மேலைத்திருக்காட்டுப்பள்ளி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.

பொழிப்புரை :

கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர் . அப்பெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம் சிறந்த குணமாகும் .

குறிப்புரை :

வார் , ஊர் , கார் , நீர் - ரகரவீற்றுச் சொற்கள் உகரச் சாரியை பெற்றன . ஊரில் ஏற்கும் பிச்சையை யுண்பதும் வெண் தலையில் . மன் உம் இரண்டும் அசைநிலை . இது திருக்காட்டுப்பள்ளி நிமலர்தம் நீர்மையாகும் . பங்கினன் நிமலர் ; பால் வழுவமைதி .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநடனம் செய்பவர் . நீண்ட சடைமுடியில் சந்திரனோடு பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கண்ணாற்காணும் பொருள்வடிவாயும் விளங்குபவர் . அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதலே பயனுடைய செய்கையாகும் .

குறிப்புரை :

அருத்தனார் - பொருளாய் உள்ளவர் . அறிவாற்காணும் கருத்துப் பொருளாய் இருத்தலன்றித் திருக்காட்டுப்பள்ளியிற் கண்ணாற்காணும் பொருள் வடிவாயுமுள்ளவர் . பொருத்தனார் - பொருந்துதலையுடையவர் . பொருத்தம் - பொருந்தல் . அதையுடையவன் பொருத்தன் , கழலிணை போற்றுதல் , பொருளது - பயனுடைய செய்கையாகும் . ஏனைய அவம் உடையனவே என்பது குறிப்பெச்சம் . பொருள் என்னும் பல பொருள் ஒருசொல் ஈற்றடியில் பயன் என்னும் பொருளில் வந்தது . ` போற்றுதல் பொருளதே ` என்ற தொடரில் பிரிநிலை யேகாரத்தைப் பிரித்துப் போற்றுதலே பொருளது எனக்கூட்டுக .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மையா ளுடையஎம் மடிகளே.

பொழிப்புரை :

சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளினார் . அவர் நெற்றிக்கண்ணை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய சடைமுடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார் .

குறிப்புரை :

பண்ணின் ஆர் - பண்ணோடு பொருந்திய . அருமறை பாடினார் . ஆகாய கங்கை சடைமுடியின்கண் தங்கப்பெற்றவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

பணங்கொள்நா கம்அரைக் கார்ப்பது பல்பலி
உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
கணங்கள்கூ டித்தொழு தேத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தம் நீர்மையே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடுப்பிலே கச்சாக அணிந்திருப்பது படமெடுத்தாடும் நாகமாகும் . பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை உண்ணும் பாத்திரம் , உலர்ந்த பிரமகபாலமாகும் . வசிப்பது சுடுகாடாகும் . அத்தகைய பெருமானார் சிவகணத்தோர் தொழுது போற்றும்படி திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் . கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர் .

குறிப்புரை :

அரைக்கு ஆர்ப்பது - இடுப்பிற் கட்டிக்கொள்வது ; நாகம் . பல இடங்களில் ஏற்றுவந்த பிச்சைச் சோற்றையுண்ணும் பாத்திரம் . உணங்கல் ஓடு - உலர்ந்த மண்டையோடு . தங்குவது சுடுகாட்டில் . இது திருக்காட்டுப்பள்ளி நிமலர்தம் நீர்மை யாகும் . எனினும் , அன்னன் என்று அகலற்க . ` பாரிடம் சூழ் வரத்தான் பலிகொண்டும் தன்பாதமலர் சேர் அடியார்க்குப் பெருவாழ்வு அளிப்பன் ` ( திருக்கருவைக் கலித்துறையந்தாதி ) ` கோயில் சுடுகாடு ..... ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் `, ` எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் தன் பெருமை தானறியாத் தன்மையன் ` என்பது கொண்டு தேறி அவனைச் சரண்புக்குப் பெரும்பயன் எய்துக என்பது பாட்டிடை வைத்த குறிப்பு .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

மலையில் செழித்த சந்தனமரங்களை நீரோட்டத்தால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின் மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர் அலைவீசும் கங்கையையும் , சந்திரனையும் சடைமுடியிலே சூடி , இடுப்பிலே கோவண ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர் .

குறிப்புரை :

வரை உலாம் - மலையிற் செழித்த . சந்து - சந்தன மரங்கள் . உலாம் - உலாவும் : இங்குச் செழித்த என்னும் பொருட்டு . அரையின் கண் கோவணம் அசைக்கும் அடிகள் வேடங்கள் இருந்தவாறு .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

வேதனார் வெண்மழு வேந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.

பொழிப்புரை :

வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமான் . வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒளி பொருந்திய குழையணிந்த காதை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத் தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

ஏத்தும் - துதியுங்கள் . உம் ஏவற் பன்மை விகுதி .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன் றில்லையே.

பொழிப்புரை :

மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ பெருமான் மானையும் , மழுவையும் ஏந்திய கையினர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

மையின் ஆர் மிடறனார் - கருமை நிறைந்த கழுத்தையுடையவர் . கடி - வாசனை .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழித்தவர் . சிறப்புடைய கயிலை மலையினால் இராவணனின் வலிமையை அடக்கியவர் . மான்கள் உலவும் முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும் .

குறிப்புரை :

இப்பாடலுள் , தன் என்பன நான்கும் அசைகள் . சீரின் ஆர்மலை . சிறப்பின் மிகுந்த மலை ; கயிலை . உலகமெல்லாம் அழியும் ஒவ்வோர் பிரளயத்திலும் தான் அழியாமை மட்டுமன்றி வளரும் தன்மை உடையது . கலைதன் ஆர்புறவு - மானினத்தின் நிலமாகப் பொருந்திய முல்லை நிலம் . அந்நிலக் கருப்பொருள்களில் ஒன்று மான் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர் சிவபெருமான் . கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

கைபெற்ற பயன் கடவுளைத் தொழுவது , ஆதலால் கையால் தொழுது எனல் வேண்டா கூறலன்று ` கரம் தரும் பயன் இது என உணர்ந்து ` என்பது பெரியபுராணம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.

பொழிப்புரை :

அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த புத்தர்களும் , அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும் சமணர்களும் , தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை யானவை அல்ல . மேகம் தவழும் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும் .

குறிப்புரை :

போதி - அரசமரம் . கௌதம புத்தர் அம்மரத்தினடியில் இருந்து ஞானம் அடைந்தமைபற்றி அதனைப் போற்றுவர் புத்தர் . பிண்டி - அசோகு . அருகக்கடவுள் அம்மர நிழலில் உளன் என்பர் சமணர் . வாதினால் உரை அவை - வாதினால் உரைக்கும் அச் சொற்கள் . ஏர் - அழகு ; சிவவேடம் . இப்பாடல் குறிலெதுகை .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.

பொழிப்புரை :

நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த , அருமறைகளில் வல்ல , சிவஞானத் தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன் , நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய இத்திருப் பதிகத்தை ஓத , பாவம் நீங்கும் .

குறிப்புரை :

புறவம் - சீகாழி . கருமணி - நீலமணி போன்ற . மிடற்றினன் - கண்டத்தை யுடையவன் . பரவிய - துதித்த . பறையும் - நீங்கும் .
சிற்பி