திருவாலவாய்


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே ! மூன்று கண்ணுடைய பெருமானே ! நல் வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது ? உரை செய்வாயாக !

குறிப்புரை :

காட்டுமா - காட்டிலுள்ள யானை . உரி - உரிவை ; தோல் . உடல் போர்த்து - உடலிற் போர்த்து . நாட்டம் - கண் , நாட்டம் மூன்றுடையாய் என்றது ; ஏனையர்போல இருகண் அன்றி , மேலும் ஒரு கண் ( நெற்றிக்கண் ) தீயோரை அழித்தற்கெனக் கொண்டருளினாய் . இது பொழுதும் அச்செயல் செயவேண்டும் என்ற குறிப்பு . வன்றொண்டப் பெருந்தகையும் வேறு திருவுளம்பற்றியருளற் குறிப்போடு ` மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே ` என்றமையும் காண்க . உரை செய்வன் - நான் விண்ணப்பம் செய்து கொள்வேன் . அது திருக்கடைக் காப்பில் கேட்ட ` ஞானசம்பந்தன் ` என்றமையாலும் அறியப்படுகிறது . ஓட்டி வாதுசெய - வாதுசெய்து ஓட்ட என விகுதி மாற்றிக் கூட்டுக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே ! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே ! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம்யாதோ ? உரைப்பாயாக .

குறிப்புரை :

மத்தம் - மயக்கம் , மதங்கொண்டமையாலுண்டாவது . ஈர் - உரிக்கப்பட்ட . திருவுள்ளமே , பணி சொல்லி அருள்வீராக . பொய்த்த வன் தவவேடத்தர் - பொய்யாகிய வலிய தவவேடத்தை யுடையவர் . சித்தர் - மேல் பாசுர உரையால் அறிக . ` நிற்பதுபோல் நிலையிலா நெஞ்சு ` என்பது மூன்றாம் அடியிற் குறித்த பொருள் . அதனை ` இனம் போன்று இனமல்லார் கேண்மை ` எனவரும் திருக்குறளால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

இப் பூவுலகத்திலும் , விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே ! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வாயாக .

குறிப்புரை :

எங்கும் ஆம் - எங்குமாய் நிறைந்து , திருவால வாயினில் வெளிப்பட்டருளிய பெருமானே என்பது முதலிரண்டடியின் கருத்து . அருள் - சொல்லி யருள்வீராக . எழில் இகழ்ச்சிக் குறிப்பு . திண்ணகத் திருவாலவாய் - பகைவரால் அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய் . தெண்ணர் - திண்ணர் என்பதன் மரூஉ . குண்டர் முதலிய பிற பெயர்களைப்போல்வது இது , சாக்கியப் பேய் அமண் - சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர் . கற்பு - கல்விநிலை ; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு . பெண்ணகத்துக்குச் சாக்கியர் கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக . நாங்கள் பகைகளை ஒழிக்க எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ எனின் , தானவிசேடத்தால் சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு வீழ்வும் அளிக்கவல்ல தலம் என்பார் ; ` திண்ணகத் திருவாலவாய் ` என்றார் . இடவிசேடம் இத்துணைத்து என்பதை ` முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய , புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்து ` எனவரும் சிலப்பதிகாரத்தால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

ஓதி யோத்தறி யாவம ணாதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு வாலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது ? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே ! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக !

குறிப்புரை :

ஓதி - அறிவு , ஞானம் . ஓத்து - வேதம் , ஞானம் தரக்கூடிய வேதம் . நீதியா - நடுநிலையுடன் , நினைந்து அருள் செய்திடு . திருவுள்ளமே - திருவுள்ளமோ ? ஏகாரம் வினாப்பொருட்டு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

வைய மார்புக ழாயடி யார்தொழும்
செய்கை யார்திரு வாலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

உலகெங்கும் பரவிய புகழை உடையவனே ! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே ! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது ? உரைத்தருள்வாயாக !

குறிப்புரை :

வையம் ஆர் - உலகமெங்கும் ( பரவிய ). புகழாய் - புகழையுடையவனே . பைய - அவசரமின்றி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய
தேற லார்திரு வாலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.

பொழிப்புரை :

நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும் , சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது ? சொல்லியருள்வாயாக !

குறிப்புரை :

நாறு - நாற்றுக்கள் . சேர் - பொருந்திய ( வயல் ) நாறு ( தல் ) கமழ்தல் . தண்டலை - சோலை . மிண்டிய தேறல் ஆர் - பெருக்கெடுக்கும் தேன் நிறைந்த . வயல்களிற் கரையோரம் உள்ள தாமரை முதலிய மலர்களாலும் , சோலைகளில் உள்ள கொன்றை முதலிய மலர்களாலும் தேன் பெருக்கெடுக்கின்றது என்பதாம் . வீறு - பெருமை . மோட்டு - முரட்டுத்தன்மை யுடையவர்கள் . வேடர் கொலைத் தொழிலில் அநுபவமுடையவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும்
தொண்ட ருக்கெளி யாய்திரு வாலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே ! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே ! அண்டப் பொருளாக விளங்கும் பெருமையுடையவரே ! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன் . உமது திருவுளம் யாது ?

குறிப்புரை :

பண்டு - தொன்று தொட்டு . அடித்தவம் - அடிப்பட்ட தவம் ` பழவடியார் ` திருப்பல்லாண்டு . அண்டன் - தேவன் . செண்டு அடித்து - வளைத்து அடித்து .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப்
பரக்கு மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து , அவனது செருக்கினை அழித்தவரே ! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! எங்கும் பரவிய புகழை உடையவரே ! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது ?

குறிப்புரை :

கிரியேற்றவனாகிய அரக்கன் என்க . முடிச்செருக்கு - பத்துத்தலை உடையேன் என்னுஞ் செருக்கு . பரக்கும் - எல்லா உலகினும் பரவிய . மாண்பு - பெருமை . பாவரை - பாவியரை ; வாது செய்யுமிடம் . கரக்க - ஒளிக்க . ஒழியும் வண்ணம் , இது இடைப் பிறவரல் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

மாலும் நான்முக னும்மறி யாநெறி
ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே ! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது ?

குறிப்புரை :

சால - முற்றிலும் . வாது செயத் திருவுள்ளமே பணிப்பீராயின் என்பது கருத்து .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.

பொழிப்புரை :

நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும் , நன்மார்க்கங்களை அழித்து வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன் . ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவால வாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! மழுப்படையை உடைய மைந்தரே ! உமது திருவுள்ளம் யாது ?

குறிப்புரை :

மீன் கவர்வார் புத்தர் . அழிப்பவர் - நன்மார்க்கங்களை யெல்லாம் அழிப்பவர்கள் . தெழிக்கும் - ஒலிக்கின்ற . பூம்புனல் - மெல்லியநீர் . நல்கிடே - தெரிவித்தருள்வீராயின் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

செந்தெ னாமுர லுந்திரு வாலவாய்
மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.

பொழிப்புரை :

வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந் தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறி களிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தமிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க ஓதுவீர்களாக !

குறிப்புரை :

தமிழ்கேட்ட - தமிழாற் கேட்ட என்பது ஒவ்வொரு பாடலிலும் திருவுள்ளமேயெனக் கேட்டமையைக் குறிக்கிறது . பழி நீங்கப் பகருமின் - பழி நீங்குவதற்குச் சொல்வீராக .
சிற்பி