ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்


பண் :

பாடல் எண் : 1

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.

குறிப்புரை :

எழுவகைப் பிறப்பினுள் தெய்வப் பிறப்பும், மக்கட் பிறப்பும் ஒழிந்தவை பெரும்பாலும் வீடு பெறுதற்கு வாயிலாதல் இல்லையாக, இவ்விரு பிறப்புக்களுமே அதற்கு வாயிலாதல் வெளிப் படை. `அவை அங்ஙனமாதலும் இறைவனது திருக்குறிப்பின் வழியது` என்பதும், `அவ் இருவகைப் பிறப்பின் உயிர்களும் உய்தி பெறுதல் அகச் சமயங்களின் வழியே` என்பதும், `அங்ஙனமாயினும் இறைவனது உண்மை நிலை சமயங்களைக் கடந்தது` என்பதும் கூறிய வாறு. ``சமையம்`` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. `தன் தாளினை நாட அமைந்தன` என்பதனால், ``சமயங்கள்`` எனப் பட்டன உட்சமயங்களே ஆயின. `அமையக் கழல்கின்ற` என்னும் ககர ஒற்று மெலிந்து நின்றது. இவ்வாறன்றி, `அச்சமயங்களது (செவ் வழிகளை) நிலைகளைக் கடந்து நிற்கின்ற எனலுமாம்.
இதனால், வீடுபெறும் உயிர்கட்கு அதற்குரிய வழிகளாய் நிற்பன அகச் சமயங்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
என்றது போலும் இருமுச் சமயமும்
நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``உள`` என்பதனை, ``இருமுச் சமயமும்`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியாற்போந்த பொருள், `கலாய்ப்பவர்` என்பது. ஆதர்கள் - அறிவில்லாதவர்கள். `மலையைப் பார்த்து நாய் குரைத்தல் போல` என்பது பழமொழி. ``ஒத்தார்கள்`` என்றது, அகச் சமயத்தவருள் ஒரு சமயத்துள் நின்றுபிற சமயங்களை இகழ்பவரை. `அங்ஙனம் இகழ்தல் அவையும் பிறவாற்றால் உண்மையை உணர் தற்கு வழியாதலை அறியாமையாலாம்` என்பது கருத்து. இறுதியிற் போந்த உவமை, அகச் சமயிகளிடைப் பூசல் விளைப்பார்க்கே ஆதல், வெளிப்படை. இதன் முதல் அடியோடு ஒப்ப,
``சுத்தவடி வியல்பாக உடைய சோதி
சொல்லியஆ கமங்களெலாம் சூழப் போயும்
ஒருபதிக்குப் பலநெறிகள் உளவா னாற்போல்``1
எனச் சிவஞானசித்தியும் கூறுதல் காண்க. `ஒரு பதிபோல்வது` கருத்து என்பதும், `பல நெறிகள் போல்வன சொற்கள் என்பதும் சித்தியுள் தோன்றுதல் காண்க.
இதனால், அகச் சமயங்கள் சொல் வகையாலும், செயல்வகை யாலும் வேறுபடினும், கருத்து வகையால் ஒன்றாதலைக் கூறி, அஃது அறியாது அவற்றிடை நிற்போர் தம்மிடைக் கலாய்த்தலும், சைவரை இகழ்தலும் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

பொழிப்புரை :

அகச் சமயங்கள் அறிந்தோ, அறியாமலோ கருத்து வகையால் சைவத்தோடு ஒன்றி நிற்றலை அவருள் அறியாதாரை நோக்கி அதனையே இதுமுதலாக அறிவுறுத்துகின்றார். இதனை, சைவ சமயச் சிறப்பு என்பதொரு தனி அதிகாரமாகக் கொள்ளினும் பொருந்தும்,
சைவ சமயத்தால் கொள்ளப்படும் ஒப்பற்ற தலைவனும், மக்கள் உயிர் நெடிது வாழ்ந்து உய்தி பெறுதற் பொருட்டு உயிர்ப்பாய் இயங்கு கின்றவனும், சிறந்த ஞான வடிவானவனும், தன்னை உணரும் பெருமை யுடையவரிடத்துத் தானும் அன்பு செய்கின்றவனும், அனைத்துயிர்க்கும் முடிவில் அவை விரும்பும் பேரின்பத்தைத் தருபவனும், இவ்வியல்புகளால் உண்மைத் தலைவன் தானே ஆகின்றவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் நீங்கி நிற்றலை விடுத்து, அணுக வந்து அடைந்து பிழையுங்கள்.

குறிப்புரை :

`சைவ சமயமே தலையாய சமயம்` என்பது, மேல் பல விடத்தும், பலவகையானும் விளக்கப்பட்டமையின், அச்சமயத்தாற் கடவுளாகக் கொள்ளப்படுதலும் பெருமையாயிற்று. இறைவன் உயிர்ப்பாய் இயங்குதல் மேலேயும் (1512) கூறப்பட்டது. எய் - எய்தல்; அறிதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எய்ய`` என்பது இதனடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு. ``வையம்`` என்றது உயிர்களை, ``வந்தடைந்து உய்மின்கள்`` என்றது, அவர்மாட்டு எழுந்த கருணைபற்றி.
இதனால், சைவக் கடவுளாகிய சிவபிரானது பெருமையை வகுத்துணர்த்தி, அவனைச் சார, அழைத்தல் செய்யப்பட்டது, அகச்சமயிகளாதலின் அவர்தாம் உணர்த்தியவாறே உணர்ந்து ஒழுகுவார்கள் ஆதலின், இனி வருவனவும் இவைபற்றி என்க.

பண் :

பாடல் எண் : 4

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.

பொழிப்புரை :

தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.

குறிப்புரை :

ஓர்தல் - ஆராய்தல் `ஓர் நெறி` என இயையும். `பவன்` என்பது சிவனது நாமங்களில் சிறந்ததொன்று. ``பழவழி`` என்றது, `முன்னர்த் தோன்றியநெறி` என்றவாறு.
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி`` 1 என அப்பரும் அருளிச்செய்தார். மூன்று, நான்காம் அடிகளில் வந்த ``அவன்`` என்பன, பிற சமயக் கடவுளரைத் தனித்தனிச் சுட்டிற்று. ஈற்றடியில் நின்ற ``அவன் அவன்`` என்பது ஒரு சொல் அடுக்கு `அவன் அவனாய் உளது` என ஆக்கம் வருவிக்க. ``உளது`` என்பது அப்பண்பு குறித்துநின்றது. கடன்முறைமை. `உள்ள முறைமை` என்பதனை ``உளதாங் கடன்`` என்றார். இறுதிக்கண் ``ஆம்`` என்றது `விளங்கும்` என்றவாறு.
இதனால், `அகச் சமயத் தோர்களிடமாக நின்று அருள் பவனும் சிவனே` என்பது கூறப்பட்டது.
``யாதொரு சமயங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்`` 2
என்ற சிவஞான சித்தியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

பொழிப்புரை :

பொருந்தும் வழியையே கூறுகின்ற அகச் சமயங்கள் ஆறுக்கும் தலைவனாகிய சிவபெருமானை நேரே சென்று அடைதற்குப் புண்ணியம் தவிர வேறில்லை. சைவத்தில் நிற்பவர்க்கேயன்றி பிறசமயங்களில் நிற்கும் அனைத்துயிர்கட்கும் மேற்செல்லும் வழியாகிய அந்தச் சிவசத்தியாகிய முதல்வியே அவ்வுயிர்கட்கு அச்சமயங்களைப் பொருந்தும் வழியாகக் கூட்டு விப்பாள்.

குறிப்புரை :

``சமயாதி`` நான்காவதன்தொகை `ஆதிக்கு` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரித்துக்கொள்க `ஆம் ஆம்` என்னும் அடுக்கு, `அவ்வவற்றிகுப் பொருந்துகின்ற, என்னும் பொருட்டு. வழி ஆக்கும் - வழியாகக் கூட்டுவிக்கும். ``ஆமாம் வழி ஆக்கும்`` என்பதனை இறுதியிற் கூட்டி உரைக்க. `போமாறாகிய கொடி` என்க. ஆதாரம் - அனைத்திற்கும்` நிலைக்களம். அங்ஙனம் ஆவது சிவ சத்தியே யாதல் அறிக.
இதனால், `அகச் சமயங்களும் சிவசத்தியின் செயலால் அமைந்தனவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொழிப்புரை :

அகமாகிய சிவநெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் ஞான நெறியால், அளவற்ற எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுதற்குரிய உயர்ந்த நெறியாய் உள்ள ஒப்பற்ற ஒளி நெறி யாவது சிவனது நெறியே யாதலை அறிந்தவனு மாயினேன் நானும்.

குறிப்புரை :

ஆகவே, `அகநெறியில் (உட்சமயங்களில்) நிற்போர் சிவநெறியை அடைந்து உய்யும் நிலையைப் பெறுவர்` என்றவாறு. உம்மைகள் இரண்டனுள் முன்னது உயர்வு சிறப்பும், ஏனைய இழிவு சிறப்புமாம். ``அறிந்தேனும்`` என்பதன்பின் `ஆயினேன்` என்பது எஞ்சிநின்றது. முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. உரம் - ஞானம். ``உள்ளம்`` என்றது, அதன்கண் தோன்றும் எண்ணத்தை,
``கருதுப - கோடியும் அல்ல பல``1
என்ப ஆகலின், அவற்றைக் கடலாக உருவகித்தார். `அவற்றைக் கடத்தல் ஞானம் துணையாய வழிக் கூடும்` என்பதையும், அத் துணையைத் தருவதே உயரிய நெறி என்பதையும், அதனால், அஃது `ஒளிநெறி` எனப்படுகின்றது என்பதையும் எடுத்தோதி, `அவ் ஒளி நெறி அரன் நெறியே` என்பது உணர்த்தினார். `இதனை அடைதல் உட் சமயிகளுக்கல்லது இயலாது` என்றவாறு. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், உட்சமயங்கள் சிவநெறிக்குத் தடையாகாது துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.

பொழிப்புரை :

அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.

குறிப்புரை :

``சிவன்`` எனப் பின்னர் வருதலின்` முன்னர், ``தன்னை`` என்றார். பெயர்ந்து வந்தவர் அப்பரைப் போல்வார். பொருந்தினோர் மேற்கதியிற் சென்றமை கூறவே, பொருந்தாது இகழ்ந்து நீங்கினோர் தாழ்கதியிற் சென்றமை பெறப்பட்டது.
``வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூர்அரன் பொன்னடி
யுள்ளி ருக்கும் உணர்ச்சி யிலாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே`` 1
என அப்பரும் அருளிச் செய்தார். புகழை, `புனைந்துரை` என்ப ஆகலின், புனைதல் புகழ்தலாயிற்று.
இதனால், அகச் சமயங்கள் மேற்கூறியவற்றால் தாழ்கதியிற் செலுத்தாதனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே.

பொழிப்புரை :

இருதலைப் படுகின்ற மனத்தை அவ்வாறு இரண்டாதலினின்றும் நீங்க நீங்குங்கள்; நீக்கி, இகரம் ஊர்ந்த சகர எழுத்தை ஓதுங்கள். ஓதி, சிவனது நெறியில் எம்முடன் வாருங்கள்; வந்து அதில் நிலையாக நின்று அவனை நினைத்தால், உம்முள் மறைந்து நிற்கின்ற விளக்கொளி உங்கட்கு வெளிப்படுதல் கூடும்.

குறிப்புரை :

இருதலைப் படுதல் - ஐயமாய் நிற்றல். `இரண்டின் அற` என ஐந்தாவது விரிக்க. வீசுதல் நீக்குதல். `வீசுமின்` என்பது பாடமாகாமை, பின்னர், ``வாரும்`` என வருதலானும் அறியப்படும். இகரம் ஊர்ந்த சகரம், சி. திருவைந்தெழுத்தில் ஏனையவை இதன்கண் அடங்குதல் அறிந்துகொள்க. `முன்னியத்` தென்பதும் பாடமன்று. முன்னுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், சிவநெறி திருவைந்தெழுத்தால் பல்லாற்றானும் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.

பொழிப்புரை :

பெண்ணாகச் சொல்லப்படுகின்ற சத்தியாகிய நல்ல வடிவினையும், அந்தணர்கள் வேதத்தின்வழி வளர்க்கின்ற அக்கினி யாகிய வடிவினையும், அன்பர்கள் நினையும் நினைவாகிய வடிவினையும் உடைய சிவபெருமானை ஞானத்தின் முடிநிலை யாகிய அந்த வழியாற் காணுதல் உண்டாகுமாயின், அப்பொழுது சிவநெறி கைவந்ததாம்.

குறிப்புரை :

`மின்னாகிய நற்குறி` என்க. பின்னர்க் கூறப்படும் வடிவங்கள் பலவற்றினும் சிறப்புடையது இதுவேயாதல் பற்றி இதனை, ``நற்குறி`` என்றார். `சிவன்` என்னும் பொருட்டாய் நின்ற, ``ஆதிப்பிரான்`` என்பதை, `நினைக் குறியாளனை` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நினை` முதனிலைத் தொழிற்பெயர். `அஃது` என்னும் பொருட்டாகிய `அனைத்து` என்பது ஈறுகுறைந்துநின்றது. `அயக்குறி, நயக்குறி` என்பன பாடமல்ல. ஆதல், இங்கு கைவருதல்.
இதனால், சிவநெறி முதல்வன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பலவகையில் நின்று தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.

பொழிப்புரை :

உண்மை நூல்களை ஆராய்ந்து உணர மாட்டாதவர் களது, ஏனைய பல திறமைகளும் பொருந்தி உணராதபடி நிற்பது சிவநெறி, அஃது, உண்மை நூல்களில் நுழைந்து அவற்றின் பொருளை உணர்கின்றவர்கள், அவ்வுணர்வின் வழியே சிவனது திருவடியை முதற்கண் அவற்றின் வேறாய் நின்று வழிபட்டுப் பின்னர், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நுகர்கின்ற இன்பமாய் உள்ளது.

குறிப்புரை :

நான்காம் அடியில், உரை என்பது பாடமன்று.
இதனால், சிவநெறி புறச்சமயிகட்கு உணர ஒண்ணாததாய்ச் சிவநெறியாளர்க்கு முன்னர்க் கரணத்தாற் பெறும் இன்பமாயும், பின்னர்க் கரணங் கடந்த இன்பமாயும் விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

`சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன்` எனப் பலராலும் அறியப்பட்ட சிவன் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு அமைத்த ஞானநெறி ஒன்றே உள்ளது. அது, தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறியே. உலகத்தில் ஞானத்திற்குத் தகுதியுடையராய் உள்ளார் அதனை அடைந்து உய்தற்கு அந்த ஒன்றையே அவன் அமைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

``சைவ சமயத் தனி நாயகன்`` என்பது எழுவாயும், ``நந்தி`` என்பது பயனிலையாயும் நின்று ஒரு பெயர்த் தன்மைப் பட்டது. ``சன்மார்க்கம் சேர்ந்துய்ய`` என்பது முதலாக மறித்தும் கூறியது, நன்கு வலியுறுத்தற்பொருட்டு.
இதனால், உண்மை உய்யும் நெறி சிவநெறியேயல்லது வேறின்மை வலியுறுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.

பொழிப்புரை :

`இத்தவம், அத்தவம்` என்று தவங்கள் பல இருப்பனபோலச் சுட்டிப் பேசும் பித்தர்களைக் காணும்போதெல்லாம் எங்கள் பெரும்பெருமானாகிய சிவன் நகைப்பான். ஏனெனில், எந்தச் செயலாய் இருந்தால் என்ன? எந்தச் சமயத்தில் பிறந்தால் என்ன? தவத்தையும், அதனால் அடையப்படும் இறைவனையும் சிவநெறி யாளரோடு ஒத்த உணர்வினராய் உணர்பவர்கட்கு விரைவில் வீடு பெறுதல் கூடுவதாகும்.

குறிப்புரை :

``எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்`` 1
என்னும் முடிபுரையையும், அதற்கு இலக்கியமான சாக்கிய நாயனாரது வரலாற்றையும் உணர்க. `பெருநந்தி` என்பது செய்யுள் முடிபெய்தி நின்றது.
தவம், தவச் செயல். ``எங்கு`` எனச் சமயத்தை இடமாக வைத்து ஓதினார். இனி ``எந்நாட்டில்`` எனப் பொருள்கொண்டு, `நாடு களது வேறுபாட்டால் இங்குப் பெறப்படுவது சமயவேறுபாடு` என்றலு மாம். ஒத்தற்கும், உணர்தற்கும் செயப்படுபொருள்கள் வருவிக்கப் பட்டன. வீடு பெறுதலை, ``ஊர் புகல்`` என்றது ஒப்புமை வழக்கு.
இதனால், பிறப்பின் சார்பால் அதன் சமயத் தொடக்கி னின்றும் நீங்கமாட்டாதோரும் சிவநெறிப் பற்றுடையராயின் உய்தி பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்குத் தனது நிலைக்கு உரியன வான ஐந்து முகங்களோடு, கீழ்நிலையில் உள்ள உயிர்களுக்கு உரிய அதோமுகமும் உண்டு. இவ்வாறாக உள்ள ஆறுமுகங் கட்கும், அவன் அணிந்திருக்கின்ற தலைமாலைக்கும் உயிர்கள் அச்சத்தைப் பொருந்துகின்ற அப்பெருமானுக்கு அருள் இயல்பாய் உள்ளது.

குறிப்புரை :

`பிரான் முகம ஐந்தொடு ஆருயிர்க்கு ஆம் அதோ முகம் பிரானுக்கு ஆம்` எனக் கூட்டி உரைக்க. `ஆறாய் உள்ள தாம்` என ஆக்கம் வருவிக்க. ``அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்`` அன்றி நான் காவதும் வரும் பிற்கால வழக்குப்பற்றி, ``பிரானுக்கும் மாலைக்கும்`` என்றார். நாம் - அச்சம். நார் - அருள். முன் இரண்டடிகள் சிவனது முழுமுதல் தன்மையையும், பின் இரண்டடிகள் அவனது வடிவை அஞ்சத்தக்கதாக எண்ணி மருள்வாரைத் தேற்றுதலையும் குறித்தன. யாவரும் அறியும் ஐம்முகம் அவன் தனது உலகத்தில் நின்று தானே ஐந்தொழில் செய்வதற்கும், ஞானியரே உணரத்தக்க அதோமுகம் அனந்த தேவர் சீகண்டர் வழி. உருத்திர லோக தேவ மானுட லோகங்களில் ஐந்தொழில் நிகழ் வித்தற்கும் அமைந்தன என்பது, மேல் இரண்டாம் தந்திரத்து, அதோ முக தரிசன அதிகாரத்துட் கூறப்பட்டதனை இங்குச் சிறப்புணர்த்துதற் பயன் நோக்கிக் கூறினார். எனவே, ``ஆருயிர்`` என்றது `நிறைந்த உயிர்` என்னும் பொருட்டாய்ப் பிரளயாகலர் சகலரைக்குறித்த தாயிற்று. இம்மந்திரத்துள் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், சிவநெறியே மெய்ப்பொருளை முதலாக உடையது` என்பதும், `அம் முதலது தன்மை யறியாது வெருளுதல் மயக்க உணர்வாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

முதற் கடவுளாகிய சிவபெருமான், நிலவுலகத் தில் உள்ள ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) சூழ்ந்த ஏழு கடலாயும், அப்பொழில்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களாயும் நிற்பான். அவனின் வேறுபடாநிற்கின்ற சத்தி, ஆக்கல் அழித்தல்களைச் செய்யும் கடவுளரிடத்துப் பொருந்தி அவர்கள் வழியாக அத்தொழில்களை நிகழ்த்துவாள்.

குறிப்புரை :

அளத்தல் - இங்கு உள்ளடக்கல். `அளந்தவன்` என்பது பாடமாயின், அதன்பின், `ஆதலான்` என்பது வருவிக்க. சிவனது பெருமையையும், ஏனையோரது சிறுமையையும் உணர்த்தற்குக் கடலும் உயிருமாய் நிற்றலைச் சிவன் மேல் வைத்தும், பிற கடவுளராய் நிற்றலைச்சத்திமேல் வைத்தும் கூறினார். ``அந்தம்`` என்பதும் ஆகுபெயராய் `அந்தத்தின் கண் தெய்வம்` எனப் பொருள் தந்தது.
இதனால், சிவநெறி முதல்வராகிய சிவனும், சத்தியுமே அனைத்துச் சமய முதல்வராயும் நின்று அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் ஆய்ந்து அறிபவர்களாகிய தேவர்கள், வித்தியாதரர் முதலியோர் ஆய்ந்து அறிய இயலாதவாறு உள்ள சிவனது நெறியை, நான் ஆய்ந்தறிந்தேன். அதன்பின் அச் சிவனது திருவடிகளை வழிபடும் முறைமையையும் ஆய்ந்தறிந்தேன். அதனால், இம்மை அம்மை இரண்டின் இயல்புகளையும் நன்குணர்ந்தேன்.

குறிப்புரை :

ஆய்ந்து அறிதலாவது ஆய்தலைச் செய்து, உண்மையை உணர்தல். பிற பொருள்களின் உண்மையை உணர் வோர்க்கும் முன்னைத் தவம் இல்வழி, `சிவநெறியே நெறி` என்பது உணர்தல் கூடாமையை முதல் இரண்டடிகளிலும், முன்னைத் தவம் உடையார்க்கு அஃது எளிதில் கூடுதலை மூன்றாம் அடியில், உள்ள ``ஆய்ந்தறிந்தேன்`` என்பதிலும், `சிவநெறியே நெறி` என உணர்ந் தார்க்கும் அதிற் சொல்லப்படும் சாதனமும், பயனும் வாய்த்தல் அரிதாதலை ஏனைப் பகுதியிலும் கூறினார்.
இதனால், சிவநெறியைச் சார்தல் சார்ந்து பயன்கொள்ளுதல் இவற்றது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அறியஒண் ணாத உடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொழிப்புரை :

அறிதற்கு அரிதாகிய மானுட உடம்பின் பயனை அறிதற்குத் தடையாக ஆறுசமயங்களைப் படைத்து, அறிதற்கு அரிய ஆறு ஆதாரங்களை உடைய உடம்பாகிய பிண்டத்தில், அறிதற்கு அரிதாகிய ஓர் அண்டம் பொருந்தியுள்ளது.

குறிப்புரை :

`அதனை அறிந்தால் மானுட உடம்பின் பயனைப் பெற்றுவிடலாம்` என்பது குறிப்பெச்சம். ``அரிய ஒண்ணாத` எனவந்த நான்கினுள் இரண்டாவ தொழித்து, ஏனையவற்றில் ஒண்ணாமை, அருமை குறித்து நின்றது. ``அறிய ஒண்ணாததோர் அண்டம், ஆக்கிக் கோசத்துப் பதிந்தது`` எனக் கூட்டி முடிக்க. ``உடம்பு`` என்றது சிறப்புப் பற்றி மக்கள் உடம்பைக் குறித்தது. அதன் பயன், வீடு பெறுதல். பொதுப்பட ``அறுவகை`` என்றதனால், பிறசமயங்கள் யாவற்றையும் கொள்க. அவைபடிகளே யாயினும் தாம் தாமே மெய்யெனக் காட்டி நிற்றல் பற்றி அவற்றைத் தடையாகக் கூறினார். `அவற்றை ஆக்கியது படிகளாய் உதவுதற்பொருட்டு` என்பது மேல் பலவிடத்தும் கூறப்பட்டது. ஓர் அண்டம்`` என்றது, `பர வெளி` என்றவாறு. அது `சத்தி` என்பதையும் அதனையே தனக்குக் குணமாக உடையது சிவம் என்பதையும் நினைக்க. ``அறு வகையை உடைய கோசத்துப் பதிந்தது`` என்றதனால், அதனை யோக சாதனையால் அறிதல் கூடுவது பெறப்பட்டது.
இதனால், `சிவநெறியை அடைந்து சிவயோக ஞானங்களால் சிவனைத் தலைப்படுதலே மக்கட் பிறப்பின் பயன்` என முடித்துக் கூறப்பட்டது.
முன்னைத் தந்திரத்தில் சமயங்கள் பலவற்றையும் ஒருங்கு வைத்து அவற்றது நிலைகளை உணர்த்துமுகத்தால் சிவநெறியது சிறப்பினை உணர்த்திய நாயனார், இதன்கண் அந்நெறியில் நிற்றற்குரியாரது நிலைகளை உணர்த்துகின்றார்.
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.
சிற்பி