திருப்பாண்டிக்கொடுமுடி


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொருகூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்.

குறிப்புரை :

பெண் அமர் மேனியினார் - அர்த்தநாரீச்சுவரர். பிறை புல்கு செஞ்சடையார் - சந்திரசேகரர். கண்ணமர் நெற்றியினார் - பாலநேத்திரர். காது அமரும் குழையார் - குழைக்காதனார். எண் அமரும் குணத்தார் - எண்குணத்தார். இமையவர் ஏத்த நின்றார் - தேவர் தொழப்படுவார். பண் அமர் பாடலினார்:- `பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி` (தி .6 ப .5 பா .57) `பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி` (தி .6 ப .5 பா .7). `பண்ணினார் பாடலாகிப் பழத் தினில் இரத மாகி ... அனைத்தும் ஆகி` (தி .4. ப .70. பா .4). இத்தலத்தின் தேவியார் திருநாமம் `பண்மொழியம்மை`. `வேதமே பண்ணுளார்` என (தி .2. ப .28. பா .3). முற் போந்ததும் ஈண்டறியத்தக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த் துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர்.

குறிப்புரை :

கணி - கொன்றை. விண்ணவர் - சிவபெருமான். தன்னைக் கொன்றையின் சிறந்த அழகிய மலர்கொண்டு திருவடிப் பூஜை புரிவார்களுடைய வினையாகிய (வீட்டுப்) பகையைத் தீர்க்கும் விண்ணவன் என்றவாறு. விண்ணவர் என்றதற்கு ஏற்பத் தமை என்று இருத்தல் வேண்டுமாயினும், ஒருமைக்கும் பன்மைக்கும் உரிய கடவுளைக் கூறலின் குற்றமாகாது. `கொன்றைசூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்` என்ற ஆசிரியர், நமக்கும் அதையே உபதேசித்தருள்வதுணர்க. விஞ்சையர் - நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார். விஞ்சையர் - வித்தியாதரர். சிவபெருமானைக் குறித்ததாகக்கொண்டு ஞானசொரூபர் எனலும் ஆம். விஞ்சை - வித்தை, ஞானம். நிரைவளை மங்கை - வரிசையுற்ற வளையல் அணிந்த உமாதேவியார். பனை கை பகடு - பனை போலும் துதிக்கையை உடையயானை. உரி - தோல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிகளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர்.

குறிப்புரை :

சாந்தம் வெண்நீறு - `சாந்தமென நீறணிந்த சைவர்`(தி .2 ப .71 பா .8) புடை - பக்கம். பூதத்தினார் - பூதகணங்களை உடையவர். பொறி - புள்ளிகள். கிளர் - விளங்குகின்ற. அசைத்தார் - கட்டியவர். விடை - எருது. கொடியார் - துவசம் ஏந்தியவர். இடபத்து வசம் உயர்த்தியவர். மழுவும் மூவிலைச் சூலப்படையும். அமர் கொள்கையினார் - விரும்புங் கோட்பாடுடையவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நறைவளர் கொன்றையி னாரு ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.

குறிப்புரை :

நறை - தேன். ஞாலம் - பூமி. கறை = நச்சுக்கறுப்பு. மா - கரிய; அழகுமாம். மிடற்றார் - கண்டத்தையுடையவர். அரங்கு ஆ - நாடகசபையாக. கனல் - தீ. மறைவளர் பாடல் - வேதப்பாடல். மண் முழவம் - மார்ச்சனையையுடைய முழா. குழல் - வேய்ங்குழல். மொந்தை - ஒரு கட்பறை. பறை - வாத்தியம். சொல் எனலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக வமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதன் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியனவற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.

குறிப்புரை :

போகமும் இன்பமும் ஆகி - பெத்தத்தில், தநுகரண புவனங்களொடு சேர்த்து நான்காவதாக எண்ணப்படும் போகமும், அப்போகாநுபவம் பற்றி உயிர்க்கு எய்தும் சிற்றின்பமும், முத்தியில் சிவபோகமாம் சிவாநந்தமும் ஆகி. ஆகம் - சுத்தியால் ஓங்கிய தேகம். உறைவு இடம் - வாழ்தலையுடைய இடம், கோயில். `ஊன் உடம்பு ஆலயம்` (திருமந்திரம்). `ஓங்குடலம் திருக்கோயில்` (ஞான பூஜா விதி .9). நாகம் - பாம்பு. நல்நுதல் மங்கை - அழகிய நெற்றியையுடைய உமாதேவியார். மேனிப்பாகம் - திருமேனியிற்பாதி. உகந்தவர் - விரும்பியவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கடிபடு கூவிள மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர்.

குறிப்புரை :

கடி - மணம். கூவிளம் - வில்வம். மத்தம் - ஊமத்தை. கமழ் - மணக்கின்ற. செற்ற - அழித்த. பொருசிலை - போர்வில். `வடிவுடைமங்கை`. படிபடுகோலத்தினார் - படியாகப் பொருந்திய கோலம். எல்லாவுருவங்களுக்கும் காரணவுருவம் இறைவனுடையதே. `யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகம் இலச்சினையே ஆதலினால்`, (திருக்களிறு .82). காரியமான எல்லாப் படிக்கும் இறைவனது கோலமே காரணப் படியாயிற்று. படி - ஒப்பு; பிரதிச்சந்தம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஊனமர் வெண்டலை யேந்தி யுண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப்பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில்வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர்.

குறிப்புரை :

ஊன் - மாமிசம். தலை - பிரமகபாலம். பலி - பிச்சை. உழல்வார் - திரிவார். தேன் அமரும் மொழிமாது:- `பண்மொழியம்மை` இத்தலத்துத் தேவியின் திருநாமம். தேன் ... திருமேனியினார் - அர்த்தநாரீச்சுரவடிவுடையவர். கான் - காடு. மஞ்ஞைகள் - மயில்கள். கோலம் - அழகு. பால் நலம் நீறு - பால்போலும் நன்மைகளையுடைய நீறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

புரந்தரன் றன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர்.

குறிப்புரை :

புரந்தரன் - இந்திரன். வானோர் - தேவர். இந்திரனோடு தேவர்கள் சிவபிரானைப் போற்றி போற்றி என்று ஏத்தும் முதன்மை உணர்த்தப்பட்டது. பெருந்திறல் - மிக்கவலிமை. வாள் - கொடுமை. வாளை ஏந்திய அரக்கன் (-இராவணன்) எனலுமாம். பேர் இடர் - மலையைப் பேர்க்கும் துன்பம், பெரிய துன்பம். கருந்திரை - கரிய கடல் நஞ்சு, திரை என்பது கடலுக்குச் சினையாகு பெயர். கடல் என்பது நஞ்சுக்கு இடவாகு பெயர். திரை இருமடியாகு பெயர். மா - கரிய, அழகிய. மிடற்றார் - கண்டத்தினார். கார் அகில் - கரிய அகில் மரத்தினையும். பல்மணி - பல மணிகளையும். உந்தி - செலுத்தி. பரந்து - பரவி. இழி - ஒழுகும். பாங்கர் - பக்கம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதாவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார்.

குறிப்புரை :

திருமகள் காதலினான் - இலக்குமி காதலரான திருமால். திகழ்தரு - விளங்குகின்ற. மாமலர் - தாமரைப்பூ. மேலை - மேலிருத்தலையுடைய. பெருமகன் - பிதாமகன் (பிரமன்). அழல் - தீ. மரு - மணம். மலி - மிக்க. சந்து - சந்தனமரம். மாடு - பக்கம். பரு - பருத்த. மணித்துறை - நீர்த்துறை. துறைமணி உம் என்றும் துறை ஆரும் என்றும் கொள்ளலாம். பெம்மான் கொடுமுடியாரே என்க. துறை ஆரும் பாண்டிக்கொடுமுடி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர்.

குறிப்புரை :

புந்தி - அறிவு. மாட்டார் - வன்மையில்லாதவர். வேடம்பலபலவற்றால் - சிவமூர்த்தம், மகேசுரமூர்த்தம் எனப் பற்பலவற்றால். சித்தர் - சித்துக்களில் வல்லவர். செழுமையுடைய நல்ல மலர்களைக் கொண்டு பத்தர் (அன்பர்), சித்தர், தேவர் எல்லோரும் ஏத்தும் தலம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.

பொழிப்புரை :

மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர்.

குறிப்புரை :

கலம் - மரக்கலம். கடலில் தோணியாக மிதந்த காழியாதலின் `கடல் சூழ்ந்தகாழி` என்றார். பலம் - பயன், வலிமையுமாம். தலை - பிரமகபாலம். சொல - சொல்ல, பாட. சொல்லச் சொல்ல மல்கும் பாடல்கள். நலம் - பேரின்பம். நன்னெறி - ஞானமார்க்கம்.
சிற்பி