ` அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடி சில் ` ( புறம் . 10) ` ஆனா ஈகை அடுபோரண்ணல் ` ( புறம் . 42) என்னும் இடங்களில் , எதிர்மறையில் வந்த ` ஆனாமை ` க்கு எவ்வடிவின் அமைந்த சொல் உடன்பாடாகலாம் ? ஆனுதல் எனலாமோ ? ஆன்றல் என்றுள்ளதேல் அதன் பகுதி யாது ? அகல் + தல் = அகறல் . அகல் - ஆல் என மருவி , அது , தல் என்னும் விகுதியொடு சேருங்கால் ` ஆன்றல் ` என்றாயிற்று , ஆகவே , வீடல் ஆல என்றதற்கு இறப்பு அகல என்ற பொருளே உரியதென்க . எனவே இறப்பின்மை பெறப்பட்டது . ஆய் :- யாய் என்றதன் மரூஉ . யாய் தன்மைக்கும் , ஞாய் முன்னிலைக்கும் , தாய் படர்க்கைக்கும் உரியன . ` யாயும் ஞாயும் யாராகியரோ ` ( குறுந்தொகை ). ` யாயை வெறுத்ததன் பின்னை விதியை வெறுத்தனன் ` ( வில்லி பாரதம் ). ஆய் இல்லாய் :- ஆய் இல்லாமை பிறப்பின்மையைக் குறிக்கநின்றது . நிற்கவே இறப்பகலப் பிறப்பில்லாய் என்றவாறாம் . ` தோற்றம் உண்டேல் மரணம் உண்டு `. இறப்பும் பிறப்பும் இல்லாத கடவுள் . ` பிறப்பில் பெருமான் ` ` பிறப்பினோடிறப்பிலே ` என்னும் இப்பெருமான் திருவாக்குணர்க . ஆலவாய் - ஆலமர நிழலகம் . வாய் - இடம் . இல் வாழும் இடம் . பரவ - வாழ்த்த . ` பரவுவார் இமையோர்கள் `. ` யானும் உன்னைப் பரவுவனே .` (` வாழ்த்துவதும் ` எனத்தொடங்குந் திருவாசகம் ). பண்பு - அருட்பண்பு . எண் குணம் . காடு - ` கோயில் சுடு காடு `. சருவசங்கார காலத்தில் ` தானொருவனுமே ` நிற்றலின் , அது சிறந்த வீடாயிற்று . மதுரையில் உள்ள திருமதிலுக்கு , ` கபாலி ` என்ற பெயர் உண்டு . கடி - காவல் . கூடல் :- கன்னி , கரியமால் , காளி . ஆலவாய் என்னும் நான்கன்கூட்டம் பற்றிய காரணப்பெயர் . நான்மாடக் கூடலான படலத்து வரலாறும் கொள்ளலாம் . ஆலவாய் : மதுரையில் உள்ள திருக்கோயிலின் பெயர் . குலாயது என்ன கொள்கை :- பின்னர் ( பா .2,3,7,10) உள்ள வினாக்களுக்கு ஏற்பப் பொருள் கொள்க . குலாவுதல் - ஆடுதல் . ` ஆடுங்குலாத்தில்லையாண்டான் ` கொள்கையும் கோட்பாடும் ஒன்றாகா ? கொள்கை செய் வினை . கோட்பாடு செயப்பாட்டுவினை . கொள்கைக்குக் கோட்பாடு என்று பொருளுரைத்தல் சில இடத்திலன்றி எல்லா இடத்திலும் பொருந்தாது . ` ஒன்று வேறுணர்வும் இல்லேன் தெளிவற நிறைந்த கோலம் , மன்றில் நான் மறைகள் ஏத்த மானிடர் உய்ய வேண்டி , நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் , என்று பூம் புகலி மன்னர் இன்தமிழ்ப் பதிகம் பாட ` எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய கருத்தே இப்பதிகப் பாடல்களில் அமைந்திருத்தல் காண்க . 1. வீடு ஆலால வாயிலாய் :- ` அழிக்கத்தக்க ஆலகால விடத்தை உண்ட திருவாயினை உடையவரே . 2. கரிய விடத்தையுடைய பாம்பினால் காட்டப்பட்ட இடத்தை இருப்பாகக் கொண்டவரே . 3. வீடு பெறற் பொருட்டுக் கல்லால் ஆகிய அவ்விடத்தில் ஆய்ந்த ( விழுமியோர்கள் ) ( சனகாதி முனிவர் ) பாடலாலவாயிலாய் : பாடுதலினால் அந்த வாக்கினிடம் விளங்குபவரே . காடலால் அவாயிலாய் - சுடுகாடேயன்றி வேறு இருப்பிடம் விரும்பாதவரே . குலாயது - எம்முடன் உள்ளே விளங்க விரவி எழுந்தருளியிருந்து அருள்புரிந்து ஏற்றுக்கொண்டது என்றாருமுளர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.

பொழிப்புரை :

பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு , சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே ! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே ! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே ! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ .

குறிப்புரை :

ஒட்டு இசைந்தது - பொருந்தியிருந்தது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய்
சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.

பொழிப்புரை :

திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! நீரே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர் . ஆதலால் எனது குற்றமும் நீரே ; குணமும் நீரே ; என் சுற்றமும் தலைவரும் நீரே . என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை நீக்கி அறிவொளி தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே . பொதுவும் , சிறப்புமாகிய வேத , ஆகம நூல்களில் கருத்தும் நீரே . நூல்களில் உட்பொருளை அடியேன் நனிவிளங்கச் செய்பவரும் , அவ்விளக்கத்தால் இன்பம் அடையச் செய்பவரும் நீரே . உம் திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது உண்மையேயன்றி வெறும் புகழ்ச்சியன்று .

குறிப்புரை :

அருத்தம் - பொருள் . முன்புகழ்ந்து உரைப்பது - முன்னால் புகழ்ந்து சொல்வது . என்? ( ன )? எத்தகையது ? ( முகமன் பாற் படும் .)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

முதிருநீர்ச் சடைமுடி முதல்வன்நீ முழங்கழல்
அதிரவீசி யாடுவா யழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.

பொழிப்புரை :

மதுரை என வழங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே ! தூயகங்கையைச் சடைமுடியில் தாங்கிய முதல்வன் நீ . சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று நிலமதிர ஆடுபவன்நீ . அழகன் நீ . பாம்பை ஆபரணமாக அணிந்தவன் நீ . வரம்பில் இன்பம் உடையவன் நீ . மணவாளன் நீ . மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ . சாமர்த்தியமுடையவன் நீ . பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும் சிவபிரான் நீ .

குறிப்புரை :

புயங்கன் - பாம்பை அணிந்தவன் . மதுரன் - இனியவன் . சதுரன் - சாமர்த்தியவான் . சம்பு - சிவபிரான் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.

பொழிப்புரை :

அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே ! மார்க்கண்டேயர் , சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து பண்டைக் காலத்தும் , இக்காலத்தும் வழிபட விளங்கும் நீலகண்டனே . தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர் .

குறிப்புரை :

பாலன் ஆய - சண்டேசுவர நாயனார் போன்ற . தொண்டு செய்து - வழிபாடு புரிந்து . ஆலவாயிலாய் - நீலம் ஆய கண்டனே . தேவர் நித்தலும் தொண்டு செய்து நின்னையே தேர்வ தன்றிப் பிற தெய்வங்களைச் ( சீலமாய சிந்தையில் ) தேர்வதில்லை என முடிவுகொள்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.

பொழிப்புரை :

பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி பின்னால் தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே ! தலைக்கோலம் உடையவரே ! பிறப்பற்றவரே ! கொன்றைமாலை சூடிய முடி உடையவரே ! நான்மாடக் கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! உம் ஒளிமயமான திருநடனத்தை நினைத்து இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய நியமம் ஆகும் .

குறிப்புரை :

பொன்தயங்கு - பொன்போல் விளங்கும் . இலங்கு - பிரகாசித்த ; விளங்குகின்ற . ஒளிநலம் - சிறந்த ஒளியையுடைய , குளிர்ந்தசடை . நின் - உனது . தயங்கிய - விளங்குகின்ற . ஆடல் - திருக்கூத்தை . நினைப்பதே - நினைந்து இன்புற்றிருப்பதே . நியமம் - ஆன்மாக்கள் உய்தி கூடுதற்குரிய நியமம் ஆகும் . ஆடலே - ஏ - அசை நிலை . ` குறியொன்றுமில்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு ` என்ற திருவாசகமும் கொண்டு ஈற்றடிப் பொருள் தெளியப்படும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

ஆதியந்த மாயினா யாலவாயி லண்ணலே
சோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால்
ஓதிவந்த வாய்மையா லுணர்ந்துரைக்க லாகுமே.

பொழிப்புரை :

உலகத் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! பேரொளிப் பிழம்பாக விளங்குபவரே ! பெருஞ்சோதிக்குள் சோதியாய் ஒளிர்பவர்நீர் . உபதேச வழியாகச் சிவஞானம் பெற்ற பக்குவமுடைய ஆன்மாக்களுக்கு அல்லாமல் ஏனைய அபரஞானமாகிய கல்வி அறிவுடையோர்க்கு உம் அருட்பண்பை உணர்தற்கும் , உரைப்பதற்கும் இயலுமோ ?

குறிப்புரை :

சோதி அந்தம் - ஒளியின் முடிவு . கீதம்வந்த - உபதேசம் வழியாய்ப்பெற்ற . வாய்மையால் - சிவஞானத்தால் . கிளர் - விளங்குகின்ற . தருக்கினார்க்கு - பக்குவ ஆன்மாக்களுக்கு . அ ( ல் ) லால் - ( கேட்டுச் சிந்தித்தவருக்கு அல்லாமல் ) ஓதி வந்த வாய்மையால் - கற்று அறிந்த அபர ஞானத்தால் . உணர்ந்து உரைக்கலாகுமே ?

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

பொழிப்புரை :

விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே ! கரிய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள் நொறுங்கும்படி திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே ! வேதங்களிலுள்ள பாடல்களால் போற்றப்படுபவரே ! மதுரையிலுள்ள திருஆலவாயில் வீற்றிருந்தருளுபவரே ! மனத்தை ஒரு வழியே நிறுத்தி உம்மை நினைப்பதே உய்தற்குரிய நியமமாகும் .

குறிப்புரை :

கறை - விஷத்தின் கறுப்பு . கருத்திலாமை மன்னனைச் சார்வது . நிறை - ( புலன்வழியோடாது ) நிறுத்தல் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும்
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.

பொழிப்புரை :

தாவிச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவரே ! தலைமை உடையவராய் நாடொறும் கோவண ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே ! நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் , உம் முழுமுதல் தன்மையை அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள் .

குறிப்புரை :

தாவண்ணம் - தாவும் தன்மை . தீவணம் மலர் - செந்தாமரை மலருக்குத் தீவணம் நிறத்தால் உவமை . ` எரியாத தாமரை மேல் இயங்கினாலும் ` ( அப்பர் ) ` எரியகைந்ததன்ன தாமரை நாப்பண் ` எனவரும் புறநானூற்றாலும் அறிக . தூவணம் - பற்றுக் கோடாம் தன்மை . ( புறம் )

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.

பொழிப்புரை :

தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும் , சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத் தேடிக்கொள்ளாதவராயினர் . காலனை மார்க்கண்டேயர்க்காக உதைத்த திருவடிகளை உடையவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ ?

குறிப்புரை :

நால்திசை - அன்மொழித் தொகையாய் உலகம் என்னும் பொருளிலும் , மூர்த்தி என்பது கடவுள் என்னும் பொருளிலும் வந்தன . ` உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே `. ( தி .6. ப .38. பா .1)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

பொழிப்புரை :

நீர்வளம் தரும் , ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற சீகாழியில் அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன் இறைவனுடைய நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல் மாலையை ஓதித் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவ பெருமானை வழிபடுபவர்கள் தீமைகள் நீங்கப்பெற்று நற்சிந்தையுடைய தேவர்களாவர் .

குறிப்புரை :

போய் - வந்து பாய்ந்த . நீர் , பாய - பரந்த . தீய ( வை ) - தீவினைகள் . இனிப்போதல் என்பதற்கு நேர்மை என்னும் பொருள் உண்மையால் பருவகாலத்திற் பெய்த நீர் எனினும் பொருந்தும் .
சிற்பி