திருவெண்ணியூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

பொழிப்புரை :

சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன். அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம்.

குறிப்புரை :

சடையானை என்றதன் பின் கூறியதால், சந்திரனையும் சிவந்த கண்களையுடைய பாம்பையும் அச்சடைமேல் உடையான் என்க. அரா - பாம்பு. உடைதலை - உடைந்ததலை, பிரமகபாலம். ஊரும்விடை - ஏறிச்செலுத்தப்படும் எருது. விண்ணவர் - தேவர். வெண்ணி:- வென்றி என்பதன் மரூஉ. நன்றி - நண்ணி. பன்றி - பண்ணி, மன்று - மண்ணு, கன்று - கண்ணு என்பனவற்றிலுள்ள னகரமும் றகரமும் உற்ற திரிபைநோக்குக. உள்காது - நினையாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

பொழிப்புரை :

ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன். வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும்.

குறிப்புரை :

சுண்ணம் - பொடி. ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை - முதலும் முடிவுமில்லாத மறையோனை, வேதத்தை அருளியதால் வேதியானான். நீதியை - தருமசொரூபியை. நினைதல் எளிதன்று. அரிதாகப் பெறத்தக்கது ஆதலின் `வல்லார்` என்றார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.

பொழிப்புரை :

கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானேதலைவன் ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப் பெறும் வெண்ணியில் எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர்.

குறிப்புரை :

கனிதனை - பழத்தை, கனிந்தவர் - மனங்கனிந்துருகி வழிபடுபவர். முனிதனை - மனனசீலனை, நனிதனை - மேம்பட்டவனை. நனி - மிகுதி, உரிச்சொல்லடியாக நின்ற பெயர். நல்லவர் - சரியை, கிரியை, யோகங்களில் முதிர்ந்த ஞானிகள், சைவநலமுடையவரெனப் பொதுப் பெயருமாம். இனிதனை -(இனிது + அன் + ஐ) இன் புருவானவனை. ஏதம் - இருவினைக் குற்றம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்கட்கும் முன்னே தோன்றிய பழையோன். மூவுலகங்கட்கும் தலைவனாய் விளங்கிக்காப்பவன். தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன். அழகிய வெண்ணி நகரில் விளங்கும் தலைவன். அவனை ஏத்தாதவர் என்ன பயனைக் காணவல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர்.

குறிப்புரை :

மூத்தான் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயிருப்பவன். மூவுலகுக்கு ஒரு மூர்த்தி:- சிவபரத்துவம் கூறியவாறு, முற்பாட்டினிலும் காண்க. காத்தான் - மூவுலகையும் காத்தவன், காக்கின்றவன், காப்பவன். கனிந்தவரைக்கலந்தாட் கொள்ளல் மேலும் கூறப்பட்டது. அழகமர் வெண்ணி என்றதால் தலச்சிறப்பு விளங்கும். அம்மான் - அரியமகன். மகன் - கடவுள். மகள் - திருமகள், நாமகள். ஏத்தாதார் - துதித்து வணங்காதார். ஏத்துதல் - தோத்திரத்தால் வழிபடல். சிவபிரானை ஏத்தாதவர் மக்கட்பிறப்பினராயினும் பேய் போன்றவரேயாவர். `மனத்துன்னை நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்` என்னும் அருள்மொழிப் பகுதியைக் காண்க, திருவள்ளுவரும் `வையத்தலகை` என்றார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை
ஊரானை யுள்கவல் லார்வினை யோயுமே.

பொழிப்புரை :

நிறைந்த நீரைக் கொண்ட கங்கையை முடிமிசைத்தரித்தவன். அதனைச் சூழக் கொன்றை மாலையைப் புனைந்துள்ளவன். உமையம்மையை ஓர்பாகமாக உடையவன். புகழ் பொருந்தியவன். விளங்கும் வெண்ணியை விரும்பி உகந்த ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அவனை நினைவார் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

நிறைபுனல் - கங்கைநீர். தலையிற் கங்கையைச் சூழக் கொன்றைமாலையணிந்தான். திருவெண்ணியூர் அமர்ந்து உறைவான் என்று இயைத்துக்கொள்க. தோத்திரம் புறப்பூசையினும் சிறந்தது. அகத்தில் செய்யும் தியானம் அவ்விரண்டினும் பெரும்பயன் அளிப்பது. திரிகரணங்களாலும் ஆகும் வினைகளை அத்திரி கரணங்களாலும் தீர்க்கும் வழிகள் தியானம், தோத்திரம், நமஸ்காரம், பூஜை முதலியவை. அவற்றுள் தியானமே உத்தமம் ஆதலின், உள்க வல்லார் வினை ஓயும் என்று அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

முத்துப் போன்றவன். முழுமையான வயிரத்திரள் போன்றவன். மாணிக்கக் கொத்துப் போன்றவன். அசைவற்ற சுடராய் உலகத்தோற்றத்துக்கு வித்தாய் விளங்குபவன். தேவர்களால் தொழுது வணங்கப்பெறும் வெண்ணியில் விளங்கும் தலைவனாவான். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

முத்து, முழுவயிரத்திரள், மாணிக்கத்தொத்து, முதலி யவை, ஒப்பில்லாத கடவுளுக்கு அன்பின் மேலீட்டால், ஒப்புறுத்திச் சொல்லும் உபசாரவழக்கு.`பொருள்சேர் புகழ்` என்ற வள்ளுவர் கருத்தும் ஈண்டு நினைக்கத்தக்கது. தொத்து - கொத்து. துளக்கம் - அசைவு. இங்கு அணைதலைக் குறித்தது. அணையாவிளக்கு என்க. நமக்கு அல்லல் இல்லையாம்படி சிவனை அடையும் வன்மையைப் பெறத்தவஞ்செய்தல் வேண்டும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

பொழிப்புரை :

மன்மதனை எரித்தவன். கொல்லும் தொழிலுடைய எமனைச் சினந்து உதைத்தவன். பெரிய கையை உடைய யானையை உரித்து அதன் தோலை மேனிமீது போர்த்தவன். தேவர்கள் வந்து வணங்கும் திருவெண்ணியில் விளங்கும் அக்கடவுளை நினைப்பவர்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

காமன் - பெண்ணாசையை வளர்ப்பவன், மன்மதன், காமத்திற்கு அதிதேவதை. காலன் - இயமன். காய்ந்தான் - கோபித்து எரித்தான். பாய்ந்தான் - பாய்ந்து உதைத்தான். பரிய - பருமையுடைய, பருத்த. கை - துதிக்கை. மா - யானை. உரி - உரித்ததோல். உரித்தோல் - உரியாகிய தோல். உரி:-முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகுபெயராய்த் தோலை உணர்த்துமிடமும் உண்டு. இங்குத் `தோல்` என்று அடுத்திருப்பதால் தொழிற்பெயராய் மட்டும் கொள்ளப்பட்டது. மெய் - திருமேனி. மேய்ந்தான் - வேய்ந்தான், அணிந்தான். நீந்தான் - கடவுள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே.

பொழிப்புரை :

பகைமை பூண்டவனாய்ப் பெருமை மிக்க கயிலை மலையைப் பொருட்படுத்தாது விரைந்து அதனைச் சினந்து சென்று எடுத்த இராவணனது பெருமை அழியுமாறு அவனுடைய விளங்கும் தோள்கள் முடிகள் ஆகியனவற்றை முரித்தவன். அழகமைந்த வெண்ணியில் உறையும் எம்தலைவன் என வழிபடுபவர் குற்றங்களைப் பொறுப்பவன். அவனைப் போற்றுவார் ஆற்றல் உடையவர் ஆவர்.

குறிப்புரை :

மறுத்தானை - பகைவனை. ஒன்றார் பொருந்தாதார் மறுத்தார் என்பவைபோலப் பகைவரைக் குறித்தற்கு ஆளும் பெயர்களை அறிந்து கொள்ளலாம். `மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் கறுத்த வன்`(தி .1 ப .109 பா .8) செறுத்தான் - கோபித்தவனை. மறுத்தல், செறுத்தல் இரண்டும் இராவணன் தொழில். இறுத்தல் - முரித்தல். இறுத்தவனும் பொறுத்தவனும் சிவபிரான். ஆற்றல் - ஞானபலம் முதலியயாவும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும்
கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன். வானவர்க்கும் மக்களுக்கும் கண் போன்றவன். திருமால் பிரமன் காண இயலாத விண் வடிவானவன். தேவர்களால் வழிபடப் பெறும் திருவெண்ணியில் விளங்கும் தலைமையாளன். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

மண்ணினை - அஷ்டமூர்த்தத்துள் பிருதுவிரூபமாக இருக்கின்ற சிவனை. `உலகுக்கெல்லாம் ஒருகண்` `உயிர்க்கெல்லாம் கண்` என்பதனால், `வானவர்க்கும் மனிதர்க்கும் கண்ணினை` என்றார். `பெண்ணவன்காண் .... எல்லாம் காணும் கண்ணவன்காண்` (தி .6 ப .48 பா .7)`கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய்` (தி .6 ப .73 பா .2) விண் - திருச்சிற்றம்பலம். அண்ணல் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள். அல்லல் - பிறவித்துன்பம், இம்மையில் உறும் துயரம் எல்லாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின்
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.

பொழிப்புரை :

குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமயநெறிகளை வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில் உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத் துயர்கள் தோன்றா.

குறிப்புரை :

குண்டர் - கற்குண்டுபோலக் கட்டமைந்த உடம்பினர், சமணர், சாக்கியர். மிண்டர் - மிடுக்குடையவர். மிண்டவை - அதிக பிரசங்கம். வெகுளேல்மின் - சைவாகமப்பொருள் உண்மைகளைக் கோபித்து அலட்சியம் செய்யாதீர்கள். எதிர்மறைப் பன்மையேவல். `மின்` பன்மை விகுதி, அது நீங்கின் ஒருமையாதல் தெரியும். விண்டவர் - பகைவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை
உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

பொழிப்புரை :

மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப்பாடிய ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர்.

குறிப்புரை :

மருவாரும் - மணம் நிறையும்; பொருந்தாதவரும் காழியைப் பொருந்தி வழிபடு சிறப்புணர்த்தியதுமாம். மல்கு - நிறையும். திரு - நீர்வளம் முதலிய எல்லாச் செல்வங்களும். ஆரும் - நிறைந்துள்ள. திகழ்தரு - விளங்குகின்ற. (பிரசித்தி குறித்தது). அமர்ந்தான் - திருக்கோயில் கொண்டிருக்கின்றவன். உரு ஆரும் - ஞானவடிவம் பூரணமாயிருக்கும். பொரு - (உறழ்பொரு) சிறப்பு. பூலோகத்தினும் மேலானது புவலோகம். அஃது இங்குச் சிவலோகத்தை உணர்த்திற்று.
சிற்பி