சாக்கிய நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

அறுசமயத் தலைவராய்
நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம்
வடிவினால் வருந்தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கங்
கண்டுவந்து கல்லெறிந்து
மறுவில்சரண் பெற்றதிறம்
அறிந்தபடி வழுத்துவாம்.

பொழிப்புரை :

அறுவகைப்பட்ட சமயங்களுக்கும் தலைவராய சிவபெருமானுக்கு அன்பராகிப், புறச்சமய நெறியினரான சாக்கியர் களின் (புத்தர்களின்) வடிவுடன் விளங்கும் தொண்டர், சைவ சமயமே மெய்ச்சமயம் என்ற துணிவு கொண்டதால், சிவலிங்கத் திருமேனி யைப் பார்த்து மகிழ்ந்து, அதன்மீது கல்லெறிந்து, குற்றம் நீக்கும் திருவடியைப் பெற்ற பெரும்பேற்றை நாம் அறிந்த அளவினால் வணங்குவோம்.

குறிப்புரை :

அறுசமயம் - அறுவகைப்பட்ட சமயம். மறைநெறியை மையமாகக் கொண்டு, அதற்கு அகம், அகப்புறம், புறம், புறப்புறம், என நால்வகைப்படுத்தினர். அவை ஒவ்வொன்றிற்கும் ஏற்ப ஆறு சமயங்களாக விளங்கும் சமயங்கள் இருபத்து நான்காம். உயிர்கள் பலவாதலின், அவை உளங்கொளும் சமயங்களும் பலவகைப்பட் டன. அவ்வவ் உயிர்கட்கேற்ற பக்குவ நிலையில் தோன்றிய இச்சமயங் கட்கெல்லாம் தலைவனாவன் இறைவன் ஒருவனேயாவன். `ஒத்தாறு சமயங்கட் கொரு தலைவன்\' `ஆறுசமயத்தவர் அவரை தேற்றும் தகையன\' `அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் பொருளாய்\' எனவரும் திருவாக்குகளும் காண்க.
புறப்புறம் - உலகாயதமும், நால்வகைப் புத்தமும் ஆருகதமும் (சமணமும்) என அறுவகைப்படும். புறம் - தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப் படும். அகப்புறம் - பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். அகம் - பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என அறுவகைப்படும். இவற்றின் விளக்கங்களை சிவஞான மாபடியத்தில் காண்க.
மறுவில் சரண் - தம்மை வணங்கும் உயிர்கட்குக் குற்றம் (மல மறைப்பு) இல்லையாகச் செய்யும் திருவடி. `மதனுடை நோன்றாள்\' எனவரும் திருமுருகாற்றுப்படையும் (தி.11 ப.17 வரி.4) காண்க. மறுசமயம் - புறப்புறச் சமயம். இங்குப் புத்தத்தை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 2

தாளாளர் திருச்சங்க
மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார்
மிக்கபொருள் தெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கும்
அருளுடைய ராய்க்கெழுமி
நீளாது பிறந்திறக்கும்
நிலைஒழிவேன் எனநிற்பார்.

பொழிப்புரை :

சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கை என்னும் பதியில் முயற்சியுடையவர்களாக வாழ்கின்ற வேளாளர் மரபில் தோன்றிய வர். உண்மைப் பொருளைத் தெரிந்து, அதன் பயனை உணர்ந்து, அதன்கண் அன்புடையவராயும், எவ்வுயிர்களிடத்தும் அருள் உடை யவராயும் ஒழுகிப் `பிறந்தும் இறந்தும் வரும் நிலையினை மேலும் பெறாதவாறு இப்பிறப்பிலேயே அதனின்றும் நீங்குவேன்\' என்ற கருத்துடனே அவ்வொழுக்கத்தில் நிற்பாரானார்.

குறிப்புரை :

தாளாளர் தகவுடைய வேளாளர் எனக் கூட்டியுரைக்க திருச்சங்கமங்கை - தொண்டைநாட்டில் காஞ்சி மாநகரத்தை அடுத்துள் ளதோர் ஊர். மிக்க பொருள் - எப்பொருள்களினும் மேலாய பொருள்; மெய்ப் பொருள்: இறைவன். பிறந்து இறக்கும் நிலை நீளாது ஒழிவேன் எனக்கூட்டுக. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப் பென்னும் செம்பொருள் காணும் பெற்றியர் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 3

அந்நாளில் எயிற்காஞ்சி
அணிநகரம் சென்றடைந்து
நல்ஞானம் அடைவதற்குப்
பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தாம்
மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழிஉணர்வார்.

பொழிப்புரை :

அவ்வாறு அவர் ஒழுகி வரும் நாள்களில் ஒருநாள், தம் ஊரைவிட்டு மதிலையுடைய காஞ்சி நகருக்குச் சென்றடைந்து, மெய்ப்பொருளை அடைதற்குரிய பலவழிகளையும் ஆராய்பவராய், முதற்கண் புத்தர்கள் தம் அறவழியில் சேர்ந்து, நிலைபேறு அற்ற பிறப்பை அறுக்கும் உறுதிப்பாட்டின் வழியினை ஆராய்பவராய்,

குறிப்புரை :

மன்னாத - நிலைபேறு அற்ற.

பண் :

பாடல் எண் : 4

அந்நிலைமைச் சாக்கியர்தம்
அருங்கலைநூல் ஓதிஅது
தன்னிலையும் புறச்சமயச்
சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச
ரருள்கூட ஈறில்சிவ
நன்னெறியே பொருளாவ
தெனவுணர்வு நாட்டுவார்.

பொழிப்புரை :

அந்நிலையில் அவர் புத்தர்களின் அரிய திரிபிடகம் என்ற கலை நூலைக் கற்று, அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும், மேலும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிபுகளும் உண்மைப் பொருள் அல்ல எனத் தெளிந்த நிலையில், சிவபெருமா னது திருவருள் கூடப் பெற்றமையால் அழிவற்ற நல்ல சிவநெறியே உண்மைப் பொருளாவது என்ற உணர்வை மனத்தில் நிலைபெற நிறுத்துவாராய்,

குறிப்புரை :

அருங்கலை நூல் - திரிபிடகம்; இது புத்தர்களின் பிரமாண நூல். நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமையினால் நாவரசர் சமண் சமயம் சேர்ந்தார். ஈசர் அருள் கூடியதால் இவர் ஈறில் சிவ நன்னெறியே பொருளாவது என உணர்ந்தார். `காண்பார் யார்? கண்ணுதலாய்க் காட்டாக்காலே\' என்பது அநுபவமாய் வாய்த்தது.

பண் :

பாடல் எண் : 5

செய்வினையுஞ் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும்
விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்
சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.

பொழிப்புரை :

செய்யும் வினை, செய்பவனான வினை முதல், அதன் பயன், இவைகளைத் தந்து ஊட்டுபவனான இறைவன் ஆக உண்மை வகையால், பொருள்கள் நான்காகும் என்னும் தெளிவு கொண்டு, இச்சிறப்பியல்பு சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிவையும், உய்தி பெற அடைதற்குரிய பொருள் சிவமே என்னும் உண்மையையும், அப்பெருமானின் திருவருளால் உணர்ந்து கொண்டார்.

குறிப்புரை :

வினையென்பது ஒன்றில்லை என்பாரும், வினைமுதல் என்பது ஒன்றில்லை என்பாரும், வினைப்பயன் என்பது ஒன்றில்லை என்பாரும், அதனை ஊட்டுவான் ஒருவன் இல்லை என்பாருமாகச் சமயவாதிகள் பல திறத்தார். இந்நான்கும் உண்டு என்று கொண்ட சமயமே நம் சைவ சமயமாகும். `செய்வானும் செய்வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும் உய்வான் உளன் என்று உணர்\' என்னும் திரு வருட்பயனும் (அறியுநெறி, 3). இதுவே உண்மையான நிலை: முழு மையான நிலை. இவ்வுண்மையைத் தெளியவும், சிவபெருமானே முழுமுதற் பொருள் என உணரவும் இயன்றது முன்னைய தவத்தாலும் இறையருளாலுமேயாம். `சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது\'(சித்தியார், 2 சூத்.91), `பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண் ணொணாதே\' (சித்தியார், 2 சூத்.90) எனவரும் திருவாக்குகளும் காண்க.
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 6

எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள்
மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத்
துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால்
மறவாமை தலைநிற்பார்.

பொழிப்புரை :

எந்த நிலையில் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்பை உடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப்பொருளாகும் எனத் துணிந்து தாம் மேற்கொண்டு ஏற்ற அப்புத்தக் கோலத்தினின் றும் நீங்காமலேயே தூயதாய சிவலிங்கத் திருமேனியை மிக்க அன்புடன் மறவாத நிலையில் போற்றி வருவாராய்,

குறிப்புரை :

`வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என் பயன்? வேட நெறி நிற்போர் வேடம் மெய்வேடமே\' என்பர் திருமூலர் (தி.10 த.1 ப.16 பா.3). ஆதலின் அக ஒழுக்கமும், திருவருள் உணர்வும் இன்றிப், புறவேடம் மட்டுமே கொண்டு நிற்றலில் பயனில்லை என்பது தெளிவு. அத்தெளிவினாலேயே புறவேடம் பற்றி இவர் கருதாராயினார். `மழித் தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்\' (குறள், 280) என்பர் திருவள்ளுவனாரும். இங்ஙனம் கூறுவது பற்றி வேடமே வேண்டா என்பது கருத்தன்று. ஒழுக்கமும் உணர்வும் கொண்டு, உயர்தவ வேடமும் இருப்பின் அது பொன்மலர் நாற்றமுடைத்தாம்.
இப்பாடலை அடுத்து `எல்லாம் உடைய ஈசனே\' எனத் தொடங் கும் பாடல் ஒன்று சில பதிப்புக்களில் காணப்படுகின்றது. அப்பாடல் ஆசிரிய விருத்தத்தால் ஆயது. இவ்வரலாறு முழுமையும் கொச்சகக் கலிப்பா யாப்பிலேயே அமைந்துள்ளது. அவ்வகையில் ஆசிரிய விருத்தத்தால் ஆய பாடல் ஒன்று இடை நிற்கக் காரணம் இல்லை. அன்றியும், அப்பாடலின் கருத்து இப்பாடற்கண்ணேயே அமைந்திருத் தலின் அப்பாடல் வேண்டுவதின்றாம். ஆதலின் அப் பாடல் இடைச் செருகல் என்று கருதி விலக்கப்பட்டுள்ளது. சிவக்கவிமணியார் உரையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 7

காணாத அருவினுக்கும்
உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால்
நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த்
தோன்றியது தெளிந்தாராய்.

பொழிப்புரை :

கண்ணுக்குப் புலப்படாத அருவத் திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும் மூலமான இருப்பிட மாய், நீண்ட பாம்பை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுவ தற்குச் சிறந்த அடையாளமாய குறியாய் விளங்கும் சிவலிங்கம், நாணமில்லாது தேடிய திருமாலும் நான்முகனும் காணுமாறு, அரு ளால் அவர்கள் நடுவே விண்ணையும் கீழ் உலகத்தையும் அளாவும், அனல் பிழம்புத் தூணாகித் தோன்றும் வடிவமே வடிவம் ஆகும் எனும் தெளிவு கொண்டவராய்,

குறிப்புரை :

கண்ணுக்குக் காணாத அருவினின்றும் கண்ணுக்குக் காட்சியாகும் ஓர் உருவாய், ஆனால் முகம், கை, கால் முதலிய உறுப்புகள் இலவாய்த் தோன்றி நிற்பதே சிவலிங்கத் திருமேனி யாகும். இந்நிலைக்கு முன்னுள்ள அருவமும் இதற்குப் பின்னுள்ள உருவமும் இத்திருவுருவை இடனாகக் கொண்டிருத்தலின், `காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்\' என்றார். `உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் உருவிறந்த அருமேனியதுவும், அருவுருவான போது திருமேனி உபயம் பெற்றோம்\' என வரும் சித்தியாரும் இதனை விளக்கி நிற்கும். மாலும் அயனும் காணவியலாதவாறு நின்ற அனல் பிழம்பே இவ்வடிவாயது. இவ்வுண்மையை,
செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. (தி.5 ப.95 பா.11)
எனவரும் நாவரசர் திருவாக்கிலும் காணலாம்.

பண் :

பாடல் எண் : 8

நாடோறும் சிவலிங்கங்
கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னும்
சிவலிங்கங் கண்டுமனம்
நீடோடு களியுவகை
நிலைமைவரச் செயலறியார்
பாடோர்கல் கண்டதனைப்
பதைப்போடும் எடுத்தெறிந்தார்.

பொழிப்புரை :

நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்டு வணங்கிய பின்பே, உணவு உண்ணவேண்டும் என்னும் கடப்பாடு உடையவ ராய், விரும்பி அருகிருந்த ஒரு வெளியிடத்தில் நிலைபெற்ற சிவலிங் கத்தைப் பார்த்து, உள்ளத்தில் மிகுகின்ற மகிழ்ச்சி கைவரப் பெற்ற நிலையில் இன்னது செய்வது என்று அறியாதவராகி, அருகே ஒரு கல் கிடப்ப, அதையே மலராய் அன்பின் உண்டான பதைப்புடன் எடுத்து அச்சிவலிங்கத் திருமேனியில் எறிந்தார்.

குறிப்புரை :

அன்பு மீதூர்ந்த நிலையில் நிற்கும் அவர் அருகில் ஒரு கல் கிடப்ப, அதனையே மலராய்க் கொண்டு வழிபடும் எண்ணம் தோன்றியது. இச் செயலும், இதுநிகழ உள்ளத்தெழுந்ததோர் பதைப் பும் திருவருள்வழிப்பட்ட குறிப்புகளாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 9

அகநிறைந்த பேருவகை
அடங்காத ஆதரவால்
மகவுமகிழ்ந் துவப்பார்கள்
வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும்
இளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு
நீள்சடையார் தாம்மகிழ்வார்.

பொழிப்புரை :

மனம் நிறைந்து பெருகிய பெருமகிழ்ச்சியால் வந்த அளவற்ற அன்பினால், தம் குழந்தையை மகிழ்ந்து களிப்பவர்கள், அக்குழந்தை வன்மை செய்யும் செயல்களின் மூலம் பிறர் இகழ்வன வற்றைச் செய்தாலும், அவ்விளம் புதல்வர்மாட்டு இன்பம் உண்டா குமேயல்லாது துன்பம் உண்டாகாது. அதுபோல, நாயனார் தம் அன்பு மீதூர கல்லெறிந்த பொழுதும், அச்செயலுக்கு நீண்ட சடையையுடைய சிவபெருமான் மகிழ்ச்சியே கொள்வாராயினர்.

குறிப்புரை :

இவ்வாறன்றிக் குழந்தைகளிடத்து அன்புடைய பெற் றோர்கள் தம் அன்புமிகுதியால், குழந்தைகளிடத்துப் பிறர் இகழத்தக்க வன்மையான செயல்களைச் செய்யினும் அக்குழந்தைகள் மகிழுமாறு போல என விளக்கம் தந்து பொருளொடு பொருத்திக்காட்டுவர் சிவக்கவிமணியார். அத்தகைய வன்செயல்கள் ஆவன: தம் தலைக்கு மேலே தூக்கி எறிந்து பிடித்தல், கன்னத்தைக் கிள்ளுதல், சிறிதே அடித்தல், இறுக அணைத்தல் ஆயினவாம் என விளக்கமும் காண்பர். இவ்வகை ஆராயத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 10

அன்றுபோய்ப் பிற்றைநாள்
அந்நியதிக் கணையுங்கால்
கொன்றைமுடி யார்மேற்றாங்
கல்லெறிந்த குறிப்பதனை
நின்றுணர்வா ரெனக்கப்போ
திதுநிகழ்ந்த தவரருளே
என்றதுவே தொண்டாக
வென்றுமது செயநினைந்தார்.

பொழிப்புரை :

அன்று தொடங்கிப் பின்வரும் நாள்களில், சிவலிங்கத்தைக் கண்ட பின்பே உண்ணுவது எனத் தாம் கொண்ட அந் நியமத்தின்படி செய்வதற்காகச் சென்றபோது, கொன்றை மாலையைச் சூடிய சடையுடைய சிவபெருமானின் திருமேனியின் மீது, தாம் முன்னைய நாளில் கல் வீசிய திருக்குறிப்பினையே பின்பற்றி அவ் வுணர்வில் தலைப்பட்டவராய், `அப்போது, எனக்கு இத்தகைய எண்ணம் உண்டானது இறையவர் அருளால் ஆகும்\' என்று துணிந்து அதுவே தாம்செய்யும் தொண்டாய் மேற்கொண்டு நாள்தோறும் அச்செயலையே செய்யலானார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 11

தொடங்கியநா ளருளியவத்
தொழிலொழியா வழிதொடரும்
கடன்புரிவா ரதுகண்டு
கல்லெறிவார் துவராடைப்
படம்புனைவே டந்தவிரார்
பசுபதியார் தஞ்செயலே
அடங்கவுமென் பதுதெளிந்தா
ராதலினால் மாதவர்தாம்.

பொழிப்புரை :

தொடங்கிய நாளில் இறையருளால் செய்த அச்செயலை இடையறாது தொடர்ந்து செய்யும் கடமையை எண்ணு பவராய்க், கல்லைச் சிவலிங்கத்தின் மீது எறிவாராய்த், துவராடையை அணிகின்ற புத்த வேடத்தையும் விடாது கொண்டிருப்பாராய அவர், அனைத்தும் சிவபெருமானின் அருட் செயல்களேயாம் என்ற உணர்வுடையவராய் விளங்கினார் ஆதலின், அம்மாதவரும்

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 12

இந்நியதி பரிவோடு
வழுவாம லிவர்செய்ய
முன்னுதிருத் தொண்டாகி
முடிந்தபடி தான்மொழியில்
துன்னியமெய் யன்புடனே
யெழுந்தவினை தூயவர்க்கு
மன்னுமிகு பூசனையாம்
அன்புநெறி வழக்கினால்.

பொழிப்புரை :

இத்தகைய நியமமான செயலை அன்புடன் செய்து வர, அச்செயல்தானும் மதிக்கப்படும் திருத்தொண்டேயாகி முடிந்த தன்மையைச் சொல்வோமாயின், அன்பு நெறியின் செயற்பாடே இஃதாதலின், பொருந்திய மெய்யன்பு காரணமாகத் தொடங்கிச் செய்த அச்செயல் தூயவரான இறைவற்கு நிலைபெற்ற சிறப்புமிக்க பூசனையே ஆகும்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 13

கல்லாலே யெறிந்ததுவு
மன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும்
திருமுடியின் மேவிற்றால்
நல்லார்மற் றவர்செய்கை
யன்பாலே நயந்ததனை
அல்லா தார் கல்லென்பா
ரரனார்க்கஃ தலராமால்.

பொழிப்புரை :

கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே ஆன தன்மையை ஆராயின், வில்வேடரான கண்ணப்ப ரின் செருப்படியும் இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்றதாயின தன்மையைப் பார்த்தோமாதலின், நல்லவரான சாக்கியர் செய்கையை அல்லாதவர்கள் `கல்\' என்பார், ஆனால் அது சிவபெருமானுக்கு மலரேயாகும்.

குறிப்புரை :

இதனால் இறைவற்கு எதனை இடுகின்றோம் என்பது கருத்தன்று; எத்தகைய உணர்வால், எத்தகைய அன்பின் திறத்தால் இடுகின்றோம் என்பதே கருதத் தக்கதாகின்றது. `புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்க ளாக்கினான் காண்\'(தி. 6 ப.52 பா.8) எனவரும் நாவரசர் திருவாக்கும், இவ்வுணர்வின் பிழிவாக `அரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும், பரனடிக்கு அன்பிலாதார் புண்ணியம் பாவமாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி, நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே\' (சித்தியார், 2 சூத். பா.29) எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க.

பண் :

பாடல் எண் : 14

அங்கொருநாள் அருளாலே
அயர்ந்துண்ணப் புகுகின்றார்
எங்கள்பிரான் றனையெறியா
தயர்த்தேன்யா னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன்
மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார்
திருமுன்பு மேவினார்.

பொழிப்புரை :

இதனால் இறைவற்கு எதனை இடுகின்றோம் என்பது கருத்தன்று; எத்தகைய உணர்வால், எத்தகைய அன்பின் திறத்தால் இடுகின்றோம் என்பதே கருதத் தக்கதாகின்றது. `புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்க ளாக்கினான் காண்\'(தி. 6 ப.52 பா.8) எனவரும் நாவரசர் திருவாக்கும், இவ்வுணர்வின் பிழிவாக `அரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும், பரனடிக்கு அன்பிலாதார் புண்ணியம் பாவமாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி, நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே\' (சித்தியார், 2 சூத். பா.29) எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 15

கொண்டதொரு கல்லெடுத்துக்
குறிகூடும் வகையெறிய
உண்டிவினை யொழித்தஞ்சி
யோடிவரும் வேட்கையொடும்
கண்டருளுங் கண்ணுதலார்
கருணைபொழி திருநோக்கால்
தொண்டரெதிர் நெடுவிசும்பில்
துணைவியொடுந் தோன்றுவார்.

பொழிப்புரை :

அங்குக் கிடந்து எடுத்துக் கொண்டதொரு கல்லை, வழிபாட்டின் இலக்குக் கூடும் (குறிக்கோள் நிறைவேறும்) வகையி னால், அவர் எறிய, உணவு உண்ணும் செயலையும் கைவிட்டு அச்சத் துடன் ஓடிவரும் பெருவிருப்புடைய அவரைக் கண்டு அருள் செய் கின்ற நெற்றிக் கண்ணரான இறைவர், அருள் பொழியும் நோக்குடன், அத்தொண்டரின் எதிரே பெரிய வானில் தம் துணைவியாரான உமையம்மையாருடன் தோன்றுவாராகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 16

மழவிடைமே லெழுந்தருளி
வந்ததொரு செயலாலே
கழலடைந்த திருத்தொண்டர்
கண்டுகரங் குவித்திறைஞ்சி
விழவருணோக் களித்தருளி
மிக்கசிவ லோகத்தில்
பழவடிமைப் பாங்கருளிப்
பரமரெழுந் தருளினார்.

பொழிப்புரை :

இளமை பொருந்திய ஆனேற்றின் மீது எழுந்தருளி வந்த ஒப்பில்லாத செய்கையால், இறைவரின் திருவடியை அடைந்த திருத்தொண்டரான சாக்கிய நாயனார் கண்டு, கைகள் கூப்பி, நிலத்தில் விழுந்து பணிந்து எழ, அருள்நோக்குக் கொண்டருளிச் சிறப்பு மிக்க சிவலோகத்தில் பழைய அடியாராக இருந்து செய்யும் அடிமைத் திறத்தை இறைவர் அளித்தருளி மறைந்தருளினார்.

குறிப்புரை :

`பழ அடியாரொடும் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே\' (தி.9 ப.29 பா.11), `பழ அடியார் கூட்டம் அத்தா காண ஆசைப்பட்டேன்\' (தி.8 ப.25 பா.9), `தம்மை விடுத்து ஆயும் பழைய அடியாருடன் கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்து\' (குமர. கந்தர் கலி. 121) எனவரும் திருவாக்குக்களைக் காண்க.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 17

ஆதியார் தம்மை நாளுங்
கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட
குறிப்பினை யவர்க்கு நல்கும்
சோதியா ரறித லன்றித்
துணிவதென் அவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன்
சிறப்புலி யாரைச் செப்பி.

பொழிப்புரை :

பழம்பொருளாய சிவபெருமானை நாள்தோறும் கல் எறிந்து வழிபட்டு அதனால் தம்மை அடைந்த குற்றம் இல்லாத சிறப்புடைய தொண்டரான சாக்கிய நாயனார் திறத்தை, அவருக்கு அருள் செய்யும் சோதியாரான சிவபெருமான் அறிதலல்லாது நாம் துணிவது எவ்வாறு? அவர்தம் திருவடிகளைத் தலைமேற்கொண்டு, சிறப்புலியாரின் வரலாற்றை இனிச் சொல்லத் தொடங்கித் தீமையை நீக்கலுற்றேன்.

குறிப்புரை :

அன்பின் மீதூர்வால் நிகழும் இத்தகைய அருஞ்செயல் உடையார் திறனையும், அதற்கு அருட் கருணை தாமாக நிற்கும் எம் பெருமானின் அருட்செயலையும் அவ்விருவரும் அறிதலன்றி, ஒன்றற்கும் பற்றாத நம்மனோரால் எண்ணவோ அல்லது சொல்லவோ இயலுமோ? இயலாது என்றவாறு. `யாம் அறியும் அன்பன்று அது\' (திருக்களிற். 52) எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க.
சாக்கிய நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி