எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்


பண் :

பாடல் எண் : 1

பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

பெறுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``எறிகடல் ஏழின் மணலளவாக`` என்றது, `எண்ணிலவாக` என்றபடி, ``ஒளி`` என்றதனால், பொறி, கட்பொறியும், ``பொன்`` என்றதனஆல், ஒளி, பொன்னினது மாற்றொளியும் ஆயின. `பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் உள்ளனவாயினும் அவற்றது ஒளியையே மக்கள் நோக்குதல் போல, அண்டங்களிலே சிவபெருமான் நிறைந்திருப் பினும், அண்டங்களை மட்டுமே உயிர்களை உணர்கின்றன` என உவமையை, உணர்ப்படுதல் படாமை பற்றிய ஒரு புடை உவமையாகக் கொள்க.
``அண்டம் ஆரிரு ளூடுகலந் தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவார் எலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``l
எனவும்,
``அண்டங் கடந்தபொருள்; அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்``8
எனவும் ஓதினாற்போல இவரும், ``அண்டாசனத் தேவர்பிரான்`` என ஓதினார். `விளங்கி` என்பதை `விளங்க` எனத்திரித்து, `அண்டங்கள் விளங்கத்தான் அவற்றினுள் விளங்காது நிறைந்திருப்பான்` என்க.
இதனால், `தத்துவங்களின் காரியமாகிய அண்டங்கள் எண்ணிலவாம்` என்பது கூறப்பட்டது. `தேவர்பிரான் செறியும்` என்றது, அவை அவனால் நிலைபெறுதலை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.

பொழிப்புரை :

அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.

குறிப்புரை :

ஐந்துவடிவங்கள் மேல், \\\"சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்`` 3 என்னும் மந்திரத்தின் உரையில் சொல்லப்பட்ட `சிவம், சத்தி, சதாசிவன், மகேசுரன்` என்பவற்றோடு `வித்தை` என்பதுமாகும். ஆகி நின்று செயலாற்றுதலால். முப்பத்தாறு தத்துவங்களில்மேல் உள்ள ஐந்தையும் மெய்ப்பொருள்தானே நேரே செயற்படுத்துகின்றது. கீழ் உள்ள முப்பத்தொன்றினைப் பிறரைக்கொண்டு செயற்படுத்து கின்றது. `தத்துவம்` எனப்படுவன முதற் காரணப் பொருளாய் ஊழி முடிவுகாறும் அழியாது நிற்பன ஆதல் பற்றி, \\\"தான் அந்தம் இல்லாத தத்துமானவை`` என்றார். \\\"தான்`` என்றது பன்மையொருமை மயக்கம். `தத்துவமானவை அண்டமாய், எண்மடங்கு ஆம்` என்க. ``எண் மடங்கு`` என்பது மிகுதியைக் குறிப்பதொரு வழக்கச்சொல். அண்டத்து - அண்டமாம் நிலையில். `அண்டங்கள் குறைந்த எண்ணிக்கையையும், தத்துவங்கள் அவற்றினும் மிக்க எண்ணிக்கை யையும் உடையன` என உரைப்பார்க்கு, `அவ்வாறான மேற்கோள் எங்குளது` எனத் தெரியவில்லை.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொழிப்புரை :

கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பனி -ரண்டில் `அ, உ, ம, விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப் படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாத கலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந் தத்தைத்தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` 3 என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற்குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் - தேக்கிடச் செய்து``8 (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.

குறிப்புரை :

``மூஞ்சில் ஓங்காரம்`` என்பதை முதலிற் கொள்க.
`ஓர் ஒன்பானில், பதினொன்றில் வைத்திடில், வஞ்ச அகமே நின்றும் கிளிமொழி கேள்காயம் ஆம்` எனக் கூட்டி முடிக்க.
வைத்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
பிரபஞ்சம், `வஞ்சம்` என வந்து, புணர்ச்சியில் வகரம் கெட்டபின் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்றும்` என்னும் உம்மையும் தொகுக்கப் பட்டது. கேள் - கேள்வன். ஈற்றடியை மகடூ முன்னிலை யாக்கினாரும் உளர். நாயனார் இந்நூலில் யாண்டும் மகடூ முன்னிலை வைக்கக் காண்கிலம்.
இதனால், பிராசாத யோகமும் கரணத்தோடு கூடிய மலாவத்தையேயன்றி, நின்மலாவத்தை ஆகாமை அதன் பயன்கள் சிலவற்றை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
மேல் மந்திரம் - 696 இன் உரையைக்கொண்டு இப் பொருளைத் தெளிக. மற்றும் பிராசாத நூல்களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 2

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.

பொழிப்புரை :

[சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பரா வத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]
புருடதத்துவமும், அதற்குக்கீழேபொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக் கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).

குறிப்புரை :

ஆறும் - தணியும்; ஒடுங்கும் ``உடனே`` என்பது எண்ணொடுவின் பொருட்டாய் நின்றது. ``அருவம்`` என்றது, சூக்குமம் என்றபடி. அகார உகார மகாரங்களை நோக்க, விந்து நாதங்கள் சூக்குமம் ஆதலை உணர்க. ``அருவமொடு`` என்றது, `அருவத்தளவில்` என்றபடி. அதீதத்துரியம், உம்மைத் தொகை. `துரியத்தில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `மிக்குள்ள எட்டும் சுழுத்தியினின்றும் கீழ்க்கீழ் விரியும்`` என்க. புத்திமட்டும் தோன்றுவது சுழுத்தியும் அதனுடன் அகங்காரமும் தோன்றுவது சொப்பனமும் அவற்றுடன் மனமும் தன்மாத்திரையும் தோன்றுவது சாக்கிரமும் ஆகும். இம்முறையில் நாதாந்தம் முடிய, `துரியாதீதம்` எனச் சொல்லப் பட்டாலும் அதற்குமேலும் பரவிந்து பாநாதங்கள் இருத்தலால் பதி -னொன்றாந்தானமும் சகலத்தில் சுத்தாவத்தைத் தானமே - என்றபடி. இதனை, சிவமூல மந்திரங்களை நோக்கிப்பிரணவ கலைகள் பொதுவாக, `சூக்கும பஞ்சாச்சரம்` எனச் சொல்லப்பட்டாலும் அகார உகார மகாரங்கள் விந்து நாதங்களை நோக்கி, `தூலம்` எனச் சொல்லப் படுதலைப்போலக் கொள்க. ``பதினொன்றும்`` என்னும் உம்மை சிறப்பு. பிராசாத யோகத்தின் அவத்தைகளை எடுத்துக்காட்டியது. அவற்றிடையேயுள்ள தாரதம்மியங்கள் போன்றனவே சுத்தத்திற் சுத்தாவத்தைகட்கும், சகலத்திற் சுத்தாவத்தைகட்கும் இடையேயுள்ள தாரதம்மியங்கள்` என்பது உணர்த்துவதற்கு அவத்தைத் தானத்தை `அவத்தை` என உபசரித்தார்.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் காரணங்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபடி சிவாகமங்கள் கூறுகின்ற அந்தத்தானங்கள் பதினொன்றிலும் சென்று நின்றால் உடம்பு விரைவில் அழியாது நெடுங்காலத்திற்கு நிலைபெறும் வகையில் உறுதியடையும். அந்நிலையில் அவ்வுடலில் உள்ள உயிருக்குச் சிவனைத் தவிரத் துணையாவார் வேறு ஒருவரும் இலராவர். (அஃதாவது, `அவ்வுண்மை அவ்வுயிருக்கு நன்கு விளங்கி நிற்கும்` என்பதாம்) அதனால் உனது மனம்போனபடி நீ போய் அலைந்துகொண்டிருந்த அலைவுகளையெல்லாம் விடுத்து அமைதியுற்றிருந்த அந்த அமைதியே வழியாகச் சிவன் தன் அடியார்களோடு கூட்டுதல் உறுதி. இந்த உறுதியும் உனக்கு அந்நிலையில் விளங்குவதாகும்.

குறிப்புரை :

கைகலத்தல், `கலத்தல்` என்னும் பொருட்டாய ஒருசொல். நாட்டி அழுத்திட - நிலைப்படுத்தி உறுதிசெய்ய `உறுதி செய்ய` என்ற அனுவாதத்தானே உறுசெய்தலும் பெறப்பட்டது. விதி - முறைமை.
இதனால், சகலத்திற் சுத்தம் மலாவத்தையேயாயினும் அது பயனுடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொழிப்புரை :

கேவலாவத்தைக்குப் பின்பு ஆன்மாச் சகலத்தை அடைதலே கலவு நிலையாகும். (கலத்தல்மலத்தோடேயாகையால், இக்கலப்பு அசுத்தமேயாம். எனவே, கேவலத்திலிருந்த அசுத்தம் போய்விடவில்லையாம். முன்னை அசுத்தமே பின்னை அசுத்தத் திற்குக் காரணம் ஆகையால்) விடாது பற்றியுள்ள முதல் அசுத்தமாகிய இருள் நீங்கும் சமையத்தில் ஆன்மாச் சகல நிலையினின்றும் சிறிது சிறிதாக விலகி அப்பாற் செல்லுதலே செலவு நிலையாகும். (இது மலங்களினின்றும் நீங்கும் நிலையாகலின், `நின்மலாவத்தை` எனப்படும்) இந்நிலையில் ஆன்மாத் தன்னைக் காணுதல், பின் திரு வருளைக் காணுதல், பின் திருவருளைக் காணுதல், பின் பராசத்தியைக் காணுதல் இவை மூன்றும் முறையே நிகழ்ந்து நீங்கினால் சாக்கிராதீதம் வாய்க்கும். அதன் பின்பே நின்மலாவத்தை முடிவுபெறும்.

குறிப்புரை :

தன்னைக் காணுதல் முதலிய மூன்றும் முறையே, `சைதன்னிய தரிசனம், ஞான தரிசனம், பரை தரிசனம்` எனத் துகளறு போதத்தில்* கூறப்படுதல் காண்க. சாக்கிராதீதம், `பரையில் அதீதம்` என்பதனோடு கூட்டி இரண்டாகவும், பரையில் அதீதத்தை யடுத்துச் சுத்தாவத்தையும் அந்நூலில்l கூறப்படுதலையும் காண்க. அந்நூலில் `சுத்தாவத்தை` எனப்பட்டதும், இம்மந்திரத்தில் `சுத்தம்` எனப் பட்டதும் நின்மலாவத்தையேயாம். ``மேவும், பாவும்`` என்றாராயினும், `கேவலந் தன்னில் சகலத்து மேவுதல் கலவு` எனவும், `விடா இருள் நீக்கத்துப் பாவுதல் செலவு` எனவும் உரைத்தலே கருத்தென்க. பாவுதல் - பரவுதல்; முற்றும் பொருந்துதல்.
இதனால், சகலாவத்தை சுத்தாவத்தைகளின் இயல்பு ஒப்பிட்டு உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொழிப்புரை :

எந்தப் பொருள் மேலும் எழுகின்ற விருப்பத்தை வெல்லுங்கள்; வெறுப்பை ஒழியுங்கள்; உள்ளம் தூய்மையாகும். ஆனபின் அதனை இயன்ற அளவு திருவருளைப் பற்றியே இயங்கச் செய்யுங்கள். பின்பு அஃது அல்லும், பகலும் திருவருளையே சார்ந்து அமைதியுற்றிருக்கும். அப்பொழுது மலைக் குகையுள் அடைக்கப் பட்டவனுக்கு அந்தக் குகை வெடித்துப் பெரிய விடுதலை கிடைத்தது போன்ற ஒருநிலை உண்டாகும்.

குறிப்புரை :

`மலாவத்தைகள் நீங்கிப் பராவத்தை நிகழும்` என்றபடி. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதும் ஆயிற்று. இஃது ஒட்டணி.
அளவு - அளாவுதல்; கலத்தல். அது விரும்புதலைக் குறித்தது. வெகுளி, `வெறுப்பு` என்னும் அளவாய் நின்றது. `விருப்பம் நீக்குதற்கு அரியது` என்பதுபற்றி அதனை, `வெல்லுமின்` என்றார். `தூங்கினால்` என்றதனால், தூங்குதல் பெறப்பட்டது. `வெல்லுதல், விடுதல், செலுத்துதல் எல்லாம் யோகத்தால் உளவாகும்` என்பதும், `அவை உளவாகவே நின்மலாவத்தை பராவத்தைகளில் செல்லுதல் கூடும்` என்பதும் கருத்து.
இதனால், கலவு செலவுகளில் நிகழும் சுத்தாவத்தையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணி பெற்றது.]
ஊமைக் கிணறு - வாய் இல்லாத கிணறு. அஃதாவது, தோண்டப்படாமல் நிலத்தினுள்ளே கிடக்கின்ற நீர்நிலை. என்றது கேவல நிலையை. ஆமை, கேவலத்தில் கிடக்கும் ஆன்மா. அழுவை - அழுவம்; பள்ளம். பள்ளங்கள் ஐந்தாவன, கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் யோகம், சகலத்தில்ஞானம்` என்னும் காரண அவத்தைகள், அவற்றுள், `வாய்மை` என்னும் பள்ளம் சகலத்தில் ஞானம். இதுவே நின்மலாவத்தை. இதனை அடைந்த ஆன்மா நித்தியமாம் தன்மையைப் பெறும்.

குறிப்புரை :

ஆன்மா எப்பொழுதும் நித்தியமேயாயினும் உடம்போடு கூடிப் பிறந்தும், இறந்தும் வருதலால் அநித்தியமாக எண்ணப்படுகின்றது. ஆகவே, `மென்மேலும் ஓர் ஆயிரத்தாண்டு` என்றது. `என்றும் இறவாமையை உடையதாம்` எனப்பொருள் தந்து, நித்தியம் ஆதலை உணர்த்திற்று.
இதனால், `நின்மலாவத்தை பராவத்தைக்கு வாயிலாய் நிற்கும்` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

`நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் ஐம்பூதங் களும் முறையே பிரமன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்களாலேதான் தொழிற்படுகின்றன. ஆகவே அந்த ஐவரையும் ஆதார யோகத்தால் `சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்னும் ஆதாரங்களில் முறையாகக் கண்டு, பின்நிராதாரத்தை அடைய வல்லவர்கட்கு இறப்பும் இல்லை. வாழ்வில் உணர்வும் இல்லையாம்.

குறிப்புரை :

`எனவே, மேல் - வெல்லும் அளவு என்பது,* என்பது முதலாகக் கூறிய சாதனங்கள் ஆதாரயோகத்தாலே எளிதில் கைவரும்` - என்பதாம். `நிலம் முதலிய ஐம்பூதங்கட்கும் பிரமன் முதலிய ஐவரும் அதிதேவர்கள்` என்பதை உண்மை விளக்கம், சிவஞான சித்திச் சுபக்கம் ஆகியவற்றால் அறிக. செய்யுள் நோக்கிப் பூதங்களையும், அதிதேவர்களையும் முறை பிறழவைத்தார். அங்கிக்கு அதிதேவ னாகிய உருத்திரனை `அங்கி` என்றே கூறினார். மேல் அஞ்சு - மூலா தாரத்திற்கு மேலே உள்ள ஐந்து ஆதாரங்கள் ஓடி - முறையாக ஏறி விரவுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `ஆதார யோகம் ஆயுளை வளர்த்து, உலகியல் உணர்வை நீக்கும் முகத்தால் நின்மலாவத்தைக்கு வாயிலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.

பொழிப்புரை :

`உயிர்கள் அனைத்திற்கும் சிவன் தந்தை` என்பதும், `சித்தி தாய்` என்பதும் வேதாகமங்களில் எங்கும் முழங்கும் முழக்க மாதலை அறியாது சிலர் ஆன்மாவை, `தாயும் இலி; தந்தையிலி` என்கின்றார்கள். அஃது உண்மையாயின், சடப்பொருள்களாகிய தத்துவங்களும், அவற்றைக்கொண்டு ஆன்மாக்கள் உலகில் பிறந்து வினைகளை நுகர்ந்தும் ஈட்டியும், பின்பு இறந்தும் செல்லும்நிலை இல்லையாகவேண்டும்.

குறிப்புரை :

உயிர்களுக்குச் சிவனும், சத்தியும் தந்தையும், தாயும் ஆதலை, ``ஆலவாயில் அப்பனே`` எனவும் ``பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை``l எனவும், மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு வருவனவற்றால் அறிக. சிவனுக்கும், சத்திக்கும் வேறு பாடின்மை பற்றிச் சிவனையே. ``தொடர்ந்து நின்றேன் - தாயானை``3 ``அம்மையே, அப்பா``8 என்றாற்போலவும் பல இடங்களில் அருளிச் செய்வர். எவ்வாறாயினும், `பரம்பொருட்கு ஆன்மா மகன்` என்பதில் ஐயமில்லை. ``அறிகிலர்`` என்பது, அறியாமையால் அதனை மறுத்துக் கூறுதலாகிய காரியத்தை உணர்த்திற்று. ஆன்மா அறிவுடை உலகமாயும், தத்துவ தாத்துவிகங்கள் அறிவிலா உலகமும் ஆதலின், `ஆன்மாத் தோற்றம் உடையது ஆகாவிடின் உலகமே இல்லை` என்பார். ``ஆன்மாவும் இல்லையால்; ஐயைந்தும் இல்லையே`` என்றார். வித்தியாதத்துவங்களைப் புருடதத்துவத்தில் அடக்கி ``ஐயைந்து`` என்றார்.
இதனால், `ஆன்மா யோக ஞானங்களால் உலகினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.

பொழிப்புரை :

அறிவு உதயசூரியன் போலத் தோன்றி விளங் குதலும், அவ்வாறின்றி மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல மழுங்கி நிற்றலும், அத்தமித்த சூரியன்போல ஒடுங்கி யிருத்தலும் ஆகிய இவையே பெத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன துரியங்களாகும். ஆகவே, `அவற்றின்பின் நிகழும் துரியமும் அறிவுசெயற்படாது அடங்கிக் கிடக்கும் நிலை` என்பது சொல்ல வேண்டா. இந்தப் பெத்தநிலை அவத்தைகளை விடுத்துச் சுத்தநிலை அவத்தையை ஒருவன் எய்துவானாயின்` அவன் மிக நன்மையை அடைந்தவனாய், எல்லையில்லாத ஆனந்தத்தையுடையவனாவான்.

குறிப்புரை :

``உதயம்`` எனக் கூறிய சொற்குறிப்பால் இவ்வாறு பொருள் கொள்ளக்கிடந்தது. ``மூன்றின்`` என்பதில் `இன்` வேண்டா வழிச் சாரியை கதி - நிலை. பதிதல் - அழுந்துதல். `பற்றுக்களில் பதிதரும்` என்பது, பின்பு ``பற்றாத் துரியம்`` என்றதனால் விளங்கும். பற்றாத் துரியமும் யோக துரியமும், ஞான துரியமுமாம். `யோகா வத்தையை அடைந்தவன் ஞானாவத்தையையும், பின்பு பரா வத்தையையும் அடைதல் உறுதி` என்பது பற்றி ``அதிசுபனாய் அனந்தானந்தியாகும்`` என்றார். சுபன் - நன்மையை அடைந்தவன். அனந்தம் - முடிவில்லாதது. அனந்த + ஆனந்தி = அனந்தானந்தி. இது வடமொழிப்புணர்ச்சி.
இதனால், மலாவத்தைகள் துன்பநிலையும், நின்மலாவத்தை இன்ப நிலையும் ஆதலைக் கூறும் முகத்தால், நின்மலாவத்தின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

பொழிப்புரை :

சட உலகங்கள் யாவும் தனக்குள் அடங்கியிருக்க, சிவஞானத்தால் எல்லாப் பொருளையும் ஒருங்கேயறியும் தன்மை யுடையவன் ஆகின்ற அத்தகைய நல்ல துரியத்திலே தங்கும் நிலையை ஓருயிர் அடைந்துவிட்டால் அது நல்ல உயிராகும், பின்பு அது பிறவி யாகிய தீமையை விளைவிக்கின்ற முப்பத்தாறு தத்துவங்களில் செல்லாது. முன்பெல்லாம் சடங்களாகிய அவற்றிற்சென்று அவையே யாய் இருந்ததுபோல் இல்லாமல் அவற்றின் நீங்கி அறிவுப் பொருளாய், செல்லாது செல்வதாகிய சிவகதியை அடையும்.

குறிப்புரை :

பெத்த காலத்தில் ஆன்மாப் பாசங்களின் வியாப்பி யமாய் இருந்து, முத்திகாலத்தில் அவைகளைக் கீழ்ப்படுத்தி நிற்றல் பற்றி, ``எல்லாம் தன்னுட் புக`` என்றும், பெத்த காலத்தில் ஆன்மாத் தத்துவங் -களைப் பற்றி ஏகதேசமாய் இருந்து, முத்தி காலத்தில் சிவ ஞானத்தைப் பற்றி வியாபகமாய் நிற்றல் பற்றி, ``யாவுளும் தானாய்`` என்றும் கூறினார். `நன்று` என்பது இறுதிநிலை கெட்டு, ``நல்`` என முதனிலை யளவாய் நின்றது. ``நல்லாந் துரியம், நல்லுயிர்`` என்பவை, `சுத்த துரியம், சுத்தான்மா` என்பதாம். ``புரிந்தக்கால்`` என்பது, புரிதலின் அருமை தோற்றி நின்றது. ``ஆகிப்புரிந்தக்கால்`` என்றாரேனும், `புரிந்து ஆகியக்கால்` என்பது கருத்தென்க. செல்லாது செல்லுதலாவது, `முன்பு வேறாய் இருந்து, பின்பு சென்று அடைதல்` என்பதின்றி, முன்பே உள்ளதனை உணர்தல் ``அன்றே`` என்றது தேற்றம்.
இதனால், நின்மலாவத்தையின் இயல்பும், பயனும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.

பொழிப்புரை :

நெருப்பில் காய்ந்து நெருப்பாகவே இருந்த இரும்பு நெருப்பை விட்டு நீங்கினால் நெருப்பாய் இராமல் இரும்பாகவே யிருக்கும். இருப்பின் நெருப்பின் சூடு விரைவில் ஆறிவிடாது; இருக்கவே செய்யும். அதுபோல நின்மல சாக்கிர சொப்பன சுழுத்தி -களோடு தத்துவங்களின்றும் ஆன்மா நீங்கியபோதிலும் துரியத்திலும் அவற்றில் முன்பு மூழ்கியிருந்த வாசனை இருக்கவே செய்யும்.

குறிப்புரை :

`அதனால் நின்மலதுரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். கருமம் - தொழில். துரிசு - குற்றம். என்றது அதன் வாசனையை. தசகாரியங்களுள் தத்துவ ரூபம். தத்துவதரிசனம் இவ்விரண்டும் நின்மலசாக்கிரம். ஆன்ம ரூபம் தத்துவ தரிசனத்தில் உடன் நிகழும். ஆன்ம தரிசனம் நின்மல சொப்பனம். இதில் தத்துவ சுத்தி அடங்கும். சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி நின்மல சுழுத்தி, இதில் தரிசனம் நிகழ, ஆன்ம சுத்தி ஓரளவே நிகழும். சிவயோகம் நின்மல துரியம். இதில் ஆன்மசுத்தி முற்றுப்பெறும். எனினும் பண்டை வாசனை சிறிது இருக்கும். சிவபோகமே நின்மல துரியாதீதம். இதுவே ஆன்ம லாபம். இங்கு ஆன்மாப் பண்டை வாசனையும் இன்றிச் சிவமேயாய் நிற்கும். ஆகவே இதனை அடைதல் இன்றியமையாததாயிற்று. வாதனை - வாசனை.
இதனால், நின்மல துரிய துரியாதீதங்களின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொழிப்புரை :

வேதம் முதலாகிய சொல்லுலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும் தனது வடிவமாகக் கொண்டுள்ள சிவன் புலப்பட்டு நின்று, தனது திருவருளாகிய தேனை வழங்குகின்ற நின்மலாவத்தையில் கடக்க வேண்டிய சாக்கிரம் முதல் நான்கையும் கடந்து முடிந்தபின் துரியாதீதமே பாரவத்தையாய் விளங்கும்.

குறிப்புரை :

என்றது, `விரைவில் பராவத்தை கைகூடும்` என்றதாம். தெரிசனாவத்தை, பொருள்களின் இயல்பை உள்ளவாறுணரும் நிலை. அது ஞானாவத்தையாதல் அறிக. `விடு` என்பது `வீடு` எனத்திரியாது செய்யுள் நோக்கி, `விடு` என்றே, நின்று, விடுதலாகிய தொழிலையே குறித்தது. உம்மை, சிறப்பும்மை. `விடுத்திட வேண்டிய வகை` என்றதனால் அவைமுதல் நான்கு நிலைகளேயாயின. `விட்டது` என்பதே துணிவுப் பொருளை உணர்த்துமாயினும், `ஆய்விட்டது` என்றல் உலக வழக்கு. `முடிந்துவிட்டது` என்பது அதன் பொருளாகும். அது பற்றி, `அடைந்துவிட` என்பதை, `அடைந்தாய்விட` என்றார். `நின்மலம்` என்பதை ``மலம்`` என்றது முதற்குறை. `நிருவிகற்பம்` என்பது `விகற்பம்` என்றதும், `சன்மார்க்கம்` என்பது `மார்க்கம்` எனவும் வந்த செய்யுட்களைக் காண்க.l
இதனால், `நின்மல துரியாதீதமேபராவத்தைக்கு நேர்வாயில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையிற்றானே நின்மல துரியாதீத நிலை (இதுவே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படுவது) தோன்ற, ஆன்மா அதிலே நிலைத்திருக்குமாயின், சிவனது திருவருள் அதனை விட்டு நீங்காது. அந்நிலையில் நீ பராவத்தையை அடைவதற்குச் சித்த சலனத்தால் பற்றக்கூடிய உலகியல் நிலை வந்து சிறிதும் தீண்டாதபடி சமாதி நிலையில் நில். அப்பொழுது முன் சொன்ன திருவருள் உன்னைச் சிவனோடு ஒன்றுபடுத்தும்.

குறிப்புரை :

`ஆங்கண்` என்பது பெயரால் நின்று உருபேற்றது. `தான்` என்றது சிவனை. `ஒன்ற முதலாகும்` என்றாராயினும், `முதலாய் நின்று ஒன்றுவிக்கும்` என்பதே கருத்து.
இதனால், நின்மல துரியாதீதத்தில் சிவன் அருளுருவாய் நின்று, பராவத்தையில் ஆனந்த உருவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

எவ்வுயுரினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாது, அதனோடு ஒன்றாகியே, அதற்கு அப்பனாகியும் இருக்கின்ற சிவன். எவ்வுலகிலும் உள்ள உடற்கூட்டத்தை `ஆண், பெண்` என இருசமபாதிகளாகப் பிரித்து வைத்துள்ளான். என்னையும் தன்னினின்றும் வேறுபடுத்தி, அத்தகையனவாகிய உடம்புகள் உள்ள அனைத்திடங்களிலும் செல்லவிடுத்து, அந்த உடம்புகளுக்குள்ளே புகுத்தினான். பின்பு தன்னினின்றும் என்னை வேறுபடுத்தாது ஒன்றாக்கிக் கொள்கின்ற அருட்கேவலத்திலே செலுத்தி, என்னோடு பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

``வேறுசெய்யா அத்தன்`` என்பதை முதலிற் கொள்க. இரண்டாம் அடியில் ``வேறு செய்தான்`` என்பது முற்றெச்சம். `என்னையும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்த லாயிற்று. அருட்கேவலமாவது, ஆன்ம தரிசனத்தில் தத்துவ சுத்தி நிகழ்ந்த பின்னர் ஆன்ம சுத்திக்கு இடைப்பட்ட நிலை. இதுவே துகளறு போதத்தில் * ஆம் அவதரமான கேவலம்` எனச் சொல்லப்பட்டது. இதைச் சிறப்பாகக் குறிப்பிடும் முகத்தால் நின்மலாவத்தை முழுதும் குறிக்கப்பட்டது. ``வேறுசெய்யா அருட்கேவலம்`` என்றதனால், `நின்மலாவத்தையே பதியைப் பசு பற்றும் நிலை` என்பது விளங்கும். இது சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தை. இதனால், ``வேறுசெய்தான் என்னை எங்கணும் விட்டுய்த்தான்`` என்றது, சகலத்தில் கேவலம். சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தமாகிய யோகம் - என்னும் இவைகளைக் குறித்ததாயிற்று.
`உடம்புகளை ஆண், பெண்` - என இருவகையாய்ப் பிரித்து வைத்ததைக் கூறியது, `அவத்தைகள் யாவும் இருபாற்கும் பொதுவே` என்பது உணர்த்துதற்கு, `மெய்த்தொகை வேறுசெய்தான்` என்றே கூறினமையால், உயிரில் - ஆண், பெண் - என்னும் வேறுபாடில்லை என்பதும், `உயிராகிய பறவைக்குக் கூடாய் உள்ளனவே உடம்புகள்` என்பதும், `அதனால், வினைக்கீடாக ஆண் உடம்பில் புகுந்திருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய்ப் பெண் உடம்பில் புகுதலும், பெண் உடம்பில் இருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய் ஆண் உடம்பில் புகுதலும் கூடும்` என்பது விளங்கும். விளங்கவே, இதனை உணராத மதங்கள், ஆணுக்கன்றிப் பெண்ணுக்கு வீடுபேறில்லை என்றும், `ஆணைவிடப் பெண்ணுக்கு இறைதொடர்பு எளிதும் மிக்கதுமாம்` என்றும் கூறுவன எல்லாம் போலியாதல் பெறப்படும். இம்மந்திரம் சொற்பொருட்வருநிலையணி பெற்றது.
இதனால், `பதியை அடைதற்குப் பசு - ஆண், பெண் - என்னும் வேறுபாடின்றி நின்மலாவத்தையை அடையமுயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொழிப்புரை :

உயிர்கள் காற்றாடியில் உள்ள ஓலைகளைப் போலவும் கொள்ளியைச் சுழற்றுங்காலத்தில் தோன்றுகின்ற வட்ட வடிவுபோலவும், கடலில் அலைகள் போலவும், தயிரைக்கடையும் மத்தைப் போலவும் `மேல், கீழ், நடு` என்னும் மூன்றுலகங்களிலும் விரையச் சென்று மீண்டு மீண்டு, ஆழ்குழிப்பட்டுத்துன்புற்று, சிவன் அருள்புரிந்தபொழுது அவ்வருளால் ஆழ்குழிகளாகிய இவற்றி னின்றும் மீண்டு கரையேறி, அவனை அடைந்து இன்புறும்.

குறிப்புரை :

உவமைகள் ஒரு நிலையில் நில்லாது பல நிலையில் மாறி மாறி விரையச் சுழலுதலை விளக்க வந்தன. இச்சுழற்சிக்குக் காரணம் பாசங்களே.
``மலம் மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி மன்னிச்
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கி, இத் தரை, கீழ், மேலும்
நிலையாத கொள்ளி வட்டம், கறங்கென நிமிடத் தின்கன்
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே``8
என்னும் சிவஞான சித்தியினைக் காண்க.
``மலங்கள் ஐந்தால் சுழல்வதன் தயிரில் பொருமத்துறவே``l
என்பது திருவாசகம்.
``ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி``3
என்றார் பிறரும், அறம் காண் - அறம் காரணமாகச் சென்று காண்கின்ற - கவர்க்கத்தை இத்தகையதாகக் கூறவே, நரகம் மறம் காரணாகச் சென்று காண்பதாயிற்று. புவி, அறம், மறம் இரண்டாலும் சென்று காண்பது. இறங்கா - வீழ்ந்து `இறங்கா நீங்கும் என இயையும், எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. இறங்குதல் சொல்லப்பட்டமையானே சுவர்க்க நரக புவிகள் ஆழ்குழியாயின. `அக்குழிகளில் வீழ்வன எல்லாம் மலா வத்தைகள்` என்பது மேற்காட்டிய மேற்கோள்களாலே விளங்கும். ஆகவே, நின்மலாவத்தையே உயிரின் கரையேற்றம் ஆகின்றது.
இதனால், சகலமாகிய மலாவத்தை பிறவி நிலையாய்ப் பெருந்துன்பம் விளைக்கும் இழிவைக் கூறுமுகத்தால், நின்மாலவத்தையினது உயர்வு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொழிப்புரை :

`ஆன்மாவே சிவம்` என்று சொல்லத்தக்க நிலையை ஆன்மா அடைந்தபின், அநாதியே பொருந்திய சகசமலமாகிய ஆணவமும், அதனை முன்னிட்டு வந்த, `மாயை` கன்மம், மாயேயம், திரோதாயி, என்னும் பாசவேறுபாடுகளும் அவற்றிற்கு உரியவாய் ஆன்மாவினிடத்து விளங்கிய இழிகுணங் களும், இவை நீங்கினாலும் நீங்கப் பெற்ற சுத்தான்மா விடத்திலும் பின்னும் நிற்கின்ற இவற்றின் வாசனைகளும் சூரியன்முன் சந்திரன் போல அடங்கி ஒடுங்கிவிடும். (வாதிக்கமாட்டா` என்றபடி).

குறிப்புரை :

மலங்களின் இழிகுணங்களை இருபாஇருபஃது நான்காம் செய்யுளால் அறிக. ஆன்மாச் சிவமாம் தன்மையை அடைதல் நின்மலாவத்தையில் ஆதலின், `அதனை அடைக` என்பார், இவ்வாறு அதன் பயனை விரித்தார். இதனானே `நின்மலாவத்தை` என்னும் பெயர்க்காரணமும் விளங்கிற்று.
இதனால், நின்மலாவத்தை அதன்பெயருக்கேற்ற பயனை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.

பொழிப்புரை :

[இதன்பொருள் வெளிப்படை]

குறிப்புரை :

`உள்ளம்`, ஏற்புழிக்கோடலால், `யோகியர் உள்ளம்` என்க. ஏனையோர்க்கு அப்பாவனையில்லாமையறிக. `நினைப்பவர் மனம் கோயிலாக்கொண்டவன்* என்றாற்போல்வனவும் இக்கருத்தே பற்றி வரும் என்க. செய்யுளாகலின் உள்ளத்தைச் சுட்டும் `அங்கு` என்பது முன்னே வந்தது.
`தத்துவ தாத்துவிகங்களும், அவற்றைச் செலுத்தும் கடவுளரும் யோகபாவனையால் கடக்கத்தக்கவர்கள்` என்பதை உணர்த்தும் முகத்தால் யோகத்தை விதித்தவாறு.
இதனால், நின்மலாவத்தைக்கு உரிய வாயிலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாகுமே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை)

குறிப்புரை :

அறிவு என்னும் ஞானம் - அறிவுகளில் எல்லாம் மேலானமை பற்றி, `அறிவு` என்றே சொல்லப்படுகின்ற மெய்யறிவு. நாயனாரது நோக்கில் அது சிவஞானமே. ``திரி`` என்றது உயிர் அறிவை. ``உயிர் எனும் திரி மயக்கி`` என்பதிலும் ``உயிர்`` என்பது அப்பொருட்டு. ஞானத்தை - தீ - என்னாதது ஏகதேச உருவகம். உயிரை, `திரி` என்றே கூறியது சிறப்புருவகம். ``அதனுட்புக்கு ஊனை நோக்கும்`` என்றதை, `ஊனுட்புக்கு அதனை நோக்கும்` எனக் கொள்க. இருளற நோக்கியவழி முன் புலப்படாதிருந்தவை புலப் படுதல் போல, ஊனை இருளற நீக்கினால் முன் மந்திரத்திற் கூறியன எல்லாம் விளங்கும் ஆகலின், ``வானகம் ஏற வழி எளிதாமே`` என்றார். ``வானகம்`` என்றது, யோகத்திற்கு அப்பாற்பட்ட நின்மலா வத்தையை,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக,
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி, இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே``
-திருமுறை - 4.75.4.
என்று அருளினமையை நோக்குக. மடம்படும் உணர் - பசு போதம்.
இதனால், `மேல் குறிப்பால் உணர்த்திய யோகம் சிவயோகம் ஆதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

பொழிப்புரை :

நான் எனது விருப்பப்படியேவிட்டும், வாங்கியும் இயக்குகின்ற பிராணவாயுவையும், மிகுத்தெழுக்கின்றதமருக ஓசையையும், வல்லுநர்கள் பாடுதலால் எழுகின்ற வேதாகம ஒலிகளையும், நான் கண்ட முறை, சுழுமுனா நாடியினுள்ளாக, நடனத்தில் தூக்கிய காலின் கீழாம்.

குறிப்புரை :

`யோகத்திலே ஞானத்திற்குரிய எல்லாவற்றையும் சிவனது நடனத்தின் வழியே பெறலாம்` என்றபடி. `தடித்து` என்பது செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், `சிவயோகமே ஞானத்திற்கு வாயில்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொழிப்புரை :

முதலில் நிகழும் அறிவு பெரிய தவ அறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத்தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவ அறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளேயாம்.

குறிப்புரை :

முதுதவம் - பெருந்தவம். ``அறிவினில்`` என்ற `இன்` ஏதுப் பொருளில்வந்த ஐந்தாம் உருபு. பின்னைப் பெற்றால்` என இயையும். ``அறிவினைப் பெற்றால்`` என்பதில் `அறிவு` எனப் பட்டது. பின் இரண்டடிகளால் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் `இன்னது` என விளக்கப்பட்டது.
ஆன்மாத் தன்னை உள்ளவாறு அறிதலாவது, உலக வாழ்க்கையானே தனக்குச் சுதந்திரம் இன்மையை உணரும் முகத்தால், தனக்கு ஒரு தலைவன் உளன் ஆதலை அனுமானத்தால் உணர்தலும், பின்னர்த் தனது தவத்திற்கு ஏற்ப நிகழும் நிகழ்ச்சிகளால் அனுபவமாக உணர்தலுமாம். அனுமானத்தால் உணருமாற்றை ஔவையார்,
``ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்;
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;
எனை ஆளும் ஈசன் செயல்`` 3
என விளக்கினார். `பின்னை` என்பது `மற்று` என்னும் பொருளைத் தந்தது. பேயினது அறிவு நெறிப்படா அறிவு அஃது உவம ஆகு பெயராய் அதுபோன்ற அறிவைக் குறித்தது.
`பல பிறப்புக்களில் செய்த தவமுதிர்ச்சியால் பின்னர்ச் சில பிறப்புக்களில் ஞானம் நிகழும்` என்பதும், `அந்த ஞானமாவது இது` என்பதும் உணர்த்தும் முகத்தால், `ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை` என்பது இதனாற் கூறப்பட்டது. ``இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத் தான் ஞானம் நிகழும்``8 எனவும், ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார் எம்மையுடைமை`` எனவும் மெய்கண்ட தேவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 16

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.

பொழிப்புரை :

நின்மல துரியத்தை அடைந்தவர்கட்கே, அதன் பின்னர் ஆனந்த நிலையாகிய அதீத நிலை வாய்க்கும். அதனால் அவர் அந்த அதீத நிலையை அடையமுயலுதலன்றி, முன் சொன்ன சிவ யோகத்தைப் புரிய எண்ணமாட்டார்கள். அவ்யோகத்தைப் புரியாமை -யால், அவர்கள் உலகப்பற்றில் வீழ்ந்துவிடமாட்டார்கள். ஆகவே, சிவானுபவமாகிய செயல் ஞான துரியாதீதத்தை அடைந்தவர்கட் கல்லது. ஏனைச் சிவயோகிகட்கு உண்டாகமாட்டாது.

குறிப்புரை :

ஆன்மா, ``தான்பணியைநீத்தல்``l நின்மல துரியத்திலேயாதலை அறிக. ஆன்மாச் செயலற்றிருத்தலாகிய இதனையே நாயனார் முதல் தந்திரத்து `உபதேசப்` பகுதி 15.16,17 ஆம் மந்திரங்களில் நயம்பட விளக்கியிருத்தல் காண்க.
இதனால், ஒன்று இடையிட்டு மேற்கூறிய சிவயோகம் நின்மலா வத்தைக்குச் சாதனமேயன்றிச் சாத்தியம் ஆகாமை உணர்த்தப் பட்டது.
ஆன்மா தன் செயல் அற்று, `எல்லாம் சிவன் செயல்` என்று இருக்கும் நின்மல துரிய நிலையே
``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்`` (திருவுந்தியார் - 30)
எனவும்
``செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ! நாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு``l
எனவும் சாத்திரங்கள் கூறுகின்றன.

பண் :

பாடல் எண் : 17

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொழிப்புரை :

[கீழாலவத்தை மத்தியாலவத்தைகளை நோக்க, மேலாலவத்தையாகிய யோகாவத்தை நிறைவுடையதேயாம். எனினும், ஞானாவத்தையை நோக்கின் அது குறைவுடையதேயாகும். ஆகையால்] இயமம், நியமம் முதலாக உள்ள அந்த எட்டுறுப்புக் களையும் (சமாதி உட்படக்) கடந்து, நின்மல துரிய நிலையில் ``அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி நிற்றலாகிய``8 அந்தச் சமாதி கைவந்தால்தான் அநாதி தொட்டே பற்றியுள்ள ஆணவமலம் வாசனையும் இன்றி நீங்கும். (அப்பொழுது பின் வந்த மாயை கன்மங் களாகிய பாசங்களும் அவ்வாறாம். ஆகவே, அப்பொழுதுதான்) ஆன்ம, `பசு` என்கின்ற நிலைமை நீங்கப்பெற்று, `சிவம்` எனப்படும் நிலையை எய்தும்.

குறிப்புரை :

ஒளி வந்தவழியல்லது இருள்போகாதது போல, ஞானம் வந்த வழியல்லது அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவ மலம் அறுமாறில்லை. ``அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான் - ஆனத்தால் அதுபோவது; அலர்கதிர்முன் இருள் போல்``3 என்பது சிவஞானசித்தி. இதனால் இங்கு ``சமாதி`` என்றது ஞான சமாதியேயன்றி, யோக சமாதியன்று. ``தான் அவனாகும் சமாதி`` என எடுத்தோதியதும் அது விளங்குதற் பொருட்டு. இந்த ஞான சமாதியையே திருக்களிற்றுப்படியார்,
``சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியும்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று``8
எனக்கூறிற்று. இங்குக்கூறிய சமாதியை `யோக சமாதியே` எனக் கொள்கின்றவர்கள் `எட்டு` என்னும் எண்ணிக்கைக்குத் தங்கள் தங்கட்குத் தோன்றிய பொருளைக் கூறுவர்.
ஈற்றடியை முதலிற் கூட்டி, `ஈன்மில் காயம் இருநிலத் திருக்கும்` என முடிக்க. காயம் இருத்தலைக் கூறியது, `ஞான சமாதியை அடைந்தோர் காயத்தை இருந்த வேண்டினும் இருக்கும்` என்பது உணர்த்துதற்கு, ஞானிகளது உயிரேயன்றி, உடம்பும் நின்மலமேயாதலைக் குறித்தற்கு, ``ஈனம் இல் காயம்`` என்றார்.
இதனால், `யோக துரியாதீதத்தைக் கடந்து நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

பொழிப்புரை :

(இருவினையொப்பு மலபரி பாகம்வந்த பொழுது ஆன்ம அறிவில் பதிகின்ற அருட்சத்தியை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என அதன் தன்மை பற்றி வழங்கப்படுமாயினும் அவை `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் சக்தி களின் வகையாகவே சொல்லப்படுகின்றது.l அந்த ஐந்து சக்திகளும் சிவனது திருவடியேயாம். (அருளை `அடி` எனக் கூறுதல் மரபு. அதனால், சத்தி நிபாதத்தில் உண்டாகின்ற ஞானமும் `திருவடி ஞானம்` என்றே கூறப்படும்). அந்த ஞான ஒளி தோன்றியவுடன், அநாதி தொட்டு விடாது பற்றி நிற்கின்ற ஆணவ இருள் நீங்கும். அது நீங்கவே, ஆன்மாவிற்கு இயல்பாய் உள்ள இச்சாஞானக்கிரியா சத்திகள் (ஆணவத்தால் தடுக்கப்பட்டிருந்தனவேயன்றி, அழிக்கப் படாமையால்) விளக்கம் பெற்று ஆன்மாத் தனது இயற்கை நிலையை அடையும். அடைந்த பொழுது முதற்கண் முற்றும் நீங்காத பெத்தமும் அது முற்றும் நீங்கிய முத்தியும் என்னும் இரண்டற்கும் இடைநிலையில் ஆன்மா இருக்கும்.

குறிப்புரை :

அந்த நிலையே நின்மலாவத்தை என அறிக. `தோன்றும் ஐஞ்சத்தி தொலையா அரனடி` எனவும், `ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா` எனவும் கூட்டுக.
`ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா`` எனப்பொதுப் பட ஓதினாராயினும் சொல்லுவாரது குறிப்புத்திருவடி ஞானத்தின் மேலதும், ஆணவ இருளின் மேலதும் ஆதலை அறிக. மூன்றாம் அடியில் நின்ற ``தொலையா`` என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெய -ரெச்சம். மூன்றாம் அடியில் உள்ள ``தொலையா`` என்பது `செய்யா` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அதனை, `தொலைய` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக்கொள்க. இங்ஙனமாகவே இம்மந்திரம் சொற்பின்வருநிலையணிபெற்றதாம்.
இதனால், ஞானாவத்தையே நின்மலாவத்தையாதலன்றி, யோகாவத்தை அன்னதாகாமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அவற்றைச் செலுத்துகின்ற சிவசத்தியின் தன்மைக்கு ஏற்ப மயக்க உணர்வைப் பெற்றுப் பெத்தத்தையும், மெய் உணர்வைப் பெற்று முத்தியையும் ஏனெனில், அந்த `மயக்கம், மெய்` என்னும் இரண்டையும் உயிர்கட்குத் தருகின்ற ஞானமாகிய தன் சத்திக்குச் சத்தனாய் உள்ள சிவன், ஒரு பெற்றியில் நில்லாது இருவேறாய் நிற்கின்ற அந்தச் சத்திக்கு உயிராய் நின்று அதனைச் செலுத்துவன் ஆதலின்.

குறிப்புரை :

`உயிர், சத்தியால் மான்று பெத்தத்தையும், தெருண்டு முத்தியையும் பெறும்` என்க. இது முறை நிரல்நிறை. உயிர் பக்குவம் எய்தாத பொழுது மலங்கள் அதன் ஆற்றலை அடக்கித்தாமே மேற்பட்டு நிற்றலால் அப்பொழுது சிவனது அப்பாசங்களைச் செலுத்தி அவை வழியாக உயிருக்கு மயக்க உணர்வையும், உயிர் பக்குவம் எய்திய காலத்தில் அதன் ஆற்றலை மலங்கள் அடக்க மாட்டாது, அதற்குக் கீழ்ப்பட்டுப் போதலால், அப்பொழுது சிவனது சத்தி தான் நேர்நின்று உயிர்கட்கு மெய்யுணர்வையும் தரும். அதனால், ``மான்றும், தெருண்டும் பெறும்`` என்றார். மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து. ஒன்றாகிய சத்தியே, பாசத்தின் வழிநின்று அறிவை மயக்கும் பொழுது `திரோதான சத்தி` என்றும், மயக்காது விளக்கும் பொழுது `அருட்சத்தி` என்றும் பெயர் பெறும். `ஞானத்தன்` என்பது இன்னோசை நோக்கி மெலித்தல் பெற்றது. ஒன்றேயாயினும் இரண்டாய்ச் செயலாற்றுதல்பற்றிச் சத்தியை ``ஊன்றல் இல்லா ஒளி`` என்றார். மற்று, தான் அசைகள். ``ஒளிக்கு ஒளி`` என்றது, `சிவன் செயற்படுத்திய வழியிலே சத்தி செயற்படும்` என்பது உணர்த்துதற்கு முன்பு, ``சத்திக்குச் சத்தன்`` என்றதை இனிது விளக்கியவாறு.
இதனால், மேற்கூறிய பெத்தமும் முத்தியும் சிவனாலே ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

தத்துவங்கள் முப்பத்தாறினையும், அவை தாமே அறிந்தும், செய்தும் வருவனவாக மயங்கி, உண்மையில், `அவற்றைக் கருவிகளாகக்கொண்டு அறிபவனும்` செய்பவனும் நான்தான்` என்பதையான் பெத்த காலத்தில் அறிந்து கொள்ளாமலே மயங்கி யிருந்தேன். பின்பு நந்திபெருமான், மேற்குறித்த உண்மையை எனக்கு அறிவுறுத்தருளினார். அந்த உண்மையை அங்ஙனமே அறிந்து கொண்டமையால், முத்தனாயினேன்.

குறிப்புரை :

`பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `இவ்விரண்டிற்கும் காரணம் பக்குவம் எய்தாமையும், எய்தினமையும்` என்பது மேலே கூறப்பட்டது.
இதனால், `மெய்யுணர்வு திரோதானசத்தி அருட்சத்தியாய் மாறின அளவில் பெறப்படாது. குருவினாலே பெறப்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொழிப்புரை :

தான் `சீவன்` என்கின்ற நிலைமை நீங்கி, `சிவன்` என்கின்ற நிலைமையை அடைந்த பெரியோன் சிவன் சத்தி இருவனாயும் நேரே கண்டது தன்னுடையே உடம்பிற்குள்ளேயாகும்.

குறிப்புரை :

`சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தையாகிய நின்மலா வத்தையிலாம்` என்றபடி `அந்நிலையை அடைந்தவன் பின் பரா வத்தை அடைதல் உறுதி` என்பது கருத்து. முன் இரண்டு அடிகளில் சிவனும், பின் இரண்டு அடிகளில் சத்தியும் குறிக்கப்பட்டனர். அவ் வடிகளின் பொருள் வெளிப்படை ``கண்டது`` என்னும் ஒருமை அத் தொழிலைக் குறித்தது. `கண்டது ஊனிடை` என மாற்றியுரைக்க.
இதனால், `சகலத்திலேயே நின்மலாவத்தையில் சிவ சத்திகளை அவர்களது ஞானமாகிய கண்ணால் காணுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.

பொழிப்புரை :

ஆணவ இருளைச் சிறிதே நீக்குவனவாகிய மாயா காரியக் கருவிகளும் அவற்றால் சிறிதே நீக்கப்படுகின்ற ஆணவ இருளும், அதனை நீக்க உதவுகின்ற சிவசத்தியும் அச்சத்தியால் காப்பாற்றப்படும் ஆன்மாவும் ஆகிய இவைகளை முறையாக முன்னர் உணர்தல் வேண்டும். (அவ்வாறு உணர்தலே அரிது. ஆயினும்) அதன்பின் அவற்றோடு நில்லாது ஆன்மாவின் எளிய நிலையையும், அந்நிலையை உணர்ந்து சிவன் அதன்மேல் கொள்ளும் இரக்கத்தையும், அவ்விரக்கத்தால் ஆன்மாவிற்கு உண்டாகின்ற அனைத்துப் பொருள்களையும் பற்றிய உண்மையான உணர்வின் சிறப்பையும் உணர்ந்து, பின் பல பொருள் உணர்வை விடுத்துச் சிவன் ஒருவனையே உணர்கின்ற உணர்வு உண்டாகுமானால், அதன் பின்பே சிவனது பேரின்பம் ஆன்மாவிற்கு உளதாகும்.

குறிப்புரை :

பின்னர், ``பரை`` எனத் திருவருள் குறிக்கப்படுதலால், முதற்கண் ``ஒளி`` என்றது மாயையாகிய ஒளியையே குறித்தது. அளியது - அளிக்கத்தக்கது. அஃதாவது, இரங்கத்தக்கது.
துகளறுபோதத்தில், ஒளியை உணர்தல், முதல் ஏழு அவதாரங் களாகவும், இருளையுணர்தல், அடுத்துமூன்று அவதரங்களாகவும், ஆன்மாவை உணர்தல், அடுத்த `தன்னுண்மை சைதன்னிய தரிசனம்` எனவும், இரக்கத்தை (திருவருளை) உணர்தல் `ஞானதரிசனம்` எனவும் தெருளைஉணர்தல் அடுத்த எட்டு அவதரங்களாகவும் கூறப் பட்டன. இவற்றின் பின்னர்க் கூறப்பட்டன எல்லாம் சிவன் ஒருவனையே உணர்ந்து நிற்கும் நிலைகளாம். அந்நிலைகளே சிவானந்த விளைவுகளுமாம். ``பரை`` என்பது பொதுவாக `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், நின்மலாவத்தையின் உட்கூறுகள் ஒருவாறு விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.

பொழிப்புரை :

`சிவானந்தம்` என்பதும் சிவனது அருட் குணங்களில் ஒன்றேயாம். (வரம்பில் இன்பம்) ஆகவே, அச்சத்தி வழியாக ஞான நிலைகளில் முடிநிலையை அடைந்த உயிர் பின் சிவத்திலே அழுந்தி, ஐவகை உடம்புகளினின்றும் நீங்கி, அறிவே வடிவாய், அந்த அறிவுக்கு அறிவாய் உள்ள சிவத்திலேயே பிரிதல் இன்றி நிற்குமாயின் சிவனை முற்றும் பெறுதலாகிய மிகப்பெரிய பேறு உளதாகும்.

குறிப்புரை :

``தானே`` என்பது, `அந்த உயிரே` எனத் தேற்றப் பொருள் தந்தது. சமாதி - தான் அதுவாதல், கோபம் - கோவம், பாபம் - பாவம்` என வருதல்போல, `மகாபாக்கியம், என்பது, ``மகா வாக்கியம்`` என வந்தது. பாக்கியம் - பேறு இவ்வாறன்றி `மகா வாக்கியம்` என்றே கொள்ளுதற்கு இங்கு ஏதும் இயைபில்லாமை அறிக.
இதனால், முன்மந்திரத்தில் குறிக்கப்பட்ட சிவானந்தம் வாய்க் குமாறும் `அதுவே பெரும்பேறாகிய ஆன்மலாம்` என்பதும் கூறப் பட்டன. இப்பேறு கிடைத்தற்குக் கூறப்பட்டவழி நின்மலாவத்தையே யாதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 24

அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவித்தாலும் அறியும் தன்மையில்லாத அபக்குவர்க்கும் குருவின் உபதேசம் ஏற்புடையதன்று; (பயன் இன்மையால்) முற்பிறவியிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தும் நிட்டை கூடாது விட்டமையால் கருவிலே திருஉடையவராய்ப் பிறந்து, ஞானத்தின் திருவுருவாயே நிட்டையை வேண்டி நிற்பவர்க்கும் குருஉபதேசம் வேண்டுவதன்று. எனவே அறிவித்தால் அறியும் பக்குவம் உடையவராய் அறிவிப்பாரை நாடிநிற்கும் அவர்கட்கே ஞான குரவர் உபதேசத்தைச் செய்வராக. பக்குவம் வாய்ப்பினும் தம்மையும், தலைவனையும் குருஉபதேசத்தாலன்றித் தாமாகவே அறிபவர் உலகில் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).

குறிப்புரை :

அறிவித்தால் அறியும் ஆற்றலும், `அறியவேண்டும்` என்னும் அவாவும் இல்லாதவர் `பிராகிருதர்` என்றும் முற்பிறப்பிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர். `சாமுசித்தர்` என்றும், பரிபக்குவம் வாய்ந்து, ஞானகுருவைத் தேடுகின்றவர் `வைநயிகர்` என்றும் சொல்லப்படுவர். இதனை, `பண்டை நல்தவத்தால் தோன்றி`l என்னும் சிவஞானசித்திச் செய்யுளின் உரையால் உணர்க. இவர்களையே இங்கு நாயனார் `அறிவற்றவர் அறிவுற்றவர், அறிவுற்று அறியாமை எய்தி நிற்பார்` என்றார். இம்மூன்று பெயர்களில் நடுவில் உள்ள ஒன்றில் உள்ள `அறிவு` என்பது மட்டும், `ஞானம்` என்றும், மற்றையிரண்டும் `அறியும் ஆற்றல்` என்றும் பொருள் தந்தன. ``அறியாமை`` என்பதில், `மை`. வினையெச்ச விகுதி. எனவே, `அறியாமல்` என்பது அதன்பொருள். அறியும் ஆற்றல் இருந்தும் அறியாமல் நின்றதற்குக் காரணம், அறிவிப்பார் இன்மை. இறுதியில், ``தம் அறிவு ஆர் அறிவார்`` என்றதும், `அறியும் ஆற்றலைப் பெற்றவர்க்கும் அறிவிப்பார் இன்றி அறிதல் இயலாது` என்பதை விளக்குதற்கேயாம். உம்மை இரண்டும் எதிரதுதழுவியும், இறந்தது தழுவியும் நின்றன. முன்னிரண்டடிகளில் பாடம் திரிவுபட்டுள்ளது. ``அறிவிக்க`` என்பது வியங்கோள் அதற்கு எழுவாய், ஆற்றலால் வந்து இயைந்தது.
இதனால், ஞான குரவராயினார்க்கு ஒரு கட்டளைபோல வைத்து பரிபக்குவம் இல்லார்க்கு ஞானாவத்தை நிகழாமையும், பரிபக்குவம் உடையார்க்கும் ஞானகுரு இன்றி அது நிகழாமையும் கூறப்பட்டன. ஞானம் ஞான குரு இன்றி நிகழாமை மேலே சில இடங்களில் கூறியிருக்கவும், இங்கும் அதனைக் கூறியது, `பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டு` என்பவாகலின் நின்மலாவத்தை கூறும் இவ்விடத்திலும் அதனை வலியுறுத்தற்பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 25

சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.

பொழிப்புரை :

சகலத்தில் சுத்தமாகிய மேலாலவத்தையும், (யோகாவத்தையும்) சகலத்திற் சகலமாகிய மத்தியாலவத்தையும், சகலத்தில் கேவலமாகிய கீழாலவத்தையும் ஆகிய இவைகளின் தொடர்புகள் சிறிதும் இல்லாது நீங்கிய நின்மல துரியத்தில் நிற்றலால் சுத்தான்மாக்களாய், சொல் நிகழ்ச்சி அத்துரியத்திற்கு முற்பட்ட, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி` என்னும் மூன்றோடே நீங்கப் பெற்றவர்கட்கு, சத்தாய் உள்ள சிவமும், அசத்தாய் உள்ள பாசங்களும், சதசத்தாய் உள்ள ஆன்மாவும் முறையே சித்தும், அசித்தும், சிதசித்தும் ஆதல் முற்ற அனுபவமாய் விளங்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. அசுத்தம் போலத் தொடர்பற்றதாகக் கூறினமையால், ``சுத்தம்`` என்றது சகலத்திற் சுத்தமேயாயிற்று. முப்பொருள்களின் இயல்பு சத்து, அசத்து, சதசத்து ஆதல் மட்டும் விளங்கல் நிரம்பாமையால், `அவை முறையே சித்தும், அசித்தும், சிதசித்துமாதல் விளங்கும்` என்றார். சிவஞான போதத்துள்ளும் `இருதிறன் அல்லது சத்தாம்` என்று ஒழியாது. ``சிவசித்தாம்`` என அருளியதையும் 8 அதன் உரையையும் நோக்குக.
`சத்து` என்பது, `உள்ளது` என்றும், `அசத்து` என்பது இல்லது` என்றும், `சதசத்து` என்பது, `சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்கும்` என்றும் பொருள் தரும். இன்றும் `உள்ளது` என்பது, `என்றும் ஒரு படித்தாய் உள்ளது` என்றே பொருள்தரும். அதனால் `அசத்து` என்பது `சிலகாலம் உள்ளதாய் இருந்து பின் இல்லதாகிவிடும்` என்றே பொருள் தரும். இம்முறையில் சத்தாய் உள்ளது சித்தாயும் இருக்கும்; அஃதாவது அறிவாய், ஒருஞான்றாமை அறியாமை உடையதாகாமல் இருக்கும். அசத்தாய் உள்ளது அசித்தாயும் இருக்கும். அஃதாவது எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் அறிவுடையதாகாது அறியாமையை உடையதாயே இருக்கும் `சடம்` என்பது இதுவே சதசத்தாய் உள்ளது சிதசித்தாயும் இருக்கும். அஃதாவது சித்தோடு கூடிச் சத்தாயும் அஃதாவது அறிவுடையதாயும் அசித்தோடு கூடி அசத்தாயும் அஃதாவது அறியாமையுடையதாயும் இருக்கும். `இவையெல்லாம் நூலறிவால் அறியப்பெறினும், அனுபவமாக விளங்குவது நின்மல துரியத்தில்` என்பது இம்மந்தரத்தில் கூறப்பட்டது ``கூடிநிற்கும்`` என்றது அனைத்தும் விளங்கும்` என்றபடி ஏகாரம் பிரிநிலை.
இதனால், `நின்மலாவத்தையில்தான் அனுபவ ஞானம் உண்டாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

பொழிப்புரை :

புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடைய னல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.

குறிப்புரை :

``தானே`` மூன்றில் இறுதியில் உள்ளதில் ஏகாரம் தேற்றம். ஏனைய பிரிநிலை. ஆன்மா நின்மலாவத்தையை அடைதல் பற்றியே கூறி வருதலாலும், முன் மந்திரத்திலும் ``சுத்தராய்ச் சொல்லற்றவர்கட்கே`` எனச் சீவர்களே குறிக்கப்பட்டமையாலும் அத்தொடர்ச்சி பற்றி இம்மந்திரத்திற்கு `ஆன்மா` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``தானே அறிவான் அறிவு`` என்பதன் ஈற்றில் `ஆன்` உருபு விரிக்க. ``ஆனால்`` என்பதில் ஆக்கம் அறியாததனை அறிதலை உணர்த்திற்று. ``நிற்க`` என்ற அனுவாதத்தால், `நிற்கும்` என்பது தானே பெறப்பட்து. ``சதசத்து`` என்றதில் அசத்தும் பெறப்பட்டமைாயல், ``இரண்டும்`` என்றதில் அசத்துத் தொகுதியும் ஒன்றாயிற்று. ``தங்கும்`` என்னும் `செய்யும்` என்முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ஆன்மா, வடமொழி வழக்குப் பற்றி ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்மந்திரத்தில், `ஆன்மாச் சிதசித்து` எனக்கூறிய வகையில், `சித்தாதல் இவ்வாற்றால்` என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.

பொழிப்புரை :

மாயாகாரியங்களாகிய கருவிகளின் உண்மையை உணர்ந்தவர்கட்கே மெய்ப்பொருளாகிய சிவத்தை உணரும் உணர்வு கிடைக்கும். அந்த உணர்வானே ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும். அதனை அடையவே, அந்தச் சிவஞானமே சிவபத்தி -யாய்ப் பரிணமிக்க, அந்தப் பத்தியால் சிவானந்தம் விளைவதாகும்.

குறிப்புரை :

``தத்துவம்`` நான்கில் முதலது உபசார வழக்கால் `தத்துவம்` எனப் பெயர்பெற்றது நிற்கும் மாயா கருவிகளைக் குறித்தது. ஏனையவை உண்மை வழக்கால் மெய்ப்பொருளைக் குறித்தன. ``தலைப்படல்`` இரண்டனுள் முதலது ஆன்மாவின் செயலாயும், இரண்டாவது ஞானத்தின் செயலாயும் நின்றன. தான் - ஆன்மா. அவன் - சீவன். ``ஆகவே`` என்ற அனுவாதத்தால், ஆதல் தானே பெறப்பட்டது. ஈற்றில் உள்ள தான், அசை.
இதனால், முன் மந்திரத்தில் `ஆன்மாத் தன்னை யுணர்தல் சிவஞானத்தால்` என்றமை பற்றி, அந்தச் சிவஞானம் கிடைக்குமாறும், அது கிடைப்பின் விளையும் பெரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தனது இயல்பை உள்ளவாறறிந்தால் தான் பாசத்துடன் நில்லாது சிவத்துடனே நிற்கும். அவ்வாறு நிற்கும் பொழுதுதான் மலங்களின் சேட்டை ஒழியும். பாசங்களின் சேட்டை ஒழிவே பிறப்பின் ஒழிவாகும். எவ்வாற்றானும் மீண்டும் பிறவி எய்தாத நிலையே முடிநிலைப் பரமுத்தியாகும். மற்றும் அதுவே நன்னெறியாகிய ஞானத்தால் அடையப்படும் பேரறிவுப் பொருளும் ஆகும். அது சின்முத்திரை வழியாகக் கிடைக்கும்.

குறிப்புரை :

சேட்டையை, `குணம்` என்றார். ``பின்`` என்பது, `மற்று` என்னும் பொருளில் வந்தது. `பின்னும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மையும், `அதுவே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயின. `பின்னும் அதுவே` என்பதை, ``சன்முத்தி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `நன்றது` என்பது எதுகை நோக்கி, `நன்னது` என வந்தது. `முத்திரையால் என உருபு விரிக்க. சின்முத்திரையைப் பெறுமாறு, வருகின்ற மந்திரத்தில் காண்க.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய தத்துவ ஞானத்தால் ஆன்ம சுத்தி உண்டாக, அதன்பின் நிகழும் ஆன்ம லாபமும் அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 29

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொழிப்புரை :

(சிவனுக்கு வடிவமாய் அமைவது. அவனது சத்தியே. அதனை, ``காயமோமாயை அன்று; காண்பது சத்தி தன்னால்l என்னும் சிவஞான சித்தியால் அறியலாம். `அரிதரு கண்ணியாணை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவார்``3 என அருளிச் செய்ததும் இதனையே. அவ்வாறு ஆகுமிடத்து.)
ஞானசத்தியே உடல். கிரியாசத்தியே உடலில் உள்ள பல உறுப்புக்கள். இச்சாசத்தியே `உயிர்களை உய்விக்கவேண்டும்` என்னும் கருணையாய் உள்ளிருந்து உந்துவதாய் மேற்கூறியவைகளை இயக்கும் உயிராகும். இவைகளையெல்லாம் கொண்டு அவன் செய்யும் தொழில்கள் ஐந்து. (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்). இங்ஙனம் ஆகலின் அவ்வைந்தொழிலில் இறுதிக்கண்ணதாகிய அருளலை தற்போதம் அற்றிருந்தவர்கள் மட்டுமே பெற்றார்கள் (`பிறரெல்லாம் ஏனை நான்கையே பெறுகின்றனர்` என்பதாம்).

குறிப்புரை :

இறைவனுக்கு `அருவம், அருவுருவம், உருவம்` என மூவகை வடிவங்கள் உள. அவற்றுள் அருவம் தவிர, ஏனைய இரண்டும் பற்றி இங்குக் கூறப்பட்டன. `உருவ வடிவத்தில் உடலும் உறுப்பும் நம்மனோரது உடலும், உறுப்பும்போலவே இருப்பினும் அவை அன்ன அல்ல; இங்குக் கூறிய சத்திகளே` என அறிவுறுத்தபடி அருவுருவ வடிவம் மந்திர வடிவம். அதனுள் சத்தியோசாத மந்திரம் உடலும், ஈசான மந்திரம் சென்னியும், தற்புருட மந்திரம் முகமும், அகோரமந்திரம் இருதயமும், வாமதேவமந்திரம் மறைவுறுப்பும் ஆக இவ்வாறு அமைகின்றன.
இறைவன் சனகாதி நால்வர்க்குத் தென்முகக் கடவுளாய்க் கல்லால மர நீழலில் இருந்து சின்முத்திரையாலே ஞானத்தை உணர்த்தியதைக் கருத்தில்கொண்டே,
``மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே``
என்றார். (`ஆகவே, அவரைப் போன்றாரும் அவ்வாறு ஞானத்தைப் பெறுதல் கூடும்` என்பது குறிப்பெச்சம்.)
அருவம் வடிவம், `இலயம்` என்றும், அருவுருவ வடிவம் `போகம்` என்றும், உருவம் வடிவம் `அதிகாரம்` என்றும் சொல்லப் படும் நிலைகளையுடையனவாம். இனி ஞானகுரவருடைய திருமேனியும் சிவோகம்பாவனை காரணமாகச் சத்தி வடிவம். அல்லது அருட்டிருமேனியாம் ஆகலின், அவரால் சின்முத்திரை வழியாகப் பலரும் பெறுதல் கூடும் என்க. சின்முத்திரையின் இயல்பை முத்திராலட்சணங்களில் காண்க.
இதனால், முன்மந்திரத்தில் கூறிய ஞான முத்திரையின் உண்மையும், அதனைப் பெறுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.

பொழிப்புரை :

[முன்மந்திரத்தில் சிவனுக்கு உள்ளனவாகக் கூறிய ஞான சத்தி இச்சா சத்தி கிரியா சத்திகள் உயிர்கட்கும் உள்ளன, அஃது எவ்வாறு பெறப்படுகின்றது எனின்,], `சடப்பொருள்கட்கு வேறாய் உயிர் உண்டு` என உணரவைப்பதே உயிரினது ஞான சத்திதான், (அஃதாவது, எங்கே அறிவு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் `உயிர் உள்ளது` என உணரப்படுகின்றது என்பதாம்). இனி, அந்த அறிவு `யான்` எனத் தன்னைப் பற்றியும், `எனதும்` எனப் பிற பொருளைப் பற்றியும் கொள்கின்ற பற்றும் இச்சாசத்தியின் செயலேயாகும், அந்தப் பற்றுக் காரணமாக உயிர் பலவான மாயா காரியப் பொருள்களைச் செயற்படுத்தி, அவற்றால் பயன் உறுவது கிரியா சத்தியின் செயற் பாடே. இவ்வாறு இவை நுட்பமாக ஓர்ந்துணரத்தக்கன. (அங்ஙனம் உணராமல், `உயிர்கட்கு இந்தச் சத்திகள் இல்லை` என்று கருதிவிடுதல் கூடாது). எனினும், உயிர்கட்கு அவற்றின் வினைப்பயன்களை ஊட்டுவிக்கின்ற சிவன் செயற்படுத்தவே இச்சத்திகள் செயற்படும். ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் அவைகளே தனி நின்று செய்யும் செயல்கள் ஆகாது, அவற்றுள் உயிர்க்கு உயிராய் நிறைந்து நிற்கும் சிவன் செயல்களே ஆகின்றன.

குறிப்புரை :

இவ்வாற்றால், `ஒன்றேனும் நம் செயல் அன்று; எல்லாம் சிவன் செயலே` என்று உணரப்பெறுவதே தம்மையுணர்ந்து, பின் தலைவனை உணர்தலாகும்.
``சீவனும் இச்சா ஞானக்
கிரியையால் சிவனை ஒப்பன்
ஆவன்என் றிடின் அனாதி
மலம்இவற் றினை மறைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத்
தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவியாம் புத்தி முத்திப்
பயன்கொளும் பண்பிற் றாமே``
-சுபக்கம் - சூ. 1 . 64.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளைக் காண்க. ``உயிர்க்கு அறிவு`` என்பதை, `உயிருக்கு உள்ள அறிவு` என விரிக்க. ``உயிர்க்குக் கிரியை`` என்பதும் அத்தகைத்து. உண்மையை உணர்த்துவதை ``உண்மை`` என உபசரித்தார்.
அபிமானம், `மானம்` எனப்பட்டது. `பற்று` என்பதே பொருள். உயர்தல், எண்மிகுதல். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். பின்னும் அஃது இருமடியாகுபெயராய், அவற்றைக் கொண்டு செய்யப்படும் செயல்களை உணர்த்திற்று. `ஊட்டுதல்` இரண்டில் முன்னது, `வலுப்படுத்துதல்` என்னும் பொருளது. பின்ன -தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``உள்ளத்துளான்`` என்பதன்பின், `செயல்` என்பதுசொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், மேல், ``தன்னை யறிந்து சிவனுடன் தானாக`` என்றது பற்றி, அங்ஙனம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.

பொழிப்புரை :

`கிரியை, இச்சை, ஞானம்` என்பன சிவனுக்கு என்றும் இயல்பாகவே விளங்கி நிற்கின்றன. `உயிர்கட்கோ` எனின், அவை அனாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுப் பின்பு சிவனால் கூட்டப் பெறுகின்ற சுத்தமாயை அசுத்த மாயைகளின் காரியங்களில் அவை சிறிதே விளங்குகின்றன. சிவன் இந்த மாயைகள், அவற்றின் காரியங்கள், ஆணவம் ஆகிய அனைத்தையும் கடந்து, நிலைத்து நிற்பதாகிய துரியாதீத நிலையில் இருக்கின்றான்.

குறிப்புரை :

`தொன்மை` என்பது விகுதி கெட்டுப் பகுதி மாத்திரமாய் நின்றது. தொன்மையானவற்றைத், ``தொன்மை`` என்றார். `சீவர்க்கு` என்னும் நான்கன் உருபுதொகுத்தலாயிற்று. கழிவற்ற - அழிவில்லாத; என்றும் உள்ளகாரணம், மாயைகள் காரியம் அவற்றினின்றும் தோன்றிய கருவிகள் சுத்த மாயை விஞ்ஞான கலருக்கே கருவியாய்ப் பயன்படும் என்க. இருள் போலுதலின் ஆணவத்தைப், `பாழ்` என்றார். சாந்த + அதீதம் = சாந்தாதீதம். சாந்தம் - அமைதி; என்றது துரிய நிலையை` பராவத்தையில் அதீதத்தை அடைந்தோர்க்கு மீட்சியில்லை ஆகையால் அதனை, `அழிவற்றது` என்றார்.
இதனால், சிவ சீவர்களது இச்சா ஞானக் கிரியைகளின் வேறுபாடு உணர்த்தப்பட்டது. இதனானே அவற்றை உடையவர்களது வேறுபாடும் தானே பெறப்படும். முன்மந்திர உரையிற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அஃது இனிது விளக்கப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 32

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.

பொழிப்புரை :

உணருமாற்றால் உணராதவர்களால், `இல்லை` என மறுத்துக் கூறப்படும் பொருளாய் உள்ளவனும், உணருமாற்றால் உணர்ந்தவர்களால், `உண்டு` என நிறுவப்படும் பொருளாய் உள்ளவனும், உலகின்கண், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகைப் பட்ட எல்லாப் பொருள்களிலும் ``அவையே தானாய்``க்* கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையைத் தான் எய்தாமையால் அவற்றின் வேறாய் உள்ளவனும் ஆகிய முதல்வனாம் சிவனை வாக்குக் குறிப்பிட முயலுமாயின் அதற்கு எட்டாத நெடுந்தொலைவில் உளன். இவ்வுண்மையை உயிர் எவ்வளவு விரைவாக அவ்வளவு விரைவில் அதன் உள்ளுயிராய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

``இல்லதும் உள்ளதுமாய்`` - என்பதை முதலிற் கொள்க. முதல் அடியில் சொல்லப்பட்ட இன்மை உண்மைகள் புலனாகாமை புலனாதல்களைக் குறித்து நின்றன. ``உண்மையுமாய், இன்மையுமாய்``8 என்று அருளிச்செய்ததும் இவ்விரு பொருளும் பற்றி என்க. `இல்லதும் உள்ளதும் ஆகிய யாவையும்` - என்க. ``ஆகியும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது சொல்லால் சொல்லுதலை, `சொல் சொல்லிடில்` எனக்கருவியே வினை முதல் போலக் கூறப்பட்டது. சொல், வாக்கு, அது நால்வகைத்தாதலை அறிக. வாக்குக்கள் சுத்த மாயாகாரியம் ஆதலின் அதற்கும் அப்பாற்பட்ட நிலையை `தூர அதிதூரம்`` என்றார். ``பாதாளம் ஏழினும் கீழ் சொள் கழிவு பாதமலர்``l ``சோதி மணிமுடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை``3 ``சொற்பதச் சொற்பதமும் கடந்துநின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை`` * என்னும் திருமொழிகளை உணர்க. அது, பகுதிப்பொருள் விகுதி. `உணர்தல், அவன் அருளால்` என்பது அறிக.
இதனால், முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் துரியா தீதனாயினும் எங்கும் நிறைந்து நிற்பவன் ஆதலின், அவனை உணரு மாற்றால் உணரின் உணரப்பட்டு நிற்பான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.

பொழிப்புரை :

சிவனது சத்தி (உயிர்கள் பக்குவம் எய்தாத பொழுது) அவற்றுக்கு உலகின்மேல் ஆசையை உண்டாக்குதலும், (பக்குவம் எய்திய பொழுது) அவற்றுக்கு அவ்வாசையைப் போக்குதலும் ஆகிய இரு செயல்களைச் செய்யும். (முன்னை நிலையில் திரோதான சத்தியாயும், பின்னை நிலையில் அருட் சத்தியாயும் அது நிற்கும். திரோதானசத்தி, `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும்) உயிருக்கும் உலக ஆசை நீங்கிய பொழுது அருட் சத்தி உயிரை அசத்தை விடுத்து சத்தினை நாடுதலில் விருப்பம் உண்டாக்கி, இவ்வாறு அதனுடன் என்றும் உடனாய் நிற்றலால்தான் உயிர் உலகப் பற்றினை ஒழித்து, மேலான வீட்டினைச் சேர்வதாகின்றது.

குறிப்புரை :

இம்மந்திரத்தில் பாடவேறுபாடு மிகுதியாய் உள்ளது. ``அருள்சத்தி``, வினைத்தொகை. மூன்றாம் அடியில் உள்ள ``உயிர்`` என்பதன்பின் நான்காம் உருபு விரிக்க.
இதனால், `பெத்த நிலையாகிய சகலாவத்தைகளும், முத்தி நிலையாகிய சுத்தாவத்தைகளும் சிவசத்தியாலே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

பொழிப்புரை :

`மலம்` எனப்படும் ஐந்தும் நீங்கப் பெற்றவர்களே சிவமாந்தன்மையைப் பெற்றார்கள். அவற்றுள் ஒன்று ஒன்று நீங்கப் பெற்றவர்களும், ஒருமலமேனும் நீங்கப் பெறாதவர்களும் நிலத்திற் பிறந்து, பின் சுவர்க்கத்திலும், நரகத்திலும், புகும் பகுதியினரேயாவர். ஆயினும், `இவ்விருவகை நிலைகளும் சிவனது கருணை காரணமாக அவனது சத்தியாலே நிகழ்வன` என்பதை அறிபவர் உலகத்தில் அரியர்.

குறிப்புரை :

ஒன்றிரண்டு மலங்கள் நீங்கப்பெறுதலாவது ஆணவம் தவிர ஏனைய மாயை கன்மங்கள் நீங்கப் பெறுதலாம். `அவர்கள் இயற்கையாயுள்ள பிரளயாகலர், விஞ்ஞானகலரா தன்மையர் ஆதலல்லது, சிவமாம் தன்மையைப் பெறாமையால், ஆணவ வலியால் மீண்டும் சகலர் நிலையை அடைதல் கூடும்` என்பதாம். ஆயினும் `இவ்இருவகையும் பக்குவ அபக்குவங்களை நோக்கிச் சிவனது அருட் சத்தியும், திரோதான சத்தியும் செய்யும் செயலேயாம்` என்பதும் `திரோதான சத்தியின் செயலும் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல்போலக் கருணை காரணமாக நிகழ்வதே` என்பதும் அறியத் தக்கன என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் சிவத்தினது ஞானத்தாலே என்பது தோன்ற அடைபுணர்க்கப்பட்டது. ஆகவே, `ஐம்மலம் தீர்ந்தவர் அந்த ஞானத்தைப் பெற்றுச் சிவம் ஆவர்` என்பதும், `ஐம்மலத் தீராதவர் அந்த ஞானத்தைப் பெறார் ஆகலின் சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆக மாட்டாது பிறப்பை எய்துவர்` என்பதும் போந்தவாறு அறிக. `பாரின்கண் பிறந்து` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `மலாவத்தை நீங்கப் பெறாதவர்க்குப் பிறப்பு அறாது` என்பதும், `மலாவத்தை நீங்கி நின்மலாவத்தையை எய்தினோரே பிறப்பற்றவர் ஆவர்` என்பதும் ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.

பொழிப்புரை :

ஏற்புடைய செயல்களை ஏற்குமாற்றால் செய்யும் இறைவனுடைய கருணை பரிக்கிரக சத்தியாகிய `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளின் ஆற்றலைக் கொண்டும், `மந்தம, தீவிரம்` என்னும் இருவகை அருட் சத்தியைக் கொண்டும், கன்மத்தின் வழியாக, `இன்பம், துன்பம்` என்னும் இரண்டை ஊட்டுகின்ற திரோ தான சத்தியைக் கொண்டும் அவ்வப்பொழுது ஏற்புடையவற்றைச் செய்யும்.

குறிப்புரை :

`எய்தினர்` என்பது பாடம் ஆகாமை அது பற்றி யெழுந்த உரைகளானேவிளங்கும். எய்தின - ஏற்புடையன. `எய்தின செய்யும்` என்பது, சொற்பொருட் பின்வருநிலை அணியாய்ப் பலமுறை வந்தது. ``செய்யும்`` நான்கில் ஈற்றில் உள்ளது எச்சம். ஏனையவை முற்று. இதனையும் முற்றாகக் கொள்ளின் இறையருள் எவ்வாற்றானும் ஏற்புடையனவே செய்யும்` என முடிக்க. இப் பொருட்டு ``இறையருள்`` என்பது மட்டுமே முதலிற் கூட்டத்தக்கது. அருள்காரணமாக இறைவன் செய்வனவற்றை அருளே செய்வன போலக் கூறினார். `பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து` என்றாற்போல. ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தான், அசைகள். ஞால சத்தி - ஞாலத்தை நடத்தும் சத்தி. ஞானசத்தி, ஞாலசத்தி இரண்டும் தாதான்மியமாய் உள்ள ஒரு சத்தியின் வகையேயாம். மந்ததரம் மந்தத்திலும், தீவிரதரம் தீவிதத்திலும் அடக்கி இரண்டாகக் கூறப்பட்டன.
இதனால், முன் மந்திரத்தில், ``ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே`` எனக் கூறியது இவ்வாற்றால் என விளக்கு முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொழிப்புரை :

ஆணவ மலத்தால் வளைக்கப்பட்ட கோணல் நீங்கி நேரான நிலையை அடைந்தோர் சிவமே ஆயினமையால், சுவர்க்கத்தை விரும்புதல், நரகத்திற்புகுதல், மாயை கன்மங்களின் குழாத்துள் இருத்தல், அவற்றால் பிறந்து இறந்தும், இறந்துபின் பிறந்து உழல்வதாகிய பயனில் செயல்களை உடையராதல் ஆகிய இவை அனைத்தையும் விட்டு நலம் பெற்றார்கள்.

குறிப்புரை :

`திருந்தனர்` என்பது எங்ஙனம் பாடம் ஆயிற்று என்பது தெரியவில்லை. ``திரு`` என்றது இன்பத்தை - இன்பம் இன்மை, துன்பம் உண்மையைக் குறித்தது. ``திருந்தினர்`` என்பவற்றோடெல்லாம், ``சிவமாய்`` என்பதனைக் கூட்டி, `விட்டார்` என முடிக்க. சொற்பொருட் பின்வரு நிலைஅணி. `திருந்தியது முன் மந்திரத்திற் கூறிய ஞான சத்தியால்` என்க.
இதனால், மேற்கூறிய இறையருட் செயலால் உயிர்கள் அடையும் முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன்அரு ளாமே.

பொழிப்புரை :

அவம் - பயன் இன்மை. பயனாவது நன்மையே, எனவே, ``அவம்`` என்றது, `நன்மை இன்மை` என்றபடி. அது தீமை உடையதாகவும் இருக்கலாம். சிவம் - நன்மை.
பகுத்தறிவில்லாதவர், `இஃது அவம், இது சிவம்` எனப்பகுத் துணர மாட்டார். (ஆகவே, `அவர் அவத்தைச் சிவமாக எண்ணி, அதனைப் பற்றிக்கொண்டு உழல்வர்` என்பதாம்). பகுத்தறி வுடையவர் அவற்றை நன்கு பகுத்துணர்வார். (ஆகவே `அவர் அவத்தை விடுத்துச் சிவத்தைப் பற்றி நன்மையடைவர்` என்பதாம்). பகுத்தறிவு திருவருளால் வாய்ப்பது. அங்ஙனம் வாய்க்கப்பெற்று, அவத்தினையும், சிவத்தினையும் உள்ளவாறு உணர்ந்தால், பகுத்தறிவு இல்லாத பொழுது, `உயிர் அவத்தில் உழன்றதும் சிவனது அருளால்தான் பின்பு அதனைவிடுத்துச் சிவத்தைப் பற்றியதும் சிவனது அருளால்தான் என்பது அனுபவமாய் விளங்கிவிடும்.

குறிப்புரை :

`அறிவு, அறிதல்` என்பன பகுத்தறிவையும் பகுத்தறிதலையுமே குறத்தமை, `அவமும், சிவமும்` என்றதனால் விளங்கும். `பகுத்தறிதற்கு அங்ஙனம் அறியும் அறிவு வாய்ப்பது திருவருளால்` என்றற்கு, ``அருளால்`` என்றே கூறிப் போயினா ராயினும், `அருளால் பெற்ற அறிவால்` என்பதே கருத்து. அவமும், சிவமும் அவன் அருளாதல் விளங்கும்பொழுது, `முன்னையது பக்குவம் இன்மையின் அது வருதற்பொருட்டு இயற்றப்பட்டது` என்பதும் விலங்கும் என்பது கருத்து. அவம், மலாவத்தைகளும், சிவம், நின்மலாவத்தைகளும் ஆகும்.
இதனால், `நின்மலாவத்தையே பயனுடையதாம்` என்பதும், `அது திருவருளால் நிகழும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 38

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.

பொழிப்புரை :

[`சிவன் அருள்` என்றும், `சிவனது சத்தி` என்றும் சொல்லப்படுவது ஒருபொருளேயாகும். அதனால்,] அருளாகிய சத்தி, தீ பொருளாய் இருக்க, சூடு அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றியிருத்தல்போல, சிவம் பொருளாய் இருக்க, தான் அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றி யிருக்கும். அங்ஙனம் இருக்கும்பொழுது அறிவாகியேயிருக்கும். (இது சத்தியின் `உண்மை` எனப்படும் சொரூபம்) அதுவே, `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும் மலங்களாயும் நின்று (உயிர்கள் சிவனை அறியாதபடி மறைக்கும். இந்நிலையில் அது, `திரோதனகரி, திரோதாயி` - என்னும் பெயர்களைப் பெறும். இஃது அதன், `பொது` எனப்படும் தடத்தம்) பின்பு அதுவே தனது உண்மையான அருளாகும்பொழுது, சிவன் உயிர்களுக்கு முன்போல மறைந்து நில்லாமல், இனிது விளங்கும் பொருளாய்த் திகழ்வான்.

குறிப்புரை :

``அருளது சத்தி யாகும் அரன்றனக்கு; அருளை யின்றித்
தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம்இன்றிச் சத்தியில்லை``l
``ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்``8
என்னும் சிவஞான சித்தியையும்,
``முயங்கி நின்று - (மலம்) பாகம் உற உதவு
திரோதாயி ஒன்று``
``நேராதல் மருவுங்கால், முன்
சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்திய சத்தி நிபாதம் திகழும் அன்றே``3
என்னும் சிவப்பிரகாசத்தினையும் காண்க.
`போதமாய்` என ஆக்கம் விரிக்க. ``இருள் ஒளியாய் ஈண்டும் மும்மலம்` என்றது, `இருளுக்கு ஒளிவந்து பொருந்துதலால், அதற்கு மேலும் கூடுகின்ற மும்மலங்களாய் நிற்கும்` என்றவாறு இருள் - ஆணவம். நான்காவது தொகுத்தலாயிற்று. `இருளுக்கு ஒளி` என்பதைப் ``பிணிக்கு மருந்து``3 என்றது போலக் கொள்க. `ஒளியாவது மாயை` என்பது வெளிப்படை. ஆய் - ஆதலால். ஆதல் - பின்பு வந்து சேர்தல். ஈண்டுதல் - திரளுதல். எனவே, அவை கன்மம் ஆயின. மலங்களை ஏவுதலால், சத்தியமே மலமாக எண்ணப்பட்டது. `திருவருள் ஆக` என்பது கடைக்குறைந்து நின்றது. `திருவருளால்` என்பது பாடமாயின், `அது திருவருள் ஆக, அதனால்` என உரைக்க. நந்தி - சிவன்.
`சத்தி புணரும்; முன் மந்திரத்தில் சுட்டப்பட்ட அருளின் நிலைமையெல்லாம் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

பொழிப்புரை :

`படைக்கும் சத்தி, காக்கும் சத்தி, அழிக்கும் சத்தி` என இவ்வாறு சத்திகள் வேறு வேறாகச் சொல்லப்படினும், உண்மையில், அவை அனைத்தும ஒரு சத்தியின் பேதங்களே. அஃது எவ்வாறெனி ல் பூக்கள் அனைத்தும் ஒரு நிலையையே அடையாமல் பல நிலைகளை அடைகின்றன. (சில அரும்பாகவும், சில போதுக ளாகவும், சில மலர்களாகவும்,சில வாட்லகளாகவும் ஆகின்றன) அந்த வேறுபட்ட நிலைகள் அனைத்திற்கும் ஏற்பச் சூரியனது கதிர்கள்` என்னும் வகையில் ஒன்றேயாவது போல்வதாம்.

குறிப்புரை :

சிவசத்தியின் வேறுபாடு `பிறவற்றை நோக்கிய வேறுபாடேயன்றித் தன்னிலே வேறுபட்ட வேறுபாடு அன்று` என்பதாம். ``அருட் பேதம்`` என்பதை முதலில் வைத்து, ``பேதித்துப் பேதியாவாறு`` என முடிக்க. ``தம்`` என்பதனை, ``செயல்`` என்பதனோடும் கூட்டுக. ``வினை`` என்பது, அது நிகழ்தற்கு ஏதுவாகிய பக்குவத்தைக் குறித்த ஆகுபெயர். ``பேதிப்ப`` என்பதில் உள்ள `பேதித்தல்` என்னும் செயலின் வினை, செயலையுடைய பதுமாதிகள் மேல் ஏற்றப்பட்டது. சேட்டித்தல் - செயற்படுத்தல். ``ஆதித்தன்`` இரண்டில் பின்னது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பேதித்துப் பேதியவாறு`` என்னும் பயனிலைக்கு. `அக்கதிர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.
`அருட் பேதம், ஆதித்தன் தோன்றப் பது மாதிகள் செயல் பேதித்து நிகழும்படி அவனது கதிர்கள் செயற்படுத்துமிடத்து அக்கதிர்கள் பேதித்தும் பேதியாவாறு` என வினை முடிவு செய்க.
இதனால், முன் மந்திரத்தில் சத்தி பலவாதல்போலக் கூறப் பட்டமை பற்றி, `சத்திகள் பலவோ` என எழும் ஐயம். `சத்தி செயல் பற்றிப் பலவாகச் சொல்லப்படுகின்றதேயன்றி, உண்மையில் பலவன்று. `ஒன்றே` எனஅபதை உவமையால் கூறித் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.

பொழிப்புரை :

`சிவனது அருள்` எனப்படும் சத்தி, உலகுயிர் களோடு பொருள் தன்மையால் வேறாய் நின்று அவற்றை அறிவித்தும், இயக்கியும் நிற்றல், அவ்வாறு நிற்பினும் தான் அவற்றின் வேறாய்த் தோன்றாது ஒன்றேயாய் நிற்றல் என்னும் இவ்வகைகளால் ஒரு வகையில் பேதமாயும், பிறிதொரு வகையில் அபேதமாயும் இருத்தலும், மலங்களை நீக்குதலால் உயிர்களின் அறிவை விளக்கு தலால் அறிவாயும், மலங்களைச் செலுத்துதலால் அவற்றின் அறிவை மறைத்து அறியாமையாயும் இவ்வகைகளால் ஒருவகையில் அறிவாயும், பிறிதொரு வகையில் அறியாமையாயும், நாதத்தை எழுப்புதலால் நாத மாயும், அதனை ஒடுக்குதலால் நாதம் இல்லதாயும் இவ் வகை களால் ஒரு வகையில் நாதமாயும், பிறிதொரு வகையில் நாதம் இல்ல தாயும் இவ்வாறெல்லாம் பேதப்பட்டு நிற்றல் அதன் இச்சையாலேயாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்துள் இரண்டாம் அடியில் பாடம் பெரிதும் திரிபு பட்டுள்ளது. மற்றும் திரிபுகள் உள. ``பேதா பேதம், போதா போதம், நாதாநாதம்`` என்பன அன்மொழித் தொகையாய், `இரண்டும் அல்லாத வேறொன்று` எனப்பொருளஅ தாராமல், உம்மைத் தொகையாய் இரண்டையும் குறித்துநின்றன. நாதம் - மொழி. ``அருள்`` இரண்டில் பின்னதை முதலிற்கூட்டி, ``அருளின்`` என்பதற்கு, `அதன்` எனப் பொருள் உரைக்க. அருளையுடைய சிவனது இச்சையை ஒற்றுமை பற்றி அருளது இச்சையேயாகவும், இச்சைப்படி நிகழ்வனவற்றை இச்சையாகவும் உபசரித்துக் கூறினார்.
இதனால், `சத்தியினது பேதங்கள் அது தானாகவே ஆக்கிக் கொள்வன அன்றிப் பிறிதொன்றால் ஆக்கப்படுவன அல்ல` என்பது கூறப்பட்டது. `சத்திதான் பலவோ என்னில், தான் ஒன்றே. அனேகமாக வைத்திடும், காரியத்தால்` என்பது சிவஞான சித்தி.l

பண் :

பாடல் எண் : 41

மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

பொழிப்புரை :

மனிதன் ஒருவன், யானைபோலப் பொய்யாகச் செய்யப்பட்ட பொறியினுட் புகுந்து மறைந்து கொண்டு, அதனை உயிருடையது போலப் பலவகையில் இயங்கச் செய்யும் செயல்போல, அருள் மாயையின் காரியமாய்ப் பரந்து விரிந்த உலகினுள் மறைந்து நின்று அதனைப் பலவகையாக இயங்கச்செய்து, அதனானே உயிரினது அறிவைப் படைத்தல் முதலிய தொழில்களால் பலவாறாக விளங்குவித்து, அவ் இயக்கத்துட்பட்டு அலமரச் செய்யும். `அருள்` எனப்படுவது சிவனது அருளே.

குறிப்புரை :

கரி - யானை. அதனை ஆட்டுதல் வினைக்கு வினை முதல் ஆற்றலால் பெறப்பட்டது. `பொய்யானையின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே எண்ணிச்சிறுபிள்ளைகள் பலவகை உணர்ச்சிகளை அடைதல்போல, உலகத்தின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே கருதி, அறிவில்லாதவர் பலவகை உணர்ச்சிகளை எய்துகின்றனர்` என்பது உவமையால் போந்த பொருள். அத்தகைய உணர்ச்சிகளைத் தோற்றுவித்தலையே, ``போதம், புரிந்து`` என்றார். ``அருள்`` என்பதை முதலிற்கூட்டுக. ``பூதம்`` என்பது உபலக் கணத்தால் `பூதம் முதலியவை` எனவும், `பூ` என்பது, மண் முதலியவை` எனவும் பொருள் தந்தன. `படைப்பாதியால்` என உருபு விரிக்க. ``இயல் கூட்டத்தால்`` என்றாரேனும், `கூடிய இயலால்` என்பது கருத்து. இயல் - இயலல்; இயங்குதல். முதனிலைத் தொழிற்பெயர். `அஃது அரன் அருளாமே` என, எழுவாய் வருவித்துரைக்க. இதனை எடுத்துக் கூறியது, `பிறகடவுளரது அருள்கள் அல்ல` என்பது உணர்த்தி, `அவர்களது செயல்களும் அரன் அருளே` என வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், `எல்லாம் திருவருட்செயலே` என்பது விளங்காமை அறியாமையால் என்பகு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.

பொழிப்புரை :

`தத்துவம் முப்பத்தாறினுள் ஒன்றேனும் தான் அல்லன்` எனத் தெளிந்து, அவைகளை, `தான்` என மயங்கும் மயக்கத்தினுள் நீங்கினவன் எவனோ அவனே, அவற்றிற்கு வேறாகி, மேலே உள்ள பரவெளியை அடைந்து வீடு பெற்றவனாவன் அந் நிலையில் முன்பு இருந்த மயக்கம் நீங்கித் தெளிவு பெற்று, எளிதில் அணுக இயலாத சிவத்தை அடைந்து அதுவேயாவன், அதுவே அவன் அடையவேண்டிய இறுதி நிலையாகும். அந்நிலையில் சிவனைப்போல இவனும் வியாபகமாய், ஏனை எல்லாப் பொருள்களும் தன்னில் வியாப்பியமாய் நிற்க விளங்குவான்.

குறிப்புரை :

``ஆகி எய்த`` என்றது, `ஆகி எய்துதற் பொருட்டு` என்றது ஆகலின், அஃது இறுதியில் வைத்து உரை கூறப்பட்டது ``வீடு`` என்றது, வீட்டின்பத்தை. தேறா - தேறி. மருள்தேறுதலாவது, மருளின்றும் நீங்கித் தெளிவையடைதல். பின்னும், ``தெளிவுற்று`` என்றது, `அத்தெளிவு நிலைபெறப் பெற்று` என்றபடி. தீண்டாச் சிவம் - பற்றுதற்கரிய சிவம்.
இதனால் மேல், `திருவருள் செய்வனவாகச் சொல்லப்பட்ட செயல்களில் இறுதியாக உயிர் பயனடைதல், இவ்வாறான நின்மலாவத்தையில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொழிப்புரை :

அடைதற்கரிய சிவபத்தியைப் பொதுவாகத்தான் அறிந்த முறையில் அடைந்து ஒழுகிய ஒருவன் பின்பு கிரியா குருவின் அருளால் சிறப்பாக அதனை அடைந்து, அவர் அறிவுறுத்த முறை யிலே சிவதன்மத்தில் ஒழுகிச் சிவயோகத்திலும் பயின்று, அதன் பயனாகப் பின்பு சிவஞானமாகிய யானையின்மீது ஏறிச் செலுத்தி, மும்மாயை களையும் தாண்டிச் சென்று, அப்பால் உள்ள சிவனோடு கூடுதலும் கூடும்.

குறிப்புரை :

``மீண்டு உற்று`` என்றதனால், முன்பு ஒரு முறை உற்றிருந்தமை பெறப்பட்டது. நூல்வழியாகவும், காட்சி வழியாகவும் அவரவர் தாம் தாம அறிந்தவாற்றால் சிவ பத்திகொண்டு சிவதன்மங் களில் ஒழுகுதலால் வரும் சிவபுண்ணியம், பொதுச் சிவபுண்ணியமும், குரு அருளால் அறிந்து அவற்றில் முறைப்படி ஒழுகுதலால் வரும் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியமும் ஆகும். பொதுச் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்தைத் தர உண்மைச் சிவ புண்ணியமே உண்மைச் சிவ ஞானத்தைத் தரும். உண்மைச் சிவ ஞானமே சிவமாம் தன்மையைப் பயக்கும். இம்முறையையே இம்மந்திரம் கூறுமாறு அறிக.
சரியை, கிரியை இரண்டும் `சிவ தன்மம்` என ஒன்றாகவும் சொல்லப்படும் என்பதை,
``நல்லசிவ தன்மத்தால், நல்லசிவ யோகத்தால்,
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்``*
என்னும் திருக்களிற்றுப்படியாரால் விளங்கும்.
`நேயத்தை அருளால் மீண்டு உற்றுச் சென்று ஏறித்தூண்டித் தாண்டிச் சாரலும் ஆம்` என வினைமுடிக்க. `மா` என்பது காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பொதுவான பெயர். `பாய்மா, பரிமா` என்பன குதிரையைக் குறிக்கும் சிறப்புப்பெயர். `அரிமா` என்பன சிங்கத்தைக் குறிக்கும் சிறப்புப் பெயர். `கைம்மா` என்பது யானையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். எனவே, இங்கு, `மா` என்னும் பொதுப்பெயர், இடம் நோக்கிக் கைம்மாவைக் குறித்தது. அது, ஞானம், எவ்விடத்திலும் யானையாக உருவகப்படுத்துதலே மரபாதலால் விளங்கும். உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால், `தவம், ஞானம்` என்னும் இரண்டுமே குரு வருளால் எய்தற்பானவாய், ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``சிவனுடன் சாரலும் ஆமே`` எனக்கூறிய சார்ச்சி, `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என நால்வகைப் படுதலால், அவ்வம்முறையால் சிவனைச் சார்ந்தவர் முறையே. `சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர்` என நிற்பர். எனினும் இறுதியில் சொல்லப்பட்ட சமாதியரே சிவானந்தத்தை அடைந்தவர். அவரே நிலையான அருள் தன்மையைப் பெற்றவரும் ஆவர்.

குறிப்புரை :

சாரணர் முதலிய மூவரும் சிவலோகத்தில் இருக்கும் நிலைபற்றி அப்பெயர்களால் கூறப்பட்டன. சாரணர் - எங்கும் சென்று உலாவி வருபவர். `ஒருவர் இல்லத்தில் பணி புரியும் பணியாளர் அவ் இல்லத்தில் எங்கும் செல்லும் உரிமையுடையர் ஆதல்போலச் சிவ லோகத்தில் எங்கும் செல்வபர்` என்றபடி. இதுவே `சாலோக பதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் சரியைத் தொண்டு, `தாச மார்க்கம்` அல்லது, `தொண்டர் நெறி` எனப் பட்டது. சித்தர் - சிறப்புப் பயன் கிடைக்கப் பெற்றவர். `சிவ லோகத்தில் சிவனுக்கு அணுக்கராய் இருக்கும் சிறப்புரிமை பெற்றவர்` என்றவாறு. இதுவே `சாமீபபதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகைத்தாதல் பற்றியே இதனைத் தரும் கிரியைத் தொண்டு, `சற்புத் திரமாரக்கம்` அல்லது `மகன்மை நெறி` எனப்பட்டது. சமாதியர் - சிவனுக்குச் சமமானவர். `சிவலோகத்தில் சிவனது உருவத்தைப் போன்ற உருவத்தையே பெற்றிருப்பவர்` என்றபடி. இதுவே `சாரூப பதவி` எனப் படுகின்றது. இப்பதிவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் யோகப் பயிற்சி, `சகமார்க்கம்` அல்லது `தோழமை நெறி` எனப்பட்டது. இவை மூன்றுமே பத முத்திகளாம். சாத்தியர் - சாத்தியத்தை, அஃதாவது தமது கிறிக்கோளை அடைந்துவிட்டவர். இவரை ``மெய்ஞ்ஞான தத்துவர்`` என எடுத்துக்கூறியதனால், `முன் சொல்லப்பட்ட மூவரும் மெய்ஞ்ஞானத்திற்குரிய படிகளில் நின்றவர்` என்பது பெறப்பட்டது. குறிக்கோள், சிவனோடு இரண்டறக் கலந்து, மீண்டுவாரா நிலைமையில் இருத்தல். அந்நிலையே ஆனந்த நிலையுமாம் ஆதலின், ஆனந்தத்தைப் பெறுதலும் குறிக்கோளாயிற்று. ``சத்த அருள்`` என்பது, `வெண்மைய ஆடை` என்பதுபோல வினைக் குறிப்பு பெயரெச்சத்தொடர் `தத்துவம்` என்பதபல பொருட்கட்கு உரியதாகச் சொல்லப்படுதலால், இங்குச் சொல்லப்படும் தத்துவம், `மெய்ஞ் ஞான தத்துவம்` என்றார். `மெய்ஞ் ஞானமாகிய தத்துவம்` என்றபடி. `முன் மந்திரத்திற் சொல்லிய சார்ச்சி வகையை உடையவர் நால்வகையினர்` என்றற்குச் ``சார்ந்தவர்`` என்பதை எழுவாயாக வைத்துக் கூறினார். சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இங்குக் கூறிய சமாதி, `அநாதிக்குச் சமமாக எண்ணப்படும் ஆதி` என்க.
இதனால், `சிவனைச் சாருமுறையும், அம்முறைகளால் அடையும் பயன்களும் நால்வகையினவாம்` என்பது உணர்த்தும் முகத்தால் `இறுதியிற் கூறிய பயன்நின்மலாவத்தையாலே உளதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொழிப்புரை :

(உண்மையுணர்ந்தோர்) `அறிபவனும், அறியப் படுபவனும் - என உள்பொருள் இரண்டு` எனக்கூறுவர் ஆயினும் அவ்விரண்டு பொருளும் எஞ்ஞான்றும் வேறுநில்லாது உடலும், உயிரும் போல ஒன்றாகியேயிருத்தலால், பாசமாகிய அசுத்தத்தின் நீங்கினோர், அறியப்படுபவனை யறிதலோடு அறிபவனையும் அறிதலாகிய இரண்டறிவையுடையராகாது, அறியப்படுபவனை மட்டுமே அறிதலாகிய அந்த ஓர் அறிவை மட்டுமே உடையவராய் இருப்பர் அவ்வாறிருத்லே நிறைவான சுத்த நிலையாகும்.

குறிப்புரை :

உடலும், உயிரும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விரண்டனுள் ஒன்றே உள்ளது; மற்றொன்று இல்லை` எனக் கூறுதல் அறியாமையுடையாரது கூற்றாதல்போல, அறிவானும், அறியப்படுபவனும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விருவருள் ஒருவனே உளன்; மற்றொருவன் இல்லை` என்றல் அறியாமை யுடையவரது கூற்றாய்விடும் - என்பது உணர்த்துதற்கு. ``தான் என்று, அவன் என்று தத்துவம் இரண்டு என்பர்`` எனவும், `ஆயினும், அறிபவனது அறிவை அறியப் படுபவனிடத்தே நிலைத்து நில்லாத -வாறு அகற்றி, `தான்` என்றும், இவ்வாறெல்லாம், `யான், எனது - பிறர், பிறரது` என மயங்கி உழலச் செய்வது மல சத்தியேயாகலின் அச்சத்தி முழுவதுமாக நீங்கப் பெற்றவர் அங்ஙனம் பலதலைப்படும் அறிவுடையராகாது, `அவனே` என அறியும் அந்த ஒருதலைப்பட்ட அறிவையே உடையராய் இருப்பர்` - என்பது உணர்த்துதற்கு ``கேவலத்து ஆனவர்தான் என்று இரண்டு உன்னார்`` எனவும், அவ்வாற்றால், அறிபவன் அறியப்படுபவனேயாய் நிற்றலே மலம் முழுவதுமாக நீங்கிய நிறைவான சுத்த நிலை - என்பது உணர்த்துதற்கு, ``தான் இன்றித் தான் ஆகத்தத்துவ சுத்தமே`` எனவும் கூறினார்.
ஈற்றடியில் உள்ள ``தான்`` இரண்டில் முன்னது அறி -பவனையும், பின்னது அறியப்படுபவனையும் குறித்தன. தன்மையை என்பது பாடம் அன்று ``கேவலம்`` என்றது. கலப்பின் நீங்கி நிற்றலைக் குறித்தது. ``தத்துவம்`` இரண்டில் முன்னது, `உள்ளது, என்றும், பின்னது `உண்மை` என்றும் பொருள் பயந்தன. ``சுத்தம்`` என்பதன் பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. ஏகாரம் தேற்றம். உண்மைச் சுத்தத்தை அதைற்குச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. அதனுள்ளும் சிவயோக நிலையே இங்கு வலியுறுத்தப்பட்டது. மெய்கண்ட தேவரும் இவ்வாறே,
``நான் அவன்என்(று) எண்ணினர்க்கும் நாடும் உளம் [உண்டாதல்,
தான்எனஒன்(று) இன்றியே, தான் அதுவாய் - நான்என ஒன்(று) இல்என்று தானே எனும்அவரைத் தன்அடிவைத்(து)
இல்என்று தான்ஆம் இறை`` l
என அருளினமை காண்க.
இதனால், நின்மலாவத்தையின்றிப் பராவத்தையை எய்துதல் கூடாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.

பொழிப்புரை :

(`என்னை உடையானாகிய தலைவன் எங்குளன்` எனப்புறத்தே பலவிடத்துத் ``தேடியும் தேடொணாத் தேவனாய்`` உள்ள சிவனை, `இனி என்னுள்ளேதான் நான்தேட வேண்டும்` என உணர்ந்து, அவ்வாறே) அவனைத் தன்னுள்ளே அறிய முயல்கின்ற பெருமகன் அம்முயற்சியில் உறைத்து நிற்பனாயின், அவனைத்தான் அடைந்துவிடுவான். அம்முறையில் அவன் தன்னுள்ளே தேட முயலாது, புறத்திற்றானே தேடிக் கொண்டிருப்பானாயின், அவன் சிவனைத் தன்னுள்ளேயும் அடைதற்கு அறியவனாகியேயிருப்பான்.

குறிப்புரை :

`சிவனைப் புறத்தே தேடாது தன்னுள்ளே தேடி அடைவதுதான் நின்மலாவத்தை` என்பது குறிப்பு.
``தேடிக் கண்டுகொண்டேன்;திர மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்``* என நாவரசர் அருளிச்செய்தமையை இங்கு உன்னி உணர்க. மற்றும் அவர் இத்திருமந்திரத்தை ``முன்னோர் மொழி பொருளேயன்றி, அவர்மொழியும் - பொன்னேபோல்போற்றும்`` வகையில் (நன்னூற் பாயிர உரைமேற்கோள்) தமது `சித்தத் தொகை`த் திருக்குறுந்தொகையில் எடுத்தருளிச் செய்தமையும் உணரற்பாற்று. இதனானே, உண்மைப் பாடங்களும் சில விளங்கும். யாப்புக்கேற்பன கொள்ளப்படும். எனவே முன்பு, ``தேடிக் கண்டுகொண்டேன்`` என்னும் திருப்பாடலும் இதனையே இனிது விளக்கியதாயிற்று. ``தன்னினில்`` என்பவற்றில் இன்னுருவோடு ஒத்த இல்லுருபு இன் சாரியை பெறுதல் சிறுபான்மை இலேசினால் கொள்ளப்படும்.l உம்மையை மாற்றிவைத்துரைக்க.
இதனால், நின்மலாவத்தையே சிவனை அடையும் வழியாதல் வயியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.

பொழிப்புரை :

மாணவகனே, குருவருள் பெறாத மற்றவர் -களைப்போல நீயும் இராக் கதிரிபோலச் சிறிதறிவைத் தருபவனாயும், பகற் கதிர்போலப் பேரறிவைத் தருபவனாயும் இருந்து எல்லா வற்றையும் செய்கின்ற சிவனைப் புறத்தெல்லாம் தேடி, `ஐயோ!` சிவனைக் காணமுடியவில்லையே` என்று கதறி அழாதே. ஏன் எனில், அவனை அகத்தே அறிதலாகிய அந்த நெறியைப் பற்றி, அதிலே சென்ற பொழுது அவன் எனக்குக் கிடைத்தான். அதன்பின் அவன் முன்போல இருசுடராய் இல்லாமல் பகற் கதிராகிய ஒரு சுடரேபோலத் தோன்றி, அந்நிலையினின்றும் மாற்றம் சிறிதும் இன்றி, என் உள்ளத்துள் நீங்காதிருக்கின்றான்.

குறிப்புரை :

`நீயும் அந்நெறியிலே சென்றால் தவறாமல் அவனை அடைவாய்` என்பது குறிப்பெச்சம். `அகத்தே அறியும் நெறியே நின்மலாவத்தை` என்பது மேலே குறிக்கப்பட்டது. ``வழியே`` என்றது, `பிறழாது பற்றி` என்றபடி. ``நேர்பட்ட பின்னை`` என்ற அனுவாதத்தால், நேர்பட்டமை தானே பெறப்பட்டது. உம்மை சிறப்பு. சிறிதறிவைத் தருதல் திரோதான சத்தியால், பேரறிவைத் தருதல் அருட்சத்தியால். இவையே பெத்த முத்தி நிலைகளாம். ரகாரவகையால் எதுகை ஒன்றிற்று.
இதனால், நின்மலாவத்தையை எய்தாது வருந்தும் மாணாக்கன் மேல் இரக்கங்கொண்டு, அதனை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.

பொழிப்புரை :

குடம், சால், சாடி முகலாகக்கலங்கள் பல வகையால் இருப்பினும் அவை அனைத்திலும் ஒருமண்ணே பொருந்தியிருத்தல் போலப் பிறப்பு வகையால் உயிர்களின் அறிவு பல்வேறு வகைப்பட்டிருப்பினும் ஒரு பேரறிவாகிய சிவன் அவை அனைத்தின் அறிவினுள்ளும் இருக்கின்றான், அங்ஙனமாயினும், கண் எல்லாப் பொருளையும் பார்க்க. பார்க்கப்பட்ட பொருள்கள் கண்ணைப் பாராததுபோல, அறிவுக்கறிவாய் உள்ள சிவன் அனைத்துயிர்களையும அறியினும் அவ்வுயிர்களுள் ஒன்றேனும் அவனை அறிதல் இல்லை.

குறிப்புரை :

இதனுள் முதலிற்போந்த உவமை, ஒருவனே பலவற்றில் இருக்கும் அளவிற்குக் கூறிய ஒருபுடை எடுத்துக்காட்டு உவமை. மற்றுக் காரிய காரணங்களைப் பற்றியதன்று. `பலவற்றை` என உருபு விரிக்க. `குடம் முதலியனை கண்ணைக் காணாமை மட்டும் அன்று; தம்மையும் மட்டும் அன்று; தம்மையும் தாம் அறிவதில்லை` என்பதனையும் பின்னர்க் கூறிய உவமையால் உடன்கொள்க.
``காட்டிய கண்ணே தனைக்காணா, கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான்; உள்ளத்திற் காண்``l
``காணொணா கர ணங்களுக்குயிர்
கண்டி டாமையின் இன்றெனின்,
காணுமோ கடம் கண்ட கண்ணினைக்
கண்டு நிற்பதும் கண்ணதே``8
எனவும் போந்த சாத்தர மொழிகளைக் காண்க.
``ஒருவனே`` என்பதன் பின் `அறிவாய் உளன்` என்பது வருவிக்க. உள்நின்ற - உலகத்துள் நின்ற யோனிகள். ஆகுபெயர். வண்ணம் - நிலைமை. நிலைமையனை `நிலைமை` என்றதும் ஆகுபெயர். ``அண்ணலும்`` என்னும் உம்மை, உவமையைத் தழுவிநின்ற எச்ச உம்மை.
இதனால், `மேற்கூறியவாறு ஒருவனே எல்லா உயிர்களின் அகத்திலும் நிற்றல் எங்ஙனம்` என்னும் ஐயம் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.

பொழிப்புரை :

ஏழுலகத்தில் உள்ள உயிர்களையும் சிவன் ஒப்ப நோக்கித்தான் அவற்றின் உள்நின்று காத்து வருகின்றான். (என்றாலும், சிலரே அதனை யுணர்ந்து, ஏனையவற்றைப் பற்றாது விடுத்து அவனிடத்திலே சென்று அடங்குகின்றனர். அங்ஙனம் அடங்கினவர்கள் சிவனது எண்குணங்களையும் தாங்களும் உடையவராவர். பலர் அவ்வாறு உணர்ந்து சிவனை அடைதல் இல்லை. அங்ஙனம் அடையாதவர்கள் உலகியலில் சிக்கித் துன்புறுகின்றனர். சிவனை அடைந்து அடங்காதவர்கள் சிவனது குணத்தைப் பெறுதலும் கூடுமோ! (கூடாது).

குறிப்புரை :

`சிவம்` எனப்பின்னர் வருதலால் `ஓம்புபவன் சிவன்` என்பதும் குணம் அவனுடையன என்பதும் போந்தன; ஓம்புதலை எடுத்துக் கூறினமையால், ஒப்ப நோக்குதல் பெறப்பட்டது. `ஓம்புபவன் ஒப்ப நோக்கினும் ஓம்பப்படும் உயிர்கள் பக்குவ பேதத்தால் பயன் பெறுதலில் வேறுபடுகின்றன, என்பதாம். ஆகவே, `அனைவரும் ஒருகாலத்திற்றானே நின்மலாவத்தை எய்தார்` என்பதாம் `சென்று` எனற்பாலதனை, `வந்து` என்றது இடவழுவமைதி `அக்குணம் கொள்ளலும் ஆமே` என்க. உம்மை சிறப்பு. ஏகார வினா, எதிர்மறை உணர்த்தி நின்றது. சிவனது எண்குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை* இவைமுறையே சுதந்திரத்துவம், விசுத்ததேகம், நிராமயானமா` சருவஞ்ஞத்துவம்,அநாதி முத்தத்தன்மை, அலுத்த சத்தி. அநந்த சத்தி, பூர்த்தி` என வடமொழியில் சொல்லப்படும்* அலுத்த சத்தி, `குறைவில்லாற்றல் உடைமை` என்றும் சொல்லப்படும். பூர்த்தி, `திருத்தி` என்றும் சொல்லப்படும். அநாதி முத்தத்தன்மை `அநாதி போதம்` என்றும் சொல்லப்படும். சிவனைச் சேர்ந்தார். ``என் குணத்துளோமே``l எனக்கூறுமாறு காண்க.
இதனால், அனைவரும் பக்குவபேதத்தால் ஒருங்கே நின்மலாவத்தையை எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.

பொழிப்புரை :

`குறிக்கொளத் தக்கது இது` என அறியாதவர்கள் அதனை அடைதல் எங்ஙனம் கூடும்? (கூடாது) அவர் உடம்பிற் கட்டுண்டு நிற்குங் காலம் பெரிதாகும். ஆகையால், நீவிர், `குறிக்கொள்ளத் தக்க பொருள் இது` என்பதை அறிந்து, பின்பு அதுவே யாகும்படி பொருந்தி நில்லுங்கள். நின்றால், உங்களுடைய அறிவு அறிவாய் இருக்கும். வீட்டின்பமும் சித்திக்கும்.

குறிப்புரை :

குறி - குறிக்கப்படும் பொருள். முதனிலைத் தொழிற் பெயர் ஆகபெயராய்ச் செயப்படுபொருளை உணர்த்திற்று. காணுதல், இங்கு, `அடைதல்` எனத்தன்காரியம் தோற்றி நின்றது. கூடல், அதற்குரிய காலத்தைக் குறித்த ஆகுபெயர். என் வினையெச்சப் பொருள் தந்தது. `வரிப்புனை பந்து`, என்பதிற்போல. ``ஆவகை``, வினைத்தொகை. அன்னம் - சோறு. அது, ``பாதகமே சோறு பற்றினவா`` என்பதிற்போல நின்றது உம்மை, சிறப்பு.
இதனால், `உயிர் குறிக்கொளத் தக்க பொருள் சிவமே யாதலின், அதனை நின்மலாவத்தையால் அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே.

பொழிப்புரை :

உயிர் உடம்பொடு கூடி நிற்கும் நிலையில் வருகின்ற இன்பத் துன்பங்களை நுகர்வது உடம்பா? உயிரா? இதனை எண்ணிப் பார்த்து உண்மையை உணரமாட்டாமல் திரோதான சத்தியால் வரும் மயக்கத்திலே இருந்து கொண்டு, `யான் உண்மையைநன்கறிவேன்` என்றுசொல்கின்ற மனிதன்தான் பிறந்ததாகிய `பிறப்பு` என்பதும், பின்பு இறக்கப்போவதாகிய `இறப்பு` என்பதையுமே `இன்ன` என அறியமாட்டான்.

குறிப்புரை :

`மற்ற உண்மைகளை எங்ஙனம் அறிவான்` என்பது இசையெச்சம். `இன்பம் உறுகின்றது ஏது? என மொழி மாற்றியுரைக்க. ``ஏது`` என்பது, `யாது` என்பதன் மரூஉ, சிறப்புப்பற்றி இன்பமே கூறப்பட்டதாயினும் துன்பமும் உடன்கொள்ளப்படும். `யான் சுகிக்கின்றேன்; துதிக்கின்றேன்` என உணரும்பொழுது யான்` எனப்படுவது உடம்பின் வேறாகிய உயிரே; அவ்வுயிரே தான் என உணரமாட்டாது, திரோதான சத்தியால் வரும் மயக்கத்தால் உடம்பையே தானாக மதிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் `பிறப்பு, இறப்பு` என்பவற்றின் உண்மையையே `இவை` என அறியமாட்டான் ஆதலின், அவன் தனது அறிவை `அறிவு` எனக் கூறுவன எல்லாம் போலியே என்பதாம். `பிறப்பு` என்பது உடம்பு தோன்றுதலும், `இறப்பு` என்பது உடம்பு அழிதலுமே. ஆவன அல்லது, உயிர் தோன்றுதலும், அழிதலும் அல்ல. ஆயினும் மயக்கத்தால் மக்கள் உயிர் தோன்றுவதும், அழிவதுமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பு. மயக்குதற்கு உரியவளாகக் கூறியதனால் ``வானோர் தலைவி`` திரோதான சத்தியாயினார் `திரோதான சத்தி உள்ள வரையில் மக்கள் மெய்யறிவைப் பெறமாட்டார்` என்பதனால், `அருட்சத்தி தோன்றினால் மெய்யறிவைப் பெறுவார்` என்பது பெறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் பெறப்படுகின்றது. `அருட்சத்தி` தோன்றியபொழுதே மெய்யறிவு தோன்ற, நின்மலாவத்தை நிகழும் என்றலின், இம்மந்திரம் இவ்வதிகாரத்திற்கு உரியதாயிற்று. இம்மந்திரத்துள் பன்மையொருமை முதலியன அறியாரால் பாடம் திரிக்கப்பட்டது. இது, வருகின்ற மந்திரத்தானும் விளங்கும்.
இதனால், `நின்மலாவத்தைக்குக் காரணம் மெய்யறிவு` என்பது உணர்த்தி முடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது

பண் :

பாடல் எண் : 1

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

பொழிப்புரை :

ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.

குறிப்புரை :

இங்கு, அறிபவனையே ``தான்`` என்றார், `ஆன்மா` என்னும் வழக்குப் பற்றி `அகம்` என்னும் தமிழ்ச் சொல்லாலும் குறிப்பது உண்டு. முதற்கண் தன்னை அறிதல் அனுமானத்தானும், பின்னர் அனுபவத்தானும் என்க. `தானே` என்றது, `பிறர் கெடுக்க வேண்டாது` என்றபடி. அறிவை அறிதல் - அறிவைப் பெறுதல். வழிபடுதல் சிவமாய தன்மை பற்றியாதலின், `சிவமாகி இருப்பன்` என்றபடி.
இதனால், `மெய்யறிவில் தன்னை அறிதல் முதற்படி` என்பது கூறப்பட்டது. ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார்`` எனவும், ``தம்மை உணரார் உணரார்`` எனவும் மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.l

பண் :

பாடல் எண் : 2

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.

பொழிப்புரை :

`எந்த உயிருக்கு மல பரிபாகம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே சிவபெருமான், வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்தலால், அருட்சத்தியாகிய தேவியும் அங்கே மகிழ்ச்சியோடு விரைவில் சென்று அப்பெருமானை வணங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `அவனது குறிப்பின்வழியே செயற்பட முற் படுவாள்` என்றபடி. சத்தி சத்திமான் வழிபட்டவள் ஆதலை இவ்வாறு விளக்கினார். சிவன் அங்கே என்றும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றிப் புதியனாகச்சென்று இருந்தது போலக் கூறினார். ``அங்கே`` எனப் பொதுப்படக் கூறியது. மெய்ந்நூல் வழக்கு. சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள் என்பது தோன்றுதற்கு, சலேல், ஒலிக் குறிப்பு. இஃது, ஓடி வருதலைக் குறிப்பால் உணர்த்திற்று. `சலேல் எனப் புகுந்து` என ஒருசொல் வருவிக்க. கூந்தலுக்குப் பொங்குதல் கற்றையாய் அடர்தல். `பொங்குதல் நிறைந்த குழலை உடையவள்` என்க. சத்தியை வேறெடுத்துக் கூறியது, `சத்தி நிபாதம் உளதாகும்` என்பது உணர்த்தற் பொருட்டு. ஆகவே, `மலம் பரிபாகம் உற` அதனால் சத்தி நிபாதம் உண்டாகி, அறிவு உதயம் உளதாம்` என்றதாயிற்று.
இதனால், அறிவுதயம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.

பொழிப்புரை :

மேற்3 கூறியவாறு, ``வானோர் தலைவி`` தந்த மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கியிருந்த என்னை, நந்திபெருமான் தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பன்று; அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அன்று` என உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

`நந்தி பெருமான் எனக்குச் சொல்லியதைத் தான் நான் உனக்குச் சொல்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். முன்மந்திரத்தில், ``சிங்காதனத்தே சிவன் இருந்தான்`` என்றும்; ``பொங்கார் குழலியும் போற்றியென்றாள்`` என்றும் கூறிப் பின், ``அருள் செய்தான் நந்தி`` என்றும், பின் ``அருளால் அறிந்தேன்`` என்றும் கூறியதனால், மலபரிபாகத்தால் சத்தி நிபாதமும், சத்தி நிபாதத்தால் குருவருளும், குருவருளால் அறிவுதயமும் உளவாதலைக் குறிப்பான் உணர்த் தினமை காண்க. அறிவுதயம், `ஞானோதயம்` என்றும் சொல்லப்படும். அருள்காரணமாக அருளிச் செய்த அறிவுரை ``அருளால்`` என்று உபசரிக்கப்பட்டது.
இதனால், அறிவுதயம் குருவருளாலே உளதாதல் கூறப்பட்டது.
[ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
மாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவே சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.]

பண் :

பாடல் எண் : 4

அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
அறைகின் றனமரை ஈறுகள் தாமே.

பொழிப்புரை :

தோற்றமும், கேடும் சடத்துக்கன்றிச் சித்துக்கில்லை. சித்துக்குப் பற்றுக்கோடு சித்தேயன்றிச் சடம் அன்று. அவ்வாறே சித்தை யறிவதும் சித்தன்றிச் சடம் அன்று. இவ்வாறு, `வேத முடிபுகள்` எனப்படுகின்ற உபநிடதங்கள் யாவும் கூறுகின்றன.

குறிப்புரை :

இந்த முறைமையால், `பிறப்பதும், இறப்பதும் உயிரன்று; உடம்பே உயிருக்கு உடம்பு பற்றுக்கோடன்று, சிவமே பற்றுக்கோடு - இனிச் சிவத்தை அறிவதும் உயிரேயன்றி, உடம்பன்று` என்பவற்றை உணர்த்தி, `உதயமான அறிவைக் கொண்டு இவற்றை யெல்லாம் இவ்வாறு அறிதல் வேண்டு` என்பது உணர்த்தியவாறு. `இட்டு`, அசை நிலை.
இதனால், `மெய்யறிவாவது இது` என்பது கூறப்பட்டது. (இம் மந்திரத்தின் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``ஆயு மலரின்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து முதல் அதிகாரத்து இறுதியில் சொல்லப்பட்டது.)

பண் :

பாடல் எண் : 5

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.

பொழிப்புரை :

`உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற சிவனை யான் `சிவன்` என்று அறிந்துகொண்டு போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து, `அப்பா` நீ மிகப் பெரியை` என்று கூறினான்.

குறிப்புரை :

மன்னுதல், இங்குப் பலராதல் எனவே, அவர் உலக மக்கள் ஆயினர். மாயம், `சூழ்ச்சி` என்னும் பொருட்டு, `மாயத்தின் கண்` என உருபு விரித்து. `சில முன்னி நின்றானை` என ஒருசொல் வருவித்து முடிக்க. `அருள் மாயம்` வினைத்தொகை. போற்றுதல், ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருள்``* வந்தான் என்றும், ``பிறவா முதல்வன் பிறந்து``* வந்தான் என்றும் இன்னோரன்னவாகச் சொல்லித் துதித்தல். ``பொன்`` என்று, `நிதி போல வந்து` என்றது. `இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாற்போல வந்து` என்றதாம். ``வந்து`` என்பதை `வா` எனத் திரித்துக்கொள்க. ஆனோர் - நாட்டோர்; உண்மையறிந்து வந்து மாணாக்கர் ஆயினோர். நட்டோரை `ஆனவர்` எனவும், பகைவரை `ஆகாதவர்` எனவும் கூறுதல் உலக வழக்கு. ``அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்``8 எனக் கூறிய செயற்கரிய செயலைச் செயதமை பற்றி, `நீ ஏனையோரினும் வேறாய பெரியை` எனப் பாராட்டினார் என்பதாம். `குரு ஏனை மக்கள் போலவேயிருப்பினும் அவரை, மக்களுள் ஒருவராக அறியாது, தம்மை ஆட்கொள்ள வந்த சிவனாகவே அறிதல், பக்குவிகட்கன்றி, அபக்குவி -கட்கு இயலாது` என்பதை உமாபதி தேவர்.
``அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள் ஆர் அறிவார் புவி``
என்றும்,
``பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணா புவி`` l
என்றும் கூறினார். இதனால், `நாயனார் தம் குருவாகிய நந்தி பெருமானை நந்தி கணத் தலைவராக மட்டும் காணாது, சிவ பெருமானாகவே `கண்டிருந்தார்` என்பதும், `அது பற்றி இவரது சிறப்பை உணர்ந்து, அவரும் இவரைச் சிறப்பாகப்பாராட்டினார்` என்பதும் விளங்கும்.
இதனால், `அறிவை உதிப்பித்த குரு சிவமேயாவர்` என்பது உணர்த்தும் முகத்தால், `உண்மையறிவு சிவனால் அல்லது, பிறர் ஒருவராலும் தரப்படாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

மெய்யறிவு வேண்டுவீர், உமது வேட்கை நிரம்ப வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப் பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன். (``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``) இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின், அதனைச் சிவனும் அறிந்து, பயன் தருவான். அதனால் அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றி, இடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து வாய்க்கும்.

குறிப்புரை :

``அறிவு அறிவாக`` என வந்த நான்கிற்கும், `அறிவு மெய்யான அறிவாக` என்பதே பொருள். சொற்பொருட் பின்வரு நிலையணி. நந்தி சிவன். அது, ``அறிந்து`` என்பதனோடும் இயையும். ``நந்தியை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. ``அறியும்`` என்பதற்கும் வினைமுதல் ``நந்தி`` என்பதே அவ்விடத்து அறிதல், பயன் தருதலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. இரண்டாம் அடியில் `ஆக` என்பது `ஆனபின்` என்னும் பொருளதாயும், மூன்றாம் அடியில், ``ஆக`` என்பது, ``ஆதலால்`` எனக் காரணப் பொருட்டாயும் நின்றன. ``அணிமாதி சித்திக்கு`` `ஆம்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், `மெய்ப்பொருளை அறியும் அறிவே மெய்யறிவு. எனப் பொதுவாகச் சொல்லப்படினும், சிவனை மெய்ப்பொருளாக அறியும் அறிவே உண்மை மெய்யறிவாம்` என்பது கூறப்பட்டது. ``பொருள் அல்லவற்றை பொருள் என்று உணர்தலை, மருள்`` 3 3திருக்குறள் - 351. என்றார் திருவள்ளுவர்.

பண் :

பாடல் எண் : 7

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே.

பொழிப்புரை :

உலகினர், `எமக்கு அறிவு வேண்டும், அறிவு வேண்டும்` என்று கூப்பாடு போடுகின்றனர். `ஆயினும், அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார், அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற அந்த அறியாமை நீங்கி, அறிவு அறிவாகுமானால், முன்பு `அறிவு` என்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுகு வெளிப்பட நகைப்பு உண்டாகும்.

குறிப்புரை :

`தன்னை உடையார் ஒருவருக்கும் தான் காணப் படாது, அறிவுபோலவே தோன்றுதலும், தான் நீங்கிய பின் விளங்கி நிற்கும் அறிவைக் கொண்டே தான் அனுமித்துணரப்படுதலுமே அறியாமையின் இயல்பு` என்பது உணர்த்தியவாறு. ``அறிதோறறி யாமை கண்டற்றால்`` என்னும் திருக்குறளை8 நோக்குக.
``சுடரால் இருள்தேடச் சொல்லார்கள் எந்தாய்!
சுடரால் இருள்தேடச் சொன்னாய்`` *
என்றதும் இஃதே பற்றி. ``அறிவுபோல் அடரந்தெழும் அறியாமையின் வலியால்``* எனச் சிவஞான யோகிகளும் கூறினார். இத் தன்மையதான அறியாமையைச் செய்வது ஆணவ மலமே. அது பற்றி உமாபதிதேவர்.
``ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``
எனவும்,
``பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``*
எனவும் கூறினார்.
அழகிதல்லாததை, `அழகிது` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``அழகியவாறே`` என்பதன்பின் `தோன்றும்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், முன்மந்திரத்தில் கூறியபடி, `அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்ய அறிவு உதயம் ஆவதற்குத் தடையாய் உள்ளது, பெரும்பான்மையோரால் நம்ப இயலாத ஆணவ மலம்` என்பது உணர்த்தும் முகத்தால், `அது பரிபாகம் ஆதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.

பொழிப்புரை :

அறிவு அறியாமையாய் இருந்த நிலையினின்றும் நீங்கி, அறிவேயாய் நிற்கப் பெற்றவனே, புற இந்திரியம் முதலிய கருவிகளில் அவையேதானாய் ஒன்றி, அவற்றின் அளவாய் நின்ற ஏகதேச நிலை நீங்கி, எங்கும் தானாம் வியாபக நிலையைப் பெறுவான். அந்நிலையைப் பெற்றபொழுதுதான். சடமேயாயினும் சித்துப் போலத்தோன்றிய கரணங்களில் அறிவாய் உள்ளவனும், அவற்றால் சீவனாய் இருந்தவனும் தானே ஆதல் அவனுக்கு விளங்கும்.

குறிப்புரை :

நீவுதல் - துடைத்தல். அறிவின் வினையை அதனை உடையான்மேல் ஏற்றி, `நீவியவன்` என்றார். ``பொறி`` என்றது உபலக்கணம். ``எங்கும் தானானபோது`` என்ற அனுவாதத்தால், எங்கும் தானானமை தானே பெறப்பட்டது. `அறிவாய` என்னும் அஃறிணைப் பன்மைப்பெயர், சாரியையும் உருபும் பெற்று, `அறிவாயவற்றினுள்` என வந்தது. `அறிவாய` என்றது, `அறிவுடையனபோலத் தோன்றியன` என்னும் பொருட்டு. செறிவு - மிகுதி. உம்மையை ``நின்றவன்`` என்பத -னோடும் கூட்டுக. ``ஆம்`` என்றது, `ஆதல் விளங்கும்` என்றவாறு.
இதனால், அறியாமை நீக்கத்தின் இன்றியமையாமை அதன் பயன் கூறும் முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து)
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து)
அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.

பொழிப்புரை :

மெய்யறிவை அடைந்தோரது உள்ளங்கள் அனைத்துலகங்களையும் உட்கொள்ளவல்லன; செய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப் பழுத்தன. அதனால், முதற்கடவுளாகிய சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்து, அவற்றின் கண் நீங்காமலும் நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஆவது`` இரண்டும் துவ்வீறுபெற்ற தொழிற் பெயர்கள். அவை ஆகுபெயராய், அவற்றையுடைய உள்ளங்களைக் குறித்தன. `நெஞ்சொடு` என்பதன்பின் `ஒன்றாகி` என்பது வருவிக்க. ``நெஞ்சு`` என்பது பொதுப்பட அந்தக் கரணங்களைக் குறித்தன. அதனானே இனம் பற்றிப் புறக் கரணங்களும் கொள்ளப்படும். ஈற்றில் `அறிவுடையார் நெஞ்சம்` என்றது, `அது` (அதன்கண்) என்றும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், மெய்யறிவு பெற்றோரது கரணங்கள் நம்மனோரது கரணம்போலப் பசுகரணமாகாது, பதிகரணமாதல் கூறப்பட்டது.
``பாலை நெய்தல் பாடியதும், பாம்பொழியப் பாடியதும் காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்``
-திருக்களிற்றுப்படியார் - 2.
என்னும் சாத்திர மொழியை இங்கு ஒப்பு நோக்கி யுணர்க.

பண் :

பாடல் எண் : 10

மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

பொழிப்புரை :

உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின் அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை முத்தொழிலில் அகப்படுத்தி, அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில் அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும் இனிப்பவன் ஆகின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. உலகத்தை ``நன்னாடு`` என்றார். ``காய நன்னாடு`` உம்மைத் தொகை. கரு - முதற் காரணம். முதல் - முதல்வன் தலைவன். சேயவன் - சேயவனாய் நின்றவன்` என இறந்த காலத்து வந்தது. ``ஆய்`` என்பது ``அணியன்`` என்பதனோடும் இயையும். ``கரும்பாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக்கிடந்தன.
இதனால், முன் மந்திரத்தில், ``அறிவுடையார் நெஞ்சத்து ஆகி நின்றான்`` எனக் கூறியதன் மேல், `அவன் அங்ஙனம் ஆகி நின்று செய்வது இது` என்பது கூறப்பட்டது. இஃது இனிது விளங்குதற் பொருட்டு இதன் மறுதலை நிலையையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 11

என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.

பொழிப்புரை :

இவ்வளவு காலமும் யான் என்னையறியாமல், என்னின் வேறாகிய பொருள்களையே யானாக எண்ணியிருந்தேன். (அதனால் அவற்றில் அழுந்தி, அவையேயாய் இருந்தேன்.) நந்தி பெருமானது அருளால் என்னை யான் அவற்றின் வேறான பொருளாக அறிந்தபின் அந்தநிலை சிறிதும் இல்லை. மேலும் யான் யானாகிய நிலையை நழுவ விடாமல் உறுதியாகப்பற்றி, என்னையே ஏதுவாகப் பற்றி, எனது இயல்பை யான் நன்கு ஆராய்ந்து வருகின்றேன்.

குறிப்புரை :

மாணாக்கன் நிலைமை இதுவாய் இருத்தல் பற்றி நாயனார் தமது நிலையையும் அதுவாகக் கூறினார். அவன் அந்நிலையினின்று தாழாமல் நிலைத்து, மேல் ஏறுதற்பொருட்டு. `நந்திபெருமான் அருளால்` என்பது, மேலெல்லாம் நாயனார் கூறிவந்தவாற்றால் கொள்ளக் கிடந்தது.
இதனால், `குருவருளால் அறிவு உதயமானபின் அதனை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

பொழிப்புரை :

நம் கையில் உள்ளது உடம்பாகிய ஒரு விளக்கு, அது நிலையற்றது; சிறிதுபோதுநின்று மறைந்து விடும் என்பது நம் போன்றவர்களை விட்டு அது மறைந்தமையால் அறிந்தேன். மேலும் இது முடைநாற்றம் வீசுவதாயும், பசி, நோய் முதலியவற்றால் வருத்துவதாயும் உள்ளது. இனித் திருவருளாகிய மற்றொரு விளக்கு மிகச் சேய்மையில் உள்ளதாகப் பெரியோர்கள் சொல்வதால் அறிகின்றேன். அந்த விளக்கு எப்பொழுதுமே நம்மை விட்டு நீங்காமல் ஒளிவீசிக் கொண்டே யிருக்குமாம். மேலும் அது தூய்மையானதாயும், தனி ஓர் இன்பத்தைத் தருவதாயும் இருக்குமாம். அதனை அடையத்தான் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரம்போலவே மாணாக்கனது நிலை நோக்கிக் கூறியதாம். `நீயும் இந்த விளக்கைவிட்டு, அந்த விளக்கைத் தேடி அடை` என்பது குறிப்பெச்சம். ``காய விளக்கது`` என்பதை முதலில் கூட்டுக. இதில் உள்ள `அது`, பகுதிப்பொருள் விகுதி. மாயம் - நிலையாமை. உடம்பு மாயையின் காரியம் ஆதலாலும், ஆணவம் இருள்போல்வதாக, மாயை விளக்குப் போல்வது ஆதலாலும் ``காய விளக்கு`` என்றும், திருவருள் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்து வருதலின் அதனையும் ``விளக்கு`` என்றும் கூறினார். தூய்மையையும், கனற்றுதலையும் கூறவே அவற்றின் மறுதலைகள் பெறப்பட்டன. கனற்றுதல் - வெதுப்புதல்; துன்பந் தருதல்.
இதனால், `உதயமான அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், என்பது கூறப்பட்டது. `திருவருளே ஞானக்கண்` - என்க.

பண் :

பாடல் எண் : 13

தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

பொழிப்புரை :

`நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும் உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன். அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.

குறிப்புரை :

`இனி அதனை அனுபவமாகப் பெறுவேன்` என்பதாம். ஆகவே, நீயும் நாடியும், தேடியும், பாடியும் நின்றால், அதனை அனுபவமாகப் பெறுவாய்` என்பது குறிப்பு. இறந்த காலத்தில் நிகழ்ந்த -வற்றை மாணவன் பொருட்டு நிகழ்காலத்தில் நிகழ்வதாகக் கூறினார்.

`நலமே உடையான் அடியே பரம் துணையாம் என நாடுகின்றேன்; திசை எட்டோ டிரண்டிலும் தேடுகின்றேன்; பாடுகின்றேன்; குறையா மனத்தாலே கூடுகின்றேன்` எனக் கூட்டி முடிக்க. சிவனது அருளை, `அவன் அடி` என்றல் மரபு. இதனால், `அறிவு உதயமாகி, ஆன்மரூபத்தாலும், ஆன்ம தரிசனத்தாலும் தத்துவ தரிசனம் தத்துவ சுத்திகளைச் செய்தபின் சிவதரிசனத்தைப் பெற முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே.

பொழிப்புரை :

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்8 உள்ள முதல்வனாகிய சிவபெருமானது விளை -யாடலால் முதற்கண் இயல்பாய் உள்ள ஒரு மலமாகிய ஆணவமும், அது பற்றிப் பின் வந்து பெருகிய மலங்களாகிய மாயை கன்மங்களும் அவை வந்தவழியே ஒருவன் போகச் செய்து, அநாதியே அடியவ னாகிய தன்னையும், தனக்கு அநாதியே தலைவனாய் உள்ள அப்பெருமானையும் உணர்ந்து, பாசங்களை விட்டு அவனது திருவடியை அடைந்து அவனே ஆயினால், பின்பு அவனுக்குப் பிறவிகள் வாரா.

குறிப்புரை :

`ஆடல்`, `ஆட்டம்` என வருதல் போல, `விளையாடல்` என்பது `விளையாட்டம்` என வந்து, அத்துச் சாரியை பெற்றது. `விளையாட்டத்தில்` என ஏழாவது விரிக்க. ஐந்தொழில் இறைவனுக்கு விளையாட்டுப் போல்வதாதல் பற்றி அவற்றை அவனது விளையாட்டம்` என்றார். `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``மலம்`` என்பது ``ஓர்`` என்பதனோடும் சென்று இயைந்தது. `பெருகு` என்பது கடைக்குறைந்து நின்றது. மாயையும், கன்மமும் முறையே விரிதலும், தொடர்தலும் உடைமைபற்றி, ``பெருகு மலம்`` எனப்பட்டன. மலங்கள் வந்தவாறு, உயிர்களின் அபக்குவம். `அது நீங்கினால், அது வழியாக வந்த மலங்களும் நீங்கும்` என்பார், ``வந்தவா பேர்த்திட்டு`` என்றார். `ஆறு` என்பது கடைக் குறைந்து நின்றது ``பண்டை`` என்பது, ``தன்னை`` என்பதனோடும் இயையும் `தலைவனாவான் சிவனே`` என்றற்கு, ``சிவமாக`` என்றாரேனும், `அவனாக` என்றலே கருத்து.
இதனால், அறிவு உதயத்தின் பயன்கள் முறையானே தொகுத்துணர்த்தப்பட்டன

பண் :

பாடல் எண் : 1

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

அந்தங்கள், அவையாவன சமயநூல்களின் முடிவுகள் ஆறு. அவை, `வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்` - என்பன.

குறிப்புரை :

`இவை இன்ன` என்பதனை நாயனார் பின்னர் அருளிச் செய்வார்.
இதனால் ஞானம் பற்றிச் சமய நூல்கள் கொண்டுள்ள முடிவுகள் ஆறு வகையில் அடங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
அந்தமொ டாதி அறியஒண் ணாதே.

பொழிப்புரை :

(ஒரு பொருளை உடன்பாட்டினும், எதிர் மறையினும் ஆய்ந்து உணர்பவரே உண்மை உணர்பவர் ஆதலால்), மேற்கூறிய ஆறு அந்தங்களையும் அறிந்தவரே அறிவர் ஆவர். அவற்றை அறியாதவர் அறிவர் ஆகார்.

குறிப்புரை :

அதி சுத்தர் - மிகத் தூயர்; மலம் முழுதும் நீங்கப் பெற்றவர். அந்தம் ஆதிகள், ஞானத்தின் முடிவும், முதலும். செய்யுள் பற்றி அந்தம் முன் வந்தது. ``அறிய`` என்னும் செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது.
இதனால், ஆறந்தங்களை உணர்தலின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.

பொழிப்புரை :

பிறிதொரு நூலால் அன்றித் தன்னாலேதான் பிரமாண மாகின்ற வேதத்தின் முடிவுதான் எக்காலத்தும் சிவாகமங் களின் முடிவு. அவ்விரண்டிலும் கூறப்படுவது, நின்மலாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளுள் சிவனின் நீங்கி நில்லாத துரியாவத்தையில் ஆன்மா, தன்னை முதற்கண் உள்ளவாறுணர்ந்து, தேன்போல இனிக் -கின்ற பரம்பொருளை அடைதற்கு வழியாகிய சிவோகம் பாவனையில் நின்று, அதனானே அனாதிதொட்டு நீங்காது பற்றி வருகின்ற மலம் முற்றும் நீங்கப்பெற்று, பெறுதற்கரிய பேற்றைப் பெறுதலேயாம்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முதற்கண்ணதில், `தானே` என்னும் ஏகாரம் தொகுக்கப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல். பின்னது தேற்றப் பொருளில் வந்த இடைச்சொல். `முடிந்த முடிபு` எனப் பொருள் தருவ தாகிய `சித்தாந்தம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவாகமாந்தத்திற்கே காரண இடுகுறிப் பெயராய் வழங்குகின்றது. எனவே, மேல் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறிய `சித்தாந்தம்` என்பதும் இதுவே யாதல் அறிக.
இனி, `வேதாந்தம்` என்பதும் காரணப் பெயராய் உப நிடதங்களையும், காரண இடுகுறிப் பெயராய்ப் பிரமசூத்திரத்தையும் குறிக்கும். எனினும் சித்தாந்த சைவத்தில் எங்கும் `வேதாந்தம்` என்பது உபநிடதங்களையன்றிப் பிரமசூத்திரத்தையன்று. `பிரமசூத்திரம் ஏகான்ம வாதநூல்` - என்பதே சித்தாந்த சைவத்தின் முடிவு என்பதைச் சர்வான்ம சம்பு சிவாசாரியார் செய்த சித்தாந்தப் பிரகாசிகையாலும் சிவஞான மாபாடியத்தில் சிறப்புப் பாயிரத்து, `சைவாகமப் பிராமணியம்` கூறும் பகுதியாலும், அவையடக்கத்தில் `ஏகான்ம வாதம்` கூறும் பகுதியாலும் அறிக.
`வேதாந்தமே சித்தாந்தம்` - என்பதைப் பின்னரும் நாயனார் விளக்குதல் காண்க. ``அச்சிவோகம்`` என்ற அகரச்சுட்டு. வேதாகமங் களில் சொல்லப்படுதலைச் சுட்டிற்று. இறுதியில், `இவற்றின் முடிவு` என்பது இசையெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `வேதாந்தமும், சித்தாந்தமும் முடிவால் வேறல்ல` என்பது கூறப்பட்டது. `அங்ஙனமாயின் இரண்டாகக் கூறுவானேன்` என்னும் வினாவிற்கு விடை, பின்வரும் ``வேதமோடாகமம்`` என்னும் மந்திரத்திற் காணலாம்.

பண் :

பாடல் எண் : 4

நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொழிப்புரை :

`பரனே யன்றிச் சீவனும் அவன் போலவே என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள்` என்னும் கொள்கையை முதலிற் கொண்டு, (சீவன் அனாதியே பந்தப்பட்டு நிற்றலாம்), அது சுத்த மாயை, அசுத்தமாயை இரண்டும் பின்னர் வந்து பற்றாதவாறு விலகுதற்குரிய வழியை அறிந்து, அவ்வழியால் பந்தத்தினின்றும் நீங்கி, தந்தையாகிய சிவனை அடைதலே `சித்தாந்தம்` என்னும் தத்துவமாகும்.

குறிப்புரை :

`வேதாந்தம்` என்னும் தத்துவமும் அதுதான் என்பது. முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அமைந்தது. `பரனோடு உயிர் நித்தம் ஆதலை உற்று` என்க. ``சத்த முதல் ஐந்து`` என்பது ஆகுபெயராய் அவற்றை அறியும் செவி முதலிய ஐந்து பொறிகளை குறித்தது. இதனானே உபலக்கணத்தால் அனைத்துக் கருவிகளும் கொள்ளப் படும். ``தத்துவம்`` என்றது, `கருவி` என்றவாறு. `மாயை தொடரா வகை` என்றது. `பிறவி தொடரா வகை` என்றதாம்.
இதனால், `சக சீவ பரங்களில் முதல் இரண்டும் நித்தப் பொருள்களே` என்பதே சித்தாந்தம் எனக்கூறி, இக்கொள்கையே வேதாந்தம்` என்றமையால், `பரம் ஒன்றே நித்தம்` என்பது வேதாந்தம் ஆகாமையும் கூறப்பட்டது. எனவே ஆறந்தங்களுள் இங்கு சித்தாந்தம் கூறப்பட்டதாம், வேதாந்தம் இதன்கண் அடங்கிற்று.
சகம் - பிரபஞ்சம். காரியப் பிரபஞ்சம் அநித்தம் ஆதலின், முதலிரண்டு மட்டுமே இங்கு `நித்தம்` எனக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

பொழிப்புரை :

பஞ்ச கலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப் -பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` - என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்` என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங் -களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்தபொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா` என ஒன்று உளதாதல் விளங்கும்.

குறிப்புரை :

பஞ்ச கலைகளைப் பற்றி அறிய வேண்டுவன பல உள. அவையெல்லாம் சிவஞானமாபாடியம், பிராசாத யோக நூல்கள் முதலியவற்றில் சொல்லப்பட்டுள்ளன. அவையனைத்தையும் இங்குக் கூறுதல் கூடாமையின் அவைகளுள் தலையாய அதிதேவர்களை மட்டுமே கூறி, அவர்வழியாக அக்கலைகளையும், அவைகளில் அடங்கி நிற்பனவற்றையும் உணர வைத்தார். ஆகவே, பிரமன் முதலிய ஐந்தும் ஆகுபெயர்களாய், அவரால் செயற்படுத்தப்படும் கலை, தத்துவம் முதலியவற்றைக் குறித்தன. `விந்துவும், நாதமும் மிக்கு அப்பால் மேவும் எனக்கூட்டுக. இதனை எடுத்துக் கூறியது `இவை கடத்தற்கு அரியன` என்பதும், ``கடந்த இடமே நாதாந்தம்` என்பதும் விளங்குதற்பொருட்டு. `பிரமன்` முதலியன செவ்வெண். இறுதியில், `இவர்களில்` என்பது வருவிக்க.
இதனால், ஆறந்தங்களுள் நாதாந்தம் கூறப்பட்டதாம். தத்துவங்களைக் கொள்ளாதொழியினும் நாதத்தைப் பொதுப்பட உணர்ந்து `அதன் அந்தத்தை அடைதலே முடிநிலை` என்பவர் பாசுபதர் முதலிய சில புறச்சமயிகள்.

பண் :

பாடல் எண் : 6

உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத் தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றி -னின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.

குறிப்புரை :

ஆறாறு - ஆறாறன் தொகுதி. ``நாதாந்தம்`` இரண்டனுள் முன்னது அவ்விடத்து விளங்கும் ஆன்ம அறிவைக் குறித்தது. ``மேல் உள்ள`` என்றது, `மாயைக்கு மேல் உள்ள` என்றபடி. இருள் அருளாலன்றி நீங்காமை வெளிப்படை. ஓர் உணர்வு - தன்னோடு ஒப்பது வேறொன்றிலாத உணர்வு; சிவனது உணர்வு. உயிர் நாதாந்தத்தை அடைந்தமை முன்பே கூறப்பட்டமையால், ஈற்றில், ``நாதாந்தத்து`` என்றது, `அவ்விடத்து` என்னும் சுட்டளவாய் நின்றது. இங்கு, ``போதம் எய்திடும்`` என்றதனால், `போதம்` எனப்படுவது சிவபோதமே என்பது விளங்கும். விளங்கவே, போதாந்தமாவது, ஆன்மா, தான் சிவஞானத்தில் முற்றி நிற்கும் நிலையே போதாந்தம் என்பது போந்தது.
தத்துவம் முப்பத்தாறனையும் கடந்தவழி இருமாயை களையும் கடந்ததாம். மாயைகள் ஆணவத்தைப் போக்கவே இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலின், `அவை நீங்கியவிடத்து ஆணவம் நிற்றல் இயல்பு` என்பது பற்றி, ``நாதாந்தத்தைச் சென்று மேல் உள்ள இருள்`` என்றும்,
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்;
ஒன்று மேலிடின் ஒன்று
ஒளிக்கும்; எனினும் இருள் அடராது``*
என ஓதியபடி, நாதாந்தத்ததில் ஆணவமே யன்றிச் சிவமும் உளதாக, பக்குவம் இல்லாத பொழுது மேலிடுகின்ற ஆணவம், பக்குவம் வந்த பொழுது மேலிடமாட்டாதிருக்கச் சிவமே மேலிடும் ஆதலின் ``இருள் நீங்க`` என்றும், சிவம் மேலிட்ட வழி ஆன்மா அதனைப் பற்றுதற்குத் தடை இன்மையால், ``ஓர் உணர்வு ஆகுமேல்`` என்றும் கூறினார்.
இதனால், `போதமாவது இது` எனவும், அதனை அடையு -மாறும் கூறும் முகத்தால், ஆறந்தங்களுள் போதாந்தம் கூறப்பட்டது. `போதாந்தமே முடிநிலை` என்பவர் பாடாண வாத சைவர் முதலிய அகச் சமயிகள். இவர்களை, `பூர்வ சைவர்` - என்பர் சிவாக்கிர யோகிகள்.

பண் :

பாடல் எண் : 7

தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொழிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களையும் மேற்கொள்ளப் புகுந்து, அவ்வாறே படிமுறையால் மேல் ஏறி, முடிவான `சமாதி` என்னும் நிலையை எய்திச் சிவனுக்கு அணுக்கமாகி நிற்கச் சீவன் சிவனாய்விடும். அந்நிலையில் உலகத்தாக்கம் ஒழிய ஓர் அமைதி நிலை தோன்றும். அதுவே உயிர் பெறத்தக்க பேறு - என்னும் இதுவே யோக நூலின் முடிவான கொள்கை.

குறிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களின் இயல்பை மூன்றாம் தந்திரத்தில் காண்க. `இயமத்தில் தொடங்கி முறையே வளர்ந்து ஏழாவது உறுப்பாகிய தியானத்தை அடைதலே ஞானத்தின் முடிநிலை` என்பதும், `அதன்பின் சமாதியை அடைதலே ஞானத்தின் பயன்` என்பதும், `அதனை அடைந்தோர் உடம்பு நீங்கிய பின் பரம் பொருளோடு ஒன்றாகி விடுவர்` என்பதும் யோகநூற்கொள்கை என்றபடி. `உடம்பு நீங்குதலின்ற, என்றும் நிலைத்திருக்கப் பெறுதலே முத்தி` என்னும் கொள்கையும் உண்டு.
ஊடுதல் - உட்புகுதல். `ஊடுறும்` என்பது குறைந்து நின்றது என்றலும் ஆம். `சிவனுக்கு அணியராதல் சமாதியின் தொடக்கநிலை` என்க. `உபசாந்தம் கூடும்` எனமாற்றியுரைக்க.
இதனால், ஆறந்தங்களுள் யோகாந்தம் கூறப்பட்டது. இக்கொள்கையுடையோர் யோகமதத்தினர். இவர் முதல் ஆசிரியர் பெயர்பற்றி, `பாதஞ்சலர்` எனவும் கூறப்படுவர்.

பண் :

பாடல் எண் : 8

கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொழிப்புரை :

`ஆறந்தம்` எனப்படுகின்ற கொள்கைகளில் ஒன்றான, `கலாந்தமாவது யாது` என அறிந்து கொள்ளப்புகின், உயிர் பாசங்களினின்றும் நீங்குதற்கண் துணையாய் உள்ள நிவிர்த்தி முதலிய சத்திகட்கு இடமாய் நிவிர்த்தி முதலிய கலைகளும், மற்றும் பிராசாத மந்திரத்தின் மேதா முதலிய கலைகளும் சுத்த மாயையிலே தோன்றிச் சுத்த மாயையிலே ஒடுங்குமாற்றை ஆராய்ந்து தெளிதலே கலாந்தமாம்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய சத்திகளாவன, `நிவிர்த்தி, பிர திட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்துமாம். இச்சத்தி களுக்கு இடமாகின்ற சுத்த மாய விருத்திப் பகுதிகளும் இச்சத்திகளின் பெயர்களையே உடையன. `உலகம் ஆறு அத்துவா மயமானது` எனக்கூறுமிடத்து, ஏனை ஐந்து அத்துவாக்களும் கலாத்துவாவிலே அடங்கும். அதனால் அத்துவ சுத்தி, `கலாசுத்தி` என்றும், `கலா சோதனை` என்றும் சொல்லப்படும். இந்தச் சுத்தி, அல்லது சோதனையே நிருவாண தீக்கையாதலின் `தீக்கையே முத்தியாம்` எனக் கூறும் ஒருசார் சைவர்கள் `கலாந்தத்தில் பஞ்ச கலாந்தம்` என்பர்.
இனிப் பிராசாத கலைகள் மூன்றாம் தந்திரத்து. `கலை நிலை` என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டன. `அவைகளை முன்னர் ஆராய்ச்சியால் உணர்ந்து பின்னர் அனுபவத்திற்காணுதலே முடி நிலை` என்பவர் `கலாந்தத்தில் பிராசாத கலாந்தர்` என்க. இவரை யோக சைவர்` அஃதாவது, `பிராசாத யோகமே முத்தியைப் பயக்கும் - எனக் கூறும் சைவர் என்பதாம். இவரும் ஐக்கிய வாத சைவர் போல ஆணவ மலத்தை உணராதவர் ஆதலின், அவரோடு ஒப்பர் என்க.
ஈசானம் முதலிய பஞ்சப் பிரம மந்திர சத்திகளாகிய ஈசானி முதலிய ஐந்தும், அவைகளில் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டும் - ஆக முப்பத்தெட்டாய் நிற்கும் சத்திகளும் `கலை` எனப்படுதலால், அவற்றைத் தெளிதலும் கலாந்தமாம் என்பாரும் உளர். அவை மந்திர கலைகளாய் நாதாந்தத்தில் அடங்குத -லாலும், நாயனார் அவ்வாறு ஓதாமையாலும் அவைகளை இங்குக் கொள்ளல் வேண்டா என்க. ``ஆதிக்கு`` என்பது கண்ணுருபின் பொருளில் வந்து உருபு மயக்கம். `ஆம்` என்பதனை, `ஒடுங்கலும்` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, தோன்றுதலைத் தழுவிய எச்சவும்மை.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் கூறப்பட்டது. அஃது இருவகைத் தாதலும் உடன் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று)
ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு)
அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் கூறப்பட்ட கலாந்தம் ஒழுக்கம் பற்றியது. இனி), நூல் அறிவு பற்றி நோக்குங்கால் உள்ள கலாந்தம் வேறு ஐந்தாகும். அவை, `மந்திர கலாந்தம், தந்திர கலாந்தம், தெளிவுக் கலாந்தம், ஞான கலாந்தம். உபதேச கலாந்தம்` என்பன. அவையும் ஞானப் பகுதிகளேயாம். அவை ஆராய்ச்சியில் வேட்கை உடையவர்கட்கு ஆவனவாம்.

குறிப்புரை :

`அவை இன்ன` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும். அவன் அளியன் ஆகிய - சிவன் அருள் மிக்கவனால் அளித்தருளிய (கலைகள்).

பண் :

பாடல் எண் : 10

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொழிப்புரை :

அநாதியே உள்ளவனால் செய்யப்பட்டமையின், `அநாதி நூல்` எனப்படுகின்ற ஆகமங்களையும், வேதங்களையும் ஓதி, ஐயம் திரிபு அற உணர்தல் மந்திரகலாந்தம். ஏனைப் பாசுபதம் முதலிய தந்திரங்களை அவ்வாறு உணர்தல் தந்திர கலாந்தம். அவ்வாறு உணரப் பட்ட அந்நூல்களில் கண்டவாறு ஒழுகும் ஒழுக்கத்தில் மேம்படுதல் தெளிவுக் கலாந்தம். திருவைந்தெழுத்தைத் தத்தமக்கு உரியமுறையில் மனம் முதலிய அந்தக் கரணங்களால் அன்றி, அறிவால் சுத்தமான -தாகப் பெரிய அளவில் கணித்தல் ஞான கலாந்தம். குரு உபதேசத்தை நன்கு சிந்தித்துத் தெரிந்தபின் நிட்டையில் நிற்றல் உபதேச கலாந்தமாம்.

குறிப்புரை :

உபதேசகலை மட்டிலே, `குரு உபதேசம்` எனக் கூறினமை பற்றி, `ஏனைய கலைகள் குரு இன்றியும் உணரப்படும்` எனக்கொள்ளலாகாது. ஏனெனில், `உபதேசம்` என்றது ஞானோப -தேசத்தையேயாகலின், அவ்விடத்து, `குரு` எனப்பட்டோரும் ஞான குருவே. ஞான குருவைக் கூறியது ஏனைக் குருமாரை விலக்கிய -தாகாது. பிறரெல்லாம் வித்தியா குரவரும், கிரியா குரவரும் ஆவர் என்க.
`அனாதி ஆகும் கலை` என மாறிக் கூட்டுக. ஆகும் அத்தந்திரம் - வேதாகமங்கட்குப் பின்னிலையினவாகிய அந்தத் தந்திரங்கள் ஆகும். மனாதி - மந்திரங்களைக் கணித்தற்குக் கருவி யாகும் மனம் முதலியன. உடல் - கருவி. ஈற்றில் உள்ள `ஆகும்` என்பதை வேதம் முதலிய எல்லாவற்றோடும் கூட்டுக.
இவ்விரண்டு மந்திரங்களாலும் கலாந்தம் வேறுவகையால் அமைதல் கூறப்பட்டது. மந்திர கலாந்தம் கொண்டவர் தருக்க மதத்தவர். தந்திர கலாந்தம் கொண்டவர் அகப்புறச் சமயிகள். தெளிவுக் கலாந்தம் கொண்டவர் பௌராணிகர். ஞான கலாந்தம் கொண்டவர் அகச்சமயிகளில் ஒருசாரார். உபதேச கலாந்தம் கொண்டவரே சித்தாந்த சைவர்.

பண் :

பாடல் எண் : 11

தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொழிப்புரை :

ஞான கலாந்தத்தில் சிவம் வெளிப்படும். (என்றாலும் அதன்கண் அன்பு செய்து அழுந்துதல் உபதேச கலாந் தத்தில் உண்டாகும்). தெளிவுக் கலாந்தம் இறைநெறி ஒழுக்கத்தையும், இறையன்பையும் வலுப்படுத்தும். (என்றாலும் அவற்றை அஃது அறிவியல் முறையில் உணர்த்தாது. அவ்வாறு உணர்த்துவது உபதேச கலாந்தமே). வாய் வாளாமைபெற்று, பிறபொருள் உணர்வும், தன்னுணர்வும் அற்ற பெருந்தகையோன் வாக்கு மனங்களைக் கடந்த பரம சிவன் ஆவான்.

குறிப்புரை :

தன் ஞானம் - சிவ ஞானம். `அதனை உணர்த்தும் கலை` என்க. அக்கலைகள் பலவும் திருவைந்தெழுத்தில் அடங்கும், ``கலை, கலாந்தத்து`` என்பவற்றில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆசார நேயம்`, உம்மைத் தொகை. அறைதல் - வலியுறுத்தல். அறையும் - அறையப்படும். `பேசாது` என்பது ஈறு குறைந்துநின்றது. உரை, சொல்லப்படுவது. உணர்வு - சொல்லவாராது உணர்வு மாத்திரையாய் நிற்பது, பெருந்தகை, ஆகுபெயர். இவ்வொருமை சாதி யொருமை. நந்தி - சிவன், மாநந்தி - பரமசிவன். ``மாநந்திதானே`` எனத் தேற்றேகாரத்தால் `வேற்றுமையில்லை` என வலியுறுத்தியது. அத்தன்மை குறைவின்றி நிரம்புதல் பற்றி இங்ஙனம் வலியுறுத் -ததனானே, `அவன் பொருளால் வேறே` என்பது பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய ஐந்து கலாந்தங்களுள் உபதேச கலாந்தத்தின் சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தானது வாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

பொழிப்புரை :

(வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும்). `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபட வில்லை. (`ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` - எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று - என்பது மேலேகூறப் பட்டது), இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய்நிற்கும்.

குறிப்புரை :

`அந்நிலை உபதேச கலாந்தமாகிய சித்தாந்தத்திலல்லது இல்லை` என்பது கருத்து. ஞானம் - அறிவு ஞேயம் - அறியப்படும் பொருள். ஞாதுரு - அறிபவன். இவை முறையே `காட்சி, காணப்படு பொருள், காண்பான்` எனவும் கூறப்படும். இவை `திரிபுடி` எனப்படும். `மூன்று பொருள் இல்லை; ஞானம் ஒன்றே உள்ளது` என ஏகான்மவாதம் கூறும். `மூன்று பொருள்கள் உள்ளன. ஆயினும் உணர்பவனது உணர்வில் அம்மூன்றும் மாறி மாறித் தோன்றும் நிலை சிவானுபவ நிலையாகாது. அவனது உணர்வில் ஞேயமாகிய சிவம் ஒன்றுமே தோன்றும் நிலையே சிவானுபவ நிலை. அதுவே பரமுத்தி` என்பது சித்தாந்தம். இவற்றுள் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துச் சித்தாந்தக் கொள்கையை வினா வெண்பா, பின்வருமாறு நயம்பட வலியுறுத்துகின்றது.
``காண்பானும், காட்டுவதும், காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``l
இம்மந்திரத்தில் ``சமாதி`` என்றது பாவனையளவாக நிகழும் யோகசமாதியன்று. ஞானசமாதி. இதுவே திருக்களிற்றுப்படியாரில் கூறப்பட்டது.
(இதனாலும் மேற்கூறிய கருத்தே வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.3

பண் :

பாடல் எண் : 13

ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களிலும், `ஞாதுரு ஞானத்துடன் சென்று, ஞேயத்தில் அடங்குதலைத்தான் முடிநிலையாகக் கூறுகின்றன. ஆகவே, ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தில் சென்று அடங்குதல்தான் ஆறந்தங்களின் குறிக்கோளும். ஆயினும், `ஞேயத்தில் அடங்குதல் மட்டுமன்றி, அவ்விடத்தில் எல்லையில்லாததோர் இன்பநுகர்ச்சியில் ஞாதுரு மூழ்கியிருத்தலே உண்மைப்பேறு` எனக் கூறுகின்ற சித்தாந் -தமே ஏனை அந்தங்களினும் வடித்தெடுத்த மோன நிலையாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, `ஆறந்தமும், ஞாதுரு, ஞானக்குறி உடன்வீட, ஞேயம் அடங்கிடும்; (ஆகலான்) ஆறந்தமும் சென்று அஞ்ஞேயத்தே அடங்கிடும்; (ஆயினும்) சிவானந்த உண்மையே தேறிய மோனம்` எனக் கூட்டி முடிக்க.
அடங்கிடுதலைக் கூறும் அந்தங்களை, அவையே அடங்குவனவாக உபசரித்துக் கூறினார். ``அஞ்ஞேயம்`` என்னும் சுட்டு, பின்னர்க் கூறப்படும் அடங்குதல் தொழிலையை உட் கொண்டது. ``ஆறந்தம்`` இரண்டில் பின்னதிலும் உம்மை விரித்து, `ஞேயத்தின்கண்` என உருபுவிரிக்க. `ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தின்கண் அடங்கிவிடும் அளவே முத்தியாவது என, அவ் விடத்து, பெறுவானையும், பேற்றினையும் அழித்துச் சில அந்தங்கள் கூறும் ஆகலின், அதனை மறுத்துச் சித்தாந்தத்தை வலியுறுத்துதற்கு, ``தேறிய மோனம் சிவானந்த உண்மையே`` என்றார்.
``முத்தியிலும் மூன்று முதலும் மொழியக்கேள்;
சுத்தஅனு போகத்தைத் துய்த்தலனு; - மெத்தவே
இன்பம் கொடுத்தலிறை; இத்தைவிளை வித்தல்மலம்;
அன்புடனே கண்டுகொளப் பா``8
என்பதே சித்தாந்தம் ஆதலை யறிக.
இதனாலும், சித்தாந்தத்தின் தலைமையே ஏதுக் காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.

பொழிப்புரை :

உண்மையை உணர்த்தும் கலைகள் பலவாகச் சொல்லப்படினும் அவை அனைத்தும் பன்னிரு கலைக்குள் அடங்குவனவாம். இனி, அனைத்துக் கலைகளையும் விடாது கடக்க வேண்டின், பதினாறைத்தாண்டி அப்பால் செல்லுதல் வேண்டும், `நாதந்தம்` என்பது, இவ்வாறு கூறப்படுவனவற்றின் இடையே நிற்கின்ற ஒன்று. ஆகையால், அதையே `உண்மை` என்று சொல்லின், அஃது ஏகதேசத்தையே `முற்று` எனக் கருதுவதாகவே முடியும்.

குறிப்புரை :

`ஆறு, ஒன்று, ஐந்து` என்பன அவ்வெண்களையே குறித்தன. அதனால், ஏழன் உருபு பெறாது, மூன்றன் உருபு பெற்றது. பிராசாத கலைகள் பலவாவன பஞ்ச கலை, அட்ட கலை, தச கலை, சதுர்த்த கலை முதலியன. அவைகளையெல்லாம் பிராசாத நூல்களில் காண்க. அவை அங்ஙனமாயினும் துவாதச கலையும், சோடச கலையுமே சிறப்புடையனவாகப் பயிலப்படற்குரியன என்றற்கு, ``பன்னிரண்டில் அடங்கும்`` என்றும், `பதினேழாகிய அந்தம்` என்றும் கூறினார். கலைகட்கு அடக்கம் கூறினமையால் பன்னிரண்டு என்றும் மேற்போதல் கூறினமையால், `பதினாறைக் கடந்த பதினேழ்` என்றும் கூறினார். இப்பிராசாதங்களைப் பற்றி இத்தந்திரத்திலும், மூன்றாம் தந்திரத்திலும் சிறிது விளங்கக் கூறினோம்.
``ஓர் அந்தம்`` என்றது, `ஏகதேச அந்தம்` என்றபடி.
இதனால், ஆறந்தங்களில் ஒன்றாகிய நாதாந்தத்தின் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

பொழிப்புரை :

தேவரையெல்லாம் தம் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சி புரிகின்ற, எங்களுடைய புகழ்மிக்க நந்திபெருமானே, நாங்கள் (`வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு வேறு` எனக் கூறிப்பிணங்குவார் பின் சென்று) கெடாதபடி எங்களை அறைகூவி அழைத்துத் திருவடி தீக்கை செய்து, `அவ்விரண்டிலும் சொல்லப்படுகின்ற உண்மை ஒன்றே என்பதையும், அவ்வுண்மையின் உயர்வையும் இனிது விளங்க உபதேசித்தருளிய ஞான குருவாவார். பசுக்களாகிய அனைத்துயிர் களையும் அடிமையாக உடைய சத்தி ஆதி சத்தியாய் நின்று ஆட்டிப் புடைக்கும் நிலையில், சிவனும் ஆதிசிவனாகவே அவளுடன் இருந்தவன், அந்நிலையை மாற்றித் தனது இயற்கை நிலையாகிய அநாதி சிவனாம் பரமசிவனாகி வந்து, அவளைத் தழுவிக்கொண்ட பின்பு, ஏனையோர்க்கும் எங்கட்கு அருளியவாறே அருளுமாறு அவன் அந்நந்தி பெருமானைத் திருவுள்ளத்தில் எண்ணுவான்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வுண்மை ஏனையோர்க்கும் இனிது விளக்கப்படும்` என்பது குறிப்பெச்சம். `பசு` என்னும் வடசொற்கு நேரிய தமிழ்ச்சொல் `ஆ` என்பதாதல் பற்றி அதனையே கூறினா ராயினும் அது `பசு`, அஃதாவது, `பாசத்தில் கட்டுண்டது` என்னும் பொருளையே தருதலின், `உடையாள்` என்றது ஆதிசத்தியை, அஃதாவது திரோதான சத்தியையேயாயிற்று. ``அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்`` என்ற இடத்திலும் `உலக வாழ்க்கையைத் தரும் அவள்` என்றது, திரோதான சத்தியையே யாதலை நினைக. `அரன்` - என்பது, `பாசங்களை அரிப்பன்` என்னும் பொருளது ஆதலின் அஃது, `அநுக்கிரகத்தைச் செய்பவன்` என்னும் பொருட்டாய்ப் பரமசிவனைக் குறித்தது. உயிர்கட்கு இருவினை யொப்பு மலபரிபாகம் வரும் பொழுதே திரோதான சத்தி அருட் சத்தியாய் மாறி ஆன்மாவிற்பற்றி, அரன் அப்பொழுதுதான்வந்து மணப்பவன் போலக் கூறினார். இது, `சத்தி நிபாதம் வந்த பின்பு` எனக் கூறியவாறேயாம். ``கோனை`` என்பது, `கோன் ஆவன்; அவனை` என இருசொல் தன்மைப்பட்டு நின்றது. ``கருதும்`` என்னும் `செய்யும்` என்முற்று, இங்கு ஆண்பால் படர்க்கையில் வந்தது. `அரன் வந்து கொண்டபின் கோனைக் கருதும்` என முடிக்க. தமக்கு அருள்புரிந்த வகையைக் குறித்து `நந்திபெருமானையே கருதுவன்` என்றா ராயினும், `அவரவருக்கு ஏற்புடையாரைக் கருதுவன்` என்றலே கருத்தாம். முதல் அடியை, ``கோனை`` என்பதன் பின்னர்க்கூட்டுக.
இதனால், `ஆறந்தங்களில் வேதாந்த சித்தாந்தங்களே மேலானவை` என்பது குருவருள் பெற்றபின் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
வரும்சம யம்புறம் மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொழிப்புரை :

கொள்வார் கொள்ளும் வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிவன் உலகில் பலவகைச் சமய நூல்களை ஆக்கி வைத்திருக் -கின்றான். (அவை ஒன்றோடொன்று முரணுதல் போலத் தோன்றுதல், அவற்றைக் கொள்வாரது பக்குவத்திற்கு ஏற்ப அவை அமைந்ததனாலேதான். அதனால் அவற்றைக் கொள்வோர் தமக்கு விருப்பமானவற்றைக் கொண்டு அமைதல் வேண்டுமன்றிப் பிறருக்கு விருப்பமானவற்றைப் பழித்தல் கூடாது. ஏனெனில் எல்லா நூல்களும் இறைவன் அருளால் தோன்றியவையேயாகலின்) அந்நூல்களின் வழி அமைந்த சமயங்களில் சில, `புறம்` எனப்படும். மாயை, மகாமாயை இவற்றைக் கொண்டுள்ள சமயங்கள் அகச்சமயங்களாம். அவற்றையும் கடந்து நிற்பன வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள்.

குறிப்புரை :

`ஆகமங்களில் சிவாகமங்களே சித்தாந்தம், என்றல், அவை முற்றறிவுடைய சிவனால் செய்யப்பட்டமையாலேயாம். எந்தச் செயலும் சிவன் தான் நேரே செய்யவும், பிறரைக் கொண்டு செய்விக்கவும் நிகழ்வதேயன்றி, அவை தாமாக நிகழ்வன அல்ல ஆகலின், சமய நூல்கள் பலவும் காரணக் குறிபற்றிச் சிவாகமமேயாம்.
``துணை நன்மலர் தூய்த்தொழும் தொண்டர்காள், சொல்லீர்;
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில் இரும் பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டே. இன்னும்,
``விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்``
என்றதும் கொள்பவரது பக்குவ வேறுபாடுகளை நோக்கியதேயாம்.
`உயிர்கள் பக்குவம் எய்தியபொழுதே இறைவன் குருவாகி வருவான்` என்பதை, ``அரும்பருவம் அடைதலுமே ஆசானாகித் தோன்றி``l என முன்னர்க்கூறிய சிவஞானசித்தி, பின்னர், `அவ்வரும் பருவம் எப்பொழுது வரும் என வினாவுவார்க்கு,
``புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவையடைந்தும், அருந்தவங்கள்புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணநூல் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்தடைவர்``8
எனப் பின்னர்க் கூறிற்று. இதனால் அனைத்துச் சமயநூல்களையும் அவற்றைக் கொள்வாரது பக்குவத்தை நோக்கின் வேண்டத்தக்கனவே யாதல் அறிக.
`சாருவாகம் முதல் எல்லாச்சமயமும் பரமசிவனால் செய்யப் பட்டமையின் பிரமாணமேயாயினும் ... ... சோபான முறையான் உபதேசித்தருளியது - என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப் படும்`` (கிறப்புப்பாயிரம் - `சைவாகமப்பிராமணியம்` எனச்சிவஞான மாபாடியத்தில் உரைக்கப்பட்டமையும் காண்க.
பக்குவம் நோக்கிச் செய்யப்பட்டமையால், `உலகம் மாயை மகாமாயைகளினின்று பரமசிவனால் தோற்றி ஒடுக்கப்படும்` என்பதை உணரமாட்டாதார்க்கு அது சொல்லப்படவில்லை அதனால், சாருவாகர், (உலகாயதர்) `பூதம் நான்கே; அவை கூடுதலும் பிரிதலும் இயற்கை. கூடுவதால், உலகமும், உடம்புகளும் தோன்றும்; பிரிவதால் அழியும். நான்கு பூதங்களும் கூடியபொழுது அறிவும் தோன்றும்; பிரியும்பொழுது அறிவும் அழியும்; ஆயினும், உடம்பு உள்ளவரையில் உலகில் நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும்; இல்லையேல் வாழ்வு நல்வாழ்வாக அமையாது` என்பர். ஆயினும் நீதியைக் கடைபிடிக்காத பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
சமணரும், பௌத்தரும், `உலகம் தானே தோன்றியழியும்` என்பர். அவருள் சமணர், `அறம் - என்பது ஒன்று உண்டு, அதன் வழியிலேதான் உலகம் நடைபெற்று வருகின்றது` - என்பர். ஆகவே, அறத்தைக் கடைப்பிபிடிக்காது வழுவி விடும் பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்;
பௌத்தர், `மனிதர் பரதுக்க துக்கராய் வாழவேண்டும்; அஃதாவது, பிறர்க்காயினும், பிறஉயிருக்காயினும் துன்பம்வரின், அத்துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அத்துன்பத்தைக் களையவும், துன்பம் வராமல் காக்கவும் வேண்டும்; இதுவே தவம். இத்தவத்தால் ஞானம் பிறக்கும்; ஞானத்தால் வீடு உளதாம்` என்பர். எனவே, இத்தவத்தினின்றும் வழுவும்பொழுது அவர்கள்தங்கள் மதத்தை அவர்கள் கைவிட்டவராகின்றனர்.
இவரெல்லாம் வேதசிவாகமங்களை இகழ்தலால் புறத்திலும் புறப்புறச்சமயிகள் ஆகின்றனர். வைதிகருள் மீமாஞ்சகரும், சாங்கியரும் நிரீச்சுரவாதிகள். அவருள் மீமாஞ்சகர், ஈசுரன் இல்லாவிடினும் இருப்பதாக வைத்து வேதத்தில் சொல்லப்படுகின்ற வேள்வி முதலிய கருமங்களைச் செய்தல் வேண்டும்; செய்தால் அந்தக் கருமங்களே பயனைக்கொடுக்கும். கருமங்களை விட்டவன் வழியை விட்டுக் குழியில் வீழ்ந்தவன் ஆவான்; அவனுக்கு உய்தியில்லை என்பர். எனவே, அவர் கருமங்களின் வழுவும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆவர்.
சாங்கியர், `உலகமே மயக்கத்தைத் தருவது, சாங்கிய நூலின் வழியே தத்துவ ஆராய்ச்சியில் முதிர்ந்து நிற்றல் வேண்டும். அவ்வாறு நின்றால் மயக்கம் நீங்கும்` என்பர். ஆகவே, அவர் தத்துவ ஆராய்ச்சி செய்யாது, வாழ்க்கை நடத்தப் புகும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர்.
நியாய வைசேடிகர்களும், `ஈசுரன் ஒருவன் உண்டு` எனக் கூறினாராயினும், உய்யும் வழி கூறுவதில் சாங்கியரை ஒத்திருக் கின்றனர்.
யோக மதத்தினர், `யோகத்தின் எட்டுறுப்புக்களாகிய இயமம், நியமம் முதலியவற்றை முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்` என்பர். முற்றாகக் கடைப்பிடித்தோர் எவரும் இலர்.
ஏகான்மவாதிகள், `உலகம் கனவு போன்றதே; என்றாலும், அதைக்கனவாகக் கண்டு கழித்து, பரமார்த்தத்தின் விழிக்கின்ற வரையில் உலகில் உள்ள எல்லா நீதி அநீதிகளையும் உணர்ந்து, தீவழி நீக்கி, நல்வழியில் ஒழுகவேண்டும்` என்பர். எனவே, அவர் அவ்வாறு ஒழுகாதபொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
`பாஞ்சராத்திரம்` எனப்படுகின்ற வைணவ மதத்தினர், பெரும்பான்மையும் சைவரோடு ஒத்திருப்பினும் சைவத்தின் உயிர்க் கொள்கையாகிய, `பிறப்பு இறப்பு உடையன எல்லாம் உயிர்களே; எக்காரணத்தாலும் அவையில்லாதவனே கடவுள்` என்பதை மறுத்து, `உயிர்களின் பொருட்டுக் கடவுள் பிறந்தும் வருகின்றான்` என்பர். பிறப்பாவது அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சார்யுசம் என்னும் நால்வகை யோனிகளுள் எந்த ஒன்றிலேனும் கருவாய் இருந்து தோன்றி, வளர்ந்து, சிலகாலம் வாழ்ந்து மறைதலாம். இதனை `அவதாரம்` என்றல் உபசாரமே. உண்மையில் அவதார மாவது, கடவுள் எவையேனும் சில காரியங்களை முன்னிட்டு யாதானும் ஓர் உருவில் தோன்றிச் சில நொடிகளில் அக்காரியத்தை முடித்து மறைவதேயாகும். பிறப்பு எய்திய வர்களையே இவர்கள் கடவுளாகக் கூறினாலும், `அவர்களையும், கடவுளையும் வழிபட்டு உய்யவேண்டும்` என்பர். மேலும், `அற நெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும், அறநெறிக்கு எதிரான மறநெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும் தரும் ஆதலின் அற நெறியிலே ஒழுகவேண்டும்` என்றும் கூறுவர். இக் கொள்கை சைவத்திலும் உள்ளதே. `உலகிற்கு அறநெறியை அருளியவன் கடவுளே` எனக் கொள்வதால் அறநெறியில் ஒழுகுவதும் கடவுள் வழி பாட்டின் ஒரு பகுதியேயாகின்றது. எனவே, வைணவரும், சைவரும் அறநெறியையும், இறைவழிபாட்டினையும் விடுவாராயின் தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர். மீமாஞ்சகர் முதல் பாஞ்சாரத்திரம் முடிய உள்ள மதத்தினர் வேதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் வேத சாரமாகிய சைவாகமங்களை ஏற்றுக்கொள்ளாமல் இகழ்தலால் இவர்களுடைய சமயங்கள் `புறச்சமயங்கள்` எனப்படுகின்றன.
இனிப் பாசுபதம் முதலிய தாந்திரிகர்கள், இறையுண்மை கொண்டபோதிலும் வேதத்திற்கு மாறான ஒழுக்கங்களை `நல்லொழுக்கம்` எனக்கொள்ளுதலாலும், `ஆன்றோர் யாவரும் வேத ஒழுக்கமே நல்லொழுக்கம்; அவற்றிற்கு மாறானவை தீயொழுக்கம்` எனக்கொண்டமையாலும் இவர்களது சமயங்கள் `அகப்புறச் சமயங்கள்` எனக்கூறப்படுகின்றன. சிவாகமங்களை இவர்கள் முழுமையாகக் கொள்ளாவிடினும் ஓரளவு தழுவுவர். அதனால் இவர்களது சமயம் அறவே, `புறச்சமயம்` எனப்படவில்லை.
புறப்புறச் சமயிகள் `மாயை` என்றை ஒன்றைக் கொள்வதே யில்லை. அதிலிருந்து அவர்களுடைய தத்துவங்கள் எவ்வளவு முரண் பட்டவை என்பது விளங்கும். புறச்சமயிகள் வைதிகர்களாயினும் மாயையை மட்டும் கொண்டு, மகாமாயையைக் கொள்வதில்லை. அதனால் அவர்களுடைய தத்துவங்களும் நிறைவுடையன ஆகாமை விளங்கும்.
இவைகளையெல்லாம் நோக்கும்பொழுது சமயவாதிகளது பக்குவநிலை விளங்கும். விளங்கவே இறைவன் எல்லாரிடத்தும் ஒப்பவே கருணையுடையவன் ஆகையால், சமயநூலை ஒன்றாகச் செய்யாது பலவாகச் செய்தும், செய்வித்தும் உள்ளான் என்பதை இம்மந்திரம் விளக்குகின்றது.
`ஆகமம்` எனத் தொகையால் ஒன்றாகிப் பின் வகை விரிகளால் பலவாதல் பற்றில் ``தன்னில்`` என ஒருமையால் கூறப்பட்டது. ``புறம்`` என்பதில் முக்கூற்றுப் புறங்களும் அடங்கின. `வரும் சமயமே புறமும்` என ஏகாரமும், உம்மையும் விரிக்க. `அதனால் அவை இகழற்பால அல்ல` என்பதாம். உருவிய உண்மை `வேதாந்த சித்தாந்த உண்மை` என்க. ``உருவிய`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பன்மை வினைப்பெயர்.
இதனால், `ஆறந்தங்களில் மேற்பட்டவை வேதாந்தமும், சித்தாந்தமும்` என்பது பரந்த நோக்கத்தில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.

பொழிப்புரை :

ஆறந்தங்களில் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் ஒன்றே எனத்தெளிவான அடையாளங்களைப் பெற்றுள்ளன. `போதந்தம்` என்பது உயிர் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெறும் நிலையாகும். `யோகாந்தம்` என்பது, பொதுப்பட ஒரு பொருளைக் குறியாகக்கொண்டு அதனையே நோக்கிநிற்பது. நாதாந்தம் திரு வருளைத் தலைப்பட்டு, அதனாலே சிவானந்தம் தோன்றப் பெறுவது. இவற்றிற்கு மேலாக முதலிற்கூறிய வேதாந்த சித்தாந்தங்களே முடிந்த அடையாளமாகிய பேசாநிலையைப் பெற்றுச் சிவானந்தத்தில் திளைத்திருக்கலாகும்.

குறிப்புரை :

`சீராக உதயம் ஆதல் ஆகும்` என்க.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் ஒழிந்த ஏனை ஐந்து அந்தங்களின் பயன் கூறப்பட்டன. கலாந்தத்தின் பயன் மேற்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல்
நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம்
போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.

பொழிப்புரை :

வேதாந்தத்தில் சொல்லப்படுவது, `பிரகிருதியும் அதன் காரியமுமாகிய ஏழுவகைக் குற்றங்களினின்றும் நீங்க வேண்டும்` என்பதே. அவை 1. பூதங்கள், 2. ஞானேந்திரியங்கள், 3. அவற்றின் விடயங்கள், 4. கன்மேந்திரியங்கள், 5. அவற்றின் விடயங்கள், 6. அந்தக் கரணங்கள் என்பனவும், எல்லாவற்றிற்கும் மூலமாகிய 7. பிரகிருதியும் ஆகியவையாம்.
வேதாந்தத்திற்கு மேலேயுள்ள கலாந்தமாகச் சொல்லப் படுவது பிரோக காண்டம் ஆதல் பற்றிக்காரண தத்துவங்களாகச் சொல்லப்படுகின்ற சுத்த தத்துவங்களால் செலுத்தப்படுகின்ற வித்தியா தத்துவங்கள் ஏழும் நீங்குதலாம். இத்தத்துவங்கள் தடத்த சிவனால் செலுத்தப்படுதல் பற்றி, `பரோபாதி` என்றும் சொல்லப்படும்.
நாதாந்தமாகச் சொல்லப்படுவது, உயிர் உபாதிகள் அனைத்தும் நீங்கி நிற்கின்ற நிலையாம். `தத்துவமசி` மகா வாக்கியத் -தில் ஆன்மாவைக் குறிப்பதாகிய `துவம்` பதம் இந்நிலையில் நின்ற ஆன்மாவையே குறிப்பதாம்.
போதாந்தமாகச் சொல்லப்படுவது, உபாதிகளின் நீங்கிய ஆன்மா மல வாசனையால் `யான், எனது` எனநிற்கின்ற நிலையை விடுத்துச் சிவமாகும் நிலையாம் `தத்துவமசி` மகாவாக்கியத்தில் `ஆசி` பதம் ஆன்மா இவ்வாறாகும் நிலையையே குறிப்பதாம். `தத்` பதம் சிவத்தைக் குறிக்கும்.

குறிப்புரை :

``மேல்`` என்றது பிரகிருதியைக் குறித்தது. இரண்டாவதாகக் கூறப்படவேண்டிய மீதாந்தம், வேறுபொருள் படாமைப் பொருட்டு மூன்றாவதாகக் கூறப்பட்டது. ``விடு`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதனை காரணோபாதியோடும் கூட்டுக. காரணோபாதி காரணங்களால் வரும் உபாதி. `தற்பதத்துப் போம் அசி` என்க.``தற்பதம்`` என்பதில் `தத்` என்பது அதன் பொருளைக் குறித்து நின்றது. போதல் புகுதல். `போதலையே அசி` என்றமையால், ``போம் அசி`` என்பதில் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம்.
இதனால் ஆறந்தங்களுடன் மேற்கூறப்பட்ட ஐந்தில் உள்ள பாச நீக்க முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

பொழிப்புரை :

`உலகங்கள் அனைத்தையும் கடந்தாலும் அவற்றிற்கு அப்பாலும் ஒருபேரொளி உள்ளது` என வேதாகமங்கள் கூறுகின்றன. அந்தப் பேரொளிக்குள்ளே உள்ள ஓர் ஒளிதான் எங்கள் சிவபெருமான். அவன் அந்தப்பேரொளியைத் தனக்கு இயல்பாய் உள்ள மேலான ஆற்றலாக உடையவன். எனினும் அந்த ஆற்றலை ஆட்சி செய்கின்ற ஒருவனாகவும் அவன் அதற்குள் இருக்கின்றான்.

குறிப்புரை :

அண்டம், இங்கு `உலகம்` என்னும் பொருட்டாய் நின்றது. `உலகங்கள் ஏழு` என்னும் மரபு பற்றி, `ஏழு` எனப்பட்டது. ``கடந்தகன்று`` என்பது ஒருபொருட்பன்மொழி. ``அப்பாலும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம் இதனால் அண்டங்களுக் -குள்ளேயும் அந்த ஒளி இருத்தல் பெறப்பட்டது. ``என்ற`` என்னும் அனுவாதத்தால், என்றலும் பெறப்பட்டது. ``உள ஒளி`` என்பது குறிப்பு வினைப்பெயரெச்சத் தொடர். ``பண்டு`` என்றது `அனாதி` என்றபடி. `ஆற்றல் யாவும் பொருளைப்பற்றியே நிற்கும் ஆதலால், இந்த ஆற்றலுக்குப்பற்றுக்கோடாய் உள்ளவனே எங்கள் பெருமான்` என்றார். `அன்றி நின்றான்` என்றது, `அந்த ஆற்றலாகிய குணத்திற்கு வேறாய், அதனையுடைய குணியாய் நிற்கின்றான்` என்றதாம்.
`பரம்பொருள் அறிவு மட்டுமான குணமேயன்றி, அறிவையுடைய குணியன்று` என்பர் ஏகான்மவாதிகள். `அது சித்தாந்தம் அன்று` என்பதை இம்மந்திரத்தால் கூறினார்.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``8
என்றார் உமாபதி தேவர். சிவன் வெறும் சத்தியன்று; `சத்தியையுடைய சத்திமான்` என்க. எந்த ஒரு சத்தியும் தன்னையுடைய பொருள் இன்றித் தனியேயிராது.
``... ... ... ... ... சத்திதான் சத்தனுக்கோர்
சத்தியாம்; சத்தன்வேண்டிற் றெல்லாமாம் சத்தி தானே``l
என்ற சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், ஆறந்தங்களுள் மேலானதாய சித்தாந்தத்தின் சிறப்புப்பொருள் ஒன்று எடுத்துக்கூறப்பட்டது.
``அண்டம் ஆரிருள் ஊடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``3
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

பொழிப்புரை :

சிவன் தனது சத்தியாலே உயிர்கட்கு அறிவிக்கும் முறையை உணர்ந்து, அந்த வழியிலே குரு உபதேசித்த பணிகளைச் செய் வதாலும், மற்றும் மந்திரங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதாலும் பாசங்கள் யாவும் நீங்கும். பின்பு என்றுமே உயிர்க் -குயிராய் நீங்கா -திருக்கின்ற சிவன் ஒருவனே உயிரினிடத்து உள்ள பொருளாவான்.

குறிப்புரை :

கோ - யாவர்க்கும் தலைவன்; சிவன். அவன் முன்னர்த் திரோதான சத்தியால் உலகத்தையே உணர்த்துவான். பின்பு அருட் சத்தியால் உலகத்தை மறைத்துத் தன்னை - உணர்த்துவான். அதுவே சத்திநிபாதமாம். அதுதான் மந்ததரம் - மந்தம் முதலாகப் பல வகைப் படுதலின் அதற்கேற்ப குரு முன்னர் `சரியை, கிரியை, யோகம்` என்ப வற்றை உணர்த்தி, முடிவிலே ஞானத்தை உணர்த்துவார். அவற்றுள், ``கருமச் செய்தி`` என்பது சரியையும், ``அற்சனை`` என்பது கிரியா யோகங்களையும் குறித்தன. யோகமும் அருவத் திருமேனி அருச் சனையே. ``செய்ய, பார்ப்ப`` என்பன வினையிடத்து வந்த செவ்வெண். தே - சிவனேயான குரு. பா - பாட்டாயினும் மந்திரமே. ``அற்சனை பாட்டேயாகும்``* என்றது காண்க. படைத்தல் - சமர்ப்பித்தல். பாரித்தல் - மிகுதியாகச் செய்தல். ``ஓ`` என்னும் முதனிலையே. `ஓவும்` என முற்றுப்பொருள் தந்தது. `அனைத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்த -லாயிற்று. `ஒழியாத ஒருவனே உண்டு` என மாற்றியுரைக்க.
இதனால், `ஞானத்திற்கு வழி சரியை கிரியா யோகங்கள்` என்பது சித்தாந்தம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே

பொழிப்புரை :

சித்தாந்தம், ``மற்றாருந்தன்னொப்பாரில்லாத`` l தலைவன் ஒருவன் இருக்கின்றான். எனக் கூறுவதையோ, `அத் தலைவனுக்கு அடிமையாய் உள்ள உயிர்கள் பல உள்ளன` எனக் கூறுவதையோ, `அவ்வுயிர்கட்கு நல்வினை; தீவினை யென்னும் இருவகை வினைகளும், சுத்த மாயை என்னும் மாயைகளும் ஆகிய கட்டுக்கள் உள்ளன` எனக் கூறுவதையோ சக்திநிபாதம் வாயாதவர் உணர வல்லவராகார். ஆகையால், எக்காலத்திலும் உயிர்களின் அறிவுக் கறிவாய் நின்று அவைகளுக்கு அறிவித்து, வினைப்பயனை நுகர்வித்து, அவற்றிற்கு அவை அறியாமலே ஆதாரமாயும் நிற்கின்ற அந்தத் தலைவனே இருவினை யொப்பு மல பரிபாகங்களின்போது அறி -வித்தால்தான் எவரும் இந்தச் சித்தாந்த உண்மைகளை உணர இயலும்.

குறிப்புரை :

வருவித்துரைத்தன குறிப்பெச்சங்கள். `சக்திநிபாதம் வாயாதோர், வாய்த்தோர்` என்பன, முன் மந்திரத்தில், ``கோவுணர்த்தும் சத்தியாலே`` என்றதனால் கொள்ளக் கிடந்தன. அருவம் - புலனாகாமை. `ஆதாரம்` என்பது குறுகி நின்றது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் எதிர்மறை முகத்தான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன்பால் அன்புள்ளவர்களை இடமாகக் கொண்டு வெளியாகின்ற ஆற்றல்கள் எல்லாம் அவர்களுடைய ஆற்றல்கள் அல்ல; மற்று, சிவனிடத்தினின்றும் வெளியாகின்ற ஆற்றல்களே அந்த ஆற்றல்களின் முன்னிலையில் எல்லாப் பொருள் களையும் சிவன் நிற்க வைத்துச் செயற்படச் செய்தலால், உயிர் நிலையாகச் சிவானந்தத்தில் மூழ்கி, அவ்வானந்தமே மயமாம் நிலையை அடையும்.

குறிப்புரை :

`ஆகிவரும் அவை, சிவத்தினின்றும் வரும் சத்திகள்` எனவும் `அவற்றின்முன் வகுத்திட்டு எனவும், மொழி மாற்றியும், வேண்டும் சொற்களை வருவித்தும் உரைக்க சிவனது சத்தி, செயலாற்றுகையில் `அதிகாரசத்தி` எனப்பெயர் பெறும். அது சிவத்தினிடம் இருந்தே செயலாற்றாது, அவனுடைய அன்பர்களிட மிருந்தும் செயலாற்றும். அந்த அதிகாரத்து பதியப் பெறுதற்குப் புண்ணியம் வேண்டும் ``புரைத்ததி காரசத்தி புண்ணியம் நண்ணலாலே``l என்றது காண்க. செயல்கள் தாம் பலவாகலின், அவற்றிற்கு ஏற்ப அதிகார சத்திகளும் பலவாம். `இவை செயல் நோக்கியல்லது பொருள் நோக்கியல்ல` என்பதை,
``சத்திதான் பலவோ என்னில், தான்ஒன்றே; அனேகமாக வைத்திடும் காரியத்தான்; மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்;அர னுடையதாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்தவாறாம்``l
என்பதனான் உணர்க.
அதிகார சக்திகள் பலவும் அவரவரது புண்ணியத்திற்குத் தக அவ்வவரிடம் பதிந்து ஏற்புடைய செயல்களைச் செய்யும் என்க. உரன் உறுதல், எல்லாவற்றையும் செய்தும் தான் நிலை திரியாது இருத்தல். ``முன்`` என்றதும், ``சந்நிதி`` என்றதும் வெறும் எதிர்முக மாத்திரை யன்று; `இஃது இவ்வாறு ஆகுக` எனச் சங்கற்பித்தலையேயாம். இத்தகைய சங்கற்ப மாத்திரையானே சிவன் எல்லாவற்றையும் செய்கின்றான் என்பதை உணர்க. சேட்டித்தல் - செயற்படுதல். ``சேட்டிப்ப`` என்னும் செயவெனெச்சம் காரணப்பொருளில் வந்தது. ``சிவாநந்தி`` என்றது சாதியொருமை. இதற்கு, `உயிர்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. `சிவத்தினின்றும் வரும் சத்திகள்` என்றதனால், `அவற்றின் முன்னாக வகுத்தவன் சிவனே` என்பது பெறப்பட்டது. ``வகுத்திட்டு`` என்னும் செய்தென் எச்சம். `ஆசிரியன் சொல்லி, மாணாக்கன் அறிந்தான்` என்பதுபோலக் காரணப் பொருட்டாய் நின்றது. `வகுத்திட்டுச் சேட்டிப்ப` என இயையும்.
இதனால், முன்மந்திரத்தில், ``ஒருவனே தலைவன்`` என்றது பற்றி, `தலைவர் பலராதலைக் கண்டும், கேட்டும் அறிகின்றோமே; அஃதென்` என்று எழும் ஐயம் தீர்க்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொழிப்புரை :

வேதாந்தப் பொருள் முழுவதையும் மிகச் சுருக்கமாகத் தொகுத்துணர்த்தும், `ஒருமொழி அல்லது `பெரும்பெயர்` எனப்படுகின்ற மகாவாக்கியங்கள் சிலவற்றுள், `தத்துமசி` என்பதே சிறந் தெடுத்துச் சொல்லப்படுவது. (இது சாமவேதவாக்கியம்) இதனுள் `தத்` என்பது பதியாகிய சிவத்தையும், `துவம்` என்பது பசுவாகிய உயிரையும், `அசி` என்பது, உயிரைச் சிவமாக்குகின்ற அருட் சத்தியையும் குறிக்கும். எனினும், `இவற்றுள் பசுவாகிய உயிர் பஞ்ச பேதங்களை யுடைய (இத்தந்திரத்து முதல் அதிகாரம்) உடலளவில் ஏகதேசமாய உள்ளதன்று; வியாபகமானதே` என்பதை வலியுறுத்தி விளக்குவதே வேதாந்தமாகும். மண்முதல் நாதம் ஈறாகச் சொல்லப் படுகின்ற உபாதி களுள் ஒன்றும் இன்றி, நின்மலமாய் நிற்பது எதுவோ அதுவே பதிப் பொருள்` என வலியுறுத்தி விளக்குவது நாதந்தமாகும் (`உயிர் இவ்வு பாதிகளை உடைமையாலே - பசு - எனப்பட்டது` என்பதும் இதனானே விளங்கும்).
இனி, துவம் பதப்பொருளாகிய உயிர் தத் பதப் பொருளாகிய சிவத்தில் சென்று `பாலோ டளாயநீர பாலாகு மலலது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதவாறுபோல``3 சிவமேயாய் வேறு தோன்றாது ஒன்றிவிடுதலை வலியுறுத்தி விளக்குவதே போதாந்தமாகும். (போதம் - சீவபோதம். அந்தம் - அதன் ஒடுக்கம். அஃதாவது கதிரொளியில் விளக்கொளிபோலச் சிவபோதத்தில சீவ போதம் அடங்கியிருத்தல்).
[`போதாந்தம் கூறும் நிலையை எய்தி, அவ்விடத்தில உயிர் பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்துதலை வலியுறுத்தி விளக்குவதே சித்தாந்தமாகும்` என்பது குறிப்பு.]
`சிவமும், சீவனும் பொருள் இரண்டாமாயின், அவை ஒன்றாதல் எங்ஙனம் கூடும்` எனின், அவ்விரண்டற்கும் இடையே உள்ள பொதுத்தன்மைதான் அவை அங்ஙனம் ஒன்றாதற்குக் காரணம் [அத்தன்மையாவது, இரண்டும் சித்தாய் இருத்தலாம். எனவே, சடத்திற்குச் சிவத்தோடு ஒன்றுதல் கூடாமை விளங்கும்].

குறிப்புரை :

பசு - பசுவின் இயல்பு; ஆகுபெயர். பசு இயல்பைக் கூறுவதை `பசு` என்றே உபசரித்தார. இவை `பதி` என்றதற்கும் ஒக்கும். `தற்பத்துப் போய்` என்க. `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலா யிற்று. `ஐக்கியம்` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சி நின்றது. ஆதலைக் கூறுவதை `ஆதல்` என்றதும், சாயுச்சம் ஆதற்குக் காரணமாவதை, `சாயுச்சியம்` என்றதும் உபசாரம். சாதாரணம் - பொதுத்தன்மை.
இதனால், மேல், ``ஒருவனையுன்னார்; உயிரினை உன்னார்`` என்பன முதலாக எதிர்மறை முகத்தாற் கூறியவற்றை நீக்கி, உடன்பாட்டு முகத்தால் உன்னுமாறு ஆறந்தங்களுள் பெறப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபட வில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக்கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.

குறிப்புரை :

ஆதலைக் கூறுவனவற்றை ``ஆதல்`` என்றது உபசாரம். அவமம் - கீழ் (பரமம் ளு அவமம்). ``செய்தது`` எனவும், ``ஒன்று`` எனவும் கூறியது. `வடிவால் வேறாயினும், பொருளால் ஒன்றே` என வலியுறுத்தற்கு `வேதம் ஒருவரால் செய்யப்பட்டதன்று; தானே உள்ளது` எனக் கூறுபவர்க்கே (மீமாஞ்சகர்) வேதம் ஆகமத்தின் வேறாகும். `வேதமும் சிவனால் செய்யப்பட்டதே` என்பார்க்கு வேதமும் ஆகமந்தான் இது பற்றியே நீலகண்ட சிவாசாரியர், `வேதமும் ஆகமமே` (``வேதோபி ஆகம்`` சிவாத்துவித பாடியம் - பதியதிகரணம்) என்றார். வேதாகமங்கள் தோன்றிய வரலாற்றை முதல் தந்திர உரையிற் காண்க.
நவம் - புதுமை; முதலிலே உணரப்படுவது` என்பது கருத்து.
இதனால், மேற்கூறியவற்றுள் வேதாந்த சித்தாந்தங்களது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப் படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.

குறிப்புரை :

``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம்ஒன்றி லேசீவன் முத்த ராக்கி
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர்; இது என்ன பிராந்தி!`` -பக்கம் - சூ. 8 - 16.
என்னும் சிவஞான சித்தி மொழியினை இங்கு ஒப்புநோக்கியுணர்க.
இதனால், ஆறந்தங்களுள் சித்தாந்தத்தின் தலைமை அதன் பயன்கூறும் முகத்தால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொழிப்புரை :

சிவனை ஈசுரனிடத்திலும், சீவனிடத்திலும் வைத்துக் காட்டுவது வேதாந்தம். அதில் இருவகை உண்டு. ஒன்று பரிணாம வாதம்; மற்றொன்று ஆபாசவாதம். ஆபாசம் - போலி. விவர்த்தனம் ஆபாசத்துள் அடங்கும். விவர்த்தனம் - கயிறு பாம் பாதல் போலும் பொய்த்தோற்றம். `நிர்க்குணமாகிய பரப்பிரமமே தன் இச்சையால், சத்துவகுணனாகிய ஈசுரனாகவும், இராசத குண னாகிய சீவனும், தாமத குணத்தவாகிய அந்தக் கரணம் முதலிய கருவி களுமாய்ப் பரிணமிக்கும்` என்பது பரிணாம வாதம். `நிர்க் குணமாகிய பரப்பிரமத்திலே - இன்னது எனச்சொல்ல இயலாத - மாயை என்பது உண்டு. அது முக்குணங்களை யுடையது. மூன்றுநிறம் உடைய கண்ணாடியைப் போன்றது. அம்மூன்றுகூற்றிலும் கண்ணாடி -யில் நிழல் போலப் பரப்பிரமம் பிரதிபலிக்கும். அவற்றுள் சத்துவக் கூற்றின் பிரதி பலனம் ஈசுரனாயும், இராரசதக் கூற்றின் பிரதிபலனம் சீவனாயும், தாமதக் கூற்றின் பிரதி பலனம் அந்தக் கரணம் முதலிய கருவிகளாயும் நின்று செயற்படும்` என்பது ஆபாசவாதம். இந்த ஆபாசத்திற்கு அடிப்படை மாயையே யாகையால், ஆபாசவாதமே `மாயாவாதம்` எனப்படுகின்றது எவ்வகை யிலேனும் இந்தவேதாந்தம் `சகம், சிவன், பரம்` என்னும் முப் பொருளை உணர்த்துதலால், இதனை உணர்ந்த பின் ஆகமாந்தத்தை உணருங்கால், வேதாந்தக் கூற்று தூலாருந்ததி முறைமைத்தாதல் விளங்கும். தூலாருந்ததி முறைமை யாவது, `அருந்ததி மீன் மிக நுண்ணி தாதலின், அதனைக் காட்டுதல் அரிது` என்று கருதி முதற்கண், அதற்கு அருகில் உள்ள ஒரு பெரு மீனைச் சுட்டி, `அதுவே அருந்ததி` எனக் காட்டுதல் போன்ற முறை. முதலில் அப்பெருமீனைக் கண்டுணர்ந் தவனுக்குப் பின்பு, `அஃதன்று அருந்ததி மீன்; அதனைச் சார்ந்து மிக நுண்ணியதாய் விளங்குகின்றதனைப் பார்; அதுவே அருந்ததி மீன்` எனக்காட்டினால், அவன் அருந்ததியைக் கண்டுகொள்வான். இம் முறையில் அருந்ததி யல்லாத மீனை அணுக்கம் பற்றி `அருந்ததி` என்றல் போல்வது இங்குக் கூறிய வேதாந்தப் பொருள். அருந்ததி மீனையே சுட்டி, `அருந்ததி மீன்` எனக் காட்டுதல் போல்வது ஆகமாந்தப்பொருள். ஆகவே, தூலாருந்ததி முறைமை பற்றி நோக்கினால் இங்குக் கூறிய வேதாந்தமும் பயனில்லது ஆகா தாகலின், இந்த வேதாந்தமும் சித்தாந்தமேயாம். இவ்வாறு ஆகும் நிலைமையில் ஒருவனது ஞானம் அமையுமாயின், அந்த ஞானம் தசகாரியத்துள் ஒன்பதாம் நிலையாகிய `சிவயோகம்` எனப்படுகின்ற சீவன் சிவனாய் நிற்கும் நிலைமையைத் தரும். `சரியை, கிரியை, யோகம்` என்றும் தவங்களின் மிகுதியனாலே இத்தகைய ஞானத்தை எய்தினோரே, `தத்துவ ஞானிகள்` எனப்படுகின்றார்கள்.

குறிப்புரை :

`பரப்பிரமத்தை` என்னாது, ``சிவனை`` என்றது, `சித்தாந்தத்தில் சொல்லப்படும் சிவனே, வேதாந்தத்தில் சொல்லப் படும் பரப்பிரமம்` என்றற்கு. இச்சிவன், சொரூப சிவன் என்க. இஃதே பற்றித் தடத்த சிவனை, `வேதாந்திகள் கூறும் ஈசுரன்` என்றோ, `சகுணப் பிரமம்` என்றோ மயங்கற்க. சித்தாந்தம் கூறும் தடத்த சிவனும் நிர்க்குணனே. பரமன் - வேதாந்திகள் கூறும் பரமன்; ஈசுரன். ``நவம்`` என்றது, ஒன்பதாம் எண்ணுமுறைமையை. `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மிக்கு - மிகுந்ததனால். உணர்தற்கு, `இதனை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `சித்தாந்தமே வேதாந்தம்` என்னும் உண்மையை உணராதவர் வேதாந்த வாக்கியங்கட்குத் தாம் தாம் அறிந்தவாற்றால் கூறும் பொருள்களும் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கட்கு நேர் மாறானவை யாகாது, தூலாருந்ததி முறைமையவாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ மாகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொழிப்புரை :

சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.

குறிப்புரை :

தத்துவம் - உண்மை. `தத்துவமாகும்` என்னும் பயனிலை நான்கடிகளிலும் முதற்கண்ணே நின்றது. சகளம் - உருவம். அகளம் - அருவம். இவ்விரண்டைக் கூறியதனால் சகள நிட்களமாகிய உருவாருவமும் பெறப்பட்டது. தன்பரம் - தனக்கு மேலே உள்ளவர். அவர் சதாசிவர் முதலிய கடவுளர். இவரையும், சீவர்களையும், மற்றும் இவர்களது தனு கரண புவன போகங்களையும், `கனவிற் காணப்படும் மயக்கக் காட்சிபோல வியாவகாரிக சத்தைகள்; பாரமார்த்திகத்தில் இவையெல்லாம் பொய்யாய் ஒழியும்` எனக் கூறுவர் மாயாவாதிகள். `அது பொருளன்று` என வலியுறுத்தற்கு அடிதோறும் ``தத்துவம் ஆகும்`` எனக்கூறினார்.
இதனால், மேற்கூறிய வேதாந்தப்பொருள் தூலாருந்ததி முறைமைத்தாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.

பொழிப்புரை :

இதன்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொது, உண்மையை முற்ற உணர்த்தாது, ஓரளவாக உணர்த்துவது. சிறப்பு, உண்மையை முற்ற உணர்த்துவது, உலகர் உண்மையை ஓரளவே உணர்வார்; சத்தி நிபாதரே முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பு முற்ற உணர இயலும். அது பற்றியே உலகர்க்காவும், சத்திநிபாதர்க்காகவும் முறையே வேதமும், ஆகமமும் சிவனால் செய்யப்பட்டன. எனவே இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு` என்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர் உண்மைதானே பொதுவும், சிறப்புமாம் வகையில் `வேதாந்தம்` எனவும், `சித்தாந்தம்` எனவும் நிற்கின்றது என்பர் என்றபடி.
``வேதநூல், சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறும்உள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது;சைவம் அருஞ்சிறப்பு நூலாம்; நீதியினால் உலகர்க்கும் சத்தநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
-சுபக்கம் சூத். 8 - 15.
என்றது சிவஞானசித்தி.

இதனால், ஆறந்தங்களுள் வேதாந்த சித்தாந்தங்களது தலைமை அவற்றின் இயல்பு கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொழிப்புரை :

வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த நெறியில் அடையப்படும் ஆனந்தம் சிவானந்தம். அதனை முற்றப்பெற்ற உயிரே மேலான ஆனந்தத்தைப் பெற்ற உயிராகும். இனி அந்த ஆனந்தம் முப் பாழுக்கு மேலே விளைவதாகும். அதனை இவ்வுலகிலே இறைவன் செய்யும் திருக்கூத்திலும் பெறலாம். திருக்கூத்தில் பெறும் `முத்திரானந்தம், எனப்படும். அதனை எல்லாரும் பெறுதல் கூடும். சிவானந்தத்தை எந்த வகையிலேனும் பெறும் உயிரே இன்பத்தால் நிறைக்கப்பட்ட உயிராகும்.

குறிப்புரை :

பர + ஆனந்தம் = பரானந்தம். `பரா + ஆனந்தம்` என்றலும் ஆம். ஆனந்தத்தை உடையது ஆனந்தி. ``பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்`` என்றாரேனும், `சிவானந்தம் எல்லாம் மன்னியது பரானந்தி` என்றலே கருத்து. எல்லாம் - முழுதும். `முழுதிலும்` என்க. மன்னுதல் - நிலைத்திருத்தல். இரண்டாம் அடியில், `அந்தப் பரானந்தம்` எனச்சுட்டியுரைக்க. ``மேல்மூன்றும் பாழ்உறு ஆனந்தம்`` என்பதை, `மூன்று பாழுக்கும் மேல் உறு ஆனந்தம்` என மாறிக்கூட்டுக. `முப்பாழ்இவை` என்பதைப் பின்னர்க்காண்க. விரா ஆனந்தம், வினைத்தொகை. ``விரா`` என்றது உடம்பொடு புணர்த்தது. எனவே, `முத்திரானந்தம் (யாவராலும்) விராவப்படும்` என்பது கருத்தாயிற்று. கூத்தப்பெருமானது கூத்து, ``ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தலையே``l குறிப்பதாகலின், அந்த நடனத்தில் காணப்படும் முத்திரை (வீசியகரமும், எடுத்த திருவடியும்) `ஆனந்த முத்திரை` யாகும். அதனால் அதை, ``முத்திரானந்தம்`` என்றார். முத்திரானந்தம் - முத்திரையில் விளையும் ஆனந்தம்.
`இறைவன் இல்லை` எனப் பிணங்கிய தாருகாவன முனிவர்க்கு `அவன் உளன்` என விளக்கினமையால், பிட்சாடனர் கையில் காணப்படுவது `சன்முத்திரை` சன் + முத்திரை (சத் + முத்திரை) என்றும், சனகாதி நால்வர்க்கு ஞானத்தைத் தெளிவித் தமையால், தென்முகக் கடவுள் கையில்காணப்படுவது `சின்முத்திரை` (சித் + முத்திரை) என்றம் சொல்லப்படும். எனவே இம்மூர்த்திகளின் முத்திரையும் கூடி, சச்சிதானந்த முத்திரையாதல் விளங்கும்.
`பொரு` என்னும் பகுதி நேரே, `போர் செய்தல்` எனப்பொருள் தருமாயினும், உகரம் பெற்று, `பொருவுதல்` என நின்று `ஒத்தல்` என்றும் பொருளைத் தரும் ஆதலின் இங்கு, ``பொராநின்ற`` என்பது, `ஒத்திரா நின்ற` எனப்பொருள்தத்தது. ஒத்திருத்தல் - தகுதி பெற்றிருத்தல். உள்ளம் - ஆன்மா. பூரித்தல் - நிறைத்தல். பூரிப்பி - நிறைக்கப் பட்டது.
இதனால், சித்தாந்தத்தில் பெறப்படும் பயன் ஒப்புயர் வற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே

பொழிப்புரை :

ஆறந்தங்களில், `கலாந்தம், நாதாந்தம்` என இரண்டு கூறப்படினும், நாதாந்தம் கலாந்தத்துள் அடங்கும் ஆதலின், நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளின் முடிவே முடிவாகும் ஆகவே, `அந்தப் பஞ்சகலைகளையும் சுத்த மாயையுள் ஒடுக்கியும், மீள விரித்தும் நிற்பவன் சிவன்` எனக் கேட்கப்படுதலன்றிப் பிறர் ஒருவரும் அத்தன்மையராதல் கேட்கப்படாமையால், அவனே ஆறந்தங்கட்கும் மூலமாகிய வேதாகமங்களைச் செய்தருளினான்.

குறிப்புரை :

அன்றே, தேற்றம், `பஞ்ச கலைகளையும் ஒடுக்கி, விரிப்பவனே முழுமுதல் தலைவன்` என்பதும், `கீழ்க் கீழ் உள்ள சிலகலைகளை மட்டும் ஒடுக்கி, விரிப்பவர் முழுமுதல் தலைவராகாது, முழுமுதற்றலைவன் கீழ் ஒருபுடை நிற்கும் தலைவர் என்பதும் சித்தாந்தம். ஆதலின், உலகிற்கு இருவகை முதல் நூல்களைச செய்தளித்தவனும் அவனே என்றபடி. `இரண்டந்தம்` என்பதை, `நாதாந்தம்` என்பதன் பின்னர்க்கூட்டுக. என்ன - என்று சொல்லும்படி. பஞ்சாந்தகன் - ஐந்தையும் இறுதி செய்பவன். இறுதி செய்தலைக் கூறவே, தோற்றுவித்தலும் தானே பெறப்பட்டது.
இதனால், மேல் ``நாதன் உரை அவை`` எனப்பொது வகையால் சுட்டப்பட்ட தலைவன் இவன் என்பது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.

குறிப்புரை :

அன்று, பன்மையொருமை மயக்கம். ``என்னாதை`` என்பது, எதிர்மறை ஒருமை ஏவல். இஃது, `என்னாதே` என மருவி வழங்கும். ``அன்றாகும் என்னாதை` என்பதை முதல் அடியின் இறுதியிற் கூட்டுக. உணர்வு முறையில் சித்தாந்தம் முடிவானதாயினும், செயல் முறையில் அதற்கு முதற்படி யோகாந்தம் என்றபடி. அனைத்து அந்தங்களும் படிமுறையில் வேண்டுவன ஆதலின் அவற்றை, ``அன்றாகும் என்னாதை`` என்றார்.
இதனால் ஆறந்தங்களும் படி வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.

பொழிப்புரை :

பதியைப்போலவே பசுவாகிய சீவனும் அனாதி. அதற்கு அனாதியே ஒரு குற்றம் உண்டு. அந்தக்குற்றம் மேல் எழாமல் கீழாம்படி அடக்கினால் சீவன் தனது உண்மையைத் தான் உணரும். தன்னை உணர்ந்தால், பின் தலைவனை உணர்ந்து, அவனைச் சார்ந்து அவனாகி நிற்கும். அங்ஙனம் நிலையை அடைதற்பொருட்டுச் சீவன் அனாதிக்குப் பின் ஆதியாய் வந்த மலங்களும் நீங்கும்படி அவற்றைக் கடக்கும் முறையை ஞான குருவை அடைந்து வினாவும். பின் அவர் உபதேசித்தபடி நின்று, ஐந்து மலங்களும் நீங்கப் பெற்றுத் தூயதாய் உலகத்தைக் கடந்து நிற்கும். அந்நிலையில் அது சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆதல், நீர் பாலோடு சேர்ந்து பாலாதல் போல்வதாம். வேதாந்தத்தின் உண்மைப்பொருள் இதுதான்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில், `வேதாந்தப் பொருளைச் சித்தாந் -தத்தின் வழியாக உணர்தல்வேண்டும்` என்றமையால், `அதனை அவ்வாறு உணருங்கால் வேதாந்தப் பொருள் இவ்வாறாம்` என்றபடி.
ஐம்மலம் - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. இவற்றுள் ஆணவம் அனாதி; அன்றே உள்ளது. ஏனைய ஆதி; பின் வந்தவை. இரண்டாம் அடியில் ``அனாதி`` என்றது. அனாதியாய மலத்தை. அனாதிக்கு அந்தம் இல்லை ஆதலின், `அழித்து` என்னாது ``அடக்கி`` என்றார். ஆணவம் தவிர ஏனை நான்கும் ``ஆதி மலம்`` எனப் பட்டன. சம்பந்தம் ஆயினமை பற்றி, ``தத்துவாதீதம்`` என மாயே யத்தையே கூறினாராயினும் இனம் பற்றி அனுபந்தமும், சார்பு பந்தமு -மாய் உள்ள ஏனைய மலங்கட்கு அதீதம் ஆதலும் கொள்ளப்பட்டது. வினாவுதற்கு, வினாவப்படுவார் வருவிக்கப்பட்டார்.
சீவனை, `ஆதி` என்பாரை மறுத்தற்கு, ``அனாதி சீவன்`` என்றும், `மலம் இரண்டே` என்பாரை மறுத்தற்கு, ``ஐம்மலம் அற்று`` என்றும், ஆணவத்தைப் பலபட மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு ``அனாதி மலம்`` என்றும். `சீவன் சிவனாதல் நீரும், நீரும் சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், `குடம் உடைந்த வழிக் குடாகாயம் மகா காயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், மற்றும் இன்ன பிற போல்வனவாகவும் கூறுவாரை யெல்லாம் மறுத்தற்கு, ``நீர் பாலாதல்`` என்றும் கூறினார்.
``ஐம்மலம் அற்று அப்பால் ஆம்`` என்பதை ``வினாவும்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `அது நீர் பால் ஆதல் போல்வது` எனவும், `இதுவே வேதாந்த உண்மை` என்று எழுவாய்கள் வருவித்து, தேற்றேகாரத்தை மாற்றிவைத்துரைக்க. அதீதம் ஆதற்குரிய முறையை ``அதீதம்`` என்றார்.
இதனால், மேல் ``நாடில் இரண்டந்தம் பேதமதென்னில் பெரியோர்க் கபேதமே`` என்றது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.

பொழிப்புரை :

`உயிர், பரன், திருவருள்` என்னும் முப்பொருளை யும், `அவற்றுள் ஒன்றையும் விடாது முறையே உணர்த்துகின்ற, `துவம், தத், அசி` என்னும் மூன்று பதங்களால் ஆகிய வேதாந்த மகா வாக்கியத்தை அனுபவமாக உணர்வதால், நீ சடமாகிய பாசங்கள் ஆகாது, சித்தாகி விடுவாய். ஆயினும், அதன்பின் `யான் எதனையும் யானே அறியமாட்டாமையால், தூலசித்தாகின்ற எனக்கு எஞ் ஞான்றும் அறிவித்து வருகின்ற சூக்கும சித்து ஒன்று உண்டு என உணர்ந்து, எதனையும், `யான் அறிகின்றேன், யான் செய்கின்றேன்` எனச் செருக்குதலை விடுத்து, அந்தச் சூக்கும சித்தின்கீழ்ப் போய் அடங்கியிரு. அப்பொழுதே வேதாந்தம் சித்தாந்தம் ஆகிவிடும்.

குறிப்புரை :

சிவன், அவனது அருளைக் குறித்த ஆகுபெயர். வாக்கியம், `தத்துவமசி` என்று இருப்பினும் உண்மையில் அதன் சொற்கிடக்கை முறை, `துவம் தத் அசி` என்பதே ஆதலை விளக்குவார். `தொம் தத் அசி` என்றார். `அசி` என்பது, `ஆகின்றாய்` எனப் பயனிலை ஆதலாலும் அது முன்னிலையிடத்தது ஆதலாலும் `துவம்` (நீ) என்னும் முன்னிலை எழுவாய் முதற்கண் நிற்றலே முறையாதல் அறிக. எனவே, `தத்துவமசி` என்ற மகாவாக்கியத்தின் பொருள், `நீ அது ஆகின்றாய்` என்பதே ஆகின்றது.
ஒரு பொருள் மற்றொரு பொருளேயாதற்குக் காரணம் அவற்றிடையே யுள்ள இயைபு. அவ்வியைபுதான் பல. `குடம் மண் ஆகின்றது` என்பதில் ஆதற்குக் காரணம் காரிய காரண இயைபு. அது போன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் பிரம பரிணாமவாதிகள்.
`வெண்மை தாமரை யாகின்றது`, `இலை பூ காய்கள் மரமாகின்றன` என்பவற்றில் ஆதற்குக் காரணம் குண குணி, இயைபும், அவயவ அவயவி இயைபும் ஆகும். இவைபோன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் விசிட்டாத்து விதிகள்.
`பாம்பு பழுதையாகின்றது`, `அரசன் ஆண்டியாகின்றான்` `குடாகாயம் மகாகாயம் ஆகின்றது` என்பவற்றில் ஆதற்குக் காரணம் காட்சிவகையும், நிலைமை வகையும், பொருள் ஒருமை வகையும் ஆகும். இவைபோன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணமும் என்பர் கேவலாத்து விதிகள்.
இவரெல்லாம், `வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு, வேறு` எனப் பேதம் கூறுபவரும், சித்தாந்தத்தை ஏனையோர் கூறும் வேதாந்தம் ஆக்குபவரும் ஆவர். அவர்களையெல்லாம் மறுத்து, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம், ``நான் இவள்ஆம் பகுதிப் பொற்பு``* என்று அருளிச்செய்தபடி, `தலைவன் தலைவி ஆகின்றான்` என்பதில் ஆதற்குக் காரணம், தலைவனது உணர்வு தன்னை உணரும் உணர்வாகாது, தலைவி தன் நலத்தையே உணரும் உணர்வாதலாம் அது போன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் எனச் சித்தாந்தம் கூறுவார், ``அறிவாகியும் சென்று அடங்கி`` என்றார். ``தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னை``* என்பதில், ``என் -றன்னை`` என்றதும், ``என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``l என்பதில் ``என்னை`` என்றதும் உயிருணர்வையே -யாம். இவற்றில், ``கொண்டது`` எனவும், ``விழுங்கி`` எனவும் கூறப் பட்டதே இங்கு, ``அடங்கி`` எனக்கூறப்பட்டது. `அடங்குதி` என்னும் இகர ஈற்று ஏவல் வினை தகரம்பெறாது நின்றது, ``நன்றுமன் இது நீ நாடாய் கூறி``8 என்பதிற்போல.
``அறி`` என்பது, `தொந்தத்தசி` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றதனோடு வினைத்தொகைபடத் தொக்கது. அயர்வு - அறியாமையால் கொள்ளாதொழிதல்.
இதனால், முன் மந்திரத்தில் கொள்வகையால் விளக்கிய உண்மை, சொற்பொருள் வகையால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.

பொழிப்புரை :

பொது மறையாகிய வேதத்தை மட்டுமே நூலாகக் கொண்டு, சிவாகமங்களை நூலாகக்கொள்ளாதவர்கட்குத் தலையான மகாவாக்கியமாய் உள்ளது, ``ஸோஹம் அஸ்மி`` என்பது [இதன் பொருள், `அது நான் ஆகின்றேன்` அல்லது, `அவன் நான் ஆகின்றேன்` என்பது `தத்துவமசி` மகாவாக்கியத்தில் முன்னிலையில் வைத்துச் சொல்லப்பட்ட பொருளே இதில், தன்மையில் வைத்துச் சொல்லப்பட்டது. ஆகையால் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளது வடிவு வேற்றுமையே யன்றிப் பொருள் வேற்றுமையில்லை. `தத்துவமசி` மகாவாக்கியம், மாணவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர் கூற்று. `ஸோஹம் அஸ்மி` மகாவாக்கியம், ஆசிரியர் உபதேசித்த பொருளை அனுபவமாகக் காணும் மாணவன் கூற்று. இவற்றால் இவை முன்னிலையிடத்தும், தன்மையிடத்தும் ஆயின].
இனிப் பொதுமறையாகிய வேதத்தோடு, சிறப்பு மறையாகிய சிவாகமங்களையும் நூலாகக் கொள்வோர், வேதாந்தத்தில் `ஸோக மஸ்மி` எனப் பொதுவாகக் கூறப்பட்டது, உண்மையில், `சிவோஹ மஸ்மி` எனக்கொள்வர். (இதன் பொருள், `சிவன் நான் ஆகின்றேன்` என்பது). அக்கொள்கையே சிறப்பு மறையாகிய சிவாகமங்கள் ஆராய்ந்து காட்டும் முடிநிலை முடிபாகும். அந்த முடிபைப் பல்லாற்றா -னும் வலியுறுத்த எழுந்த நூல்களே `சிவாகமம்` எனப்பெயர் பெற்று விளங்குகின்றன.

குறிப்புரை :

`இருவகை நூல்களின் முடிவும் பொதுவும், சிறப்பும் ஆகின்ற அத்துணையேயல்லது, அவற்றிடையே பிறிது வேற்றுமை யில்லை` என்பது குறிப்பு.
`மாமறையாளர்தம் சென்னியது சோகம் ஆம்` எனவும், `ஈது, ஆன சிவோகமாம் என்ன, அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்` எனவும் இயைத்துக் கொள்க. ``தோன்றும்`` என்னும் பயனிலைக்கு, `அது` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``பண்டை மறைகளும் `அது நான் ஆனேன்` என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைத் தானே``*
என்னும் சிவஞானசித்தியில், ``இப்பாவகம்`` என்றது, `சிவன் நான் ஆனேன்` என்னும் சிறப்புப் பாவனையையேயாம்.
ஒருவனை, `அவன்` எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும், ஒருபொருளை, `அது எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும் அக்கூற்றைக் கேட்டவனுக்கு என்ன பயன் உண்டாகும்? பொதுவாகச் சுட்டியவற்றைப் பின்பு சிறப்பாகச் சுட்டியவழியே, கேட்பவனுக்குப் பயன் உண்டாகும். எனவே, பொதுக்கூற்றுச் சிறப்பிற்கு முன்னோடியேயன்றி, அதுவே முடிநிலை முடிபு ஆகாமை உணர்க.
``அதுபழச் சுவையென, அமுதென, அறிதற்(கு)
அரிதென, எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருஉரு; இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு``*
என்னும் அருள்மொழியால், `பொதுவாக விளக்கமின்றியிருக்கும் மகாவாக்கியப்பொருளைச் சிறப்பாகத் தெளிய உணர்த்துவதே ஆசிரியர் வழங்கும் அருள் உபதேசமொழி` என்பது விளங்கும்.
`தத்துவமசி` என்னும் பொது வாக்கியமே, `சிவத்துவமசி` எனச்சித்தாந்த ஆசிரியரால் சிறப்பாக உபதேசிக்கப்படுகின்றது. `ஸோஹமஸ்மி` என்னும் பொது வாக்கியமே. `சிவேஹமஸ்மி` எனச்சித்தாந்த மாணவனால் சிறப்பாகப் பாவிக்கப்படுகின்றது.
`சிவாய` எனநிருவாண தீக்கையில் உபதேசிக்கப்படுகின்ற முத்தி பஞ்சாக்கரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதனால், `ய, சி, வா` என அமையும் எழுத்துக்கள் முறையே `துவம், தத், அசி` என்னும் பதங்களாய் அமைதல் விளங்கும். அதனால் உபதேசிக்கப்பட்ட அந்த மூன்றெழுத்துக்களை விந்துத்தானமாகிய புருவ நடுவில் வைத்துத் தியானிப்பதனால், சிவோஹம் பாவனை, அஃதாவது `நான் சிவன் ஆகின்றேன்` என்னும் பாவனை அமைந்து விடுகின்றது.
`தத்துவமசி` என்பதேமகாவாக்கியம் ஆயினும், `துவம்ததசி` என்பதே பொருளாதல் போல, `சிவத்துவமசி` என்பதே மகா வாக்கியம் ஆயினும், `துவம்சிவாசி` என்பதே பொருளாதலின், அப் பொருள் மேற்கூறிய மூன்றெழுத்துக்கணிப்பால் அமைதலை உணர்க.
இதனால், வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றாம் முறைமையும். அவற்றுள் சித்தாந்தமே சித்தாந்தம் ஆதலும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.

பொழிப்புரை :

உலகத்தாரால், `அறிவு, அறிவு` என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியே உள்ளன. அவற்றின் அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனும் அனாதியே உளன். அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள அறிவற்றனவாகிய பாசங்களும் அனாதியே உள்ளன. ஆயினும் அனாதியாகிய சிவனது ஞான சத்தி உயிரி -னிடத்துப் பதியுமாயின், உயிர் பிறவித்தொடர்ச்சி அறப்பெறும்.

குறிப்புரை :

``அனாதி`` எனவே, ஆதியும், அந்தமும் இலவாயின. ஞானசத்தியே அருட்சத்தி என்க. அது பதிதலே சத்தி நிபாதம். `சத்தி நிபாதம் வந்தால் பிறப்பு அறும்` என்றாரேனும், `ஞானம் நிகழப் பிறப்பறும்` என்றலே கருத்தென்க.
இம்மந்திரத்தில் கூறப்பட்டன, மேல், ``பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்``8 என்னும் மந்திரத்துக் கூறப்பட்டனவே யாதலின், அவை நெடுஞ்சேயவாயினமைபற்றி, இங்கு இயைபு படுதற் பொருட்டு மறிதுணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

பசுப்பல கோடி பிரமன் முதலாப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``அனாதி`` எனப்பட்ட பசுக்கள் பிரமதேவன் முதலாகக் கோடிக் கணக்கில் உள்ளன. ஆயினும், அவற்றைக் கட்டியுள்ள பாசங்கள் மூன்றே. (ஆணவம், மாயை, கன்மம்). பதி பசுக்களைக் கட்டியுள்ள பாசங்களை அறுத்துவிட்டால், பசுக்கள் பசுத்தன்மை நீங்கிப் பதியைப் பற்றிக்கொள்ளும். பின்பு அவை பதியை விட்டு நீங்கமாட்டா.

குறிப்புரை :

`பிரமன்` முதலிய பெயர்கள் பிறப்புப் பற்றி வருவனவாம். `பிரமன் முதலா` என்றது, காரணக் கடவுளர்களைக் கீழ்த் தொடங்கிக் கூறியது. `அறுப்பது பதி` என்பது பாரிசேடத்தால் அமைந்தது. `பந்தம் அனாதியாய் இருக்கும் அதினின்றும் நீங்குதல் உளதாதல் போலப் பதியைப் பற்றிய பின்னும் அதினின்றும் நீங்குதல் உளதாகும்போலும்` என நிகழும் ஐயத்தை நீக்குதற்கு ``பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே`` என்றார். பாசங்களின் சத்தி காலப் போக்கில் மெலிவடைவன அதனால் உயிர் அவற்றினின்றும் நீங்குதல் உளதாகின்றது; சிவசத்தி அத்தன்மைத்தன்றாய் என்றும் ஒருபெற்றித் தாம் ஆதலின் சிவத்தை அடைந்த உயிர்க்குப் பின் அதனினின்றும் நீங்கும் நீக்கம் இல்லை என்க.
``துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்``l
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``3
என்னும் திருமொழிகளையும் நோக்குக. `அறுத்தால் நீங்கிப் பற்றிவிடா` என்றதனால், `பசுக்கள்தாமே பாசங்களை அறுத்துக் கொள்ள வல்லுன அல்ல` என்பது பெறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கி னல்லது
எட்டுணை யாயினும் யான்அவிழ்க் கறியேன்``*
என்றது காண்க. ``தலைவனைப் பற்றி விடா`` என ஒருமையும், பன்மையுமாகக் கூறியவற்றால், `பதிப்பொருள் ஒன்றேயன்றி, இரண்டாவதில்லை` என்பது பெறப்பட்டது.
இதனால், `முப்பொருளில் பதி ஒன்றே; பசுக்கள் எண்ணில; பாசம் மூன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே கிடந்த பாசநிலையிலே கிடந்தாலும் அப்பொழது அவைகட்கு உண்டாகின்ற பயன் மூன்று. அவை, `அறம், பொருள், இன்பம்` என்பனவாம். நான்காவதாகிய வீடு அந்நிலையிலே கிட்டாது. அது கிடைக்க வேண்டுமாயின், அந்த மூன்றும் நீங்குதற்கு ஏதுவாகிய ஞானம் ஒன்றையே விரும்பிப் பதியை உலகப் பற்றுச்சிறிதும் இன்றி, நாள்தோறும் வழிபடுங்கள். வழிபட்டால் அந்தப் பதி, குடத்தில் இட்ட விளக்குப் போல மறைந்திருந்த நிலையினின்றும் நீங்கிக் குன்றில் இட்ட விளக்குப் போல வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

`அது வெளிப்பட்டு விளங்கவே, முன் மந்திரத்திற் கூறியபடி பாசம் அறுக்கப்படப் பதியைப் பற்றிக் கொள்ளும் நிலை உளதாம்` என்பது குறிப்பெச்சம். `கிடக்கின்ற ஆற்றிலே` என உருபு விரித்துக்கொள்க. பயன், உயிர்கள் அடையத்தக்க பயன் `அவை அறம் முதலிய நான்கு` என்பது வெளிப்படை. நடத்தல், இங்கு நீங்குதல். ``இம்மூன்றும் - விட்டதே பேரின்ப வீடு`` என்னும் ஔவையார் வாக்கையும் நினைக. நடக்கின்ற ஞானம் - நடத்தற்கு ஏது வாகிய ஞானம். அறம் முதலிய மூன்றும் உலகியலாதலின் அவை பாச நிலையிற்றானே நிகழ்வவாயின. விளக்கால் அல்லது இருள் நீங்காதவாறுபோல, ஞானத்தால் அல்லது உலகியல் நீங்காமை பற்றி, ``மூன்றும் நடக்கின்ற ஞானம்`` என்றும், பதியைத் தொழுதலே தவம் ஆதலாலும், அத்தவத்தை உலகப் பற்றுடன் செய்யின் உபாயத் தவமும், பற்றற்றுச் செய்யின் உண்மைத் தவமுமாம். ஆதலால், உண்மைத் தவத்தாற்றானே ஞானம் உண்டாம் ஆதலாலும், ``தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின்`` என்றும், `தொழுதல் நியமமாதல் வேண்டும்` என்பார். ``நாடோறும் தொழுமின்`` என்றும் கூறினார். பதியைத் தொழுதலாகிய தவம், `சரியை, கிரியை, யோகம்` என மூன்று என்பதும், `அத்தவத்தானே பதிஞானம் உளதாம்` என்பதும் மேல் பல இடங்களில் கூறப்பட்டன. குடத்திட்ட விளக்கு, குன்றில் இட்ட விளக்கு` இருதொடராக்கி உரைக்க. ``அது`` என்றது, உபநிடத வழக்கு. `பதி` என்றவாறு. `குடத்தில் இட்ட விளக்காயுள்ள அது, குன்றில் இட்ட விளக்காம்` என்க. சாதன சாத்தியங்கள் தம்முள் இயைபிலாவாதல் கூடாமையின், தொழுவதும் பதியையேயாயிற்று.
இதனால், `பதியால் பாசம் அறுக்கப்படுதல் இவ்வாற்றால்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முற் பாசத்தை நீக்குதற்குப் பிற்பாசங்களைக் கூட்டிப் பிறப்பு இறப்புக்களில் சூழலவைத்து இவனை, `அஃதும் கருணையே` என அறிந்து அவன் மாட்டு அன்பு செய்து அவனை நினைப்பவர். அவ்வாறு நினைத்தபின், அவன் பிறப்பு இறப்புக்களில் வைத்துள்ளமை பற்றி நாணம் உறுதலும், அந்நாணத்தால் அதனை வன் கண்மையாகக் கருதுதலும் எங்ஙனம் உளவாகும்? உளவாகா.

குறிப்புரை :

முற்பாசம், ஆணவம், பிற்பாசம், மாயை கன்மங்கள். பாசத்தால் பாசத்தை நீக்குதல் ஆடையின் அழுக்கினை உவர்மண் முதலிய அழுக்கினால் நீக்குதல் போல்வதாகும். இவ்வுண்மையை உணர்வார் பிற்பாசங்களைச் சேர்த்தமையை வன்கண்மையாகக் கருதார் என்பதாம். பிற்பாசங்களைச் சேர்த்தமையே மேற்காட்டியபடி ``கட்டிய நீ`` எனப்பட்டது.l `வைக்கின்றவாற்றை உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்` என்க.
இதனால், கட்டியவனே பதிதான்` என அவனை வெறாது அன்பு செய்து, முன்மந்திரத்திற் கூறியவாறு, `நாள்தோறும் தொழுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.

பொழிப்புரை :

ஒருவனுடைய உடலில் பற்றிய விடம், மணி மந்திர ஔடதங்களால் நீங்கிப் போனபின்பு மீண்டும் அஃது அவன் உடலில் ஏற இயைபில்லாததுபோல, மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவன், அவ்வுணர்வினால் அவனோடு ஒன்றியிருந்த பாசங்கள் வேறாகி நீங்கிவிட்ட பின்பு, அவன் அப்பாசங்களோடு பொருந்துதற்கு இயைபில்லை. அதனால், அவன் தன்னைத் தடை செய்திருந்த கேவல சகல நிலைகளைப் போக்கி சாக்கிரத்தில் அதீதமாகிய நின்மல துரியாதீதத்தில் அழுந்திச் சீவன் முத்தனாகியே நிற்பான்.

குறிப்புரை :

கட்டிய கேவலம் - ஒன்றையும் அறியாத கேவலம். காணும் சகலம் - சிறிது அறிவு பெற்றுச் சிலவற்றை அறிகின்ற சகலம். சுடுதல் - போக்குதல். `தோன்றும்` என்பது பாடம் அன்று. `மெய்கண்டான்` என்பது நாயனாராலே கூறப்பட்டிருத்தலும் சிவஞான போதத்தில் அச்சொல் ஆளப்பட்டிருத்தலும் குறிக்கொளத் தக்கன.
இதனால், `பசுக்கள் தலைவனைப் பற்றிய பின் விடா` என மேற்கூறியது, உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

பொழிப்புரை :

சத்தி நிபாதம் வரப்பெற்றமையால், `நாம் உய்யும் வழியாவது யாது` என ஏக்கற்று ஆராயும் பக்குவிகள் அவ்வழியை உணர்தற் பொருட்டுச் சிவாகமங்கள் வழியாகச் சிவபெருமான் அருளிச் செய்தவை, பதியேயன்றிப் பசு பாசங்களின் அனாதி நித்தத் தன்மையும், அவற்றுள் பசுக்கள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியை அடையும் முறைமையும் ஆகும். ஆயினும் அவைகளை அறியும் பக்குவிகள் உலகத்து அரியர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் கொண்டு, அதன்பின் மூன்றாம் அடியையும், அதன்பின் முதல் இரண்டு அடிகளையும் கூட்டியுரைக்க. முதல் இரண்டடிகளில் சித்தாந்தத்தின் அடி நிலைப் பொருள் சுருங்கக் கூறப்பட்டது.
இதனால், முப்பொருளியல்பை உள்ளவாறு உணரமாட்டா தாரது நிலைமையது இரங்கத்தக்க தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும், (உயிராயும்) இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கிஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.

குறிப்புரை :

இடபம் இலிங்கத்தை நோக்கின் பலிபீடம் அதன் பின்னதாயும், இலிங்கத்தை நோக்காது வெளியை நோக்கின் இடபத்தின் முன்னதாயும் இருக்கும், இவை சிவத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் பிற்படுதலையும், சிவத்தை நோக்காது, உலகத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் முற்படுதலையும் உணர்த்தும்.
சிவத்தை நோக்கும் உயிரைப் பாசங்கள் அடரமாட்டாது, இருந்தும் இல்லதாயக் கிடத்தலின், பலியிடப்படும் பீடமே பாசமாகின்றது. பாசத்தை, ``ஆகும் நற்பாசம்`` என்றும் இது பற்றி, `சன்மார்க்கமாகிய தத்துவப் பொருள்களே சிவாகமங்களில் சமய சங்கேதப் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ளன` என்பது - இதனை
``சன்மார்க்க
சமய சங்கே தப்பொருளும் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை``
என வியந்து கூறினார் தாயுமான அடிகள்.
இதனால், `முப்பொருள்களின் இயல்பை ஆகமங்களைப் பற்றி உணரமாட்டாதார், சிவாலயங்களின் அமைப்பை நோக்கி யேனும் உணரற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பதிபசு பாசம் பயில்வியா நிற்கப்
பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில்நில் லாவே.

பொழிப்புரை :

முப்பொருள் இயல்பை மாணாக்கர்க்கு முன்னர்க் கேட்பித்துப் பின்னர் மீள மீள அவற்றைச் சிந்திப்பித்தற்பொருட்டு அவற்றை உபதேசிக்கின்ற ஆசிரியன் மார்கட்கு உபதேச மொழியை ஆக்கி, அதுவழியாகச் சிவன் பசுக்களின் பாசங்களை அறிவே நீக்குவான். அம்முறையில் முப்பொருள் இயல்பைச் சிந்தித்துத் தெளியின் பாசங்கள் தம்மியல்பில் நிற்கமாட்டா `நிலைகெட்டு ஒடுங்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பயில்வியாநித்தம்` என்பது பாடம் அன்று. ஆறு - வழி என்றது உபதேச மொழியை அம்மொழியாவது திருவைந்தெழுத்து மந்திரமேயாதல்.
``நானேயோ தவம்செய்தேன்! சிவாயநம எனப்பெற்றேன்``l
என்னும் அனுபவ மொழியால் விளங்கும். ஐந்தெழுத்தின் உட்பொருள் முப்பொருளே என்பது.
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்,
அவன் எழுத் தஞ்சின் அடைவாம்``8
என்பது முதலியவற்றில் விளக்கப்பட்டது. ``நில்லா`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், `முப்பொருள் இயல்பைச் சிவாலயங்களை நோக்கி ஒருவாறுணர்ந்தார், பின்பு ஆசிரியரை அடைந்து அவர் உபதேசிக்கும் உபதேச மொழியைப் பெற்றுத் தெளிய உணர்ந்து உய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொழிப்புரை :

சித்தாந்தத் தத்துவங்களைச் சிவாகம ஞான பாதத்தில் அருளிச்செய்த சிவபெருமான், அப்பொருளைப் பயக்கும் தோத்திரங்களையும் கிரியா பாதத்தில் சொல்லிவைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

`அத்தோத்திரங்களையும் அன்போடு பொருள் உணர்ந்து பாடித் தோத்திரித்து உய்தி பெறுக` என்பதாம். ``தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே``8 என அப்பாரும் அருளிச் செய்தமை காண்க. ``காணும்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. சுத்த சைவம் பூர்வபக்க ஞானங்களைப் போக்கிச சித்தாந்த ஞானத்தைத் தருகின்ற சிவாகமம்.
இதனால், `சைவ சாத்திரங்களின் பொருளைச் சைவ தோத்திரங்களை நியமமாக ஓதும் முறையால் பயிலுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.

பொழிப்புரை :

மூவகை ஆன்மாக்களும் தாம் தாம் பெற்ற தனு கரணத்தளவாக அறிவு விளங்கப் பெறுதலின், அவை யாவும் `அணு` எனப்படுகின்றன ஆயினும் அவற்றின் உண்மை நிலை பதியைப் போல வியாபகமே. பாசத் தடை நீங்கியபின் உயிர் தனது உண்மை நிலை யாகிய வியாபக நிலையை அடையும். ஆயினும், பதியினது வியாபகத்தில் அது வியாப்பியமேயாம். உயிர்களின் ஏகதேச நிலை, வியாபக நிலை ஆகிய இருநிலைகளும் என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள பதியே அவைகட்கு ஆவனவற்றைச் செய்துநிற்பான்.

குறிப்புரை :

பின் இரண்டடிகளிற்போல `அறிந்த` என வர வேண்டிய பெயரெச்சம் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்று நின்றது. யாங்களும் ஆதல் வியாபகம் ஆதல். இரண்டாம் அடி அனுவாதம், அனாதி - அனாதியாய சிவன். `அனாதியில்` என உருபுவிரிக்க. உம்மை, சிறப்பு. ``அனாதியில் வியாத்தனும் ஆவன்`` என்றதனால், `முப்பொருள்களும் அதிசூக்கும சூக்கும தூலமாம் முறையால் வியாபக வியாப்பிய வியாத்தியாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்தப்பட்டது. இதுவே ``பதிபசு பாசம் வேறின்மை`` என்க. ``அவற்றையே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, `பதியே` எனக் கூட்டுக. `முப்பொருள்களும் வியாபக வியாப்பிய முறையால் சமமாய் நிற்பினும் பதியே சுதந்திரமுடையதாய் ஏனையவற்றை இயக்கி நிற்கும்`` என்றற்கு. `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` என்றார். அங்கு அவ்விருநிலைகளிலும். ``படைப்பான்`` என்றது, `எல்லாவற்றையும் செய்வான்` என்னும் குறிப்பு மொழி.
இதனால், பதி பசு பாசம் வேரின்மையும், அவற்றுள் பதியே தலைமையது ஆதலும் கூறப்பட்டன.
முன்மந்திரத்தில், `சுத்த சைவத்திலே நந்திமதி தந்து வைத்தனன்` எனக் கூறப்பட்டவற்றில் இவ்வதிகாரத்தில் எடுத்துக் கொண்ட சிறப்புப் பொருளை இதனுள் இவ்வாறு கூறிய நாயனார், இதன் தொடர்பாக மற்றும் சிலவற்றை இங்கும் கூறிகின்றார். அவை மேலே கூறப்பட்டன வாயினும், `பெற்றதன் பெயர்த்துறை நியமப் பொருட்டு` என்னும் முறையால் இவ்வதிகாரத்தில் எடுத்துக்கொண்ட பொருளோடு அவற்றையும் உடன்கூறித் தெளிவிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 11

படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.

பொழிப்புரை :

படைப்பு முதலிய செயல்கள் நிகழ்தல் `பரசிவம், பராசத்தி` என்னும் இருவராலேயாம். படைப்பு முதலிய ஐந்தொழில் களாவன, தனுகரண புவன போகங்கைள உயிர்களுக்குச் சேர்ப்பித் தலும், நீக்குதலுமேயாம். இவ்வைந்தொழில், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகையில் நிகழும். சூக்கும ஐந்தொழிலைச் சிவன் சுத்தமாயையில் தான் நேரே செய்வான். தூல ஐந்தொழிலை அவன் அசுத்த மாயை பிர கிருதி மாயைகளில் அனந்ததேவர், சீகண்டர் வழியாகச் செய்விப்பான்.

குறிப்புரை :

`முதற் பொருள் பொருளால் ஒன்றாயினும் ஞாயிறு ஒன்றே `கதிரவனும், கதிரும்` என இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல்போல, `சிவம், சத்தி` என இருதிறப்பட்டுத் தாதான் மியமாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``படைப்பாதி ஆவ, பரசிவம் சத்தி`` என்றார். `சத்தியால்` என உருபு விரிக்க. இடைப் பால் - `கேவலம், சுத்தம்` என்னும் இரண்டற்கு இடையேயுள்ள சகலத்தில், படைத்து ஒடுக்கப்படுவன தனுகரணாதிகளேயாதலின், வாளாதே, ``இவை`` எனச் சுட்டிப் போயினார். `சூக்கப் படைப் பாதியை`` எனவும், `தூலப்படைப்பாதி` எனவும் பின் முன்னாக மாற்றிக் கொள்க. ``சூக்கத்தைத் தற்பரம் செய்ய`` என்றதனால், தூலம் பிறரால் செய்யப்படுதல் விளங்கிற்று. அவற்றிற்கு ஏற்ப முதற்காரண வேறுபாடும் காட்டப்பட்டது. ``பாசம்`` என்றது, இங்கு தூலம் அதிதூலமாகிய அசுத்தமாயை பிரகிருதி மாயைகளை.
இதனால், முன் மந்திரத்தில், `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` எனக் கூறப்பட்டபொருள் அஃது ஆமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.

பொழிப்புரை :

அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம், பராசத்தி என்னும் மேலான ஐந்து நிலைகளில் நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவன். அருவத்தையும் கடந்த பரம சிவன். தூல ஐந்தொழிலைச் செய்பவன் மகேசுரன்.

குறிப்புரை :

சத்தி ஞானம், கிரியை முதலிய பாகுபாடின்றி நிலையில் பராசத்தியாம். ஞானம், கிரியை முதலியனவாகப் பாகுபட்டுப் பொதுவகை ஞானமாய் நிற்கும் நிலையில் பரநாதமாம். பொதுவைக்கிரியையாய் நிற்கும் நிலையில் பரவிந்துவாம். சிறப்புவகை ஞானமாய் நிற்கும் நிலையில் அபரநாதமாம். சிறப்பு வகைக் கிரியையாய் நிற்கும் நிலையில் அபரவிந்துவாம். இங்ஙனம் இவ்வைந்தையும் காண்க. விந்துவை முதலிற்கூறியது கீழிருந்து எண்ணும்முறை பற்றியாம். ``பரம்`` எனப் பின்னர்க் கூறினைமையின், `சத்தி, சிவம்` என்று பரவிந்து பரநாதங்களையாயிற்று. `அவ்விந்து நாதமும்` என்று எடுத்துக் கொண்டு, சூக்கத்து ஐங்கருமம் செய்வோன் சூக்கத்து ஐ` என மேலே கூட்டி முடிக்க. சூக்கத்து ஐ - அருவத்தையும் கடந்தலைவன். இங்கு, ``ஈசானன்`` என்று மகேசுரனை. என்னை? தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்பவன் அவனே யாகலின். அவன் தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்குமாறு வருகின்ற மந்திரத்தால் கூறப்படும்.
இதனால், முன் மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட சூக்கும தூல ஐந்தொழில் நிகழ்ச்சிகளில் சூக்கும ஐந்தொழில் நிகழுமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அரன் மே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்தில் கூறப்படும் பொருள் எழாம் தந்திரத்தில், ``சிவமொடு சத்தி நிகழ்நாதம் விந்து``, ``தலையான நான்கும் தனதருவாகும்`` என்னும் மந்திரங்களில் கூறப்பட்டதேயாம். ஆகையால், அவற்றில் கண்டு கொள்க.)

குறிப்புரை :

பரசிவம் - பரநாதம். மேற் சத்தி - பரவிந்து `உம்பரின் மேவும் விந்து` என்க. உம்பர் - சதாசிவத்திற்குமேல். ஐம்முகன் - சதாசிவன். ஈசன் - மகேசுரன். மேதினி ஆகும்படி - உலகம் தோன்றும்படி. படைப்போன் அரனே ஆம் இந்த அனைவரையும் உண்டாக்குபவன் ஒரு சிவனே. எனவே, `உலகம் இந்நவந்தரு பேதங்களால் நடைபெறுகின்றது` என்பதாம். ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சூக்குமம், தூலம் ஆகிய இருவகை ஐந்தொழில் களும் நடைபெறும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சகலத்தில் படைத்தல், காத்தல், உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அழித்தல், சிற்றின்பத்தை அதன் இழிவு அறிந்து வெறாது விரும்பி நுகருமாறு மறைத்தல் ஆகிய முன்னர் நிகழும் அருட் செயல்களையும், சடமாகிய பாசங்களை விடுவித்துத் தன்னைக் காட்டி யருளும் அருளலாகிய பின்னர் நிகழும் அருட்செயலையும் உயிர்கள் பொருந்த வைத்த அனாதியாகிய பரமசிவனை, இத்தொழில்களை நோக்கி, `ஐவர்` என்று கூறலாம்.

குறிப்புரை :

`மறைத்தலும் அதன்வழி நிகழும் படைப்பு முதலியனவும் அருளே` என்றற்கு அவற்றை ``முற்றோன்றும் அருளும்`` என வும், `அழித்தல்கூட அருளோ` என்றும் ஐயத்தை நீக்குதற்கு அதனை ``இளைப்பாற்றும் துடைப்பும்`` எனவும் கூறினார். தன்னிலையில் நிற்கும் சொரூப சிவன் `அனாதிசிவன்` என்றும் உயிர் களின் பொருட்டாய் ஐந்தொழில் செய்யும் தடத்தசிவன் `ஆதிசிவன்` என்றும் சொல்லப் படுவான். `ஒருவனாகிய அனாதிசிவனே, ஐந்தொழில் பற்றி ஐவர் தடத்த சிவராய் நிற்பர்` என்பது உணர்த்துற்கு, ``அனாதியை ஐந் தெனலாமே`` என்றார். ஐவர் - சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன். அவர் சம்பு பட்சத்தினர். சம்பு பட்ச அணுபட்ச விளக்கங்களை மேலே காண்க. நிலைநோக்கி, ``ஐந்து`` என அஃறிணையாகக் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் ஒன்பதாகச் சொல்லப்பட்ட பேதங்களில் தூல ஐந்தொழிற்கு உரியனவாய், யாவராலும் அறியப்படுவன ஐந்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.

பொழிப்புரை :

பதி, முப்பத்தாறு தத்துவங்களைச் சுத்த மாயையில் வியாப்பியமாகச் செய்து, அம்முப்பத்தாறு தத்துவங்கட்குக் காரணமாய் வேறுநிற்கும் மாயையை, சுத்த, சுத்தாசுத்தம், அசுத்தம்` என மூன்றாக வகுத்து, அந்த மாயை மாயேயங்களின் பின்னவாகிய `தாத்துவிகம்` என்னும் காரிய பூதங்களையும் இந்தமாயை மாயேயங்களால் ஆக்கி, அனைத்துப் பொருள்கட்கும் வேறாய் நிற்கும். (எனவே, `பசு, மாயை, மாயேயம், தாத்துவிகம் ஆகியவற்றில் கட்டுண்டு நிற்கும் என்பது பெறப்பட்டது. எனினும்) பாசங்கள் நீங்கியவழிப் பசு, பதியாகும்.

குறிப்புரை :

குண்டலி - சுத்த மாயை. ``தன்னின்`` என்பதில் இன், சாரியை மேற்சாரியை, `அவற்றினின்` முதலியன போல `மாயையில் மிகுத்திட்டு` என இயையும். `மூன்று` என்னாது, ``முப்பால்`` என்றமையால், ஒருமாயைதானே மூன்றாகி நிற்றல் பெறப்படும். `வீட` என்பது ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பதி ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. `பசு, பதி ஆதல் எவ்வாறு` என்பது. மேல் ``உயிரைப் பரனை, உயர்சிவன் தன்னை`` [மந்திரம் - 2368.] என்னும் மந்திரத்து உரையில் காட்டப்பட்டது.
இதனால், `அனைத்தையும் செய்தும் பதி அவற்றால் எய்துவ தொன்றின்றி நிற்க, பசுவே அவற்றால் பல நிலைகளை எய்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.

பொழிப்புரை :

பதி, பசுவை இயல்பாகவே உள்ள ஒரு பாசத்தின்மேல் மற்றொரு பாசம் பற்றும்படி அதனுள்ளே புகுத்தும். (இப்பாசம் மாயை, இயல்பாக உள்ளது ஆணவம்) அதன்பின், இருவினைகளாகிய குழியிலே ஆழச் செய்யும். அதன்பின், அந்த இருவினைகளுக்கு ஈடான துன்பத்தையும், இன்பத்தையும் பசு நுகர்தற்பொருட்டு அதனை நரகத்திலும். சுவர்க்கத்திலும் சேர்த்து, அங்கே சிலநாள் தங்க வைக்கும், இவையெல்லாம் இப்படித் தொடர்ச்சியாக நிகழ்தல் திரோதான சத்தியாலாம். அச்சத்தி இவ்வாறு செய்வித்தல், பசுக்கள் தம் பசுத்துவத்தின் நீங்கிப் பதியை அடையும் நாளைக் கிட்டுதற் பொருட்டாம்.

குறிப்புரை :

`வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்` என்பன திரிந்து நின்றன. தாழ்த்தல் - தங்கச் செய்தல். ``மீதுற`` என்றதனால், முன்பே ஒரு பாசம் உள்ளமை விளங்கும். ``ஆழ்க்கும்`` என்றது, குறிப்புருவகம். ``இருவினைக்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆங்கவை` என்பது ஒருசொல். ``அவற்றால்`` என்பதன் பின், `வரும் பயனை` என்பது, `நாட்கு` என்பதன்பின், `அணிமைக் கண்` என்பதும் வருவிக்க. முன்னர் ``வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்`` என்றமையால், ``நாள்`` என்றது, அவை நீங்கும் நாளாயிற்று. நாலுதல், நீளுதல், பாசங்களைச் செலுத்துதல் பற்றி இறைவனது சத்தியும், `பாசம்` என உபசரித்துக் கூறப்படும். ஆயினும் அது நலங்கருதியே செலுத்துதலின், ``நற்பாசம்`` என்றார். `நற்பாசத்தால்` என உருபு விரித்து, `இவையெலாம் நாட்கு உற, நற்பாசத்தால் நான்று அங்கு நண்ணும்` என முடிக்க.
இதனால், `பதி, பசுக்கள் பாசத்தின் நீங்கித் தன்னை அடைதற் பொருட்டுத் திரோதான சத்தியால் அவைகட்கு மாயை கன்மங்கைளச் சேர்த்து, அவை வழியாக ஐந்தொழில் புரியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.

பொழிப்புரை :

உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களில், `நான்` என்னும் முனைப்பை உண்டாக்குவது ஆணவமே. (இம் முனைப்பே, `தற்போதம்`) என்றும், `சீவ போதம்` என்றும் சொல்லப்படும். மாயையைக் கருவியாகப் பற்றி உயிர்கள் செயற்படும்பொழுது, இந்த `நான்` என்னும் முனைப்போடு செயற்படுவதால்தான் அவைகட்கு வினைகள் உண்டாகின்றன. `நான் செய்கின்றேன்` என்னும் உணர் -வோடு செய்தலால், அச் செயல்களின் பயனைச் செய்த உயிரையே நுகரச் செய்ய இறைவன் திருவுளங் கொள்கிறான். அதற்குக் காரணமும் அவன் அவ்வுயிர்கள் மாட்டு வைத்த கருணையே யன்றிப் பிறிதில்லை. அதனால், வினைப் பயனை ஊட்டுவித்தலும் அவை அவனது திருவடியை அடைதற்கு உபாயமேயாகும்.

குறிப்புரை :

`மாயையில் பண்ணிய ஊட்டல்` என்க. பண்ணிய, அன்பெறா அகஈற்று அஃறிணைப் பன்மை வினைப் பெயர். பண்ணி - பண்ணப்பட்டவற்றை. `ஊட்டற்குப் பரிந்தனன்` என்க. `அதுவும் போருளே` என எழுவாய் வருவிக்க. ``போருள்`` என்பதன்பின், `ஆதலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இதனால், இறைவன் உயிர்கள் செய்த வினைகளைத் தான் ஏற்றுக்கொண்டு, அவற்றின் பயனை அவைகளை நுகரச் செய்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு ஆணவ பாசத்தின்மேல் மாயை கன்ம பாசங்களைச் சேர்த்தது பல உபாயங்களுள் ஓர் உபாயம் அன்று. உயிர்கள் ஆணவ மலத்தினின்றும் நீங்கித் தூய்மை பெறுதற்கு அவற்றைச் சேர்ப்பது தவிர வேறு வழியேயில்லை. அஃது எதுபோலும் எனின், புதிதாகத் தோன்றிய ஆடையில் இயல்பாய் உள்ள அழுக்கினை மேலும் பிற அழுக்கை ஏற்றித் துவைத்தும் போக்குதல் போல்வதாம். அதனால், இயற்கையாக அன்றி இறைவனால் சேர்க்கப்பட்ட பாசங்கள் யாவும் அருளால் சேர்க்கப்பட்ட பாசங்களே.

குறிப்புரை :

``மூலமே`` என்னும் ஏகாரம். தேற்றம். `அறுவையை எற்றல்போல்` என்க. எற்றல் - அடித்தல்; துவைத்தல். ``போல்`` என்றும் முதனிலை, `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. அருட்பாசம் - அருளால் சேர்க்கப்பட்ட பாசம்.
இதனால், ``அண்ணலடிசேர் உபாயமதாகும்`` எனப்பட்டது. உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பாசம் பயில்உயிர் தானே பரம்முதல்
பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப
பாசம் பயிலப் பதிபரம் ஆதலால்
பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.

பொழிப்புரை :

பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்கு தலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறு வார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?

குறிப்புரை :

`கூடாது ஆதலின், அங்ஙனம் கூறுதல் அடாததே` என்பது குறிப்பெச்சம். ``பயில்`` இரண்டும் முதனிலைத் தொழிற் பெயர். இரண்டிடத்தும் `பயிலுதலால்` என உருபு விரிக்க. முதல் அடியின் ஈற்றில் `என்னும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது, இரண்டாம் அடியில், ``தான்`` அசை நிலை. `உயிர் பசுவே என்ப` எனத் தேற்றேகாரத்தை மாற்றி வைத்து உரைக்க. ``பயில`` இரண்டில் முன்னது, `பயிலும் படி` எனவும், பின்னது `பயிலுதலால்` எனவும் பொருள் தந்தன. பயிலுதல் - செயற்படுதல். பரம் - தலைமைப் பொருள். ஈற்றில் உள்ள ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், `பசுவே ஐந்தொழில் செய்யும்` என்பாரையும், `பதியே தனது விளையாட்டால் பசுவாகி ஐந்தொழிற்படும்` என்பாரையும் மறுத்துச் சித்தாந்தம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.

பொழிப்புரை :

வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.

குறிப்புரை :

`அருந்தவரை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. ``உத்தரம்`` இரண்டில் முன்னது விடை; பின்னது முடிநிலை. மேனி - தக்கிணா மூர்த்தி அணையப் பிடித்தல் - அவர்களது தலைமேற் கை வைத்துத் தானாகச் செய்தல். அத்திரு மேனியின் கைக் குறிப்பு, சின்முத்திரை, இம்முத்திரை.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்பதையும்,
``பதியினைச் சென்றணு காபசு பாசம்``*
என்பதையும்,
``பதியணு கில்பசு பாசம்நில் லாவே``
என்பதையும் உணர்த்தும் அதனால் அருந்தவர் ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தனர்``* என்க. ``தம்மை அடைந்து நின்றார்`` என்றமையால், பின் தலைவனை அடைந்து நின்றமை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `இவ்வதிகாரப் பொருளே முதல் ஆசிரியனாகிய தென்முகக் கடவுளால் முனிவர்க்கு உணர்த்தப்பட்டது` என்பது கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொழிப்புரை :

முற்செய் தவம் இன்மையால் இப்பிறப்பில் நல்லறி வின்றிப் புல்லறிவேயுடையார், தம்மை எல்லாம் அறிந்தவராக மதித்துக்கொண்டு, ஏவவும் செய்கலாது, தாமும் தேராதுl பயனில வற்றைப் `பயனிடைய` எனவும், பயனுடையவற்றை `பயனில` எனவும் கொண்டு தாம் வேண்டியவாறே செல்பவர்களை, `தலை கால் தெரியாது திரிபவர்` என்றல் வழக்கு. அதன் பொதுப் பொருள் வெளிப் படையாயினும், சிறப்புப் பொருள் குறிப்பாகவே உள்ளது. அஃது யாதெனின், `கால்` என்பது சிவனது சத்தி. அஃதே திருவருள். அஃதே எல்லாவற்றிற்கும் வினை முதல் `தலை` என்பது உயிர். `உயிர்க்கு அறிவு உண்டாதல் தலையிலே` என்பது யாவரும் அறிந்தது. எனவே, ஞானம் உதயமாவது `தலை` எனப்படுகின்ற உயிரினிடத்திலேதான். அந்த ஞானம் தானே உதயமாகாது. `கால்` எனப்படுகின்ற சிவசத்தி உதிப்பிக்கவே உதயமாகும். (ஞானகுரு மாணாக்கனது தலையில் தமது காலை வைத்துத் தீக்கைசெய்தல் இந்த உண்மையை நன் குணர்த்தும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் காலில் தங்கள் தலைபடும் படிவணங்கும் மரபும் இது பற்றியது. ``பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே``8 என மெய்கண்டதேவர் அருளிச்செய்த குறிப்பும் உணரத்தக்கது.
``கோள் இல் பொறியிற் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை``*
என்றதும் இக்குறிப்பினதே.) காலாகிய சிவசத்தி உதிப்பிக்கின்ற ஞானத்தின் பயன் அந்த உயிர் வீடு பெறுதலாம்.

குறிப்புரை :

`கால்` என்பது, `தாள்` எனவும்படும் தாள் - முயற்சி -யுமாம். முயற்சியே கிரியை. ``எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி``* என்றபடி, இச்சையும் கிரியையும் ஞானத்தின் வேறு பாடேயாம். இச்சை எப்பொழுதும் ஒரு நிலையிலேயிருக்கும். ஏனை ஞானமும், கிரியையுமே செயற்படும் அதனால், இயங்கு கருவி யாகிய கால், (இறைவனது இருதிருவடிகளும் இறைவனது) ஞானமும், கிரியையுமேயாம். உயிர்கட்கு அறிவு தலையில் இருத்தலால், அவற்றின் இச்சை செயல்களும் தலையில் உள்ளனவாம். எனவே, `காலின்கீழ் உள்ளது தலை` என்பது பொருள். இறைவனது ஞானேச்சாக் கிரியைகள் வியாபகமாய் நிற்க. அவற்றில் உயிர்களின் ஞானேச்சாக் கிரியைகள் வியாப்பியமாய் நிற்றலைக் குறிப்பதாம். சிவமும், சீவனும் ஒன்றும் ஆகாமல் இரண்டும் ஆகாமல் நிற்பதே சித்தாந்தபரமுத்தியாகலின், அதனை விளக்குதற்கு எத்தனையோ தொகைச் சொற்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் விடுத்து, ``தாடலைபோல்`` எனக் கூறுவதும் இது பற்றி.
``தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ ஏகம்எனக் கொள்``*
என்பது காண்க. `காறலைபோல்` எனக் கூறலும் உண்டு. ``என்பர்`` என்பதை, ``காரணம்`` என்பதன் பின்னர் கூட்டுக. `கால்` என்பதைக் குறையெண்ணுப் பெயராகக் கூறுவோர், `தலை` என்பதை அங்ஙனங் கூறமாட்டாமை அறிக.
இதனால், `அடிதலை தெரிதல்` என்னும் வழக்கின் உண்மைப் பொருள் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், ``காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே`` என்ற சிவஞானமாகிய பதி ஞானமாம்) உடம்பில் `தலை, கால்` என்பன. வெளியுறுப்பாய் இருத்தல் யாவரும் அறிந்தது. ஆயினும் உடம்பிற்கு உள்ளே தலை கால்கள் உள்ளன; அவற்றைப் பலர் அறியார். அந்த `தலை, கால்` என்பன முறையே தலை உச்சியும், மூலாதாரமும் ஆகும். (தலை உச்சி `ஏழாம்தானம் எனப்படும்) அந்தத் தலையில் எல்லாருக்கும் இயல்பாக உண்டாகின்ற அறிவு உலகியல் அறிவாகும். அந்த அறிவு, மூலாதாரத்தில் உள்ள குண்டலி கீழ் மேலாகச் சுழன்று செய்யும் செயலால் யோகக்காட்சி அறிவாய் மாறி நிகழப்பெற்றவர், அந்த அறிவையே உடையராய் இருத்தலன்றி, உலகியல் அறிவை உடையவர் ஆகார்.

குறிப்புரை :

`தலையும், அடியும் முறையே உச்சியில் உள்ளது. மூலத்தில் உள்ளது` என நிரல்நிறையாக வைத்து உரைக்க. ``உள்ளது`` என்பது, ``மூலம்`` என்பதன் பின்னரும் சென்று இயையும். தலை அடியான அறிவு - தலை அறிவு அடி அறிவாக மாறிய அறிவு. `தலை அடியாகவே இருந்தார்` என்க.
இதனால், `அடி தலை யறிதல்` என்னும் வழக்குச் சிவஞான நிகழ்ச்சியைக் குறித்தலேயன்றி யோக ஞான நிகழ்ச்சியையும் குறிக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

பொழிப்புரை :

`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.

குறிப்புரை :

`அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*

பண் :

பாடல் எண் : 4

சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடி -யினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தி னுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியி -லேயும் உள்ளது. (இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில்,) முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.

குறிப்புரை :

அந்தக்கரணம் நான்கனுள் சித்தம் ஒன்றை மீள மீள இடைவிடாது நினைந்து நினைந்து நிற்றலால்தான் ஆன்மா அப்பொருளில் அழுந்தி நின்று அதனை அனுபவிக்கின்றது. அது பற்றியே, ``திருவடி சிந்தையினுள்ளே`` என்றார்.
``சிந்திப் பரியன;சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன ... ... ஐயாறன் அடித்தலமே``3
``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக``*
என அருளிச் செய்தன காண்க.
``என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்;
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன்அடி யான்என் றறிதலும்,
தன்னை நானும் பிரான்என்றறிந்தேனே``l
எனவும்,
``எந்த மாதவம் செய்தானை நெஞ்சமே,
பந்தம் வீடவை யாய பராபரன்,
அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளும், சிரத்துளும் தங்கவே``8
எனவும் போந்த அப்பர்திருமொழிகளை இங்கு உடன்வைத்துக் காண்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட திருவடிப் பேற்றின் நிலை மேலும் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொழிப்புரை :

சொற்களால் சொல்லவராராத ஒரு நிலம்; அவ்வாறான ஓர் ஓளி; இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற அதற்கு அப்புறத்தாகிய இடமே என்னுடையதலைவர் இருக்கும் இடம். அவர் அவ்வாறிருக்கவும் மனக் கண்ணிற்கும் காணப்படாத ஓர் ஒளியாயும், வாக்கிற்கு வாராத ஒரு மந்திரமாயும் உள்ள அதனது இயல்பையும், அதனை அடையும் வழியையும் ஒருவன் எனக்குச் சொன்னான். அந்த வழியிலே நின்றமையால், முன் தந்திரத்திற் கூறியவாறு என் தலைவனது திருவடியை யான் அடைந்தேன்.

குறிப்புரை :

``பன்னாத`` என்பதை ஒளிக்கும் கொள்க. `ஒரு நிலம்` என்றும், `ஓர் ஒளி` என்றும் சொல்லப்பட்டது. `பரவெளி` என்றும், `சிதாகாசம்` என்றும் சொல்லப்படுகின்ற பராசத்தி அது தன் குணமாக, அக்குணத்தையுடைய குணியாதல் பற்றிப் பரமசிவனை, அதற்கும் அப்புறத்துள்ளவனாகக் கூறினார். ``அப்பால்`` என்றது, `அந்த இடம்` என்றபடி. `அப்புறத்துள்ள அந்தப் பால்` என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளத்துள் ஒரு பொருளை நினைப்பது என்றாலும் யாதானும் ஒருவடிவில்தானே நினைத்தல் வேண்டும். அஃது இயலாமையால், ``உன்னா ஒளி`` என்றார். உரை செயா மந்திரமாவது உரைசெய்யப்படும் மந்திரங்களையெல்லாம் வாயிலாகக் கொண்டு இயக்கி, அம்மந்திரங்கைளக் கணிப்பவர்க்கு அவற்றின் பயனைத் தந்து நிற்கும் அந்தப் பொருள். இங்ஙனம் இருவகையாகக் கூறிய இதுவும் திருவருளைக் குறித்ததேயாம். ``உரைசெயா மந்திரம்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. ஒருவன் - குருமூர்த்தி. அவ்வெழுவாய் வருவிக்கப்பட்டது. குருமூர்த்தி அருளைச் சொன்னதாவது, `உண் அறிவிற்கு அருளையே தாரகமாகக் கொண்டு, அறிந்தும், செய்தும்நில்` எனக் கூறியது. `அவ்வழியில் நிற்கவே, தலைவனது திருவடிப்பேறு கிட்டிற்று` என்பதாம்.
இதனால், `அடி, தலை` என்பவற்றுள் இறைவனது, திருவடிபின் சிறப்பும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்ப -துடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடை யறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங்களில் செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தா அவன் தனது திருவடிகளை உங்கட்கும்காட்டி உய்யக்கொள்வான்` என்பது குறிப்பெச்சம் ``தோற்றும்`` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம் பின்னர் ``மதி`` என்றும் ``ஓதும்`` என்றும் கூறுதலால், முன்னர்வைத்த தலைமேலாயிற்று.
``வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சுழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே``l
என்ற அப்பர் திருமொழியும் காண்க.
`இறைவனைத் தியானித்தற்குரிய சிறப்புக் காலங்கள் மூன்று` என்ப. அவை `காலை நண்பகல் மாலை` என்பன
``தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங்கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே``8
என ஓதியருளினமை காண்க. இவைகளை, `சந்தியாகாலம்` என்பர். சம் தியா காலம் - நன்றாகத் தியானித்தற்குரிய காலம்.
இனி வழிபாட்டிற்குரிய காலங்களை `முன் மூன்று, பின் மூன்று` என வைத்த ஆறு காலங்களும் சொல்லப்படும் `வைகறை, காலை, நண்பகல்` - என்பன முன் மூன்று காலங்கள், `எற்பாடு, மாலை, யாமம்` - என்பன பின்மூன்று காலங்கள். ``கதிசெயும்` என்பதில், செய்தல் - உண்டாக்குதல்.
இதனாலும் இறைவனது திருவடியை அடையும் முறையே வகுத்துச் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
தரித்துநின் றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொழிப்புரை :

எல்லாப்பொருள் கட்கும் ஆதாரமாய் அவை -களைத் தாங்கிநிற்பவனாகிய சிவன் தன்னை எண்ணாதவர்களது உள்ளத்தை வெறுத்தும், அடைதற்கரிய அப்பரிபாகத்தை அடைந் தமை காரணமாக பரிபாகிகளது உள்ளத்தை விரும்பியும் நிற்கின்றான். ஆகவே, அவனது திருவடியைத் தனது உள்ளத்தில் தாங்கி நிற்பவன் இவ்வுலகத்திருப்பினும் சிவலோகத்தில் இருப்பவனேயாவான்.

குறிப்புரை :

`தரித்து நின்றான், கருதாதவர் சிந்தை கரித்து நின்றான்; அப்பரிபாகத்தானே பரித்துநின்றான்; அவன் அடி தன்னுடை நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதிநாதன்` என இயைத்துப் பொருள்கொள்க; ``பரித்து`` என்பதை, `பரிப்ப` எனத்திரிக்க. ``சிந்தை`` என்பது பரித்த லோடும் இயையும். அகரச்சுட்டு அடைதற்கு அருமை தோன்றி நின்றது. `அவன் அடி` எனச் சுட்டியுரைக்க. கரித்தல் - வெறுத்தல். `கருதாமைக்குக் காரணம் பரிபாகம் இன்மை` என்பது தோன்றுதல் அறிக. `அமரர்` என்பது தேவரையும், `அமராபதி` என்பது தேவ ருலகத்தையும் குறித்தல் பொது வழக்காயினும், சிவநெறி வழக்கில் அவை சிவ சாலோக சாமீப சாரூப நிலைகளை அடைந்தவர்களையும், சிவலோகத்தையும் குறிக்கும்.
இதனால், சிவனது திருவடிப்பேற்றின் அருமையும், அப்பேறு பெற்றவர்களது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
கன்றாத தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு)
இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற்குள் தாமரைக் கொடி ஒன்றே உள்ளது: அதில் மலர்கள் மூன்று உள்ளன. அந்த மூன்று மலர்களிலும் என்றும் அவற்றால் வருந்துதல் இல்லாத சிவனது திருவடியிணையும் உள்ளது. ஆயினும் அத்திருவடியிணையைக் காண்பதற்கு அந்த மூன்று மலர்களும் மலராக மலர்தல்வேண்டும். அவ்வாறு மலர்தற்கு அவை பக்குவப்படவேண்டும். அதற்கு உடம்பிற்றானே உள்ள நெருப்பை எழுப்பி வெதுப்பினால், அம்மலர்கள் பக்குவப்பட்டு மலரும் மலர்ந்தால், அங்ஙனம் மலர்விக்க வல்லவர்கட்குச் சிவனை அடைதல் இப்பொழுதே எளிதாகிவிடும்.

குறிப்புரை :

தாமரைக்கொடி, சுழுமுனைநாடி, மூன்று மலர்கள், அனாகதம், (இருதயம்) விசுத்தி, (அடித்தொண்டை) ஆஞ்ஞை (புருவநடு) ஆகிய ஆதாரங்கள். அனாகதத்திற்குக் கீழ் உள்ள ஆதாரங்கள் தாமரைக்கொடியின் அடிப்பாகமாகக் கருதப்படுகின்றன. வழிபாடு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றுறுப்புக்களால் நிகழ்வது. அவை மூன்றும் முறையே மொழி, மெய் மனம் என்ப வற்றால் நிகழுங்கால், விசுத்தி, அனாகதம், ஆஞ்ஞை என்பவற்றில் நிகழ்தல்பற்றி அம்மூன்றையே கூறினார். இன்றே - இப்பிறப்பிலேயே.
இதனால், `சிவனது திருவடியை அடைதற்கு மேற்கூறிய நினைத்தல் வாழ்த்தல் வணங்கலேயன்றிச் சிவயோகமும் சிறந்த சாதனமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான் பக்குவம் எய்திய என்னைத் தனது திருவடியாகிய மலர்கள் எனது தலையிலே எனது பாசக்கட்டு நீங்குமாறு மலரும்படி செய்யும் முகத்தால், மயக்கம் கொண்ட எனது மனத்தால் திகைத்து நிற்கின்ற திகைப்பை நீக்கி ஆட்கொள்ள நினைத்தான். அதனால் நான் கோணங்கள் எல்லாம் நீங்கி, நேர்மையை அடைந்தேன் அந்த நேர்மை இது` எனச் சொல்லவாராது.

குறிப்புரை :

`கால்கொண்டு` என்பது, இறுதியில் நின்ற ``கட்டற`` என்பதனோடு இயைந்தது. அந்த `கட்டற` என்றது, `முறுக்கவிழ்ந்து மலர` என்றதாம். ``கால்கொண்டு கட்டற`` என்றாரேனும், `கால் கட்டறலைக் கொண்டு` என்றலே கருத்து. `பரன், பால் கொண்ட என்னைக் கால் கட்டறல்கொண்டு துயக்கறக் கொள்ள நாடினான்` என இயைக்க. பால் - பான்மை` பக்குவம் மேல் - அதன்பின் மேல் கொண்ட` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. கோணங்கள் ஆணவ மலத்தால் எழும் செருக்கும், கன்ம மலத்தால் வரும் இன்பத் துன்பங்களும், மாயா மலத்தால் வரும் ஐம்புலத் தாக்குதலும் பிறவுமாம். நேர்மை, மெய்யுணர்வு, முதல்வனது இயல்பு பற்றி எழும் அன்பு, அதனால் விளையும் ஆனந்தம் முதலியனவாம்.
`பக்குவம் வந்தால் நீவிரும் இவையெல்லாம் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `திருவடிப் பேறே கோட்டம் நீக்கிச் செம்மை செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.

பொழிப்புரை :

தாம் பெற்ற புதல்வரிடத்தில் உள்ள தீ நாற்றத்தையும், அதற்குக் காரணமான அசுத்தப் பொருள்களையும் அனுபவித்த போதிலும் அப்புதல்வரிடத்தில், வெறுப்புக் கொள்ளாமலே பெற் றோர்கள் அவை நீங்குதற் பொருட்டுப் புதல்வர்க்கு வெறுப்பான செயல்கைளச் செய்வார். (அவை நெய்யிட்டு, நலங்கிட்டு முழுக் காட்டுதல், மருந்தூட்டுதல் முதலியனவாம்) அது போலவே, சிவனும் உயிர்கள் பக்குவம் எய்தற் பொருட்டு உலகப் பற்றை அவைகட்கு உண்டாக்குதலால், அப்பற்றின் வழியவான செயல் -களைச் செய்வான் ஆகவே, அது கருணை காரணமானது அன்றி, வன்கண்மை காரணமானது அன்றாம்.

குறிப்புரை :

குற்றம் - இங்கு, அசுத்தம். இதனைக் கூறவே ``நாற்றம்`` என்றது தீ நாற்றமாயிற்று. ``குணம் குறை`` என்றது `குணம் இல்லன்` என்றபடி. `குணம் இல்லன` என்று புதல்வரது கருத்து நோக்கி `பான்மை பக்குவம்` என்பதை முன் மந்திர உரையிலும் கூறினோம். பான்மைக்கு - பக்குவம் வருதற்கு, செற்றம் - பகை; வன்கண்மை `இலாது` என்பது ஈறு குறைந்து நின்றது. செய்கைக்கு - செய்கையால்; உருபு மயக்கம். ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாது ஓர் பற்றைச் செய்கையால், அதற்கு எய்தின செய்யும்` என்க. உலகப் பற்றிற்கு எய்தன பிறப்பு இறப்புக்களும், இன்பத்துன்ப நுகர்ச்சிகளுமாம்.
இதனால், `பக்குவம் வாயாத உயிர்கட்கு இறைவன் செய்வதும் அருளேயன்றி, வன்கண்மையன்று` என்பது கூறும் முகத்தால், அவ்வுயிர்களும் திருவடிப்பேற்றை அடைவனவே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களை எப்பொழுதும் வருத்துவனவாய் மூன்று குற்றங்கள் உள்ளன. அதனால் ஆணவத்தின் சத்தி முற்றும் மடங்காது செயற்பட, சில வேளைகளில் ஒன்றை மற்றொன்றாக உணர்ந்தும், சில வேளைகளில் எதனையும் அறியாதே கிடந்தும் உயிர்கள் துன்புறு கின்றன. ஆகவே அம்முக்குற்றம் நீங்கப்பெற்றவரே துன்பத்தை நீக்கினவர் ஆகின்றனர். நீங்கப் பெறாதவர் அக்குற்றங்களில் கிடந்து கெடும் முறைமையை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

`மூன்று குற்றங்கள் இவை` என்பது வருகின்ற மத்திரத்தால் கூறப்படும். ``மான்று`` என்பதும் `மயங்கி என்றதே யாயினும் அது திரிபுணர்வையும், மயங்கி என்பது யாதும் அறியாமை -யையும் குறித்தன. ``ஆறு`` என்பதன்பின், `உடையர்` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `உயிர்களின் துன்பத்திற்குக்காரணம் முக்குற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக்கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

குறிப்புரை :

காமம் - விருப்பம். வெகுளி - சினம்; வெறுப்பு. மயக்கம் - அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் ஆக்கியும் குற்றத்தை `ஐந்து` என்றல் சாங்கிய நூல் முறைமை. அந்த ஐந்தையும் அந்நூலார் `பஞ்சக்கிலேசம்` என்பர். அந்த ஐந்தையே திருவள்ளுவர். ``காமம், வெகுளி, மயக்கம்``* என மூன்றாக்கிக் கூறியதாகப் பரிமேலழகர் உரைத்தார். எனினும், தமிழ் நூலார் மூன்றாகக் கூறுவதையே சாங்கியர் ஐந்தாக விரித்தனராவர். பிடித்திருத்தல் - குறிக்கொண்டிருத்தல். `எறிமணி போலும் ஓை\\\\u2970?` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர், மணியை அடிப்பது ஒரு கணமேயாயினும், அதினின்றும் எழும் ஓசை நெடிது போது தொடர்ந்து ஒலித்தல் போல, உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது` என்றற்கு `எறி மணி ஓசை போல்` என்றார். `இவ்வோசை யோகத்திற் கேட்கப்படும்` என்பது மூன்றாம் தந்திரத்தில் கூறப்பட்டது. `ஓம்` என்பது ஒரு
சொல்லாகலானும் சொல்லுக்குச் சார்பாய் உள்ளது பொருளாகலானும் பொருளை `சார்பு` என்றார். தாமம் - சார்பு. இதன்பின், `வெளிப்பட` என ஒருசொல் வருவிக்க. ``உள்ளே உறைவது`` என்றதனால் அஃது அறிதற்கரியது என்பது பெறப்பட்டது. `வியப்பு` என்பது சொல்லச்சம்.
இதனால், `முக்குற்றங்கள் இவை` என்பதும், `அவை யோக முயற்சியால் நீங்குதலும்` கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.

பொழிப்புரை :

`துவம்` என்பதே சித்தர் மரபில், `தொம்` என மரூஉ மொழியாகக் கூறப்படுகின்றது.] `துவம்` என்னும் பதம் முன்னே எழ, அதனை அடுத்து, `தத்` என்னும் பதம் வந்து பற்ற. அதன்பின் `அசி` என்னும் பதமும் வந்து சேர, இம் மூன்றும் கூடிய கூட்டமாய் அமைந்த வாக்கியத்தின் பொருளாக ஒருவன் ஆகிவிடுவானாயின், அவன் வியாபகப்பொருளாகிய பரம்பொருளேயாவன். பின் முன்பு தான் பொருந்தியிருந்த மும்மலங்களும் நீங்கச் சிவமாகியிருப்பான்.

குறிப்புரை :

வாக்கியம் `தத்துவமசி` என்று இருப்பினும் பொருள், `துவந்ததசி` என்பதேயாகலின் அவ்வாக்கியத்தை நாயனார் இவ்வாறே கூறுகின்றார். இதுபற்றி மேலே குறினோம்* எய்துதல் - பொருள் அனுபவமாகப் பெறுதல். வேதம், முதற் பொருளைப் பொதுவாக, `பரம்` எனக் கூறும். ஆகவே, `நீ அது ஆகின்றாய்` என்னும் வேதவாக்கியத்தால் பொது அனுபவம் உண்டாதலை ``பராபரம் ஆகும்` என்ற கூறிப் பின், சித்தாந்தம் `துவம்சிவமசி` எனக் கூறுகின்ற சிறப்புப்பொருளை எய்திச் சிவமாய் இருக்கும் எனக் கூறினார். மற்றும் இது பற்றிய சில விளக்கங்கள் மேலே* கூறப்பட்ட வற்றைக் காண்க.
இதனால், `முப்பதம் ஆவன இவை` என்பதும், அவற்றால் பெறப்படும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொழிப்புரை :

`அறிவாவது சடத்தின் குணமாகாது, வேறேயாம்` என்பதை உணர்ந்து பூதம் முதலிய தத்துவ வகைகளையும், அவற்றின் கூறுகளாகிய தாத்துவிக வகைகளையும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் நாதமுடிவாக அவற்றின் இயல்புகளை ஆராயும் முகத்தால், `தான்` என மயங்காது விட்டொழித்து உண்மையாகவே, `தத்துவமசி` என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள `தொம்` பதப்பொருளாகி நிற்றலே ஆன்மாவின் உண்மை இயல்பாகும்.

குறிப்புரை :

`உண்மையாக அன்றி வெறும் வாய்மொழியாக அவ்வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை` என்பதாம். இதுவே. தசகாரியத்துள் `தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி ஆன்மரூபம்` என நான்காக வகுத்துக் கூறப்படுகின்றது. சிவஞானபோதத்தில், `இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே``* எனப் பட்டதும் இதுவே. தொண்ணூற்றாறு கருவிகள் மேலே கூறப்பட்டன.
இதனால், முப்பாதங்களுள் ஆன்ம பதமாகிய தொம்பதப் பொருளை உண்மையாக உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

முப்பதங்களுள், `அசி` என்னும் பதமே தத் பதம் என்றும் `துவம் பதம்` என்றும் சொல்லத்தக்கதாய் உள்ளது. (அஃதாவது, இரண்டையும் ஒன்றாகச் செய்கின்றது.) அந்தப்பதத்தில் தான் அருட்சத்தி இருக்கின்றாள். அதனால், வாக்குக்களால் எட்ட முடியாத சிவனும் அந்தப்பதத்திலேதான் கற்பனையாக அன்றி, உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

தத் - அது. துவம் - நீ. அசி - ஆகிறாய். எனவே, `அது நீ ஆகியாய்` என்கின்ற பொழுது இரண்டையும் ஒன்று படுத்துவது `அசி` ஆதல் உணர்க. பெத்தகாலத்தில் சிவன் சீவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும், முத்தி காலத்தில் சீவன் சிவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும் சத்தியினாலேயாகலின், `அசி` என்னும் பதத்திலே நேரிழையாள் உளள் - என்றார். திருவைந் தெழுத்தில் அசிபதமாய் நிற்பது வகாரமும், நகாரமும் ஆம்.
``அவன்இவ னானது அவன் அருளால் அல்லது,
இவன் அவன் ஆகான் என்று உந்தீபற``*
எனத் திருவுந்தியார் சீவன் ஒன்றும் மாட்டாமையை வலியுறுத்துகிறது. `உளன்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. `அப்பதத்து` எனச் சுட்டு வருவித்து, `சிவன் கலந்து நின்றான்` எனமுடிக்க.
இதனால், முப்பதத்துள் `அசி` பதத்து உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால் தேன் அமுதென இன்பத்
துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.

பொழிப்புரை :

`துவம்` பதப்பொருளாகிய ஆன்மாவும் `தத்` பதப் பொருளாகிய பரமும் `அசி` பதத்தால் ஒன்றான பின்பு, அதில் சிவமும் கலந்துவிடுமாயின், அக்கலவை, பாலும் தேனும் கலந்த கலவையில் அமுதமும் கலந்தாற்போல இனிமையோடு, உறுதியையும் தந்து நிற்கும். அக்கலவையின் சிறப்புச் சொல்லற்ற நிலையாய்த் தோன்றும்.

குறிப்புரை :

பரம், சிவம் இரண்டும் ஒன்றாயினும் பொதுவும், சிறப்புமாகிய உணர்வு வேறுபாடு பற்றி வேறுவேறாகக் கூறினார். பரமாதல் வேதாந்த ஞானத்தாலும், சிவமாதல் சித்தாந்த ஞானத்தாலும் என்க. `அசிபதத்தால்` என மூன்றாவது விரிக்க. ``ஏய்ந்து`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. கணு - வேற்றுமை. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இணை - ஒப்பு. பால், ஓரளவு இனிப்புடையது. தேன், மிக இனிப்புடையது. ஆகவே அவை முறையே ஆன்மாவிற்கும், பரத்திற்கும் உவமையாம். அமுது உறுதி பயப்பது. ஆகவே, அது சிவத்திற்கு உவமையாம். இன்பத் துணை - இனிய பொருள்களின் கலப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் அனுபவச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

அழகிய சொற்களால் ஆகிய, பழமையான, மெய்ம்மை கூறும் மகாவாக்கியம் `தொம், (துவம்) தத், அசி` என்னும் மூன்று சொற்களை யுடையது. அச்சொற்கள் முறையே புத்தி முத்திகளை விரும்புகின்ற சீவன், பரம்பொருள், அதன் சத்தி ஆகியவற்றைக் குறித்து நிற்கும். அவ்வாக்கியத்தைப் பன்முறையும் உணர்தலால் அடையப்படும் செவ்விய பொருள், குருவாகி வந்து ஆட்கொள்கின்ற சிவனே.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதற்கண் கூட்டியுரைக்க.
`பத வாக்கியம்` என இயையும். வாக்கியம் சாதனம் ஆகலின், செம்பொருள், அதனால் அடையப்படும் பொருளாயிற்று. செம்மை, எஞ்ஞான்றும் திரிபின்றி ஒருதன்மைத்தாய் நிற்பது. இதுவே, வடமொழியில் `சத்து` என்பதற்குப் பொருள் என்பது சித்தாந்தம்.
இதனால், `முப்பத வாக்கியம் மெய்ப்பொருளை அடையும் வழி` என்பதும், அதனால், அடையப்படும் மெய்ப்பொருள் சிவனே என்பதும் கூறப்பட்டன. இரண்டாம் அடி அனுவாதமாய், மேலெல்லாம் கூறியதை வலியுறுத்திற்று.

பண் :

பாடல் எண் : 6

ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொழிப்புரை :

எழுத்தறி கல்வியில் அறியவேண்டிய எழுத்துக்கள் ஐம்பது. அவற்றுள் ஒன்றையேனும் அறியாதவரும் உளர். அவரும் மக்களுட் சிலராகவே இருக்கின்றனர்: (அவர்கள் நற்கதி அடையு மாறில்லை. ஆகவே,) கல்வி கற்றவர் அக்கல்வியின் முடிநிலையாக முப்பதங்களைக் கொள்ளுதல் வேண்டும். கொண்டு, செம்மையான, உயர்ந்த வாசியோகத்தைச் செய்தல் வேண்டும். அவ்யோகம் `ஹம்ஸ:` என்னும் மந்திரமாக அமைதலின், அதுவே தொம்பதமும், தத்பதமுமாய் நிற்கும். நிற்கவே, அது, `யோஹம்` என்று ஆகி, சீவன் சிவனாகின்ற பயனைத் தகும்.

குறிப்புரை :

``கல்லா நெஞ்சில் - நில்லான் ஈசன்`` ஆதலின், எழுத்தறியாதவரை இகழ்ந்தார்* ``அறியாதவரும்`` என்பதன்பின், `உளர்` என்பது வருவிக்க. `அவரும்` என்னும் உண்மை தொகுத்த லாயிற்று. சிவனை நினையாது செய்யும் யோகம் வெறு ஹடயோக மாய் ஆன்மிகப் பயனைத்தாராது ஆதலின், `உம்பனை நாடி முப்பதத் திடை வாசி செலுத்திட` என்றார். `உம்பரன்` என்பது குறைந்து நின்றது. `நாடிச் செலுத்திட` என இயையும். உரைபதம், வினைத் தொகை. செம்பரம் - செவ்விதும், மேலானதும் ஆகிய பொருள். அப் பொருளாம் தன்மையைக் குறிக்கின்ற பதத்தையே அதுவாக உப சரித்தார் `ஹம்ஸ` மந்திரம் இயல்பாக இயங்கும் சுவாசத்தாலே அமைதலின் அதனை, `அசபா மந்திரம்` என்பர். செபிக்கப்படாத மந்திரம்` என்பது இதன் பொருள். `பேசாத மந்திரம்` என்றும் கூறுவர். `தம் யோகம், பரயோகம்` எனத் தனித்தனி முடிக்க. தம் யோகம் - தம்மால் செய்யப்படும் யோகம் பரயோகம் - மேலான யோகம். ``ஆகும்`` என்றது `ஆதலாகிய பயனைத் தரும்` என்றபடி.
இதனால், `முப்பத அனுபவத்தை வாசியோகத்தால் பெறலாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.

பொழிப்புரை :

ஆன்மாவிற்குச் சிவனை அறிகின்ற அறிவும் நழுவுவதே `அதீதம்` எனப்படும் முடிவுநிலைவாய்க்கும். அஃதாவது, ஆன்மாச் சிவனை அறியும் பொழுது, `யான் சிவனை யறிகின்றேன்` என அறிகின்ற அறிவும் அதைவிட்டு நழுவினால் அதன் பின்பே துரியாதீதநிலை வாய்க்கும்` என்பதாம். (ஆகவே அவ்வறிவு நழுவிய நிலை துரியமாதல் பெறப்பட்டது.) இனி அவ்வாறின்றி, ஞானேந்திரியம், கன்மேந்திரியம் அவற்றின் விடயங்களாகிய சத்தாதி, வசனாதி முதலிய தத்துவ தாத்துவிகங்கள் நீங்கியபோதிலும், `யான்` என்னும் உணர்வு நீங்காது. ஆகவே, அது நீங்குதல் நின்மல சாக்கிரம் முதலியவற்றிலாம். அவையும் நீங்கினால் பரசாக்கிரம், பரசொப்பனம் முதலியனவே இயற்கை நிலையாகிய முத்தியைக் கூட்டுவிக்கும்.

குறிப்புரை :

நந்தி யறிவு - நந்தியை அறிவும் அறிவு. விட - நீங்க. `யான்` என்பது நீங்குவதாகிய நின்மலாவத்தையை. `நின்மலாவத்தை` என ஒரு சொல்லாற் கூறிப்போகாது அனைத்தையும் முறையானே எடுத்தோதினார். அவற்றை அதீததம் முதலாகக் கீழ்நோக்கிக் கூறும் பொழுது `யான்` என்னும் உணர்வு ஒன்றைவிட மற்றொன்றில் மிக்கிருக்கும் - என்பது உணர்த்துதற்கு துரியத்தில் பாசநீக்கமே உளதாகும். சிவப்பேறு அதீதத்திலே உண்டாகும். ``நல ஐந்தும்`` என்றதனால் அவை நின்மலாவத்தையாயின. `அவையும் நந்தில்` என்றதனால் `நனவாதி` எனப்பட்டவை பராவத்தையாயின. நின்மலா வத்தை பராவத்தைகளின் இயல்பு மேற்போந்த அதிகாரங்களில் கூறப் பட்டன. அனாதி - இயற்கை. `அனாதியை முட்டும்` என இயைக்க.
இதனால், முப்பத அனுபவம் நின்மலாவத்தை பராவத்தைகளில் நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொழிப்புரை :

பரதுரியத்தில் உலகத்தை அனுபவித்தலாகிய கேவல சகல அஞ்சவத்தைகள் எஞ்ஞான்றும் நிகழாது அறவே நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரோவொருகால் நிகழினும் நிகழும். ஆகவே, நின்மல துரிய `அசி` பத அனுபவமாய் நிற்பதே. `அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை` என்பதாம்.)

குறிப்புரை :

`பரதுரியத்து ஓவும்` என இயையும் ஓவும் - நீங்கும். ஓவுவன நனவும், கனவும், சுழுனையும்` இவை கேவல சகல அவத்தைகள்` என்பது. ``படி உண்ட`` என்றதனால் விளங்கிற்று. படி - உலகம். ``படி உண்ட`` என்பதை, ``நனவு`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. விரிவு இல் கனவு - நனவுபோல விரிந்த அறிவு இல்லாத கனவு. சுழுத்தியில் அறிவு பெரிதும் ஒடுங்குதலால் அதனை, `கனவும் ஒடுங்கிய உபசாந்தம்` என்றார். ``சிவன்பால்`` என்பதன்பின், `நிகழும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `நின்மலாவத்தை மகாவாக்கிய அனுபவமாக, பராவத்தை அதனையும் கடந்த அனுபவமாம்` என்பது கூறப்பட்டது.
சிற்பி