திருமங்கலக்குடி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே.

பொழிப்புரை :

மலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம் ஆகியனவற்றை வாரிக்கொண்டுவரும் நீரை உடைய பொன்னி நதியின் வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப் பெருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்டகையால் கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம் புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

சீர் - கனம், புகழ், மணியும் அகிலும் சந்தனமும் மிக்குள்ள மலை. சந்து - சந்தனம். வரை - மலை. வாரி - வெள்ளம். பொன்னி - காவிரி. பொன்னி வடமங்கலக்குடி - ஆற்றின் வடகரையிலுள்ள தலம். இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் சிவபூஜைக்குரிய திருமஞ்சனநீரை அமர்ந்தவண்ணமே திருக்கைகளை நீட்டி, ஆற்றுநீரை முகந்து அபிடேகம் புரிந்தார் என்பது வரலாறு. அவ்வுண்மையை முதற்றிருப்பாட்டில் உணர்த்தியருளியதால் ஆசிரியர் திருவுள்ளக் கிடக்கையில் அது முந்தி நின்றவாறறியலாம். ஆற்றினளவும் நீண்டதால் `நெடுங்கை` என்றார். பூரித்து - நிறைத்து. ஆட்டி - அபிடேகித்து. அர்ச்சிக்க - அருச்சனைபுரிய. புராணன் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன் என்னும் இருபொருளும் தருமாறு பிரிக்கப்படும் வடசொல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பணங்கொ ளாடர வல்குனல் லார்பயின் றேத்தவே
மணங்கொண் மாமயி லாலும் பொழின்மங் கலக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.

பொழிப்புரை :

ஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள் ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் தம்முள் மாறுபடும் செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும் வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான் திருவடிகளே நமக்குப் புகலிடமாகும்.

குறிப்புரை :

பணம் - அரவின் படம். நல்லார் - பெண்டிர். மணம் கொள் பொழில் - வாசனை கொண்ட சோலை. ஆலும் - ஆடும். இணங்கிலாமறையோர் என்பதிலும், இணங்கிலாமை மறைகட்குரிய அடைமொழியேயாகும். மறைகள் மெய்ப்பொருளை அறிந்து இணங்காதன. ஆரணம் அறியா அரும்பெருங்கடவுள் பரமசிவன் என்பதும் அவன் `இணங்கிலி` (திருவாசகம். 389.) என்பதும் பிரசித்தம். இமையோர் - இமைகொட்டாத வானோர். விழித்தகண் குருடாய்த் திரிவீரராகியயோகியருமாம். அணங்கு - உமையம்மையார், சரண் - கதி, புகல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கருங்கை யானையி னீருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாமண மார்பொழில் சூழ்மங் கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.

பொழிப்புரை :

கரிய துதிக்கையை உடைய யானையை உரித்த தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

கருங்கை - பெரிய துதிக்கை. கருமையை யானைக்குச் சேர்த்து நிறத்தைக் கொள்ளலும் ஆம். ஈர் உரி - ஈர்ந்த தோல். வினைத்தொகை. இத்தொடரின் உண்மைக் கருத்து ஆணவ மலத்துட்படும் உயிரின் உள்ளொளி வடிவுடையன் மெய்ப்பொருள் என்பதாம். `ஒளிக்கும் இருட்கும் ஒன்றே இடம்` எனத்தொடங்கும் கொடிப்பாட்டின் உட்கிடக்கையை இங்கு உணர்க. மருங்கு - பக்கம். அன்பு - பக்தி, விருப்பம் - ஆர்வம். வீடும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பறையி னோடொலி பாடலு மாடலும் பாரிடம்
மறையி னோடியன் மல்கிடு வார்மங் கலக்குடிக்
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.

பொழிப்புரை :

பறையொலியோடு பாடல் ஆடல்புரியும் பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர் வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை அறிவார்கள்.

குறிப்புரை :

பறை - வாத்தியம். பாரிடம் - பூதகணம். மறையினோடு இயல் மல்கிடுவார் - வேதஞானமும் வேதவொழுக்கமும் மிக்கவர் அந்தணர். குறைவிலா நிறைவே என்றது பரிபூரணன் பரசிவனன்றி வேறில்லாமை உணர்த்திற்று, ஏனைய நிறைவெல்லாம் அதனிற் பெரிய பிறிதொரு நிறைவைநோக்கின் குறைவுடையதாகும், ஏரி நீர் நிறைவைநோக்கி வாவி நீர் நிறைவு குறைவுடையதாதல் போல; பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம் ஒன்றே குறைவிலா நிறைவு என்க. `குறைவிலா நிறைவே கோதிலா அமுதே` `குறைவிலா நிறைவே குணக்குன்றே` என்ற ஆசிரிய வசனங்களும் அறிக. குணம் இல் குணம் - எண்குணத்தவன். முறை - சிவாகம விதிமுறை. முன்னெறி - சமயநெறி எல்லாவற்றிற்கும் முதன்மையுடைய சிவநெறி. நெறி என்பது அந்நெறியொழுகிப் பெறும் பேரின்பப்பயனை உணர்த்தும் ஆகுபெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஆனி லங்கிள ரைந்தும விர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங் கலக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.

பொழிப்புரை :

பசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம் பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக் கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார் திருவடி அடைதலே ஞானத்தின் பயனாவது என்பதை அறிந்து அவற்றை ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

ஆனில் அம் கிளர் ஐந்தும் - கோ (பசு) வினிடத்து உண்டாகிய பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்தும்; ஆயினும் முதன் மூன்றே சைவாசாரியர் கொண்டாடியன. `ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்.` மான் நில் அம்கை - மான் நிற்கும் அழகியகை. மான் நிலம் கை என்பதில் நடுமொழியீறு குறைந்ததெனினும் பொருந்தும். மானுக்கு இல்லமாகிய கையுமாம். ஊன் இல் வெள்தலை - தசையற்ற வெள்ளைத்தலை, பிரமகபாலம். உயர்பாதம் - திருவடி. இதில் திருவடிஞானம் ஒன்றே வீடுபேறளிக்கும் உண்மை உணர்த்தினார். முன்னர் `வெண்ணெய்ப் பெரு மானடி ஞானமாக நினைவார் வினையாயின நையுமே` என்றதும் அறிக. `அவனடி அவ்வொளி ஞானம்` அடி ஞானம் ஆன்மாவிற்றோன்றும்` இறைவனடி ஞானமே ஞானம் என்பர்` `ஆசான் அருளால் அடிசேர் ஞானம் வந்திடும் மற்றொன்றாலும் வாராதாகும்` (சித்தியார்.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங் கலக்குடி
கோனை நாடொறு மேத்திக் குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறு முய்யும் வகையதே.

பொழிப்புரை :

தேனும் அமுதமும் போல இனியவனும், தெளிந்த சிந்தையில் ஞானவெளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற் சூட வல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி, அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி அதுவேயாகும்.

குறிப்புரை :

தேனுமானான். அமுதும் ஆனான், தெளிந்த சிந்தை என இறந்தகாலப் பெயரெச்சமாக விரிக்க. தெளியாத சிந்தையுள் ஞானாகாசம் எய்தாது. வான் - ஞானவெளி. மதி - பிறை. கோன் - முதல்வன். கூறுவார் - தோத்திரஞ்செய்வார். ஊனமானவை - பிறவிக்கேதுவான மும்மல காரியங்கள். உய்யும்வகை - பாசம் நீங்கிச் சிவம் பிரகாசிக்கும் திறம். இஃது ஆன்மாக்கள் `உய்யுமாறு ஒன்று அருளிச்செய்` தது. இந்த `உய்வினை நாடாதிருப்பது ... ஊனம்`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வேள்ப டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரித் தான்மங் கலக்குடி
ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.

பொழிப்புரை :

மன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும் முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர். குற்றங்கள் இலராவர்.

குறிப்புரை :

வேள் - கருவேள், மன்மதன், படுத்திடுகண் - அழித்த நெற்றித் தீ விழி. கண்ணினன் - கண்ணுடையவன். வாள் - கொடுமை, வாட்படையுமாம். அரக்கர் - பிறர் தீமை செய்யாதிருப்பவும் தீங்கிழைப்பவர்.(அசுரர் - தீங்கிழைத்தவர்க்கு அது செய்பவர்). ஆளும் - ஆட்கொள்ளும். ஆதிப்பிரான் - முதற்கடவுள். அடிகள் - பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள். `யான்` `எனது` என்னும் இருசெருக்கும் அறுதலாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம், `பரை உயிரில்யான் எனதென்றறநின்றதடியாம்` (உண்மை நெறிவிளக்கம்)`யான் எனதென்றற்ற இடமே திருவடி`. ஏத்த - வழிபட, துதிக்க. எடுத்தல் என்பதன் மரூஉ. ஏத்தல் - இறைவன் புகழை எடுத்தோதுதல், எடுத்தலோசையே தோத்திரங்கட்கு உரியது. கோள் - கிரகங்கள். நாள் - மீன்கள். குற்றம் - ஆணவம் முதலிய முக்குற்றம்`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பொலியு மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங் கலக்குடிப்
புலியி னாடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.

பொழிப்புரை :

விளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன் புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள் முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன் திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப்பெறுவர். சிவலோகம் சேரவல்லவர் ஆவர். காண்மின்.

குறிப்புரை :

பொலியும் - விளங்கும். வரை - கயிலைமலை. வலி - பலம். வாளும் நாளும்:- வாட்படையும் ஆயுளும் அருளிய இவ்உண்மை பயின்று வருதல் காணலாம். புலியினாடையினான் - புலித்தோலுடை தரித்தவன். புண்ணியர் - சிவபுண்ணியத்தவர். மலியும் - இன்பம் மிகும். வானுலகம் - வீட்டுலகு. வல்லவர் - வன்மையுடையவர். காண்மின் என்றது ஆசிரியர் திருமுன் அந்நாளில் இருந்தவரை நோக்கி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஞால முன்படைத் தானளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாவெரி யான்மங் கலக்குடி
ஏல வார்குழ லாளொரு பாக மிடங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.

பொழிப்புரை :

உலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உருவானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகிய சிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக் குணமுடையவராக்கும்.

குறிப்புரை :

ஞாலம் - பூமி. நளிர் - குளிர்ச்சி, படைத்தானாகிய அயன் (பிரமன்). மாமலர் - தாமரை. எரியான் - தீப்பிழம்பானவன். ஏலம் - மயிர்ச்சாந்து. `ஏலவார் குழலாள்` என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. இது திருமுறையுட்பயின்றது. கோலம் - அழகு. குணத்தைக் கூறுங்கள். அதுவே குணமாகும். மற்றவை குணமாகா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங் கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற் கங்கை செறிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.

பொழிப்புரை :

அழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின் பொய்யுரைகளை விட்டுச் சைவசமய உண்மைகளை உணரும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச் செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன் சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.

குறிப்புரை :

மெய்யின் மாசு - உடலழுக்கு. சமணர் சாக்கியர் ஆகிய பரசமயத்தவர் பொய்யுரைகளை விட்டுச் சைவ உண்மையை உணர்ந்தொழுகுவோர் புண்ணியர். அத்தகையவர் சேர்ந்துறையும் புகழ்மங்கலக்குடிக்குள்ளது. செய்யமேனி - `சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம் மேனி எம்மான்` புனல் - வெள்ளம். ஐயன் - பரத்துவக் கடவுள். சேவடி - சிவந்த திருவடி. சிவஞானப் பிரகாசம். அழகு - பேரின்ப வாழ்வு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மந்த மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.

பொழிப்புரை :

தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த திரு மங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன், சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.

குறிப்புரை :

மந்தம் - தென்றல் (வீசுதல்). மன்னிய - நிலைபெற்ற. எழில் - அழகு. இத்திருப்பதிகம் திருவடியிற்சேர்க்க வல்லது, சிந்தை செய்தல் சேர்த்திடற்கும் ஏத்தற்கும் பொருந்துதலறிக, இமையோர் முதல் - தேவர் கோமகன்.
சிற்பி