ஆனாய நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.

பொழிப்புரை :

பக்கங்களில் உள்ள நறுமணம் மிக்க சோலைகளில், வானில் உள்ள நிறைமதி வந்து ஏறவும், நெல் முழுமையாக உதிராத வைக்கோல் போர்களைப் பரப்பிய பண்ணைகளில் உள்ள வரம்பு களில் வண்டினங்கள் ஏறவும் (ஒலி செய்யவும்), நெல் முழுமையாக எடுக்கப்பெற்ற உயர்ந்த வைக்கோல் போர்களில் மேகங்கள் இளைத்து ஏறவும், இங்ஙனமாக நீண்ட பெருவளம் உடையது மேல் மழநாடு எனும் நீர்நாடு ஆகும்.

குறிப்புரை :

சூடு - நெல் முழுமையாக உதிராத வைக்கோல் போர்கள். ஈடு - நெல் முழுமையாக உதிர்க்கப்பெற்ற வைக்கோல் போர்கள். மழநாடு - மழவர் என்பார் வாழும் நாடு. இதன் மேற்குப் பகுதியை மேல் மழநாடு என்பர். இது திருச்சிக்கு வடக்கே உள்ள கொள்ளிடத்தின் வடபகுதியாகும். கிழக்குப் பகுதியைக் கீழ்மழநாடு என்பர். இது திருப்பாச்சிலாச்சிராமத்தை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனே கொல்லிமழவன் ஆவன்.

பண் :

பாடல் எண் : 2

நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல்
மேவி யுறங்குவ மென்சிறை வண்டு விரைக்கஞ்சப்
பூவி லுறங்குவ நீள்கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி.

பொழிப்புரை :

கொய்சகம் வைத்து அழகுற உடுத்திய ஆடையால் மூடப்பெறும் அல்குலையுடைய உழத்தியரது நெய்பூசிய கூந்தலின் கருமையின் செறிவைப் பொருந்தி, மென்சிறகுடைய வண்டுகள் உறங்குவன. வாசனையுடைய தாமரைப் பூவில் நீண்ட கயல்மீன்கள் உறங்குவன. பூக்கள் நிறைந்த தேமாவின் சோலையின் நறுமணம் மிக்க குளிர்ந்த நிழலில் மேகத்தை ஒத்த கரிய எருமைகள் உறங்குவன.

குறிப்புரை :

`நிழ லிடை உறங்கும் மேதி` (கம்ப. பால.37) என்பர் கம்பரும்.

பண் :

பாடல் எண் : 3

வன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப்
பன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.

பொழிப்புரை :

வலிமை மிக்க உழவர்கள், கரும்பு ஆலையை இயக்கும்படி பலமுறை சுற்றிவரப் பண்ணும் இணைமரங்கள் இரையும் ஓசையாலும், அன்னப் பறவைகள் உறைகின்ற குளிர்ந்த நீர்த் துறைகளை யுடைய குளங்களின் அருகாகக் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுகின்றமையால் எழுந்த புகை பரத்தலாலும், கரும்பினைச் சர்க்கரையாக்கும் தொழில் கொண்ட சாலைகள், மேகம் சூழ இருக்கும் காட்சியை உண்டாக்குவன.

குறிப்புரை :

கரும்பாலையிலிருந்து எழும் ஓசை இடிமுழக் குப் போன்றது. அதனைக் காய்ச்சுதலால் எழும் புகை, மேகத்தைப் போன்றது.

பண் :

பாடல் எண் : 4

 பொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம்
துங்க விலைக்கத லிப்புதல் மீது தொடக்கிப்போய்த்
தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.

பொழிப்புரை :

பெருகி ஓடும் பேராற்றில் நீண்ட அலைகளால் உந்தப்பெற்ற நீர்ச்சங்குகள், ஊர்ந்து சென்று, உயர்வுடைய வாழைத் தோட்டத்தில் புகுந்து, அங்குஅவ் வாழையில் சுற்றிய பசும்கருங் கொடிகளின் மேலாக ஊர்ந்து ஏறிப்போய், பசிய கமுகின் உச்சியில் ஏறிச்சேர்ந்து, அங்குள்ள பாளைகள் பூக்களை உதிரச் செய்வனபோல முத்துக்களைச் சொரிவன.

குறிப்புரை :

ஆற்றிலிருந்த சங்குகள், வாழையைச் சுற்றி நிற்கும் கொடி களின் வழி ஏறிப் பாக்குமரத்தைச் சேர்ந்து முத்துக்களை உதிர்த்தன. அம்முத்துக்கள் பாக்குமரத்திலிருந்து பூக்கள் உதிர்வன போன்று இருந்தன. நீரிடை உறங்கும் சங்கம் (கம்பரா. பால. 37) என்பார் கம்பர்.

பண் :

பாடல் எண் : 5

அல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.

பொழிப்புரை :

உள் இதழ் அகன்ற நல்ல நீர்ப் பூக்கள் மலர்ந் திருக்கும் வயல்களின் மேற்பரப்பில், மரங்களும் செடிகளும் அடர்ந்த முல்லைக் காட்டில் உள்ள ஆன்கன்றுகள் துள்ளிய வண்ணம் அங்குள்ள பெண்மான் குட்டிகளோடும் சேர்ந்து குதித்து ஓடும் வளம் பொருந்தியது.

குறிப்புரை :

முழுப்பு - உச்சி. வயல் அருகேயுள்ள காட்டில் ஆன் கன்று மான்கன்றுகளோடும் குதித்து விளையாடுகின்றன. ஒல்லை - விரைந்து.

பண் :

பாடல் எண் : 6

கண்மலர் காவிகள் பாய இருப்பன கார்முல்லைத்
தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு தடஞ்சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய விருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம்.

பொழிப்புரை :

கார்காலத்தில் செழித்து வளர்ந்த முல்லைக் கொடிகளில் குளிர்ந்த பற்கள் என மலரும்வெண்பூக்களில் தங்கிய வண்டுகள், பெண்களின் கண்களை ஒத்த நீலோற்பல மலரில் பாய இருப்பன; காயா மரங்களின் அழகிய செழித்த பூங்கொம்புகளில் பொருந்திய சிறகுகளையுடைய நாரைகள், அகன்ற இளஞ்சாலி நெற்பயிர்களையுடைய வயல்களில் உள்ள நீரில் துள்ளி எழுகின்ற கயல் மீன்களைப் பிடித்தற்கெனப் பாய இருப்பன.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 7

பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கல மாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர்.

பொழிப்புரை :

சோலைகளில் தளிர்த்து உயர்ந்த மரக் கொம்பரில் அலைந்தாடும்படி இருந்திடும் வண்டுகள் சூழ்ந்த அச்சோலைகளின் உச்சியில், கதிரவனின் வெப்பம் மிகுந்த ஒளிக்கதிர்கள் தங்குமாறு விளங்கிய நன்மைகள் சிறந்த மேல்மழநாடு எனும் நாடானது, இந்நிலவுலகிற்கு ஓர் அரிய அணியாக விளங்குவது; அதற்கு ஒப்பற்ற மங்கலமாக விளங்குவது திருமங்கலம் என்னும் ஊராகும்.

குறிப்புரை :

சோலைகளில் கதிரவனின் கதிர்கள் தங்குகின்றன. எனவே, அக்கதிர்கள் அச் சோலைகள் உட்புக இயலாவாயின என்பது விளங்கும்.
`வெயில் நுழைபு அறியாக் குயில் நுழைபொதும்பர்` (பெரும்பாணா. - 374) எனப் பிறரும் கூறல் காண்க.

பண் :

பாடல் எண் : 8

ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.

பொழிப்புரை :

ஒப்பற்ற பெருங்குடிகள் நெடுங்காலமாகத் தழைத்துச் செழித்திருக்கும் தன்மையில் ஓயாது, தீதின்றி நன்னெறி யில் ஈட்டிய பொருள் வளத்துடன் அறமே நிலவிய சிறப்புடன் விளங்க இருப்பது அக்கணமங்கலம் என்னும் ஊராகும். அப்பதியில் வாழ்ந் திருப்பவர் இடையர் குலத்துத் தோன்றிய ஆனாயர் என்பார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 9

ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.

பொழிப்புரை :

அவர், இடையர் குலத்தை விளக்கிட வந்து தோன்றியவர். ஒளியுடைய திருவெண்ணீற்றை விரும்பும் தொண்டில் நிற்பவர். சொல்லாலும், உண்மையான மனத்தினாலும், செயலினா லும் பேயுடன் நடமாடும் பெருமானாய சிவபெருமானின் திருவடி களை அல்லது வேறு எதனையும் பேணாதவர்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 10

ஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்
டூனமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.

பொழிப்புரை :

அவர், பசுக்களின் நிரைகளை அகன்ற முல்லை நிலத்தில் ஒருங்கு கொண்டு சென்று, காடுகளில் உறையும் கொடிய மிருகங்களாலும், பொருந்தும் நோய்களாலும் துன்பம் வாராதபடி பாதுகாத்து, எங்கும் நல்ல மிருதுவான புற்களை அப்பசுக்கள் மேயும் படி செய்வித்து, அப்பசுக்கள் விரும்பிடும் தூய நீரையும் அருந்தச் செய்து, குற்றமில்லாதவாறு நற்பசுக்கள் அளவுகடந்தன நாளும் பெருகும்படி பேணிவந்தார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 11

கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்தலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.

பொழிப்புரை :

கன்றுகளும், பால்கறத்தல் மாறிய இளம் மாடுக ளும், பால் கறக்கும் பசுக்களும், சிறிய அழகிய தலையும் மெல்லிய மயிரும் உடைய கருவுற்று விளங்கும் பசுக்களும், ஈன்று அணிய பசுக்களும் ஆகிய இவைகள், வெற்றி விளைவிக்கும் ஆனேறுகளின் கூட்டத்தோடு, வெவ்வேறு தங்கி இருப்பதற்கென நிறைந்துள்ள பல தொழுவங்கள் உள்ளன.

குறிப்புரை :

இவ்வினங்கள் ஓரினத்தன எனினும், உணவு முதலிய வற்றால் பேணற்கும், காத்தற்கும் அவ்வவற்றிற்கும் ஏற்ற சூழல் வேண்டுதலின், இவற்றைத் தனித்தனியாகவுள்ள தொழுவங்களில் வைத்துப் பேணற்குரிய இவ்வருமை எண்ணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 12

ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.

பொழிப்புரை :

பசுக் கூட்டங்கள் இவ்வண்ணமே பெருகிடப் பேணிக் காத்து, இடையர் ஏவல் புரிந்திட, ஆயர்குலத்தைப் பேணி வரும் காவலர் பெருமானாய ஆனாயர், சிவபெருமான் திருவடி களில் பெருவிருப்புற்றுக் குழலில் இசை பொருந்த வாசித்து வரும் செயலை மேற்கொண்டார்.

குறிப்புரை :

********

பண் :

பாடல் எண் : 13

முந்தைமறை நூன்மரபின்
மொழிந்தமுறை யெழுந்தவேய்
அந்தமுதல் நாலிரண்டில்
அரிந்துநரம் புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி
வாயுமுதல் வழங்குதுளை
அந்தமில்சீ ரிடையீட்டின்
அங்குலியெண் களின்அமைத்து.

பொழிப்புரை :

பழமையான நான்மறைகளில் இசைக்கலையைப் பற்றிச் சொல்லிய வகையில், வளர்ந்து நின்ற மூங்கிலின் நுனியில் நான்கு பங்கிலும், அடியில் இரண்டு பங்கிலுமாக அரிந்து அவற்றை விடுத்து, இடைப்பட்ட பாகத்தை எடுத்து, சுரங்கள் ஏழும் அவ்வவ் விடங்களிலும் அமைக்கும் துளைகளின் வழிவர வரிசையாகச் செய்து, முதலில் காற்று உண்டாக்கும் துளையையும், கேடில்லாத சிறப் பினையுடைய இடைவெளி ஒவ்வொரு அங்குல அளவில், ஏழு துளைகள் செய்து,

குறிப்புரை :

உயர்ந்ததும் ஒத்ததுமாய நிலத்தில் தோன்றியதும், இளையதும் முதியதும் ஆய பருவத்ததன்றி நடுநிலையதாகிய பருவத்ததுமாகிய மூங்கிலில் நுனிப்பகுதியையும் அடிப்பகுதியையும் விடுத்து, நடுப்பகுதியை நிழலிலிட்டு வைத்து, ஓராண்டு சென்றபின் அதனை வேய்ங்குழலாகச் செய்யவேண்டும் (சிலப்பதி. அரங்கேற்று காதை) என்பர் அடியார்க்கு நல்லார்.
முந்தை மறை - ஆயுள் வேதம், தநுர் வேதம், காந்தருவ வேதம், அர்த்தவேதம் எனக் கூறப் பெறும் உப வேதங்கள் நான்கினும் காந்தருவ வேத முறைப்படி, சந்தனம், செங்காலி, கருங்காலி, வெண்கலம் ஆகியவற்றுள் அமைக்கும் குழல்களினும், மூங்கிலால் செய்யப்பெறும் குழற்கருவியே சிறந்தது என்பர்.
அங்குலி - அங்குலம்.

பண் :

பாடல் எண் : 14

எடுத்தகுழற் கருவியினில்
எம்பிரான் எழுத்தைந்தும்
தொடுத்தமுறை யேழிசையின்
சுருதிபெற வாசித்துத்
தடுத்தசரா சரங்களெலாம்
தங்கவருந் தங்கருணை
அடுத்தஇசை யமுதளித்துச்
செல்கின்றார் அங்கொருநாள்.

பொழிப்புரை :

இவ்வாறு திருத்தமுற எடுத்த வேய்ங்குழல் என்னும் இசைக் கருவியினில், எம்பெருமானின் ஐந்து எழுத் தினையும், தொடுத்த முறையாக, ஏழு சுரவரிசைகளின் சுருதி விளங்கிட வாசித்து, அதனால் வேறு வழியில் செல்லாமல் இசையினால் தடுக்கப் பெற்ற இயங்கியற்பொருள், நிலையியற் பொருள் ஆகிய எல்லாமும் பொருந்த வரும், தம் கருணையுடன் கூடிய இசையாய அமுதினை, கேட்போர் செவியாரக் கொடுத்து வருபவரான ஆனாயர் ஆங்கு ஒரு நாள்.

குறிப்புரை :

சரம் - இயங்கியற் பொருள், அசரம் - நிலையியற் பொருள்.

பண் :

பாடல் எண் : 15

வாசமலர்ப் பிணைபொங்க
மயிர்நுழுதி மருங்குயர்ந்த
தேசுடைய சிகழிகையில்
செறிகண்ணித் தொடைசெருகிப்
பாசிலைமென் கொடியின்வடம்
பயிலநறு விலிபுனைந்து
காசுடைநாண் அதற்கயலே
கருஞ்சுருளின் புறங்கட்டி.

பொழிப்புரை :

நறுமணமுடைய மலர்மாலை விளங்கிக்காட்டத், தலையில் நாற்புறமும் உள்ள மயிரினைக் கோதி, தூக்கி மேலே கொண்டையாக முடித்து, அதன் மீது நெருங்கக் கட்டிய கண்ணி மாலையைச் செருகி; அதனுடன் பசிய இலையுடைய கொடியால் மிருதுவான வடமாக முறுக்கி, அவ்வடத்தில் நறுவிலி மலர்களை இடைச்செருகி; அதன்பின் பொன் காசுகள் கட்டிய மாலைக் கயிற்றைக் கரிய கூந்தலின் புறமாகச் சுற்றிக் கட்டி.

குறிப்புரை :

நறுவிலி - முல்லை நிலத்து மலர்களில் ஒருவகையது.

பண் :

பாடல் எண் : 16

வெண்கோடல் இலைச்சுருளிற்
பைந்தோட்டு விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த
வடிகாதின் ஒளிதயங்கத்
திண்கோல நெற்றியின்மேல்
திருநீற்றின் ஒளிகண்டோர்
கண்கோடல் நிறைந்தாராக்
கவின்விளங்க மிசையணிந்து.

பொழிப்புரை :

வெண்காந்தள் மரத்தின் நல்ல இலைச்சுருளின் நடுவிலே, பசிய இதழ்களையுடைய நறுமணம் மிக்க செங்காந்தள் மலரை அணிந்த வளைந்த காதின் ஒளி விளங்கத், திண்மையான கோலமுடைய நெற்றியின் மீது அணிந்த திருநீற்றின் ஒளியானது, கண்டோர் கண்கொண்டு காண நிறைவுற்று, இன்னமும் ஆராத வகையாகத் திருமேனி முழுவதும் நிறைய நீறு அணிந்து.

குறிப்புரை :

********

பண் :

பாடல் எண் : 17

நிறைந்தநீ றணிமார்பின்
நிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத்
திரள்தோளின் புடையலங்கல்
அறைந்தசுரும் பிசையரும்ப
அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப்
பூம்பட்டுப் பொலிந்தசைய.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த நிறைவுடைய மார்பில், நிரை யாக முல்லை மலரினைக் கட்டிய நீண்ட வடம் போலும் மாலை தாழ்ந்து விளங்க, பருத்த தோள்களின் மேல் அணிந்த நல்ல மலர் மாலைகளில் மொய்த்து இரையும் வண்டினங்கள் நிறைந்து இசைபாட, திருவரையில் உடுத்த மர உரி ஆடையில், சேர அணிந்த தழைகள் மீது விளங்கிடும் உடையாகிய பூம்பட்டுப் பொலிவுற்று அசைய.

குறிப்புரை :

********

பண் :

பாடல் எண் : 18

சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.

பொழிப்புரை :

சிவந்த திருவடிகளிற் செருப்பாகப் பொலிகின்ற தோலும், சிவந்த அழகுடைய கைகளிலே வெண்மை நிறமான கோலும், விளங்கிடும் இசையுடைய புல்லாங்குழலும் மிகு விளக்கம் செய்ய, அவரிடத்து ஏவல் புரிகின்ற வலிமையுடைய இடையர்களும், கன்றினை உடைய பசுக் கூட்டமும் சூழ்ந்திட, பூக்கள் மலர்கின்ற மாலையணிந்த கோவலனாராய ஆனாயர், பசுக்களின் நிரைகளை மேய்த்துக் காவல் கொள்ளும்படி வெளியே வந்தருளினார்.

குறிப்புரை :

உச்சி மீது கண்ணியும் மாலையும் சூடி, நறுவிலி புனைந்து, காதில் செங்காந்தள் மலருடன் இணைந்த வெண்காந்தள் இலை அணிந்து, நெற்றியில் திருநீற்றொளி, காண்பார் கண்கொள் ளாக் கவினுடன் திருமேனி முழுவதும் விளங்க, அரையில் மரவுரியும் இலையும் சேர உடுத்த ஆடையில் பூம்பட்டுப் பொலிந்தசைய, கைகளில் வெண்தண்டும் வேய்ங்குழலும் விளங்க, திருவடியில் தோற்செருப்பு அணிந்த சிறந்த கோலமுடன் ஆனாய நாயனார் ஆனிரைகளை மேய்த்துக் காத்திட வெளிப்போந்தார்.
இதனையடுத்து `நீல மாமஞ்ஞை` எனத் தொடங்கும் பாடல், யாப்பு வகையானும், பொருள் வேறுபட்டானும், இடைச் செருகல் எனத் தெளிவாகத் தெரிதலால் அப்பாடல் இப்பதிப்பில் கொள்ளப்படவில்லை. இந்த ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 19

எம்மருங்கும் நிரைபரப்ப
எடுத்தகோல் உடைப்பொதுவர்
தம்மருங்கு தொழுதணையத்
தண்புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை
அலர்மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல்
செழுங்கொன்றை மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

எப்பக்கத்திலும் பசுக்களின் நிரைகளைப் பரப்பிடும்படி எடுத்த தண்டினையுடைய இடையர் தம் அருகில் தொழுதவாறு வந்திட, குளிர்ந்த முல்லை நிலத்தில் வரும் எம் தலைவ னாராய ஆனாயர், அதன் அருகில், தாழ்ந்த கொம்பர்களில் அலர்ந்த பூக்களில் தேனை உண்டு களிப்பால் மிகுந்து, குளிர்ந்த வண்டுகள் சுழன்று திரியுமாறு செழித்து வளர்ந்துற்றதொரு கொன்றை மரத்தின் அயலே வந்துற்றார்.

குறிப்புரை :

செம்மரும் - மிகக் களித்து.

பண் :

பாடல் எண் : 20

சென்றணைந்த ஆனாயர்
செய்தவிரைத் தாமமென
மன்றல்மலர்த் துணர்தூக்கி
மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை
நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையிலன்பை
உடையவர்பால் மடைதிறந்தார்.

பொழிப்புரை :

சென்று சேர்ந்த ஆனாய நாயனார், கையால் தொடுத்துச் செய்யப்பட்ட நறுமணமுடைய மாலையினைப் போன்று, நல்ல வாசனையுடைய பூக்கள் மலரும் கொத்துக்களைத் தொங்க விட்டுப், பக்கங்களில் தாழ்ந்து விளங்கும் சடையையுடைய சிவ பெருமானைப் போல் நின்ற நறுமணமிக்க கொன்றை மரத்தின் மலர்ச்சி யின் செவ்விகண்டு, உள்ளம் உருகி, ஒருமைப்பாடு கொண்ட சிந் தையில் பெருகும் அன்பைத், தம்மை உடைய பெருமான்பால் வெள்ள மடைதிறப்பது போன்று திறந்தார்.

குறிப்புரை :

அழகிய நீண்ட தண்டில் கொத்தாக மலர்ந்த பூக்களுடன் எம் மருங்கும் பூமாலை தூக்கியது போல் நின்ற கொன்றை மரத்தின் தன்மையை நோக்கில், அது இறைவனைப் போன்றிருத்தலால், அதனை நேர் நோக்கிய ஆனாயரும், தாமும் உள்ளம் உருகி, அன்பு மலர்ந்து, அன்பாகும் தமது அமுத இசையைத் தம்மை உடையவர் பால் செலவிடுத்தார்.

பண் :

பாடல் எண் : 21

அன்பூறி மிசைப்பொங்கும்
அமுதஇசைக் குழலொலியால்
வன்பூதப் படையாளி
எழுத்தைந்தும் வழுத்தித்தாம்
முன்பூதி வருமளவின்
முறைமையே யெவ்வுயிரும்
என்பூடு கரைந்துருக்கும்
இன்னிசைவேய்ங் கருவிகளில்.

பொழிப்புரை :

அன்பு ஊறி, அது, மேலும் பொங்கி எழுகின்ற அமுதம் போலும் இசையைத் தரும் குழல் ஓசையால், பெரிய பூதங் களின் படைகளையுடைய தலைவனான சிவபெருமானின் எழுத்து கள் ஐந்தையும் போற்றி செய்து, தாம் முன்பு ஊதிவரும் அவ்வளவின் முறையாக, இவ்வுலகில் உள்ள எவ்வுயிர்களின் என்பும் உள்ளே கரைந்து உருகுமாறு செய்யும் இனிய இசையுடைய வேய்ங் குழலாய இசைக் கருவிகளில்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 22

ஏழுவிரல் இடையிட்ட
இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு
தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று
தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார்
மணியதரம் வைத்தூத.

பொழிப்புரை :

ஏழு விரல்கள் இடையீடுபடத் துளையிட்ட இனிய ஓசையையுடைய வேய்ங்குழலினை ஆனாய நாயனார் எடுத்துப் பூக்களில் தேனை உண்டிடப் படியும் வண்டு எழுவதும் இருப்பதும் போல, அங்குள்ள துளைகளில் தமது விரல்களை வைத்து, எடுத்துச் சுருதி பெற நிற்றலும் எழுதலும் ஆகிய இத்தன்மைகளைச் செய்து, தூய பெரிய துளையில் பெருவாழ்வுடையராய நம் தலைவர் ஆனாயர், தமது வாயிதழ் மேல் வைத்து ஊத,

குறிப்புரை :

ஏழு விரல்களாவன - இடக்கைப் பெருவிரலும் சிறுவிரலும் நீக்கி, மற்றைமூன்று விரல்களும், வலக்கையில் பெருவிர லொழிந்த நான்கு விரல்களுமாம். ஏழு துளையினும் ஏழு சுரங்களும் ஏழு எழுத்துகளாற் பிறக்கும். அவ்வெழுத்துகளாவன: ச - ரி - க - ம - ப - த - நி - என்பனவாம். இவ்வேழெழுத்தினையும் மாத்திரைப் படுத்தித் தொழில் செய்ய, இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும். முதற்குறிப்பாக அமைந்த இந்த ஏழு எழுத்துகளை விரிப்பின்: சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என வரும். மணியதரம் - அழகிய உதடு.

பண் :

பாடல் எண் : 23

முத்திரையே முதலனைத்தும்
முறைத்தானஞ் சோதித்து
வைத்ததுளை ஆராய்ச்சி
வக்கரனை வழிபோக்கி
ஒத்தநிலை யுணர்ந்ததற்பின்
ஒன்றுமுதல் படிமுறையால்
அத்தகைமை ஆரோசை
அமரோசை களின்அமைத்தார்.

பொழிப்புரை :

முத்திரை முதலாக உள்ள ஏழுசுரங்கள் பிறக்கும் இடங்களை முறைப்படி ஆய்ந்து, இசை நூல்களில் விதித்த அளவில், அமைத்து வைத்த ஏனைய துளைகளை ஆராய்ச்சி செய்வதாகிய வக்கரனையின் வழியாக விரல்களை அடிக்கடி எடுத்தும், சமன் செய்தும், இப்படிப் போக்கி, இசை சரியாக ஒத்திருப்பதை உணர்ந்ததற்பின், சட்சம் முதல் நிடாதம் வரையும் ஒன்றின்மேல் ஒன்றாக உயர்ந்து தாழ்ந்திடும் அத்தகைய ஆரோசை அமரோசைகளில் அமைத்தருளி,

குறிப்புரை :

வக்கரனை வழிபோக்கி - எல்லா இராகங்களும் குழ லின் ஏழு துவாரங்களாலேயே உண்டாகும்படி விரல்களை முறையே செலுத்திச் சமன்செய்து சோதித்தல். ஒன்றுமுதல் படிமுறை - சட்சம் முதல் நிடாதம்வரை உள்ள ஏழு சுரங்களின் படி முறையாகிய வரிசை. முத்திரைக் கடுத்த துளை சட்சம். ஆரோசை ஏற்றுதல், அம ரோசை இறக் குதல். இவற்றை முறையே ஆரோகணம் அவரோகணம் என்பர்.

பண் :

பாடல் எண் : 24

மாறுமுதற் பண்ணின்பின்
வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும்
கிழமைகொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடைமுடியார்
அஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங்
கொடிப்பாலை யினில்நிறுத்தி.

பொழிப்புரை :

மாறிவரும் சுரங்களையுடைய குறிஞ்சிப் பண்ணின் பின், முல்லைப் பண்ணாகச் சுரங்களை அமைத்துப், பாலை யாழுக்கமைந்த தாரமும், உழையும் இசைக் கிழமை கொள்ளும்படி இடுகின்ற தானங்களில், கங்கையாறு உலவுகின்ற சடைமுடியையுடைய சிவபெருமானது ஐந்து எழுத்தாய திருப்பெயரின் இசை பெருகும்படிச் சொல்லப்பெறும் இளியைக் குரலாக உடைய கொடிப் பாலையில் நிறுத்தி.

குறிப்புரை :

தாரம் - உச்ச விசை. அது மூக்காலுண்டாவது. உழை - தலையை இடமாக உடைய இசை. கொடிப்பாலை - நெஞ்சை இடமாக உடைய இசை. கொடிப்பாலையினில் நிறுத்தி - கொடிப்பாலை என்பது பாலையாழ் வகைபலவற்றுள் ஒன்று. அவை குரல் குரலாயது செம் பாலை; துத்தங்குரலாயது படுமலைப் பாலை; கைக்கிளை குரலாயது செவ்வழிப் பாலை; உழை குரலாயது அரும்பாலை; இவற்றினை அமைத்துப் பின்னர் இளி குரலாய கொடிப் பாலையினில் இடுந்தானம் நிறுத்தி என விளக்குவர் சிவக்கவிமணியார் (பெ-உரை).

பண் :

பாடல் எண் : 25

ஆயஇசைப் புகல்நான்கின்
அமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன
விடுப்பனவாம் விரல்நிரையில்
சேயவொளி யிடையலையத்
திருவாள னெழுத்தஞ்சுந்
தூயஇசைக் கிளைகொள்ளுந்
துறையஞ்சின் முறைவிளைத்தார்.

பொழிப்புரை :

சொல்லப் பெறும் சிறந்த இசையின் புகல் நான்கி லும் கொடிப்பாலைக்கமைந்த கூறுபாட்டை எடுத்துச் சுரம் எழும்பும் ஏழு துளைகளிலும், விரல்களைப் பொத்துவதும், விடுப்பதுமாகிய வரிசையாகும் செயலினால், இசையின் செவ்விய ஒலி இடையே மேலோங்கி விளங்கிட, சிவபெருமானின் திருவைந்தெழுத்தினையும் தூய்மையான இசையின் ஏற்ற பகுப்பினைக் கொள்கின்ற ஆயத்தம், எடுப்பு, உற்கிரகம், சஞ்சாரம், இடாயம் எனும் ஐந்து துறைகளும் இனிமையுடன் விளங்கிட முறைமைப்படுத்தி.

குறிப்புரை :

இசைப்புகல் நான்கு - பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்பன. ஆயத்தம் - மந்தரத்தினின்றும் அனுமந்தரமாகிய கீழ்ஸ்தாயி வரை சென்று முன் தானத்தில் வந்து முடிவது. எடுப்பு - மந்தரத் திலிருந்து பஞ்சமம் வரை போய் மீண்டும் மந்தரத்தில் வந்து முடிவது. உற்கிரகம் - மந்தரம் முதல் தாரத்தானம் வரை போய் மீண்டும் மந்திரத்தில் வந்து முடிவது. சஞ்சாரம் - மந்தரத்திலிருந்து மத்திமம், தாரம் ஆகிய இரண்டினும்போய் இறங்கிக் கீழ்ஸ்தாயியான அனுமந்தரத்திற் சென்று மீண்டு மந்தரத்தில் வந்து நிற்பது. இடாயம் - மந்தரத் தானத்தையே முதன்மையாகச் செய்து கொண்டு, மத்திமம், தாரம் இரண்டினும் சென்று, பின்பு மந்தரத்தையே வலியுறுத்தி அனுமந் தரத்தில் சென்று மீண்டும் மந்தரத்தில் வந்து முடிவது என விளக்கம் காண்பர் சிவக்கவிமணியார் (பெ-உரை).

பண் :

பாடல் எண் : 26

 மந்தரத்தும் மத்திமத்தும்
தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகள் மெலிவித்தும்
சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல்தொழில்கள்
அளவுபெற அசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும்
துளைவாயும் தொடக்குண்ண.

பொழிப்புரை :

மந்தரம், மத்திமம், தாரம் இவைகளில் வரன் முறை யாக அவைகளுக்கு ஏற்றபடி, சுரத்தானத்திற்குரிய துளைகளை மெலி வித்தும் சமன் கொண்டும் வலிஉடையதாகச் செய்வித்தும், இடைப் பட்ட துளைகளில் கொண்ட விரல்களின் போக்கினை அளவுபெற அமைத்து இயக்கியும், அழகிய அவரது செங்கனிபோலும் வாயை யும், துளைவாயையும் வைத்து ஒன்றாகக் கூட்டி இணங்க.

குறிப்புரை :

மந்தரம் - மெலிவு. மத்திமம் - சமன். தாரம் - வலிவு. இவை ஓசை பேதங்கள். இவற்றை முறையே படுத்தலோசை, நலித லோசை, எடுத்தலோசை என்றும் கூறுவர். தந்திரி என்றது இங்குக் குழலிசைக் கருவிக்கேற்பத் துளைகளைக் குறித்தது; ஆகுபெயர். அந்தரம் - இடையிட்ட துளைகள். துளைவாய் - குழலின் துளைவாய். குழலின் எட்டுத் துளைகளில் விரல்கள் வைத்து இயக்கி, சுரங்களைக் காட்டும் ஏழு துளைகள் போக, வாய் வைத்து ஊதும் எட்டாவது துளை. இவையும் சிவக்கவிமணியார் (பெ-உரை) உரையில் கண்டது.

பண் :

பாடல் எண் : 27

எண்ணியநூற் பெருவண்ணம்
இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.

பொழிப்புரை :

இசைநூல்களில் அளவுபடுத்திய பெருவண்ணம்,- இடைவண்ணம், வனப்பு வண்ணம் எனும் இசைக்குரிய வண்ணங் களின் வகை எல்லாவற்றையும் சேர விளக்கிடும் பெரிய இனிய நாதத்தில் அமைந்த தாளமும், இசையும், தூக்கும், நடை முதலான கதிகளுடன், பண் அமைந்திடும்படி வரும் ஓசையை எப்பக்கங்களிலும் பரவச் செய்தார்.

குறிப்புரை :

பெருவண்ணம், நெட்டெழுத்துக்களையே தொடுத்துப் பாடுவது எனவும், இடைவண்ணம் இடையெழுத்து மிகுதியும் வருவது எனவும், வனப்பு வண்ணம், எழுத்துக்கள் ஒன்றினோ டொன்று பிளவு படாமல் இசைந்து அழகு பொருந்த வருவது எனவும் கூறுப. இவ்வேழு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 28

வள்ளலார் வாசிக்கும்
மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறைஅஞ் செழுத்தாக
ஓங்கியெழும் மதுரவொலி
வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கும்
மேலமரர் தருவிளைதேன்
தெள்ளமுதின் உடன்கலந்து
செவிவார்ப்ப தெனத்தேக்க.

பொழிப்புரை :

வள்ளலாராய ஆனாயர் வாசிக்கின்ற அழகிய துளையாய வாயினையுடைய வேய்ங்குழலில், திருவைந்தெழுத்தினை உள்ளுறையாகக் கொண்டு, ஓங்கி எழுகின்ற இனிய ஒலியின் வெள்ளம், எங்கும் பரந்து நிறைந்து எவ்வுயிர்கட்கும் மேலான வானில் உள்ள தேவர்களது கற்பக மரத்தில் விளைகின்ற தேனினைத் தெள்ளிய அமுதத்துடன் கலந்து அவர்களது செவியில் வார்ப்பது போலத் தேக்கிடலும்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 29

ஆனிரைகள் அறுகருந்தி
அசைவிடா தணைந்தயரப்
பானுரைவாய்த் தாய்முலையில்  
பற்றுமிளங் கன்றினமும்
தானுணவு மறந்தொழியத்
தடமருப்பின் விடைக்குலமும்
மான்முதலாம் கான்விலங்கும்
மயிர்முகிழ்த்து வந்தணைய.

பொழிப்புரை :

முன், புல் அருந்திய பசுக்கூட்டங்கள் இவ்வோசை யைக் கேட்ட அளவில், பின் அசை விடாமல் ஆனாயர்பால் அணைந்து மெய்ம்மறப்ப, தாய்ப்பசுவிடம் பால் உண்ணும் நுரை யுடைய வாயால் தாயின் மடியைப் பற்றி உண்கின்ற இளங் கன்று களின் இனமும் தமது மிக இன்பமாய தாய்ப்பால் உணவினை மறந்து நீங்கி இசையின் வயப் பட, வலிய கொம்பினை உடைய காளை களும், மான்முதலாக உள்ள காட்டு விலங்குகளும் இவ்விசையைக் கேட்டு மயிர் முகிழ்த்து வந்து அணைய.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 30

ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.

பொழிப்புரை :

ஆடுகின்றமயில் இனங்களும் தம் ஆடலை மறந்து அணையவும், காதூடு சென்ற இசையமுதம் நிறைந்த உள்ளத்துடன் பறவைகளின் இனமும் பக்கத்தில் வந்து தமது உணர்வு ஒழிந்திடவும், அவர் அருகில் கோல்தொழில் புரிந்து பசுநிரைகாக்கும் வலிமையுடன் கூடிய இடையர்களும் தாம் எடுத்த செயலை மறந்து குறைவினையாக விடுத்து நின்ற நிலையில், இசை கேட்டு மெய்ம் மறந்து உருகி நின்றனர்.

குறிப்புரை :

இம்மூன்றுபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 31

 பணிபுவனங் களிலுள்ளார்
பயில்பிலங்கள் வழியணைந்தார்
மணிவரைவாழ் அரமகளிர்
மருங்குமயங் கினர்மலிந்தார்
தணிவிலொளி விஞ்சையர்கள்
சாரணர்கின் னரர்அமரர்
அணிவிசும்பில் அயர்வெய்தி
விமானங்கள் மிசையணைந்தார்.

பொழிப்புரை :

நாகர் உலகில் உள்ளார்கள், தாங்கள் முன்பு மேல் எழுந்து வரப் பயின்ற பாதாள வழிகள் ஊடாக இங்கு வந்தார்கள். மணிகள் விளையும், மலையில் வதிகின்ற தேவமகளிர் இசையால் மயங்கியவாறு வந்து பலராகத் திரண்டனர். குறைவிலாத ஒளி வடிவாய விஞ்சையர்கள், சாரணர், கின்னரர், தேவர்கள் யாவரும் தாம் தாமும் வாழும் இடங்களிலிருந்து இசை வயப்பட்டவர்களாய் மெய்ம்மறந்து தமது வான ஊர்திகளின் வழியாக இங்கு வந்தார்கள்.

குறிப்புரை :

பயில்பிலங்கள் - பழகியவழிகள். பணிபுவனம் - நாக லோகம். விஞ்சையர்கள் - வித்தியாதரர். சாரணர் - இயக்கர்; பதி னெண் வகை தேவகணத்தவருள் ஒருவகையினர்.

கின்னரர் - இசை வல்ல தேவ கணங்களில் ஒரு வகையினர்.

பண் :

பாடல் எண் : 32

சுரமகளிர் கற்பகப்பூஞ்
சோலைகளின் மருங்கிருந்து
கரமலரின் அமுதூட்டுங்
கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய
விமானங்கள் விரைந்தேறிப்
பரவியஏழ் இசையமுதஞ்
செவிமடுத்துப் பருகினார்.

பொழிப்புரை :

தேவப் பெண்கள் கற்பகப் பூஞ்சோலைகளின் அருகில் இருந்து மலர் போன்ற தம் கைகளில் வைத்து அமுதூட்டு கின்ற சிவந்த வாயையுடைய கிளிகளுடன், திகழும் நறுமணமிக்க கூந்தல் அவிழ்ந்திட, வானவூர்தியில் ஏறி, ஆனாயர்பால் வந்து, அவர் பெருக்கிப் பரப்பிய ஏழிசையின் அமுதத்தைப் பருகினர்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 33

நலிவாரும் மெலிவாரும்
உணர்வொன்றாய் நயத்தலினால்
மலிவாய்வெள் ளெயிற்றரவம்
மயில்மீது மருண்டுவிழும்
சலியாத நிலைஅரியுந்
தடங்கரியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கணையும்
புல்வாய புல்வாயும். 

பொழிப்புரை :

உலகத்தில் வலிமையுடையவராய்ப் பிறரைத் துன்புறுத்துவாரும், அவரால் துன்பப்படுவாரும், தமது உணர்வு எல்லாம் இசை மயமாய் அதனையே நயத்தலினால், நஞ்சு மலிந்த வெண்பற்களை உடைய பாம்புகள் தமது பகையான மயிலின் மீது மருண்டு விழும். சலிப்படையாத சிங்கமும், அதன் பகையாய பெருத்த யானையும் உடன் சேர்ந்து வரும். புலிவாயின் அருகில், புல்லை மேய்ந்து அதனை வாயில் கொண்ட சிறுமானும் அணையும்.

குறிப்புரை :

புல்வாய - புல்லைவாயிலுடைய. புல்வாய் - மான்.

பண் :

பாடல் எண் : 34

மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.

பொழிப்புரை :

நிலவி வரும் காற்று விரைவாக வீசாது. மரங்களில் உள்ள கிளைகளும் அசையா. கருமலையில் நின்றும் வீழ்கின்ற அருவி யாறுகளும், காட்டாறுகளும், ஒலித்து ஓடாவாயின. பெருமுகிலின் குலங் கள் யாவும் பெயர்ந்து எழுகின்ற தமது செயல் ஒழிய, மழை பொழியா வாயின. பெருவானத்திடையே இடி முதலிய முழக்கங்கள் எழாவாயின. எழுகடலின் இடையாக யாதோர் அலையும் தோன்றாது அசைவற்று நின்றன.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 35

இவ்வாறு நிற்பனவுஞ்
சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண
மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை
முடிச்சடையார் அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த
திருக்குழல்வா சனையுருக்க.

பொழிப்புரை :

மணம் பொருந்திய அழகிய கொன்றை மாலை யைச் சூடிய சடையையுடைய பெருமானின் திருவடித் தொண்டராய ஆனாயர், தம் செவ்விய திருவாயின்மீது வைத்து ஊதிய திருவுடைய வேய்ங்குழலின் வாசனையாய இசையமுதம், உள்ளங்களை உருக்கி ஒன்றாக்கியமையால், இவ்வாறு நிற்பனவும் இயங்குவனவுமாய உயிரினங்கள் யாவும், இசை மயமாய்த் தத்தம் உடம்பில் வாழ்கின்ற பொறிகள், கரணங்கள் யாவும் ஒன்றாக இசையப் பெற்றன.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 36

மெய்யன்பர் மனத்தன்பின்
விளைத்தஇசைக் குழலோசை
வையந்தன் னையும்நிறைத்து
வானந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத
பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்தன் திருச்செவியின்
அருகணையப் பெருகியதால்.

பொழிப்புரை :

மெய்யன்பராய ஆனாயரின் மனத்தில் பொருந்திய அன்பால் விளைந்த இசையையுடைய குழல் ஓசையானது, இந்நில வுலகம் முழுவதையும் நிறைத்து, வான் உலகத்தினையும் தனது வசமாக் கிப் பொய்ம்மையான அன்பினால் எட்டுதற்கரிய பொற் சபையில் நடனம் செய்யும் எம் ஐயனுடைய திருச்செவியின் அருகில் அணை யுமாறு பெருகிற்று.

குறிப்புரை :

ஒலியலைகள் யாண்டும் பரவி நிறைந்து பின் நுண்மையவாய் அடங்கும். இவ்வாறு உலகியல் வயப்பட்ட ஒலிகள் உலகில்பரவி ஒடுங்கும். ஆனாயரின் குழலோசையோ, அன்பு மீதூர எழுந்த ஐந்தெழுத்து ஓசையாதலின், மண்ணுலகிலும், விண்ணுலகிலும் மட்டுமன்றி இறைவனின் திருச்செவியிலும் பெருகிற்று.

பண் :

பாடல் எண் : 37

ஆனாயர் குழலோசை
கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம்
உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார்
மதிநாறும் சடைதாழ.

பொழிப்புரை :

ஆனாய நாயனாரின் குழலிசையைக் கேட்டருளி, அருள் வயத்ததாய கருணையையே திருவுள்ளமாகக் கொண்டிருக் கும் தவக் கொடியாய உமையம்மையாருடன், இசைக்கலைக் கெல் லாம் மூலகாரணராய கண்ணுதற் கடவுள், தமது ஆனேற்றைச் செலுத்தி, தமது அழகுடைய இனிமை மணக்கும் இளம்பிறை அணிந்த திருச்சடை தாழ்ந்திட, வான்வழியாக அவ்விடத்து வந்தணைந்தார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 38

திசைமுழுதுங் கணநாதர்
தேவர்கட்கு முன்நெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது
வேற்றொலிகள் விரவாமே
அசையவெழுங் குழல்நாதத்
தஞ்செழுத்தால் தமைப்பரவும்
இசைவிரும்புங் கூத்தனார்
எழுந்தருளி யெதிர்நின்றார்.

பொழிப்புரை :

எல்லாத் திசைகளினின்றும் கணநாதர்கள் தேவர்களுக்கு முன்னாக நெருங்கி வானிடமாக வரும் பொழுது, வேறோசைகள் அங்கு அணுகாதவாறு தம் உள்ளம் உருகி இசைக்கும் குழல் ஒலியில், ஐந்தெழுத்தை அமைத்துத் தம்மைப் போற்றிடும் ஆனாய நாயனாரின் முன்பு, இசையை விரும்பும் கூத்தப் பெருமான் எழுந்தருளி அவர் எதிர் நின்றார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 39

முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

முன்னாக ஆனேற்றின்மீது அமர்ந்தருளிவந்த முதல்வனாராய சிவபெருமான், செவ்விதாய மனமுடைய ஆனாய நாயனாரின் வேய்ங்குழலின் வாசித்தலை எக்காலத்தும் கேட்டருள விரும்பி, அவரை நோக்கி, `இங்கு நீ நின்ற இந்நிலையேயாக எம் முடன் அணைந்து வந்திடுவாய்`, எனத் திருவருள் புரிந்திடலும், அதனைக் கேட்டருளிய ஆனாய நாயனாரும் தாம் அங்கிருந்தும் பெயர்ந்து, தலைவராய பெருமானாரின் அருகணைந்தார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 40

 விண்ணவர்கள் மலர்மாரி
மிடைந்துலக மிசைவிளங்க
எண்ணிலரு முனிவர்குழாம்
இருக்குமொழி எடுத்தேத்த
அண்ணலார் குழற்கருவி
அருகிசைத்தங் குடன்செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொற்பொதுவின் இடைப்புக்கார்.

பொழிப்புரை :

இந்த அற்புதம் கண்டு, தேவர்கள் சொரியும் மலர் மழை நெருங்கி உலகிடத்து விளங்கவும், எண்ணற்கரிய முனிவர் கூட்டம், மறைமொழி கொண்டு போற்றிடவும், ஆனாயர் தமது வேய்ங் குழலிசையை இசைத்த வண்ணம் உடன் செல்லவும், புண்ணி யராய பெருமானார் அவ்விடத்தினின்றும் எழுந்தருளிச் சென்று பொன்னம்பலத்தின் புகுந்தருளினார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 41

தீதுகொள் வினைக்கு வாரோம்
செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காதுகொள் குழைகள் வீசும்
கதிர்நில விருள்கால் சீப்ப
மாதுகொள் புலவி நீக்க
மனையிடை இருகாற் செல்லத்
தூதுகொள் பவராம் நம்மைத்
தொழும்புகொண் டுரிமை கொள்வார்.

பொழிப்புரை :

செஞ்சடை மிளிர நின்றாடும் கூத்தனை, அன்று ஒருநாள் அவர் தம் திருக்காதில் அணிந்த தோடுகள் வீசும் ஒளியின் நிலவு, இருளை அகற்ற, பரவையார்பால் கொண்ட புலவியை நீக்குதற்கு, அவர்தம் திருமாளிகைக்கு இருமுறை தூது செல்லுமாறு எம்பெருமானை வேண்டிக்கொள்பவராய சுந்தரமூர்த்தி சுவாமிகள், உண்மையில் எம்மைத் தொண்டு கொண்டு தமக்கு ஆளாய எம்மை உரிமை கொள்பவராயிருத்தலின், இனி, தீமைகொண்டு எம்மை இன்னமும் பிறவி வயப்படுத்தித் துன்பப்படுத்தும் ஒரு வினையை முடித்துள்ளதை நாம் புரிந்து, அதனால் மேலும் ஒரு பிறவி எடுக்கும் நிலைக்கு ஒருபோதும் வரமாட்டோம்.

குறிப்புரை :

வகை நூலில் `பித்தா பிறைசூடீ` (தி.7 ப.1 பா.1) எனத் தொடங்கும் திருப்பதிகக் கருத்தை நினைவு கூர்ந்து வணக்கங் கூறியிருப்ப, விரிநூலில் இறைவன் அவருக்குத் தூது கொண்ட எளிமையை நினைந்து வணக்கங் கூறப்பட்டுள்ளது.
சிற்பி