திருநனிபள்ளி


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

காரைமுதலிய தாவரங்கள் சுடுகாட்டில் மிக்குள்ளன. `முட்காற்காரை` புறம். 258. கள - களா. `கருவையிலும் சிங்கையிலும் களவாண்டான்`. (தனிப்பாடல்) ஈகை - இண்டஞ்செடி, ஈங்கை - புலி தொடக்கி எனலுமுண்டு. `இண்டுபடர்ந்த இருள்சூழ்மயானத்து` தொடரி - முட்செடி. `கடுவும் தான்றியும் கொடுமுள் தொடரியும்`. சூரை :- `கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து` மணிமேகலை. 6:- 81. பம்மி - செறிந்து. `குளத்தினில் ஆரைபடர்ந்து` திருமந்திரம். 2911. `மகளிர் வள்ளை கொய்யும்` பதிற். 29-2.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்
நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீர்நிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

உள்ள + தங்கு + வெள்ளம் எனப் பிரிக்க. படப்பை - தோட்டம். பக்கம் எனலுமாம். அன்னத்தின் நடை உவமிக்குஞ் சிறப்புடையது ஆதலின், நடையுடை யன்னம் எனப்பட்டது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத்தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம் நீங்கிய வறும்பூக்களைத் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து எழுந்து விட்டதால் ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில், அவ்வண்டுகள் தொடாது விட்ட போதுகள்பூத்தமையால் மணம் பரவிற்று. பரவிய அம்மணத்தால், பூத்த மலர்களின் அகவிதழ்களைப் பொருந்தி வண்டுகள் ஒலி அடங்கித் தேனுண்டு உறங்கின, இவ்வியற்கையை ஆசிரியர் அருளிய திறத்தை உணர்ந்து மகிழ்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

மாலையோடு குலவிப் பிரகாசிக்கும் பிறை சூடி, கொம்பில் என்றே மதுரைத் திருஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் உள்ளது. சுவாமிநாத பண்டிதரும் வேறு சிலரும் பதித்தவற்றுள், கொம்மல் என்றுள்ளது. அது கெதாநு கெதிகநயம் பற்றியதொரு பிழையாகும். குளிர்ச்சியைத்தரும் கும்மிப்பாடலொடு குயிலின் பாடலைக்கேட்ட வண்டு என்று கூறுவதினும் கொம்பு என்னும் இசைக்கருவியின் ஒலியொடு குயிலின் பாடலைக் கேட்ட வண்டு எனக்கூறுவது சிறந்தது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதி முறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தெளித்து அர்க்கியம்தர, ஒலியோடு பெருவெள்ளமாய்ப் பெருகி நாடு முழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

ஒரு காதில் சங்கத்தோடும் ஒருகாதில் சங்கக் குழையும் அணிந்தமை குறிக்கப்பட்டது. கனல் - தீயில். வீடுடன் எய்துவார்கள் பேரின்ப வீட்டை விரைந்து எய்தும் வைதிக சைவர்கள் மனைவியுடன் நீராடச் சென்று அடையும் வைதிகர்கள் எனலுமாம். விரலால் தெளித்தல் :- கை (விரல்) களால் அர்க்கியங்கொடுத்தல். நாடுடன்நாடு வெள்ளமா ஆரும் குடகுநாட்டில் தோன்றிக் கொங்குநாட்டில் பாய்ந்து சோழநாட்டில் கடலை அடைவது நோக்கின் நாடுடன்நாடு காவிரி வெள்ளம் நிறையும். மேதினிக்கு வளம் நிறைத்துக் குறைந்த நீருடைமையால், கடல் வயிறு நிறையாத காவிரி ஆயிற்று (பெரிய . திருமூல . 8.) என்றனர். `பொன்னி` என்றது நீரின் செம்மையும் மணலின் பொன்மையும்பற்றி வழங்கிய காரணப்பெயர். நாடுடன் ஆடு வெள்ளம் என்றுகொண்டு, கங்கையிற் புனிதமாய காவிரியில் நாட்டினர் ஒரு சேரப்போந்து நீராடுதலைக் குறித்ததாகக் கொள்ளலும் ஆகும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான் எழுந்தருளியநகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

ஊகம் - கருங்குரங்கு, குரங்குமாம். மந்தி - பெண் குரங்கு. உகளும் - பாயும், குதிக்கும். இடறி - எற்றி, தள்ளி. நாகம் - நாகமரம். ஆரம் - சந்தனமரம். பாம்பும் (நாகரத்நமும்) முத்தும் ஆம். வாருபுனல் - கொழிக்கும்நீர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டிவீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

பெருமை பொருந்திய தண்டு , சூலம் , அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய் , வகையாக அமைந்த வன்னி கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர் , புகையாக எழுந்த மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும் , பணிந்து போற்று வார் பாடும் பாடல் ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழ்படப்பைகளை உடைய நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

தகை - தடை . தண்டு - தண்டாயுதம் . சிவிகையுமாம் . கொடுகொட்டி - திரிபுரதகனகாலத்திற் சிவபிரான் ஆடிய திருக்கூத்து . கந்தம் - மணம் . நகை - வெண்மை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா வரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் , கீழுல கிலும் மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதி வடிவினனாகிய அவனை நன்மைமிக்க தொண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

வாளன் - சிவபிரான் அருளிய வாளை உடையவன் ( இராவணன் ). வாளன் வேலன் இரண்டும் சிவபிரானைக் குறித்தவை எனலும் ஆம் . உலம் - கற்றூண் , திரண்டகல் . ஆதும் - யாதும் . ` ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது ` ( தி .4 ப .3 பா .1) இதில் , பிறபத்தும் நோக்காதார் ` யாதும் ` என்று எழுதிவிட்டனர் . ` சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான் ` ( தி .6 ப .20 பா .9).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாத வராய் அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர் , முல்லை நிலத்தில் விரிந்த முல்லை , மல்லிகை , அசோகு , புன்னை , கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் பூத்த மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

முதலீரடியில் அரியும் அயனும் அடிமுடி தேடிய வரலாறு குறிக்கப்பட்டது . பின்னீரடியில் முல்லை மௌவல் முதலிய வற்றின் மணம் வீசும் சிறப்பு நனிபள்ளிக்கு உண்டென்பது கூறப் பட்டது . புற - புறவம் . ` குறியதன்கீழாக்குறுகல் ` ( நன்னூல் ).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

அன்னமாக , வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும் , மனம் விரும்பிக் கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவன வற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர் , தெளிந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

செல்கு - செல்லும் . செல்குசோறு :- வினைத்தொகை . கொணர்க - கொண்டுவருக . மண்டை - பனைமட்டையாலான உண் கலம் . சிவபிரான் வேதங்களை அருளியவன் என்பது இங்கும் உணர்த்தப்பட்டது . நன - நனவு . தெளிவு .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே

பொழிப்புரை :

கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளை யும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத , ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும் .

குறிப்புரை :

ஆறும் நாலும் - ஆறங்கங்களும் நால்வேதங்களும் . ( தி .2 பதி .6 பா .3.) அத்தர்பியல்மேல் இருந்து - தந்தையார் திருத் தோள்மிசை அமர்ந்து . ஆணைநமதே :-( தி . 2 ப .84-85 பா .11, தி .3 ப .78 பா .11, தி . 3 ப .118 பா . 11)
சிற்பி