திருப்புனவாயில்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
அன்னமன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும் , வெண்மையான பிறைச்சந்திரனும் , விரிந்த மார்பினில் முப்புரிநூலும் கொண்டு , அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப் பல திருத்தலங்கட்கும் சென்று , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது , புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

மின் இயல் - ஒளிபொருந்திய . செஞ்சடை வெண் பிறையன் - முரண்தொடை . பன்னிய - சொல்லியவற்றையே திருப்பிச் சொல்லுகின்ற . மறை - கனம் சடைபோன்றவை பல . ஊர்கள் போய் (5 ஆம் வே - தொகை ) பல ஊர்களினின்றும் போய் அமரும் இடம் . மாமலர் போன்று உதிர்க்கும் - பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புனவாயில் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து , இடபவாகனத்தில் ஏறி , வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து , இறைவன் எழுந்தருளி யிருக்கும் இடமாவது , தாழையும் , புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

பின்னிரண்டடிக்கு - பெருங் கடற்கரைச் சோலையில் தாழையும் . புலிநகக் கொன்றையும் நிலைக்கப்பெற்று , தாமரை மலர் களையுடைய பாய்கயல் சூழப்படப் புனவாயிலே மங்கையொடும் மகிழ்ந்தானிடமாவது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.

பொழிப்புரை :

இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும் , வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத் தலத்தில் எழுந்தருளி , கொன்றை மாலை அணிந்து , ஒளியுடைய மழுப் படையை வலக்கையிலே ஏந்தி , பாலாலும் , நெய்யாலும் திருமுழுக் காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும் பரம்பொருள் ஆவான் .

குறிப்புரை :

வெல்கொடி - வெல்லும்கொடி . விறல்பாரிடம் புடைபட - வலிமையையுடைய பூதங்கள் சூழ . ஆடிய வேடத் தானும் - ஆடிய கோலத்தை உடையவனும் . தொடைநவிலக் கொன்றை அம்தாரினானும் - மாலையாக எடுத்துச் செல்லப்படும் கொன்றை மாலையையுடையவனும் , கொன்றை மலர் ஓங்கார வடிவு உடைமையால் பிரணவமந்திரத்துக்கு உரியபொருள் . சிவபெருமானே ( பிறரல்லர் ) எனற்கு அறிகுறியாய் நிலவுவது . மழுப்படை ஏந்திய ஆடும் பரமனன்றே - புனவாயிலில் கொன்றை யந்தாரினானுமாயிருப்பவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலில்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.

பொழிப்புரை :

திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன் . தாழ்ந்த நீண்ட சடையுடையவன் . உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன் . சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன் . திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான் .

குறிப்புரை :

வெண்சங்கத்தோடு அணிகாதினான் - ` சங்கக் குழையார் ` என்ற சுந்தர மூர்த்திகள் தேவாரத்தாலும் காண்க . அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் - உள்ளங்கையில் விளங்கும் நெருப்பை ஏந்தினவனும் . அரவம்மணிமார்பு விரித்தல் விகாரம் , இசையின் பொருட்டு . பைங்கண் வெள்ஏறு - பசிய கண்ணையுடைய வெள்ஏறு - இவ் ஈற்றடி திருநள்ளாற்றுப் பதிகத்திலும் ஞானசம்பந்தப்பெருமான் திருவாயில் வருகிறது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான் . புலித்தோலை ஆடையாகவும் , பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன் . அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில் , ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு , எருக்கு , ஊமத்தம் ஆகிய மலர்களையும் , மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில் சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கலிபடு - ஓசைபொருந்திய கடல் - இதனால் கடல் ஆர்கலி எனவும் படும் . மதம் - ஒருவகை வாசனை . மத்தம் - பொன்னூ மத்தை . தக்கனிட்ட சாபத்தினால் நாடோறும் ஒவ்வோர் கலையாய்க் குறைந்து ஒரு கலையோடு சிவனைச் சரண்புகுந்தமையின் ` மெலிதரு பிறை ` யெனப்பட்டது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல் வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.

பொழிப்புரை :

கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவி பாட , அதற்கேற்ப நடனம் ஆடி , கார்காலத்தில் மலர்கின்ற கொன்றைமலரையும் , வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி , நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான் .

குறிப்புரை :

மங்கை - சிவகாமவல்லி . மங்கை பாட நடமாடி . கொன்றைமரம் விசேடமாகப் பூப்பது கார்காலத்தில் ஆதலால் ` காருறு கொன்றை ` எனப்பட்டது ` கண்ணி கார்நறுங்கொன்றை ` எனப் புறநானூற்றில் வருவது காண்க . சிறப்புப்பொருந்திய செல்வம் பெருகப் புனவாயிலில் இருந்தருளியவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர் இல்லையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன் . சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன் . பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன் . திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை .

குறிப்புரை :

பொருந்தலர் - பகைவர் . நஞ்சு அமுதுண்டு , நடமாடி , புரம் எய்து , புனவாயிலில் இருந்தவன் கழல் ஏத்த இடர் இல்லை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.

பொழிப்புரை :

செருக்குடைய மனம் உடையவனும் , வேல் , வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு , அழகும் , பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும் , ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும் , கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

மனம்மிகு - ஊக்கம் மிகுந்த . வேலன் - இங்கு வேல் முதலிய போர்ப்படைகளை யுடையவன் . வேல் - உபலக்கணம் . இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு ஆதலால் , வேலன் எனப்பட்டான் . வேலன் - காரணக்குறி , காரண இடுகுறியன்று . வலிஒல்கிட - வலிமை குறையும்படி , வனம் - சோலைகள் . இனம் மிகு - பல்வகைப்பட்ட , தொல் புகழ் - சிவபிரானது பழமையான புகழைப் பாடுவதும் , பாடி ஆடுவதும் ஆகிய அழகுமிகுந்த புனவாயில் , அடர்த்தானது இடம் ஆகும் . புனம் - காடு ; முல்லைநிலம் . கொன்றை முல்லைக் கருப்பொருளாதலால் ` புனம் மிகுகொன்றை ` எனப்பட்டது . கொன்றை மரச்சோலையிலே தென்றல் உலாவு வாயில் என்க . இது ` தென்றலார் புகுந்துலவும் திருத்தோணி புரத்துறையும் சடையார் ` என்று வேறு இடத்தும் வருவதறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

திருவளர் தாமரை மேவினா னும்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.

பொழிப்புரை :

அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும் , விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கரியவன் சிவபெருமான் . அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும் , சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

திருவளர்தாமரை - திணைமயக்கம் . ` உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே ` யென்பது சூத்திரம் . நரல் - ஒலிக்கின்ற . சுரிசங்கு - சுரிந்த முகத்தையுடைய சங்கு . பொருகடல் - கரையை மோதும் கடல் . காண்பரியான் - காண்டல் அரியவன் . காண்பு - தொழிற்பெயர் . கடவுளிடம் புன வாயில் ` கடவுள்ளிடம் `, ` உந்திந் நலம் ` என்பனவும் , மேலைப்பாடலில் ஆடல் லெழில் என்பதும் இசைநோக்கி விரித்தல் விகாரப்பட்டன .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை வீடுமே.

பொழிப்புரை :

புத்தர்களும் , சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா . பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

போதி - அரசமரம் . போதி எனப் பெயராயினாரும் என்பது புத்தரைக் குறித்தது . சமண் - சமணர் . எய்தன்மின் - எய்தா ( அடையா ) தீர்கள் . வேதன் - வேதத்தின் பொருளாயுள்ளவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள் சேர்வரே.

பொழிப்புரை :

பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புன வாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல்வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர் .

குறிப்புரை :

கடல்காழி - கடலுக்கு அணித்தான சீர்காழி . நற்றமிழ் - வீட்டு நெறி தரவல்ல தமிழ் . ` நற்றவஞ் செய்வார்க்கிடம் `. அற்றம் - சொற்பொருளறவு . இல் - இல்லையாக்குகின்ற . பாடல் - அற்றம் முன் காக்கும் அஞ்செழுத்து .
சிற்பி