நக்கீரதேவ நாயனார் - திருஎழுகூற்றிருக்கை


பண் :

பாடல் எண் : 1

ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந்
தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழிதோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை

நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர

ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்

தாதை ஒருமிடற்று இருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே.

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(அடி-1) ஒன்று புரிந்து - வீடு பேற்றினை விரும்பி. (உயிர்கள் அடைய வேண்டும் என்று கொன்றை சூடினை என்க.) கொன்றைப் பிரணவ வடிவினது ஆதலால், பிரணவத்தின் பொருள் தானே என்பதை உயிர்கள் உணர்ந்து வீடடையவே அம்மாலையை அடையாள மாலையாகச் சிவன் சூடியுள்ளான்` என்றபடி. (அடி-2) ஒன்றின் - `ஓரு காம்பிலே ஐந்து இதழ்` என்க. ஈர் இதழ் - குளிர்ந்த இதழ் (அடி-5) இரு கோடு - இரண்டு முனை. (அடி-7) `மூவெயிலது அரண்` என்க. முரண், நாற்றிசையிலும் செல்லும் முரண், முரண் - வலிமை. அரண் பாதுகாத்தல். `முரணுடைய அரண்` என்க. (அடி-8) ஆற்ற - மிகவும், ஆற்றப் பயத்தல் - முற்ற விளக்குதல். முன் நெறி முதல் நெறி ``முன்னெறியாகிய, முதல்வன் முக்கணன் தன்னெறி`` 2 என அப்பரும் அருளிச் செய்தார். ``முன்னெறி`` என்பது ஓசை வகையில் `முந்நெறி` என்பதனோடு ஒத்து, `மூன்று` என்னும் எண்ணலங் காரமாய் நின்றது. இவ்வாறு மேலும் வருவனவற்றை அறிந்து கொள்க.
(அடி-9) இரண்டு - விருப்பு வெறுப்புக்கள் (அடி-10) ஒன்று, திருவருள். உறுதி - நல்ல துணை. (அடி-11,12) `அந்நெறி ஒன்றையே மனத்துள் வைத்து` என்க. இரண்டு நினைவு - ஐயம் (அடி - 13) முன் ஏழாவது விரிக்க (அடி -14) ஊழி - யுகம். `ஊழி நான்கு எனத் தோற் றினை` (படைத்தனை) என்க. (அடி-15) சொல்லும் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற. அசைத்து - உறுப்புக்களில் கட்டி. அசைந்தனை - ஆடினை (அடி -16) மேல் முகம் உச்சி முகம். கபாலம் - தலை ஓடு. (அடி-17) ``நூல் முகப் புரி` என்க. தோளில் ஏந்திய அங்கத்தை மார்பில் ஏந்தியதாகக் கூறினார். (அடி-18) இருவர், அயனும், மாலும். அங்கம் எலும்புக் கூடு. இது `கங்காளம்` எனப்படும். (அடி-19) `ஒருவனாகிய நினது` என்க. ``ஆதி`` என்றதனானே அந்தமும் கொள்க.
ஐ - அழகு. இஃது `ஐந்து` என்பதுபோல நின்றது. (அடி-22) ஆறு - யாறு; கங்கை. இதுவும் எண்ணுப் பெயர்போல நின்றது, ஐந்து நிலைகளாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (அடி-23) வாய்மொழி, வேதம். (அடி-25) இரண்டு - இரண்டு வகை. ``குழை`` என்பது பொதுப்பட, `காதணி` என்னும் பொருட்டாய் நின்றது. (அடி-26) இரு - பெரிய. இதுவும் எண்ணுப் பெயர்போல வந்தது (அடி -28) உறுதி, அறம் முதலிய பொருள்கள். ஆறில் அமுதம் - அறுசுவையில் உணவு. ஐந்து - ஐந்து வகையான இசைக் கருவிகள். (தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு.) (அடி -31) கொட்டு - வாச்சியம். உம்மை, எச்சப் பொருட்டு. `எல்லா வாச்சியங்களையும் இறைவன் உடையவன்` என்றபடி, (அடி-34) முந்நீர் - கடல். `முந்நீரில் நின்ற` என்க. சூர் மா - சூரபதுமனாகிய மாமரம். (அடி-35) இருவரை - பெரிய மலை; கிரௌஞ்சம். (அடி - 36) மிடல் வடிவம் - விசுவ ரூபம். மிடல் வலிமை, (அடி-37,38) `தருமம் கூறுவை` என இயையும். (அடி - 38,39) `நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை` என்க. நால் வகை இலக்கணமாவன `எழுத்து, சொல்,பொருள், செய்யுள்` என்பன பற்றியவை, அணியிலக்கணம் வடநூற் கொள்கை. (அடி-41) நெறிமையில் நெறியாம் வகையில்.
(அடி-42)`ஏழ் இன் ஓசை` என்க. ஓசை - இசை. (அடி-43) தாழ்வு - இரக்கம். ``அவன்தலை`` என்பதில் தலை ஏழன் உருபு. அளி- அருள், (அடி-44) ஆறிய - தணிந்த. சிந்தையனை, ``சிந்தை`` என்றது. ஆகுபெயர். (அடி - 45) ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை. `ஐங்கதியொடு தேர் திசை செலவிடுத்தோன்` பிரமன். (அடி- 46,47) அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே. நலன். இங்குத் திறமை. `அதனைப் பாட` என்க. நந்தி பிங்கிருடி - நந்தி கணத்ததாகிய பிங்கிருடி. ``பூதம் மூன்று`` என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர், (அடி-48) கண் - பக்கம். மொந்தை, ஒருவகை வாச்சியம். ஒரு கணம் - ஒப்பற்ற கணங்கள். மட்டு விரி - தேனோடு மலரும் (அடி -50) ``அதனால்`` என்றது, கூறிவந்தவை அனைத்தை யும் தொகுத்துக் குறித்தது. ஆகையால் இப்பாட்டினை, `நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை; கொன்றை சூடினை;....அளி பொருந்தினை, அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாதல் வேண்டும்; (அதன் பொருட்டு) அண்ணலாகிய நின் பாதம் சென்னி யிற் பணிந்து பரவுவன்` என இயைத்து முடிக்கற் பாற்று. (அடி-52) வறிது - பொருளற்றது.
வெளி - நறுமணம். `சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்` என்பதை,
`பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்,
இருங்கடல்மூடியிறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே`*
என்னும் அப்பர் திருமொழியால் அறிக. முக்காலத்தும் நிகழற் பாலதனை, ``பாடிய`` என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்.
திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று.
சிற்பி