திருமறைக்காடு


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பொங்கு வெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.

பொழிப்புரை :

பொங்கியது போன்ற வெண்மையான மணற் பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலை களில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும் , ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ் விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய , இகழும் பழி உளவாதல் இல்லை .

குறிப்புரை :

போழும் - பிளக்கும் . கலி - ஒலி . மறைக்குஅடை ; காட்டிற்கு அன்று திங்களைச்சூடியதும் திரிபுரத்தை எரித்ததும் புகழே அன்றிப் பழியாகாது . இகழ்பழி :- வினைத்தொகை . இகழாகிய பழி எனலும் பொருந்தும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவம்
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட , தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர் . அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும் .

குறிப்புரை :

ஆனில் அம் கிளர்ஐந்து - ( தி .2 ப .10 பா .5.) ` நாயன்மார் ஆனைந்தில் இரண்டுபேர் உரையார் நவையெனமற்று இரண்டொன்று நயந்துளது ஆன்முலைக்கண் ` என்னும் ஞானபூசாவிதி 14 ன் உரைக்கண் . கோமயம் கோசலம் இரண்டும் ஆகா என்று இவை யிற்றில்பேர் ஐந்து என்ற திருப்பாட்டுக்களில் அருளிச் செய்யாமல் அடக்கியருளிச் செய்தார்கள் . நின்ற நெய் பால் தயிருமாக அஞ்சையும் ஒரு பாத்திரத்திலே கூட்டி உண்டாக்கிவைத்து என்று எழுதியிருத்தலை உணர்க . ( தி .2 ப .60 பா .3; தி .5 ப .49. பா .10; தி .7 ப .5 பா .1)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் , நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார்பினை உடையவர் . இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர் . தண்மை யான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்ட தோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார் .

குறிப்புரை :

மார்பில் அணியும் நூல் நுண்மையும் வெண்மையும் உடையதாயிருத்தல் வேண்டும் . அதுகொண்டு முதுகின் அழுக்காற்று வார்க்கு இதுதெரியுமே ? பண் + யாழ் = பண்ணியாழ் . மாதர்பிறைக் கண்ணியான் . ( தி .4 ப .3 பா .1.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமை யையும் , கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவ ராவார் . அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர் .

குறிப்புரை :

வேதாரணியத்தில் ஏழைவெண்ணாரையானது தாழை மடலைத் தனது நற்றுணைப்பேடை என்றுகருதித் தழுவுமென்க . ( நாரை ) இது தாழை இதுபேடை எனப்பகுத்தறியும் அறிவு இல்லாமை யால் ஏழைநாரை என்றார் . புல்குதல் - கூடுதல் . மாழை - அழகு , இளமை . அடியின் நீழலே சரணாநினைபவர் என்றதால் , சிவனடி யார்கள் சிந்தனைக் குரியது சிவனடியே அன்றிப்பிறிதும் யாதும் இல்லை என்றுணரலாம் . ` காதலால் அவை இரண்டுமே செய்கருத்து உடையார் ` ( திருநீலநக்கர் 5) என்புழி அருச்சித்தல் பணிதல் என்று தொழிலால் இரண்டாயினும் சிந்தனையால் ஒன்றே ஆதல் உணர்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயு மறைக்காட்
டிரவு மெல்லியும் பகலும் ஏத்துதல் குணமென லாமே.

பொழிப்புரை :

பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும் , ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும் , நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி , குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும் . அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும் .

குறிப்புரை :

வீக்கிய - கட்டிய . அரை - திருவரை (- இடுப்பு ), கழ லடி . அரையையும் அடியையும் பரவினால் பாவம் அழியும் வண்ணம் அருள்செய்யும் பரசிவன் . மரவம் - குங்குமமரம் . இரவும் எல்லியும் பகலும் - ` இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே ` ( தி .5 ப .74 பா .9.) ` எல்லியும் பகலும் இசைவானவா சொல்லிடீர் ,( தி .5 ப .75 பா .6.) ` எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தமாக ஏத்தும் ` ( தி .4 ப .41 பா .3.) ` எல்லியும் பகலும் பணியது செய்வேன் ` ( தி .7 ப .69 பா .7.) இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார் ` எம்மையும் ஆளுடை யாரே ` ( தி .7 ப .75 பா .8.) என்பவற்றை ஆராய்ந்தால் இரவுக்கும் பகலுக்கும் வேறாயது எல்லி என்று புலனாகும் . ஆயின் , அவ்விரண்டினும் வேறாய் நிற்பது அவ்விரண்டன் சந்தியேயன்றி வேறில்லை . இரவொடு பகலும் , பகலொடு இரவும் சந்திக்கும் இரண்டிலும் எல் ( ஒளி ) இருப் பதால் ` எல்லி ` என்ற பெயர் பெற்றது . எல் - ஒளி , சூரியன் , பகல் . எல்லியை இரவென்னும் பொருளில் வழங்குதல் பயின் றுளது . எல்லியம் பகல் - ஒளி வீசும் பகற்பொழுது . எல்லியம் பகல் - என்பது நல்ல பாடம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

பல்லி லோடுகை யேந்திப் பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத மாமறைக் காடது தானே.

பொழிப்புரை :

பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும் . அதனையும் அவரே அறிவார் . எருதேறிவருவார் . பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார் . அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

பல் இல் ( லாத ) ஓடு , பலிதேரும் வாழ்க்கை அல்லலை ஆக்குவதேனும் அடிகளுக்கு அழகியது . அதனையும் அவரே அறி வார் . புல்லம் - ( புல்லைமேயும் ) எருது . ` புல்வாய் ` என மானைக் குறித்தல் காண்க . உழிதர்வர் - உழிதருவர் . ( பா .10.) பார்க்க . திரிவர் . ` உழிதருகால் ` ( திருவாசகம் ) திரிதருவர் - திரிதர்வர் , திரிதவர் , ` தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ` ( ? )

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர் படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.

பொழிப்புரை :

வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு , தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட , அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

வரை - மந்தரமலை . தேவாசுரர் பாற்கடல் கடைந்த வரலாறு . வெருவ - வாய்பிதற்றல் . ஆகம் - மார்பு , உடம்பு , உடம் பாயின் , உடம்பினுள் என்றும் , மார்பாயின் அதன்மேல் ஆதேயமான கழுத்தில் என்றும் கருதுக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச , பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும் .

குறிப்புரை :

தனது பெருமையை ஓரான் :- தன்பெருமைதான் அறியாத் தன்மையன் ` ( திருவாசகம் ) ஓரான் :- உணரான் என்பதன் மரூஉவாகும் . நக்கு - சிரித்து . நடுநடுத்து - நடுநடுங்கி . பரிந்தவன் - இரங்கியவன் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசின னவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.

பொழிப்புரை :

விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும் , விளங் கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும் , முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி , தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

விண்ட - ( பூத்த ) இதழ்கள் விள்ளலுற்ற . அரவு - அணை - சர்ப்பசயனம் ; பண்டும் என்றதால் இன்றும் காணாமை எனப் படும் . கண்டல் - தாழை , நீர்முள்ளியும் ஆம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.

பொழிப்புரை :

பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க , கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆர வாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி , நல்ல மனம் உடையவர்களே ! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பெருங்குடையும் மயிற்பீலியும் உடைய அப் புறப்புறச் சமயத்தவர் . மண்டை - உண்கலம் . உண்டு - உணவு கொண்டு . ` உண்டாம் இல்லையாம் ` என்பன முதலியவை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான் காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.

பொழிப்புரை :

மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழு வோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர் . புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர் .

குறிப்புரை :

மை - மேகம். பொய்யில்வானவர் - அழியாத வீட்டுலகினர்.
சிற்பி