நக்கீரதேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம்


பண் :

பாடல் எண் : 1

திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே பிறந்தது
தேன்அழித் தூனுண் கானவர் குலத்தே திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே பயில்வது
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை

வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
இரவும் பகலும் இகழா முயற்றியொடும்
அடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத்
தொல்லுயிர் கொல்லுந் தொழிலே வடிவே
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் எடுத்தெழு குறங்கு

செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்
தடுபடை பிரியாக் கொடுவிற லதுவே மனமே
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக் ககனமர்ந் ததுவே இதுவக்
கானத் தலைவன் தன்மை கண்ணுதல்
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது

வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே அதாஅன்று
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறுஞ் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு

அண்ணற் கமிர்தென்று அதுவேறு அமைத்துத்
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்தி சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
துகிலிடைச் சுற்றியில் தூநீர் ஆட்டி

நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்
தருச்சனை செய்தாங் கவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி
மந்திரம் எண்ணி வலம்இடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்

தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும்
உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி
ஆத ரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்

பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்
இவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
கரந்திருந்து அவன்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளுமவ் வழிப்பட் டிறைவ
உற்றது கேட்டருள் உன்தனக் கழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை

ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக் கினிதே எனையுருக்
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன் அல்லன் என்உன்
திருக்குறிப் பென்றவன் சென்ற அல்லிடைக்

கனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக
ஒற்றை மால்விடை உமையொரு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குனிசிலை வேடன் குணமவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்

அவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூயபொற் குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன் நிறைப் பல்லே
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே அவன்தலை
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தலரே அவனுகந்

திட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுவெனக் குனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று
இறைவன் எழுந் தருளினன்
அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து

தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும்
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையிற் காதலித் தடிந்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணில் உதிரம்
ஒழியா தொழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று

வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர்
அடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்
றன்பொடுங் கனற்றி

இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்
றின்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்

தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித்
தருளினன் அருளலும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.

தனி வெண்பா

தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறம் - வீரம்.
இது மறக்குடியில் பிறந்தவர்கட்கு இயல்பாக உளதாகும்.
ஆயினும் அந்த மறம் பெரும் பான்மையும் பொருளாகிய அரசுரிமை பற்றியும், சிறுபான்மை அறம் பற்றியும் பலரிடம் நிகழ்ந்தமை, நிகழ்கின்றமை கண்கூடு.
ஆயினும் மறக் குடியில் பிறந்த கண்ணப்ப தேவர் மேற்காட்டிய அனைத்தினும் மேலான பத்தித்துறையில் இணையில்லாத மறம் உடையராய் இருந் தமையைச் சிறப்பித்தலால் இப்பாடல் `திருக்கண்ணப்ப தேவர் திருமறம்`- எனப்பட்டது.
அடுத்து வரும் கல்லாட தேவ நாயனார் அருளிச்செய்த திருமறத்திற்கும் இது பொருந்தும்.
அடி - 1, 2: `திறத்து உலகே விருப்புடைத்து` என இயைக்க உலகு - உயிர்த் தொகை.
`சில பகுதிகள் மட்டும் அல்ல, முழுதும் என்பது விளக்கலின் ஏகாரம், தேற்றப் பொருட்டாய் தவத் திறத்தது பெருமையை விளக்கி நின்றது.
அம்ம, வியப்பிடைச் சொல்.
அடி - 2, 3, 4: ``பிறந்தது`` என்பது அத்தொழில் மேலும், ``திரிவது`` என்பது அதற்குரிய இடத்தின்மேலும் நின்றன.
பொருப்பு- மலை.
`பொருப்புக்களை இடையிலே உடைய காடு` என்க.
அடி - 4, 5, 6, 7: ``வளர்ப்பது, பயில்வது`` என்னும் ஒருமைகள் அவ்வத்தொழில்மேல் நின்றன.
எனவே, நாய் முதலாகக் கூறியன செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப்பட்டனவாம்.
தீவகம்- பார்வை மிருகம்.
சிலை - வில்.
அடி - 7, 10: `உறைவது வெள்ளிடை` என்க.
வெள்ளிடை - வெளியான இடம்: பொத்தற் குடிசை.
``உறைவது`` என்பது, அதற் குரிய இடத்தின்மேல் நின்றது.
அடி - 8: பயிலல் - பலவிடத்து இருத்தல்.
குடம் - கட்குடம்.
பல நிறைத்து, கலந்த வெள்ளிடை` என்க.
அடி - 10: பீலி - மயில் இறகு.
மேய்ந்து - வேயப்பட்டு `பின்பு அவை பிரிந்துபோன வெள்ளிடை` என்க.
அடி - 11: ``மறைப்ப`` என்றது, `அற்றம் மறைப்ப` என்றபடி.
எனவே, `புலித்தோலே உடை` என்றதாம்.
வாலிய - தூய.
(அதன்மேல் மாசுபடியாது` என்பதாம்.
``வார்`` என்பது ஆகுபெயராய், வலையைக் குறித்தது.
அடி - 11, 12: `வாரினை இகழாது, இரவும், பகலும் முயலும் முயற்றி` என்க.
முயற்றி - முயற்சி.
அடி - 13: அடைத்த - மூங்கிற் குழாய் முதலியவற்றில் நிறைத்த.
``அடைத் தேனும்`` என்றார் பின்னும், `தேன் அடைத்தலும்` என்பதே கருத்தென்க.
அடி - 14: சுரிகை - உடைவாள்.
அடி - 15: கிளை, விலங்குகளின் சுற்றம்.
`கிளையாகிய அவை` என்க.
`அவற்றொடும்` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது.
படுத்து - வீழ்த்து.
அடி - 16: தொன்மறைக் காட்டில் வாழும் வாழ்வு பற்றிக் கூறப் பட்டது.
`தேன் அடைத்தலும், கொல்லலும் தொழிலே` என்க.
`கொல்லுக தொழிலே` என்பது பாடம் அன்று.
``வடிவே`` என்னும் பிரிநிலை ஏகாரம், எழுவாய்ப் பொருள் தோற்றி நின்றது.
அடி 17, 21: முன்கை முதலிய சினைகளையே `வடிவு` என்னும் முதலாக உபசரித்துக் கூறினார்.
அவையும் அவ்வாறு கூறற்கு இயைபுடைமை பற்றி.
மறம் - வீரம்.
`கடித்த முன்கை.
திரள் முன்கை` என்க.
படை - படைக்கலம்.
அவை வெட்சிக் காலத்தில் கரந்தையார் விடுத்தனவும்.
கரந்தைக் காலத்தில் வெட்சியார் விடுத்தனவுமாம்.
இவற்றைக் கண்ணப்பர் அறியார் ஆயினும் இனம் குறித்தற்கு இவற்றைக் கூறினார்.
திண் வரை அகலம் - தெளிவாக ஆழ்ந்து விளங்கும் கீற்றுக்களையுடைய மார்பு.
எயிற்று - எயிற்றால்.
எண்கு - கரடி.
கவர்ந்த - கடிந்த.
இரு - பெரிய.
தண்மை வியர்வையால் வந்தது.
அன்ன - அந்தக் கரடிகளே, அயில் கோட்டு - கூர்மையான பற்களால்.
எடுத்து எழு குறங்கு - குத்தி யெடுத்த துடை.
செடித்து எழு குஞ்சி - செடிகளின் தன்மையை உடையனவாய், (அடர்ந்து, குறுகி) வளர்ந்த தலைமயிர்.
`செந் நிறத்தை உறு கண்` என்க.
ஐயுருபு சாரியை நிற்கத் தான் தொகுத்தலை இலேசினால் கொள்க.
* அடி - 22: கடுத்து - சினந்து.
`கரு நிற அவ்வாய்` - என்னும் இரண்டாவதன் தொகை பின் முன்னாக மாறி நின்றது.
`உரையை யுடைய அந்த வாய்` என்க.
அடி - 23: அடு படை - கொல்லும் படைஞர்.
பிரியா விறல் - பிரிந்து போகாமைக்கு ஏதுவான விறற் சொல்.
விறல் - வெற்றி.
அஃது ஆகுபெயராய் அதனையுடைய சொல்லைக் குறித்தது.
விறலது - விறலையுடையது.
`அவ்வாய் விறலது` என்க.
இங்ஙனமாயினும் விறலதுவாகிய வாய்` என்றதே.
இதுகாறும் வடிவே கூறப்பட்டது.
கருத்து, இவற்றால் எஞ்ஞான்றும் வேட்டையே தொழிலாய் ஈடுபடுதல் குறிக்கப்பட்டது.
இதன்பின் `ஆகியன` என்பது வருவிக்க.
அடி - 23, 24, 25: அகப்படுதுயர் - அகப்படுதலால் உண்டாகும் துன்பம்.
அகன் அமர்தல் - உள்ளுற விரும்புதல்.
அமர்ந்தது - வினை யாலணையும் பெயர்.
இது வடிவியல்பு கூறிய பின் வேட்டை யொழிந்தபொழுதும் மனத்தியல்பு அது வேயாதல் கூறியது.
அடி - 25, 26: ``இது அக் கானகத் தலைவன் தன்மை`` என்றது, `கண்ணப்ப தேவரது பிறப்பும், அவருக்கு வாய்த்த சூழ் நிலைகளும் திருவருளோடு சிறிதும் இயைபில்லனவாயினமை மேலும், அதற்கு மாறானவையாயும் இருந்தன` என்பதனை முடித்துக் கூறியவாறு.
கானம் - காடு.
காட்டில் வாழும் வேடுவர்களைக் `காடு` என உபச ரித்துக் கூறினார்.
``அக்கானத் தலைவன்`` எனச் சுட்டிக் கூறிய அவ் அனுவாதத்தானே, முதற்கண், `கானத் தலைவன் ஒருவன் இருந்தான்; அவன் பிறந்தது` என எடுத்தக் கொண்டு உரைத்தல் கருத்தாதல் பெறப் பட்டது.
அடி - 26, 27: ``கண்ணுதல்`` முதலிய மூன்றும் ஒரு பொருள் மேல் வந்த பல பெயர்களாய்ச் `சிவன்` என்னும் அளவாய் நின்றன.
`பங்கன் பாதம்` (29) என இயையும்.
இங்கும், ``கண்ணுதல்`` என்ப தற்கு முன்னே, `அவன்` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.
அடி - 28, 29: `பெருமைப் பாதம், இறைஞ்சும் பாதம் புண்ணியப் பாதம்` என்றபடி.
பொற்பு ஆர் - அழகு நிறைந்த.
`மலரிணையைக் (30) கண்டல்லது` என இயையும்.
அடி - 30, 31: தாய்க்கண் கன்று - தாய்ப் பசுவினிடம் செல்லும் கன்று.
இஃது ஆரா அன்பினால் விரைந்தோடிச் செல்லுதலாகிய பண்பும், தொழிலும் பற்றி வந்த உவமை.
கண்டல்லது உண்டி வழக்கறி யான்`` என்றதனால், `கண்டு வழிபட்ட பின்பே உண்ணும் நியமம் உடையரானார்` என்பது பெறப்பட்டது.
ஆயினும் சேக்கிழார், `கண்ணப்பர் காளத்தி நாதரைக் கண்டபின் ஊண் உறக்கம் இன்றியே யிருந்தார்` என்பது படக் கூறினார்.
அடி - 32-41: இப்பகுதி கண்ணப்பர் வேட்டையாடி ஊன் அமுது அமைத்தலைக் கூறியது.
கட்டு அழல் - வலுவான தீ.
கனற் கதிர் - ஞாயிறு.
சுட்டு - சுடுதலால்.
`உச்சியில் நின்று சுடுதலால்` என்க.
சுறுக்கொள்ளுதல் - சுறுக்கெனக் கால்கள் வெம்மை கொள்ளுதல்.
சுரம் - பாலை நிலம்.
நிரந்தரம் - எப்பொழுதும்.
பயில் - நிறைந்த.
வளாகம் - ஓர் இடம்.
எதிர் இனம் கடவிய - எதிர்ப்படுகின்ற விலங்கினத்தை நாள்தோறும் வெருட்டிப் பழகிய.
எழுப்பிய - நாயைக் குரைப்பித்தும், தாம் அதட்டியும் அவை உள்ள இடத்தினின்றும் வெளிப்பட்டு ஓடும்படி எழுப்பிய.
விருகம் - மிருகம்.
மறுக்கு உற - வருத்தம் எய்தும்படி.
`மறுகு` என்னும் முதனிலை `மறுக்கு` எனத் திரிந்து பெயராயிற்று.
இஃது அம்முப் பெற்று, மறுக்கம்` என வரும்.
இரித்திட - துரத்திட.
வடிக் கணை - கூராக வடித்தலைப் பெற்ற அம்பு.
துணித்திடும் - துண்டாக்க வெட்டுவான்.
நறுவிய - நன்றாகத் திருத்திய.
`சுவை கண்டு, நல்லது தெரிந்து அது வேறு அமைத்து` என ஒருசொல் வருவித்து இயைக்க.
நல்லது, சாதியொருமை.
`நல்லது வேறு அமைத்து` என்றதனால், `நல்லது அல்லாததைத் தனக்கு வைத்தான்` என்பது பெறப்பட்டது.
அடி - 42, 43, 44: இப்பகுதி கண்ணப்பர் வழிபாட்டிற்கு ஆவன வற்றை அமைத்துகொண்டவாற்றைக் கூறியது.
``வாய்க் குடம்`` என்றது, `வாய்தானே பயனால் குடமாயிற்று` என்றபடி.
இஃது உருவகம் அன்று.
குஞ்சி - தலைமயிர்.
துவர்க் குலை - சிவந்த தளிர்க் கொத்து.
``மலர் என`` என்றதனால், இலையே கொண்டு சென்றமை பெறப்படும்.
`சிலை (45) ஏந்தி`` என்க.
அடி - 45, 46: விழியையும், குரலையும் உடைய நாய்` என்க.
கரு - பெரிய.
அடி - 46, 47, 48: `தொடரக் கடும் பகலில் திருக்காளத்தி எய்தி என்க.
``காளத்தி`` என்றது அங்குள்ள மலையையும்.
``அச் சிவன்`` என்றது, அம்மலையில் உள்ள சிவலிங்கத்தையு மாம்.
`எய்திய சிவன்` என்பது பாடம் அன்று.
அடி - 48-57: இப்பகுதி அருச்சகர் பூசை செய்த முறைகளைக் கூறியது.
`மறையோன் சிவற்கு ஆட்டி, அருங்கலன், அலங்கரித்து, செய்து, இறைஞ்சி, காட்டி, வந்து, விடை கொண்டு ஏகினபின்` என்க.
வழிபடக் கடவ மறையோன் - வழிபாட்டினைக் கடமையாகக் கொண்ட அந்தணன்; அருச்சகன்.
இவர் பெயர் `சிவகோசரியார்` என்பதாகப் பெரியபுராணத்தில் அறிகின்றோம்.
அதற்கு மேற்கோள் அடுத்துவரும் திருமறம்.
துகிலை - வத்திரத்தை.
இடை சுற்றியது - நீரை வடித்தெடுத்தற்பொருட்டு.
`சுற்றி` என்பது பாடம் அன்று.
`மலர், புகை, விளக்கு, அவி இவைகள் ஆகமங்களில் சொல்லிய முறையிற் சிறிதும் சுருங்கலனாய்` என்க.
அவி - நிவேதனம்.
பொருள்களது சுருக்கம் அவற்றைப் படைப்பான்மேல் ஏற்றப்பட்டது.
பரிசு - தன்மை.
பூ - விடுபூக்கள்.
பட்ட மாலை - நெற்றியில் விளங்கச் சாத்தும் இண்டை.
தூக்கம் - தொங்கவிடும் மாலை.
`ஆகியவற்றால் அலங்கரித்து` என ஒரு சொல் வருவிக்க.
``முத்திரை காட்டி`` என்றதனால், செய்யப்பட்ட வழிபாடு ஆகம முறை வழிபாடாதல் குறிக்கப்பட்டது.
ஆகவே, ``மந்திரம்`` என்றதும் ஆகம மந்திரங்களேயாயின.
இவற்றால் `அருச்சகர் ஆதிசைவர்` என்பதும், அவரை, `மறையோர்` என்றல் வழக்கு என்பதும் கொள்ளக் கிடந்தன.
`வலமாகவும், இடமாகவும்` என ஆக்கம் விரிக்க.
வலமாக வருதல் போகத்தையும், இடமாக வருதல் மோட்சத்தையும் தருவன ஆதல் பற்றி, இரண்டையும் செய்தார் என்க.
``விடைகொண்டு எகின பின்`` என்றதனால், பெருமானிடம் அருச்சகர் வழிபாடு முடித்து இல்லம் செல்லும் பொழுது விடை பெறுதலும் மரபாயிற்று.
விடையை, `உத்தரவு` என்பர், ``விடை கொண்டு``* எனச் சேக்கிழாரும் கூறினார்.
அடி - 57, 66: புக்கு - புகுந்து.
இதனை மேல் ``பின்`` (57) என்றதன் பின்னர்க் கூட்டுக.
இதனால், மேல், ``எய்தி`` (48) என்றது,- அருச்சகர் போயின பின் எய்தி என்றதாம் என விளக்கியவாறு.
தொழிற் பூசனை - நாள்தோறும் நடைபெறக் கடவதாக அமைக்கப்பட்ட வழிபாடு.
`வழிபாடு` என்பது இங்கு அதனால் தோன்றிக் காணப்பட்ட பொருள்களைக் குறித்தது.
தொடு - தொட்ட; அணிந்த.
அடி - அடிப்புறம்.
``துவர்ப் பூ`` என்றதற்கு, மேல் , (39) ``துவர்க் குலை`` என்றது பார்க்க.
`இறைச்சியின் போனகம் பெரிதும் படைத்து` என இயைக்க.
``பெரிதும்`` என்றது, `வேண்டுமளவும்` என்றபடி.
``பிரானைக் கண்டு`` `தரிசித்து` என்றபடி.
``கண்டு கண்டு`` என்னும் அடுக்கு.
ஆராமையால் நெடு நேரம் தரிசித்தமையைக் குறித்தது.
கொண்டது - தான் அறிந்தது.
அன்பு மீதூரப் பெற்றவழிக் கூத்துத் தானே நிகழும் ஆதலின், ``தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி`` * என்றாற்போலக் கூறக் கேட்டிலாராயினும் ஆடினார் என்க.
ஆரா அன்பு - நிரம்பாத (தமது செயல்களை `இவ்வளவு போதும்` என்று நினையாத) அன்பு.
``இறைஞ்சிக் கானகம் அடையும்`` என்றதனால்.
`இராப் பொழுதில் காட்டில் ஓரிடத்தில் இருப்பார்`` என்றதாயிற்று.
எனவே, `இங்ஙனம் சில நாள்கள் சென்றன` என்பது போதர சேக்கிழார், `இரவெல்லாம் இறைவற்குக் காவல் புரிந்தார்` என்றார்.
அதுவும் அடுத்துவரும் திருமறத்தில் குறிப்பால் பெறப்படுகின்றது.
அடி - 69: ஆதரிக்கும் அந்தணன் - அன்பு செய்யும் அந்தணன்; `அவ் அந்தணன்` எனச் சுட்டு வருவித்துரைக்க.
`இனி அவ்வந்தணன் செய்தன ஆவன` என எடுத்துக்கொண்டு உரைத்தல் கருத்து என்க.
அடி - 66-90: அடைந்த அற்றை - தாம் (அருச்சகர்) திரும்பித் தம் இடத்தை அடைந்த அந்த நாளை, (இரவுப் பொழுதை).
``அயல்`` என்றது, அந்தக் காட்டில் அவர் கொண்டிருந்த தவச் சாலையை.
``தணிந்த மனத் திருமுனிவர் தபோவனத்தினிடைச் சார்ந்தார்`` * என்ற சேக்கிழார் திருமொழியைக் காண்க.
உதித்த போழ்தத்துள் - உதயமான அந்த நேரத்திற்கு முன்பே.
பொற்பு - அழகு.
அஃதாவது முறை தவறாது செய்யப்பட்டது.
இங்கும் ``பூசனை`` என்றது அது நிகழ்ந்தமையை உணர்த்தும் அடையாளங்களை.
துவர் - தளிர்களை.
`சாத்தினவன் அன்பினால்தான் செய்திருக்க வேண்டும்` என்னும் கருத்தால் அவற்றை உடனே எடுத்தெறியவில்லை.
மறித்தும் - நாம் பூசைசெய்து போன பின்பும்.
`இவ்வாறு செய்தவன் யாவன்` என அறிவாராய்ச் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்த்தவர் கண்ணப்பர் வருகையைக் கண்டு நடுங்கிப் பின் அவர் செய்தவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத் தம் இடத்திற்குச் சென்று விட்டார்.
செல்லும் முன் பவித்திர பூசையைச் செய்ய வேண்டுவது தம் கடமை` எனக் கொண்டு அவ்வாறு செய்து சென்றார் என்பது பின்பு அவர், ``நாள் தொறும் நான்செய் பூசனை தன்னை`` எனக் கூறினமையால் விளங்கும்.
``போயின வண்ணம்`` என்பதன்பின் `கண்டு` என ஒருசொல் வருவிக்க.
`ஈங்கொரு வேடுவன்` என்பது முதல் ``இட்டுப்போம் அது`` என்பது முடிய உள்ளவை சிவகோசரியார் கண்ணப்பர் செய்தவைகளையெல்லாம்.
ஊகித்தறிந்து இறைவன்பால் எடுத்துக் கூறி முறையிட்டுக் கொண்டது.
`உனக்கு அழகா இவை?` என்க.
``என்றும்`` என்பதற்கு, `என்றாயினும்` என உரைக்க.
`இவ்வாறான செயல் என்றா யினும் உனக்கு இனிதாகுமோ` என்றபடி.
``இனிதே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டு.
`என் உன் திருக்குறிப்பு` என்க.
`என்னுந் திருக் குறிப்பு` என்பது பாடம் அன்று.
``என்று அவன் சென்ற`` என்ற அநு வாதத்தால், `என்று முறையிட்டுவிட்டு அவன் சென்றான்` என்பது பெறப்பட்டது.
அடி - 90-116: அல் - இரவு `அந்தணன் தனக்குக் கனவில்` என்க.
``பிறை யணி`` என்பது முதல், ``மருங்கின்`` என்பது முடிய உள்ள பகுதி இறைவன் திருவுரு வருணனை ``முடி மிடற்றுக் கை நாட்டத்து ஆக விடை மருங்கு`` என்பன பலபெயர் உம்மைத் தொகையாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு, ``திருவுரு`` என்பதனோடு இரண்டாவதன் உருவும் பயனும் உடன் தொக்க தொகையாகத் தொக்கன.
இரண்டாவதன் பெயர்த் தொகையாகலின், சிலவிடத்துச் சாரியை களையும் பெற்றது.
ஆகம் - மார்பு.
அஃது உம்மைத் தொகை நிலைப் புணர்ச்சியில் மகர ஈறு கெட்டு நின்றது.
``உமையொடு`` என்பதில், கூடிய` என ஒருசொல் வருவிக்க.
மருங்கு - பக்கம்.
``காட்டியருளி`` என்பது ஒருசொல்.
புரிவு - விருப்பம்; கருணை `குணம்` என அடை யின்றிக் கூறியவழி அது நற்குணத்தையே குறிக்கும்.
அஃது இங்கு ஆகுபெயராய் அதனால் விளைந்த சிறப்புக்களைக் குறித்தது.
`அவன் வேடன் அல்லன்; மா தவன்` என்க.
முனி வனம் - முனிவனுக்கு உரித்தாயவனம்.
அது, பகுதிப் பொருள் விகுதி.
துவல் - தளிர்.
புனற்கு - புனற்கண்; உருபு மயக்கம்.
மா மணி - உயர்ந்த இரத்தினங்கள்.
அதற்கு - புனற்கு.
``உப்புனல்`` என்பதில் உகரச் சுட்டு மேலிடம் பற்றி வந்தது.
உரிஞ்சுதல் - உராய்தல், `உரிநுதல்` என்றல் பழைய வழக்கு.
புன் மயர் - கீழ்மையையுடைய மயிர்.
குசை - தருப்பை.
வழிபாட்டினை ஏற்பவற்றில் சிறப்புடையன திருவடிகளேயாதலின்.
``நம் அடிக்கு`` என அவற்றையே கூறினார்.
தருப்பையின் பொதிந்த - தருப்பையால் நிரம்பிய.
`செய்யப்பட்டு முடிந்த` என்றபடி.
அங்குலி- மோதிரம்; பவித்திரம், `பவித்திரத்தோடு பொருந்த எடுத்துத் தூவப் பட்ட அலர்; மலர்` என்க.
நல் மாதவர் - சைவ முனிவர்.
அவர் செய்யும் வேள்வியில் அவிசாய் அமைவன நெய், பால், தயிர் அல்லது ஊனாகாமை பற்றி.
``நல் மா தவர் இட்ட அவி ஊன் அவையே`` என்னாது, ``நெய் பால் அவியே`` - என்றார்.
``இது`` என்றது, கூறப் பட்ட அனைத்தையும் தொகுத்து, `இந்நிலைமை` என்றவாறு.
`எனக்கு இந்நிலைமை` என இறைவன் கூறியதனால், `ஏனையோர் பலர்க்கும் அவையெல்லாம் மிக இழிந்தனவாம்` என்றதாயிற்று.
எனவே, `அன்போடு கூடிய வழி எவையும் பூசையாம்` என்பதும், `அன்போடு கூடாதவழி எதுவும் பூசையாகாது` என்பதும் கூறப்பட்டனவாம்.
இவை பற்றியே.
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே
உள்ளம் உள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ளம் உள்ளவ ருக்கருள் வான்அலன்;
வெள்ள மும்அர வும்விர வும்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்
அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பே அன்பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தம், தியானம், சிவார்ச்சனைகள் செய்வனவும்
சாத்தும் பழமன்றே தான்
என்றாற்போலும் தோத்திர சாத்திரங்கள் எழுந்தன.
இவ்வாற்றால் கண்ணப்பர் இட்ட பொருள்கள் பொருளால் இழிந்தனவே யாயினும் அவரது அன்பாகிய தகுதியால் அவை திவ்வியப் பொருள்கள் தரும் இனிமையை இறைவற்குத் தந்தன.
இதனானே அன்பின்றி யிடுவன திவ்வியமேயாயினும் இறைவற்கு அவை மிக இழிந்தனவேயாய் வெறுப்பைத் தருதல் பெறப்படும்.
இம்முறை உலகியலிலும் உள ஆதலை நினைக.
அடி - 117, 121: இப்பகுதி கனவு கண்ட பின் சிவகோசரியார் செய்தவற்றைக் கூறியது.
கூசியது.
தாம் உண்மையறியாது வெறுத்ததை நினைந்து.
``குளித்து`` என்றது உபலக்கணம் ஆதலின், `பிற கடன்களை முடித்து` என்பதும் கொள்க.
இதன் பின் `சென்று` என ஒருசொல் வருவிக்க.
அடி - 121, 125: இப்பகுதி கண்ணப்பர் காளத்தியப்பர்பால் வந்த நிலைமையைக் கூறியது.
``இரவி அழல் சிந்த`` என்றது, உச்சிப்போது ஆயினமையைக் குறித்தது.
தடிந்த உடும்பு - கொல்லப்பட்ட உடும்பு.
அது பாகமாக்கப்படவில்லை.
இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.
அடி - 125, 129: ``தான்`` என்பதை ஒழித்து ஓதுவதும், ஒரு கண்ணிலும் உம்மை சேர்த்து ஓதுவதும் பாடங்கள் அல்ல.
அடி - 130-147: இப்பகுதி இறைவன் கண்ணப்பரது அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்டுதற் பொருட்டுச் செய்ததையும், அதனால் கண்ணப்பர்பால் நிகழ்ந்த அருஞ் செயல்களையும் கூறியது.
நெக்கு நெக்கு இழிதல் - தடைகளைக் கடந்து கடந்து ஒழுகுதல்.
கனற்றி - துயரத்தால் மனம் புழுங்கி அரற்றி.
இத்தனை தரிக்கிலன் - இவ்வளவு பெருந் துன்பத்தைக் காண இனி நான் பொறேன், ``அப்பியும்`` என்னும் உம்மை, இதுவே இப்பொழுது இதற்கு இதுவே முடிவான மருந்து என்று எண்ணியதையும், ``காண்பன்`` என்றது `செய்து பார்ப் போம்; பின்பு ஆகட்டும்` என்று துணிவு கொண்டதையும் குறித்தன.
ஐயமாயவழியும் செய்யத் துணிந்தது, அவரது அளவிலா ஆர்வத்தைக் காட்டுகின்றது.
நிற்பது ஒத்து - நிற்பது போன்று.
என்றது, `கண்ணை அப்பியதனால் குருதி நிற்கவில்லை; ஒழுகவிட்ட குருதியை இதனை அடுத்து `நாயனார் தமது மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தார்` எனக் கூறியதனால், `இறைவன் குருதி நின்ற கண் நிற்க.
தனது மற்றைக் கண்ணில் குருதியை ஒழுக விட்டான்` என்பது உய்த்துணர வைக்கப்பட்டதாம்.
அங்ஙனம் அல்லாக்கால் முன்பு, ``ஆங்கு ஒருகண் உதிரம் ஒழுக நின்றனன்`` என்றது பழுதாம் ஆகலின்.
அடி - 148-158: இவ் இறுதிப் பகுதி இறைவன் கண்ணப்பரது அரிய செயலை ஆற்றமாட்டாது விரைந்து அவருக்கு அருள் புரிந்தமையைக் கூறியது.
அன்புடைத் தோன்றல் - அன்பராயினார் எல்லாரினும் தலையாயவன்.
``தோன்றல்`` என்றதும் விளி.
இறுதியிலும், ``திருக்கண்ணப்பனே`` என்றது, தொடக்கத்திற் குறித்த அப்பெயரை அதற்குரிய காரணத்தை விளக்கிக் கூறி முடித்தவாறு.
தனி வெண்பா, பெரியபுராணத்தை ஓதி உணர்ந்த பிற்காலத் தவரால் செய்து சேர்க்கப்பட்டது.
நக்கீரதேவ நாயனார் அருளிய
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று.
சிற்பி