திருக்குடவாயில்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கலைவாழு மங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையி லரவும்பிறையு மமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.

பொழிப்புரை :

மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கலை - ஆண் மான். புல்வாய்க்கே அன்றிக் `கலையென் காட்சி உழைக்கும் உரித்து` (தொல், மரபியல். 42-3). கொங்கு - மணம், பூந்தாது, தேன். கூந்தல் அலை - கூந்தலை உடைய அலைமகளாகிய கங்கை. கமுகம் - பாக்கு. பொன் பவளம் பழுக்கும் - பொன்னையும் பவளத்தையும்போலப் பழுக்கும். நிலை - குடவாயில் நிலை. குட வாயிலாகிய நிலையில்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப வங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.
 

பொழிப்புரை :

திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கழலும் சிலம்பும் காலணி விசேடம். செடி - குண மின்மை. நாற்றமுமாம். தேர்வீர் - தெரிவீர். குலாவி - கொண்டாடி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கழலார்பூம் பாதத்தீ ரோதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீ ரண்டர்போற்று மளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

ஓதம் - அலையை உடைய. விடம் உண்டு அன்று அழல் ஆரும் கண்டத்தீர் என்க. அழல் - நஞ்சினது வெப்பம். அண்டர்- தேவர். போற்றும் அளவினீர் - வழிபடும் அளவிற்கேற்ற அருள் செய்வீர். குழல் - மகளிர் கூந்தல், குழலில் உள்ள மாலையிற் படிந்த வண்டு எனலுமாம். ஆர - நிறைய. குழலார - வேய்ங்குழலொலி நிறைய எனலும் பொருந்தும். நிழல் - ஒளி, அருள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்
தெறியாரு மாமழுவு மெரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

பொழிப்புரை :

மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர்.

குறிப்புரை :

மறி - மான்கன்று.\\\\\\\"யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே\\\\\\\". (தொல்.மரபியல். சூ.12) கைத்தலத்தீர்- கையிடத்தையுடையவரே! எறி (எறிதல்) - வீசுதல். எரி- தீ. குறி - போதுகளை மலர்த்தும் குறிப்பு. ஆர - பொருந்த. தேன் உண்ணும் பொருட்டு. மிழற்றும் - பாடும். நெறி - வேதாகம வழி. ஆரும் - பொருந்தும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

இழையார்ந்த கோவணமுங் கீளுமெழிலா ருடையாகப்
பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.
 

பொழிப்புரை :

நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில்களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர்.

குறிப்புரை :

இழை - நூலிழை. கீள் - கிழி, கீழ், கீள் என மருவிற்று. `மடையில் ...... சாம்பற்பூச்சும் கீள் உடையும் கொண்ட உருவம்`, (பதி.23 பா.1 ). `கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி`(தி. 7 பதி. 240). `கீளலால் உடையுமில்லை` (தி.4 ப.40 பா.7). குழை - தளிர், விழவு - திருவிழாக்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயில்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

அரவு- பாம்பு. வெண்ணீறாடினீர் - திருவெண்ணீற்றில் மூழ்குதலுடையீர். இரவு - இரத்தல். குரவு - குராமரம். வாசம் - மணம். திரு - அழகு; `சென்றடையாத்திரு`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீ ரரிவைபோற்று மாற்றலீர்
கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே!ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

பாடல் - வேதப்பாடலில். ஆர் - பொருந்திய. வாய் மொழியீர் - சத்தியவார்த்தையாக விளங்குபவரே. வேதப்பாடல் பொருந்திய திருவாய்ச் சொல்உடையீர் எனலுமாம். ஏறு - ரிஷபம். ஊர்தி - வாகனம். மாநடத்தீர் - மகா தாண்டவம் செய்தீர். அரிவை - உமாதேவியார். ஆற்றல் - வலிமை. கோடல் - வெண்காந்தள். தும்பி - வண்டு. முரன்று - ஒலித்து. மிழற்றும் -இசைபாடும். நீடல் - நீளுதல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட வழலாய் நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன்
தங்காதன் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.
 

பொழிப்புரை :

தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.

குறிப்புரை :

கொங்கு - தேன், மணம், கமலத்து அயனும். தாமரை மீதுள்ள பிரமனும். குறளாய் - வாமனமூர்த்தியாய். நிமிர்ந்தானும் - விக்கிரமனும். அங்காந்து - வாய்திறந்து. தள்ளாட - அசைய. தம் காதல் - தம்முடைய காதலை விளக்கக்கூடிய. மா - பெரிய. தாளும் - அடியும். பங்கு - கூறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொண்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோ ரளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
 

பொழிப்புரை :

அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன்மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

தூசு - துரிசு ஏறிய உடை. தூய்மை - பரிசுத்தம். ஏசு - இகழ்ச்சி. புன்மொழி - புல்லிய சொற்கள். நீத்து - நீக்கி. எழில் - அழகு. மாடம் - மாடக்கோயில்; மாடங்களையுடைய எனினுமாம். ஆசாரம்- நல்லொழுக்கம்.(வைதிக மார்க்கம்). குன்றாது - குறையாது. தேசு - ஒளி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற் கோயின்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை யுரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.
 

பொழிப்புரை :

தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ்மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றை வல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர்.

குறிப்புரை :

நளிர் - குளிர். திரை - அலை. மல்கு - மிக்க. மேய - மேவிய. கோமானை - கோமகனை. ஒளிர் - விளங்கும். தமிழ்ப் பூ மாலை என மாற்றுக. தளர்வு ஆன - தளர்வாகிய துன்பங்கள். தான் - தானே. தகுசீர் - தக்கசீர். (வினைத் தொகை).
சிற்பி