கழறிற்றறிவார் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.

பொழிப்புரை :

திருமகள் வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பும், நிலையான பழமையுமுடைய மலைநாட்டில், பழந்தமிழ்ப் பாட்டுக்களில் விளங் கிய பல வகையான புகழையுடைய சேர மரபினரும், குடிகளும், தொன்று தொட்டுப் பயின்று வருகின்ற தன்மையுடைய பழைய பதியா வது, விடையூர்தியில் எழுந்தருளும் சிவபெருமானின் திருவஞ்சைக் களத்தில், நிலவப் பெற்றுச், சேர மரபின் மன்னர்கள் அரசு கட்டில் ஏறி, வழி வழி ஆட்சி செய்து வரும் பெரிய தலைநகரமானது கொடுங் கோளூர் ஆகும்.

குறிப்புரை :

சீலமும் கொடையும் மிக்கிருத்தலின், `மாவீற்றிருந்த ...... மலைநாடு\' என்றார். `அகனமர்ந்து செய்யாள் உறையும்\' (குறள், 84) என்னும் திருவாக்கினையும் நினைவு கூர்க. `உரையும் பாட்டும் உடையோர் சிலரே\' (புறம். 27) என்புழிப்போல, உரையும் பாட்டும் உடைய நாடுகளும் சிலவே. அவற்றுள் சேரநாடு ஒன்றாகும். பதிற்றுப் பத்தும், புறநானூறும், சிலம்பும் காண்க. கொடுங்கோளூர் - சேர மன் னர்களின் தலைநகரம். இதனொடு அஞ்சைக்களத்தையும் சேர்த்துக் கொடுங்கோளூர் அஞ்சைக்களம் என்று அழைப்பர். இது மகோதை என்றும் அழைக்கப்பெறும். தேவார வைப்புப் பதியாகும். சிவன் கோயிலும், கண்ணகி கோயிலும், பகவதி கோயிலும் உள்ளன.

பண் :

பாடல் எண் : 2

காலை யெழும்பல் கலையின்ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி
துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ
விளங்கி யோங்கும் வியப்பினதால்.

பொழிப்புரை :

அந்நகரமானது, காலையில் ஓதப்படும் மறை முதலான கலைகளின் ஒலியும், யானைக் கன்றுகளின் பிளிற்றொலி யும், பூஞ்சோலைகளினின்று எழும் வண்டுகள் பண்பாடும் ஒலியும், குதிரைகளின் செருக்கினால் மிகும் ஒலியும், பாலை, விபஞ்சி, யாழ் முதலியவற்றான் வரும் ஒலியும், பாடல் ஆடல்களுக்கு ஏற்ப இசைக் கப்படும் முழவு ஒலியும் ஆகிய ஒலிகள், அங்குக் கடலில் எழும் ஒலியையும் கீழ்ப்படுத்தி மேல் எழுந்து விளங்கும் வியப்பினது.

குறிப்புரை :

காலை எழும் பல கலையினொலி என்றார், அக்காலமே அவ்வக் கலைகளையும் பயிலுதற்குரிய காலமாதலின். துரகம் - குதிரை. சுலவும் ஒலி - சுழலும் ஒலி. பாலை, விபஞ்சி என்பன இசைக் கருவிகள்.

பண் :

பாடல் எண் : 3

மிக்க செல்வ மனைகள்தொறும்
விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும்
பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும்
சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்
அடங்க நிதியந் துவன்றுவன.

பொழிப்புரை :

அந்நகரத்தில், செல்வம் மிக்க வீடுகள் தோறும் விரும்பும் இல்லற இன்பங்கள் பொருந்தி விளங்குவன, அவற்றின் அருகில் விளங்கும் அறச்சாலைகள் தோறும் செய்யப்படும் நல்ல அறங்கள் பெருகுவன, தக்க அணிகளால் அழகூட்டிய திருமடங்கள் தோறும் சைவ சமயத்தின் மேன்மைப் பொருள்கள் எடுத்துக் கூறப்படுவன, தொகுதியாக சேர்ந்த வளங்களைத் தம்மிடம் கொண்ட இடங்கள் தோறும் நிறைந்த செல்வங்கள் விளங்குவன.

குறிப்புரை :

அறத்தால் பொருளாக்கி, அப்பொருளால் இன்பம் பெறுதல் இல்லற மாண்பதாதலின் `விழையும் இன்பம் விளங்குவன\' என்றார். எல்லா உயிர்களும் இன்பம் விழைதல் இயல்பாதலின் `விழையும் இன்பம்\' என்றார். சாலை - அறச்சாலைகள். சைவ மெய்ம்மை - இறை, உயிர், தளை பற்றிய சிந்தனைகளும், தளையை நீக்கி உயிர் இறையை அடையத் தகும் செயற்பாடுகள் பற்றிய சிந் தனைகளும் ஆம். `ஆய்வார் பதிபசுபாசங்களின் உண்மை ..... கமலை யில் ஞானப் பிரகாசன் மெய்த் தொண்டர்களே\' (சிவபோகசாரம்) எனவரும் குருஞானசம்பந்தர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 4

வேத நெறியின் முறைபிறழா
மிக்க ஒழுக்கந் தலைநின்ற
சாதி நான்கும் நிலைதழைக்கும்
தன்மைத் தாகித் தடமதில்சூழ்
சூத வகுள சரளநிரை
துதையுஞ் சோலை வளநகர்தான்
கோதை யரசர் மகோதையெனக்
குலவு பெயரும் உடைத்துலகில்.

பொழிப்புரை :

மறைகளில் விதித்துச் சொல்லப்பட்ட நெறிமுறை களினின்றும் வழுவாத மிக்க நல்லொழுக்கத்தில் சிறந்த நால்வகை மரபினரும், தத்தம் நிலைகளில் தழைத்துச் செழித்து விளங்கும் தன்மையுடையதாய், பெரிய மதில் சூழ்ந்ததாய், மாமரம், மகிழமரம், சரளமரம் முதலியவற்றின் வரிசை நெருங்கிய சோலைகள் சூழ்ந்த வளமையுடைதாய் விளங்கும் அந்நகரானது, உலகத்தில் `கோதை\' என்று அழைக்கப்படுகின்ற, சேர மன்னர் ஆளும் தலைநகரான `மகோதை\' என்ற பெயருடையது.

குறிப்புரை :

நாட்டின் நலம் கருதி, தாம் தாமும் செயத்தகும் கடமை களை வகுத்துக் கொண்ட நிலையில் வந்தனவே நால்வகை மரபுக ளும். அவைபற்றித் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்கள் பலவும் சொல்லுகின்றன. இவற்றால் உயர்வு தாழ்வு கருதி உருக் குலைந்தமை நம்மனோரின் போகூழே. சரளம் - நீண்ட இலைகளை யுடையது; தேவதாரு வகையுட்பட்டது. கோதை அரசர் - சேரமரபினர்.

பண் :

பாடல் எண் : 5

முருகு விரியும் மலர்ச்சோலை
மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி
அறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச்
சேரர் குலமும் உலகுஞ்செய்
பெருகு தவத்தால் அரனருளால்
பிறந்தார் பெருமாக் கோதையார்.

பொழிப்புரை :

மணம் கமழும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த பழமையான அந்நகரத்தில், அருகி அழிவு செய்யும் கலியை மரபு வழி வரும் ஒழுக்கத்தினால் நீக்கி, அறத்தை நாட்டும் சைவத் திறம் தழைத்து ஓங்குமாறு, மாறுபட்ட சினம் மிக்க யானைப் படையை யுடைய சேரர் குலமும் உலகமும் செய்த பெரிய தவத்தால், சிவனரு ளால் பெருமாக்கோதையார் என்பவர் தோன்றியருளினார்.

குறிப்புரை :

அருகுதல் - குறைதல். அழிதல் - இல்லையாதல்.

பண் :

பாடல் எண் : 6

திருமா நகரந் திருவவதா
ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல்
எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத்
தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த அப்பெரிய நகரத்தில் உள்ளவர் கள், பெருமாக் கோதையார் தோன்றலால் கொள்ளும் விழாவின் சிறப்பினால் வரும் பெருமகிழ்ச்சி மிக்கு, நெய்யாடல் விழாவைக் கொண்டாட, கற்பக மலர்கள் மழை எனப் பொழியும் வானத்தில், மிக நெருங்க ஒலிக்கும் மங்கல ஒலிகள் ஓங்கி முழங்கப் பெரிய இவ்வுகில் உள்ள உயிர்கள் எல்லாம் மேன்மேலும் பெருகும் மகிழ்ச்சி மீதூர்ந்து விளங்கின.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 7

மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.

பொழிப்புரை :

இம் மண்ணுலகத்தில் சைவநெறி வாழ வளர்ந்து, முன் செய்த தவத்தின் வழியே தொடர்ந்து வந்த அன்பினால், நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளையே பேணும் கருத்தை உடையவராகி, உள்ளத்தில் பொருந்திய அன்பு கொண்டவ ராய்த், தம் உரிமையான அரசாட்சியை மேற்கொள்ளாது, தெளிந்த கங்கை நீரைத் தரித்த சடையையுடைய இறைவரின் திருவஞ்சைக் களத்தில் திருத்தொண்டைச் செய்து வருவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 8

உலகின் இயல்பும் அரசியல்பும்
உறுதி யல்ல எனவுணர்வார்
புலரி யெழுந்து புனல்மூழ்கிப்
புனித வெண்ணீற் றினும்மூழ்கி
நிலவு திருநந் தனவனத்து
நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு
மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.

பொழிப்புரை :

`உலகியல் வாழ்வும் அரசியல் வாழ்வும் நிலையில் லாதவை\' என்று உணர்ந்து, வைகறையில் எழுந்து நீராடித் தூய்மை தரும் வெண்ணீற்றிலும் ஆடி, நிலைபெற்ற நந்தனவனத்திலே நீடும் திருப் பணிகள் பலவற்றையும் ஆற்றி, மலர்களையும் அரும்புகளையும் கொணர்ந்து மாலைகளைச் சாத்துவதற்கு மகிழ்ச்சியுடனே தொடுத்து,

குறிப்புரை :

புலரி - விடியற்காலம். மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியராய் விளங்குதல் பற்றிப் `புனித வெண்ணீற்றினும் மூழ்கி\' என்றார்.

பண் :

பாடல் எண் : 9

திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு
வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி
மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர
ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.

பொழிப்புரை :

திருமுழுக்கிற்குரிய நீரும் கொண்டு வந்து, திரு வலகும் இட்டுத் திருமெழுக்கும் பொருந்தவரும் அன்புடன் இன்பம் பொருந்த மெழுகி, மேலும் உள்ள திருப்பணிகளையும் பெருமை விளங்கச் செய்து அமைத்துப் போற்றும் விருப்பத்தினால் ஒருமையுற வரும் ஒழுக்கத்தின் உணர்வு வரத் திருப்பாடல்களையும் பாடிப், பணிந்து, இவ்வாறு ஒழுகி வருகின்ற நாள்களில்,

குறிப்புரை :

இவ்விரு பாடல்களால் புறவழிபாடாற்றி வரும் பாங்கு விளங்கும்.

பண் :

பாடல் எண் : 10

நீரில் மலிந்த கடல்அகழி
நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம்
அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற்
கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன்
தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.

பொழிப்புரை :

நீரால் நிறைந்த கடலைப்போன்ற அகழியும், நீண்ட பெரிய மலையைப் போன்ற கொடியையுடைய மதிலும் சூழ்ந்த சிறப்பு மிக்க அந்நகரத்தில், மேகத்தைவிட மிக்க கொடை நிழல் மேலும், வெண்கொற்றக் குடை நிழல் அதன் கீழுமாய் நிழற்றச் செங்கோல் பொறையன் என்ற பெயரையுடைய மாலை யணிந்த தோள்களை யுடைய சேர மன்னன், இவ்வுலகத்தை ஆள்கின்ற செயலை விடுத்துத் தவ ஒழுக்கத்தை மேற்கொண்டான்.

குறிப்புரை :

கடலும் மலையும் முறையே அகழிக்கும், மதிலுக்கும் உவமையாயின. சேர நாடு கடல்சூழ்ந்தும் மலைசூழ்ந்தும் விளங்க லின், அவையே அகழியும் மதிலுமாக விளங்கின என்றலும் ஒன்று. கொடைநிழல் மேலும், வெண்கொற்றக் குடையின் நிழல் கீழுமாய் நிழற்ற என்றது, கொடைத்திறனையும் ஆட்சித்திறனையும் விளக்கவாம். தரணி நீத்துத் தவம் சார்ந்தது, உலக ஆட்சியினும் உயிர் ஆட்சி சிறப்புடைமை பற்றியாம். உயிர்ஆட்சி பெறுதலாவது கட்டுநீங்கி வீடுபேறடைதலாம். இவ்வகையில் ஆட்பட்ட ஐயடிகள் காடவர் கோன் வரலாறும் ஈண்டு எண்ணத்தகும். `மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன் இனி என்னுயிர்க்குறுவதும் செய்ய எண்ணினேன்\' (கம்ப - அயோத். மந்திரம் 14) என்ற தசரதன் கூற்றும் காண்க. செங்கோல் பொறையன் - நம் சேர மன்னருக்கு முன் ஆட்சி புரிந்த அரசன். பெருஞ்சேரலிரும்பொறை இளஞ்சேரலிரும்பொறை என அம்மரபினர் பெயர் விளங்குதலும் காண்க. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 11

வந்த மரபின் அரசளிப்பான்
வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர்
சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத்
தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக்
களத்தில் அவர்பால் எய்தினார்.

பொழிப்புரை :

வழிவழியாகத் தொடர்ந்து வந்த மன்னர் மரபில் ஆட்சி செய்பவனான மன்னன், முன் சொன்ன வண்ணம் தவ வனத்தில் சாரும் தவநெறியை அடைந்த பின்னர், சிந்தை செய்யும் கூர்த்த அறிவுடையவராய்த் தாய உரிமை அறிவதற்கு உரிய நூல் களை ஆராய்ந்த அமைச்சர்கள், சில நாள்கள் ஆராய்ந்து தெளிந்த நிலையில், முந்தை மரபினால் சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவரான பெருமாக்கோதையாரிடம் அம்முதன்மை நின்றதாகப் பிறைசூடிய முடியையுடைய இறைவரின் திருவஞ்சைக்களத்தில் பணிசெய்துவரும் அவரிடம் சென்று அடைந்தனர்.

குறிப்புரை :

மதிநூல் தேர் அமைச்சர் - மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சர்கள். சோழ பாண்டியர்களின் ஆட்சி வழி, மகன் அவன் மகன் என வரும் முறைமையதாம். சேரரின் ஆட்சி வழி, ஆளும் அரசன், அவன் தங்கை மகன் என்ற முறையில் (மருமக்கள் தாயம்) வருவதாம். இந்நிலையில் இதுகாறும் ஆண்டு வந்த செங்கோற் பொறையனாரின் நேரிடையான தங்கையின் திருமகனாராக இவர் இருந்திருப்பின், அந்நாட்டு மரபுவழி அமைச்சர்கள் இத்துணை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டுவதில்லை. நம் மாக்கோதை யாரின் தாயார் செங்கோற் பொறையனாருக்கு ஒன்றுவிட்ட தங்கை போன்ற சிறிது சேய்மைப் பட்ட நிலையிலிருக்க, இவ்வாய்வு தேவைப் பட்டது போலும். இது மேலும் எண்ணத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 12

எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண்.

பொழிப்புரை :

பொய்மை தவிர்ந்த மெய்ம்மையுடைய அவ் வமைச்சர்கள் திருவஞ்சைக்களத்தைச் சேர்ந்து, பெருமாக்கோதை யார் திருமுன்பு வணங்கிப், `பெரிய குளிர்ந்த சாரலையுடைய மலை நாட்டின் மன்னர் மரபு, வழிவழிவரும் முறைமையினால், உரிமைச் செங்கோல் அரசு செலுத்துதற்குக் குற்றம் இல்லாத தூய மரபால் தங்களிடம் வந்தது!\' என்று கூறிய அளவில்,

குறிப்புரை :

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில், `பொய்ம்மையும் வாய்மை யிடத்த\' (குறள், 292) என்பர். அவ்வகையான் அமைந்த தன்றி, இவர் கூறும் வாய்மை, வாய்மையாகவே அமைந்தது என்பார் `பொய்தீர் வாய்மை\' என்றார்.

பண் :

பாடல் எண் : 13

இன்பம் பெருகுந் திருத்தொண்டுக்
கிடையூ றாக இவர்மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை
அரசு புரக்கும் அருளுண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை
இடைபெற் றறிவே னெனப்புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம்
செய்தார் முதல்வர் அருளினால்.

பொழிப்புரை :

`மேன்மேலும் இன்பம் பெருகுவதற்கு ஏதுவாகச் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறாக இவ்வமைச்சர்கள் உரைத்தனர்; சிவபெருமானிடத்துச் செலுத்திவரும் அன்பினின்றும் வழுவாத நிலைமையினால் அரசு செய்வதற்குத் திருவருள் கிட்டு மாயின், எலும்பும் பாம்பும் அணிந்த இறைவரைக் காலம் பார்த்து அவரின் திருவுள்ளத்தை அறிவேன்!\' என்று எண்ணிக் கோயிலுள் புகுந்து, திருமுன்பு வணங்கி, விண்ணப்பித்துக் கொண்டார். அது பொழுது இறைவரின் திருவருளினால்,

குறிப்புரை :

இடைபெற்று - காலம் அறிந்து : `இடைதெரிந்து நன் குணர்ந்து சொல்லுக\' (குறள்,712) எனவரும் திருக்குறளும் காண்க. `இடைதெரிந்து அருளல் வேண்டும்\' என ஆசிரியர் முன்மொழிந்துள் ளமையும் நினைவு கூரத்தகும். இறைவன் திருவுள்ளம் அறிந்து, ஏற்பன் என்றது, அவர்தம் பத்திமை மீதூர்வையும், கடன் இது என அறிந்த கடமையுணர்வையும் காட்டுகின்றன.

பண் :

பாடல் எண் : 14

மேவும் உரிமை அரசளித்தே
விரும்பு காதல் வழிபாடும்
யாவும் யாருங் கழறினவும்
அறியும் உணர்வும் ஈறில்லாத்
தாவில் விறலுந் தண்டாத
கொடையும் படைவா கனம்முதலாம்
காவல் மன்னர்க் குரியனவும்
எல்லாங் கைவந் துறப்பெற்றார்.

பொழிப்புரை :

பொருந்தும் உரிமையுடைய ஆட்சியை மேற்கொண்டவாறே, தாம் விரும்பியவாறு அன்பு மீதூரும் சிவபெருமானின் வழிபாடும், அஃறிணை, உயர்திணை என்ற இரு வகையுயிர்களும் கூறுவனவற்றையெல்லாம் அறியும் உணர்வும், அளவில்லாத வெற்றி யும் ஒப்பில்லாத தடையற்ற ஈகையும், படை ஊர்தி முதலான நாடு காவல் செய்யும் மன்னர்க்கு உரிய சூழல்களும் ஆகிய இவையெல்லாம் தம்மைச் சேர்ந்து பொருந்தும்படி அருள்பெற்றார்.

குறிப்புரை :

அரசனாவான் எவ்வுயிர்களையும் புரந்து வரும் கடப்பாடுடையன். ஆதலின் அவனுக்கு உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடின்றி அனைத்துயிர்களையும் காத்தற்கு அவ்வவற்றின் கருத் தறிதல் இன்றியமையாதாதலின், இறைவன் அக்கருத்தறியும் உணர் வையும் தந்தருளினான். இதனால் கழறிற்றறிவார் எனும் பெயரும் பெற்றார்.
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 15

ஆன அருள்கொண் டஞ்சலிசெய்
திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல்
ஊன மாகுந் திருத்தொண்டுக்
கெனினும் உடையா னருளாலே
மேன்மை மகுடந் தாங்குதற்கு
வேண்டும் அமைச்சர்க் குடன்படலும்
மான அமைச்சர் தாம்பணிந்துஅவ்
வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.

பொழிப்புரை :

இத்தகையவற்றைப் பெறலான இறையருளைக் கைக்கொண்டு, கும்பிட்டு வணங்கி, கோயிலினின்றும் புறப்பட்டு வெளியே வந்து, ஆட்சி செய்தல் சிவத்தொண்டுக்கு இடையூறு செய் வதே ஆயினும், இறைவரின் திருவருள் பெற்றதால் மேன்மையுடைய அரச முடியைத் தாங்குதற்கு விண்ணப்பித்து நின்ற அமைச்சர்களுக்குத் தம் இசைவைக் கூறலும், பெருமையுடைய அந்த அமைச்சர்கள், நாயனாரின் திருவடியில் வணங்கி, அதற்கு வேண்டிய செயல்களை மேற்கொள்ள மகிழ்வுடன் சென்றனர்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 16

உரிமை நாளில் ஓரைநலன்
எய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன
வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி
கவித்தார் எல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி
தாங்குங் கழறிற் றறிவார்தாம்.

பொழிப்புரை :

முடிசூட்டுதற்குரிய நாளில் ஓரையின் நலமும் பொருந்த, உரிய துணைப் பொருள்களையெல்லாம் சிறப்புடன் அமையுமாறு, அதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் விளங்க அமைத்து, உரிய நன்மை மிகுந்த செயற்பாடுகளைச் (சடங்குகளை) செய்து, உயர்திணை அஃறிணை ஆகிய எல்லா உயிர்களும் மகிழ் வதற்குக் காரணமான அறத்தின் தன்மையை அறிந்து, உலகை ஆளும் கழறிற்றறிவார், இம்மை வீடுபேறு எனும் ஈருலகிற்கும் பொருந்திய ஒரே முடியை அணிந்து கொண்டார்.

குறிப்புரை :

ஒருமைமுடி - உலகியலுணர்வோடு அருளியல் உணர் வும் ஒருங்கு கொண்டு ஆட்சிசெய்யும்.

பண் :

பாடல் எண் : 17

தம்பி ரானார் கோயில்வலங்
கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க
நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர்
வண்ணான் முன்னே வரக்கண்டார்.

பொழிப்புரை :

இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து நிலமுற வணங்கி எழுந்து, மத்தகத்தையுடைய யானைமேல், வெண் கொற்றக் குடையையும் சாமரையையும் விரும்புதற்குரிய உரிமையுடைய ஏவலர்கள் தாங்கி ஏற்றவாறு ஏவல் செய்துவரத், தம் நகரத்தை வலம் வருபவரான நாயனார், தோளில் உவர்மண் மூட்டையைச் சுமந்து கொண்டு, ஒரு வண்ணான் வருவதைப் பார்த்தார்.

குறிப்புரை :

நம்பும் - விரும்புதற்குரிய; `நம்பும் மேவும் நசையா கும்மே\'(தொல். உரி. 31) என்பது தொல்காப்பியம்.

பண் :

பாடல் எண் : 18

மழையிற் கரைந்தங் குவரூறி
மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார்
அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல்
யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால்
விரைந்து சென்று கைதொழுதார்.

பொழிப்புரை :

மழையால் உவர்மண் கரைந்து ஊறியதால் அவன் மேனி வெளுத்து இருந்த வடிவத்தால் `மானைக் கையில் உடைய சிவபெருமானின் அடியவர் திருக்கோலம் இது\' என்னும் உணர்ச்சி பெற்று, அணிகளில் சிறந்த பட்டத்தை அணிந்த யானையின் கழுத்தி னின்றும் இறங்கி, ஆசை மீதூர்ந்த காதலுடன் விரைவாய்ச் சென்று, அவ்வண்ணானைக் கைகூப்பி வணங்கினார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 19

சேரர் பெருமான் தொழக்கண்டு
சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட
தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர்
வருந்தா தேகும் எனமொழிந்தார்.

பொழிப்புரை :

சேரர் பெருமான் கைதொழக் கண்டு, அவ்வண் ணான் உள்ளம் கலங்கி, அவர் முன் தானும் வணங்கித் `தாங்கள் என்னை யாவர் என்று எண்ணி இவ்வாறு செய்தருளியது? அடியேன் தங்களின் அடிமைத்தொண்டு செய்யும் பணியாளனான வண்ணான் ஆவேன்!\' என்று சொல்ல, சேரர் பெருமானாகிய நாயனாரும், `அடியேன் அடிச் சேரன்\' என்று சொல்லித் திருநீற்றின் பொலிவுடைய இனிய அன்பிற்கிடமான திருவேடத்தினை அடியேனுக்கு நினைவூட் டினீர், ஆதலால் வருந்தாது செல்வீராக, என்று மொழிந்தருளினார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 20

மன்னர் பெருமான் திருத்தொண்டு
கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து
போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட
வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில்
புக்கார் புனைமங் கலம்பொலிய.

பொழிப்புரை :

மன்னரின் திருத்தொண்டைப் பார்த்து அறிவுடைய அமைச்சர் எல்லாரும் தலைமீது கைகூப்பி வணங்கிப் போற்ற, சினம் கொள்ளக்கூடிய பெரிய யானையின் மேல் ஏறி, ஒளிவீசும் மணிக ளால் ஆன கொடிகள் கட்டிய மாளிகைகள் நிறைந்த தெருக்களை யுடைய பழைய நகரத்தை வலமாக வந்து, புனையப்பட்ட மங்கலம் விளங்க, பொன் பூண்ட மணிகளையுடைய மாளிகையின் வாயிலில் புகுந்தார்.

குறிப்புரை :

மூதூர் - கொடுங்கோளூர்.

பண் :

பாடல் எண் : 21

யானை மிசைநின் றிழிந்தருளி
இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி
விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன்
பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற்
றிருந்தார் மன்னர் பெருமானார்.

பொழிப்புரை :

தாம் யானையின் மேலிருந்து இறங்கி, விளங்கும் மணிகளையுடைய மண்டபத்தில், மேன்மை மிகுந்த அரியணையின் மீது அமர்ந்தருளி, விளங்கும் வெண்கொற்றக் குடை நிழல் செய்ய, குவளை போன்ற விழிகளையுடைய நங்கையர் சாமரை வீச, மலர்கள் பலவும் தூவிப் பெருமையுடைய மன்னர்கள் போற்ற, மன்னர்க்கு மன்னரான நாயனார் வீற்றிருந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 22

உலகு புரக்கும் குடைவளவர்
உரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய்
நீதி மனுநூல் நெறிநடத்தி
அலகில் அரசர் திறைகொணர
அகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர
மறைகள் வளர மண்ணளிப்பார்.

பொழிப்புரை :

உலகைக் காக்கின்ற கொடையையுடைய சோழ மன்னரும், உரிமையுடைய பாண்டிய மன்னரும் என்ற இவருடனே கூட நிலவும் மூவேந்தர்களாகி, நீதியை மனுநூல் வழியே நடை பெறுமாறு செய்து, அளவில்லாத மன்னர்கள் திறை கொணர்ந்து செலுத்த, உள்ளும் புறமும் பகையை அறுத்து நீக்கி, விளங்கும் திரு நீற்று நெறி வளரவும், மறைகள் வளரவும் மண்ணுலகத்தைக் காப்பவ ரானார்.

குறிப்புரை :

முக்கோக்கள் - மூவேந்தர்: `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு\' (தொல். செய். 78) என்பர் தொல்காப்பியரும். அகப்பகை - உட்பகை: தம்மால் தம் பரிசனங்களால், கள்வரால், உயிர்கள் தம்மால் வருவது. புறப்பகை - எதிர்ந்த மன்னர்களால் வருவது. இனி அகப்பகை காமம், வெகுளி, மயக்கம் முதலியன என் றும், புறப்பகை அறிவுக் கருவிகளானும், தொழிற் கருவிகளானும் வரு வன என்றும் கூறுவாரும் உளர். இவற்றுள், முன்னையவை தம்மளவி லும், பின்னையவை நாட்டளவிலுமாகக் காக்கத் தக்கனவேயாம்.

பண் :

பாடல் எண் : 23

நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர் குலப்பெருமாள்.

பொழிப்புரை :

முக்கோக்கள் - மூவேந்தர்: `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு\' (தொல். செய். 78) என்பர் தொல்காப்பியரும். அகப்பகை - உட்பகை: தம்மால் தம் பரிசனங்களால், கள்வரால், உயிர்கள் தம்மால் வருவது. புறப்பகை - எதிர்ந்த மன்னர்களால் வருவது. இனி அகப்பகை காமம், வெகுளி, மயக்கம் முதலியன என் றும், புறப்பகை அறிவுக் கருவிகளானும், தொழிற் கருவிகளானும் வரு வன என்றும் கூறுவாரும் உளர். இவற்றுள், முன்னையவை தம்மளவி லும், பின்னையவை நாட்டளவிலுமாகக் காக்கத் தக்கனவேயாம்.

குறிப்புரை :

தமிழக மூவேந்தர்தம் ஆட்சி மிகத் தொன்மையானது. இதனை `வழங்குவதுஉள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று\' (குறள், 955) எனவரும் குறட் பாவிற்குப் பரிமேலழகர், தொன்று தொட்டு வருதல், சேர சோழ பாண்டியர் என் றாற் போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல் என உரைக்கும் உரையாலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 24

வாசத் திருமஞ் சனம்பள்ளித்
தாமஞ் சாந்த மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம்
முதலா யினவும் திருவமுதும்
ஈசற் கேற்ற பரிசினால்
அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர்
பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.

பொழிப்புரை :

நறுமணம் மிக்க திருமுழுக்கிற்கான நீரும், திருப்பள்ளித் தாமமும், சாந்தமும், அழகிய நறும் புகையும், ஒளி விளக்குகளும் முதலான பொருள்களும், திருவமுதும் அமைத்து, இறைவருக்கு வழிபாடாற்றும் வகைமையில் குன்றாது பூசனையாற்றி வர, நாளும் அவ்வழிபாட்டை விரும்பி எழுந்தருளி ஏற்றுவரும் பெருங் கூத்தரான இறைவரும், அழகான தம் திருவடிச் சிலம்பின் ஒலியை, அந்நாயனார் கேட்குமாறு அளித்தருளினார்.

குறிப்புரை :

சிவயோகிகளுக்குத் திருவருளுணர்வோடு ஒன்றி இருக்கும் நிலையில் திருச்சிலம்போசை கேட்டல் இயல்பேயாகும்.
`திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென்று உந்தீபற
நேர்பட அங்கே நின்று உந்தீபற\'
(திருவுந்தி - 17)
எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க. `வாத வூரினில் வந்தினிதருளிப் பாதச் சிலம் பொலி காட்டிய பண்பும்\' (தி.8 ப.2 வரி.52, 53) எனவரும் மணிவாசகரின் அநுபவக் கூற்றும் காண்க.

பண் :

பாடல் எண் : 25

நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற்
குரிய வேள்வி பலசெய்தார்.

பொழிப்புரை :

இறைவரின் திருவடிக்கண் செய்யும் வழிபாட்டால் நாள்தோறும் இன்பம் அடைந்து எழுந்தருளி இருப்பவரான நாய னார், இவ்வுலகத்தில் தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கும், வறியவர் களுக்கும், எல்லோருக்கும் வேண்டியவாறே கொடுக்கின்ற தன்மை யினால் செம்பொன்னை மழைபோல் பொழிந்து, திருந்தும் வெற்றியு டன் கூடித் தேவர் போற்றத் தம் இறைவர்க்குரிய வேள்விகள் பலவற் றையும் ஆற்றி வந்தார்.

குறிப்புரை :

`கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்\' என வரும் தொகைநூற் கூற்றை நினைவு கூர்ந்தவாறு அருளிய பாங்கு இதுவாம் `இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்\' (தி.4 ப.38 பா.10), `வேள்வி நற்பயன் வீழ்புனலாவது\' (தி.12 பு.28 பா.822) எனவரும் திருமுறைக் கூற்றுக்களை நினைவு கூருமாறு, இவர்தம் ஆட்சியமைந்திருப்பதைக் காணலாம். இவ்வாற்றான் கழறிற்றறிவார் தாமும் பிற உயிர்களும் பயன்பட வாழ்ந்தமை புலனாகும்.

பண் :

பாடல் எண் : 26

இன்ன வண்ணம் இவரொழுக
எழில்கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால
வாயில் இறைவர் வருமன்பால்
பன்னும் இசைப்பா டலிற்பரவும்
பாண னார்பத் திரனார்க்கு
நன்மை நீடு பெருஞ்செல்வம்
நல்க வேண்டி அருள்புரிவார்.

பொழிப்புரை :

இவ்வாறு இவர் ஒழுகிவரும் நாள்களில், அழகு வாய்ந்த பாண்டிய நாட்டில் நிலைபெற்ற மதுரையில் திருவாலவாய்த் கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவரான சிவபெருமான், மேன் மேலும் மிகுகின்ற அன்போடு இசைக்கின்ற இசைப் பாட்டுகளால் போற்றிவரும் பாணரான பத்திரனாருக்கு, நன்மை பொருந்திய பெருஞ்செல்வம் வழங்கத் திருவுள்ளம் பற்றுவார்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 27

இரவு கனவில் எழுந்தருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப்
பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண்
வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம்
தாழா தேகி வருகென்று.

பொழிப்புரை :

இரவில் அப் பாணபத்திரனாரின் கனவில் எழுந்த ருளி, `நம்மை எப்பொழுதும் போற்றிவரும் சேர மானுக்கு, பசுமை யான பொன்னும் காசும் பட்டாடையும் ஒளிக்கதிரையுடைய மணிகள் பதித்த அணிகளும் இன்னும் வேண்டிய எல்லாவற்றையும், குறைவில் லாமல் உனக்குத் தருமாறு, நாம் ஓலையைக் கொடுக் கின்றோம், காலம் தாழ்க்காமல் சென்று வருக!\' என்று,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 28

அதிர்கழல் உதியர் வேந்தற்
கருள்செய்த பெருமை யாலே
எதிரில்செல் வத்துக்கு ஏற்ற
இருநிதி கொடுக்க வென்று
மதிமலி புரிசை என்னும்
வாசகம் வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத்
திருமுகங் கொடுத்தார் காண.

பொழிப்புரை :

ஒலிக்கும் கழலை அணிந்த சேரமானுக்கு, அருள் செய்த பெருமையால், `ஒப்பில்லாத செல்வத்துக்கு ஏற்றவாறு பெருஞ் செல்வத்தைக் கொடுக்க!\' என்று அவன் காணும்படி, `மதிமலி புரிை\\u2970?\' எனத் தொடங்கும் வாய்மை பொருந்திய திருப்பாடலை ஒளி விரிந்த ஏட்டில் எழுதி அவ்வோலையை இறைவர் தந்தருளினார்.

குறிப்புரை :

இத்தொடக்கமுடைய திருப்பாடல் திருமுகப் பாசுரம் என அழைக்கப் பெறும். பதினொன்றாம் திருமுறையில் முதற் பதிகமாக வைத்துப் போற்றப் பெறுவதாகும்.
மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
(தி.11 ப.1 திருமுகப் பாசுரம்)
என்பது அவ்வரிய பாடல் ஆகும். திருவிளையாடற் புராணத்தில் இவ்வரலாறு சிறிது வேறுபட உள்ளது. இவ்வரிய திருமுகம் அருமையினும் அருமையானது. இன்றைய நிலையில் கடிதம் எழுதுவதில் அனுப்புநர், பெறுநர் செய்தி என அமைத்துக் கொண்டிருக்கும் பாங்கு இத்திருமுகத்தில் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய் அமைந்துள்ளது. 1 முதல் 4 அடிகள், அனுப்புநர் பற்றியன. 5 முதல் 8 அடிகள் பெறுநர் பற்றியன. 9 முதல் 12 அடிகள், பரிந்துரையாக அமைந்துள் ளன. நிறைவாக அமைந்துள்ள இப்பரிந்துரைச் செய்தியில் 9ஆவது அடி, பாணபத்திரர் பற்றிய அறிமுகம்; 10ஆவது அடி, அப்பத்திரர் யார் என்பது பற்றிய குறிப்பு; 11ஆவது அடி, பொதுவாக உலகியலில் கூறு வது போல `நின்னைக் காண்பது கருதிப் போந்தனன்\' என்ற குறிப்பு; 12ஆவது அடியில் பாணபத்திரரை அனுப்புதற்குரிய காரணம். இத்தகைய பரிந்துரை நம் தமிழ் இலக்கிய உலகிலேயே ஈதொன்றே யாம். இவ்வகையில் `அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்\' எனப் பெருமான் அருளியிருக்கும் பரிந்துரை பிறிதொன்றாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 29

சங்கப் புலவர் திருமுகத்தைத்
தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு
மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர்
தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன்
வந்து மன்னர்க் கறிவித்தார்.

பொழிப்புரை :

சங்கப் புலவரின் தலைவரான சோமசுந்தரக் கடவுள் அளித்த திருமுகத்தைத் தலைமீது தாங்கிக் கொண்டு, பாணபத்திரர், அங்கிருந்து அப்பொழுதே புறப்பட்டுச் சென்று, மலை நாட்டை அடைந்து, உயர்ந்த மதிலையுடைய கொடுங்கோளூரில் புகுந்து, நெருங்கிய கொடிகள் மேகங்களைத் தொடுமாறு உயர்ந்துள்ள அரண்மனை முன்வந்து, மன்னருக்கு அங்கிருந்த ஏவலர்வழி தமது வருகையை அறிவித்துக் கொண்டார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 30

கேட்ட பொழுதே கைதலைமேல்
கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழிநீர் வழிந்திழிய
எழுந்து நடுக்கம் மிகவெய்தி
ஓட்டத் தம்பொன் மாளிகையின்
புறத்தி லுருகுஞ் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார்
பாதம் பலகாற் பணிகின்றார்.

பொழிப்புரை :

அவரின் வருகையைக் கேட்ட அளவில், கைகளைத் தலைமேல் கூப்பி, மீதூர்ந்த அன்பினால், கண்களினின்றும் நீர் வழிந்து பெருக, எழுந்து நடுங்கி, உருக்கி ஓடவிட்ட பொன்மாளிகையின் புறத்தே போந்து, உருகும் உள்ளத்துடன், பாட்டின் தவைரான பாண பத்திரரின் திருவடிகளைப் பலமுறையும் வணங்குபவர்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 31

அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.

பொழிப்புரை :

`அடியேனையும் ஒரு பொருளாகக் கொண்டு திருமுகத்தைக் கொண்டு இங்கு அணைந்தது என்னே\' என்று சொல்ல, அப் பாணபத்திரரும் விடைக் கொடியையுடைய சிவபெருமானின் `திருமுகத்தை\' அவரது கையில் தந்து வணங்கவும், மன்னரும் அத் திருமுகத்தைப் பெற்றுத், தம் முடிமீது கொண்டு, ஆனந்தக் கூத்தாடிச் சொல் தடுமாறிக், கண்களினின்றும் பொழியும் ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருநீறு பூசிய மார்பில் வார்ந்து பரவி விழ, நிலத்தில் பல முறையும் வீழ்ந்து எழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 32

பரிவில் போற்றித் திருமுகத்தைப்
பலகால் தொழுது படியெடுக்க
உரிய வகையா லெடுத்தோதி
யும்பர் பெருமா னருள்போற்றி
விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு
மேவும் உரிமைச் சுற்றமெலாம்
பெரிது விரைவிற் கொடுபோந்து
பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.

பொழிப்புரை :

அன்பினால் போற்றி, திருமுகத்தைப் பலமுறையும் வணங்கி, அதன் சுருளை நீக்கி எடுப்பதற்குரிய வகையினால் எடுத்து, விரித்துப் படித்து, இறைவரின் திருவருளை வழுத்தி, ஒளிவீசும் பொன் மாளிகையுள் புகுந்து, தம் உரிமைச் சுற்றத்தார் எல்லோரையும் விரை வில் கொண்டு சார்ந்து நாடு காக்கும் அமைச்சருக்கு அருளிச் செய் வாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 33

நங்கள் குலமா ளிகையதனுள்
நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு
வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமே
அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற்
சமைய வேற்றிக் கொணருமென.

பொழிப்புரை :

`நம் மாளிகையினுள் நன்மை யுடைய செல்வக் குவியல்களாய் மேன்மேல் வளர்ந்து நிறைந்த பலவேறு வகைகளில் விளங்கிய களஞ்சியத்துள் ஒன்றும் எஞ்சாதவாறு எடுத்துத் தக்கவாறு அமைத்துக் கட்டி, தக்க பணியாட்களின் வழி எடுத்துக் கொண்டு வாருங்கள்!\' என்று,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 34

சேரர் பெருமான் அருள்செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால்
தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த
வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள்.

பொழிப்புரை :

சேரர் பெருமானார் ஆணையிட, திருந்திய அறிவும் நூலறிவும் கொண்ட அமைச்சர்கள், அழகிய மாளிகையில் உள்ள செல்வங்கள் எல்லாவற்றாலும் நிறைந்த பெருஞ்சிறப்புடைய அள வில்லாத நிதியங்களை எல்லாம் பாதுகாப்பாகக் கட்டி, தக்க ஆள்கள்வழி, நிலம் நெருங்க ஏற்றிக்கொண்டு தம் மன்னரிடம் வந்து வணங்கினர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 35

பரந்த நிதியின் பரப்பெல்லாம்
பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு
நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள்
முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென
மொழிந்தார் பொறையர் புரவலனார்.

பொழிப்புரை :

வெவ்வேறு வகையாய்ப் பெருகிய செல்வப் பரப்பையெல்லாம் பாணபத்திரருக்கு நிரல்படக் காட்டி, `இவற்றையும், மற்றும் வன்மை பொருந்திய கொடிய யானைகள் குதிரைகள் முதலான உயிர்ச் செல்வங்களையும், அடியேன் காவல் செய்யும் ஆட்சியினை யும் கொள்ளுங்கள்!\' என்று சேரர் பெருமானார் உரைத்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 36

பாண னார்பத் திரனாரும்
பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம்
கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன
அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும்
கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.

பொழிப்புரை :

பாணபத்திரரும், பசுமையான பொன்முடி சூடிய சேரமானார் முன் சொன்னவாறு தாம் காணும்படி காட்டித் தந்த நிதிகள் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்து, வியந்து, `எனக்குப் பேணுதற்கு வேண்டியவற்றை மட்டும் யான் கைக்கொள்ள, அரசாட்சியும் அதற்குரிய அரசுறுப்புக்களையும் நீங்களே கைக்கொள்ளுங்கள், இஃது இறைவரின் ஆணை!\' எனக் கூறி வணங்க,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 37

இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.

பொழிப்புரை :

வலிமைமிக்க மன்னரான சேரர், இறைவரின் ஆணையை மறுப்பதற்கு அஞ்சி, அதற்கு இசைந்தனர், நிறைவான செல்வப் பெருக்கங்களையெல்லாம் நிலம் நெளியும்படி உடனே கொண்டு, துளிக்கின்ற மும்மதங்களையுடைய யானை, குதிரை உள்ளிட்டவற்றுள்ளும் வேண்டுவனவற்றைக் கைக்கொண்டு, பாணபத்திரர் தாம் ஒரு வெண்மையான பிறை போன்ற கொம்பை யுடைய யானையின் மீது ஏறிச் சென்றார்.

குறிப்புரை :

இகல் - வலிமை : படை, குடி முதலிய அறுவகை யானும், அருள் வயத்தானும் பெற்ற வலிமை. நிலம் நெளிய - பொருள் மிகுதியைத் தாங்கற் கருமையின் நிலமும் நெளிய: (சிலம்பு - புகார்க் மங்கல. 36 -39) மண் தேய்த்த புகழினான் என்புழிப்போல. சேரர் தம் மளவில் அனைத்துப் பொருள்களைக் கொடுப்பினும், பாணபத்திரர் தம்மளவிற்கு வேண்டுவனவற்றையே கொண்டது, இருவர்தம் உள்ளப் பண்பை காட்டுகின்றது.

பண் :

பாடல் எண் : 38

பண்பு பெருகும் பெருமாளும்
பாண னார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதல்நீர்
வழியக் கையால் தொழுதணைய
நண்பு சிறக்கு மவர் தம்மை
நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை
புக்கார் திருந்தும் இசைப்பாணர்.

பொழிப்புரை :

அடிமைத் திறத்தின் பண்புமீதூர ஒழுகும் சேரமான் பெருமாளும், பாணபத்திரர் பின்னே மார்பாரப் பொழிகண்ணீர் மழை வாரும் திருவடிவுடன் கைகளைக் கூப்பித் தொழுத வண்ணமே வர, நட்பில் சிறந்த அவரும், நகரின் புறம் போதர விடை பெற்றுக் கொண்டு, திருந்தும் இசையுடைய பாணபத்திரர், திண்மையான பொன்மதில் சூழ்ந்த மதுரை நகரத்தின் உள்ளே புகுந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 39

வான வரம்பர் குலம்பெருக்கும்
மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை
நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண்
டபத்துள் அரசு வீற்றிருந்தார்.

பொழிப்புரை :

சேரர் குலத்தை விளங்கச் செய்யும் மன்னரான நாயனாரும் திரும்பச் சென்று, வளைந்த இளைய பிறையான கண் ணியை முடித்த சிவபெருமான், அடியவர்களை ஆட்கொண்டு அரு ளும் திறத்தின் அருட்பெருமையை நினைந்து நினைந்து பன்முறையும் வணங்கிப், போற்றி, மேன்மையுடன் விளங்கும் தம் மாளிகையின் அரசவையில் வீற்றிருந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 40

அளவில் பெருமை அகிலயோ
னிகளும் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர்கள்
ஒன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகள் முதலான
கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன்செழியர்
மகிழும் கலப்பில் வைகு நாள்.

பொழிப்புரை :

அளவற்ற பெருமையையுடைய பிறப்பு வகைகள் அனைத்திலும் தோன்றிய உயிர்கள் யாவும் பேசுவனவற்றையெல் லாம் அறிந்து, அவற்றின் உள்ளத்தில் உள்ள துன்பங்களை முழுமை யாக நீக்கிக், களவு கொலை முதலான தீமைகளை விலக்கி கழறிற்றறி வாரான இப்பேரரசர், சோழ மன்னருடன் பாண்டிய மன்னரும் கூடி மகிழ்கின்ற வகையில் மனமியைந்து மகிழ்ந்து வாழும் நாள்களில்,

குறிப்புரை :

பிறப்பு வகைகள் அனைத்தின் கருத்தையும் அறியும் அரிய வாய்ப்பு இவருக்குத் திருவருளால் கிடைத்ததாகும். ஆதலின் ஓரறிவுயிர்களும் உவப்ப ஆட்சி செய்யும் பேறு இவருக்கு அமைவ தாயிற்று. மன்னுயிர் ஓம்பி அருளாளும் ஆட்சியே ஆட்சியாம். மூவேந்தர்களும் தம்முள் பகைமையின்றி வாழ்ந்து வருமாற்றையும் கூறினார், அந்நிலை அரிதாதல் நோக்கி. `இன்றே போல்க நும் புணர்ச்சி\' என்றதும் இது பற்றியேயாம்.

பண் :

பாடல் எண் : 41

வானக் கங்கை நதிபொதிந்த
மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம்
தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார்
ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளா தொழிய மதிமயங்கி.

பொழிப்புரை :

இவ்வருளாட்சியோ, வானின்றிழிந்த கங்கையாற் றைத் தாங்கிய சடையையுடைய இறைவரின் வழிபாடான தூய நல்ல சிறந்த பூசனையான திருத்தொண்டையும் நாளும் செய்து வருபவரான அந்நாயனாருக்கு ஒருநாள், தேன் சிந்துமாறு மலர்ந்த கொன்றை மாலையைச் சூடிய சிவபெருமானின் ஆடற் சிலம்பின் ஒலியானது, பெருமையுடைய பூசையின் முடிவில் முன்போன்று கேளாது ஒழிய, மனம் கலங்கி,

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 42

பூசை கடிது முடித்தடியேன்
என்னோ பிழைத்த தெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினிவே
றடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை
யுருவித் திருமார் பினில்நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்
ஒசை மிகவும் இசைப்பித்தார்.

பொழிப்புரை :

: பூசையை விரைந்து முடித்து, `அடியேன் என்ன பிழை செய்தேனோ?\' என்று அழுது, விருப்புற்றுத் தாங்கும் இவ் வுடம்பினால் இனி அடையும் இன்பம் வேறு யாதுளது எனத் துணிந்து, ஒளியுடன் விளங்கும் உடைவாளை எடுத்துத் தம் மார்பிலே பாய்ச்ச முனைந்த போது இறைவர் விரைவுடன் திருச்சிலம்பின் ஒலியை மிகுதியாக ஒலிக்குமாறு செய்தார்.

குறிப்புரை :

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே, தான் அடைந்த உறுதியைச் சார்தல் வேண்டும். அந்நிலைவாயாதாயின் உடம்பின் பயன் தான் யாது? ஒன்றுமில்லை. இக்கருத்தால் தம் உடலைத் துறக்கத் துணிந்தார் இவ்வரிய பேரரசர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 43

ஆடல் சிலம்பின் ஒலிகேளா
வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக்
கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார்
நெடுமால் பிரமன் அருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன்
செய்யா தொழிந்த தென்னென்றார்.

பொழிப்புரை :

திருக்கூத்தின் சிலம்பு ஒலியைக் கேட்டு, உடைவாளை அகற்றி, அழகிய கைம்மலர்களைச் சேரத் தலைமீது குவித்து நிலத்தில் விழுந்து, தொழுது, எழுந்து, பரவிப் போற்றி, `நெடிய திருமாலும் நான்முகனும் அரிய மறைகளும் முன்பு தேடுதற்கு அரிய பெருமானே! முன்னமேயே அடியேற்குத் திருவருள் செய்யாது ஒழிந்த காரணம் யாது?\' என வினவினார்.

குறிப்புரை :

காரணம் வினவியது, தம்பிழையறிந்து அதனை நீக்கிக் கொள்ளவாம்.

பண் :

பாடல் எண் : 44

என்ற பொழுதில் இறைவர்தாம்
எதிர்நின் றருளா தெழுமொலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்
வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வால் நமைப்போற்றி
யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.

பொழிப்புரை :

இங்ஙனம் சேரமான் பெருமாள் வினவ, இறைவர் தாம் நேரே தம் வடிவைக் காணக் காட்டியருளாது, வானொலி வழியே, `தில்லையில், நம் ஆனந்தக் கூத்தை வன்றொண்டனாய சுந்தரன் வணங்கி, நம்மிடம் ஒன்றிய உணர்வால், நம்மைப் போற்றி செய்து வணங்கி, உரை சேரும் பதிகத்தைப் பாடிட, அதனை நின்று கேட்டதால், இங்கு வருதற்குக் காலம் தாழ்த்தினோம்!\' என்று, இவ் வருள் வழி அவரை இவருக்கு நினைவூட்டுவராய்க் கூறி அருள் செய்தார்.

குறிப்புரை :

உயிர்கள் தாம் தாமும் உள்ளவிடத்தேயுள்ள நிகழ்ச்சிக ளையே அறியத்தக்கன. இறைவனோ அன்ன தன்மையினல்லன். யாண்டும் நீக்கமற நிற்பவன். எனவே ஒரு காலத்திலேயே அவ்வவ் விடத்தும் உள்ள உயிர்களை உய்யக் கொள்வன். அன்னோனுக்கு ஆரூரர்தம் பாடலைக் கேட்டு மகிழும் பொழுதே, கழறிற்றறிவாருக்கும் கழற்சிலம்பொலியைக் கேட்பிக்க இயலும். அங்ஙனமாகவும் அப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தமையின், கழற்சிலம் பொலி கேட்பிக்கக் காலம் தாழ்த்தது என்றது, கழறிற்றறிவாருக்கு ஆரூரரை நினைவுகூரச் செய்து, அதன்வழி அவ்விருவர்தம் நட்பும் சால்பும் பெருகவாம் எனத் திருவருள் திறத்திற்குக் காரணம் கூறியது, ஆசிரியர் சேக்கிழார் தாம்பெற்ற அருள் நலத்தாலேயேயாம்.

பண் :

பாடல் எண் : 45

என்னே அடியார்க் கிவரருளும்
கருணை யிருந்த வாறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய்
புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர்
தமையுங் காண்பன் எனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார்
நாமச் சேரர் கோமானார்.

பொழிப்புரை :

`இறைவர் அடியார்க்கு அருளும் திறம் இருந்தவா றென்னே!\' என்று போற்றிப், `பொன் போன்ற சடையையுடைய பெரு மான் கூத்தியற்றுகின்ற பெரும்பற்றப் புலியூருக்குச் சென்று பொன்னம் பலத்தை வணங்கித், தமக்கு எவரும் ஒப்பில்லாதவரான ஆரூரரையும் கண்டு வணங்குவேன்!\' என்ற விருப்பம் கொண்டு, நல்ல நீர்நாடு எனப்படும் சோழ நாட்டிற்கு எழுந்தருளப் பெருமையுடைய சேர அரசர் திருவுளம் கொண்டார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 46

பொன்னார் மௌலிச் சேரலனார்
போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம்
எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர்
வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந்
தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.

பொழிப்புரை :

பொன்முடியைச் சூடிய சேரமான்பெருமாள் நாயனார், தத்தம் கடமையைப் பெரிதும் போற்றிச் செய்துவரும் அமைச்சர்களுக்குத் தம் விருப்பத்தைச் சொல்லி, நன்னாளில் செலவு மேற்கொள்ள வேண்டும் என, ஒளியுடைய கூர்மையான வேலை ஏந்திய வீரர்களும், வெற்றியுடைய வில் வீரர்களும், மற்றும் அந்நாட் டில் உள்ளவர்களும் நெருங்க வஞ்சியின் அகநகரத்திலே கூடினர்.

குறிப்புரை :

வஞ்சி - கொடுங்கோளூர். வஞ்சியை இந்நகராக ஆசிரி யர் கருதுகிறார். கருவூராகக் கொண்டு ஆய்வு செய்வாருமுளர்.

பண் :

பாடல் எண் : 47

இட்ட நன்னாள் ஓரையினில்
இறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார்
தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப்
பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர்
கடந்தார் உதியர் தோன்றலார்.

பொழிப்புரை :

நாளும் ஓரையும் தமக்கு ஏற்பக் கொண்டு செல்லும் நன்னாளில், திருவஞ்சைக் களத்தில் வீற்றிருக்கின்ற மணங் கமழும் கொன்றை மலர்களைச் சூடிய பெருமானாரை வலம் கொண்டு போற்றி, நெற்றிப் பட்டத்தை அணிந்த யானையின் பிடரியில் ஏறி, குளிர்ந்த சந்திரனைத் தீண்டும் கொடிகளையுடைய மாளிகைகள் நிறைந்த பழம்பெரும் நகரான கொடுங்கோளூரைக் சேரமான் கடந்து சென்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 48

யானை யணிகள் பரந்துவழி
யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த
மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து
செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ
போலுங் காட்சி மேவின தால்.

பொழிப்புரை :

யானைகளின் அணிகள் பரவி வழியெங்கும் செல் வன, பெரிய மலைநாட்டில் மலிந்த பொருளாகிய மலைகள் தம் மன்னருடனே செல்வனபோல் விளங்கின. படைவீரர்கள் இரு மருங் கும் பரந்து செல்லும் நிலை, அந்நாட்டில் அம்மலைகளைச் சூழ்ந்த காடுகள் எல்லாம் உடன் செல்வன போன்ற காட்சியை அளித்தது.

குறிப்புரை :

யானைகள் மலை எனக் காட்சியளித்தது. படைவீரர்கள் காடெனக் காட்சியளித்தனர். உயர்வும் அகலமும் குறித்தவாறு. அடைய - முழுமையாக. ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 49

புரவித் திரள்கள் ஆயோகப்
பொலிவி னசைவிற் போதுவன
அரவச் சேனைக் கடற்றரங்க
மடுத்து மேன்மே லடர்வனபோல்
விரவிப் பரந்து சென்றனவான்
மிசையு மவலு மொன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ்சேனை
நேமி நெளியச் சென்றனவால்.

பொழிப்புரை :

குதிரையணிகள் கரையில் சேரும் அலை என அசைவுடன் செல்பவை, ஒலிக்கும் படையான கடலின் அலைகள் மேன் மேல் உயர்ந்து தாக்குவனபோல் பொருந்திப் பரந்து சென்றன. வானளாவிய மேடும் பள்ளமும் ஒன்றாய் அங்ஙனம் நிரல்படப் பரவிய பெரும்படை பூமி நெளியுமாறு சென்றது.

குறிப்புரை :

அலைகள் அசைவுடனும் மேன்மேலும் பெருகியும் வரும் இயல்பின. குதிரைத் திரள்களின் செலவும் அன்னதாகலின் அவற்றின் செலவிற்கு உவமையாயின. மிசை - மேடு; அவல் - பள்ளம். `அவலா கொன்றோ மிசையா கொன்றோ\'(புறம் -187) என வருவதும் காண்க. இக்குதிரைச் செலவு, அடர்ந்தும் தொடர்ந்தும் இருத்தலின் மண்ணகம் நெளிவதாயிற்று. மேடு பள்ளமும் தெரியா வாயின. `அவல என்னாள் அவலித்து இழிதலின், மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின்\' எனவரும் சிலம்பும் காண்க. ஆயோகம் - கரை. நேமி - உலகு.

பண் :

பாடல் எண் : 50

அந்நாட் டெல்லை கடந்தணைய
அமைச்சர்க் கெல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார்
வேண்டு வாரை யுடன்கொண்டு
கொன்னார் அயில்வேல் மறவர்பயில்
கொங்கு நாடு கடந்தருளிப்
பொன்னாட் டவரும் அணைந்தாடும்
பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.

பொழிப்புரை :

அம்மலை நாட்டின் எல்லையைக் கடந்த அளவில், தம் அமைச்சர்களுக் கெல்லாம் விடை தந்தருளி, ஒளியுடைய மணி களை அணிந்த சேரர்பெருமான் தம் வழிச்செலவிற்கு உதவும் பணி யாளர்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு, அச்சமூட்டும் கூர்மையான வேல் ஏந்திய மறவர்கள் வாழும் கொங்கு நாட்டைக் கடந்து சென்று, விண்ணவரும் வந்து படிந்து ஆடும் காவிரியின் வளத்தையுடைய சோழநாட்டிடைச் செல்வாராய்,

குறிப்புரை :

கொங்கு நாடு - இக்காலத்தே கோயம்புத்தூர் மாவட்டம், சேலம், ஈரோடு மாவட்டங்களில் சிற்சில பகுதிகளும் சேர்ந்து விளங்கும் பகுதி. கொங்கர் என அழைக்கப்பெறும் சிற்றரசர்களின் மரபினர் ஆண்டுவந்தமையின் இப்பகுதி கொங்கு நாடு எனப் பெயர் பெறுவதாயிற்று. இவர்கள் சோழ, பாண்டிய, சேரப் பேரரசர்களுக்கு ஓரொருகால் அடங்கியும் ஆட்சிபுரிந்தனர்; தனித்தும் ஆட்சி புரிந் தனர். இந்நாட்டில் வாழ்வோர் வலிமை மிகுதியால் வன்கண்மை புரியும் இயல்பினராயிருந்தனர். வழிச் செல்வோரைத் துன்புறுத்திப் பொருள் கொண்டனர். `கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் \' (தி.7 ப.49 பா.1), `கொங்கே புகினும் கூறை கொண்டு அலைப்பார் இலை\' (தி.7 ப.92-3) எனவரும் நம்பிகள் திருவாக்காலும் இவ்வுண்மை அறியப்படும். ஆனால் இந்நிலை இது பொழுது யாண்டும் நீக்கமற நிற்பதும், கொங்குப் பகுதியில் உள்ளார் பலரும் அன்பும் பண்பும் உடையராய்த் திருவருள் நாட்டம் உடையராய்த் திகழ்வதும் இக்கால உண்மையாகும்.

பண் :

பாடல் எண் : 51

சென்ற திசையில் சிவனடியார்
சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர்
இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந்
துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார்.

பொழிப்புரை :

தாம் செல்லும் இடத்திலெல்லாம் சிவனடியார்கள் எதிர்கொண்டு வரவேற்க, குன்றுகளையும் காடுகளையும் தத்தம் இடமாகக் கொண்டு ஆளுகின்ற குறுநில மன்னர்கள் தத்தம் இடங் களில் அவருக்கு வேண்டும் பொருள்களைத் தந்துதவப் பருக்கைகள் நெருங்கிய பாலை நிலங்களும் காட்டாறுகளும் துன்பம் தரும் கற்கள் பொருந்திய வழிகளும் என்னும் இவை பலவற்றையும் கடந்து சென்று, வெற்றி பொருந்திய விடையையுடைய இறைவர் வெளிப்பட எழுந்த ருளிய இடங்கள் பலவற்றையும் சென்று வணங்கிச் செல்வாராய்,

குறிப்புரை :

துன்று முரம்பு - செறிந்த பாலை. துறுகல் சுரம் பரற்கற்கள் செறிந்த பாலை நிலம்.

பண் :

பாடல் எண் : 52

பொருவில் பொன்னித் திருநதியின்
கரைவந் தெய்திப் புனிதநீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி
மருங்கு வடபாற் கரையேறித்
திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச்
செம்பொன் மன்றுள் நடம்போற்ற
உருகி மனத்தி னுடன்சென்றார்
ஒழியா அன்பின் வழிவந்தார்.

பொழிப்புரை :

ஒப்பில்லாத காவிரி ஆற்றின் தென்கரையில் வந்து, வடகரையில் ஏறித், தூய நீர் பொருந்திய அந்நீரில் நீராடி மகிழ்ந்து, நீங்காத அன்பின் வழிவந்த அந்நாயனார், பெரும்பற்றப் புலியூரில் பொன்னம்பலத்தில் ஆடும் திருக்கூத்தைப் போற்றும் பொருட்டு, உருகும் உள்ளத்துடன் சென்றார். கு-ரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 53

வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.

பொழிப்புரை :

வந்து தில்லைமூதூரின் எல்லையைச் சேர்ந்து, வணங்கி, மகிழ்ச்சிமிக எதிர்கொள்ளும் பொருட்டுத் தில்லைவாழ் அந்தணர்களும் திருத்தொண்டர் கூட்டங்களும் வந்து சேர, அவர்க ளைத் தாம் எதிர் வணங்கி, நகரத்துள் புகுந்து, அழகிய மணமுடைய மலர்களால் அழகுபடுத்தப்பட்ட திருவீதியை வணங்கித், தலையின் மீது கைகள் குவிய, மனம் மகிழ, எழுநிலைக் கோபுரத்தைச் சென் றடைந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 54

நிலவும் பெருமை எழுநிலைக்கோ
புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப்
புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம்
பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று
ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.

பொழிப்புரை :

பொருந்திய பெருமையுடைய எழுநிலைக் கோபு ரத்தை முன்னர் நிலத்தில் விழுந்து வணங்கி, மலர்கின்ற கண்களில் நீர்த்துளிகள் பெருக, உட்புகுந்து, மாளிகையை வலமாகச் சுற்றிவந்து, உலகத்தை விளக்கம் செய்கின்ற பேரம்பலத்தை வணங்கி, அளவில் லாத அண்டங்களை எல்லாம் அளித்த கூத்தப்பிரான் நின்று அற்புதக் கூத்தாடுகின்ற சிற்றம்பலத்தின் முன், சேரமான் உள்ளே அணைந்தார்.

குறிப்புரை :

பொருந்திய பெருமையுடைய எழுநிலைக் கோபு ரத்தை முன்னர் நிலத்தில் விழுந்து வணங்கி, மலர்கின்ற கண்களில் நீர்த்துளிகள் பெருக, உட்புகுந்து, மாளிகையை வலமாகச் சுற்றிவந்து, உலகத்தை விளக்கம் செய்கின்ற பேரம்பலத்தை வணங்கி, அளவில் லாத அண்டங்களை எல்லாம் அளித்த கூத்தப்பிரான் நின்று அற்புதக் கூத்தாடுகின்ற சிற்றம்பலத்தின் முன், சேரமான் உள்ளே அணைந்தார்.

பண் :

பாடல் எண் : 55

அளவில் இன்பப் பெருங்கூத்தர்
ஆட எடுத்த கழல்காட்ட
உளமும் புலமும் ஒருவழிச்சென்று
உருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு
தன்றி மன்றிற் கழல்வைத்
வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு
அளித்த கருணை வழுத்தினார்.

பொழிப்புரை :

அளவில்லாத இன்பத்தை வழங்குகின்ற பெருங் கூத்தர் ஆடுதற்குத் தூக்கிய திருவடியைக் காட்டியருள, உள்ளமும் புலன்களும் ஒருங்கு உருகப் போற்றி, உய்தி பெறுகின்றவராய்க், கழுத்தில் நஞ்சை வைத்துத் தேவர்களுக்கு அளித்துக் காத்த அமுதமே அன்றித், திருவம்பலத்தில் ஒரு திருவடியை ஊன்ற வைத்து, எடுத்த தொரு திருவடியில் திருக்கூத்தான அமுதத்தை அளித்தருளும் கருணையைப் போற்றினார்.

குறிப்புரை :

நஞ்சு கருமையானது; பெருமானின் திருக்கழுத்தின் நிறத்தை மறைத்து நிற்கின்றது. அங்ஙனம் அது மறைத்து நிற்பவே தேவர்களுக்கு அமுதத்தை வழங்கியருளினன் இறைவன். அது போன்றே, மறைப்பினை ஊன்று மலர்ப்பதத்தால் வைத்தே, எடுத்த திருப்பாதத்தால் அமுதத்தை வழங்குகின்றான் என்பதை உணர வைக்கின்றார் ஆசிரியர். `முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு\' (திருவருட்பயன்,) என்பதால் அது அமுதமாயிற்று.

பண் :

பாடல் எண் : 56

ஆரா ஆசை ஆனந்தக்
கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழறிற் றறிவார் தாம்.

பொழிப்புரை :

: நிறைவு பெறாத ஆசை மிகுதியால், ஆனந்தமான கடலுள் முழுகி அதில் விரும்பியிருந்து, இறைவர் திருவருளால் பருவம் தவறாது, வேண்டும் மழையைப் பொழியும் மேகமும் ஒப்பா காத கைகளையுடைய கழறிற்றறிவார், சிறப்பு நிறைந்த வண்ணத்தை யுடைய பொன்வண்ணத்தந்தாதியினைத் திருப்படியின் கீழ், உலகம் அன்புடன் ஏத்தி இன்பம் அடையுமாறு பாடிப் போற்றிப் பரவினார் (தி.11 ப.6).

குறிப்புரை :

வண்ணம் - யாப்புறுப்பு. `பொன் வண்ணம்\' என இவ்வந்தாதி தொடங்குதலின் பொன்வண்ணத்தந்தாதி எனப் பெயர் பெறுவதாயிற்று. முதற்குறிப்பால் பெற்ற பெயர். `பருவ மழை பொழி யும், காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார்\' என்பது `பருவக் கொண் மூப்படி எனப் பாவலர்க்கு, உரிமையின் உரிமையின் உதவி\' என வரும் அரிய திருமுகப்பாசுரப் பகுதியை முகந்தெடுத்து நிற்ப தாகும்.

பண் :

பாடல் எண் : 57

தம்பி ரானார்க் கெதிர்நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும்
ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி
தாமும் எதிரே கேட்பித்தார்.

பொழிப்புரை :

தம் இறைவரான கூத்தப் பெருமானுக்கு முன் நின்று செந்தமிழின் சொல்மாலையான அந்தாதியைச் சேரமான் பெருமான் நாயனார் விண்ணப்பிக்க, வானவரும் வாழும்படி கூத்தாடுகின்ற இறைவர், அப்பாட்டிற்கு ஏற்ற பரிசிலாகச் செம்பொன்னால் ஆன அழகிய அம்பலத்துள் எடுத்தருளிய செம்மை தருவதான திருவடிச் சிலம்பினின்றும், இவ்வுலகத்தவர் வாழ எழுந்த ஒலியைத் தாமும் அவருக்கு எதிரே கேட்குமாறு செய்தார்.

குறிப்புரை :

சேரர் பெருமான் பாமாலை கேட்பிக்கக் கூத்தப் பெரு மான் அவருக்குத் திருச்சிலம்போசையைக் கேட்பித்தார். பண் சுமந்த பாடற்குப் பரிசு படைத்தருளும் திறம் இது.

பண் :

பாடல் எண் : 58

ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும்பேற்றின்
கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியுங் காலமெலாம்
நின்று தொழுது புறம்போந்து
மாடத் திருமா ளிகைவீதி
வணங்கிப் புறத்து வைகினார்.

பொழிப்புரை :

: இவ்வாறு இறைவரின் ஆடும் சிலம்பின் ஒலியைக் கேட்ட சேரர் பெருமான், அளவில்லாத இன்பம் மிக்க ஆனந்தம் சேரப் பெற்ற பெரும்பேற்றின் கொள்கை வாய்ப்ப, வணங்குவாராகி, நெடிது பணியும் காலங்களில் எல்லாம் நின்று தொழுது, பின்பு வெளியே வந்து, மாடங்களையுடைய மாளிகை வீதியை வணங்கிச் சென்று அதன் வெளியே தங்கினார்.

குறிப்புரை :

பணியும் காலமெல்லாம் - பூசனைக்குரிய காலங்களில் எல்லாம்.

பண் :

பாடல் எண் : 59

பரவுந் தில்லை வட்டத்துப்
பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட
ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி
இன்பம் சிறக்கும் அந்நாளில்.

பொழிப்புரை :

போற்றற்குரிய தில்லையின் எல்லையுள் தங்குபவ ரான சேரர் பெருமான், பசுமையான பொன்னால் ஆன அம்பலத்துள், பாம்பையும் கங்கையையும் சடையுள் ஏற்று ஆடும் இறைவரின் திருக் கூத்தை, ஆராமையால் பொருந்தும் பெருவிருப்பம் மேன்மேலும் எழ, நான்மறைகளும் போற்றிப் பணியும் திருக்களிற்றுப்படியின் கீழே, இரவும் பகலும் பணிந்து போற்றி அதனால் மிக்க இன்பம் பெருகப் பெற்ற அந்நாள்களில்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 60

ஆடும் பெருமான் பாடல்கேட்
டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச்
செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண
நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால்
திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.

பொழிப்புரை :

ஆடுகின்ற கூத்தப் பெருமான், பாட்டைக் கேட்ட வண்ணம் இருந்தமையால் சிலம்பொலியைக் கேட்பிக்கத் தாழ்த் தோம்! என்று தமக்கு அவரது நட்புக் கூடும் இயல்பினால் முன்நாளில் அருளிச் செய்து, நினைவூட்டிய நாவலூர் மன்னரான சுந்தரரை, நீண்ட விருப்போடு காணவேண்டும் என்று உள்ளத்துள் எழுந்த நினைவின் மிகுதியால், சேரமானார், திருமால் தேடும் திருவடியையுடைய இறை வரின் திருவருள் பெற்றுத் திருவாரூரை நோக்கிச் செல்வதற்குப் புறப்பட்டார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 61

அறிவின் எல்லை யாயதிருத்
தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப்
பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந்து
அருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல
வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.

பொழிப்புரை :

ஞானத்தின் நிறைவாக விளங்கும் தில்லையின் எல்லையை, விரும்பி வணங்கி, என்றும் பிரியாத மேன்மேலும் பெருகும் அன்பே உள்ளத்தில் நிரம்ப, நிறைந்த ஞானமுடைய ஆளு டைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் தோன்றியருளிய சீகாழிப் பதியைச் சென்று வணங்கி, மானைக் கையிலுடைய சிவபெருமானின் கோயில்கள் பலவற்றையும் வணங்கி மகிழ்ந்து வழிச் செல்பவர்,

குறிப்புரை :

கோயில்கள் பல என்பன புள்ளிருக்கு வேளூர், திரு நின்றியூர் முதலாயினவாகலாம்.

பண் :

பாடல் எண் : 62

வழியில் குழியில் செழுவயலில்
மதகில் மலர்வா விகளில்மடுச்
சுழியில் தரளந் திரைசொரியுந்
துறைநீர்ப் பொன்னி கடந்தேறி
விழியில் திகழுந் திருநுதலார்
விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக்
கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக்
கழனி யாரூர் கண்ணுற்றார்.

பொழிப்புரை :

வழியிலும், குழியிலும், செழுமையான வயல்களி லும், மலர்கள் நிறைந்த நீர்நிலைகளிலும், மடுக்களின் சுழியிலும் முத்து களை ஒதுக்குகின்ற துறைகளையுடைய நீர் நிரம்பிய காவிரியாற்றைக் கடந்து, தென்கரையில் ஏறி, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கின்ற திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, ஊழி முடிவில் வரும் பெரிய வெள்ளத்தாலும் கொள்ளப் படாத நிலைபெற்ற திருவாரூரைக் கண்டார்.

குறிப்புரை :

விழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் என்பன, சீகாழிக்கும் திருவாரூருக்கும் இடைப்பட்ட திருப்பதிகள் பலவுமாம். அவை திருவழுவூர், வீரட்டம், திருமீயச்சூர், திருஅம்பர் மாகாளம், திருவிற்கரை முதலாயினவாம். ஊழிப்பெரு வெள்ளத் தாலும் அழியாத திருவாரூர் என்றது, பரவையுள்மண்டளி எனும் திருக்கோயில் இருத்தல் பற்றியாம்.

பண் :

பாடல் எண் : 63

நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.

பொழிப்புரை :

நம்பியாரூரரும் அந்நாளில் திருநாகைக்காரோணத் திற்குச் சென்று திருப்பதிகம் பாடி, அழகிய பொன்னாலும் மணிகளா லும் ஆன அணிவகைகளையும், நவமணிகளையும், ஆடை, சாந்து, வலிய குதிரைகள், பசும் பொன்னால் ஆன வாள் முதலானவற்றையும் இறைவர் தரத் தாம் பெற்று, மேலும் இடைப்பட்ட பல பதிகளிலும் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, மீண்டும் திருவாரூரைச் சேர்ந்து அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இப்பாடல் சில படிகளில் இல்லை. கழறிற்றறிவாருடன் நம்பியாரூர் திருநாகைக்காரோணம் சென்றார் எனப் பின்னர் இவ்வரலாற்றுள் (பா.85) வருகின்றது. அதுபற்றியே இப்பாடல் சில படிகளில் இல்லை போலும்! எனினும் அடியவர்கள் ஒருமுறையே யன்றிக், காலமும் இடனும் வாய்த்துழியெல்லாம் மீளவும் சென்றிருப் பது ஆங்காங்கும் அறிய வருதலின், ஆரூரர் இதுபொழுதும் சென்று வழிபாடாற்றியிருக்கலாம். ஆதலின் இப்பாடல் இருத்தலில் இழுக்கில் லையாம்.

பண் :

பாடல் எண் : 64

வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

சேரமான், நிலைபெற்ற திருவாரூரைச் சேர, அந்தணரின் தலைவரான நம்பியாரூரரும் மன்னவர் தலைவரான சேரமான் வரப்பெற்ற நிலையில், உள்ளம் மகிழ எதிர்கொண்டு, அவரை அணுகினார்; சேரமானும் அழகிய மணமுடைய மாலை சூடிய சுந்தரர் முன்பு, விருப்புடனே தாழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 65

முன்பு பணிந்த பெருமாளைத்
தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந்
தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி
ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி
யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.

பொழிப்புரை :

தமக்கு முன்னர்த் தம்மை வணங்கிய சேரமான் பெருமாள் நாயனாரை நம்பியாரூரர் தாமும் வணங்கி, அவரை அணைத்து எடுத்து, அன்பு பெருகத் தழுவிக்கொள்ள, இன்பமான வெள்ளத்துள் முழுகிக் கரையேற மாட்டாது அலைபவரைப் போல், எலும்பும் உருக உயிர்களும் ஒன்றாக உள்ளே கலக்க, அதுபோலப் புறத்தும் இரு உடல்களும் ஒன்றாயின எனக்கூறும்படி பொருந்தினர்.

குறிப்புரை :

உயிரும் உடம்பும் ஒன்றாகப் பொருந்தினர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 66

ஆன நிலைமை கண்டதிருத்
தொண்டர் அளவில் மகிழ்வெய்த
மானச் சேரர் பெருமானார்
தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பால் சேரமான்
தோழர் என்று பார்பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி
வேந்தர்க் காகி விளங்கியதால்.

பொழிப்புரை :

இங்ஙனமாக அவ்விருவரின் தன்மையைக் கண்ட திருத்தொண்டர்கள், அளவற்ற மகிழ்ச்சி அடையப் பெருமையுடைய தோழர் பெருமானான சேரமானும், வன்றொண்டரான நம்பியாரூர ரும் ஒருவருள் ஒருவர் கலந்த பான்மையால் போந்த நட்பின் காரணமாய்ச் `சேரமான் தோழர்\' எனும் உலகு புகழும் மேன்மை பொருந்திய திருப்பெயர், முனைப்பாடி நாட்டின் மன்னரான நம்பியாரூரருக்கு உலகத்தில் வழங்கலாயிற்று.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 67

ஒருவர் ஒருவ ரிற்கலந்த
வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ
தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக்
கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேர மான்தோழர்.

பொழிப்புரை :

ஒருவரில் ஒருவர் கலந்த உணர்ச்சியால் இன்பம் தரும் மகிழ்வான சொற்களைக் கூறியவாறு, பொருந்திப் பயிலுந் தோறும் இனிமை தருவாராகி, இருவரையும் கூட்டி வைத்த இறைவர் பால், மேல் நாம் செய்யக் கூடிய கைம்மாறு என்னே? என்று உள்ளத் தில் உண்டான மகிழ்ச்சியால் நம்பியாரூரர் சேரமானின் பருவகால மழை போன்ற கொடைத் தன்மை கொண்ட செங்கையைப் பற்றிக் கொண்டு, இறைவரின் திருவடிகளைப் பணிவதற்கு நினைந்து, திரு வீதியைக் கடந்து கோயிலுக்குள் சென்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 68

சென்று தேவா சிரியனைமுன்
இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்
உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி
வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார்.

பொழிப்புரை :

அங்ஙனம் சென்றவர்கள், முதற்கண் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது, பின் இறைவரின் திருமாளிகையை வலம் கொண்டு, ஒன்றுபட்ட மனத்துடனும் உள்ளே புகுந்து, ஆரூரர் முன்னே நின்று வழிபடச் சேரர்தாமும் அவர் பின்னே நின்று வணங்கிக் கண்ணீர் அருவி என விழ, நிலத்தில் விழுந்து வணங்கி, என்றும் இனிய தம் பெருமானாரான புற்றிடம் கொண்ட இறைவரின் திருவடி களைத் தொழுது போற்றினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 69

தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்
தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும்
அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பி ரானார் தாம்கொண்டார்.

பொழிப்புரை :

தேவரும் முனிவரும் வந்து வணங்குகின்ற தெய்வப் பெருமானாரான தியாகேசரின் திருவடிகளை வணங்கிக் கெடுதல் இல்லாத சேரமான் பெருமானார், மூவர்க்கும் முதல்வரான அப்பெரு மானை, நாவலூர் நம்பியின் திருமுன்பு நின்று, `மும்மணிக்கோவை\' (தி.11 ப.7) பாடி, நன்மை விளங்குமாறு கேட்பித்தார். அதை இறைவரும் ஏற்று அருள் செய்தார்.

குறிப்புரை :

இக்கோவை, திருவாரூர் மும்மணிக்கோவை என அழைக்கப்பெறுவது. பதினொன்றாம் திருமுறையில் காணப்பெறுவது. ஆசிரியம், வெண்பா, கலித்துறை ஆகிய மூவகைப்பா மணிகளால் இயன்றது ஆதலின் `மும்மணிக்கோவை\' என வழங்கலாயிற்று.

பண் :

பாடல் எண் : 70

அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.

பொழிப்புரை :

சுந்தரர், அங்கு இறைவரின் திருவருளைப் பெற்று எழுந்த கழறிற்றறிவாரை உடன் அழைத்துக் கொண்டு வெளியே வந்து, பரவையாரின் மாளிகையைச் சேர்ந்திட, ஒளிமிகும் விளக்கு களையும், நிறை குடங்களையும், பூமாலைகளையும் எங்கும் மங்கை யர் ஏந்தி வர, அப்பரவையார் மாளிகையின் வாயிலில் வந்து தாமும் எதிர்கொண்டு வரவேற்றார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 71

சோதி மணிமா ளிகையின்கண்
சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி
நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து
நிறைபூ சனைகள் முறையளித்தார்.

பொழிப்புரை :

ஒளிரும் மணிகள் பொருந்திய மாளிகையுள் புகுந்து, விளங்கும் பசும்பொன்னால் ஆன கால்களையுடைய இருக்கை மீது சேரமானை அமரச் செய்து, நம்பிகளும் உடன் இருக்கக் குற்றம் இல்லாத குணத்தையுடைய பரவையார், தம் கணவரான நம்பியாரூரருக்கும் அவருடைய நண்பரான சேரமானுக்கும், நூல் முறைப்படி நீதியினின்றும் வழுவாத ஒழுக்கத்தில் நின்று பூசையை முறைப்படி செய்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 72

தாண்டு புரவிச் சேரர்குலப்
பெருமாள் தமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையார்
அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு
விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க்
கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.

பொழிப்புரை :

தாவிச் செல்லும் குதிரைப் படையையுடைய சேரமான் பெருமாளுக்குத் தூண்டு சோதி விளக்கைப் போன்ற பரவையாரைத் திருவமுது அமைக்கும்படி, துணைவரான நம்பியா ரூரர் கூறவும், அவர் விரும்பும் தன்மையினால், வெவ்வேறான பல கறிகளும் உணவும் விரைவாகச் சமைக்கச் செய்து, அவருடன் வந்தவர்க்கெல்லாம் விருந்தினை அமைத்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 73

அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல்
அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார்
புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவை யார்வந் தறிவித்தார்.

பொழிப்புரை :

மன்னர் என்ற தன்மைக்குத் தக்கவாறு அமைத்ததை விடச் சிறப்புமிக்க அடியார் என்ற தன்மைக்கு ஏற்குமாறு பொருந்திப் பெருகும் அன்புடன் விரும்புகின்ற அமுதைச் சமைத்த பின்னர்க் கழுத்துக் கயிற்றை அணிந்த யானைகளையுடைய சேரமானார் தம்முடன் வந்தவருடன் உணவு உண்ணப் பாற்கடலில் தோன்றிய திரு மகளைப் போன்ற பரவையார் வந்து நம்பியாரூரர்க்கு அறிவித்தார்.

குறிப்புரை :

சேரமானார் அரசருமாவர், அடியவருமாவர். பரவை யார் அவரை அரசர் என்ற முறைமையைவிட அடியவர் என்ற முறையிலேயே பெரிதும் உபசரித்தார். அரசரின் நிலை துன்பம் அல்லது தொழுதகவு இன்று. அடியவர் நிலையோ இத்தகைய வெற்றரசை விடுத்து வீட்டரசை எய்தும் நிலையாகும். ஆதலின் பரவையார் உபசரிப்பு அன்னதாயிற்று.

பண் :

பாடல் எண் : 74

சேரர் பெருமான் எழுந்தருளி
அமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய்
தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில்
இரண்டு படியா ஏற்றுதலும்.

பொழிப்புரை :

`மலர்மாலை சூடிய குழலையுடைய பரவையே! முன் செய்த தவப்பயனாய்ச் சேரமான் இங்கு எழுந்தருளித் திருவமுது செய்யுமாறு திருவருள் கூட்டியதால், காலம் தாழ்த்தாது உணவு செய்விப்பாயாக!\' என்று உலகில் நிறைந்த சிறப்புடைய சுந்தரர் கூறியருள, பரவையாரும் அழகுடன் விளங்கும் தம் திருக்கரத்தால்

குறிப்புரை :

அரசரும் சிவவேதியருமாய மரபினால், இரு வேறிடங் களில் உண்கலங்களை அமைத்தனர் அம்மையார். மரபு கருதிய காலம் அதுவாதலின் அவ்வண்ணம் அமைத்தார். இரண்டுபடியா - இருவேறிடங்களில் அமைவதாக.

பண் :

பாடல் எண் : 75

ஆண்ட நம்பி பெருமாளை
யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி
மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்
கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.

பொழிப்புரை :

சுந்தரர் சேரமானைத் தம்முடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று சொல்ல, அங்கு அவரும் விரைவாகப் பணிந்து அஞ்சித் திடுக்கிடவும், நீண்ட பெரிய கைகளைப் பிடித்துக் கொண்டு நம்பியாரூரர் மீண்டும் வேண்டிக் கொள்ளவும், அவருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணச் சேரமான் இசைந்தார்.

குறிப்புரை :

சுந்தரர் சேரமானைத் தம்முடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று சொல்ல, அங்கு அவரும் விரைவாகப் பணிந்து அஞ்சித் திடுக்கிடவும், நீண்ட பெரிய கைகளைப் பிடித்துக் கொண்டு நம்பியாரூரர் மீண்டும் வேண்டிக் கொள்ளவும், அவருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணச் சேரமான் இசைந்தார்.

பண் :

பாடல் எண் : 76

ஒக்க அமுது செய்தருள
வுயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்
தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையுந்
தாம்வேண் டியவா றினிதருந்தத்
தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத்
தூயவிருந்தின் கடன்முடித்தார்.

பொழிப்புரை :

நம்பியாரூரரும் சேரமானும் ஒக்க உடன் இருந்து உணவு உண்ண, உயர்வான தவத்தையுடைய பரவையார் மிக்க விருப்பத்தினால் உண்ணச்செய்து, பொருந்திய பணியாளர்கள் தக்க வகையினால் அறுவகைப்பட்ட உணவைத் தாம் தாம் வேண்டியவாறே இனிதாக உண்ணவும், கூடிய மிக்க மகிழ்ச்சி சிறக்கத், தூய்மையான விருந்து அளிக்கும் கடமையை இனிது ஆற்றி நிறைவு செய்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 77

பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுது மேந்தினார்.

பொழிப்புரை :

பனி நீருடன் கலந்த சந்தனத்துடன் பச்சைக் கற்பூரம் சேர்ந்த மணக்கலவைக் குழம்பை, உரிய பெண்கள் அரைத்துச் சேர்த் துத் தர, அதைக் கொடுத்து, மகிழ்வு தரும் கத்தூரிச் சாந்தையும் தூய்மை யான மலர்களையும் தந்து, பொன்கொடி போன்ற பரவையார் இனிய ஐவகை நறுமணப் பொருள்களுடன் வெற்றிலை, பாக்கையும் ஏந்தினார்.

குறிப்புரை :

ஐவகை நறுமணப் பொருள்கள், `தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோ டைந்து\' என்பதால் அறியப்படும். அடை - வெற்றிலை. காய் - பாக்கு.

பண் :

பாடல் எண் : 78

ஆய சிறப்பிற் பூசனைகள்
அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு
முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக்
கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய்
நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.

பொழிப்புரை :

அத்தகைய சிறப்பால் செய்யப்பட்ட பூசனைகளை எல்லாம் விரும்பி ஏற்றுக்கொண்டு, தூய்மை செய்யும் திருநீற்றை வாங்கி வணங்கித் தம் திருமுடியில் அணிந்து, பொருந்திய விருப்பத்தி னோடு உடன் இருக்கப் பெற்றமையால், கழறிற்றறிவார், உண்மை யான திருத்தொண்டின் செம்மை தரும் தன்மையை உள்ளபடியே பெற்றவராய்ச் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 79

மலைநாட் டரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப்
பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார்
அருளே போற்றி யுடனமர்ந்தார்.

பொழிப்புரை :

மலைநாட்டு மன்னர் பெருமானான சேரமான் வணங்கத் தாமும் எதிர் வணங்கித் தழுவிக்கொண்டு, கலைகள் நிறையப் பெற்ற முழுமதி போன்ற முகத்தையுடைய பரவையாரின் கணவரான நம்பியாரூரர், விற்குறியைப் பொறித்த வெற்றியுடைய சேரமானைச் சேருமாறு தந்தார் என்று, கங்கையாறு அலையும் புதுப்பூங்கொன்றை மலர் சூடிய சடையையுடைய இறைவரின் திருவருளைப் போற்றி உடனமர்ந்தருளினார்.

குறிப்புரை :

சேரமானை நம்பியாரூரர் காணும்தொறும், அவரைத் தோழமையாகப் பெறும்படி கருணை செய்த பெருமானையும் நினைவு கூர்வாராயினர். கங்கைஅலை - கங்கையாறு. நாட்கொன்றை - அன்ற லர்ந்த கொன்றை.

பண் :

பாடல் எண் : 80

செல்வத் திருவா ரூர்மேவும்
செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி
வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து
வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந்
தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த திருவாரூரில் உள்ள செம்பொன் புற்றை இடம் கொண்டு இனிது விரும்பி வீற்றிருக்கும் வில்லாய மேருமலையையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கியும், வீதி விடங்கப் பெருமானான தியாகேசரைச் செழுமையான திரு விழாக் காலங்களில் வழிபட்டும், பெருவாழ்வு பெற்றவராய், நாள் தோறும் மனம் மகிழ்ந்து யாவரும் எடுத்துச் சொல்லும் பேரறிவாளர் களான இரு பெரு மக்களும் தொடர்ந்து வந்த பெரு விருப்பத்துடன் வீற்றிருந்தனர்.

குறிப்புரை :

பவனி - வீதிகண் தோறும் பெருமான் எழுந்தருளிவரல். மல்லல் - வளம். இவ்வளப்பத்தை அப்பர் பெருமான் அருளிய `முத்து விதானம்\' (தி.4 ப.21 பா.1) எனத் தொடங்கும் அரிய பதிகத்தால் அறியலாம். இருவரும் சொல்வித்த கருத்துகளை அவரவரும் அருளிய திருவாக்குக்களால் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 81

இவ்வா றொழுகும் நாளின்கண்
இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார்
மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.

பொழிப்புரை :

இங்ஙனம் இன்பம் பெருக இருவரும் மகிழ்ந்து வரும் நாளில், விளங்கும் மணிப் பூண்களை அணிந்த வன்றொண்டர், நஞ்சுபொருந்தும் கழுத்தையுடைய வேதியரான இறைவர் வீற்றிருக் கும் இடங்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று, வயல்கள் நிறைந்த `கன்னி நாடு\' எனவும் `தமிழ் நாடு\' எனவும் கூறப்படும் பாண்டிய நாட்டில் மாமதுரை முதலாக நீண்ட நெருங்கிய சடையையுடைய இறைவரின் பல பதிகளையும் வணங்குவதற்குத் திருவருள் கூட்ட நினைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 82

சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று
மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந்
தாமும் உடனே செலத்துணிந்தார்.

பொழிப்புரை :

சேரமானும், சுந்தரரைப் பிரியாது உடன் உறைய விரும்பிய சிறப்புடைய எண்ணத்தாலும், அன்பு பெருகுமாறு அன்று தமக்கு மதுரைத் திருவாலவாயில் விரும்பி எழுந்தருளிய வீரரான சோமசுந்தரப் பெருமான் அளித்த திருமுகத்தை நினைவு கூர்ந்து, விரும்பிய அன்பால் சென்று அவரை வணங்குவதற்கு உள்ளத்தில் எழுந்த குறிப்பினாலும், தாமும் அவருடன் செல்வதற்குத் துணிந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 83

இருவர் திருவுள் ளமும்இசைந்த
பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி
யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம்
வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு
போது வார்கள் உடன்போத.

பொழிப்புரை :

இருவர்தம் உள்ளமும் இசைந்தபோது, மாளிகை யினின்றும் புறப்பட்டு எழுந்து, திருவாரூரில் புற்றிடம் கொண்ட இறைவரின் மலர்போன்ற அழகிய திருவடிகளைப் பூங்கோயிலுள் புகுந்து வணங்கி, அவரது திருவருளைப் பெற்றுப் புறம் போந்து, உடன்வரப் பெறும் உரிமையுடைய பெருஞ் சுற்றங்களும், எல்லை யில்லாத அணிகளையும் ஊர்திகளையும் ஒப்பில்லாத சேம நிதிகளை யும் கொண்டு செல்பவர்களும் தம்முடன் வர,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 84

சேவித் தணையும் பரிசனங்கள்
சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
புகுந்து காரோ ணம்பணிந்தார்.

பொழிப்புரை :

தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திரு வாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், `திருக்கீழ்வேளூரைச்\' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடி களை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர்.

குறிப்புரை :

தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திரு வாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், `திருக்கீழ்வேளூரைச்\' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடி களை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர்.

பண் :

பாடல் எண் : 85

திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்
சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார் வச்செந் தமிழ்மாலை
சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப்
பெருக்கா றுலவு சடைமுடியார்
இடங்கள் பலவும் பணிந்தேத்தி
அருட்கா ரணர்தந் திருமறைக்கா
டணைந்தார் சேர ராரூரர்.

பொழிப்புரை :

திருநாகைக்காரோணத்தில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தாய இறைவரைப் பணிந்து, சிந்தையை உருக்குகின்ற ஆர்வத்தினால், பரந்த செந்தமிழ் மாலையான திருப்பதிககத்தை அருளிச் செய்து சாத்தி, சில நாள்கள் அங்குத் தங்கியிருந்து, மேற் சென்று, பெருகும் கங்கை பொருந்துவதற்கு இடமான சடையை யுடைய பெருமானார் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, அருளுடைய மூல முதல்வரான இறைவரின் திரு மறைக்காட்டைச் சேரமானும் சுந்தரரும் அடைந்தனர்.

குறிப்புரை :

திருநாகைக் காரோணத்தில் அருளிய பதிகம் `பத்தூர்புக் கிரந்துண்டு\' (தி.7 ப.46) எனத்தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பதிகமாகும். இடங்கள் பலவும் என்பன பொய்கைநல்லூர், திருவரிஞ் சையூர், திருக்கள்ளிக்குடி, திருக்கோளிலி, திருவாய்மூர், திருமுகத் தலை முதலாயினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 86

முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி.

பொழிப்புரை :

கடலானது சூழ்ந்து வலம்கொளும் திருமறைக் காட்டில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலை அடைந்து, திருநின்ற செம் மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரசரும், சீகாழிப்பதியில் தோன்றிய சிவக்கன்றான திருஞானசம்பந்தரும் நேர்முகமாய்த் திறக்கவும் அடைக்கவுமாகப் பாடப் பெற்ற வாயிலை அடைந்து, அருள்கண்ணீர் வழியும் விழிகளையுடையவர்களாகி அப்பெருமக் களையும் மனத்தகத்து எண்ணி வணங்கி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 87

நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித்
தனவே யோதித் திளைத்தெழுந்தார்.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்த ஒளிவடிவான மறைகள் வழிபாடு செய்த திருமறைக்காட்டில் வீற்றிருக்கின்ற அருமணி போன்றவரான இறைவரைப் பணிந்து, நிலம் பொருந்த விழுந்து வணங்கி, எழுந்து, போற்றி, `யாழைப் பழித்து\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை நம்பியாரூர் பாடிச் சாத்த, அருள் பொருந்திய சேரர் பெருமான் தாம் தில்லையில் பாடிய சிறப்புடைய பொன்வண்ணத்தந்தாயில் இறைவரைச் சிறப்பித்துப் பாடியவற்றையே மீளவும் ஓதி இன்புற்றனர்.

குறிப்புரை :

`யாழைப் பழித்தன்ன\' (தி.7 ப.71) என்னும் முதற் குறிப்புடைய பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். சேரர் பெருமான் அருளிய பொன்வண்ணத்தந்தாதியில் (தி.11 ப.6) திரு மறைக்காட்டிறைவரைப் போற்றும் நிலையில் அமைந்தன இரு பாடல் களாகும். அவை: `துயரும் தொழும்\', `கொட்டும்\' எனத் தொடங்கு வன. எனவே முன்னர் அருளிய பாடல்களை மீண்டும் ஓதி வணங்க லும் மரபு எனத் தெரிகிறது. `சொல்லியனவே சொல்லி ஏத்துகப் பானை\' (தி.? ப.? பா.?) எனவரும் சுந்தரரின் திருவாக்கையும் நினைவு கூர்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 88

எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு, திருமுன்பில் நின்று திளைத்தெ ழுந்து வணங்கி வெளியில் வந்து, இருவரும் சில நாள்கள் செழுமை யான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந் தருளி, அங்கு இருந்தவாறே, அதன் தெற்கில் உள்ள அலை பொருந் திய கடல் நஞ்சை உட்கொண்ட கழுத்தினையுடைய இறைவரின் திரு அகத்தியான்பள்ளிக்குச் சென்று வணங்கி கலைகள் வளரும் திருக் கோடிக்குழகர் கோயிலைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

திருஅகத்தியான்பள்ளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 89

கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.

பொழிப்புரை :

கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயி லுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று\' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையை யும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.

குறிப்புரை :

`கடிதாய்க் காற்று\' (தி.7 ப.32) எனும் முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்தில் `குடிதான் அயலே இருந்தாற் குற்றம் ஆமோ\' என முதற்பாடலிலும், தனியே யிருந்தாய் என 2, 3, 6, 7, 8 ஆகிய பாடல்களிலும், `அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே\', `இரவே துணையாயிருந்தாய் எம் பிரானே\' என முறையே 1, 6 ஆகிய பாடல்களிலும் நம்பிகள் அருளும் திருவாக்குகளின் பிழிவாகவே, `கோடிக்குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்தெங்கும் நாடிக் காணாது உள்புக்கு\' என ஆசிரியர் அருளுவாராயினார். காடுகாள் - கொற்றவை. காடுகிழாள் என்பதன் மரூஉ. வனதுர்க்கை என இக்காலத்து அழைப்பர். இப்பதி கத்து வரும் ஐந்தாவது பாடலில் `கையார்வளைக் காடுகாளோடும் உடனாய்\' எனவரும் பொருளுண்மை கொண்டே, `காடுகாள் புணர்ந்தவராய்\' என ஆசிரியர் அருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 90

அங்கு வைகிப் பணிந்தருளால்
போவார் அகன்சோ ணாட்டரனார்
தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப்
பாண்டி நாடு தனைச்சார்ந்து
திங்கண் முடியார் திருப்புத்தூர்
இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு
மங்குல் தவழும் மணிமாட
மதுரை மூதூர் வந்தணைந்தார்.

பொழிப்புரை :

திருக்கோடிக்குழகர் உறையும் காட்டில் தங்கி, வணங்கி, விடைபெற்றுச் செல்வாராய்ச் சோழநாட்டில் சிவபெருமான் விளங்க வீற்றிருக்கும் திருப்பதிகளையும் வணங்கிச் சென்று, பாண் டிய நாட்டைச் சேர்ந்து, பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் திருப்புத்தூரினை வணங்கிச் சென்று, வானில் விளங்கும் முகில்கள் தவழ்கின்ற அழகான மாடங்கள் நிறைந்த மதுரை மூதூரை வந்தடைந்தார்.

குறிப்புரை :

சோழநாட்டில் வணங்கிச் சென்ற பதிகள் திருக்கடிக் குளம், திருஇடும்பாவனம், திருவுசாத்தானம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இப்பதிகளுக்கும் பாண்டிநாட்டுத் திருப்புத்தூருக்கும் நம்பிகள் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 91

சேரமான் தோழரும்அச்
சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை
ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய
வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித்
தெதிர்கொண்டு கொடுபுக்கார்.

பொழிப்புரை :

சேரமான் தோழரான நம்பியாரூரரும் சேரர் பெருமானும், பாம்பை அணியாய் அணிந்த மார்பினரான சிவ பெரு மானை மதுரைத் திருவாலவாயில் வணங்கும் பொருட்டு அன்புடன் வந்து சேர, பாண்டிய மன்னர் மன விருப்பம் மிக மாநகரத்தை அணி செய்து, எதிர்கொண்டு வரவேற்க, நகரின் உள் புகுந்தனர்.

குறிப்புரை :

வாரமா - மிகுந்த அன்போடு. கோடித்து - அணிசெய்து.

பண் :

பாடல் எண் : 92

தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட
அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய்
மணிக்கோயில் வந்தணைந்தார்.

பொழிப்புரை :

பாண்டியனின் மகளாரை மணந்து முன்னமே பழமையுடைய மதுரை நகரத்தில் வந்து இனிதாக இருந்த சோழ மன்னரும், அவர்களுடன் கூடச் சேர, மூவேந்தர்களும் ஒருங்கு சேர்ந்து, சுந்தரருடன் நிலைபெற்ற திருவாலவாய் என்ற அழகான கோயிலை வந்து அடைந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 93

திருவால வாய்அமர்ந்த
செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி
வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத்
தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து
பெருமகிழ்ச்சி பிறங்கினார்.

பொழிப்புரை :

நம்பியாரூரர் திருவாலவாயில் அமர்ந்த இறைவனின் திருக்கோயிலை வலமாய் வருவாராய், முன்பு விழுந்து வணங்கி, வழிவழியாய்த் தொண்டு செய்யும் பேற்றைத் தந்தருளுபவரான இறைவரைப் போற்றி, நிலம் உற விழுந்து தொழுது, வாழ்வடைந்த பெருவாய்மையுடைய தமிழ்ப்பாமாலை பாடிப் பெருமகிழ்ச்சியில் விளங்கினார்.

குறிப்புரை :

நம்பிகள் ஈண்டுஅருளிய பாமாலை கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 94

படியேறு புகழ்ச்சேரர்
பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக
அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன்
எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார்
முன்பரவிக் களிகூர்ந்தார்.

பொழிப்புரை :

உலகம் ஏற்றம் அடைதற்கேதுவான புகழையுடைய சேரமானும், திருமுன்பு நிலத்தில் விழுந்து, `அடியேனையும் ஒரு பொருளாகக்கொண்டு திருமுகத்தைத் தந்தருளிய அருட் பெருக்கின் எல்லையை அளவிட அறியேன்!\' என்று கூறிப் போற்றிச் சொற்கள் எழமாட்டாமல் நாத்தழுதழுக்க, மணம் விரிந்த கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் திருமுன்பு பணிந்து மகிழ்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 95

செம்பியனா ருடன்செழியர்
தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய
நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின்
றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற்
குறைவறுத்தார் பஞ்சவனார்.

பொழிப்புரை :

சோழருடன் பாண்டியரும் இறைவரை வணங்கச் சேரருடன் சுந்தரரும் கோயில் வெளிப்பக்கத்தை அடைய, பொருந்திய மிக்க களிப்பால், தேவ தேவரின் கோயிலினின்றும் அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற, பாண்டியர், இருபெரு மக்களுக்கும் தம் அழகிய பொன்னாலாய மாளிகையில் குறைவில்லாது வேண்டிய முகமனைச்செய்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 96

உளம்மகிழக் கும்பிட்டங்
குறையுநாள் உதியருடன்
கிளரொளிப்பூண் வன்றொண்டர்
தாமிருந்த இடங்கெழுமி
வளவனார் மீனவனார்
வளம்பெருக மற்றவரோ
டளவளா வியவிருப்பால்
அமர்ந்துகலந் தினிதிருந்தார்.

பொழிப்புரை :

உள்ளம் மகிழச் சிவபெருமானை வணங்கி, அத்திருப்பதியில் தங்கிய நாள்களில், சேரமானுடன் சுந்தரர் தாம் தங்கி யிருந்த இடத்தை அடைந்து, சோழரும் பாண்டியரும் வளம் பெருகும் படிச் சார்ந்து, அவர்களுடன் உரையாடிக் கலந்த விருப்பத்தால் அமர்ந்து கூடி இனிதாய் இருந்தனர்.

குறிப்புரை :

உதியர் - சேரர்.

பண் :

பாடல் எண் : 97

அந்நாளில் மதுரைநகர்
மருங்கரனார் அமர்பதிகள்
பொன்னாரம் மணிமார்பிற்
புரவலர்மூ வரும்போதச்
செந்நாவின் முனைப்பாடித்
திருநாடர் சென்றிறைஞ்சிச்
சொன்மாலை களுஞ்சாத்தித்
தொழத்திருப்பூ வணத்தணைவார்.

பொழிப்புரை :

அந்த நாள்களில் மதுரைப்பதியின் அருகில் இறைவர் விளங்க எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளைப் பொன் மாலைகளையும் மணிகளையும் பூண்ட மார்பையுடைய முடி மன்னர் கள் மூவரும் உடன்வர, செம்மை விளங்கும் நாவையுடைய திரு முனைப்பாடித் திருநாட்டின் தலைவரான நம்பிகள், சென்று வணங் கித், திருப்பதிகங்களைப் பாடி, மேலும் வணங்குவதற்கு எழுந்து, திருப்பூவணத்தை அடைந்தார்.

குறிப்புரை :

மூவருடனும் மதுரை நகரில் நம்பிகள் வணங்கிய பதிகள் எவையெனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 98

நீடுதிருப் பூவணத்துக்
கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர்
மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத்
திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ
தோவென்று பணிந்தணைவார்.

பொழிப்புரை :

நிலைத்த திருப்பூவணம் என்ற திருப்பதிக்கு அண்மையில் நேரே செல்லும்பொழுது, பக்கத்தே வரும் தொண்டர் கள், நிலைபெற்ற அப்பதியைக் காட்டத் தேடும் மறைகளுக்கும் எட்டுதற்கு அரிய இறைவரைத் `திருவுடையார்\' எனத் தொடங்கிப், பாடும் இசை பொருந்திய திருப்பதிகத்தில் `பூவணம் ஈதோ!\' என்று போற்றி வணங்கிச் சேர்வாராகி,

குறிப்புரை :

`திருவுடையார்\' எனத் தொடங்கும் பதிகம் இந்தளப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.11). இப்பதிகப் பாடல்தொறும் `பூவணம் ஈதோ!\' என வருதலின், அத்தொடர் வழி இவ்வரலாற் றமைப்பை அருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 99

சென்றுதிருப் பூவணத்துத்
தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர்
முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி
நேர்நீங்கி யுடன்பணிந்த
வென்றிமுடி வேந்தருடன்
போந்தங்கண் மேவினார்.

பொழிப்புரை :

சென்று, திருப்பூவணத்தில் வானவர் தலைவரான இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் கோயிலின் திருமுற்றத்தை வலமாக வந்து, இறைவரின் திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி, எழுந்து நின்று, போற்றிப் பாடி, அங்கிருந்து நீங்கி, தம்முடன் வந்த வெற்றியுடைய முடி மன்னர் மூவருடனே கூடிச்சென்று சுந்தரர் அத்திருப்பதியில் தங்கியருளினர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. இறைவரின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது

பண் :

பாடல் எண் : 100

அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச்
சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு
முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால
வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி
இன்புற்றங் கமர்கின்றார்.

பொழிப்புரை :

`திருப்பூவணம்\' என்ற அத்திருப்பதியில் விரும்பித் தங்கியிருந்து இறைவரை வணங்கியிருந்து, பின் சில நாள்களில், நம்பியாரூரர் பெருவேந்தர் மூவருடனே முதன்மையுடைய மதுரை யைச் சேர்ந்து, உண்மை கூர்ந்த பேரன்பால் ஆலவாயுடைய இறைவ னின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை எப்போதும் வணங் கிப் போற்றி இன்பம் எய்தி, அங்கு விரும்பி எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 101

செஞ்சடையார் திருவாப்ப
னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர்
நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால்
இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை
மாநகரின் மகிழ்ந்திருந்தார்.

பொழிப்புரை :

பின்பு சிவந்த சடையையுடைய இறைவரின் `திரு ஆப்பனூர்\', `திருவேடகம்\' முதலான நஞ்சை உண்ட கழுத்தையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் பதிகளுக்குச் சென்று குறைவற்ற பெருவிருப்புடன் இனிதாக வணங்கி, மீண்டும் முகில் தோயும் மதிலையுடைய மதுரை நகரில் சேர்ந்து மகிழ்ந்திருந்தார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 102

பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.

பொழிப்புரை :

மூவேந்தர்களுடன் சிவபெருமானின் திருப்பரங்குன்றத்தை அடைந்து, திரிபுரம் எரித்த பெருமானின் கோயிலை வலமாக வந்து, உள்ளே புகுந்து, வணங்கி, வெண்தலைகள் மலிந்த மாலையினை அணிந்த சடையையுடையவரின் திருவடியின் கீழே ஆட்செய்யும் அவருடைய அருமையை எண்ணி `அஞ்சுதும்\' என்ற கருத்துடன் ஆரூரர் பாடுவாராய்,

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 103

கோத்திட்டை எனஎடுத்துக்
கோதில்திருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி
முக்கோக்கள் தம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை
இன்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார்
தங்குதிருப் பரங்குன்றில்.

பொழிப்புரை :

`கோத்திட்டையும்\' எனத் தொடங்கிக் குற்றம் இல்லாத திருப்பதிக இசையினால் இறைவரை வணங்கி, மூவேந்தரின் முன்பு, வளப்பம் மிக்க தமிழ் மாலையை இனிய இசையால் பாடிப் போற்றிச் சங்கரர் தங்கியிருக்கும் திருப்பரங்குன்றத்தின் இறைவருக்கு ஆரூரர் சாத்தினார்.

குறிப்புரை :

இம்முதற் குறிப்புடைய பதிகம் இந்தளப்பண்ணில் அமைந்ததாகும்(தி.7 ப.2). இப்பதிகப் பாடல்தொறும் பெருமானின் சீலமும், கோலமும் சுட்டி, `அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்\' என நிறைவு படுத்துகின்றார். அதனை உளங்கொண்டே ஆசிரியர் இதற்கு முன்னைய பாட்டில், `திருவடிக்கீழ் ஆட்செய்யும் அருளை நினைந்து அஞ்சுதும் என்றார்\' என்றருளுவாராயினர். இப்பதிகத் திருக்கடைக்காப்பில் மூவேந்தர் முன்னே மொழிந்தமையை கூறியிருத் தலின், அதனையும் இப்பாடற் கண், சேக்கிழார் குறிப்பாராயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 104

இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.

பொழிப்புரை :

சிவபெருமானிடத்துத் திருத்தொண்டு செய்யும் அருமைப்பாட்டை, இப்பேருலகை ஆளும் முதன்மைவாய்ந்த முடி மன்னரான மன்னர் மூவரும் கேட்டுத் தாமும் அஞ்சி, மறைகளில் விதித்த முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய சுந்தரரை வணங் கினர். நிறைந்த தவத்தையுடைய சுந்தரர் அப்பாலும் இருக்கின்ற இறைவரின் பதிகளுக்கும் சென்று வணங்குதற்கு எண்ணினார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 105

அந்நாட்டுத் திருப்பதிகள்
பலவும்அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன்
நம்பிதாம் எழுந்தருள
மின்னாட்டும் பன்மணிப்பூண்
வேந்தர்இரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன
செய்தமைப்பார் தமைவிடுத்தார்.

பொழிப்புரை :

அந்நாட்டின் அருகில் உள்ள பதிகள் பலவற்றை யும் சென்று வணங்க நன்மையுடைய மலைநாட்டு மன்னரான சேரமானுடனே சுந்தரர் எழுந்தருள, ஒளி விளங்கும் பல மணிகள் இழைத்த அணிகளை அணிந்த சோழ பாண்டியராகிய இருபெருவேந் தரும், மதுரைக்கு மீள்வார், தென்நாட்டில் அவர்களுக்கு வேண்டு வனவற்றைச் செய்தமைத்தற்குரிய பணியாளர்களை உடன் செல்ல அனுப்பினர்.

குறிப்புரை :

வேந்தர் இருவர் - சோழரும், பாண்டியரும். தாம் மீளினும், ஆரூரருக்கும் சேரர் பெருமானுக்கும் செல்லும் இடங்களில் எல்லாம் வேண்டுவனவற்றை அமைத்தற்கெனப் பணியாளர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தமை, அவ்விருவர் தம் பத்திமை யையும், கடமையுணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

பண் :

பாடல் எண் : 106

இருபெருவேந் தரும்இயல்பின்
மீண்டதற்பின் எழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர்
புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும்
பணிந்துபோய் மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்கும்
குற்றாலஞ் சென்றடைந்தார்.

பொழிப்புரை :

முன் சொன்ன வண்ணம், சோழ பாண்டியரான இரு பெரு மன்னர்களும் மீண்டு சென்றபின்பு, எழுந்தருளிச் செல்கின்ற சுந்தரர், புகழையுடைய சேரமானுடனே, இறைவர் வெளிப்பட எழுந் தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, மலை யின் சாரலில், நிறமுடைய மணிகள் கதிரவன் ஒளி என விளங்கும் திருக்குற்றாலத்தைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

தானம் பலவாவன, பாண்டி நாட்டின் தென்பகுதியில் உளவாய திருப்பதிகளாம்.

பண் :

பாடல் எண் : 107

குற்றாலத் தினிதமர்ந்த
கூத்தர்குரை கழல்வணங்கிச்
சொல்தாம மலர்புனைந்து
குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார்
பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத்
திருநெல்வே லியையணைந்தார்.

பொழிப்புரை :

திருக்குற்றாலத்தில் இனிதாய் எழுந்தருளியுள்ள கூத்தரின் ஒலிக்கும் கழலை அணிந்த திருவடிகளை வணங்கிச் சொல் மாலை புனைந்து போற்றி, திருக்குறும்பலா என்னும் கோயிலின் இறைவரை வணங்கி, மேலும் இப்பகுதியிலுள்ள முதிராத வெண்மை யான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருப்பதிகளையும் வணங்கிச் சென்று, முப்புரங்களையும் அழித்த பெருமான் நிலைபெற எழுந்தருளிய செல்வத் திருநெல்வேலியைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

கூத்தர் கோயிலும், குறும்பலாக் கோயிலும் வெவ் வேறானவை. இவ்விரண்டிலும் ஆரூரர் அருளிய பதிகங்கள் கிடைத் தில. `குற்றாலத்தினிதமர்ந்த கூத்தர்\' எனும் தொடர், `குற்றாலத்தமர்ந்து உறையும் கூத்தா\' எனவரும் திருவாசகத் தொடரை நினைவு கூரச் செய்யும்.

பண் :

பாடல் எண் : 108

நெல்வேலி நீற்றழகர்
தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
திருவிரா மேச்சரத்து.

பொழிப்புரை :

திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் திருநீற்று அழகரான இறைவரை வணங்கிப் பாடி, அப்பகுதிகளில் உள்ள பல் வேறு பதிகளையும், ஆங்காங்குள்ள திருக்கோயில்களையும் அன்பால் பணிந்து சென்று, வில்லை ஏந்திய வேடர் உருவுடன் வெற்றியினை யுடைய அருச்சுனனுக்கு முன், பன்றியின் பின் சென்ற மறை முதல்வ ரான இறைவர் விரும்பி வீற்றிருக்கின்ற இராமேச்சுரத்திற்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

பதிபிறவும் என்பன திருச்செந்தூர், திருஉத்தர கோசமங்கை முதலாய திருப்பதிகளாகும். திருச்சுழியல், கானப்பேர் முதலாய பதிகளைப் பின்னர் வழிபட்டார் என வருதலின், திருநெல் வேலியிலிருந்து இராமேச்சுரத்திற்கு வந்தது கடற்கரை வழிவந்த பதிகளாகவே கருதத் தக்கனவாம்.

பண் :

பாடல் எண் : 109

மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற இராமேச்சரத்தில் எழுந்தருளியிருக் கும் பெரிய சிந்தாமணி போன்ற இறைவரை முன் வணங்கிப் போற்றி, தமிழ்மாலையான திருப்பதிகத்தைப் பாடிச் சாத்தி, பாம்புகளை அணிந்த முடியையுடைய இறைவர் வீற்றிருந்தருளும் ஈழநாட்டில் உள்ள மாதோட்டத்துத் திருக்கேதீச்சுரத்தைச் சிந்தித்து, அழகிய சொல்மாலைகளான திருப்பதிகத்தைப் பாடிச் சாத்திக், கடல் இடையில் உள்ளதால், தொலைவில் நின்றபடியே தொழுது, அங்குத் தங்கி இருந்தார்.

குறிப்புரை :

திருக்கேதீச்சரப் பதிக்குரிய திருப்பதிகமே கிடைத்துள் ளது. அது, `நத்தார் படை\' (தி.7 ப.80) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் அமைந்ததாம். மாதோட்டம் - ஊர்ப் பெயர். கேதீச்சரம் - கோயிலின் பெயர்.

பண் :

பாடல் எண் : 110

திருஇரா மேச்சரத்துச்
செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்
பரிவினால் தொழுதகன்று
பரமர்பதி பிறபணிந்து
பெருவிமா னத்திமையோர்
வணங்குபெருந் திருச்சுழியல்
மருவினார் வன்றொண்டர்
மலைவேந்த ருடன்கூட.

பொழிப்புரை :

திருஇராமேச்சரத்தில் சிவந்த பவளம் போன்ற சுடர்க்கொழுந்தாகவுள்ள இறைவரை வணங்கித் தொழுது, அங்கி ருந்து இறைவரின் பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று, வன் றொண்டர் மலைநாட்டு மன்னரான சேரமானுடனாகப் பெரிய வானூர்திகளில் வந்து தேவரும் வணங்கிவரும் பெரிய `திருச்சுழி யலை\' வந்து அடைந்தார்.

குறிப்புரை :

பரமர் பதிபிற என்பன இளையான்குடி, தஞ்சாக்கை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 111

திருச்சுழியல் இடங்கொண்ட
செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியின் வீழாமைக்
காப்பாரைக் கடல்விடத்தின்
இருட்சுழியு மிடற்றாரை
யிறைஞ்சியெதி ரிதழிமலர்ப்
பருச்சுழியத் துடனூனா
யுயிரெனும் பாமலர்புனைந்தார்.

பொழிப்புரை :

திருச்சுழியலை இடனாகக் கொண்டு வீற்றிருக் கின்றவரை, செம்பொன் மலையையே வில்லாய் ஏந்தியவரை, கருப்பமான சுழியில் விழாமல் காப்பவரை, கடலில் எழுந்த நஞ்சின் கருமைதங்கிய கழுத்தினையுடையவரை, திருமுன்பு விழுந்து வணங் கிக் கொன்றை மலர்மாலையால் ஆன பருத்த சுழியத்துடன் கூட, `ஊனாய் உயிர்\' எனத் தொடங்கும் சொல்மாலையைச் சூட்டினார்.

குறிப்புரை :

சுழியம் - திருச்சடையின்கண் அணியத்தகும் பருத்த மாலை. இம்மாலையுடன் சொல்மாலையையும் சூட்டினார். இச் சொல்மாலை `ஊனாய் உயிராய்\' (தி.7 ப.82) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். நட்டபாடைப் பண் எனக் குறிக்கத்தக்கது, நட்டராகம் என இதுபொழுதுள்ள பதிப்புகளில் தவறிக் குறித்தனர் போலும் என ஐயுறுவர் சிவக்கவிமணியார். அவர்தம் ஆய்வையும் காண்க. கருச்சுழி - கருப்பமாகிய மடு. இருட்சுழியும் - இருள்தங்கும் கழுத்து.

பண் :

பாடல் எண் : 112

அங்கணரைப் பணிந்துறையும்
ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண்
காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந்
திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி.

பொழிப்புரை :

இறைவரைத் தொழுது அங்குத் தங்கியிருந்த நம்பியாரூரருக்கு இரவில், கனவில் வெளிப்பட்டுக் காளை வடிவத் துடன் தோன்றிச், சிவந்த கையில் பொற்செண்டும், முடியில் சுழியமும் கொண்டு, எங்கும் காணமுடியாத இத்திருக்கோலத்தை எலும்பும் உருகுமாறு காட்டி,

குறிப்புரை :

பொற்செண்டு - வளைவுகளுடன் பிளந்து, நீண்ட நுனி யையுடைய பிரம்பு. சுழியம் - ஆண்மக்களுள் சிறந்தார்க்குரிய தலைய ணிகளுள் ஒன்று.

பண் :

பாடல் எண் : 113

கானப்பேர் யாம்இருப்ப
தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவும்
மாமுடியார் தாம்அகல
ஞானப்பே ராளர்உணர்ந்
ததிசயித்து நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார்
அருளிருந்த பரிசென்பார்.

பொழிப்புரை :

`யாம் இருப்பது கானப்பேர்\' என்று கூறி, வானின்றிழிந்துவரும் கங்கைப் பேராறு தங்குதற்கு இடமான பெரு முடியையுடைய பெருமான் மறைந்தருள, ஞானத்தின் பேராட்சியை யுடைய நம்பியாரூரர் விழித்து உணர்ந்து, அதிசயம் கொண்டு, பாம்புடன் பன்றியின் கொம்பையும் அணிந்த இறைவரின் திருவருள் என்னிடம் இருந்தவாறுதான் என்னே! என்பாராய்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 114

கண்டருளும் படிகழறிற்
றறிவார்க்கு மொழிந்தருளிப்
புண்டரிகப் புனற்சுழியல்
புனிதர்கழல் வணங்கிப்போய்
அண்டர்பிரான் திருக்கானப்
பேரணைவார் ஆரூரர்
தொண்டரடித் தொழலும்எனுஞ்
சொற்பதிகத் தொடைபுனைவார்.

பொழிப்புரை :

தாம் கண்ட தன்மையையும் சிவபெருமானின் அருள் தன்மையையும் சேரமானாருக்கு எடுத்துக் கூறித், தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிலைகளையுடைய திருச்சுழியலில் இறைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று, தேவர் தலைவரான இறைவரின் திருக்கானப்பேர் என்ற பதியை அடைபவரான நம்பியாரூரர், `தொண்ட ரடித் தொழலும்\' எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையைச் சாத்துவாராய்,

குறிப்புரை :

`தொண்டரடித் தொழலும்\' எனத் தொடங்கும் திருப்பதி கம் புறநீர்மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.84). இப் பதிகப் பாடல்தொறும் `கானப்பேர் உறை காளை\' என்றும் அப்பெரு மானைக் `கைதொழப் பெறுவது என்று கொலோ\' என்றும் அருளப் பெறுகின்றன. அவையே ஆசிரியரின் இவ்வரலாற்றிற்கு அரணாயின.

பண் :

பாடல் எண் : 115

காளையார் தமைக்கண்டு
தொழப்பெறுவ தென்றென்று
தாளைநா ளும்பரவத்
தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண
வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன
முனைப்பாடி வளநாடர்.

பொழிப்புரை :

காளையாரான இறைவரைக் கண்டு வணங்குவது என்றோ? எனப் பாடி, மனிதரைத் தொலைவில் காண அஞ்சிய நீர் நாயின் பக்கத்தில், வாளை மீன்கள் பாயும் இளகிய சேற்றையுடைய வயல் சூழ்ந்த திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான நம்பியாரூரர், தம் திருவடிகளை நாளும் பரவுமாறு அருளும் பரமரிடத்துச் சேர்வாராய்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 116

மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற `கானப்பேர்\' என்னும் வளம் பொருந் திய பதியினை வந்து அடைந்து, திருச்சடையில் வளருகின்ற பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் கோயிலை வலமாக வந்து, அதன் முன்பு வணங்கி, உள்ளே புகுந்து அணைந்து, முதல்வனாரின் சேவடி களில் விழுந்து வணங்கிப் பலவாறாகப் போற்றி மகிழத்தக்க செழுந் தமிழ் மாலையைப் பாடி வணங்கினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 117

ஆராத காதலுட
னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர்
சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக்
கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப்
பொருப்பர்திருப் புனவாயில்.

பொழிப்புரை :

நிறைதல் இல்லாத (எல்லையற்ற) பத்திமையுடன் அப்பதியில் வணங்கிப் போற்றிச், சிறந்த தொண்டர்களான நம்பியா ரூரரும் சேரமானும் அங்குச் சிலநாள்கள் விரும்பித் தங்கியிருந்து, மேகங்கள் தங்குதற்கு இடனான மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருக் கானப்பேர் என்ற பதியைக் கடந்து சென்று, போரில் வல்ல விடையை யுடையவரும், கயிலை மலையை யுடையவருமான இறைவரின் திருப்புனவாயிலைச் சென்று அடைந்தார்கள்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 118

புனவாயிற் பதியமர்ந்த
புனிதரா லயம்புக்கு
மனவார்வம் உறச்சித்த
நீநினைஎன் னொடுஎன்று
வினவான தமிழ்பாடி
வீழ்ந்திறைஞ்சி யப்பதியில்
சினவானை யுரித்தணிந்தார்
திருப்பாதந் தொழுதிருந்தார்.

பொழிப்புரை :

திருப்புனவாயில் என்ற பதியில் விரும்பி வீற்றி ருக்கும் இறைவரின் திருக்கோயிலுள் புகுந்து, உள்ளத்துள் பெரு விருப்பம் கொள்ளச், `சித்த நீ நினை என்னொடு\' எனத் தொடங்கும் வினாவுதல் அமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, நிலமுற விழுந்து வணங்கி, மதயானையை உரித்து அணிந்து கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பதியில் தங்கியிருந்தனர்.

குறிப்புரை :

`சித்த நீ நினை என்னொடு\' எனத் தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.50). `சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு - மனமே! இத்திருவருட் சார்பால் என்ன கிட்டும்? என எண்ணுவதை ஒழிவாயாக\' என்பது பொருளாம். இப்பதிகப் பாடல்தொறும் வரும் `சூள் அறு\' என்னும் தொடருக்குப் பொருள் இதுவாகவே அமைதலின், `வினாவான தமிழ்\' எனக் குறித்தார் ஆசிரியர். வினவும் மனத்திற்கு விடைகூறும் தமிழ்ப்பதிகம்.

பண் :

பாடல் எண் : 119

திருப்புனவா யிற்பதியில்
அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல
பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று
புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம்
பாம்பணிமா நகர்தன்னில்.

பொழிப்புரை :

திருப்புனவாயிலில் அமர்ந்திருக்கும் சிவபெரு மான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் விருப்புடைய கோயில்கள் பலவற்றையும் வணங்கி, அருள் விடைபெற்றுக், குன்றுகளும் காடு களும் கடந்து நீங்கி, நீர்வளம் சிறந்த காவிரி நாட்டை அடைந்து, மலையான நீண்ட வில்லையுடைய இறைவரின் திருப்பாம்பணி என்று வழங்கும் நகரத்தில் சேரமானுடன் நம்பியாரூரரும் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

பருப்பதம் - மலை. விருப்புடைய கோயில் பல என்பன ஓரியூர், திருமணமேற்குடி, திருப்பெருந்துறை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருப்புனவாயிலில் விரும்பி எழுந்தருளி யிருக்கும் இறைவரின் கோயில்கள் எனக் குறிப்பது, கோயில்கள் பலவாயினும் அங்கங்கும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே என்பது தெளியவாம்.

பண் :

பாடல் எண் : 120

பாதாளீச் சரமிறைஞ்சி
அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல்
வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார்
மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந்
திருவாரூர் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

திருப்பாதாளீச்சரத்தில் இறைவரை வணங்கிச் சென்று, அதன் அருகில் உள்ள பல திருப்பதிகளிலும் மறை முதல்வ ராய சிவபெருமானின் திருவடியை வணங்கிச் சென்று, மாங்கனி போன்ற இரு மார்பகங்களையுடைய மங்கையரின் அழகிய வாயினுக் குத் தோற்றதால் பகலில் வாய் திறக்க ஆற்றாது இரவு நேரத்தில் வாய் திறக்கும் செவ்வாம்பல் மலர்கள் நிறைந்த திருவாரூருக்கு மிக விரை வாக வந்து அடைந்தார்.

குறிப்புரை :

பாம்பணி - நகரின் பெயர். பாதாளீச்சரம் - கோயிற் பெயர். பாதாளத்திருக்கும் ஆதிசேடன் வழிபடப்பெற்றதால் இப் பெயர் பெற்றது. பலபதியும் என்பன பாம்பணிக்கும் திருவாரூருக்கும் இடைப்பட்ட பதிகள் பலவுமாம். அவை திருப்பூவனூர், திருவிடை வாய், திருப்பேரெயில், திருநாட்டியத்தான்குடி, திருவிளமர் முதலா யினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். செவ்வாம்பல் இரவிலேயே மலர்வது. தற்குறிப்பேற்ற அணிநலம் தவழ ஆசிரியர் இங்ஙனம் கூறினார். சூது - மாங்கனி; சூதாடு கருவியுமாம்.

பண் :

பாடல் எண் : 121

திருநாவ லூர்வேந்தர்
சேரர்குல வேந்தருடன்
வருவாரைத் திருவாரூர்
வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தருகாத லுடன்வணங்கித்
தம்பெருமான் கோயிலினுள்
பெருகார்வத் தொடுவிரும்பும்
பெரும்பேறு பெறப்புகுந்தார்.

பொழிப்புரை :

திருநாவலூர்த் தலைவரான நம்பியாரூரர், சேரர் குல மன்னருடன் வர, திருவாரூரில் வாழ்பவர்கள் எதிர்கொள்ள, மிக்க விருப்பத்துடனே வணங்கி, தம் இறைவரின் திருக் கோயிலுக் குள் பெருகும் விருப்புடனே வணங்கப் பெறும் பேற்றைப் பெறச் சென்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 122

வாசமலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி
நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம்
எடுத்தேத்தி எழுந்தருளால்
பாசவினைத் தொடக்கறுப்பார்
பயில்கோயில் பணிந்தணைவார்.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்திருக்கும் கோயிலை வலமாக வந்து, அன்பு பொருந் தத் திருமுன்பு வணங்கி, நெடிதுநேரமாக நின்று, போற்றி, நீண்டகாலம் பிரிந்திருந்த வருத்தத்தால் திருப்பதிகத்தைப் பாடி வணங்கி, அருள் விடைபெற்று, வெளியே வந்து, பாசவினைப்பற்றை அறுப்பவரான இறைவர் வீற்றிருக்கின்ற கோயிலைப் பணிந்து வருவார்,

குறிப்புரை :

நெடும்பொழுதெலாம் - நீண்ட வழிபாட்டுக் காலங்களில் எல்லாம் என உரைகாண்பர் சிவக்கவிமணியார். இதுபோது அருளிய பதிகம் `இறைகளோடிசைந்த இன்பம்\' (தி.7 ப.8) என்னும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாம்.

பண் :

பாடல் எண் : 123

பரவையார் மாளிகையில்
பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார
விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க
வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு
பொன்னணிமா ளிகைபுகுந்தார்.

பொழிப்புரை :

பரவையாரின் மாளிகையில் ஏவலர்கள் முன்சென்று சேர்ந்தனராகப், பொருந்தும் பெரிய அணிவகைகளான தூய மங்கலங்களை மிகுதியும் செய்து, பரவையார் எதிரேற்று வணங்க, நம்பியாரூரர் மலைநாட்டரசரான சேரமானையும் உடன் அழைத்துக்கொண்டு, பொன் அணிந்த அழகிய மாளிகையுள் புகுந்தார்.

குறிப்புரை :

பேரலங்கார விழுச்செல்வம் - அரசர் என்ற நிலையில் செய்யப்பெற்ற அணிவகைகளான மங்கலங்கள் : தோரணம், நிறை குடம் விளக்கு நிரைத்தல், நுழைவாயில் அழகுபெற அமைத்தல் முதலாயின. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 124

பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.

பொழிப்புரை :

அவர்கள் உள்ளே வந்தவுடன் பரவையார் முகமனுரை கூறிப் பரவி, அன்புடன் பணிந்து போற்றி, பொருந்திய திருவமுதும் கறிகளும் பற்பலவாய் சமைக்கச் செய்து, திருந்திய தேன் போன்ற சொல்லையுடையவராகி, உண்ணும் பரிகலமும் அதன் கீழ் இடும் திருப்பாவாடையும் பகல் விளக்கும் உடனே ஒழுங்குபட அமைத்து, அவ்விருவருக்கும் ஏவலர்களுக்கும் திருவமுது செய் வித்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 125

மங்கலமாம் பூசனைகள்
பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார்
தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம்
புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா
நல்விளையாட் டினைநயந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு நாளும் மாகேசுவர வழிபாடாகிய மங்கலமாகிய பூசனைகளைப் பரவையார் செய்துவரக் கண்டு, மகிழ்ந்து, அங்கு வீற்றிருக்கின்ற நம்பியாரூரரும் சேரர் பெருமானும் தமது பெருமான் அமர்ந்தருளும் திருக்கோயிலுக்குச் சென்று, ஆறு காலங்களிலும் இறை வழிபாடாற்றித் தம் இல்லத்து இருப்பார், பெருமானின் திருவருளை மறவாத நிலையில் நல்ல பல விளையாட்டு களையும் காண விரும்பினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 126

நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு நாளும் மாகேசுவர வழிபாடாகிய மங்கலமாகிய பூசனைகளைப் பரவையார் செய்துவரக் கண்டு, மகிழ்ந்து, அங்கு வீற்றிருக்கின்ற நம்பியாரூரரும் சேரர் பெருமானும் தமது பெருமான் அமர்ந்தருளும் திருக்கோயிலுக்குச் சென்று, ஆறு காலங்களிலும் இறை வழிபாடாற்றித் தம் இல்லத்து இருப்பார், பெருமானின் திருவருளை மறவாத நிலையில் நல்ல பல விளையாட்டு களையும் காண விரும்பினர்.

குறிப்புரை :

செண்டு - பந்து போல்வதோர் விளையாட்டுக் கருவி. அதனை நின்றவாறு இருந்து வீசி ஆடுவது நிலைச்செண்டு ஆடுவ தாம். குதிரைமீது இவர்ந்து இடம் வலமாகச் சுழன்று அக்கருவியை வீசி ஆடுவது பரிச்செண்டு ஆடுவதாகும். தகர் - ஆட்டுக் கடாக்கள். இவை தம்முன்பொரக் காண்பது பண்டிருந்த விளையாட்டு இன்பங்களுள் ஒன்றாகும். `பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து\' (குறள், 486) எனவரும் திருக்குறளும் நினைவு கூரலாம். வாரணம் - கோழி. கோழிகள் தம்முள் பொரக் காண்பது.
`வருசெரு ஒன்றின்மையினால் மற்போரும்
சொற்புலவர் வாதப் போரும்
இருசிறை வாரணப் போரும் இகல்மதவா
ரணப் போரும் இனைய கண்டே\'
எனவரும் கலிங்கத்துப்பரணியும் (அவதாரம், 277) காண்க.

பண் :

பாடல் எண் : 127

விரவு காதல் மீக்கூர
மேவு நாள்கள் பலசெல்லக்
கரவில் ஈகைக் கேரளனார்
தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்
பரவை யார்தங் கொழுநனார்
தம்மைப் பனிந்து கொண்டணைவான்
இரவும் பகலுந் தொழுதிரக்க
இசைந்தார் அவரும் எழுந்தருள.

பொழிப்புரை :

மிக்க பெருவிருப்பம் மீதூர, இவ்வாறு தங்கும் நாள்கள் பல கழியக், கரத்தல் இல்லாத கொடைத் தன்மையுடைய சேரமான், கடல் சூழ்ந்த தங்கள் மலைநாட்டில், பரவையாரின் கணவ ரான நம்பியாரூரரை வணங்கி, உடன் அழைத்துக் கொண்டு செல்லுதற் பொருட்டு, இரவும் பகலும் வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 128

நங்கை பரவை யார்உள்ளத்
திசைவால் நம்பி யெழுந்தருளத்
திங்கள் முடியார் திருவருளைப்
பரவிச் சேர மான்பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்
கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி இருவரும்போய்ப்
புக்கார் புனிதர் பூங்கோயில்.

பொழிப்புரை :

பரவையாரின் உளம்நிறைந்த இசைவைப் பெற்று நம்பியாரூரர் புறப்பட்டாராகப், பிறைச் சந்திரனை அணிந்த இறைவ ரின் திருவருளை இவ்வாறு பெற்றதன் பொருட்டுப் போற்றிச் சேரமான் பெருமாள் நாயனார் அத்திருப்பதியில் உள்ள அனைத்துச் சிவன் அடியார்களுக்கும் தக்கவாறு பூசைகள் செய்து, மேல் எழுகின்ற முயற்சியினால் இருபெருமக்களும் இறைவரின் பூங்கோயிலுக்குள் சென்றனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 129

தம்பி ரானைத் தொழுதருளால்
போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர்
நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற்
றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர்
தொழுது மேல்பாற் செல்கின்றார்.

பொழிப்புரை :

தம் இறைவரைத் தொழுது அருள் விடை பெற்று, வெளியே வந்து, தொண்டர்கள் உடன் போதர, நம்பியாரூரரும் சேர நன்னாட்டின் மன்னரான பசும்பொன் முடி சூடிய கழறிற்றறிவார் நாயனாரும் புறப்பட்டுச் சென்று, செம்பொன் அணிந்த நீடிய மதில் சூழ்ந்த திருவாரூரினை வணங்கி, மேற்றிசையாகச் செல்கின்றவர்கள்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 130

பொன்பரப்பி மணிவரன்றிப்
புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த
கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல்
விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன்
பணிந்துபுறத் தணைந்தார்கள்.

பொழிப்புரை :

பொன்னைக் கொழித்துப் பரப்பியும், மணிகளை வாரிக் கொழித்தும் நீர் பரவிச் செல்லும் காவேரி ஆற்றின் தென்கரை வழியே சென்று, சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில்கள் பலவற்றையும் வணங்கி, மின் போன்ற ஒளி வீசுகின்ற சடையையுடைய இறைவர் விருப்புடன் வீற்றிருக்கின்ற `திருக் கண்டியூரை\' அன்பால் உருகப் பெறும் மனத்துடன் சென்று பணிந்து வெளியே வந்தனர்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் கிடைத்திலது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 131

வடகரையில் திருவையா
றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக
வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங்
காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத்
தொழுவதற்கு நினைவுற்றார்.

பொழிப்புரை :

காவிரிக்கு வடகரையில் திருவையாறானது எதிரே தோன்றவும், உடலும் உள்ளமும் உருக, மலர் போன்ற கைகளைத் தலைமீது குவித்துக், கடல் பெருகி வந்தது என்னுமாறு பெருகி வரும் காவேரி ஆற்றைக் கடந்து, வட கரையில் ஏறிச் சென்று, இடையறாத தொடர்பு பூண்ட இறைவரின் திருவடியை வணங்குதற்குத் திருவுளம் கொண்டனர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 132

ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.

பொழிப்புரை :

திருமகள் என்றும் பிரியாது உறைகின்ற சேரமான் பெருமாள் நாயனார், திருவையாற்றை நினைந்து நின்றவாறே வணங்கி, திருவருட்பெருக்குடைய நம்பியாரூரரைப் பார்த்து, அருள் செய்பவராய், `நஞ்சுண்ட கழுத்தினை உடைய இறைவர் வீற்றிருக் கின்ற திருவையாற்றிற்குச் சென்று பணிய உள்ளம் உருகிடலாயிற்று, நாம் இவ்வாற்றைக் கடந்து செல்வோம்!\' எனக் கூற,

குறிப்புரை :

செய்யாள் - திருமகள் அரசர்கள் திருமாலின் தோற்ற முடையர். ஆதலின் `செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள்\' என்றார். `திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே\' என்னும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 133

ஆறு பெருகி இருகரையும்
பொருது விசும்பில் எழுவதுபோல்
வேறு நாவாய் ஓடங்கள்
மீது செல்லா வகைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி
நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார்
தரியா தழைத்துப் பாடுவார்.

பொழிப்புரை :

காவிரி ஆறு பெருக்கெடுத்து இரு கரைகளையும் அலைத்து வானத்தில் எழுவதைப் போல், வேறு மரக் கலங்களாவது ஓடங்களாவது மேல் செல்லாதபடி மிகுத்துச் செல்லத், திருநீறு விளங்கும் மேனியையுடைய இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பெருமான் மீது கொண்டிருக்கும் அன்பின் வழிச் செல்லும் உரிமை கொண்ட நம்பியாரூரர், ஆறுதடுத்து நிற்பதைப் பொறுக்க இயலாது, இறைவரை விளித்துப் பாடத் தொடங்கி,

குறிப்புரை :

ஆறு - வழி. பெருமான் மீது கொண்டிருக்கும் அன்பின் பெருக்காய ஆற்றின் வழிச் செல்லும் தகுதி உடையராய ஆரூரருக்கு, இவ்வாறு தடையாகுமோ எனும் குறிப்புப்பட நின்றது. அவர் கொண் டிருக்கும் ஆறு அன்பாகிய ஆறு. அது அடைக்கும் தாழ் ஏதும் இல்லா தது. நீரையுடைய இவ்வாறோ, ஆங்காங்கும் அடைக்கப்பட்டுத் தடுக்கப் பட்டுச் செல்லும் இயல்பினது. இவ்வியப்பினதாய ஆறு, அன்பாகிய அவ்ஆற்றைத் தடுக்கவல்லதன்று என்பது பட நின்றது.

பண் :

பாடல் எண் : 134

பரவும் பரிசொன் றெடுத்தருளிப்
பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா
றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர்
நின்று தொழுது பாடுதலும்.

பொழிப்புரை :

: `பரவும் பரிசு\' எனத் தொடங்கிப் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றின் நிறைவிலும் பாம்பை அணியும் இறைவரை, `ஐயாறுடைய அடிகேளோ\' என்று நிரம்பிய விருப்புடன் அழைத்து, விளக்கம் கொண்ட பெருமையுடைய திருப்பதிகத்தை நிரவும் பண்ணிசையமைய வன்தொண்டப் பெருந்தகையார் நின்று தொழுது பாடவும்,

குறிப்புரை :

`பரவும் பரிசு\' எனத் தொடங்கும் பதிகம் காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.77). பாடல்கள் தொறும், `திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ\' எனும் தொடர் அமைந்து, ஆரூரர் தம் ஆர்வ மிகுதியைக் காட்டி நிற்கின்றது. காவிரிக் கோட்டம் - காவிரிக்கரை. அடிகள் என்பது, ஓலப் பொருண் மையும் விளிப் பொருண்மையும் அமைய `அடிகேளோ\' என நின்றது.

பண் :

பாடல் எண் : 135

மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.

பொழிப்புரை :

பேரவையுள் நிறைந்து திருக்கூத்து இயற்றுதலில் வல்ல இறைவர், தன் கன்று தடைப்பட்டு எதிர் அழைக்கக் கேட்டுத் தான் கதறிக் கனைக்கும் இளைய பசுவைப் போல், ஒன்றுபட்ட உணர் வால் இயங்கியற் பொருள்கள், நிலையியற் பொருள்கள் ஆகிய அனைத்தும் கேட்கும்படி `ஓலம்\' என்று மொழிந்தார். அந்நிலையில் அக்காவிரியாறும் தொடர்ச்சி நீங்கி வழி காட்ட,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 136

விண்ணின் முட்டும் பெருக்காறு
மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர்
வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக்
கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங்
கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.

பொழிப்புரை :

வானத்தை முட்டுமாறு பெருக்கெடுத்துச் செல்லும் காவிரியாறு மேற் பக்கத்தில் பளிங்கு மலை போல் தாங்கி நிற்க, கீழ்ப் பக்கத்தில் நீர் வடிந்த இடையில், நல்ல வழியினை உண்டாக்கிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்ட தொண்டர்கள், மிக்க மழைபோல் கண்ணீர் பொழிந்து திருமேனியில் மயிர்க்கூச்சம் கொள்ளக், கைக ளைத் தலைமீது குவித்து வணங்கினர்.

குறிப்புரை :

தண்ணீர் வெண்மை நிறத்தது ஆதலின், அது தடைப்பட்டு நின்றது பளிங்குமலை போல் இருந்தது என்றார். இவ்வைந்து பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 137

நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.

பொழிப்புரை :

நம்பியாரூரரின் திருவடிகளைச் சேரமான் பெருமாள் வணங்க, நாவலூரில் வந்தருளிய செம்பொன் போன்ற முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய நம்பியாரூரரும் சேரமான் பெருமாளை எதிர் வணங்கி, `இது தேவர்க்குத் தலைவராய இறைவர் உமக்கு அளித்த திருவருள் அன்றோ?\' எனக் கூற, இருவரும் கூடி மகிழ்ந்து இறைவரைப் போற்றிப் பரவிப் பெரிய காவிரியின் நடுவே சென்றனர்.

குறிப்புரை :

இருவரும் தாழ்வெனும் தன்மை கொண்டு, தம் பெருமை தாமறியாத் தன்மையராய் வாழ்ந்த தகைமை எண்ணற்குரியது.

பண் :

பாடல் எண் : 138

செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்
சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின்
இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார்.

பொழிப்புரை :

திருவமைந்த செம்மையான சொற்களை வழங்கி யருளும் தமிழ் நாவலர் பெருமானும், சேரமானும் தம் இறைவர் குறைவில்லாமல் நிறையப் பெருகிய ஆற்றின் நடுவில் அளித்தருளிய மணல் வழியில், தம்மைச்சார்ந்துள்ள ஏவலாளர்களும் தாமுமாக ஏறிச் சென்று, திருவையாற்று இறைவரைப் பணிந்து நிலத்தில் விழுந் தனர்; எழுந்தனர்; போற்றினர்.

குறிப்புரை :

தஞ்சம் உடைய - தம்மைச் சார்ந்துள்ள.

பண் :

பாடல் எண் : 139

அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.

பொழிப்புரை :

அருள் நோக்கமுடைய இறைவரின் திருக்கருணை யில் திளைத்து நிறைவு பெறாத வகையில் அமைதிப் படுத்திக் கொண்டு, அதில் முழுகி வணங்கித் தம் பெருமானின் திரு முன்பு சென்று வணங்கி, அங்கு நின்றும் மீண்டு வந்து, பெரிய காவியாற்றின் நடுவில் முன் வந்த வழியே சென்று கரையேறப் பெரிய மலை போன்ற நின்ற ஆற்று நீரும் விரைந்து தொடர்ந்து முன் போல் பெருகி ஓடியது.

குறிப்புரை :

ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 140

ஆய செயலின் அதிசயத்தைக்
கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம்
பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார்
திருவா ரூரர் சேரருடன்.

பொழிப்புரை :

இத்தகைய அருட் செயலின் பெருநிலையைக் கண்டு, அக்கரையில் நின்று, திருவையாற்றில் வீற்றிருக்கும் இறைவ ரின் திருவருளைப் போற்றி நிலமுற விழுந்து வணங்கி, எழுந்து, மேற்றிசை வழியே சென்று, தூய பிறைச் சந்திரன் வாழ்தற்கு இடனான சடையையுடைய இறைவரின் பிற பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, செம்மையுடைய கொங்கர்களின் நாட்டை, நம்பியாரூரர் சேரமானுடன் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

பிற பதிகளாவன, திருஎறும்பியூர், திருநெடுங்களம், திருச் சிராப்பள்ளி, திருமூக்கீச்சரம், திருக்கடம்பந்துறை முதலியவாகலாம்.

பண் :

பாடல் எண் : 141

கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.

பொழிப்புரை :

கொங்கர் நாட்டைக் கடந்து சென்று, விளங்கும் மலை நாட்டின் எல்லையை அடைய, `நம் சேரர் பெருமானின் தோழ ரான, தம்பிரான் தோழர், அங்கு ஒருசேர அணைவதற்குப் புறப்பட்டு வருகின்றார்\' என்ற விருப்பத்தினால், அந்நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும், அவர்களை வரவேற்று எதிர்கொண்டு இன்பம் அடைவார் களாகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 142

பதிகள் எங்குந் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.

பொழிப்புரை :

அந்நகரம் எங்கணும் தோரணங்களும், அதன் பக்கங்களில் எங்கும் மலர்ச் சோலைகளும், வழிகளில் எங்கும் குளிர்ந்த பந்தல்களும், வீடுகளில் எங்கும் மேகம் போல் எழும் அகில் புகையும், ஆறுகளில் எங்கும் மலர்க் குவியல்களும், அவற்றின் பக்கங்கள் எங்கும் அவற்றால் ஒதுக்கப்படும் மணி பொன் முதலியன வாய் ஓங்குவனவான நிதியங்களும், எங்கும் முழவின் ஒலிகளும், நிலம் எங்கும் ஒளி கொண்ட பொற் பூவாம் மழையும் என இவ்வாறு அந்நகரை அணிசெய்ய,

குறிப்புரை :

வதிகள் - வழிகள். பொலம் - பொன்.

பண் :

பாடல் எண் : 143

திசைகள் தோறும் வரும்பெருமை
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங்
கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்
மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்
தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு எல்லாத் திசைகளிலும் இருந்து வரும் பெருமைகளையும், அமைச்சர்களும் படைகளும் கூடிய பெரு வெள்ளத்தையும், பிடரி மயிரையுடைய குதிரை அணி வகுத்த வெள் ளத்தையும், மத்தகத்தையுடைய யானைப் படையின் வெள்ளத்தை யும், இவர்ந்து வருதற்கான அணிகலம் கொண்ட பெண் யானை களின் வெள்ளத்தையும், விரும்பும் சோற்றுப் பெருக்கங்களான வெள் ளத்தையும் பார்த்துக் கெடாத இன்பமாகிய வெள்ளத்தில் முழுகி, நம்பி யாரூரரும் சேரமான் பெருமாளும் கொடுங்கோளூரை அடைந்தனர்.

குறிப்புரை :

ஆண் யானைகள் ஓரொருகால் மதம் கொள்ளும் இயல்பினவாதலின் பெண் யானைகளே இவர்ந்து வருதற்குரியன. ஆதலின் `மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்\' என்றார். மிசை கொள் - மேல் அமர்ந்து வருதற்கான. பண்ணும் - ஒப்பனை செய்யப் பெற்ற. குசைகொள் வாசி - பிடரிமயிரையுடைய குதிரைகள். குசை - கடிவாளம் எனினுமாம். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 144

கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வே றலங்கரித்து.

பொழிப்புரை :

ஆண் யானைகள் ஓரொருகால் மதம் கொள்ளும் இயல்பினவாதலின் பெண் யானைகளே இவர்ந்து வருதற்குரியன. ஆதலின் `மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்\' என்றார். மிசை கொள் - மேல் அமர்ந்து வருதற்கான. பண்ணும் - ஒப்பனை செய்யப் பெற்ற. குசைகொள் வாசி - பிடரிமயிரையுடைய குதிரைகள். குசை - கடிவாளம் எனினுமாம். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

குறிப்புரை :

கோடித்து - ஒப்பனை செய்து. சூளி - நிலா முற்றம். கோ நகர்கள் - அரசர் தங்குதற்குரிய தனியிடங்கள். (உடு - விண் மீன்கள்).

பண் :

பாடல் எண் : 145

நகர மாந்தர் எதிர்கொள்ள
நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி
ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார்
சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு
புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.

பொழிப்புரை :

இவ்வாறு அந்நகரமக்கள் எதிர்கொள்ள வந்து, அளவற்ற ஆடரங்குகள் தோறும் மகரக் குழையணிந்த பெண்கள் பாடி, ஆட, அழகான வீதியில் சேர்வாராய்ச், சிகரங்களையுடைய தம் பெரிய மாளிகையில் சேராது, மேற்சென்று திருவஞ்சைக்களத்தில் ஒப்பில்லாத திருத்தொண்டரான நம்பியாரூரரை உடன் அழைத்துக் கொண்டு சேரமான் பெருமாள் புகுந்தார்.

குறிப்புரை :

தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.

பண் :

பாடல் எண் : 146

இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.

பொழிப்புரை :

தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.

குறிப்புரை :

தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.

பண் :

பாடல் எண் : 147

தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.

பொழிப்புரை :

தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 148

நல்ல தோழர் நம்பெருமாள்
தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.

பொழிப்புரை :

சிலர், நம் மன்னராய பெருமானாருக்கு இவர் நல்ல தோழர்! என்பர். சிலர், இவரைக் கண்டு தொழுவதற்கு நாம் அள வற்ற தவம் முன்பு என்ன செய்தோம்! என்பர். சிலர், நம் மலை நாட் டுக்கு இனிப்பெற வேண்டிய வேறு செல்வம் என்ன உள்ளது? என்பர். சிலர், சொல்லும் அளவில் அடங்குமோ நம் பெருமாள் செய்யும் தொழில்! அதனைப் பாரீர்! என்பர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 149

பூவும் பொரியும் பொற்றுகளும்
பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே
புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவுந் துதிகள் எம்மருங்கும்
பயில வந்து மாளிகையின்
மாவுங் களிறும் நெருங்குமணி
வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.

பொழிப்புரை :

பூவையும் பொரியையும் பொன் துகளையும் கலந்து வீசி வணங்குவர் சிலர். தங்கட்கு ஒப்பில்லாத இவர் தோன்றிய காவிரித் திருநாடே உலகுக்குத் திலகம் போன்று விளங்குவதாகும் என்று வியந்து உரைப்பர். இங்ஙனம் போற்றி மகிழும் புகழுரைகள் எம்மருங்கும் மிக, வந்து சேர்ந்து திருமாளிகையின் முன், குதிரை களும் யானைகளும் நெருங்கும் மணி வாயிலுள் புகுந்து, சுந்தரரும் சேரமானும் யானையினின்றும் இறங்கினர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 150

கழறிற் றறியுந் திருவடியும்
கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற் பொலியுந் திருநெடுந்தோள்
முனைவர் தம்மை யுடன்கொண்டு
விழவிற் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்கா சனத்தின்மிசை
நிழல்திக் கொளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர்நின்று.

பொழிப்புரை :

கழறிற்றறிவாராய அடிகளும், கலைகளில் வல்ல நாவலர் பெருமானாம், முழவைப் போன்று விளங்கும் பெருந் தோள் களையுடைய நம்பி ஆரூரரை அழைத்துச் சென்று, விழாப் பொலிவு கொண்டிருக்கும் மாளிகையுள் விளங்கும் அரியணையின் மீது, எண் திசையாலும் ஒளி வீசும் அணிகளை அணிந்த ஆரூரரை அமர்ந் திருக்கச் செய்து, தாமும் அவர் முன்னே நின்று,

குறிப்புரை :

திருவடி - அடிகள் எனும் பொருள்பட நின்றது. `வாகீசத் திருவடி யாம்\' என்பர் முன்னும் (தி.12 பு.21 பா.109). மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நிற்பவர் ஆதலின், `நிழல் திக்கு ஒளிரும் பூணார்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 151

செம்பொற் கரக வாசநீர்
தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி
யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது
தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங்
கெல்லாம் இசைய வேண்டுமென.

பொழிப்புரை :

செம்பொன் கரகத்தில் மணமுடைய நல்ல நீரைத் தம் தேவிமார்கள் எடுத்து ஏந்தி வார்க்க, அழகிய அவர்தம் திருவடி களைத் தாமே விளக்கத் தொடங்கிய போது, நம்பியாரூரர் தம் திருவடி களை உள் வாங்கிக் கொண்டு `இது செய்தல் தகாது\' என்று அருளிச் செய்ய, நிலத்தில் விழுந்து வணங்கி, `எம் அன்பின் தகுதிக்கு ஏற்ற வாறு செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்\' என்று வேண்டி விண்ணப்பித்துக் கொள்ள,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 152

பெருமாள் வேண்ட எதிர்மறுக்க
மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
செய்த வெல்லாங் கண்டிருந்தார்
அருமா னங்கொள் பூசனைகள்
அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமா மதிவெண் குடைவேந்த
ருடனே அமுது செய்துவந்தார்.

பொழிப்புரை :

செம்பொன் கரகத்தில் மணமுடைய நல்ல நீரைத் தம் தேவிமார்கள் எடுத்து ஏந்தி வார்க்க, அழகிய அவர்தம் திருவடி களைத் தாமே விளக்கத் தொடங்கிய போது, நம்பியாரூரர் தம் திருவடி களை உள் வாங்கிக் கொண்டு `இது செய்தல் தகாது\' என்று அருளிச் செய்ய, நிலத்தில் விழுந்து வணங்கி, `எம் அன்பின் தகுதிக்கு ஏற்ற வாறு செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்\' என்று வேண்டி விண்ணப்பித்துக் கொள்ள,

குறிப்புரை :

மானம் - பெருமை. சந்தனக் கலவை சாத்தல், மலர் வழிபாடு, நறும்புகை காட்டல், ஒளிவிளக்குக் காட்டல் முதலிய பலவும் அடங்க `அரு மானங் கொள் பூசனைகள்\' என்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 153

சேர ருடனே திருவமுது
செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான்
மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள்
இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச்
சாத்தி மிக்க தமக்காக்கி.

பொழிப்புரை :

சேர மன்னருடன், உடன் அமர்ந்து உணவு உண்ட பின்பு, மணமுடைய சந்தனமும், அது கலந்த கத்தூரிச் சாந்தும், ஆடை யும், அணியும், மணிப் பூண்களும் குளிர்ந்த மணம் நிறைந்த மலர் மாலைகளும் என்ற இவை முதலான அணியத்தகும் பொருள் வகைக ளைத் தம் கைகளை வளைத்துச் சாரும்படி எடுத்து வன்தொண்ட ருக்குச் சாத்தியும், எஞ்சியவற்றைத் தமக்குப் பயன் படுத்தியும்,

குறிப்புரை :

கை கோட்டிச் சாத்தி எனக் கூட்டுக. கைகோட்டி - கலவைச் சாந்து அணிவித்தல், ஆடை முதலான வற்றை அணிவித்தல் போன்ற செயல்களுக்கெல்லாம் தம் கைகளை வளைத்துச் செயத்தக்க முறையில் செய்து. கை கோட்டி - உணவருந்திய பின்பு முறைப்படிக் கைகளைத் தூய்மை செய்து என்றுரைப்பாருமுளர். எனினும் முன்னைய பொருளே சிறக்கும். ஆரம் - சந்தனம். வருக்கம் - அணியத்தக்க பொருள் வகை.

பண் :

பாடல் எண் : 154

பாடல் ஆட ல் இன்னியங்கள்
பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.

பொழிப்புரை :

பாடலும், ஆடலும், இனிய இசைக் கருவிகள் இசைத்தல் முதலான மகளிர் விளையாட்டில் நீடும் இனிய மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளும் ஆகக் காலங்கள் தோறும் நிகழ்த்தியும், அருகி லுள்ள மணமுடைய மலர்களால் மணம் வீசும் சோலைகளில் அமர் வித்தும், தம்முடன் திருமுனைப்பாடி நாட்டின் தலைவர் பெருமா னான நம்பியாரூரரை மகிழ்வித்திருந்தார் கோதையர் பெருமான்.

குறிப்புரை :

பண்ணையினில் - விளையாட்டு வகைகளில். விநோதங் கள் - மகிழ்ச்சி தரத்தக்க வியத்தகு செயல்கள். ஆராமங்கள் - சோலை கள். திருமாளிகையின் அகத்தும் புறத்தும் அழகுபெற உருவாக்கிய சோலைகள். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 155

செண்டாடும் தொழின்மகிழ்வும்
சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடும் மலர்வாவி
மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத்
தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக்
காவலனார் காதல்செய்நாள்.

பொழிப்புரை :

பந்தாடுகின்ற தொழிலின் நிகழ்ச்சியும், சிறு சோறு உண்ணும் பெருஞ்சிறப்பும், வண்டுகள் தங்குவதற்கு இடமான பூக்கள் நிறைந்த பொய்கைகளில் பொருந்திய நீரில் விளையாடுதலும், குறைவற்ற மும்மதங்களையும் மத்தகத்தையும் உடைய பெரிய மலை போன்ற யானைகளின் போரும், சினத்துடன் செய்யும் வீரர்களின் போரும் என்னும் இவற்றைக் காணுமாறு செய்து, நிறைவுறாத பெரும் விருப்பம் பொருந்தச் சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரர்க்கு மகிழ்வை ஏற்படுத்திவரும் நாளில்,

குறிப்புரை :

சிறு சோறு - பொதிச் சோற்றின் வகைகளாகவுள்ளவை. சர்க்கரைப் பொங்கல், புளிச்சோறு, தேங்காய்ச் சோறு, எலுமிச்சப் பழச் சோறு, தயிர்ச்சோறு முதலியனவாம். தண்டா - குறையாத. சலமற் போர் - சினத்துடன் வீரர்கள் செய்யும் போர்.

பண் :

பாடல் எண் : 156

நாவலர்தம் பெருமானும்
திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள்
மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை
மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார்.

பொழிப்புரை :

நாவலர் பெருமானான நம்பி ஆரூரரும் திருவா ரூரை ஆட்சி கொண்டிருக்கும் வானவர் தலைவரான இறைவரின் திருவடிகளை, ஒரு நாள் மிகவும் நினைவிற் கொண்ட உள்ளத்த வராய், என் உயிர் போன்றவரைத் திருவாரூர் இறைவரை `மறக்கலும் ஆமே\' என்ற கருத்து நிறைவு கொண்ட திருப் பதிகத்தைப் பாடி, அச்சம் கொண்டார்.

குறிப்புரை :

இக்கருத்தும் நிறைவுமுடைய திருப்பதிகம் `பொன்னும் மெய்பொருளும்\' எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி.7 ப.59). `மறக்கலுமாமே\' எனும் தொடர் பாடல் தொறும் அமைந்துள்ளது. மறக்கலும் ஆமே? ஆகாது என்றும் பொருள்பட நின்றது. ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. எனவே ஆரூருக்குச் செல்லவேண்டும் எனத் திருவுளம் பற்றினர்.

பண் :

பாடல் எண் : 157

திருவாரூர் தனைநினைந்து
சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன்
வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக
வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார்
பிரிவாற்றார் பின்செல்வார்.

பொழிப்புரை :

திருவாரூரை நினைந்தவாறு, `அங்குச் சென்று தொழுவேன்!\' என்று மனத்தில் எண்ணி, மேற்கொண்டு, பேரன்பு டைய தொண்டர்களுடன் புறப்பட்டுச் செல்ல எழுந்தபோது, பெரிய சேரமான்பெருமாள் நாயனார், நீங்காத நட்பினால் உள்ளம் உள் உருக அவருடன் எழுந்து கை கூப்பி வணங்கிப் பிரிவாற்றாமல் அவர் பின் செல்வாராகி,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 158

வன்றொண்டர் முன்எய்தி
மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன்
என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே
யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி
அரசாளும் எனமொழிந்தார்.

பொழிப்புரை :

வன்தொண்டரின் முன் சென்று, உள்ளம் அழிந்த உணர்ச்சியினை உடையவராய், `இன்று உம் பிரிவைத் தாங்க இயலாதவன் ஆனேன்! நான் என் செய்வேன்?\' எனக் கூற, `நீர் ஒரு சிறிதும் வருந்தாமல் உம் நகரத்தில் இருந்தருளிப் பகைவரைப் புறங்கண்டு ஆட்சி செலுத்துவீராக!\' என்று சுந்தரர் உரைத்தருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 159

ஆரூரர் மொழிந்தருள
அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி
எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித்
திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல்
நீக்கவும்அஞ் சுவன்என்றார்.

பொழிப்புரை :

நம்பியாரூரர் இவ்வாறருள, அது கேட்ட அருளையுடைய சேரமானார், `எனக்கு இவ்வுலகத்தோடு விண்ணுல கத்தின் அரசாட்சியுமாவது தங்களின் திருவடி மலர்களே ஆகும்; ஆயினும், தேர் ஓடும் நீண்ட பெரு வீதிகளையுடைய திருவாரூருக்குத் தாங்கள் எழுந்தருளுவதற்குக் கொண்டெழுந்த பேரார்வத்தை விலக்கவும் யான் அஞ்சுவேன்!\' என்றார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 160

மன்னவனார் அதுமொழிய
வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம்
எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர்
நீரிருப்பீர் எனவிறைஞ்ச.

பொழிப்புரை :

சேரர் பெருமான் இவ்வாறருளக் கேட்ட நம்பி யாரூரர் மறுமொழி கூறுவாராய், `என் உயிரினும் இனிய அழகிய திருவாரூர் இறைவரை, வன்மையான நெஞ்சுடைய நான் மறந்தி ரேன்; பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் இன்னருள் துணையால் அரசை ஆள்வீர்! நீவிர் இங்கே இருப்பீராக!\' என்று வணங்க,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 161

மற்றவரும் பணிந்திசைந்தே
மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில்
இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா
னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை
ஏற்றிவரப் பண்ணும்என.

பொழிப்புரை :

அதைக் கேட்ட சேரமானாரும் வணங்கி, இசைந்து, தம் அமைச்சரை அழைத்து, அழகு நிறைந்த பழைமையான இந்நகரின் பண்டாரத்தே இன்று வரை சேர்ந்திருக்கும் நல்ல பெரும் பொருள்களின் வகைகளாக உள்ளவற்றையெல்லாம், எடுத்துச் செல்லத்தகும் ஆள்களின் மீது ஏற்றி வருமாறு செய்யுங்கள் என்று ஆணையிட,

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 162

ஆங்கவரும் அன்றுவரை
ஆயமா கியதனங்கள்
ஓங்கியபொன் நவமணிகள்
ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு
வருக்கமுதல் நலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேல்
தலம்மலியக் கொண்டணைந்தார்.

பொழிப்புரை :

அவ்வமைச்சர்களும் அவ்வாணையின் வண்ணம், அன்றுவரை இறைப்பொருளாகச் சேர்ந்துள்ள பொருள்களையும், விலையுயர்ந்த பொன், நவமணிகள், ஒளி வீசும் மணிகளைக் கொண்ட அணிவகைகள், ஆடை வகைகள், அவற்றின் அருகிருந்த மணப் பொருள்களின் வகைகள் ஆகிய இவற்றையும் நன்மையால் சிறந்து விளங்கும்படி தாங்கும் பொதிகளாய் அமைத்து அதற்குரிய ஆட்களின் மீது ஏற்றி, நிலம் நிறையக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

குறிப்புரை :

ஆயம் - இறைப்பொருள். ஞாங்கர் - அவ்விடத்தின் அருகே. விரையுறுப்பு வருக்கம் - நறுமனப்பொருள்களாகக் கூட்டி யுரைப்பன; கத்தூரி, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ முதலாயின. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 163

மற்றவற்றின் பரப்பெல்லாம்
வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு
முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத்
தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி
விடையளித்தார் வன்றொண்டர்.

பொழிப்புரை :

அச்செல்வங்களில் பரவிய பொதிகள் எல்லா வற்றையும் வன்தொண்டர் தம் ஏவலர்களின் வழி முன்னே செல்லு மாறு விடுத்துத், தம் பொன்னடிகளை வணங்கிய சேரமான் பெருமானைத் திருமுனைப் பாடி நாட்டவரான வன்தொண்டர் தாமும் எதிர் வணங்கி, பணிந்த அவரை முகந்தெடுத்து, அணிந்த மாலையை யுடைய மலைபோல் உயர்ந்த தோள்கள் பொருந்தத் தழுவிக் கொண்டு, பின்பு விடையளித்தார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 164

ஆரூரர் அவர்தமக்கு
விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு
கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன்
பூண்டிவழிச் செல்கின்றார்.

பொழிப்புரை :

நம்பி ஆரூரர், சேரமான் பெருமானாருக்கு விடை தந்தருளி, அந்நகரத்தினின்றும் நீங்கிச் சென்று, மேகங்கள் தவழும் மலைகளையுடைய அந்நாட்டைக் கடந்து, கற்சுரங்களும் நீர் பெருகும் காட்டாறுகளும் நீண்ட காடுகளும் பல பிற்படச் செல்ல, சிறப்புடைய திருமுருகன்பூண்டி வழியாகச் செல்கின்றவர்,

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 165

திருமுருகன் பூண்டிஅயல்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ அதுஅறியோம்.

பொழிப்புரை :

திருமுருகன் பூண்டியின் அருகே செல்லும் பொழுதில், போர் முகத்ததாய விடையையுடைய சிவபெருமான், நம்பி ஆரூரருக்குத் தாமே பொன் தந்தருளுவதல்லாது வேறு எவரும் கொடுப்ப அதனைக் கொள்ளலாகாது, என்ற தன்மையைக் காட்டுதற்கு, அதைத் தாம் வாங்கிக் கொண்டு பெருகும் திருவருளினால், தாமே கொடுப்பதற்கும் அவர் பெறுவதற்குமாக வரும் நிலை கூடுவதற்காகவோ என்னவோ? அதை அறியோம்?

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 166

வென்றிமிகு பூதங்கள்
வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங்
கவரஅருள் வைத்தருள
அன்றினார் புரமெரித்தார்
அருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியில்
இருபாலும் செயிர்த்தெழுந்து.

பொழிப்புரை :

வெற்றி மிக்க பூதகணங்கள் வேடர் வடிவாய்ச் சென்று, சுந்தரர் கொணரும் நிதியங்களைக் கவர்ந்து கொள்ளும்படித் திருவருள் வைத்தருளவே, பகைத்தவரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருவருளால், அப்பூதகணங்கள் அவ்வாணைவழி வேடர் உருக்கொண்டு சென்று, அந்நாவலூரர் வரும் வழியின் இருமருங்குமாகச் சினந்து எழுந்து,

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 167

வில்வாங்கி அலகம்பு
விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம்
எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங்
கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார்
ஆரூரர் மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

வில்லை வளைத்து, கூரிய அம்புகளை விரைவாய்ச் செலுத்தும் நாணில் பூட்டி, `இப்பொதிகளை இங்கு இட்டுச் செல்லுங்கள்! இல்லையெனில் உங்களைக் கொல்வோம்!\' என்று சினத்தால் நிலத்திற் குத்தி, அளவற்ற செல்வங்களையெல்லாம் கவர்ந்து கொள்ளப், பறிக்கப்பட்டவர்களாகிய சுமை ஆட்கள் பதறி ஓடி நம்பியாரூரரின் அருகே வந்தனர்.

குறிப்புரை :

விசை - விரைவுபடுத்தற்குரிய நாண். சந்தித்து - தொகுத்து. அலகு - அம்புகளின் ஈர்க்காய பகுதி. கூரியபகுதி. குத்தி - நிலத்திற் குத்தி. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 168

ஆரூரர் தம்பால்அவ்
வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார்
அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன்
பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார்
கோயிலைநா டிப்புக்கார்.

பொழிப்புரை :

அவ்வேடர்கள் சுந்தரரிடம் செல்லாது, கங்கையைத் தரித்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவருளால் நீங்கிச் செல்ல, அவர்கள் சேர்ந்த ஊரான திருமுருகன்பூண்டிக்குச் சென்று, போரில் வல்ல இளமையான விடையை உடையவரான இறைவரின் கோயிலை நாடி ஆரூரர் அடைந்தார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 169

அங்கணர்தங் கோயிலினை
அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு
வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு
வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந்
திருமுன்பு சென்றணைந்தார்.

பொழிப்புரை :

அழகிய அருள் நிறைந்தவராய சிவபெருமானின் திருக்கோயிலைக் கைகளை அஞ்சலியாய்க் குவித்து வணங்கி, மேகங் களைப் பொருந்தும்படி உயர்ந்த வாயிலைப் பணிந்து, பெருகும் விருப்பத்துடன் புகுந்து, வலம் வந்து, தூய்மையான கங்கையாற்றை யும் பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்த இறைவரின் திருமுன்பு சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 170

உருகியஅன் பொடுகைகள்
குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன்
வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு
வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.

பொழிப்புரை :

உள்ளம் உருகிய அன்புடன் கைகளைத் தலைமீது குவித்து, நிலத்தில் விழுந்து வணங்கி, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட தம் இறைவரின் முன்பு, `அச்சம் பொருந்திய வேடர்கள் வழிப்பறி செய்யும் கொடிய காட்டில் எதற்கு இருந்தீர்?\' என்னும் கருத்துடைய, `கொடுகு வெஞ்சிலை\' எனத் தொடங்கும் அழகிய சொற்களை உடைய திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடியருளினார்.

குறிப்புரை :

இத்தொடக்கமுடைய திருப்பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.49).
இப்பதிகத்து வரும் முதற்பாடல்

`கொடுகுவெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டு ஆறு அலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானிரே\'

என்பதாகும்.
இதன் கருத்தை முகந்தவாறு இப்பாடல் அமைந்துள்ளது.
சேரமான் அளித்த பொருள்களையெல்லாம் வேடுவர்கள் கவர்ந்து கொள்ள வருந்திய நிலையில் யான் நிற்க, நீர் அம்மையாருடன் குலவிய நிலையில் இருத்தல் தகுமோ எனும் குறிப்பமையப் பாடற் பொருள் அமைந்துள்ளது. வழிப்பறி செய்யும் வேடுவர்கள் நிறைந்த இவ்வூரில் நீர் மட்டும் இருப்பினும் அமையும். உமையம்மையாருடன் இருத்தல் தகுமோ எனும் குறிப்பையும் கொள்ளல் தகும்.

பண் :

பாடல் எண் : 171

பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.

பொழிப்புரை :

நம்பியாரூரர் இவ்வாறு பாடி வணங்கவும், மேலாய பொருளான அவ்விறைவரின் அருளால், வேடுவர் பறித்துச் சென்ற பொருள்களை எல்லாம், வான் அளாவ நீடும் வாயிலின் முன் குவித்திடவும், அதைப் பார்த்து, நேர் வணங்கி, அருட்கூத்தாடும் இறைவரின் திருவருளால், பறிக்கப்பட்ட பொருள்களில் சிறிதும் குறைவின்றி முழுமையாகக் கைவரப்பெற்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 172

கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

எடுத்துச் செல்கின்ற அச்சுமையாட்களைச் செல்லச் செய்து, நஞ்சையுண்டு விளங்கும் திருக்கழுத்தையுடைய இறைவரை வணங்கி, விடை பெற்றுக் கொங்கு நாட்டை நீங்கிச் சென்று, மெய்ம் மையாகப் பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைவாகச் சென்று, மென் கரும்பும் வயல்களில் நெருங்கிய செந்நெல்லும் சூழ்ந்து விளங்கும் திருவாரூரைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 173

நாவலர்மன் னவர்அருளால்
விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின்
ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை
மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி
அரசுரிமை புரிந்திருந்தார்.

பொழிப்புரை :

நாவலர் தலைவரான நம்பியாரூரரின் திருவரு ளால் விடைபெற்றுக் கொண்ட மன்னரான சேரமான் பெருமாள் நாயனாரும், உயிரோடு ஒன்றிய நட்பையுடைய நம்பியாரூரரை இடைவிடாது எண்ணிய வண்ணமே, வண்டுகள் ஒலிப்பதற்கு இட மான மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த மகோதை நகரில் வீற்றிருந்து, மலை நாட்டின் அரசினை மற்றவர்க்கு உரியதாக அன்றித் தமக்கே உரிமையாகக் கொண்டு ஆண்டு வந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 174

இந்நிலைமை யுதியர்பிரான்
எம்பிரான் வன்றொண்டர்
பொன்னிவள நாடகன்று
மகோதையினின் மேற்புகுந்து
மன்னுதிருக் கயிலையினின்
மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந்
திருத்தொழில்பின் மொழிகின்றாம்.

பொழிப்புரை :

இந்நிலையில் ஆட்சி புரிந்தருளும் சேரமான் பெருமானார், எம் தலைவரான வன்றொண்டப் பெருந்தகையார் சோழவளநாட்டை நீங்கி மகோதை நகரிற்கு, மேல் வருங்காலத்து வந்து புகுந்து நிலையான திருக்கயிலைக்கு யானையின் மேல் ஏறி எழுந்தருள, அப்போது, அவர் முன் தம் கொற்றக் குதிரையைச் செலுத்தி அவருடனே தாமும் திருக்கயிலை சேரும் திருச்செயலைப் பின்னர்ச் சொல்வாம்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 175

மலைமலிந்த திருநாட்டு
மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச்
சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட
நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக்
கணநாதர் திறமுரைப்பாம்.

பொழிப்புரை :

மலைகள் மிக்க செல்வமுடைய மலை நாட்டு மன்னவரான, பெரிய கடல் போன்ற வில் எழுதிய கொடியைக் கொண்ட படைகளையுடைய, சேரமானாரின் திருவடிகளைப் போற்றி, நிலையினால் உயர்ந்த அழகிய மாடங்களையுடைய நீண்ட வீதிகள் தோறும், பெரிய மறைகளும் அவற்றை உட்கொண்ட கலைகளும் பயின்றொழுகும் திறம் மிக்க புகழையுடைய சீகாழியில் வாழ்ந்த கணநாத நாயனாரின் இயல்பை இனிக் கூறுவாம்.

குறிப்புரை :

**************
சிற்பி