ஆறாம் தந்திரம் - 10. திருநீறு


பண் :

பாடல் எண் : 1

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

பொழிப்புரை :

யாவரேனும் எலும்புக் கூட்டைத் தோளிலே கொள்ளும் சிவபெருமான் பூசுவதும், அணிந்தோர் யாவர்க்கும் கவசமாய் நிற்பதும் ஆகிய திருநீற்றை அதன் வெள்ளொளி மிக விளங் குமாறு பூசி மகிழ்ச்சியுறுவராயின், அவரிடத்து வினைகள் தங்கியிரா. சிவகதி கூடும். சிவனது அழகிய திருவடியையும் அவர் அடைவர்.

குறிப்புரை :

``கங்காளன் பூசும்`` என்றது, `எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பினது. சிவநெறியாளர்க்குத் திருநீறே கவசமும், திருவைந் தெழுத்தே அதிதிரமுமாதலை,
``வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே`` *
என ஞானசம்பந்தரும் குறிப்பால் அருளிச் செய்தமை காண்க. இக் கவசமும், அத்திரமும் வினையாகிய பகை வந்து தாக்காமற் காப்பதும், அப்பகையை அழிப்பதும் ஆதலை இம்மந்திரத்தாலும் இங்குக் காட்டிய தேவாரத்தாலும் அறிக. அவை பிற கவசங்களாலும், அத் திரங்களாலும் இயலாமையும் உணர்க. ``சிவகதி`` என்றது பத முத்தி அபர முத்திகளையும், `திருவடி சேர்தல்` என்பது பர முத்தியையும் குறித்தனவாம். `மகிழ்விரேயாமாகில் சேர்விரே` என்பதும் பாடம்.
இதனால், திருநீற்றது சிறப்பு வகுத்துணர்த்தப் பட்டது. இம்மந்திரம் சிவ பிரதிகளில் இவ்வதிகாரத்த்து இரண்டாம் மந்திர மாகக் காணப்படுதல் பொருந்தவில்லை.

பண் :

பாடல் எண் : 2

நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.

பொழிப்புரை :

அந்தண வேடத்துள் முதன்மை பெற்று விளங்கும் முப்புரிநூல், சிகை என்பவற்றது உண்மை இன்ன என்பதை முழு மூடராயுள்ளோர் சிறிதும் அறியமாட்டார். அவற்றின் உண்மையாவன யாவை எனின், `முப்புரிநூல்` என்பது வேதத்தின் முடிநிலைப் பகுதியாகிய உபநிடதங்களும், `சிகை` என்பது அவற்றின் பொரு ளுணர்வுமாம், நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந் தணர்கள், `பரமான்மா, சீவான்மா` என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதேயாம். வாளாநூலையும், சிகையையும் பொருந்த வைத்துக் கொள்வதனால் மட்டுமன்று.

குறிப்புரை :

இதனை இங்குக் கூறவே, `வேத வேதாந்தங்களை நன்கு ஓதி உணர்ந்தவர் திருநீற்றின் பெருமையை உணர்வாராகலான், அதனை அணிதலை ஒழியார்` என்பது குறிப்பாயிற்று. ``வேதத்தில் உள்ளது நீறு``l என ஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் முன் பலரும் அறிய அருளிச் செய்தமை இங்கு ஒரு தலையாக உணரற் பாற்று. `சபாலம்` என்னும் உபநிடதம் சிறப்பாகத் திருநீற்றின் பெருமை உணர்த்துவதாயுள்ளது. இவற்றால் `திருநீறு அல்லது விபூதி` என நீவிர் புகழ்ந்துரைக்கும் பொருள் நறுமணம் முதலிய நலம் யாதுமில்லாத வெறும் சாம்பல்தானே என இகழ்தல் பேதமைப் பலது என்பது போந்தது. அதனால், ``நூலும், சிகையும் அறியார் நின்மூடர்கள்`` என்றது போலவே, `நீற்றது உண்மையும் அறியார் நின்மூடர்கள்` என ஓதுதலும் கருத்தால் பெறப்படும். நீற்றது உண்மையை இவர். மேல் ``கவசத் திருநீறு`` என்பனால் குறித்தார். திருஞானசம்பந்தர் ``பராவண மாவது நீறு``l என இனிது விளங்க அருளிச் செய்தார். இருவரும் முறையே, ``பூசி மகிழ்வரே யாமாயின் தங்கா வினைகளும்`` எனவும்``பாவம் அறுப்பது நீறு``l எனவும் ஓதியருளினார். இவ்விடங்களில், `திருநீறாவது இறைவனது திருவருளே` என்பது தெற்றென விளங்கி நிற்கின்றது` இங்ஙனம்.
``தலைகல னாகஉண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்;
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்`` 3
என்றாற்போலவரும் சுருதிகளை யுணராமையால்,
``பூசுவதும் வெண்ணீறு; பூண்பதுவும் பொங்கரவம்`` l
``கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை`` 8
என்று புறச்சமயத்தார் இகழ்தலேயன்றி, `வேதத்தை ஓதுதலால் வேதியர் எனப்படுகின்றேம்` எனக் கூறிக் கொள்வாருள்ளும் சிலர் திருநீற்றை `சாம்பல்` என்று இகழ்ந்தொக்குதல் அவருக்குண்டான சாபக்கேடே என்பது,
``பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ எனவணங்கிப்
பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண் டிகையினையும்
இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும் பிறந்திறந்து
கதியு றாது
பாசமதி னிடைப்பட்டு மறையுரையா நெறியதனிற்
படுதி ரென்றான்``*
என்னும் கந்தபுராணத்தால் அறியப்படும். படவே, `அந்தணர்` என்பாருள்ளும் சிலர் இத்தன்மையராய் இருத்தலைத் திருவுளத்துட் கொண்டு அவரது இயல்பினை விளக்குதற்கே இம்மந்திரத்தை இவ்வதிகாரத்தில் நாயனார் அருளிச் செய்தார் என்பது விளங்கும். சிவபிரானது விகிர்த வேடத்தின் பெருமைகள் பலவும் அறிதற்கு மிக அரியன என்பதை உணர்த்தவே,
``சடையும் பிறையும சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்தொலோ``*
என்றார் போலப் பலவிடத்தும் அருளிச் செய்தார். இன்னோரன்ன திரு வருண்மொழிகட்குப் பின்னும் திருநீற்றிற்கு வேறாகச் சிலர் சில சமயக் குறிகளைப் படைத்துக் கொண்டது, மேற்காட்டிய சாபத்தின் வலி யெனவே வேண்டும் என்க.
அந்தணர் பரம், உயிர் இரண்டும் ஓர் ஒன்றாகப் பார்ப்பார் எனில், அஃது ஓங்காரம் ஓதிலேயாம்` என உம்மையும் ஆக்கமும் விரித்து மாற்றிமுடிக்க. பார்த்தல் - ஆராய்ந்துணர்தல். ``ஓர் ஒன்றாக`` என்றது `நுனித்து` என்றவாறு ``ஓங்காரம்`` என்றது, வேதத்தில் அது முதலாகத் தொடங்கிச் செல்லும் மந்திரங்கள் அமைந்த பாகத்தைக் குறித்தது. மந்திர பாகத்தின் உண்மையை உணர்த்துவனவே உப நிடதங்களாதலின், அம்மந்திர பாகத்தை முன்னர் நன்கு ஓதிப் பின்னர் அவற்றின் உண்மைகளை உபநிடதங்களில் உணர்தல் வேண்டும் என்றற்கு, ``ஓங்காரம் ஓதிலே`` என்றார். எனவே, ``ஓதி அவற்றை உப நிடதங்களில் உணரிலே` என்க. கூறுதலும் கருத்தாயிற்று. ``நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்`` என மேல் அந்தணர் ஒழுக்கத்தில் (229) கூறிய நாயனார் அதனை இங்கும் மறித்தும் கூறியது பெரிதும் வலியுறுத்தற் பொருட்டாயிற்று. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிறப்பால் உயர்ந்தோர்` எனப்படுகின்ற அந்தண ராயினும் அவர் உயர்வெய்துதல் திருநீற்றாலே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே.

பொழிப்புரை :

பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.

குறிப்புரை :

ஆலத்தி - ஆப்பி.
``மறைக்குங் காலை மரீஇய தொரால்` *
என்பதனான் இஃது அவையல்கிளவி யாகாதாயிற்று. அன்றியும் ஒலி வகையால் `ஆல் அத்தி` என்பது போலத் தோன்ற வைத்தமையானும் அன்னதாகாதாயிற்று. `ஆல் அத்தி` என்றே பொருள் உரைப்பினும் திருநீற்றுக்கு முதலாகிய பசுச்சாணம் பெறப்படாமை அறிக. ``அரசு`` என்றது பிற சமித்துக்களுக்கு உபலக்கணம். `ஆலத்தி அரசுடன் விரிவு கனலில் வியன் உருமாறி ஆகும் அக் காரம்` எனக் கூட்டுக. திருநீற்றின் வேறு பெயர்களும் ஒன்றாகிய `க்ஷாரம்` என்னும் ஆரியச் சொல், ``காரம்`` எனத் தற்பவமாய் அகரச் சுட்டேற்று. ``அக்காரம்` என வந்தது. ``அக்காரம் நிரவிய`` எனச் சுட்டிக், கூறவே, திருநீற்றை, `சாம்பல், சுடலைப் பொடி` முதலாகப் பொதுவில் பலவகையாகக் கூறினும் `தக்க பசுவின் சாணத்தைத் தக்க வகையில் பெற்று மந்திரத்தால் கோசலங்கொண்டு பிசைந்து உலர்த்திச் சிவவேள்வியில் இட்டுப் பெற்றதே உண்மைத் திருநீறாம்` என்பதனை முதல் இரண்டடி களாற்கூறினார். நிரவுதல் - நிரம்பப்பூசுதல். `பிறப்பால் அந்தண ராதலே பிரமகுலமாகாது; திருநீற்றை நிரம்ப அணிந்தவழியே ஆகும்`` என்றற்கு `சிவனுருவாம்` என்னாது ``பிரம உயர்குலமாம்`` என்றார்.
இதனால், `திருநீற்றை இல்லாதவர் கடவுளை உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.
சிற்பி