நம்பியாண்டார் நம்பிகள் - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்


பண் :

பாடல் எண் : 1

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி
லேன்அன்று வானருய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணா வருட்
கியானினி யாரென்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நஞ்சு அங்கு அருந்து`` என்பதில் அங்கு, அசை.
``அன்று வானர் உய்ய.
பவள வண்ணா`` - என்பதை முதலிற் கொள்க.
மலர்க் கண் - மலர்போலும் கண்கள்.
பனிப்ப - நீரைத் துளிக்க.
``உன்னை வந்திக்கிலேன்; இனி (உன்) அருட்கு `யார்` ``என்பன்`` என வினை முடிக்க.
அருட்கு - அருளைப் பெறுதற்கு.
யார் உயர்திணை முப்பாற்கும் உரித்தாகலானும், `தன்மைச் சொல் உயர் திணையது` என்றல் பழைய வழக்கு ஆதலாலும் அது ``நான் ஆர்`` 1 என்றாற் போல வருதல் இலக்கணமேயாதலின் இங்கு ``யான் யார்`` என வந்தது.
``என் உள்ளம் ஆர்`` 2 என்பது உயர்திணையாயினாரது உள்ளமேயாதலின் அது, ``எம் கோதைகூட்டுண்ணிய தான் யார்மன்``- என்பதிற் திணைவழுவமைதியாம் - `என்பர்` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 2

என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேயெழுந்த
அன்பின் வழிவந்த வாரமிர்
தேயடி யேனுரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வளர் தில்லைதன்னுள்.
விண்ணவனே`` என்பதை, ``ஆரமிர்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
என்பும், `அதனைத் தழுவிய ஊனும்` என்க.
நெக - நெகிழ்ந்து உருகும்படி.
இறைவனை ``அமிர்து`` என்றதற்கு ஏற்ப, அன்பை, `கடல்` என உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
``அன்பினில் விளைந்த ஆரமுதே`` 1 என்பது காண்க.
வன்மை - செவி பொறுக்க ஒண்ணாமை.
புன்மை - பொருட் சிறப்பு இன்மை.
கொல், அசை.
ஆம்.
உரையசை.
`போதும்` என்றபடி.
``அகமே எழுந்த அன்பின் வழி வந்த ஆரமிர்தே`` என்றமையால் `அன்பர் சொல்லை ஏற்கின்ற நீ அன்பில்லாத என் சொல்லையும் கருணையினால் ஏற்பாய் போலும்` என்பது குறிப்பாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

அவநெறிக் கேவிழப் புக்கவிந்
தியான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேயிட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெறிக்கே - நெறிக்கண்ணே; உருபு மயக்கம்.
புக்கு - சென்று.
அவிந்து - (வீணே) இறந்து.
அழுந்தாமை - பின்பு நகரத்தில் அழுந்தாதபடி.
வாங்கி - மீட்டு.
தவநெறி - பசு புண்ணிய வழி.
பசு புண்ணியங்கட்கு இடையே நிகழும் அபுத்தி பூர்வ சிவ புண்ணியங் களே புத்தி பூர்வ சிவ புண்ணியமாகிய சிவ நெறியிற் சேர்க்குமாயினும் சிவநெறியை அத்தகைய அவ்வவபுத்தி பூர்வ புண்ணியங்கட்குத் துணையாகும் பசு புண்ணியங்களின் பயனாகவே கூறினார்.
தத்துவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன்.
`நீ நடம் பயில்கின்றது (உயிர்களை அவை) செய்பவம் அறுத்து ஆள்வதற்கோ` என்க.
பவம் - பாவம்.
ஓகாரம் சிறப்பு.
எனவே, `பவம் அறுத்து ஆள்வதற்கே` என்பதாம்.
`தில்லைப் பெருமான் திருநடம் புரிதல் உயிர்களுக்கு வீடுபேற்றைத் தருதற் பொருட்டே` என்பதாம்.
இதனானே, தில்லை, காண முத்தி தரும் தலம்` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேயப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துளெந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நானெங்ங னேபெறு
மாறுநின் னாரருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அப்புதல், இங்குச் சாத்துதலைக் குறித்தது.
`பனி மலர்த்தார் அப்ப முயல்கின்றிலேன்` என்க.
அயர்தல் - இளைத்தல்.
எந்தாய் - என் தந்தையே.

பண் :

பாடல் எண் : 5

அருதிக்கு விம்ம நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி யுமிழ்கின்றதே
யொக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும் மெய்த்த
சுருதிப் பதமுழங் குந்தில்லை
மேய சுடரிருட்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பற்று விட்டோர்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
மெய்த்த - திருமேனியால் அமைந்த.
சுருதி முழங்கும் சுடர் என இயைக்க.
சுருதி - வேதம்.
அதுவே கூத்தப் பெருமான் காலில் அணியும் சிலம்பு ஆதலின், `சுருதி பதத்தின்கண் முழங்கும் சுடர்` என்றார்.
``சுருதிப்பதம்`` என்பதில் பகர ஒற்று, எதுகை நோக்கி விரிக்கப்பட்டது.
`பதத்தின்கண்` என ஏழாவது விரிக்க.
சுடர், கூத்தப் பெருமான்.
இருட்கு - இருளை நீக்குதற்கு.
`தில்லை மேயசுடர், இருட்டு மஞ்சி பருதிக் குழவியை உமிழ்கின்றதே ஒக்கும்` என இயைத்து முடிக்க.
பருதிக் குழவி, இள ஞாயிறு.
மஞ்சு - மேகம்.
சிவபெருமானது திருநீறு நிறைந்த திருமேனிமேல் யானைத் தோற் போர்வையிருத்தலால், `அத்தோல் வெள்ளி மலைமேல் கவிந்த மேகம் போலவும், யானைத் தோற் போர்வையின் ஊடே ஊடே வெளிப் படுகின்ற சிவபெருமானது திருமேனியின் ஒளி, இளஞாயிறு வீசும் கதிர்கள்போலவும் உள்ளன` என்பதாம்.
`சுடரினுக்கே` என்பது பாடமன்று.
`அருந்திக்கு` என்பதில் நகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது.
திக்கு - திசைகள்.
விம்ம - நிறையும்படி.
நிவந்தது- ஓங்கியது.

பண் :

பாடல் எண் : 6

சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தவென்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
வேத வினோதத்தையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மடலை, அடலை என்பவற்றில் ஐகாரம் சாரியை.
அடல் - வெற்றி.
அயில் - கூர்மை.
மயிர்க்கயிறு.
பஞ்ச வடம்.
இதனை மாவிரதிகள் சிறப்பாக அணிவர்.
`அணியாக` என ஆக்கம் விரிக்க.
`குரிசில்` என்பதுபோல `விடலை` என்பதும் தலைவருக்கு உரிய பெயர்.
வினோதம் - பொழுது போக்கு.
``செலியரத்தை நின் வெகுளி``1 என்பதிற்போல இப்பாட்டின் ஈற்றில் வந்த ``அத்தை`` என்னும் அசைநிலையிடைச்சொல்.
``அத்தின் அகரம் அகரமுனை யில்லை`` 2 எனச் சாரியைஇடைச்சொற்கு ஓதிய முறையானே முதலில் உள்ள அகரம் கெட்டு நின்றது.

பண் :

பாடல் எண் : 7

வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாத னவனெச்சன் நற்றலை
யும் தக்க னார்தலையுங்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவ ரென்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேதமுதல்வன், பிரமன்.
எச்சன் - யாக தெய்வம்.
காதிய - அழித்த.
``வேள்வி வேத ஒழுக்கம் ஆயினும் வேள்வியில் வேத முதல்வன் தலையையும், வேள்வித் தேவன் தலையையும், வேட்டோன் தலையையும் அறுத்த சிவபெருமானை அந்தணர்கள் வேத மந்திரங்களைச் சொல்லித் துதித்தல் ஏன்`` என வியப்புத் தோன்றக் கூறிக் குறிப்பால், `உண்மை வேத ஒழுக்கம் இன்னது` என்பதைத் தோன்ற வைத்தமையின், இது விபாவனையணி, உண்மை வேத ஒழுக்கமாவது சிவபிரானைப் போற்றுதலன்றி இகழ்தலன்று என்பதாம்.
நாதன் - தலைவன்.
அவன், பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 8

வழுத்திய சீர்த்திரு மாலுல
குண்டுவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றான்உட்கப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுந்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கையிட
அழுத்திய கல்லொத் தன்ஆய
னாகிய மாயவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(``உண்ட களைப்புத் தொண்டருக்கும் உண்டு`` என்னும் முறையில்) `திருமால் உலகை உண்டபின் ஆதிசேடனாகிய பாம்பின் கழுத்தில் படுத்துச் சிறிதே உறங்கினான்.
அப்பொழுது அப்பாம்பினைத் திருச்சிற்றம்பலத்து இறைவன் தனது கையில் கங்கணமாக இட, அக் கங்கணத்தில் அழுத்திய நீலமணிபோல அவன் விளங்கினான்` என்பதாம்.
உட்கு - அஞ்சத் தக்க.
`துயின்றனுக்கு` என்பது பாடமன்று.
பாந்தள் - பாம்பு.
`திருக்கையில் இட` என்க.
`அம் மாயவன்` எனச் சுட்டு வருவிக்க.
வழுத்திய சீர் - பலராலும் துகிக்கப் படும் புகழையுடைய.
`செழுந்திரள்` என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது.
இடத்துக்குரிய, `செழுந்திரள் நீர்`` என்னும் அடை ஒற்றுமை பற்றி இடத்தின்கண் உள்ள பொருட்குக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
தலைமறை நன்னிழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நல்ல புலத்தினர் நெஞ்சு ஏய் அவன்.
.
.
ஆடும் கழல்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
புலம் - அறிவு.
ஞானம் ஏய்தல் - பொருந்துதல்.
தாயவன் - தாயாகியவன்.
மறைத்தல் - தீங்கைத் தடுத்துக் காத்தல்.
``நிழல்`` என்றதனால், தடுக்கப்படுவது வெயிலா யிற்று.
எனவே, `வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல் போல, வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 10

நிழல்படு பூண்நெடு மாலயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னக லேந்தித்
தமருகம் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை யம்பலத்தே
குழல்படு சொல்வழி யாடுவர்
யாவர்க்குங் கூத்தினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிழல் - ஒளி பூண் - அணிகலன்; இங்குச் சிறப்பாகக் கௌத்துவ மணியைக் குறித்தது.
`நீண்டவரே யாவர்க்கும் கூத்தினை ஆடுவன்` என இயைத்து முடிக்க.
``யாவர்க்கும்`` எனச் சிறப்புடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினாராயினும், `எவ்வுயிர்க்கும்` என்றலே கருத்து.
`யாவர்க்கும் ஆக` என ஆக்கம் வருவிக்க.
ஆதல் - நன்மை பயத்தல்.
`தழலை அகலில் ஏந்தி என்க.
படு - பொருந்திய.
பொன் - அழகு.
தமருகம் - உடுக்கை.
தாடமை என்னும் வடசொல், தாடித்தல் எனத் திரிக்கப்பட்டது.
`தாடனம் - அடித்தல்.
`கரத்தை எழில்பட வீசி` என மாறுக.
தில்லை - தில்லை நகர்.
நிறத்தொடுபட்ட இசையை.
``சொல்`` என்றார்.
நிறத்தை, `வானம்` என்பர்.
``நீண்ட வரே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தால், `பிறர் அது செய்கின்றிலர்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 11

கூத்தனென் றுந்தில்லை வாணனென்
றுங்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே யிடுதுணங்கை
மூத்தவன் பெண்டிர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ
இவளுக்குத் தண்ணெனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தில்லை பெருமானைக் காதலித்தாள் ஒருத்தியது வேறுபாடு கண்டு, `இது தெய்வத்தான் ஆயது` எனக் கருதி எடுக்கப்பட்ட வெறியாட்டினைத் தோழி விலக்கி, அறத்தொடு நின்றது.
`குழுமியிட்டு` என்பது இடைக் குறைந்து நின்றது.
ஏத்தன் - துதிகளை உடையவன்.
செவிமாட்டு இசைத்தல் - செவியிற் செல்லும் படி கூறுதல்.
`அதனைச் செய்யாமல் பலவகை ஆடல்களை ஆடினால் பயன் தருமோ` என்றாள்.
துணங்கை, குணலை சில கூத்தின் வகைகள்.
பின்னர் `சாத்தன்` என வருதலால், ``மூத்தவன்`` என்றது.
அவனுக்கு முன்னோனாகிய முருகனை.
குறிஞ்சிக் கிழவனாய உரிமை பற்றிக் குறிஞ்சி நிலப் பெண்களை முருகன் பெண்டிராகக் கூறினார்.
`பெண்டீர்` என்பது பாடமாயின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க.
சாத்தன் - ஐயனார்.
குறிஞ்சி நிலப் பெண்களை முருகன் பற்றுவதாகக் கூறுதலும் உண்டு` என்பது இதனால் அறிகின்றோம்.
தண்ணென வருமோ - குளிர்ச்சி உண்டாகுமோ; உண்டாகாது; வெம்மையே உண்டாகும் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 12

தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னின் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் னுடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள் கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோவெனக் கிப்பிறப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இறுதிக்கண் தொக்க ஏழாவதனை, `எனக்கு இப் பிறப்பின்கண்` என விரித்து, ``கண்ட நாள்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இவ்வாறன்றி இன்மையை உடைமையின் மறுதலையாக்கி, இயல்பாகவே கொள்ள அம் ஆம், கண்ணிற்குக் கூறிய ``உடல் முழுதும்`` என்பதனை ஏனைக் கை, வாய் இவற்றிற்கும் இயைக்க.
கைக்கும், வாய்க்கும் முறையே ``தொழ`` எனவும், ``எண் ஆம் பரிசு`` எனவும் கூறினாற்போலக் கண்ணிற்கும், `காண` என்பது வருவிக்க.
``விருப்பாய்`` என்னும் எச்சம், `காண, தொழ, எண் ஆம் பரிசு` என்ப வற்றோடு முடிந்தது.
``ஆங்கு`` மூன்று அசை நிலைகள்.
ஓகாரங்கள் இரக்கப் பொருள்.
எண் - எண்ணல்; உருவேற்றுதல்.
முதனிலைத் தொழிற்பெயர்.
``அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்`` 1 என்று அருளிச் செய்தது காண்க.
பரிசு - வகை.

பண் :

பாடல் எண் : 13

பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடக மாடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
டின்பத்தை உண்டிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பிறவியில்.
கண்டிலம்`` - என்பதை இறுதிக்கண் கூட்டுக.
ஒன்று - வேறொன்று.
`ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
நறவு - தேன்.
துறவு இயல் - துறவு வேடம்.
அவை சடை முடியும் கல்லாடையும்.
உறவு இயல்வால் - கூட்டுறவு நிகழ் தலால்.
`தொண்டர் உறவே கூத்தனைக் காண வாய்ப்பளித்தது` என்ற படி.
`உண்டபின்` என்பது ``உண்டிட`` எனத் திரிந்து நின்றது.
`உண்ட பின்` என்பதும், `உண்ணுதலைப் பெற்றபின்` என்றதேயாம்.
``கண்டிலம்`` என்றது ``கருதிற்றிலம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 14

உண்டேன் அவரரு ளாரமிர்
தத்தினை வுண்டலுமே
கண்டேன் எடுத்த கழலுங்
கனலுங் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கு மொளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை யம்பலத்
தாடும் மணியினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அருளாகிய அமிர்தத்தை உண்டதாவது, அருள் கைவரப் பெற்றமை.
`அருள் உண்டாய வழியே அம்பலத்து ஆடும் மணியினைக் காண்டல் கூடும்.
அஃது இல்லையாயின் அது கூடாது` என்றபடி.
செய்யுட்கண் முதற்கண் வந்த ``அவர்`` என்னும் சுட்டுப் பெயர் ஒருமைப் பன்மை மயக்கமாய்ப் பின் `மணி` எனப் பட்டவனையே சுட்டிற்று.
எடுத்த கழல் - தூக்கிய திருவடி.
``கனல்`` என்றே போயினா ராயினும், ஏனையவற்றோடு இயைய, `கனற் கையும்` என உரைக்க.
கவித்த கை, தூக்கிய திருவடியின்மேல் உள்ள கை.
தேன்மொழி - தேன்மொழியாள்; சிவகாம சுந்தரி.
முதற்சினைக் கிளவிக்கு அதுஎன் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கு ஐயாகும்
என்பது இலக்கணமாயினும், `அவனைக் கையைப் பிடித்தான்` என்ற வழி, `கையைப் பிடித்தான்` என்னும் தொடர் மொழி, `தீண்டினான்` எனப் பொருள் தந்து ஒரு சொல் தன்மைப்படுத்தலின் இவை போல் வனவற்றில் இரட்டித்து ஐயுருபு வருதல் சிறுபான்மை வழக்காய் அமைதல் பற்றி, இங்கு `மணியினைக் கழலையும், கையையும், நோக்கையும், நகையையும் கண்டேன்` என்றார்.
இரண்டன் உருபுகள் இறுதிக்கண் தொக்கன.
இனி இவ்வாறன்றி, ``மணியினை`` என்றது உருபு மயக்கம் எனினுமாம்.

பண் :

பாடல் எண் : 15

மணியொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்
தணியொப் பனவவன் தன்முடி
மேலடி யேனிடர்க்குத்
துணியச் சமைத்தநல் ஈர்வா
ளனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை யம்பலத்
தான்தன் திருந்தடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சூழ் பொழில்கள் என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
`அம்பலத்தான்றன் அடி திருமாலது முடியின்மேல் அதன் மணியும், அதில் அணியப்பட்ட கமல மலரும் ஒப்பன` என ஒரு தொடராகத் தொகுத்தோதற் பாலதனை இருதொடராக வகுத் தோதினார்.
இரண்டனையும் நன்கு வலியுறுத்தற்கு.
துணிய - துண்டு பட்டு விழும்படி என்றது, `விழுந்ததுபோலக் கெடும்படி` என்றவாறு.
ஈர் வாள் - அறுக்கின்ற வாள்.
``துணிய`` எனவும், ``ஈர் வாள்`` எனவும் போந்தவற்றிற்கு ஏற்ப, `வலிய பெருமரம் ஒத்த இடர்`` என வருவித் துரைக்க.
இங்கு.
பல பொருள் உவமை வந்தது.
``இடர்`` என்பது காரியவாகுபெயராய், அவற்றை விளைக்கும் வினைகளைக் குறித்து.
``இருவினை மாமரம்`` 1 என திருவாசகத்தும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அடியிட்ட கண்ணினுக் கோஅவ
னன்பினுக் கோ அவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோ தில்லை யம்பலத்து
முடியிட்ட கொன்றை நன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது
வாய்ந்த அரும்படையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி இட்ட - திருவடியில் சாத்திய, செடி இட்டி - கீழ்மை பொருந்திய வான் துயர் - மிக்க துன்பம்.
கண்ணன் - திருமால்.
`திருமால் சிவபிரானை நாள்தோறும் ஆயிரந்தாமரை மலரால் அருச் சித்து வழிபட்டிருக்கும் நாள்களில் ஒருநாள் சிவபிரான் ஒரு மலரை மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது கண் ஒன்றைப் பறித்துப் பெருமான் திருவடியில் சாத்திடப் பெருமான் மகிழ்ந்து தன்னிடம் இருந்த வலிய சக்கரப் படையை அளித்தருள, திருமால் அதைக் கொண்டு அசுரர்களை அழித்து உலகிற்கு நன்மை தந்து வருகின்றான்` என்பது புராண வரலாறு.
`அறத்திற்கோ, புகழுக்கோ பொருள் கொடுக்கின்றீர்` என வினவினால், `இரண்டிற்குந்தான்` என்பது பொது விடையாயினும் சிலர், அவற்றுள் ஒன்றையே சிறப்பாகக் கருதுவர்; அது போலவே, இங்கு, `கண்ணினுக்கோ, அன்பினுக்கோ, அவுணர் துயர் சேர்வதற்கோ அரும்படை ஈந்தது` என எழுப்பப்பட்ட வினா விற்கு, `மூன்றிற்குந்தான்` என்பது பொது விடையாயினும், `அன்பிற்கு` என்பதே இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பங்
கேளென் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத் தருளூகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதமென் னுள்புகவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படை, இங்கு வாள், படு, உவம உருபு.
வல்விடை - விரைந்து செல்லும் இடபம்.
கேதுகன் - விருது கொடியை உடையவன்.
தரைதனிதல் கீழை விட்டுத் தவம்செய் சாதியினில் வந்து
எனச் சாத்திரம் கூறுதலின்,
சாதி யிரண்டொழிய வேறில்லை. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
என்றாற்போல இங்கும், `தவம் செய் சாதி, தவம் செயாச் சாதி என இரு சாதிகளே கொள்ளப்பட்டு, அவற்றுள் `தவம் செய் சாதி மேற் சாதி, தவம் செயாச் சாதி கீழ்ச் சாதி` எனக் கொள்ளப்படுதல் அறியப்படுத லால் இங்கு ``கடை படு சாதி`` என்றது தவம் செயாச் சாதியையே யாயிற்று.
`வேறு சில வினை வயத்தால் அடியேன் அச்சாதியில் பிறக்கினும், இப்பொழுது செய்யும் இவ்விண்ணப்பத்தைத் திருச்செவி சாத்தி நீ அடியேனுக்கு அருளல் வேண்டும்` என்றபடி.
கண்டாய், முன்னிலையசை.
`கிங்கிணியை அணிந்தனவும், செம்மையான நிறத்தை உடையனவும் ஆகிய பாதம்` என்றல் கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 18

புகவிகிர் வாளெயிற் றானிலங்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகும் மாற்கரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கண னென்றனன்றும்
தகவு கொலாம்தக வன்று
கொலாமென்று சங்கிப்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புக - தான் உள்ளே செல்லுதற் பொருட்டு `உகிராலும், எயிற்றாலும் நிலத்தைக் கீண்டு` என்க.
பொறி - ஐம்பொறி.
கலங்கி - நிலை கலங்கி.
``கலங்கி`` எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது.
உகும் - மெலிந்த.
மாற்கு - திருமாலுக்கு.
அரு - காணு தற்கு அரிய.
`நகு` என்னும் முதனிலை `ஐ` என்னும் இறுதி நிலை பெற்று `நகை` என வருதல் பெரும்பான்மை.
அதற்கு `வு` இறுதி நிலை புணர்த்து, இடையே அகரச் சாரியை சேர்த்து, ``நகவு`` என்றார்.
``ஒளி` என்பது அதன் பொருள்.
அதற்கு - இருளைப் போக்குதற்கு.
அம் கணன் - அழகிய கண்களை உடையவன்.
அஃதாவது, சூரிய சந்தி ரனைக் கண்களாக உடையவன்.
நன்றும் - மிகவும், ``கொல்`` இரண் டும் ஐயப் பொருள்.
``ஆம்`` இரண்டும் அசைகள்.
சங்கிப்பன் - ஐயுறு வேன்.
``சிவபெருமான், திருமால் பாதங்களை உடையவன் - என்றல் உண்மையானால், - அவன் தில்லைத் தலத்தில் தனது முழுத் திரு மேனியையும் யாவரும் காண ஆடுகின்றான் - என்பது உண்மையா, அன்றா? என்று நான் பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளாய், அதே சமயத்தில் சிறிய பொருள்கட்கெல்லாம் சிறிய பொருளாய் நிற்கும் ஓர் அதிசய நிலையே பரம்பொருளது நிலை` என்பதை இங்ஙனம் குறிப்பால் உணர்த்தியவாறு.
எனவே, `இப்பாட்டிற் குறித்த இரண்டுமே உண்மைகள்தாம்` என்பதே விடையாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 19

சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கு ஓர் கரத்தன், திருமால். அவன் மகன் மன்மதன். தானவர்.திரிபுரத்து அசுரர்.
செங்கோல - செங்கோலை (வானுலக ஆட்சியை) உடைய - மன்மதன் முதலாகக் கூறப்பட்ட ஐவர்கட்கும், `தோள், தலை, ஊர், வேள்வி, உடலம்` என்பவற்றை எதிர்நிரல் நிறையாக இயைக்க. சீர் - அழகு. அம் கோலம் - அழகிய தோற்றம்.
``ஆயிட்டு`` என்பதில் இட்டு, அசை. கண் சிவத்தல், கோலக் குறிப்பு. `கடைக்கண் சிறிதே சிவந்த அளவில் இத்தனையும் சாம்பலாயின` என்றது குணக்குறை பற்றி வந்த விசேட அணி.

பண் :

பாடல் எண் : 20

ஏவுசெய் மேருத் தடக்கை
யெழில்தில்லை யம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரானன்றி
யங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏ - அம்பு.
இஃது ஏவப்படும் காரணம் பற்றி வந்த பெயர்.
அஃது ஈற்றில் லகர உகரம் பெற்று, `ஏவு` என வந்தது.
எனவே, அஃது இரட்டுற மொழிதலாய், `அம்பை ஏவுதல் செய்கின்ற` எனப் பொருள் தந்தது.
இதனால், ``மேரு`` என்பதும் ``மேருவாகிய வில்`` என்னும் பொருட்டாயிற்று.
``அம்பலம்`` என்பது ஆகுபெயராய் அதன் கண் இயற்றப்படும் கூத்தைக் குறித்தது.
அம் கண்ணர் - அழகிய கண்ணையுடையவர்.
``கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்`` 1 என்ப ஆகலின், அதனையுடைய கண் `அழகிய கண்` எனப்பட்டது.
ஆகவே, ``அங்கணர்`` என்பது `கருணையுடையவர்` என்னும் கருத்தினதாம்.
``மிக்கு உளரே`` என்றாராயினும் `மிக்க கருணை யுடையவர் உளரே` என்பதே கருத்தென்க.
ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர் மறுத்தலையுணர்த்திற்று.
`காளத்திக் கண்ணுதலாய்` என ஆக்கம் வருவித்து, `வாய்ப் புனல் ஆட்டிய வேடுவனை` எனத் தொகுக்கப் பட்ட இரண்டாவதை வருவித்து, `வேண்டும் வரங் கொடுத்துத் தேவு செய்வான்` என முடிக்க.
தேவு செய்தது ஒரு காலத்தேயாயினும், `அஃது அவற்கு என்றும் உள்ள இயல்பு` என்றற்கு ``செய்வான்`` என எதிர்காலத்தாற் கூறினார்.
காவு - கா; சோலை.
வாய்ப்புனல் ஆட்டிய வேடுவன், கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 21

வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
சரிவளை சிந்தினவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது.
கோடன் - கோஷன்.
ஆரவாரத்தையுடையவன்.
ஆரவாரம் - போர்காரணமாக எழுந்தது.
சேடன் - பெருமையுடையவன்.
`அவ்வளை, கைவளை` எனத் தனித் தனி இயைக்க.
அம் - அழகு.
அது `வளை` என்பதனோடு புணருங் கால் ஈறுகெட்டு லகர ஒற்று மிக்கது.
சரி - வளையல்களில் ஒருவகை.
``மங்கை`` என்பதின்பின், `அதுபொழுது` என்பது வருவிக்க.
இவ் வாற்றால், `இவளது வேறுபாட்டிற்குக் காரணம் தில்லைக் கூத்தினைக் காதலித்த காதலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தினாளாம்.

பண் :

பாடல் எண் : 22

சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர
மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம்
மான்ற னருள்பெறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிந்திக்க மனம், உரையாட வாய், மலரால் கழல்கள் வந்திக்கக் கரம்` - என நிரல்நிறையாக இயைத்துக்கொள்க.
சந்தித்தல்- சென்று அடைதல்.
தெண்ணர் - அறவிலிகள்.
அமர் - ஒத்த; உவம உருபு.

பண் :

பாடல் எண் : 23

அருள்தரு சீர்த்தில்லை யம்பலத்
தான்தன் அருளினன்றிப்
பொருள்தரு வானத் தரசாத
லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோனரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அருளின் அன்றி - அருள்வழியாக அல்லாமல் பிறவாற்றால்.
அருளேல் - அருள் வழியாக வருமாயின் துறவிக்குப் புழுவாதலும் நன்றாம், நரகத்து வீழும் இருஞ் சிறையும் நன்றாம்` என்க.
``நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறில் இறைவா`` 1 என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தார்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும்.
2 என்பதும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
இன்பமாவது திருவருளோடு கூடியிருத்தலும், துன்பமாவது அதனொடு கூடாதிருத்தலுமே என்னும் உண்மை இவ்வாறு எங்கும் விளக்கப்படுகின்றது.
துறவி - உலகப் பற்றை விட்டவன்.

பண் :

பாடல் எண் : 24

சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
தோடேந்தும் வித்தகர்தம்
உரைப்புள வோவயன் மாலினொ
டும்பர்தம் நாயகற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிறைப் புள் - சிறகையுடைய பறவை.
அவாம் - விரும்புகின்ற.
`பிறையாகிய பிளவு` என்க.
பிதற்றுதல் - அன்பால் பலகாலும் சொல்லுதல்.
மிறைப்பு - மன உறுதி.
உறைப்பு - வலிமை; யாதொன்றிற்கும் அஞ்சாமையும், எதனையும் வெல்லுதலும்.
அயன், மால், இந்திரனாகியோர் ஒவ்வொருவரையும் நோக்க வலிமை பலவாதலின், ``உளவோ`` என்றார்.
ஓடேந்துதலைக் கூறியது, வறுமையை உணர்த்த.

பண் :

பாடல் எண் : 25

அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக்
கூத்த அடியமிட்ட
முகிழ்சூ ழிலையும் முகைகளு
மேயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூ ழிமையவர் போற்றித்
தொழுநின் பூங்கழற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முகிழ் - அரும்பு.
`அவை சூழ் இலை` என்றது, `இடையே அரும்புகளையுடைய இலைக் கொத்து` என்றபடி.
ஏயும் - பொருந்தும்.
கொல், ஐயம்.
`தேவர் தூவும் கற்பக மலர் மழையை யன்றி, யாம் இடும் நிலவுலக இலையையும், அரும்பையும் விரும்பு வையோ என வினாவிய படி.
`யாம் இடும் இலையையும்.
அரும்பை யுமே நீ விரும்புவாய்` என்பது இதன் உட்கருத்து.
ஏன் எனில், `யாம் அன்பே காரணமாக இடுகின்றோம்; இமையவரோ தாம் தம் நிலையிலே நிலைத்து வாழ்தல் வேண்டியிடுகின்றனர்` என்பதாம்.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் 1 என்று அருளியது காண்க.
இங்கு, ``திறம் பயில்`` என்றது அதனையே.

பண் :

பாடல் எண் : 26

பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருவமிர் தாகியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சேந்தனார்` என்னும் அடியவர் பாடிய பாடல்கள் திருவிசைப்பாவில் இருத்தலுடன், திருப்பல்லாண்டு பதிகம் 9-ஆம் திருமுறையிறுதியில் தனியே உள்ளது.
`இப்பதிகத்தைப் பாடி இவர், செல்லாது நின்ற கூத்தப் பெருமான் தேரினைச் செல்லச் செய்தார்` என்பர்.
`இவர் குலத்தால் தாழ்ந்தவர்` என்பது இப்பாட்டில், ``பறைச் சேந்தன்` என்பதனால் குறிக்கப்பட்டது.
திருவாதிரை நாளில் கூத்தப் பெருமானுக்கு அன்பர்கள் களி செய்து படைத்து வழிபடுதல் வழக்கம்.
கோயிலிலும் இது செய்யப்படும்.
`அம்முறையில் செய்ய அரிசி கிடையாமையால் சேந்தனார் தவிட்டுக் களி செய்து துணியில் இட்டுப் படைத்தார்` என்பதும் `அது மறுநாள் விடியலில் திருச்சிற்றம்பலக் கூத்தப்பெருமான் திருமேனியில் காணப்பட்டது` என்பதும் இவரைப் பற்றி வழங்கும் வரலாறுகள்.
அது இப்பாட்டின், பின் இரண்டு அடிகளில் குறிக்கப்பட்டது.
அவிழ்ந்த துணியில் அவிந்த அவிழை
அவிந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்த சடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பின்
சேந்தனார் செய்த செயல்
என இது திருக்களிற்றுப்படியாரிலும் கூறப்பட்டது.
தனிப்பாடல் ஒன்றில், ``தவிட்டமுதம் சேந்தன் இட உண்டனை`` - எனச் சிவஞான யோகிகள் கூறினார்.
இப்பாட்டில் அவிழ் - உணவு.
``தண் பழைய`` என்றது `மிகவும் ஆறிப்போன` என்றபடி.
`குலத்தால் தாழ்ந்த ஒருவர் சுவையற்ற ஓர் எளிய உணவைப் படைக்க, அதனை மிக இனியதாக ஏற்றருளிய அந்தப் பெருமானுக்கு ஆட் செய்யாமல் பிறருக்கு ஆட் செய்வது என்ன அறியாமை` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
இதனால் இவ்வாசிரியர் சேந்தனாருக்குப் பின்னர் வாழ்ந்தவராதல் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 27

ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகம் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன்
றோவிந்த மூவுலகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கனகன் - இரணியன்.
ஆகம் - மார்பு.
``கனகனை ஆகம் கீறிய`` என்றதை, `யானையைக் காலை வெட்டினான்` என்பது போலக் கொள்க.
கோளரி, இங்கு நரசிங்கம்.
`நரசிங்கமாகத் தோன்றி இரணியன் மார்பை நகத்தாற் பிளந்து, அவனது வரத்திற்கு அஞ்சி, அவனது உதிரம் ஒரு துளியும் கீழே விழாதபடி குடித்த திருமால் அந்த உதிர வெறியால் மூவுலகத்தையும் தாக்கிபொழுது தேவர்கள் சிவ பெருமானைத் துதித்து முறையிட, அவர் சரபமாய்ச் சென்று நரசிங்கத்தை அழித்தமையால், திருமால் முன் நிலைமையை அடைந்து அருள் உடையரானார் என்பது பண்டை வரலாறு.
குழை - குழையை உடையவளை ஒரு பாகத்தில் உடையவனே` என்க.
சிம்புள்- சரபம்.
இதனை `எண்காற் பறவை` என்பர்.
``சிம்புளை விட்டுச் செற்றியனேல்`` என்றமையால், சிம்புளைச் சிவபெருமான் தமது உருவினின்றும் தோற்றினனேல்`` என்றமையால், சிம்புளைச் சிவபெருமான் தமது உருவினின்றும் தோற்றுவித்து விடுத்தமை பெறப்படும்.
அரி - திருமால்.
கதம் - கோபம்.
மோகம், இங்குத் திகைப்பு.
உலந்தது - அழிந்தது.
`அழிந்திருக்கும்` என்பதில் `இருக்கும்` என்பது எதிர்கால முற்றாதலின், அதனொடு முடிந்த `அழிந்து` என்னும் செய்தென் எச்சம்.
செய்தென் எச்சத்து இறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்.
1 என்னும் விதியினால் எதிர்காலத்து இறந்த காலமாய்த் தனி இறந்த காலத்தில் அது நிகழாமையைக் குறிக்கும்.
மூவுலகு - முப்பகுதியை உலகும்.

பண் :

பாடல் எண் : 28

மூவுலக கத்தவ ரேத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன்
மாலயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏவு தொழில் - அப்பெருமானால் குறிப்பிட்டு ஏவப் பட்ட தொழில்.
தாவு தொழில்பட்டு - குறித்த இடத்திற்குத் தாவிச் செல்லுகின்ற தொழிலிலே பொருந்தி.
சாரதியா - சாரதியாய் இருக்க.
`மால் விடையாய்த் தாவு தொழிற்பட்டு எடுத்தனன்.
அயன் சாரதியாக, வேதங்கள் இரதத்தொடு பூண்ட மா ஆயின` - என முடிக்க.
எடுத்தல் - தாங்குதல்; சுமத்தல்.
``சாரதியாக`` என்ற அனுவாதத்தானே, `சாரதி ஆயினான்` என்பது பெறப்பட்டது.
மா - குதிரை.
இதன்பின் `ஆயின` என்பது தொகுத்தலாயிற்று.
``இரதத்தொடு`` என்பதை, `இரதத்தை` எனத் திரிக்க.
அனைவரும் `தில்லைப் பிரானுக்கு ஏவலாளர்களே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 29

வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை யம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவா
ளரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்ஐயன்
தந்த தலைமகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேதம் - இரச வாதத்தால் பொன்னாக மாறிய பிற உலோகங்கள் அவைபோலும் சிந்தையாவது, திருவருளால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானத்தை அடைந்த சிந்தை.
அறிவு அதனை விரும்பியவன் என்றும், `அதனால் விரும்பப்பட்டவன்` என்றும் இருபொருளும் கொள்க.
``தந்த தலைமகன்`` என்பதைக் ``கோயில் கொண்டோன்`` - என்பதன் பின்னர்க் கூட்டுக.
தலைமகன்- விநாயகக் கடவுள்.
சேயவன் - முருகன்.
``வீரணக் குடிவாய்.
.
.
பெண் பிள்ளை`` துற்கை `இவ்விருவர்க்கும் ஐயன்; தமையன்` என்க.
`திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை` 14-ஆம் பாடலைக் காண்க.
போதம் - யானை; அதன் தோல்; ஆகுபெயர்.
பொறி - புள்ளிகள்.
வாளரவு - கொடிய பாம்பு.
பெற்ற மக்களது சிறப்புக் கூறு முகத்தால், பெற்றோனது சிறப்பு உணர்த்தியவாறு.
சாதகம் - பேய்க் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 30

தலையவன் பின்னவன் தாய்தந்தை
யிந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்அடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத் தெழுகொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை
யம்பலத் துள்ளிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆலத்தெழு`` என்பது முதலாகத் தொடங்கி, ``இந்தத் தராதலத்து`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
ஆலத்து எழுகொழுந்தின் இலையவன் - ஆல் இலையில் பள்ளி கொள்பவன்; மாயோன்.
தலையவன் - முன்னோன்; முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் பின்னவன் - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்.
1 ``தாய், தந்தை`` என்றதனால் தோற்று வித்தல் குறிக்கப்பட்டது.
நிலையவன் - நிலைக்கச் செய்பவன்.
நீக்கு தொழில் - அழிக்கும் தொழில்.
நடுவாகி நிற்றல் - இரு முனையோடு நடுவண் ஒரு முனையுடையதாய் இருத்தல்.
``கொலைய`` என்பது தொழிலடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.

பண் :

பாடல் எண் : 31

இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை யம்பலத்துள்
அறையும் புனல்சென்னி யோனரு
ளாலன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்ப்பரிமேல்
நறையும் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடு கரி - கொல்லும் யானை.
``கொல்லும்`` என்றது இன அடை.
ஆரூரன், சுந்தர மூர்த்தி நாயனார்.
தார்ப் பரி- மணிக் கோவையணிந்த குதிரை.
வில்லவன் - வீற்கொடியையுடைய சேரன்; சேரமான் பெருமாள் நாயனார்.
சுந்தரர் யானைமீது ஏறிக் கயிலாயம் செல்கையில் வழியில் சிவபெருமானைக் குறித்து,
மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல்
தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன்
என அருளிச் செய்தார்.
அங்ஙனம் ``மண்ணுலகத்தில் மக்களாய்ப் பிறந்தோர் சிவபெருமானை வாழ்த்தி வணங்கினால் அவர்கள் பின்பு அப்பெருமானுடைய உலகத்தை அடைவர்`` என்னும் ஆகமப் பிரமாணம் காட்சிப் பிரமாணம் ஆனதையறிந்தும் மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்தோர் சிலர் அவ்ஆகமப் பிரமாணத்தைச் சிறிதும் தெளிகின்றிலர் என்பதாம்.
இறையும் - சிறிதும்.
அறையும் - ஒலிக்கின்ற.
சுந்தரர் யானைமேற் கயிலை சென்றபொழுது அவர்க்குத் தோழனாய் இருந்த சேரமான் பெருமாள் நாயனாரும் குதிரைமேல் உடன் சென்றதையறிக.

பண் :

பாடல் எண் : 32

நல்வழி நின்றார் பகைநன்று
நொய்ய ருறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை யம்பலத்து
வில்வழி தானவ ரூரெரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன்
காண்க சிவகதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நொய்யார் - சிறியார்.
``நொய்யார் உறவில் நல்வழி நின்றார் பகை நன்று`` என்னும் சொல்லாவது,
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
என்னும் குறள்.
சாக்கிய நாயனார் சிவலிங்கத்தைக் கல்லால் எறிதலை நியமமாகக் கொண்டு செய்து முத்தி பெற்றார்.
கல்லால் எறிதல் பகைமைச் செயலாயினும் அன்பு காரணமாகச் செய்யப்பட்டது.
இங்ஙனமே கண்ணப்ப நாயனார் தமது செருப்புக் காலைச் சிவலிங்கத் தின்மேல் வைத்ததும் இதனால், `நல்வழியில் நிற்கும் நல்லோர் பிறர்க்குத் தீங்குபோல எவற்றையேனும் செய்வாராயினும் அச் செயற்குக் காரணம் பகைமையாகாது, அன்பேயாய் இருக்கும்` என்ற படி.
`வில்வழியாக` என ஆக்கம் விரிக்க.
தானவர் - அசுரர்; முப்புரத் தவர்.
கல்வழி - கல்லை எறிந்ததே வழியாக.
நேர் நின்று - நேரே காட்சி யளித்து ``காண்க`` என்பது அசை.

பண் :

பாடல் எண் : 33

கதியே யடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கதியே`` முதலிய நான்கும் விளிகள்.
கதி - புகலிடம்.
`அனைத்துயிர்க்கும் கதியே` எனவும், `கருத்தினுள் வைத்த நிதியே` எனவும் உரைக்க.
மதியே - ஞான வடிவினனே.
பதி - கணவன்.
இங்ஙனம் பலவாறு விளித்துப் பிழை பொறுக்க வேண்டி விண்ணப்பித்தபடி.

பண் :

பாடல் எண் : 34

பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய் தில்லை
நாத பொறுத்தருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மந்தாகினி.
தில்லை நாத! பிழையாயினவே.
பொறுத்தருள்`` என இயைத்து முடிக்க.
மந்தாகினி - கங்கை.
துவலை- திவலை; துளி.
`கங்கையினது துளிகள் தனது முழையின்கண் வந்து ஆரப் பெறுகின்ற (நிரம்பப் பெறுகின்ற தலை` என்க.
தலை, வெண்டலை.
புழை - உள்ளாற் செல்லும் துளை.
``புழை ஆர்`` என்பதில் உள்ள `ஆர், ``கரி`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
கரம் + இ = கரி.
இதன் முதலிரண்டடிகளை.
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின்
வெற்றடி யேனை விடுதிகண்டாய்
வெறுப்பனவே செய்யு மென்சிறுமை நின்
பெருமையினால் - பொறுப்பவனே.
என்னும் திருவாசகப் பகுதிகளோடு ஒப்பிட்டுக் காண்க.

பண் :

பாடல் எண் : 35

பொறுத்தில னேனும்பல் நஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரானத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்
கென்கொல் அடுப்பனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம் தில்லைப்பிரான்`` என்பதை முதலிற் கூட்டியும், `நஞ்சினைப் பொறுத்திலனேனும்` எனவும் அமரருக்கு அடுப்பன என்கொல்` எனவும் மொழி மாற்றியும் உரைக்க.
எரி.
தாருகாவன முனிவர் சிவபிரான்மேல் ஏவிய வேள்வித்தீ.
அஃது அப்பெருமானை யாதும் செய்யமாட்டாது.
ஆயினும் ஆபிசார மந்திர ஆற்றலோடு கூடிய அத்தீத் தன்னை விட்டுச் சென்று பலரை இரையாக்கிக் கொள்ளாதபடி.
அப்பெருமான் அதனைத் தன் கையில் ஏந்திக் கொண்டான்.
அயன் - பிரமன்.
அவன் செருக்கு மிகுதியால் சிவ பெருமானை, ``என் மகனே! வா`` என்றான்.
`அவன் கூறிய சொல் பொல்லாச் செருக்குச் சொல்லேயன்றி, உண்மையன்று` என்பதை உணர்த்தச் சிவபெருமான் தன்னை அங்ஙனம் அழைத்த அவனது உச்சி தலையைக் கிள்ளி எடுத்தார்.
பிரமன் சிவபெருமானைப் படைக்கும் அளவிற்கு ஆற்றல் உடையனாயின், அவரால் பறிக்கப் பட்ட அத்தலையை உடனே முன்போலத் தோற்றுவித்துக் கொள்வான் அல்லனோ? பிரமன் படைப்பதும், மாயோன் காப்பதும், பிறவும் எல்லாம் சிவபிரானது சங்கற்பத்தின்படியல்லது, தங்கள் சங்கற்பத்தின் படியல்ல` என்பதையே இத்தகைய புராண வரலாறுகள் விளக்கு கின்றன.
பித்தன்உனது ஒர்தலை பிடுங்கிஎறி போதில்
அத்தலை நமக்கென அமைக்கவிதி யில்லாய்
எத்தலைவன் என்பதுனை? இத்தகைமை கொண்டோ
பைத்தலை அராமுடிகொள் பாரிடம் விதித்தாய்?
எனப் பிற்காலத்து ஆன்றோரும் 1 கூறினார்.
அயன்றனை யாதி யாக
அரனுரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்
எனவும்,
சத்திதான் பலவோ என்னில்
தான்ஒன்றே அநேக மாக
வைத்திடும் காரியத்தால்
மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்
அரனுடைய தாகிப்
புத்தி முத்திகளை யெல்லாம்
புரிந்து அவன் நினைந்தவாறாம்
என்னும் சிவஞான சித்திச் செய்யுள்களைக் காண்க.
1 `ஒரு கற்பத்தில் உண்டாக்கப்பட்ட பிரம தேவனுக்குப் படைத்தல் தொழிலைக் கற்பித்தற் பொருட்டுச் சிவபெருமானது சங்கற்பத்தின்படி அவனது நெற்றியினின்றும் நீலலோகிதன் முதலிய உருத்திரர் பதினொருவர் தோன்றினர்` என்பது புராண வரலாறு.
இஃதே பற்றி, பிரமன் உருத்திரனைப் படைத்தான்` என வைணவர்கள் சிவபெருமானைப் பிரமனிலும் தாழ்ந்தவனாகக் கூறிக் கொள்கின் றார்கள்.
`உருத்திரன்` எனச் சிறப்பாகக் கூறப்படுபவர், அயல், மால் இருவர்க்கும் மேலாய் நின்று, பிரகிருதி மாயா உலகங்களை அழித்தல் தொழிலைச் செய்யும் சீகண்ட உருத்திரர்.
இவரைப் பிரமனிலும் தாழ்வாகக் கூறுதல் தத்துவ முறையோடு மாறுபடுவதாகும்.
பிரமனது செருக்கினால் உண்மை மறைக்கப்பட்டதுடன், அவனது படைத்தல் தொழிலும் தாறுமாறாய் நிகழ, உலகத்திற்குப் பல தீமைகள் உளவா மாகலின், `அவையெல்லாம் நிகழாமைப் பொருட்டு அவனது தலையைச் சிவபெருமான் கிள்ளினார்` என்றபடி.
அடுப்பன - விளைவன.
இஃது இறந்த காலத்தில் எதிர்காலம்.
பன்னுதல் - சொல்லுதல்.
அஃதாவது, தேவர் `உண்டருள்க` என்றது.
கதம் - கோபம்.
செறுத்தல் - அடக்குதல்.
கறுத்தல் - கோபித்தல்.
அஃது இங்கு அழித்தலாகிய தன் காரியத்தைத் தோற்றி நின்றது.
கொல், ஐயப் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 36

அடுக்கிய சீலைய ராய்அக
லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூணிரப்
பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடுக்கிய சீலை - கிழிந்த துளைகள் தோன்ற ஒட்டா மல் பல மடிப்புக்களாக மடிக்கப்பட்ட சீலை.
அகல் - மண்டை; மட் பாத்திரம்.
`எலும்பில் தசை ஒடுக்கிய மேனி` என்க.
அஃதாவது எலும்புகள் நன்கு தோன்றும் உடம்பு.
நடுக்கிய - நடுங்கச் செய்த.
நரல் - (சிங்கன்) அலறும்படி.
ஏழையர் - அறிவிலிகள் (முற்பிறப்பில்) தில்லை தொழாத ஏழையர்கள் (இப்பிறப்பில்).
வறியராய் ஊண் இரப் பார்கள்` என்க.

பண் :

பாடல் எண் : 37

ஏழையென் புன்மை கருதா
திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை யம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை வாழி.
அசை மாழை - மாவடு.

பண் :

பாடல் எண் : 38

புண்ணிய னேயென்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல்
என்னுள் வந்திட்
டண்ணிய னேதில்லை யம்பல வாஅலர்
திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புகல் - கதி.
அண்ணியன் - இனிப்பவன்.
கண்ணி - முடியிலணியும் மாலை.
அன்றி, `கண்ணியமானவன்` என்றலும் ஆம்.
செய்ய - எல்லாரையும் ஒருபடித்தாக வருத்துகின்ற.
காமன் - மன்மதன்.
வெளுப்ப - சாம்பலாகும்படி.
கறுத்தவன் - கோபித்தவன்.

பண் :

பாடல் எண் : 39

கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ
பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ
வருஞ்சொ லரும்பழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கறுத்த கண்டன் - நீல கண்டன்.
அண்ட வாணன் - ஆகாயத்தில் இருப்பவன்.
செறுத்த - அடக்கிய.
உறுதுயர் - மிக்க துன்பம்.
`அரும்பழி ஆர்க்கு வரும்?` சொல் என்க.
ஓகாரம் சிறப்பு.
`உனக்குத்தான் வரும்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 40

பழித்தக் கவுமிக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி கலைய
னளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா தமிர்துசெய்
தானென் றியம்புவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டில் ``அழித்திட்டிறைச்சி புலையன் அளித்த அவிழ்க் குழங்கல்`` என இவ்வாறு இருக்க வேண்டிய பாடம் மிகவும் திரிபு பட்டுள்ளது.
கண்ணப்ப நாயனாரை ``வேட்டுவன்`` எனச் சாதிப் பெயராற் கூறியது போலவே, சேந்தனாரையும் `புலையன்` எனச் சாதிப் பெயராற் கூறினார்.
சேந்தனார் இட்ட தவிட்டுக் களி திருவமுதா யினமை மேல், ``பூந்தண் பொழில்சூழ்`` என்னும் பாடலிலும் குறிப்பிடப்பட்டது.
அதிபத்தன் - அதிபத்த நாயனார்.
இவர் வலைஞர்.
அழித்து - விலங்குகளைக் கொன்று.
`இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

வரந்தரு மாறிதன் மேலுமுண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற வென்னையும்
மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மையிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புலைப் பொய்மை - கீழான நிலையாப் பொருள்கள்.
அவை உலகத் துப்புரவுகள்.
நிரந்தரம் - இடையறாமை.
`தன் அடியார், மெய்ம்மையில் தரம் தரு செல்வம்` என்க.
தரம் தருதல் - மேன்மை யடைதல்.
தன்மையுடையதை, ``தன்மை`` என்றார்.
`இது பேசருந் தன்மையுடையது ஆதலின், இதன்மேலும் (எனக்கு அவன்) வரம் (மேன்மை) தருமாறு உண்டோ` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 42

தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
தோசில வூமர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சில ஊமர்கள்`` - என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
ஊமர் - பேச அறியாதவர்.
ஒழுகும் நெறியறியாதவரை இங்ஙனம் `பேச அறியாதவர்` என்றல் வழக்கு, ``கோடி மேல் விடையுடையான்`` என்பது, `சிவன்` என ஒரு சொல் தன்மைப்பட்டு நின்று, ``தில்லை மூதூர்`` என்பது ஏழாவதன் பொருள்படத் தொக்கு நின்றது.
``ஆடவும்`` என்னும் உம்மை எளிமையை உணர்த்தி நிற்றலின் இழிவு சிறப்பும்மை.
`மன்றில் ஆடவும் வணங்கி ஒன்றார்` என்க.
மற்று, அசை.
அங்கே - அம்மன்றிலே.
ஒன்றுதல் - மனம் ஒருங்குதல்.
இரண்டு, பிறப்பும் இறப்பும் இது தொகைக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 43

களைக கணிலாமையுந் தன்பொற்
கழல்துணை யாந்தன்மையும்
துளைக ணிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையாம்
தளைக ணிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூரனென்றேன்
வளைக ணிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
தளைகள் நிலா மலர் - கட்டு (முறுக்கு - அரும்பாய் இருக்கும் நிலை) நில்லாத, (நிலா, இடைக்குறை) எனவே, நன்கு மலர்ந்த மலர்.
`கொன்றையன்` என்றும், `புலியூரன்` என்றும் ஒருமுறை சொன்னேன்.
அது காரணமாகக் கையில் வளைகள் நில்லாது கழன்று வீழும்படி அநங்கனது (மன்மத னது) வரிந்து கட்டப்பட்ட வில் என்னை நோக்கி வளையா நின்றது.
இது பற்றி அச்சுரன் (தேவன், சிவபெருமான்) நினைகின்றானில்லை.
`அதுவே என் வேறுபாட்டிற்குக் காரணம்` என்பது குறிப்பெச்சம்.
கணைகள் - பற்றுக்கோடு.
`கழலே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
`கண் நிலாவும் முகத்தையும்.
துளை நிலாவும் கையையும் உடைய கரி` என எதிர்நிரல் நிறையாக இயைத்துரைக்க.
``நிலாமை`` என்பது எதிர்மறை வினையெச்சம்.
`சுரம் நினையான்` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 44

வரித்தடந் திண்சிலை மன்மத
னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிற்றம்பலவன் (மன்மதனை நோக்கித்) திருப்புருவம் நெரித்த மாத்திரத்தில் கண்டது சாம்பலேயன்றி, அவனது பேரழகும், `திருமால் பெற்ற மகன்` என்னும் புகழும் சிறிதும் நின்றில என்க.
`மன்தனை நோக்கி` என்பது முன்னர்ப் போந்த சொற்களின் குறிப்பால் வந்து இயைந்த இசையெச்சம்.
தவநெறிகள் - சிவதன்ம வழிகள்.

பண் :

பாடல் எண் : 45

நின்றில வேவிச யன்னொடுஞ்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநட மாடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்
தார்த்த கரியவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பாரத - இதிகாசத்துள், `பதின்மூன்றாம் நாட்போர் முடிந்தபின் இரவில் கிருட்டினன் அருச்சுனனை அவனது சூக்கும தேகத்தோடு மட்டும் உடன் கொண்டு கயிலாயத்தை அடைந்து, சிவபெருமானைத் தரிசிப்பித்து, அப்பெருமான் முன்பு அவனுக்கு வழங்கிய பாசுபதாத்திரம் இந்திரன் பொருட்டு அவனால் `நிவாத கவச காலகேயர்` என்னும் அசுரர் மேல் ஏவப்பட்டமையால் அஃது அவ்வசுரர்களையழித்துவிட்டுக் கயிலாயத்துள் சென்றிருந்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்து மீண்டு குருச்சேத்திரத்தை அடையச் செய்தான்` எனக் கூறப்பட்டது.
அப்பொழுது கிருட்டினன் கயிலாய மலைமேல் `காலால் நடத்தல் கூடாது` எனத் தலையால் நடந்து ஏறினமை இப்பாட்டால் அறியப்படுகின்றது.
இப்பாட்டு அந்தாதியாய் அமைதற் பொருட்டு, ``நின்றிலவே`` என்பது பாடமாகக் காணப்பட்ட போதிலும் ``நின்றிரவே`` என்பதே பாடமாகும்.
அப்பாடம் அந்தாதிக்கு மாறாவதன்று.
``நின்று`` என்பதை ``ஏறி`` என்பதன் பின்னர் கூட்டுக.
`கரியவன் இரவே விசயன்னொடும் திருமலைமேல் சரம் கொண்டு இழிந்தது தலையால் நடந்து ஏறி நின்று` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 46

கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
யாடல் புரிந்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரும்பு + உருவம் = கருப்புருவம்.
`கரும்பு போலும் உருவம்` என்க.
கரும்பு போலுவதாவது கண்டார்க்கு இனிதாதல்.
`அவ்வுருவத்தைக் குறிக்கின்ற திருவார்த்தைகள்` என்க.
விருப்பு உருவம் - அன்பே வடிவான உடம்பு.
இரும்பு + உருவம் = இருப் புருவம்.
இங்கு ``உருவம்`` என்றது தன்மையை.
பொருப்பு உருவப் புரிசை -மலை போலும் உருவத்தையுடைய மதில்.

பண் :

பாடல் எண் : 47

புரிந்தஅன் பின்றியும் பொய்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைம்மலர் சென்னியில்
கூப்பின் வியன்நமனார்
பரிந்தவ னூர்புக லில்லை
பதிமூன் றெரியவம்பு
தெரிந்தவெங் கோன்தன் திரையார்
புனல்வயற் சேண்தில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிற்கு முதற்கண் `ஒருவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
பொய்ம்மையிலே - பொய்யாகவே; அஃதாவது மனம் பற்றாது மற்றவர் செய்வது போலச் செய்பவனாய்.
திசை வழியே - ஒருதிசை நோக்கிச் செல்லும் வழியில்.
அகங்கைம்மலர்- உள்ளங்கையாகிய மலர்கள்.
``விரிந்து`` என்பதனை, `விரிய` எனத் திரிக்க.
`முன்னே விரியப் பின்னே கூம்பின்` என்க.
அகங்கை இரண் டனையும் விரித்தல் ஒருவகை ஆவாகன முத்திரை.
இறைவனிடம் ஒன்றை வேண்டுதற்கும் இம்முத்திரை பயன்படும்.
`அவன்பால் மட்டு மன்று; அவனது ஊர்க்குள்ளும் நமனார் புகலில்லை` என்பதாம்.
`ஒருவன் தில்லையை நோக்கிச் சென்னியிற் கைகூப்பினால் அவனது ஊர்க்குள்ளும் நமனார் புகலில்லை` என்க.
பரிந்து - விரைந்து.
பதிமூன்று - முப்புரம்.

பண் :

பாடல் எண் : 48

சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சேண் - அகன்ற இடம்.
`திவ்வியம்` என்பது ``திப்பியம்`` எனத் திரிந்து வந்தது.
திவ்வியம் - தெய்வத் தன்மை சந்தை அடங்குதலை `அது தன்னை மறத்தல்` என்றார்.
கழற்கு - கழற் கண்; உருபு மயக்கம்.
மாறாதல் - ஒடுங்குதல்.
மீண்டனை - கழலிற் சென்றும் திரும்பினாய்.
`என்னை என் செய்திட மீண்டனை` என ஓகாரம் வினாப் பொருட்டு.
``சிந்தை`` என்பதை முதலிற் கூட்டுக.
அதனைப் பின்னும் கூட்டுக.
சிந்தை, அண்மை விளி.

பண் :

பாடல் எண் : 49

விளவைத் தளர்வித்த விண்டுவுந்
தாமரை மேலயனும்
அளவிற்கு அறியா வகைநின்ற
வன்றும் அடுக்கல்பெற்ற
தளர்வில் திருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க.
களா, ``கள`` எனச் செய்யுளில் ஈறு குறுகி நின்றது.
களா, ஒருவகைச் செடி.
`அதில் உள்ள கனி` என்க.
புரையும் - போலும்.
`கற்ற வார்சடை` என்பது பாட மன்று.
`வார்சடையிற் கங்கையை உடையவனே` என்க.
விளாவைத் தளர்வித்த - (கண்ணனாய் இருந்த நிலைமையில்) விளாங்கனியை (கன்று குணிலா) எறிந்து உதிர்த்த.
விண்டு - விட்டுணு; அடுக்கல் பெற்ற - மலையரையன் பெற்ற.
தளவின் திரு நகையாள் - முல்லையரும்பு போன்ற நகையை உடைய உமாதேவி.
`சடைக் கங்கையனே! நீ மாலும், அயனும் அடி முடிதேட அனற்பிழம் பாய் நின்ற அப்பொழுதும் மலைமகள் உன் இடப்பாகத்தில் இருந் தாளோ` என்க.
கொல, ஐயம்.
`என்றுமே உமை பாகம் பிரியாய்` எனப் படுகின்ற நீ நெருப்புருவாய் நின்ற காலத்தில் அவளைப் பிரியா திருத்தல் எங்ஙனம் கூடிற்று என்றபடி.
``எத்திறம் நின்றான் ஈசன், அத் திறம் அவளும் நிற்பள் 1 என்பது அவன் இயல்பாகலின் நீ நெருப்பாய் நின்றபொழுது, அவன் அதன் சூடாய் இருந்தாள் போலும்`` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 50

கங்கை வலம்இடம் பூவலங்
குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
ணிடமணங்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு மாதொரு கூறாம் வடிவத்தை வருணித் தது.
`வலம் கரம் மழுதங்கும்` என இயைக்க.
வீ - பூச் செண்டு.
பாந்தள் - பாம்பு.
சங்கம் - சங்க வளையல்.
அங்கு, அசை.
அக்கு - எலும்பு மாலை.
அம்சரி - அழகிய சரிவு.
(தொங்கல்) பொன்னரி மாலை முதலியன.
காண், அசை.
`வலம் அம்பலவன்; இடம் அணங்கு.
(பெண்) இந்நிலைமைக்கு ஏற்ப, தலையில் வலம் கங்கை; இடம் பூ முதலியனவாம்` என்க.

பண் :

பாடல் எண் : 51

அணங் காடகக்குன்ற மாதற
ஆட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை யெல்லை
மிதித்தலு மென்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவளென்ன வென்றுகொ
லாம்வந்து கூடுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது தலைவியது கைக்கிளைக் காதல் ஆற்றாமை கண்டு தோழி மனமழிந்து கூறியது.
ஆல் - திருஆலங்காடு தலம்.
அதில் அமர்ந்தவள் காளி.
அவளை ``அணங்கு`` என்றதனோடு, சத்தி கூறாதல் பற்றி, ``ஆடகக் குன்ற மாது`` என்றார்.
`பொன்மலை மகள்` என்பது அதன் பொருள்.
அற ஆட்டிய - தன்னை (சிவபெருமானை) என முற்கால ஆசிரியரும் கூறினார்.
அவளை ஒறுத்து அடக்காமல், இனிய நடனத்தினாலே வென்று அடக்கினமை பற்றிச் சிவபெருமானை ``அவளுக்கு இணங்கியவன்`` என்றார்.
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்கு வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ
என்னும் திருவாசகத்தைக் காண்க.
வழுத்தல் - துதித்தல்.
பாவை, தலைவி.
`பாவை, தில்லை எல்லை மிதித்தலும் என்பு உருகா.
.
.
.
எழும்; (ஆகவே, தில்லைப்பிரான் இவளை) - இவள் மதர்த்த குணம் - என்ன (இரங்கி) என்று வந்து கூடுவது` என இயைத்து முடிக்க.
தவா - நீங்காத; மதர்த்த - களித்த; பித்துக் கொண்ட.
குணம் உடையவளை, ``குணம்`` என்றார்.
காண், கொல், ஆம் அசைகள் ``உருகா`` என்பது முதலாக எண்ணின்கண் வந்த வினையெச்சங்கள் யாவும் ``எழும்`` என்னும் முற்றொடு முடிந்தன.

பண் :

பாடல் எண் : 52

கூடுவ தம்பலக் கூத்த
னடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவ னாக்கமச்
செவ்வழி யவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ
தொண்டசுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறவி வீடுவதாக நினைய வல்லோர் செய்யும் வித்தகம் அடியார் குழுவு தொறும் கூடுவதும், அவன் ஆக்கம் செவ்வழி தேடுவதும், அவ்வழியே ஓடுவதும், ஒண் சுடரை உள்ளத்து இருத்துவதும் `ஆம்` என இயைத்து முடிக்க.
``ஆக்கும்`` என்பது இறந்த காலத்தில் வந்தது.
சிவபெருமான் ஆக்கிய செவ்விய வழியாவது சிவாகம நெறி.
அதனை அடுத்துவரும் பாட்டாலும் அறியலாம்.
``கூடுவது`` முதலிய நான்கு தொழிற் பெயர்களும் செவ்வெண்.
அவற்றது இறுதியில் அவற்றின் தொகை தொகுக்கப்பட்டு நின்றது.
`அவ்வழிக்கண்ணே` - என ஏழாவது விரிக்க.
ஒண்சுடர் - ஞானம்; என்றது சிவஞானத்தை.
``வீடுவது ஆக`` என்றது, `உண்டாகும்படி` என்றவாறு.
வித்தகம் - திறல்.
திறலால் செய்யப்படும் செயல்களை, `திறல்` என்றார்.
`பிறவாறு செய்யும் செயல்கள் பிறவியை நீக்க மாட்டா` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 53

வித்தகச் செஞ்சடை வெண்மதிக்
கார்நிறக் கண்டத்தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமியர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த
தோஅரன் பொன்னடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வித்தகம், வெண்மதி, கார்நிறக் கண்டம், எண் தோள், கைம்மலைப் போர்வை - இவை அனைத்தும் தில்லை மன்னனாகிய ஒருவனையே சிறப்பித்தன.
வித்தகம் - திறல்.
`செஞ்சடைக் கண் வெண்மதியை உடைய` என்க.
கார் - மேகம்; கருமையுமாம்.
கை மலை - யானை.
இஃது ஆகு பெயராய், அதன் தோலைக் குறித்தது.
சித்தம் - மனம்.
`சித்த` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது.
`சித்த மாகிய அகக் கோயில்` என்க.
`கோயிலின்கண்` என ஏழாவது விரிக்க.
ஆகமியர் - சிவாகம நெறியில் நிற்பவர்கள்.
``காருறு கண்ணியர்`` என்றாற் போல்வன வற்றில் ஒருமையுணர்த்தும் இகர விகுதி சாரியை யாய்விட `அர்` என்னும் பன்மை விகுதிபுணர்ந்து பன்மையை உணர்த்தும்.
இவ்வாறு வருதல் அஃறிணைப் பெயர்கள் இன்மையாலும், இன்னோரன்னவை உயர்வு பற்றி வந்த பன்னைப் பெயராகாது, பொருட்பன்மை பற்றிய பெயர்களே ஆதலாலும் இவை தனி மொழிகளில் ஒட்டுப் பெயர் ஆக்கத்தில் உள்ள சில வேறுபாடுகளேயாம்.
ஆசிரியர் தொல்காப்பி யனார் தனிமொழியாக்கத்தைக் கூற முற்படாமையின் இன்னோரன்ன வற்றை அவர் விரித்திலர்.
``புத்தகப் பேய்கள்`` - சுவடிகளைக் காத்தல் மாத்திரத்தையே உடையவர்கள்.
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருளறியார்
உய்த்தக மெல்லாம் நிரப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே; பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
1 என்னும் நாலடிச் செய்யுளைக் காண்க.
இதில் `போற்றுதல்` என்றது.
``ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தல்`` 2 போல, மற்றவர்கள் உயர்த்துப் பேசுதலைக் கேட்டுத் தாங்களும் உயர்த்துப் பேசுதல், `சிவாகமப் பொருளை அறியாதவர்கட்குப் பிற நூல்களின் உண்மைப் பொருள் விளங்காது` என்பதாம்.
அசிக்க ஆரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைப் காணாகண், வாய்
பேசாதப் பேய்க ளோடே
எனவும்,
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர்
எனவும் போந்தனவும், இக்கருத்தே பற்றி எழுந்தனவாம்.
`எங்குள் ளதோ` என்பதை, `எங்கித்ததோ` என்றல் ஒரு வட்டார வழக்கு.
``எங் கிருந்தோ`` என்றது, `அறிய வாராது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 54

பொன்னம் பலத்துறை புண்ணிய
னென்பர் புயல்மறந்த
கன்னன்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீரறு
வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் மழைதவிர்த் தீரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன்னம்பலத்துறை புண்ணியன் என்பர்`` என்பதனை இறுதியிற் கூட்டுக.
புயல் - மேகம்.
அஃது இங்கு மழையைக் குறித்தது.
கன்னல் - நாழிகை; அஃது இங்குப் பொதுவாக, `காலம்` எனப் பொருள் தந்து நின்றது.
மை - குற்றம்.
அது மழை பெய்யாமைக்குக் காரணமாகிய குற்றம்.
தீர - தீர்ந்தமையால் `தீர்ந்தது பிரார்த்தனையினால்` என்க.
நீற்றுக் கலிக்காமன் திருநீற்றை யணிந்த (அஃதாவது பிரார்த்தித்து அணிந்த) ஏயர்கோன் கலிக்காம நாயனார்.
`புன்கூர் - அந்நாயனாருக்கு உரியதாய் இருந்த திருப்புன்கூர்.
`புன்கூரில்` என ஏழாவது விரிக்க.
கலிக்காம நாயனார்.
தாமும், தம்மைச் சார்ந்த மக்களும் ஏதோ பிழை செய்தமையால் மழை பெய்யா தொழிந்தது` எனக் கருதி, அப்பிழை தீர்த்தற்குப் பன்னிரண்டு வேலி நிலத்தைத் திருப்புன்கூர் இறைவருக்குத் தேவதானமாகக் கொடுப்பது` என்று பிரார்த்தித்துக் கொண்டமையால் மழை பெய்யத் தொடங்கியது.
தொடங்கிய மழை விடாது பொழிந்தமையால் மழை நின்றால், மற்றும் பன்னிரு வேலி தேவதானம் செய்வதாகப் பிரார்த்தித்தமையால் மழை நின்றது.
இச் செய்தியைச் சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருப்புன்கூர்த் தலப் பதிகத்து இரண்டாம் பாடலில் குறித்தருளினார்.
அஃதே இப்பாட்டிற் கூறப்பட்டது.
`பொழிவித்து` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
ஈற்றடியில், பின்னும் பிழை தவிர்த்து என்பது பாடமன்று.
ஈற்றில் தொகுக்கப்பட்ட `பிஞ்ஞகனை` என்னும் இரண்டாம் வேற்றுமையை விரிக்க.

பண் :

பாடல் எண் : 55

நேசனல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நேசன் - அன்பன்.
`வினை நீக்கும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
தேசன் ஒளியுடையவன்.
`ஆனை` என்பது காதற் சொல்.
என்னேன் - என்று துதியேன்.
`இப்பிறப்பு` எனச் சுட்டு வருவிக்க.
என் ஆய் - என்ன பயன் தந்ததாய்.
`யாதொரு பயனையும் தந்ததாகாது வீணாய்க் கழியும் போலும்` என்பதாம்.
கொல், ஐயம் `என்றனக்கு என் ஆய்` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 56

தனந்தலை சக்கரம் வானத் தலைமை
குபேரன் தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடலூர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்னரு ளால்முனி
வால்பெற் றிகந்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தில்லைத் தலைவன் அருளால் தனமும், தலையும், சக்கரமும், வானத் தலைமையும் பெற்றவர் முறையே குபேரனும், தக்கனும் ஏறடர்த்தோனும், வாசவனும்` எனவும், `அவன் முனிவால் உயிரையும், பல்லையும், உடலையும், ஊரையும் இகந்தவர் முறையே காலனும், பகலவனும், காமனும், தானவரும்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க.
இது நிரல்நிறையணி.
`தில்லைப் பெருமான் அன்பர்கட்கு அருளையும், வன்பர்கட்கு ஒறுப்பையும் அளிக்க வல்லவன்` என்பதாம்.
தனம் - செல்வம்.
வானத்தலைமை - வானுலக ஆட்சி.
ஏறு அடர்த்தான், நப்பின்னையை மணப்பதற்காகக் காளை களைத் தழுவிக் கொன்றவன்.
கண்ணன், திருமால்.
வனந்தலை ஏறு - காட்டில் சென்று மேயும் காளைகள்.
சினந்து அலை காலன் - உயிர்கள்மேல் கோபித்துத் திரிகின்ற யமன்.
பகலைச் செய்பவனைப் ``பகல்`` என்றார்.
`இனத் தலைவன்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``பெற்று இகந்தவர்`` என்பதில் ``பெற்று`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின், `பெற்றவர், இகந்தவர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 57

அவமதித் தாழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பில ரென்னவிண்
ணாளுந் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவமதித்து - (கூற்றுவனால்) இகழப் பட்டு.
ஆதர்- அறிவிலிகள்.
தவம் மதித்து - தவத்தை மேன்மையாக மதித்துச் செய்து.
சிவ நிதி - சிவனாகிய செல்வம்.
`நிதிக்கே` என்னும் நான்காம் உருபை இரண்டாம் உருபாகத் திரிக்க.
ஈற்றில் `ஆவர்` என்னும் பயனிலை வருவித்து முடிக்க.
`நினையாதவர் நரகம் புகுவர்` எனவும், `நினைந் தவர் சிவலோகம் பெறுவர்` எனவும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 58

வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வரு வாசகத்தினில் செய்` என இயையும்.
வரு வாசகம் - திருவருளின் வழித் தமது நாவில் வந்த சொற்கள்.
இவை `திருவாசகம்` - எனப் பெற்றன.
சிவ பாத்தியன் - சிவனது பாத சம்பந்தத்தை (திருவடி தீட்சையை)ப் பெற்றவன்; திருவாதவூரடிகள்.
`திருவாசகம் மாணிக்கம் போன்றது` என்னும் கருத்தால் அவ்வாசகத்தை வெளியிட்ட அடிகள் `மாணிக்க வாசகர்` எனப் பெயர் பெற்றார்.
இவரை `ஆதிசைவ அந்தணர்` என அறிஞர் கருதுவர்.
இவர் தில்லைப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து அருளிச் செய்த கோவைப் பிரபந்தம், `திருச்சிற்றம்பலக் கோவையார்` என்றும், `திருக்கோவையார்` என்றும் சொல்லப்படுதல் இப்பாட்டில் குறிக்கப்பட்டமை காண்க.
``வருவாசகத்தினில் செய்`` என்றதனால் இதுவும் திருவாசகமேயாக குறிக்கப்பட்டது.
இதனைக் `கோவைத் திரு வாசகம்` என்பர்.
இக்கோவையாரை இவ்வாசிரியர் (நம்பியாண்டார் நம்பி) எட்டாம் திருமுறையகைச் சேர்த்திருத்தல் வெளிப்படை.
அப் பொருள், அதில் சொல்லப்பட்டுள்ள உலகியற் பொருள், அறிவான் நூற் பொருள் `கவியாற் பாடி` என மூன்றாவது விரிக்க.
`அப் பெருமானைச் சிரிக்கச் செய்வர்` என்க.
சிரித்தல் - எள்ளி நகையாடுதல்.
`அருள்வழியால் வந்த சொற் பிரபந்தத்திற்கு அஃது இன்றி, மலவழியால் வரும் சொற்பிரபந்தங்கள் ஒவ்வா` என்பது கருத்து.
இதனால் இவ்வாசிரியர் காலத்தில் சிவபிரான் மீது பாடப்பட்ட வேறு சில கோவைகளும் இருந்தமை அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 59

சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட வங்கையும் சங்கச்
சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லை சிற்றம்
பலத்துத் திருநடனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடன்`` என்பதை முதலிற் கொள்க.
சிரித்திட்ட - ஒளிவீசுகின்ற.
பவளம் - பவளத்தின் நிறம்; ஆகுபெயர்.
திரள் - திரள் போலும் திருவுருவம்.
கதம் - கோபம்.
சங்கச் சுருள் காதில் உள்ளது.
தெரித்திட்டவா - தோற்றுவித்தவாறு; `வியப் பினது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
நடன் - நடனத்தைச் செய்பவன்.

பண் :

பாடல் எண் : 60

நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி
வென்செயும் காமனன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலனந் நாள்நின்
றுதையுணா விட்டனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு நிந்தாத்துதி, அஃதாவது, பழித்ததுபோலப் புகழ் புலப்படுத்தியது.
மிக்க சினத்தோடு தீ எழப் பார்த்த அவன்முன் மன்மதன் குளிர்ந்து எழுந்தான்.
திரிபுரத்தை எரித்தபொழுது அதில் இருந்த அசுரர்கள் எரிந்தொழியவில்லை.
(முன்போலவே இருந் தார்கள்.
) அவனால் உதைக்கப்பட்ட பின்பும் யமன் முன்போல இருந்து கொண்டுதான் இருக்கின்றான் என்றால் தில்லையம்பலத்தில் நடனம் புரியும் பெருமான் கோபித்தால், அக்கோபம் யாரை, என்ன செய்யும்? (ரதிதேவி தன் வேண்டுகோளுக்கு இரங்கிச் சிவபெருமான் முன்பு எரிந்துபோன மன்மதனை எழுப்பித் தந்து, அவளுக்கு மட்டும் முன்போலத் தோன்றியிருக்கும்படி செய்தார்.
திரிபுரத்தை எரித்த பொழுது புத்தன் போதனையால் மயங்கிப் பத்தியை விட்டுவிடாமல் முன்போலவே இருந்த ஒரு மூவர் அசுரரை எரியாது பிழைத்திருக்கச் செய்தார்.
யமனை உதைத்த பின்பு எழுப்பி `எம் அடியவர்பாற் செல்லாதே` என்று அறிவுரை கூறி விடுத்தார்.
இவைகளையெல்லாம் குறிப்பிடாமல் பொதுவாக நகைச்சுவை தோன்றக் கூறினார்.
``தீமைக்குத் தீமையைத் தருதல் மட்டுமன்றி, நன்மைக்கு நன்மையும் தருபவன் சிவன்`` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
``விழித்தாற்கு`` என்னும் குவ்வுருபை, `முன்` என்னும் பொருட்டாகிய கண்ணுருபாகத் திரிக்க.
வில் - ஒளி.
`விற் பூண்` என இயையும்.
கொடுமை - வளைவு.
பூண் - அணிகலம்.
விடும் சினத்தானவர் - சினத்தை விட்டொழித்த அசுரர்.
வெய்தென - விளைவாக.
`ஒடுக்கிய` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``நின்று`` என்பது ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு.
`அந்நாள் முதலாக` என்பது.

பண் :

பாடல் எண் : 61

விட்டங் கொளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியன்நல் லானல்லன்
அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை யெய்தலுந்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதன் - மன்மதன்.
மெய் - உடம்பு.
கரியன் - கருமை நிறமானவன்.
இட்டம் - விருப்பம்.
இதனை, `கரியன்` என்பதன் பின்னர்க்கூட்டி, ``இட்டம் நல்லனல்லன்` என குணவினை குணிமேல் நின்றதாக உரைக்க.
``நல்லனல்லன்`` என்பதன்பின், அதனால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
கள் - தேன்.
கள் தங்கிய கணை, மலர்க் கணை.
தன்னை - அவனை.
புள் மேல் தங்கினான் - கருட வாகனத்தின் மேல் வருபவன்; திருமால்.
`அவன் பொன்னார் முடியை உடையவன் ``திருமால் மகன்`` என்பது, ``மன்மதன்`` என்னும் பெயரளவாய் நின்றது.
என்று - என்று தெரிந்து.
பார்க்க - நெற்றிக் கண்ணைத் திறந்து பார்க்க.
பொடிந்தனன் - சாம்பலாயினான்.
`சிவபெருமான் ஒறுப்பது தீயோரையே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 62

பொடிஏர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படவமை யுங்கணை
யென்ற வரகுணன்தன்
முடி ஏர்தருகழ லம்பலத்
தாடிதன் மொய்கழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அம்பலத்து ஆடிதன் மொய்கழல்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
`வரகுணன்` என்னும் பாண்டியன் மிகுந்த சிவபத்தனாய் இருந்த நிலையில் பகைவர்கள் படையெடுத்து வந்து அவன்மேல் போர் தொடுக்க.
அவன் திருநீற்றையே கவசமாகப் பூசிக்கொண்டு நிராயுதனாய்ப் போர்க்களத்தில் சென்று நிற்கப் பகைவர்கள் விட்ட அம்புகள் அவனை ஒன்றும் செய்யாமல், அவன் காலடியிலே வீழ்ந்தன` என்பது இப்பாட்டுள் கூறப்பட்டது.
இதுவும், இதுபோல இவனது பத்தி மிகுதியை விளக்குவனவாக பதினொன்றாம் திருமுறையில் உள்ள பட்டினத்து அடிகள் பாடலும், திருவிளையாடற் புராணங்களும் கூறும் செய்திகளும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட இருவர் வரகுணருள் ஒருவனுக்கும் அக்கல்வெட்டுக்கள் கூறாமை யால் `கல்வெட்டுக்கள் கூறும் வரகுணர் இருவருள் இப்பாட்டில் குறிக்கப்பட் வரகுணன்` எனச் சிலர் கூறுதல் ஏற்புடையதாய் இல்லை.
எனவே, இவ்வரகுணன் தமிழ் நாட்டில் கல்வெட்டுக்கள் தோன்றுதற்கு முன்னே வாழ்ந்த வரகுணனாவன்.
பொடி - திருநீறு.
ஏர்தரு - அழகைத் தருகின்ற.
பூசல் - போர்; போர்க்களம்.
``அடிக்கு`` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரிக்க.
கடி, வடி - கூர்மை.
கோயிற் கருவி - அரண்மனையில் உள்ள படைக் கலங்கள்.
`அவை யில்லாமல்` என்றது.
`அவைகளை எடாமலே` என்றபடி.
அமையும் - ஏற்கும்.
`முடியின் கண்` என ஏழாவது விரிக்க.

பண் :

பாடல் எண் : 63

கழலும் பசுபாசர் ஆம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்
டழலு மிருக்குந் தருக்குடை
யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்
தாடிசிற் றம்பலத்தைச்
சுழலு மொருகா லிருகால்
வரவல்ல தோன்றல்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இடப்பால் வலப்பால்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
`இடப்பால் தழலும், வலப்பால் தமருகமும்` என நிரல் நிறையாக இயைக்க.
சுழல் வரல் - சுற்றி வருதல், ``சுழலும்`` என்னும் உம்மை `வீழ்ந்து பறிந்து` என இறந்தது தழுவிற்று.
தோன்றல் கள் - பெருமையுடையவர்கள்.
கழலும் பசு பாசம் - பசுக்களைக் கட்டி யுள்ள பாசம் கழலுபவர்.
ஆம் இமையோர் - மக்களின் மேலான வராகிய தேவர்கள்.
தம் கழல் - தமது (சுற்றி வந்தவர்களது) பாதங்கள்.
அழல் - அன்பினால் கண்ணீர் வார நிற்றல்.
``அழல்`` என்னும் தொழிற் பெயர் `அழ` என்னும் செயலென் எச்சப் பொருட்டாய் நின்றது.
உம்மை சிறப்பு.
தருக்கு - பெருமிதம்.
`தில்லையம்பலத்தை வணங்கினோர், தம்மைத் தேவர் வணங்க இருப்பார்கள்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 64

தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந்
தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தோன்றல் - பெருமையுடையவன்.
துள்ளிய - அகங்கரித்த.
தோன்றல், தாங்கி, சார்வரியோன், சீரன், நாதன் - இவை ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள்.
தேன்தலை - தேனின்கண்.
ஆன்பால் - பசுவின்பால்.
சீர் - தன்மை.
வான் - வானுலகத்திற்கு, தலை நாதன் - மேலான தலைவன்.
``காண்பது`` என்பதற்கு, `இடை விடாது காண்பது` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 65

மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைக் குந்தி நாடக
மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மன்று அங்கு, கன்று அங்கு` என்பவற்றில் வந்த `அங்கு` என்பன அசைகள்.
வட வனம் - திருவாலங்காடு.
`மின் தங்கு இடை` என்றது காளியை.
`இடைக்கு எதிராக` என ஒரு சொல் வருவிக்க.
உந்தி - எழும்பி.
கொல், ஐயம்.
தரங்கம் - அலை.
அம் - அழகு கங்கையாற்றை வெளியில் இருக்கவிடாமல் சடைக்குள் மறைத்து வைத்த கைதவம் (கரவு) காளி எதிரில் நடனம் ஆடுதற் பொருட்டோ` என்றபடி.
இளம் பாம்புகளை, ``கன்று`` என்றது மரபு வழுவமைதி.
``இளநாகமொடு என முளைக்கொம்பவை பூண்டு`` 1 எனத் திருஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.
அடைத்தல் - மறைத்தல்.
அடையா இட்ட - அடைத்து வைத்த.
கைதவம் - வஞ் சனை.
சிவபெருமான் திருவாலங்காட்டில் நடனப்போர் செய்தமை மேல்`` அணங்காடகக் குன்ற மாது 1என்னும் பாட்டிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

தவனைத் தவத்தவர்க் கன்பனைத்
தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர்` - என்னும் முன்னிலை வருவித்து, ``நும் வினை பற்றற என எடுத்துக்கொண்டு உரைக்க.
தவன் - தவக்கோலம் உடையன்.
``சிவக்க`` என்றது, `தீயால் சிவந்து தோன்ற` என்றபடி.
சிவந்தான் - கோபித்தான்.
``பெறலின், இழவின், காதலின், வெகுளி யின்`` 2 என்றதனால், வெகுளுதல் இரண்டாம் வேர்றுமை பெறுதலை உணர்க.
`திரிபுரத்தை அவை சிவக்கச் சிவந்தான்` என மாற்றிக் கொள்க.
செய்ய - சிவந்த நிறத்தையுடைய.
பவன் - கருதுவார் கருதும் இடத்தில் தோன்றுபவன்.
``கடி சொல் இல்லைக் காலத்துப் படினே`` 3 என்பதனால் முன்னிலைக்கண் வந்த உம், விகுதியின் பின் `மின்` என்பது விகுதிமேல் விகுதியாய் வந்து, ``பணியுமின்`` என்றாயிற்று.

பண் :

பாடல் எண் : 67

பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றறு மாமணிக் கோயிலின்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புக ழேத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சூழ் சடையோய்`` என்பதை முதலிற் கொள்க.
சூழ்தல் - சுற்றிலும் சுழலுதல்.
``உனது வெகுளியால் முப்புரம் வெந்தது.
நீ உயர்ந்த மாணிக்கக் கோயிலிலே இருப்பது, தேவர் கூட்டம் உன்னையே புகழ்ந்து திரிவது இவையெல்லாம் உனக்குப் பெருமையைத் தருகின்றன.
ஆயினும், நீ எங்கும் பாம்பாட்டித் திரிவது ஒன்று மட்டும் உனக்குச் சிறுமையைத் தருகின்றது` என்பது இப்பாட்டின் பொருள்.
``திரிவது`` என்பதன், பின் `இவை பெருமைய` என்பது வருவிக்க.
`ஆகையால் அதனை நீ விட்டொழிக` என்பது குறிப்பெச்சம்.
சிவபெருமானுக்கு இவற்றால் எல்லாம் பெருமையோ, சிறுமையோ உண்டாதல் இல்லை` என்பது இதன் உள்ளுறைப் பொருள்.
செல்தரு உயரத்தால் மேகங்களைத் தடுத்து நிறுத்துகின்ற.
சுற்று - எங்கும் பரவிய.
அரு - அருமையான.

பண் :

பாடல் எண் : 68

புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக்
கண்ணியனைப் போலருளுவரே
கல்லெறிந் தானுந்தன்
வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க.
சிவலிங்கத்தின் மேல் மறவாது கல்லெறிந்தவர் சாக்கிய நாயனார்.
சிவலிங்கத்தின் மேல் வாய்நீரை உமிழ்ந்தவர் கண்ணப்ப நாயனார்.
இவ்விருவரும் இச் செயல்களால் தீக்ததியடையாது உள்ளத்து அன்பே காரணமாக, மீளா வழியாகிய வீட்டு நெறியிற் சென்று முத்தியை அடைந்தார்கள்.
செயலை நோக்காது உள்ளத்தை நோக்கி இவ்வாறு அருள்செய்த தேவர் பிறர் இருக்கின்றனரா? என வினவுகின்றார்.
`செயலை விடுத்து உள்ளத்தையறிதல் முற்றறிவுடையானுக்கே கூடும்` என்பதாம்.
அவ் எறி மதி - இராக் காலத்தில் ஒளி வீசுகின்ற திங்கள்.

பண் :

பாடல் எண் : 69

நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோ
ருகலத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாசத்திற் செலுத்து` என ஏழாவது விரிக்க.
நமன் உலகத்து எண் - யமனது உலகத்தைப் பற்றிய நினைவு.
அது விடாத ஆகுபெயராய், அதுபொழுது நிகழும் அச்சத்தைக் குறித்தது.
இருக்கல் உற்றீர் - இருக்க விரும்புபவர்களே! `உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமாயின் நீங்கள் பெருநடனைக் கண்டு தொழுமின்கள்` என்க.
ஆர்தல் - நிரம்புதல்.
அஃதாவது இன்பம் நிரம்புதல்.
`பெண்ணினை` என்பதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொகுதல் இலேசினாற் கொள்க.
1 இனி, `பெண்ணினது பாகத்தன்` என ஆறாவது விரித்தலும் அமைவுடையதே.
நடன் - நடனம் ஆடுபவன்.

பண் :

பாடல் எண் : 70

கைச்செல்வ மெய்திட லாமென்று
பின்சென்று கண்குழியல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேயென்றும் பொன்றலில்லா
அச்செல்வ மெய்திட வேண்டுதி
யேல்தில்லை யம்பலத்துள்
இச்செல்வன் பாதங் கருதிரந்
தேனுன்னை யென்னெஞ்சமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைச் செல்வம் - கைப் பொருள்.
கருத்து நோக்கி, `பொய்ச் செல்வர் பின் சென்று அவர் செய்திடும் புன்மைகட்குக் கண் குழியல்` என உரைக்க.
கண் குழியல் - கண் குழியற்க.
கண் குழிதல் - பட்டினியால் `கண் குழித்தல்` என்பது பாடம் அன்று.
புன்மைகள் - அற்பச் செயல்.
அவை `இல்லை` எனக் கரத்தலோடு, இகழ்தலையும் செய்தல்.
`புன்மைகட்கு` என்னும் நான்காம் வேற்றுமை உருபை, `புன்மையால்` என மூன்றாவதாகத் திரிக்க.
``வேண்டுதியே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதன்பின், `அதற்கு` என்பது வருவிக்க.
இப் பாட்டின் இறுதியை முதற்பாட்டின் முதலோடு மண்டலிக்க வைத்தமை யின் இவ் அந்தாதி எழுபது பாட்டுக்களோடே முடிக்கப்பட்டதாம்.
அந்தாதிகள் சில இவ்வாறு எழுபது பாட்டோடே முடிதலும் மரபே.
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் முற்றிற்று.
சிற்பி