நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுமிடத்து, ஒன்பதெழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பதெழுத்தாகின்ற முறையால் ஒன்பதெழுத்துக்கள், `எண்பத்தோ ரெழுத்து` என்னும் தொகை பெறும்படி ஒன்பதெழுத்தாய் நிற்கும் அத் தொகுதியாவது `ஸௌம்` என்னும் முதலினையும், `க்லீம்` என்னும் இறுதியையும் உடையது.

குறிப்புரை :

இம் முதல் ஈறுகளை உடைய எழுத்து அனைத்தையும் வருகின்ற மந்திரத்தால் அறிக. தொகுதியைச் சுட்டுதற்கு, `நவாக்கரம்` என்னாது \\\"நவாக்கரி\\\" என்றார். \\\"முதல் ஈறே\\\" என்றது எதிர் நிரனிறையாதல் வருகின்ற மந்திரத்தாற் பெறப்படும்.
இதனால், நவாக்கரி சக்கரம் அமையுமாறு தொகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

பொழிப்புரை :

`ஸௌம்` என்பது `முதல்` என மேற்கூறிய அவற்றோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ‹்ரீம்` என்பவை முறையே தொடர்ந்தபின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடி வெழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று சொல்; நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.

குறிப்புரை :

``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். விந்துவை நோக்கிப் பன்மையாகக் கூறினார். `ஔம்` என்பதை இங்கு `ஹௌம்` என ஓதல் வேண்டாமை அறிக. `கௌம், ஐம்` என்பவற்றில் செய்யுள் நோக்கி விந்துவிற்கு முன் ஓர் உகரம் தந்தும், எண்ணும்மை கொடுத்தும் ஓதினார். `கலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ஒவ்வில் - பொருந்தில்; என்றது, `பொருந்தியபின்` என்றவாறு. முதற்கண் உள்ள எழுத்துத் தலையாய் நிற்றலின் ஈற்றெழுத்தை, ``பாதம்`` என்றார். செவ்வுள் எழுந்து - செம்மையான நெறியில் முயன்று. `நவமே` எனற்பாலது, `நவே` எனக் குறைந்து நின்றது. நவம் - நவாக்கரமாம். `நமஎன்னே` என்றே பாடம் ஓதுதல் அந்தாதிக்கு ஒவ்வாமை அறிக.
இதனால், நவாக்கரி சக்கரத்திற்குரிய. நவாக்கரங்கள் முழுதும் எடுத்தோதப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நவாக் கரியாவதும் நானறி வித்தை
நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வழிபாடும் நான் சிறந்த ஒன்றாக அறிந்த வழிபாடாம். அதனால், நலங்கள் பல விளையும். ஆதலின், நவாக்கரி மந்திரத்தை நாம் புடைபெயரும் அளவாகக் கணித்தால், அம்மந்திரத்திற்குரிய சத்தி எல்லா நன்மைகளையும் தருவாள்.

குறிப்புரை :

`நவாக்கரியின் உள்நின்று எழும்` என்க. அஃதாவது `நவாக்கரி வழிபாடு ஏதுவாக` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வழிபாட்டினால் பெருநன்மை யைத் தருவதாகிய அனுபவ ஞானமும் அதற்கு ஏதுவாகிய கலா ஞானமும் வலியுற்று நிலைபெறும். அதற்கு முன்னே உம்முடைய வலிய வினைகள் உம்மை நோக்காது விட்டு ஓடிவிடும். `அஃது எவ்வாறு` எனில், இவ்வழிபாட்டினால், வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து, உமக்குத் துன்பத்தைத் தரஇருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டும் ஆதலால்,

குறிப்புரை :

`சிரமம்` என்பது, இடைக்குறைந்து, `சிரம்` என நின்றது. செய்வது, இனிச் செய்யக்கடவது; இது சாதி யொருமை. உம்மை, சிறப்பு. ``அகற்றி வாய்த்திடும்`` என்பதை, `வாய்த்து அகற்றிடும்` என மாற்றி முடித்து, இறுதியில் `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. முதல் அடி இன எதுகை.
இவை இரண்டும் மந்திரங்களாலும் நவாக்கரி வித்தையும் ஷ்ரீவித்தையோடு ஒத்த சிறப்புடையதாய்ப் பயன்தருதல் பொது வகையிலும், சிறப்பு வகையிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன், செம்பு என்னும் இவற்றுள் ஒன்றாலான தகட்டிலே அமையுங்கள்; பின்பு மனத்திலும் அதனை ஊன்றி நினையுங்கள். அங்ஙனம் நினைத்தலால் உள்ளத்தில் நிலைபெறுகின்ற அச்சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை வெல்லவும், உலகத்தை வெற்றிகொள்ளவும் நீவிர் நினைப்பீராயின் நினைத்த அளவிலே அப்பயன்களை உங்களுக்குத் தரும்.

குறிப்புரை :

`சக்கரத்தை வெள்ளி முதலியவற்றில் கண்டிடும்; உள்ளே கொண்டிடும்; நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே வென் றிடும்; தருவிக்கும்` எனக் கூட்டிமுடிக்க. இதில் இனவெதுகை வந்தது.
இதனால், நவாக்கரி சக்கரத்தை அமைத்தற்காம் பொருள் களும், அவற்றால் ஆம் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.

பொழிப்புரை :

உன்னத் தக்க க்லீம் என்பவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து உன்னப்படுகின்ற சக்கரத்தின் முதலெழுத்துமுதல் ஈற்றெழுத்து முடிய, இச்சக்கர சத்தி தன்னுள்ளே விரும்புகின்ற செந்நெல், அறுகம் புல் என்பவற்றை நீயும் மனத்திலே கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய். அப்பொழுது உனது அருச்சனையை அச்சத்தி ஏற்றுக்கொள்வாள்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் ``நினைத்திடும்`` என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க. `நேர்தருவாள்`` என்பது, `நேர்ந்து மேற்குறித்த பயன்களைத் தருவாள்` என்றவாறு.
இதனால், இச்சக்கர வழிபாட்டிற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

பொழிப்புரை :

வழிபடுவார்க்கு நேர் வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம்போலும் நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பு செல்லும் வண்ணம் நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை யெல்லாம் உனக்குக் கைகூடும்.

குறிப்புரை :

`திரிகை` என்பது கடைக்குறைந்து நின்றது. திரிகை - சக்கரம். ``யாதொரு வண்ணம், கார்தரு வண்ணம்`` என வினாவும், விடையும் தாமே கூறினார். `யாதொரு வண்ணம்` என வினாவி அறிந் திடு` என்று உரைப்பினும் ஆம். ``கார்தரு`` என்பதில் தரு உவம உருபு.
இதனால் இச்சக்கரசத்தியது தியானவண்ணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.

பொழிப்புரை :

இச்சக்கர சத்திபால் நீ அன்புசெய்து ஒழுகினால் நீ இவ்வுலகில் நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாளும் அங்ஙனம் கொண்டுபோகாமலே கடந்துவிடும். உனது பெயர் உலகெங்கும் பரவும்; உனது உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல விளங்குவதாகும். இப்பயன்களை யெல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

குறிப்புரை :

``கண்ணிய`` என்பதனை, `எண்ணிய` எனவும் ஓதுவர். `வண்ணம் கதிர்போல அடைந்திடும்` எனக்கூட்டுக.
இதனால். இச்சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொழிப்புரை :

பொன், வெள்ளி, நவமணிகள் ஆகிய பொருள்கள் யாவும் குறைவின்றி உன்பால் வந்துசேரும்; நல்வினை யாலன்றிச் சிவனது அருளால் ஆம் செல்வங்கள் கிடைக்கும். தேவர்கள் பதவியும் தாமாகவே வரும்; இவையெல்லாம் இங்ஙனம் ஆமாற்றை அறிந்து இச்சக்கர வழிபாட்டினை நீ செய்.

குறிப்புரை :

``அருளும்`` என்பது எச்சம். அருளால் வரும் செல்வம் வினையால் வரும் செல்வம் போல மயக்கம் செய்யாமையால் `அச்செல்வமே இதனால் கிடைக்கும்` என்றார். ``அறிந்திடு`` என்றது, தன் காரியம் தோன்ற நின்றது.
இதனால், இவ்வழிபாட்டின் இம்மை மறுமைப் பயன் இரண்டும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.

பொழிப்புரை :

மெய்யறிவுடையோர் உண்மை அமரர்களாதல் பொருட்டு அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் பிளந்துகொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையைச் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் பணிகின்ற சத்தியை நீவிர் வழிபட்டு மேற்கூறிய பயன்களைப் பெறுங்கள்.

குறிப்புரை :

அமரர் - இறவாதவர், இப்பெயர் மார்க்கண்டேயர் போலும் சிவனடியார்கட்கே உண்மையில் பொருந்தும் ஆதலின், சிவபெருமானை, ``அறிந்திடுவார்கள் அமரர்களாகத் தெரிந்திடு தேவன்`` என்றார். வானோர் - வானுலகில் உள்ளவர். `வானோராகிய தேவர்கள்` என்க. `வானத்து வன்புனல்` என்றவாறு. சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போலும்படி எளிதில் ஏற்றமை தோன்ற, ``சூடி`` என்றார். முரிதல் - வளைதல்; இங்கு, பணிதலைக் குறித்தது. நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமைதன் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாகப் புனைந்துரை கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்திதன் பெருமை புலப்படுதற்கு எடுத்தாண்டார். ``முரிந்திடுவானை`` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்திதன் பெருமை கூறும் முகத்தால், மேற்கூறிய பயன்கள் உளவாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.

பொழிப்புரை :

நீங்கள் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்பதில் \\\"ஹ்ரீம்\\\" என்பது முதலாகவும், `ஷ்ரீம்` என்பது இறுதி யாகவும் அமையும் வகை சிறந்ததாகும்.

குறிப்புரை :

இதனைப் பின்னர்க் காட்டப்படும் சக்கரத்தில் கண்டு கொள்க. \\\"சக்கரம்\\\" என்பதில் ஏழனுருபு விரிக்க, வண்ணங்கள் - எழுத்துக்கள். பார் - நிலம், என்றது சக்கரம் அமைந்த தகட்டினை. அணிதல் - அழகு செய்தல். `இவ்வகைச் சக்கரம் மிக அழகாக அலங் கரிக்கப்படும்\\\" என்பது இதனால் விளங்கும். உம்மை, முற்றுப் பொருட்டாய் நிலமுழுதும் எனப்பொருள் தந்தது. `பொழிலின்` என ஒப்புப் பொருளில் வந்த ஐந்தன் உருபு விரிக்க. பொழில் போலுதல், தண்ணிய திருவருளைத் தந்து இன்புறுவித்தல்.
இதனால், இச்சக்கர வகைகளுள் ஒன்று சிறந்ததாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

பொழிப்புரை :

மேற்கூறிய வகைச் சக்கரத்தின் வழியே ஒப்பற்ற அச்சத்தியைக் காணுங்கள். கண்டால், முகந்து கொள்ளலாம் போலும் முக வசீகரம் உங்கட்கு உண்டாகலாம். அநாதி பரஞ்சுடராகிய சிவபெருமானும் நீவீர் காணநின்று, அழிவற்ற அவளைத் தன்பால் எடுத்து வைத்துக்கொள்வான்.

குறிப்புரை :

பண்டு கொள்ளுதல் - அநாதியாம் தன்மையைக் கொண்டிருத்தல். பரமாய பரஞ்சுடர் - மேலானவற்றிற்கெல்லாம் மேலான சுடர். ஈற்றடி இன எதுகை.
இதனால், மேற்கூறிய வகையின் வழிபாட்டினால் சிவபரஞ்சுடரது காட்சியும் எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.

பொழிப்புரை :

நீங்கள் பெறத் தக்க பேறுகட்கெல்லாம் உரிய வளாகிய சத்தியின் பெருமையை அறிந்து வழிபட்டால் மன்னரும் நம் வசப்படுவர்; பகைவர்கள் சீவித்திரார். ஆதலின், சிவனது ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீவிர் துதியுங்கள். இரண்டாம் அடி உயிரெதுகை.

குறிப்புரை :

எண்ணுதல் - ஆய்ந்தளித்தல். இது தன் காரியம் தோன்ற நின்றது.
இதனால், அனைத்துப் பேற்றையும் சத்திதர வல்லளாதல் தெரிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பொழிப்புரை :

சத்தி எல்லா உலகங்களையும் உடையளாதலை அறிந்து துதியுங்கள்; அதனால், உலகின் சில பகுதிகட்குத் தலைவ ராயுள்ள தேவர்களது வாழ்வுவேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; பின்னும், மீள மீள இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்குங்கள். முடிவாக அச்சத்தியது திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

குறிப்புரை :

`அமரர்களது அண்டத்து வாழ்வு` எனக் கூட்டுக. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். வாழ்வு எனல் - வாழ்வு வேண்டும் என விரும்புதல்.
இதனால், இவ் வழிபாட்டினை முத்தியை விரும்பிச் செய்தல் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

பொழிப்புரை :

சத்தி தன் திருவடியில் சேர்ந்து நீங்காது இருக்க எண்ணினவர் அவளது மந்திரத்தை நாவிற்குள்ளே சொல்லித் துதிப்பர். புறத்திலே மலர்களை அவளது திருவடியிலே தூவி விளக்கம் பெற்றிருப்பவர், அவளது பெருமை பொருந்திய திருவடிகளைத் தரிசிக்கும் வழியை அறிந்தவராவர்.

குறிப்புரை :

`சேர` என்பது பாடம் அன்று.
இதனால், அருச்சனையிலும் செபம் சிறந்ததாதல் கூறப் பட்டது. சக்கர வழிபாட்டில் செபமே முதன்மையாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 16

ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற சக்கரம் அந்த `ஐம்` என்பது முதலாகப் பொருந்திப் பின்பு, `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் உடைய தாகும். அந்த `ஐம்` என்பதை முதலாகக் கொண்ட அனைத் தெழுத்துக்களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.

குறிப்புரை :

`துதித்தால், உனது அறியாமை நீங்கி மெய்யறிவு பிறக் கும்` என்பது கருத்து. மை - இருள்; மலம். `அதற்கு முதல்வி` என்றது, `அதனை ஏற்றவழியால் கழுவுபவள்` என்றவாறு. மேலை மந்திரத்தில் \\\"வகை\\\" என்பதில் உள்ள ஐகாரமே இதில் ஆதியாகக் கொள்ளப் பட்டது. `அவர்க்குடையாளை` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், `இச்சக்கர வழிபாடு அஞ்ஞானத்தைப் போக்கும்` என்பது உணர்த்தி, மற்றொரு வகையின் சிறப்பு வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கர சத்தி சிவாகமங்கள் கூறும் வாகீசுவரியாம், `வேதம்` என்றும், `ஆகமம்` என்றும் இவ்வாறு பலவாகப் பகுத்துச் சொல்லப்படும் நூல்கள் அனைத்தையும் தனது ஒரு நாவினாலே எளிதிற் சொல்ல வல்லவளாகிய இச்சத்தியை நீங்கள் உங்கள் வாக்கிலும் விரையத் தோன்றும் வண்ணம் வணங்குங்கள்.

குறிப்புரை :

`வணங்கினால் கலா ஞானமும் நிரம்பவரும்` என்பது கருத்து. `உங்கள் முகத்துளும்` என்பது ஆற்றலால் வந்தது. வாயை `முகம்` என்றல் வடமொழி வழக்கு. \\\"முன்\\\" என்றது, `விரைய` என்ற வாறு. முதலடி உயிரெதுகை. இவ்விரு மந்திரங்களிலும் `வகுத்திடும்` என்றேயும் பாடம் ஓதுப.
இதனால், மேற்கூறிய மலநீக்கத்தோடு கலாஞான நிறைவும் மேலைச் சக்கர வழிபாட்டால் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய வகையில் அறியப்பட்ட இச்சக்கரத்தினை நாவில் பதித்துக்கொண்டால், இதற்குக் கொள்ளப் பட்ட இந்த எழுத்துக்களேசிவனது எழுத்துக்களாய் விடும். அதனால், திருவம்பலத் தியானமாகிய தகர வித்தையும் மக்களுக்குக் கைவர, ஞானசத்தி பதிதலால், இவ்வழிபாட்டைச் செய்பவனும் உலக மாயையை வெல்லுபவனாவான்.

குறிப்புரை :

``மானுடர்`` என்பது வேறு முடிபு கொண்டு பொதுமை யுணர்த்தி நிற்றலின், ``வென்றிடும்`` என்பது பால்வழு ஆகாதாயிற்று. வெல்லுதற்கு `இவன்` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க. சத்தி சிவத்தின் வேறன்மை, `கொண்ட இம்மந்திரம் கூத்தன் எழுத்தாம்`` என்ற இதனானும் நன்கறியப்படும். இஃது அறியாதார் சத்தியை வேறு நிற்பவளாக மயங்கி, ஏற்றங் கூறி மகிழ்வர். இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், இச்சக்கரவித்தையே தகர வித்தையின் பயனையும் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லிய லாக நடந்திடுந் தானே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளாம் இயல்பினளாகிய இச்சத்தியை இங்குக் கூறிய இம்மந்திரத்தின் வழியே பற்றி அவ்வழிபாட்டில் நில்லுங்கள். பல்வேறு வகையினவாய் மிக்குச் செல்லுகின்ற உங்கள் நாள்கள் பலவும் நல்ல நாள்களேயாய்ச் செல்லும்.

குறிப்புரை :

முதலடியை, `மெய்ப்பொருளாகிய மெல்லியலாள் தனை` என மாற்றிக்கொள்க. பல்லியல்பு, இருவினைகளுக்கு ஈடாகப் பல்வேறான எண்ணமும், செயலும், நுகர்ச்சியும். நல்லியல்பு, எல்லாம் திருவருட் செயலாகத் தோன்றுதல் அங்ஙனம் தோன்றின் வினைப் பயன்கள் வாதியாமையோடு, தீமை தானும் நன்மையாச் சிறக்கும்.1
இதனால், இவ்வழிபாட்டினால்வினைப்பயன்களால் தாக்குண்ணாமை கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பொழிப்புரை :

இச்சக்கர சத்தி வாகீசுவரி யாதலின், இவளது அருள் கிடைக்கப் பெற்றவனுக்கு அவன் வேண்டிய நன்மைகள் யாவும் அவன் சொன்ன அளவிலே அங்ஙனமே முடியும். வழக்கும் செய்யுளுமாய்த் தொடர்கின்ற சொற்கள் அனைத்தையும், அவற்றின் பொருளோடு அவன் முற்ற உணர்ந்தவனாவான். விரிந்துகிடக்கின்ற இவ்வுலகில் ஓரிடத்தும் அவனுக்குப் பகையாவர் இல்லை. (நண்பரும் உறவினருமே உளராவர் என்பதாம்.)

குறிப்புரை :

``கல்விக் கரசிவ ளாக`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. `அரசி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ``படர்ந்திடும் பார்`` என்றது, `பிரபஞ்சம்` என்பதன் பொருள்பற்றிக் கூறியவாறு. கூறவே ஓரிடத்தும் பகையில்லாமை கூறியதாயிற்று. கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` 1 என்பது ஈற்றடியாற் கூறியவாறு.
இதனால், வாகீசுவரி வழிபாட்டினால், மேன்மைச் சொல்லும், நிறைபுலமையும் உளவாதல் கூறப்பட்டது. மேன்மைச் சொல்லை, `நாவசைத்தால் நாடசையும்` என்று குறிப்பர்.

பண் :

பாடல் எண் : 21

பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம்
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

பொழிப்புரை :

இனி, `கௌம்` என்பதை முதலாகவும், `ஐம்` என்பதை இறுதியாகவும் கொண்ட சக்கரத்தின் பெருமையை நன்கு அறிந்து வழிபடுகின்றவர்கட்கு இவ்வுலகில் வெளிப்படையாய் வருகின்ற பகைவரும், மறைவாக நின்று புறங்கூறுபவரும் இலராவர். (நண்பரும், உறவினருமாய் நெஞ்சாரப் புகழ்கின்றவரே உளராவர் என்றபடி.) மேலும் பல்வேறு வகையினவாய உயிர்களும் இவனை எதிர்க்க வழியில்லாமல் பணிந்து நடக்கும். யான் சொல்லிய இவை மிகையாதல் இல்லை; உண்மையேயாம்.

குறிப்புரை :

`ஐம் அது ஈறாம் சக்கரம் நன்றறிவார்க்கு` என்பதனை முதலிற் கொள்க. `சொல்லிய மிகை இல்லை` என் மாற்றி, இறுதிக்கண் வைத்து உரைக்க. ``உரு`` என்றது, அவற்றோடு கூடிய உயிரை. அரிமா, புலி முதலிய கொடு விலங்குகள் பாம்பு முதலிய நச்சுயிர்கள் முதலிய பலவும் அடங்குதற்கு, ``பல் உரு`` என்றார். இவை `பணிந்து நடக்கும்` என்பதனால், தம் கட்டளைப்படியே நடத்தல் பெறப்பட்டது.
இதனால், மற்றொரு வகைச் சக்கர வழிபாட்டின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

பொழிப்புரை :

மும்மலங்களால் வருந்துகின்ற பல உயிர்களுள் பக்குவம் எய்தப் பெற்ற உயிர்கள் சத்திதன் பெருமையை உணர்ந்து அவளை வணங்கும். அவ்வணக்கத்தின் பயனாக அவைகளைப் பற்றியுள்ள, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கும். அவை நீங்கவே `அவற்றால் உண்டாகும்` என நூல்கள் சொல்லிய வினைகளும் இல்லையாம்.

குறிப்புரை :

``நலங்கிடும்`` என்றது உயிர்களின் பொது வியல்பு உணர்த்தியது. `காமம் முதலியவை கலங்கிடும்` எனவும், `வினை துளங்கிடும்` எனவும் முன்னே கூட்டி முடிக்க. முதலடி உயிரெதுகை; ஈற்றடி இனவெதுகை. `துலங்கிடும்` என்பது பாடமாயின், அதனை நேரே காமம் முதலியவற்றிற்கு முடிபாக்கி, `வினை கலங்கிடும்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், `சத்தியை இச்சக்கர வழியாக வழிபடுதல் பக்குவர்க்கே உண்டாம்` என்பதும் அதனால் அவர்க்கு உளவாம் பயனும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

பக்குவ முதிர்ச்சியால் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றைத் தானே திருத்தியமையவும், தான் ஆய்ந்துணர்ந்த வற்றைப் பிறருக்குச் செவியறிவுறுக்கவும் வல்லனாய், இறைவனது ஒப்பற்ற நடனத்தை எஞ்ஞான்றும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டுச் சமயத் தலைவனாயும் விளங்குவான்.

குறிப்புரை :

கழறுதல் - இடித்துத் திருத்தல். தணிதல் - அடங்குதல். நினைத்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. எஞ்ஞான்று மாவது படைப்பிற்கு முன்னும், காப்புக் காலத்தும், அழிப்பிற்குப் பின்னும் எனவும், இடையறாமை எனவும் வரும் இரண்டுமாம். அவ்வாறு காண்பவள் சத்தியன்றிப் பிறர் இன்மையின் அவளை, `தனி நடம் தானே கண்டவள்` என்றார். எனவே, அவள், நடிப்பவனின் வேறல்லளாதல் உணரப்படும். படவே, அவளை வணங்குதலால் இப்பயன்கள் உளவாதல் தெளிவு. தானே வணங்குதல், பிறர் வலிசெய்ய வேண்டாது, தானே இயல்பால் வணங்குதல்.

பண் :

பாடல் எண் : 24

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

பொழிப்புரை :

தானே எல்லாமாய் நிற்கின்ற சத்தி, அனைத்துயி ராகியும் நிற்கின்றாள். எல்லாப் பொருள்களும் தம் தன்மையில் தாமேயாயும், சத்தியின் வியாபகத்தால் தம்மை ஈன்ற அவளாகியும் நிற்கும். ஆகையால் பக்குவன் அவளை வணங்கிய வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆகிய பயன்களை எய்துவான்.

குறிப்புரை :

`அம்மையும்` என்னும் உம்மையைப் பிரித்து ``அனைத் துயிர்`` என்பதனோடு கூட்டி, `ஆகிய அம்மை அனைத்துயிரும் ஆம்` எனவும், `சகலமும் தாமே ஆம், ஈன்ற அத் தையலும் ஆம்` எனவும், `ஆதலின் அவள் அடிபோற்றி வணங்கிடினே வினைகளும் போம்; புண்ணியன் ஆகும்` எனவும் கூட்டி உரைக்க. புண்ணியம், இங்கு தவம்.

பண் :

பாடல் எண் : 25

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் உலக முழுவதும், தவமிகுதியால் வரும் பெருமையுடையவானகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவர்க்கும் உரியவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

`பெருமை, தவத்தினாலாயது` என்பதும், `இனிமை அருளால் ஆயது` என்பதும் தோன்றுதற்கு வேறு வேறு தொடராக வைத்து ஓதினார். அமர்தல் - அமைதல். அமர்ந்திருத்தல், ஒரு சொல் நீர்மையது.
இவை மூன்று மந்திரங்களாலும் அவர்க்கு வரும் பயன்களே வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

தானது கம்இரீம் கௌமது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்திக்
கேனது! வையம் கிளரொளி யானதே.

பொழிப்புரை :

தானே சக்கரமாகின்ற முதலெழுத்து `க்ரீம்` என்பதும், ஈற்றெழுத்து `கௌம்` என்பதுமாக அமைகின்ற அந்தச் சக்கரமே ஞானத்தை விரும்புவார்க்கு நான் சொல்வது. அது சத்திக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற நல்ல சோலையாய் விளங்கும். ஆயினும், அதில் வேறறக் கலந்து நிற்கின்ற அவளுக்கு அஃது எதன்பொருட்டு வேண்டும்! உலகம் ஒளி பெற்று விளங்குவதே அதன்பயன்.

குறிப்புரை :

பல அக்கரங்கள் உள்ள சக்கரங்கள் முதற்கண் உள்ள எழுத்தின் சக்கரமாகவே கூறப்படுதலின், முதலெழுத்தை, `தான் அதுவாவது` என்றார். `க்ரீம்` என்பதை, `கம்` என்வும், `இரீம்` எனவும் செய்யுள் நோக்கிப் பிரித்து ஓதினார். `நான் சொல்வது` என ஒருசொல் வருவிக்க. `கன்னிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. `அது கன்னிக்குக் கான்` என்க. ஆதலுக்கு `அதனால்` என்னும் வினை முதல் வருவிக்க. ஒளியாவதும் ஞானமே. ``ஆனதே`` என்பதன் பின், `பயன்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்றனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின்
களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

இச்சக்கத்தில் நின்று ஞானத்தை வழங்குகின்ற சத்தி ஒருவனது உள்ளத்தில் நிலைபெறுவாளாயின், அவனது உள்ளம் அவனையும் அறியாமல் ஒரு களிப்பினை யுடையதாகும். தன் அடியவரைப் பல்லாற்றானும் நன்னிலையில் வைத்துக் காக்கின்ற இச்சத்தியது பெருமையை அறிந்து இவளை அடைகின்றவர்கட்கு இது பற்றிய ஆராய்ச்சியில் இதனைக் காரணங் காட்டித் தெளிவிப்ப தாகிய அருள்மழையுடன், பொருட் செல்வத்தையும் இவள் உண்டாக்குவாள்.

குறிப்புரை :

ஒளிக்கும் - ஒளியைச் செய்யும். களித்தலுக்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றடியை இதன் பின் கூட்டுக. இச் சிந்தை - இது பற்றிய சிந்தனை. தெளிக்கும் மழை, கருணை மழை.

பண் :

பாடல் எண் : 28

அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே
எறிந்திடும் வையத் திடரவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

பொழிப்புரை :

உண்மையை நோக்குமிடத்து, இங்கு அறியப் படுகின்ற இச்சக்கர வழிபாட்டினால் உலகத்துன்பங்கள் அழிக்கப் படும். பிணங்குகின்ற அரசனும் இணங்கி வணங்குதல் செய்வான். தீக்குணத்தை உடைய உள்ளம் அஃது இன்றித் திருந்தும்.

குறிப்புரை :

``எறிந்திடும்`` என்பது செயப்பாட்டு வினைப் பொருட்டாய் நின்றது. ``காணின்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொறிதல், பொறியோடு கூடியதாய் இருத்தல். பொறி, தீப்பொறி. `புகையில்லையாம்` அஃதாவது, `தணிந்து குளிரும்` என்க. `அருச்சனை` என்பது பாடம் ஆகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 29

புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.

பொழிப்புரை :

மேற் சொல்லியவாறு தீக்குணம் அகலும்; முன்பு யோக நிலையிற் சொல்லிய பொன்போலும் உடல் ஒளியும் உண்டாகும். பகை யாதும் இல்லாமையால், அரண்தேட வேண்டுவ தில்லை. இப்பயன்களைப்பெற உலகருக்கு வகை இல்லை. தனக்கு மேல் ஒன்றில்லாத இச்சக்கர வழிபாட்டினை மேற்கொண்டவர்க்கே இவை கிடைப்பனவாம்.

குறிப்புரை :

தொடர்பு தோன்ற, ``புகையில்லை`` என அனு வதித்தார். ``குகை`` என்றது, `கரந்துறையும் இடம்` என்றவாறு. அஃறிணையும் அடங்க, ``கொல்வது`` எனப் பொருளாக வைத்துப் பொதுப்பட ஓதினார். கொல்வது, சாதி யொருமை. இதனைத் தொழிற் பெயராக வைத்து, `பாவம் இன்மையால் நரகம் இல்லையாம்` எனவும் உரைப்ப. ``சிகை`` என்று, மேல் உள்ளதனைக் குறித்ததாம். சிகை யில்லையாகிய சக்கரம் என்க. `சேர்ந்தவர்தாமே` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 30

சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

பொழிப்புரை :

இச் சக்கர வழிபாட்டினை மேற் கொண்ட வரிடத்தில் மிக விரைந்து எழுகின்ற உள்ளொளியாகிய ஞானம் உலகில் பலராலும் அறியப்படும். ஆதலின், ஆணவத்தால் விளையும் அறியாமையும், திரிபுணர்வும் கெடும். அதனால் இவர்கள் எட்டுத் திசைக்கும் விளக்குப்போல்பவரும், தம்மை வந்து வருத்துகின்ற ஆகாமிய வினை தோன்றப்பெறாதவரும் ஆவர்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `திசைக்கு` என நான்காவது விரிக்க. மாறுஒளி - திரிந்த உணர்வு. ``மாய்ந்தது`` என்பதை இதனோடும் கூட்டுக. முதலடி இனவெதுகை.
இவை நான்கு மந்திரத்தாலும் இச்சக்கர வழிபாட்டின் பயனே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளியது ஞானமும் சிந்தையும் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

பொழிப்புரை :

ஒளியை உடையதாகிய `ஹௌம்` என்னும் பீசத்தை முதலிலும், `க்ரீம்` என்னும் பீசத்தை இறுதியிலும் கொண்ட, களிப்பைத் தருவதாகிய அச்சக்கரத்தின் உண்மையை நன்குணர்ந்த வர்கட்குத் தெளிவாகிய ஞானமும் தோன்ற, அதனை உள்ளமும் பற்ற, அதனால், அச்சக்கரம் எல்லா ஞானத்திற்கும் இடமாயுள்ள திருவைந்தெழுத்துமாய் விடும்.

குறிப்புரை :

கண்டறிதல், ஒருபொருட் பன்மொழி. தெளி, முதனிலைத் தொழிற்பெயர். \\\"தேற\\\" என்பது \\\"ஞானம்\\\" என்பத னோடு இயையுங்கால் `உண்டாக` எனப் பொதுமையில் நிற்பதாம். `பள்ளி` என்பது இடைக் குறைந்து நின்றது. பள்ளி - இடம். `பள்ளி யாகிய பஞ்சாக்கரம்` என்க. `பஞ்சாக்கரமதுவும்` என்னும் சிறப்பு உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் மற்றொரு வகையினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.

பொழிப்புரை :

`சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் மூன்று மாயைகளினின்றும் மூவகைக் கருவிகளைத் தருபவளாகிய சத்தி, அக்கருவிகளைப்பெறும் உயிர்களாய் நிற்றலே யன்றி, இச் சக்கரத்துள்ளும் இதுவேயாய் நிற்பாள்.

குறிப்புரை :

``ஆமே`` ஐந்தில் முதல் மூன்றும், இறுதி ஒன்றும் இச்சக்கரத்துள் நிற்றலையும், ஏனையது அது அதுவாதலையும், குறித்தன. சதாசிவ நாயகி - சதாசிவனுக்கு நாயகி; மனோன்மனி. அறிவானவள், வித்தியேசுரனுக்கு நாயகியானவள், வித்தியேசுவரி. சுவையொளி ஊறோசை கண்டவள், சீகண்டனுக்கு நாயகியாகிய உமை. அதோமுகம் - கீழிடம். இஃது இடவாகுபெயராய் அசுத்த மாயையை உணர்த்திற்று. இதனைக் கூறவே முன்னர்ச் சுத்த மாயையும், பின்னர்ப் பிரகிருதி மாயையும் கொள்ளக் கிடந்தன. ``சுவையொளி ஊறோசை``, ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். பிரகிருதி மாயையில் ஆன்ம தத்துவத்தைக் கண்டமை கூறவே, அசுத்த மாயையில் வித்தியா தத்துவத்தைக் கண்டமையும், சுத்த மாயையில் சிவ தத்துவத்தைக் கண்டமையும் பெறப்பட்டன. காணுதல் - தோற்றுவித்தல் ஈற்றடியில், ``தன்னுள்`` என்றது, சக்கரத்துள் என்றவாறு. ``சட சித்துக்கள் அனைத்திற்கும் முதல்வியாய் நிற்கும் சத்தி இச்சக்கரத்தில் விளங்குவள்` என்றவாறு.
இதனால், `இச்சக்கரத்தின் தெய்வம் இது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 33

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் நின்றும், உலக முழுதையும் தன்னுடையதாகக் கொண்டும், என் உள்ளத்திலும் இருந்தும் எல்லாப் பொருளும் தன்னிடத்தில் அடங்க நிற்கின்ற சத்தி, பஞ்ச பூதங்களின் உள்ளும், என் கண்ணின் உள்ளும், உடம்பின் உள்ளும் காணக் கூடியவளாகின்றாள்.

குறிப்புரை :

கண்ணுட் காணப்படுதல் புறக்காட்சியாலும், உடம்புட் காணப்படுதல் அகக் காட்சியாலுமாம். ஆகவே `உயிர்களின் அகத்தும், புறத்தும் காணப்படுகின்ற இவளை நீவிரும் இவ்வழிபாட்டி னால் காண்பீராக` என்றதாயிற்று. பின்னிரண்டடிகள் இனவெதுகை.
இதனால் அத்தெய்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
காணலு மாகும் கலந்து வழிசெயல்
காணலு மாகும் கருத்துற நில்லே.

பொழிப்புரை :

சத்தியின் துணையாலே உயிர்கள் செயற்பட்டு வரும் முறைகளை உணரலாம். `எப்பொழுது` எனின், அவள் உனது உள்ளத்தில் விளங்கும்பொழுது. அப்பொழுதே அவள் உயிர்களுக்கு உய்யும் வழியைச்செய்து வருதலையும் உணரலாம். ஆதலின், இவ்வுணர்வுகளைப் பெற நீ உனது உள்ளம் அவளிடத்திற்பொருந்தும் வகையில் நிற்பாயாக.

குறிப்புரை :

இரண்டாம் அடி நான்காம் அடிகளில் ``காணலுமாகும்`` என்றவை அனுவாதம். ``உயிர் செய்வன`` என்றது வினைவழி ஒழுகு தலையும், ``வழிசெயல்`` என்று பக்குவம் வருவித்தலையுமாம். கலக்கப்படுதல், கருத்துள் இருத்தல் முதலியவற்றிற்கு வேண்டும் `சத்தி` என்பது முன்னை மந்திரத்தினின்றும் வந்தியைந்தது.
இதனால், `அச்சத்தியை ஒருதலையாகத் தியானிக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

பொழிப்புரை :

சத்தியது தியானத்தால் ஏழுலகங்களில் ஒன்றைச் சுட்டியறியும் ஏகதேச உணர்வு நீங்கப்பெற்று, அனைத்தையும் ஒன்றாகக் காண்கின்ற வியாபக உணர்வு வரப் பெற்ற உயிர் அவ்வுணர்வானே தனது வியாபகத்தையும் உணர்வதாகும். அதனால், முக்குண வயப்படுதலும், வினைத் தொடக்கும் ஒழியும். அஃது ஒழியவே, அவ்வுயிர் மெய்ப்பொருளைத் தலைப்படும்.

குறிப்புரை :

`உள்ளம் - உயிர். வையம் எங்கும் கலந்து தானாகக் கொண்டிடும்` எனக் கூட்டுக. கொள்ளுதல் - அகப்படுதல்; என்றது அகப்பட்டிருத்தலை உணர்தலை. முக்குண வயப்படுதலினின்றும் நீங்குதலாவது, பிராரத்துவத்தை நுகர்தலும், அதனால் ஆகாமியத்தைச் செய்யாமையுமாம். ``வல்வினை`` என்று சஞ்சிதத்தை. `மூவினைத் தொடக்கும் அறச் சீவன் முத்தனாம்` என்றபடி, முதலடி இனவெதுகை.
இதனால், அந்தத் தியானத்தால் வரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

பொழிப்புரை :

சத்தி `அமுதேசுவரி` என்னும் பெயருடன், மெய்ப் பொருளை உணர்த்தும் `ஔம்` என்னும் பீசம் முதலாகவும், `ஹௌம்` என்னும் பீசத்தை ஈறாகவும் பொருந்திக் கைப்பொருள்போலத் தப்பாது பயன்தருகின்ற சக்கரத்தைத் தனது பொருளாகக் கொண்டு நன்மையைத் தருகின்ற ஒருபொருளாய் அதன் நடுவில் இருக்கின்றாள்.

குறிப்புரை :

நன்மை - பயன். இனவெதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் மற்றொரு வகையும், அதற்குரிய தெய்வமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 37

தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்திலே தனது திருவடி பொருந்த நிற்கின்ற அமுதேசுவரி வாசி யோகத்தால் வெளிப்படத் தோன்றும்படி பிராண வாயுவை அவள்பாற் கலக்கச் செய்யின், ஒவ்வொரு நாளும் புதுமைகள் பல தோன்றும். உடம்பும் அழிதலை யொழிந்து நிலை நிற்கும். ஆதலின், அங்ஙனம் செய்யப்படும் யோக முறையை வல்லார் வாய்க் கேட்டு, அதனை மேற்கொள்வாயாக.

குறிப்புரை :

`சமைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அமுதேசுவரி` என்னும் பெயரானே, அவள் `சகத்திராரம்` எனப்படு கின்ற சந்திர மண்டலத்தில் வீற்றிருந்து அமுதத்தைப் பொழிபவள் என்பது பெறப்பட்டமையின், வாளா, ``வீசிடில்`` என்றொழிந்தார். `அமுதேசுவரி கலந்துற, காலதுகொண்டு வீசிடில்` எனக் கூட்டுக. ``கேள் அது`` என்பதனை இறுதியில் வைத்து உரைக்க. காண், உம் அசைகள்.
இதனால், `அச் சக்கர தெய்வத்தை யோக நெறியாலே தலைப்படுக` என்பது கூறப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 38

கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.

பொழிப்புரை :

பேரொளிப் பொருளாகிய அமுதேசுவரியை மேற்கூறியவாறு கண்டபின் காண விரும்பவேண்டுவது ஒன்றும் இல்லை; உடம்பிற்கு அழிவும் இல்லை. அழிவு இல்லாமையால், நாள் முதலிய பாகுபாடுகளையுடைய காலம் நீங்கினமையின், காலத்தோடு கூடியே தம் பயனைத் தருகின்ற இடப்பாகு பாடுகளும் இல்லையாம். இனி முற்கூறிய பேரொளியால் உயிரினது குறிக்கோள் பொருந்திய இடத்திற்குச் செல்லும் வழி நன்கு காணப்படுதலின், அதன்பின் அவ்வழியை மூடி மறைக்கும் வினைக்காடு இல்லையாம்.

குறிப்புரை :

``கிளரொளி கண்டபின்`` என்பது தாப்பிசையாய் இடை நின்றது. நாடு, முதனிலைத் தொழிற்பெயர். ``அற்றபின், கண்டபின்`` என்ற அனுவாதத்தால், அறுதலும், காணுதலும் தாமே பெறப்பட்டன. மாடு - பக்கம்; இட வேறுபாடு. செல்லுதலை ``வருதல்`` என்றது, இட வழுவமைதி. கருத்து - குறிக்கோள். `உற்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `உற்ற இடத்துக்கு வரும் வழி` என மேலே கூட்டுக. இதனுள்ளும் `காண், உம்` என்பன அசைநிலைகள்.
இதனால், மேற்கூறிய யோகக் காட்சியால் உளவாம் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக்
கற்றிடமெல்லாம் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

பொழிப்புரை :

கிளரொளியாகிய அமுதேசுவரியைக் கண்டபின் அக்காட்சி சலித்தற்குச் சிறிதும் இடனில்லாதபடி உறைத்து நில். நின் றால், காணப்பட்ட இடங்கள் யாவும் அழிவற்ற பாழாய், கற்ற நூல்கள் தாமும் வெற்ற வெளியாய் அவ்விடத்திற்குப் பயன் செய்யாதவை யாய்விடும். அங்ஙனம் ஆகாத இடங்களும், நூல்களும் இல்லை யாம். அதனால், அவளிடத்தினின்றும் விலகிச் செல்லுதற்கு ஏதுவே யில்லை. இனி, விலகிச்செல்ல, `தான்` என்று ஒரு முதலும் இல்லையாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில்வைத்து உரைக்க. `உற்ற, கற்ற` என்பவற்றது ஈற்று அகரம் தொகுத்தலாயின. உறுதல் - எதிர்ப்படுதல். பாழாதல், காட்சிப்படாதொழிதல். நூலை. `புலம்` என்பவாகலின், அதனை இங்கு ``இடம்`` என்றார். கடுமை - மிகுதி. கடு வெளி - வெளியாந் தன்மையை மிக உடையவெளி. `ஆகும்` என்னும் எதிர்காலம் துணிவுபற்றி இறந்தகாலமாயிற்று. ``மற்றிடம் இல்லை`` என எதிர்மறுத்தும் கூறினார், வலியுறுத்தற் பொருட்டு. ``வழியில்லை`` என்ற காரண மொழிக்கு, விலகுதலாகிய காரிய மொழி ``சலிப்பற`` என்பதனால் பெறப்பட்டது. தான் இலனாதலும், தன்னை உணரும் நிலை நீங்குதலேயாம்` சத்தியை ஒழித்துத் தன்னையும், பிறவற்றையும் உணரின் துன்பமாம் ஆதலின், வரம்பில் இன்பத்தில் அவை இலவாயின. `சற்றிடம் இல்லையாக` என ஆக்கம் வருவித்து உரைக்க.
இதனால், `மேற்கூறிய காட்சியில் அசைவற நின்று, பெரும் பயன் எய்துக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

பொழிப்புரை :

அமுதேசுவரியைச் சலிப்பின்றிக் காணின், நிலை பெற்றுள்ள ஏழ் கடல், ஏழ் நிலம் முதலியயாவும், அலைவின்றி நிலைத்த அவ்வுள்ளத்தில் நினைத்தவாறே ஆகும். முடிவாக கிளரொளி யாகிய அச்சத்தி ஒழிவின்றித் தன்னிடத்தில் நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி தாப்பிசையாய் முன்னும். பின்னும் சென்று இயைந்தது. ``புவி`` என்றது தீவுகளை. `நினைத்தவாறே ஆம்` என்றது, `அவற்றைக் காக்கவும், அழிக்கவும் அவற்றைத் தன் விருப்பப்படி பயன்படுத்தவும் வல்லனாம்` என்றவாறு. மேலை விளக்கொளி - மேற் கூறப்பட்ட விளக்கொளி; `மேலிடமாகிய சந்திர மண்டலத்தில் விளங்கும் விளக்கொளி` என்றுமாம்.
இதனால், அக் காட்சியின் பயன் வேறும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 41

விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

பொழிப்புரை :

விளக்கொளி போல்வதாகிய `ஸௌம்` என்னும் பீசம் முதலும், `ஔம்` என்னும் பீசம் ஈறும் ஆகி நிற்பின் அச் சக்கரம் விளக்கொளிச் சக்கரமாம். அது மெய்ப்பொருளாயே நிற்கும். எல்லா வற்றையும் விளக்கியருள்கின்ற ஒளியாகிய சத்தியை அச்சக்கரத்தில் விளக்கொளி வடிவமாகவே நீ கருதி வழிபடு.

குறிப்புரை :

காரணப் பொருளில் வந்த \\\"ஈறாக` என்பது \\\"ஆகும்\\\" என்பதனோடு முடிந்தது. மூன்றாம் அடியில் உள்ள விளக்கொளி, வினைத்தொகை. விளங்கிடு - அறிந்திடு. இங்ஙனங் கூறவே, இச்சக்கரத்தின்மேல் விளக்கை வைத்தலும் பொருந்துவதாயிற்று.
இதனால், நவாக்கரி சக்கரத்துள் ஒன்றன் முறைமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 42

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொழிப்புரை :

விளங்கி நிற்பதாக மேலைமந்திரத்திற் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை இன்னதெனக் கூறின், அது சிவ சத்தியேயாம். தானே விளங்குந் தன்மையுடையதும், மெய்ம்மையானதும், அறிவே வடிவாய் உள்ளதும் ஆகிய அந்தப்பொருளை உணர்பவர்களே ஞானம்பெற்றவராவர்.

குறிப்புரை :

மேலை மந்திரத்துள், \\\"மெய்ப்பொருள்\\\" எனவும், \\\"மின்கொடியாள்\\\" எனவும் வேறுவேறு போலக் கூறப்பட்டவை அங்ஙனமாகாது ஒன்றேயாதலை முன்னிரண்டடிகளில் விளக்கிப் பின் னிரண்டடிகளில் அப்பொருளின் சிறப்புணர்த்தினார். \\\"விளங்கிடும், வரும்\\\" என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, \\\"மெய்ப் பொருள்\\\" என்னும் ஒருபெயர் கொண்டன. \\\"மேல்\\\" என்றது மேல் நின்ற இடத்தை. `வந்த` எனற்பாலதனை, \\\"வரும்\\\" என்றதும், `தாமே` எனற்பாலதனை \\\"தானே\\\" என்றதும் வழுவமைதி. மெய்ம்மையும். ஞானமும் ஆதல் கூறவே. ஆனந்தம் ஆதலும் கொள்ளப்படும். சத்தி அஃறிணையாகவும் கூறப்படுதல் பற்றி எழுவாயை, `ஆனது` எனக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 43

தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகளமே.

பொழிப்புரை :

மேற்கூறிய மெய்ப்பொருளாகிய ச்ததி, தான் ஒருத்தியே பூதாகாயமாகி எங்கும் நிறைந்தும், பராகாயமாகி எல்லா வற்றிற்கும் மேலாகியும் நிற்பாள். தானே எல்லாப் பொருளையும் தோற்றுவித்து அழிப்பவளாவாள். தானே பலவாயுள்ள அண்டங் களையும் தனது வடிவமாக உடையவளாவாள்.

குறிப்புரை :

பூதாகாயமாய் நிற்கும் நிலைமை கூறவே, பராகாய மாய் நிற்கும் நிலையும் கொள்ளப்பட்டது. சகளமாய் நிற்பவளை, \\\"சகளம்\\\" என்றார்.
இவை இரண்டு மந்திரங்களாலும் அச்சக்கர தெய்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.

பொழிப்புரை :

அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சத்தியது தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில் பலர் மந்திரம் கிரியை பாவனைகளால் காண்பார்களாயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்கும் நிலையை அவர் அறிதல் இல்லை.

குறிப்புரை :

பரவெளியை அமைத்தமையாவது, தியானத்தானங் களாகிய ஆதார நிராதாரங்களை நிறுவினமை. `கண்டவள் குணம்` என இயைக்க. கண்டம் - வரையறைப்பட்டது. இங்கு, உடம்பு சத்தியைக் கிரியை முறையால் உணரும் உணர்வோடே அமைந்து, யோக முறையால் உணர்தலை மேற்கொள்ளாது ஒழிவாரை நோக்கி இவ்வாறு இரங்கிக் கூறினார் என்க.
இதனால், அச்சத்தியைக் கிரியை முறையால் வழிபடுதலோடு ஒழியாது, யோக முறையால் தலைப்படுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார் சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

பொழிப்புரை :

சிவ சத்தி இருக்க அவளை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

குறிப்புரை :

``கலப்பு`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், கலக்கப்படும் பொருளை உணர்த்திற்று. சிலைப்பு - ஒலிப்பு. செயற் படாதிருத்தலை, `பேசாதிருத்தல்` எனக் கூறும் வழக்குப் பற்றிச் செயற் படுதலை `ஒலிப்பு` என்றார். நாடுதல். அதன் காரியம் தோற்றி நின்றது. தலைப் பறி - தலையது நீக்கத்தை உடையது.
``கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணஙகோத் தலை`` 1
என்றதனை நினைவு கூர்க.
இதனால், சத்தியை அணுகாதவர் எய்தும் குற்றம் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.

பொழிப்புரை :

ஒன்ப தெழுத்துக்களால் இயல்பாக அமைந்த சக்கரத்தின் இயல்பைக் கூறின், நெடுக்காகப் பத்துக் கோடும், குறுக்காகப் பத்துக்கோடும் இட்டு, ஒன்பதிற்றொன்பது (9X9) எண்பத்தொன்றா கின்ற அறைகளை அறிவாயாக.

குறிப்புரை :

``மானே, தேனே`` என்பன மகடூஉ முன்னிலை. இதுவும் நூல் வழக்கு. ``மதி`` என்பதனை இறுதிக்கண் கூட்டுக. ``வரை, இரேகை`` என இருகாற்கூறி, நெடுக்கும் குறுக்கும் கொள்ள வைத்தார். ஈற்றடியில், `வானே கலந்த` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். இங்ஙனம் இச்சக்கரம் அமையுமாறு காண்க:-

பண் :

பாடல் எண் : 47

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.

பொழிப்புரை :

மேற்கூறிய சகக்ரத்தின் இயல்பை இன்னும் சொல்லும்பொழுது, வெற்றியைக் கொண்ட அதன் வடிவமாகிய அறைகளின் நிறம் பொன்மை; அழுந்த இடப்பட்ட கோடுகளின் நிறம் செம்மை. ஞாயிற்றைப் போல ஒளிவிட்டு விளங்கும் சத்தி வடிவ மாகிய எழுத்துக்களின் நிறம் பச்சை.

குறிப்புரை :

அறைகள் சதுர வடிவினவாயினும் `சக்கரம்` எனப் படுதல் பற்றி, ``வட்டம்`` என்றார். மதி வட்டம், வினைத்தொகை. செம்மையில் -செம்மை நிறத்தில். என்று - சூரியன்.
இவை இரண்டு மந்திரங்களாலும் சக்கரவடிவு கூறப்பட்டது.
இவ்வடிவினைக் காண்க.

பண் :

பாடல் எண் : 48

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.

பொழிப்புரை :

பொருந்திய மர உரியில் (மரப் பட்டையில்) எழுதப்பட்டுப் பொருந்திய எழுத்துக்களை மேற்சொல்லிய எண்பத் தோர் அறைகளில் அடைத்த பின்பு, வெண்ணெய் அப்பொழுது காய்ந்து அடங்கியதனால் உண்டான நெய்யில் நன்கு ஆய்ந்த அரிசியால் முறைப்படி அடப்பட்ட சோற்றைக் கலந்து ஆயிரமுறை ஆகுதியால் ஓமம் பண்ணி வழிபடுங்கள்.

குறிப்புரை :

``ஏய்ந்த`` என்பது, ``மரம்`` என்பதனோடு முடிந்தது. `உரித்தற்குப் பொருந்திய மரம்` என்றபடி. `எழுதிய வாய் வாய்ந்த` என்க. ``பெண்`` என்றது சத்தியை. அது மேலை மந்திரத்திற் கூறிய வாறு அவளது வடிவாய் நிற்கும் எழுத்திற்கு ஆகுபெயர். `ஆய்ந்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. ``நூலாக் கலிங்கம்`` என்பதிற் போல, ``ஆய்ந்த`` என்னும் பெயரெச்சம் அவிக்குக் காரணமாகிய அரிசிக்கு உரித்தாய், ஒற்றுமை பற்றி அவிக்குப் புணர்க்கப்பட்டது. `ஆய்ந்த அவியை, காய்ந்து அவிந்த நெய்யுள் உடன் கலந்து ஆகுதி ஆயிரத்தால் ஓமம் பண்ணும்` எனக் கூட்டுக.
இதனால், இச்சக்கரத்தை வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென மேயநற் சொக்கனு மாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறையில் ஓமம் செய்து அச்சத்தியை நீ மெல்லப் பிடித்தால், கணக்கிட்டுக் கூறப்பட்ட நாள்களுக்குள்ளே நன்மை உண்டாகும். ஒமத்தைச் செம்மையாக வளர்த்தமையால், `பிரமனுக்கு நிகரான பிராமணனாயினான்` என்ற புகழை உலகத்தார் சொல்லும் அளவிற்கு இவ்வழிபாட்டில் சிறந்து நின்றபின், விரைவில் அவன் மிக உடல் அழகு பெற்றும் விளங்குவான்.

குறிப்புரை :

`பண்ணிய பொன்னை` என்பதும், `துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே` என்பதும் பாடம் அல்ல. எண்ணிய நாள், ஒருமண்டலம்; நாற்பத்தெட்டுநாள். இதனை வழக்குப் பற்றிக் கொள்ள வைத்தார். `நான்முகனோடு` என உருபு விரிக்க. சொக்கு - அழகன்.
இதனால், இவ்வழிபாடு பயன் தரும் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்திற்கு ஆகும் பொருள்கள், `சந்தனம், குங்குமப்பூ, மான்மதம், கண்ணேறு போதற்கு ஏதுவான கருஞ்சாந்து, சவ்வாது, புனுகுசட்டம், நெய், கோரோசனை, நீர்` என்னும் ஒன்பதுமாம். இவற்றை ஒருங்கு கூட்டி வைத்துக்கொண்டு வழிபாட்டினைத் தொடங்குவாயாக.

குறிப்புரை :

இவை ஆட்டுதல், பூசுதல், அணிவித்தல் முதலாக ஏற்ற பெற்றியாற் பயன்படுவன என்க.
இதனால், `இவ்வழிபாட்டிற்குச் சிறப்பாகவேண்டும் பொருள்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் வைத்துத் தியானிக்கப்படும் பொன் போன்றவளாகிய சத்தியுடன் பொருந்தத்தக்க சிறந்த வழிபாடு யாது என ஆராயின், சத்தியை மிக இளைவளாகவும், அவளுக்கு உரிய மந்திரம் இவ் எழுத்துக்களேயாகவும் கொண்டு, தேவிதன் ஆயிர நாமங்களால் ஆயிரமுறை அருச்சனை செய்தல் என அறிவாயாக.

குறிப்புரை :

`பொன்னுடன் பொருந்தும் மாதவம்` என ஒருசொல் வருவிக்க. `தைத்து` என்பது \\\"தச்சு\\\" எனப் போலியாயிற்று. கைச் சிறு - மிகச் சிறிய. தைத்தல் - உள்ளத்தில் பொருத்துதல். `சமைந்த இம் மந்திரம் இதுவாக` என மாற்றிக் கொள்க. இது, இந்நிலை; தேவி இளை யளாய் விளங்கும்கோலம். `ஆயிரம் ஆயிரம் எனச் சிந்தி` என்க. சிந்தி - சிந்தித்து உணர். இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், `இச்சக்கரத்தைத் தேவியது ஆயிர நாமத்தால் ஆயிர முறை அருச்சிக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.

பொழிப்புரை :

வழிபடுவோரது உள்ளத்திலே ஒளி விட்டு விளங்கு பவளாய், `க்லீம்` என்னும் பீசத்தை முதலில் வைத்துக் கணிக்க அங்ஙனம் கணிப்பவர்களது கண்முன் தோன்றிநின்று அருளுகின்ற சத்தியாகிய எம் தாயது ஆறு கைகளிலும் உள்ளவைகளில் படைகள் ஆவன, விடாது பறறிய `சூலம், பாசம், வில், அம்பு` என்பன.

குறிப்புரை :

ஏனை இருகரங்கள் அபயமும், வரதமுமாதல் நன் கறியப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. `எந்தை` என்பதும், `உள்ளது` என்பதும் பாடம் அல்ல. `இருமூன்றிலும்` என உருபு விரித்து, \\\"படை\\\" என்பதை அதன் பின்னர்க் கூட்டி உரைக்க.
இதனால், நவாக்கரிசக்கரத்துள் ஒன்றில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

பொழிப்புரை :

வழிபடுவோனுக்கு எதிரே மேற்கூறிய சக்கரத்தில் சக்கர தேவியைச் சூழ்ந்து ஒவ்வொருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் சூழ எண்மர் சத்திகள் இருப்பர். அவர்கள், கையில் வில்லும் அம்பும் கொண்டிருப்பர்.

குறிப்புரை :

அவ் எண்மர் வாமை முதலியோராவர். `அறுபத்து நால்வரும் எண் வகையாய் உள்ள எண்மர்கன்னிகள் இருந்தனர்`1 என்க. `இருந்த கரம் இரண்டில் வில் அம்பு கொண்டு` என்றவாறு. இருந்த அனைத்துக் கரம் நான்கு, `எதிர் சக்கரத்தே` என்பது முதலாகத் தொடங்கி, மேற்கூறியவாறு முடித்து, \\\"இருந்தனர் சூழ\\\" என்பதனை வேறு தொடராக்கியுரைக்க.
இதனால், மேற்கூறிய சத்தியது பரிவாரங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 54

கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

பொழிப்புரை :

மணிகளால் கனமான குழை, அரசு முடி நல்ல ஆடை இவைகளை உடையதாய்க் காணப்படுகின்ற இவ்வடிவம் நெருப்புப் போன்றதாய் இருக்க, இயல்பாகவே பல இதழ்களை யுடைய விளக்கம் மிக்க தாமரைமலர் இருக்கையில் எழுந்தருளியிருக் கின்ற ஒருத்தி, தன்னை உணரவல்லவர்க்குத் தன் இருப்புத் தோன்ற நிற்பாள்.

குறிப்புரை :

படர்தல் - பலவாய் விரிதல்.
இதனால், அச்சத்தியது உருவச் சிறப்பு சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 55

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.

பொழிப்புரை :

உணர வல்லார்க்கு உள்ளவள் ஆகின்ற அச் சத்தியை உள்ளே உணர்ந்து காணின், அவள் எங்கும் தானாய்க் கலந்து அருள்மழையைப் பொழிவாள்; (எவ்விடத்திலும் அவ் அடியவ னுக்குத் தடையின்றி அருளுவாள் என்றபடி.) அவள் அங்ஙனம் அருளும்பொழுது அவளோடு கூடி இனிய ஓசையும், அழகிய ஒளியும் தோன்றும். அவளும் அச்சக்கரத்தினின்றும் வெளிப்பட்டு வருவாள்; வந்து, வேண்டும் வரங்களைத் தருவாள்.

குறிப்புரை :

ஓசையாவன தோத்திரங்களாலும், வாக்கியங்களாலும் ஆவன. இரண்டாம் அடி உயிரெதுகை.
இதனால், அச்சத்தி வழிபடுவார்க்கு முன்னின்று அருளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.

பொழிப்புரை :

மேலெல்லாம் `பேரொளி` எனச் சொல்லப்பட்ட சத்தி, வீடுபேற்றைத் தரும் வழியாகிய உண்மை ஞானம் ஆசிரியர் வழியாகப் பெருகும் செயலிடமாக விளங்கி நின்று, பிறவிக்கு ஏது வாகும் அவை தோன்றுகின்ற முறைமையை அழித்து, மேலான நெறி யாகிய அருளை வழங்குவாள்.

குறிப்புரை :

செயலை, \\\"குணம்\\\" என்றார். கணக்கு - வரையறை; நியதி.
இதனால் அவளால் ஞானமும் எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

பொழிப்புரை :

பொதுவாக, `பேரொளி` எனக் குறிக்கப்படுகின்ற, பெரிய ஒளிகட்கெல்லாம் பெரிய ஒளியாகிய சிவனது சிறப்புப் பொருந்திய ஒளியாய்த் திகழ்கின்றமையால் அவனுக்கு நாயகியாய், இயல்பிலே நீல நிறம் உடையவளாகிய சத்தி, பூமியின் நிறமாகிய பொன்னிறம் உடையவளாய்ப் பூமியில் எங்கும் நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஆகையால், அவளை இச்சக்கரத்தில் பொன்னிறம் உடையவளாகக் கருதுதலும் பொருந்தும்` என்பதாம்.
இதனால், அச்சத்தியது தியானத்திற்கு ஆவதொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

பொழிப்புரை :

உடம்பிற்கு வெளியே நீட்டியுள்ள இருகைகள் இரு தாமரை மலர்களை ஏந்தியிருக்க, உடம்பிற்கு உள்ளே அடக்கியுள்ள இரு கைகள் யாதும் ஏந்தாதே விளங்க, உயிர்கட்குத் தாயாகி அருளு கின்ற தனங்கள் முத்து மாலையும், பவழ மாலையும் உடையனவாக, உடுத்தியுள்ள ஆடை மிகச் சிறந்த ஆடையாய் மணிகளால் பொதியப்பட்டு அவள் மாட்டு இருந்தது.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பதனை, `ஏந்த` எனத் திரிக்க. `யாதும் ஏந்தாதவை` என்பதை விளக்க, ``கொய்தளிர்ப்பாணி`` என இயல்பு கூறி யொழிந்தார். அவை அபய வரதங்களாதல் இயல்பாக அறியப் பட்டது. ``பாணி, பவளம்`` என்பவற்றின் பின் `ஆக` என்பன வரு விக்க. பின்வரும் `ஆக` என்பதற்கு, `பொருந்த` என்பது பொருள். பொதிந்தன்று - பொதிந்தது. இதனுள் உயிரெதுகை வருக்க எதுகை களுடன் மூன்றாமெழுத்தெதுகை வந்தது.
இதனால், அவளது வடிவச் சிறப்பு வேறு சிலவும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 59

மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவ ளன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

பொழிப்புரை :

தலையில் இரத்தின கிரீடத்தை அணிபவளும் பாதத்தில் சிலம்பை அணிபவளும் ஆகிய இச்சத்தியையன்றித் `திருவருள்` என்பது வேறில்லை. ஆகவே, பிற தெய்வங்களின் மேல் செல்லும் அவா அடங்கித் தன்னை நினைப்பவர் நெஞ்சினுள்ளே தான் தனது இயல்பாகிய அருளோடு விளங்கிப் பின்னும் பலவாற்றால் தன்னை வழிபடுவார்க்கு அன்றோ இவள் மேலான கதியாயும் நிற்பாள்!

குறிப்புரை :

`தலையில்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. ``அணிபவள்`` என்பதை ``மணிமுடி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. தணிதலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``அணிபவள்`` முதலிய மூன்றனையும், `அணிந்தவர்` என்பது முதலாகப் பிறிது பொருள்படப் பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், அவளது வடிவச் சிறப்புச் சில கூறி, அவளே பரகதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.

பொழிப்புரை :

இச்சத்தி, தன்னை வழிபடுவோனது உள்ளத்திலே நிறைந்திருந்து, அறுபத்து நால்வரும், எண்மரும் ஆகிய சத்திகள் மேற்கூறப்பட்டவாறு (1353) தன்னைச் சூழ்ந்திருக்க, பரந்த இரு கைகளில் இருதாமரை மலர்களையும் மேற்கூறியவாறு (1358) ஏந்தி, உயர்ந்தவர்கள் துதிக்கின்ற `ஷ்ரீம்` என்னும் பீசத்திற்குரிய திருமகளாய் நின்று செல்வத்தையும் அளிப்பாள்.

குறிப்புரை :

அறுபத்து நான்கில், `அறுபது` என்னும் பேரெண் ணினை மட்டுமே கூறி நினைவுறுத்தார். மேற்கூறியவைகளை மீளவும் நினைவுகொள்ளச் செய்தது, அவற்றை நன்கு தியானிப்பித்தற்கு. கரத்தல் - அடங்குதல்; கீழ்ப்படிதல். `கிரீம் ஆகிய தனம்` என்க. ``தனம்`` என்றது அதனைத்தரும் திருமகளை உணர்த்திற்று. இங்ஙனம் உணர்த்தி நிற்கக் கூறியது, வழிபடுபவனக்குச் செல்வத்தைத் தருதலை உணர்த்தற்கு. இச்சக்கரத் தலைவியாகின்ற சத்தி, இதன் ஒரு பகுதியாகிய ஷ்ரீம் ஆகிநின்று அருளுதற்கு ஐயமில்லை என்றவாறு. உயிரெதுகையும்,மூன்றாமெழுத்தெதுகையும் வந்தன.
இதனால், பரகதியாய் நிற்கும் அவள் செல்வத்தையும் தருதல் கூறி, ஐயமறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிடச் செய்திய தாமே.

பொழிப்புரை :

சத்தியை `ஷ்ரீம்\\\' பீச வழிச் செல்வத் தலைவியாக வைத்து, மனம் பற்றித் தியானித்து வந்தால், ஓராண்டிற்குள் அம்மனம் செல்வத்தில் உள்ள பற்றாகிய சுமை நீங்கப்பெற்று, ஞான சூரியனாகிய சிவனிடத்திற் செல்லும் செயலை உடையதாகும்.

குறிப்புரை :

`ஸ்மரிக்கில்\\\' என்பது, \\\"மரிக்கில்\\\" எனத்தற்பவ மாயிற்று. `சுமை\\\' என்றது, வேண்டாததாதல் பற்றி. நேரே திருமகளை வழிபடுவார்க்கு மேலும் மேலும் அச்செல்வத்தில் பற்று மிகுமாகலின், அதனை விட வேண்டுவார் செல்வத்தின் பொருட்டும் சிவ சத்தியையே திருமகளாக வைத்து வழிபடல் வேண்டும் என்றவாறு.
இதனால், இச்சத்தி தரும் செல்வத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 62

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

பொழிப்புரை :

பக்குவம் முதிர்தற்கு முதலாய் உள்ள மூலாதாரத் தாமரையினின்றும் வளர்ந்து செல்கின்ற மூலாக்கினி, சுவாதிட்டானம் முதலியமற்றை ஆதாரங்களில் உள்ள தாமரை மலர்களில் பொருந்திச் சென்று, அவற்றிற்கு மேலும் போகின்ற பூரண ஒளியாய் நிறைந்த பின்பு, அவ்வக்கினி யோகியின் உடம்பு முழுதுமான மண்டலமாய் நிற்கும்.

குறிப்புரை :

`அப்பொழுது மனம் பற்றற்றதாகும் ஆதலின், அம்முறையானே சத்தியைத் தியானிக்க\\\' என்பது குறிப்பெச்சம். `போகின்ற பேரொளி\\\' என்பது பாடம் அன்று.
இதனால், பற்றறுதியை விரும்புவார் சிவ சத்தியை வழிபட வேண்டுதல், மேலும், யோக நெறியால் வழிபடின், விரையப் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும்
ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.

பொழிப்புரை :

வழிபடுவோன் ஆக்கம் பெறுதற்கு ஏதுவாகிய இச் சக்கரத்தில் வீற்றிருக்கும் சிவசத்தி, மாதுருகாட்சரம் ஐம்பத்தொன்றும், வியட்டிப் பிரணவமாகிய சூக்கும அக்கரம் ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு அட்சரங்கட்கும் தலைவியாகிய முழுமுதல்வி. பிற சத்திகள் யாவரும் தனித்தனி இடங்களையுடைய அவற்றுள் ஒவ்வொன்றற்கே முதல்வியராவர்.

குறிப்புரை :

`ஆகவே, இச்சத்தியை வழிபட எல்லாப் பயன்களும் எய்தும்\\\' என்பதாம். `ஐம்பத்தாறு\\\' என்பது தொகைக் குறிப்பாய் அக்கரங்களை உணர்த்திற்று. ஐம்பத்தாறும் வகையேயாக, அவற்றின்வழி விரியாய்ப் பிறக்கும் எழுத்துக்கள் அளவில ஆதலின், \\\"ஐம்பத்தறு வகை\\\" என்றார். \\\"சத்தி\\\" என்பது அஃறிணையாய் ஒரு கால் பன்மையும் உணர்த்துமாதலின், \\\"ஐம்பத்தறு சத்தி\\\" என ஓதினார். நேர்தரல்,பொருந்துதல். சூழல் - இடம்; என்றது, சக்கர அறைகளை.
இதனால், சிவ சத்தியது முழுமுதல் தன்மையை விளக்கி மேலது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

பொழிப்புரை :

அவளது அழகிய மேனி சுற்றிலும் ஒளி வீசி விளங்குவது. அதில் கேசாதி பாதம் அணியப்பட்ட அணிகள் முத்தாலாகியன. கீழ் இரண்டு கைகளில் கிளியும், ஞான முத்திரையும், உயர எடுத்த இரண்டு கைகளில் பாச அங்குசங்களும் விளங்கும்.

குறிப்புரை :

``மேனியும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``அழகிய மேனி`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பாசத்தைக் கூறவே, அங்குசமும் பெறப்பட்டது.
இதனால், வருகின்ற மந்திரத்திற் கூறப்படும் பயனுக்கு ஏற்புடைய வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உம்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.

பொழிப்புரை :

சத்தியை மேற்கூறிய வடிவினளாக உங்கள் உள்ளத்தில் அன்போடு தியானியுங்கள்; துன்பங்கள் யாவும் ஒழியும்; ஐந்தாண்டிற்குள்ளே, பிறவிக்கு முதலாகிய மலங்களைப் போக்கி, `பூமியிலே காணப்படும் சிவன்\\\' என்னும் நிலையை நீங்கள் அடையச் செய்வாள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொள்க. வேராதல் பிறவிக்கு. `கண்ணுதலாகுமே\\\' என்பது பாடம் அன்று. மேல், (1361) `ஓராண்டில் தினகரனாரிடச் செய்தியதாம்\\\' என்பது சிவயோக சித்தியைக் கூறியதும் இது சிவமாந் தன்மைப் பெருவாழ்வைக் கூறியதும் என்க.
இதனால், பிறிதொரு பயன் பற்றிய வழிபாடு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

பொழிப்புரை :

அருட் சத்தியின் அருள் கிடைத்தற்குரிய வழியில் நாதமும் ஒத்து நிற்கும்படி நிற்க வேண்டில், சிவசோதி விளங்கும்படி சத்தியை வழிபடுதற்குரிய சக்கரம் ஹ்ரீங்கார சக்கரமேயாம்.

குறிப்புரை :

இச்சக்கரம் முன்னை யதிகாரத்திற் கூறிய புவனாபதி சக்கரமே. அதிகாரம் வேறாய வழியும் அதனைக் கூறியது, அதன்வழி நின்று அருளாகிப் பின் இங்குக் கூறிய சிவமாதலை எய்துக என்றற்கு. கண் - கண்ணோட்டம்; அருள்.
இதனால், ஒரு பயன்கருதி மேற்போந்ததொன்று மறித் துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 67

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்துள் விளக்குப் போல ஒளி விட்டுத் தோன்றுகின்ற சத்தியை உள்ளத்திலே கண்டு, பின் இடை யறாது தியானித்திருங்கள். அத்தியானத்தில் அவள் மேலும் விளக்கு முற்று வருதலால், சுழுமுனையில் உள்ள ஆதாரங்களில் நிகழும் அனுபவங்களை நீங்கள் முறையானே பெற்று உயரலாம்.

குறிப்புரை :

விண்டு - தனது இயல்பைப் புலப்படுத்தி. தண்டு - முதுகந்தண்டு; அஃது ஆகுபெயராய்ச் சுழுமுனை நாடியை உணர்த்திற்று. `நவாக்கரி சக்கரங்களை முறையாக வழிபட யோகம் படிமுறையால் முதிர்ந்து பயன்தரும்\\\' என்றவாறு.
இதனால், நவாக்கரி சக்கர வழிபாட்டின் பயன் ஒன்று கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 68

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

பொழிப்புரை :

உந்தித் தானம் தாங்கியுள்ள தாமரை மலராகிய ஆதார சக்கரத்தினின்றும் வளர்ந்தெழுவதாகிய பிராசாத கலை களுக்குள் அறிவு வடிவாய் நிற்கின்ற சத்தி, பிராசாத யோகி வருந்தும் படி வருகின்ற அவனது பிறப்பை நீக்க எண்ணி, அங்ஙனமே நீக்குத லால், அவனைத் தன்வழிப்படுத்திவந்த நாதம் அவனது வழிக்குத் துணையாய் அவன் வயமாகும்.

குறிப்புரை :

உந்தித் தானச் சக்கரம், மணிபூரகம். அது மேதா கலைத் தொடக்கமாதலின் அதனையே பிராசாத கலை ஓங்கி எழும் இடமாகக் கூறினார். ஈற்றடியிற் கூறியது. மேல் (1366) ``நாதம் பகையற`` என்றதேயாதலை நோக்குக.
இதனால், மேற்கூறிய வழிபாட்டினால் வாசியோக மேயன்றிப் பிராசாத யோகமும் கைவருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம்
பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.

பொழிப்புரை :

நாதத்திற்குத் தலைவியாகிய வாகீசுவரி நல்ல மாணிக்கத்தால் ஆகிய ஆபரணத்தையும், ஆரத்தையும் அணிந்தவள். செந்தாமரை மலராம் இல்லத்திற்குத் தலைவியாகிய திருமகள் பொன் னாலாகிய முடியையும், ஆடையையும் கொண்டவள். பாடல் களுக்குத் தலைவியாகிய கலைமகள் பால்போலும் வெண்ணிறம் பெற்றவள். பசுக்களாகிய உயிர்கள் அனைத்திற்கும் தலைவியாகிய சிவசத்தி படைப்புக் காலந்தொட்டே இவரிடத்து இருந்து அருள் புரிகின்றாள்.

குறிப்புரை :

அவரவர் தோற்றப் பொலிவுகளை எடுத்துக் கூறியது, அவர்க்கிடையே உள்ள தார தம்மியங்களைக் குறிப்பாற் கூறி, சிவசத்தி அவர் எல்லாரிடத்தும் உள்நின்று பல செயல்களையும் ஏற்ற பெற்றி யால் அவர்வழி நிகழ்வித்தலை உணர்த்தற்கு. `அங்கமர்ந் தாளே\\\' என்பது பாடம் ஆகாமை அந்தாதிக்கு ஏலாமையான் அறியப்படும்.
இதனால், வேறு வேறு தேவியர் வழி பெறப்படும் பயன்களும் சிவ சத்தியால் தரப்படுவவேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 70

அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.

பொழிப்புரை :

பிரமசாரியாய் இருந்தபொழுது இரு கைகளிலும் இருந்தது பொருள்களின் இயல்பை அளந்து காணும் நூல் எழுதப்பட்ட சுவடி. யோகியாய்விட்ட இன்று இரு கைகளிலும் இருப்பது தூய கமண்டலம். இவ்வாறு படி முறையான ஆச்சிரம ஒழுக்கத்தில் நிற் பதையே இறைவன் நடனம் புரியும் அம்பலத்தை உள்ளபடி காணும் முறையாகக் கொண்டு, அங்ஙனமே கண்டு அங்கு இருப்பவரை அனைத்துக்கும் காரணியாகிய சத்திதான் கடைக் கணித்திருப்பாள்.

குறிப்புரை :

இருகைகளிலும் இருப்பனவாகக் கூறியது. அதனைப் போற்றிக் கொண்டமையைக் குறித்தவாறு. அம்பலத்தை உள்ளபடிக் காணுதலாவது, புருவ நடுவில் உணர்ந்திருத்தல்.
இதனால், சக்கரம் முதலிய சத்தி வழிபாட்டிற்கு ஒழுக்க முறை துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 71

காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் காரணியாகிய சிவ சத்தி, பிற சத்திகளாய்க் கன்னியராய் உள்ள ஐம்பத்திருவராய்ச் சக்கரங்களுள் மறைந்து தனது இயல்பான அருள் வெளிப்பட நிற்கின்றாள்.

குறிப்புரை :

``காரணி`` என்பன பலவும் சொற்பொருட் பின்வரு நிலையாய் நின்றன. சத்திகள் ஐம்பத்திருவராவார், ஐம்பத்தோர் அச்சக்கரங்கட்கும், ஓங்காரத்திற்கும் உரியவர் என்க.
இதனால், எந்த அக்கரங்கள் எந்த வகையில் அமைந்த சக்கர மாயினும் அதில் நின்று அருள்புரிபவள் சிவ சத்தியே என்பது உணர்த்து முகத்தால், நவாக்கரி சக்கரங்களும் அன்னவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 72

நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தில் நிற்கின்ற சத்தி உங்கள் உள்ளத்தில் நிலைபெறும் வகையில் நீங்கள் ஒழுகினால், உங்களைக் கண்டுகொண்டிருந்த ஒளியாகிய சத்தி ஓராண்டில் உங்கட்கு வெளிப் படுவாள். அதற்குப் பின்னும் நீங்கள் அவ்வொழுக்கம் சிறிதும் குறையாதபடி கடைப்பிடித்து நின்றால், மேற்கூறிய அம்பலத்தில் நடிப்பவன் உங்கட்குக் காணப்படுவான்.

குறிப்புரை :

இதன்கண் இனவெதுகை வந்தது.
இதனால், உறுதியான ஒழுக்கம் படிமுறையில் பயனை மேன் மேலாகத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 73

கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டை அவாவுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.

பொழிப்புரை :

எல்லா உயிரையும் காண்கின்றவளும், எனது உள்ளத் தாமரையை இடமாகக் கொண்டு இருக்கின்ற மெய்ப் பொருளானவளும் ஆகிய இச்சத்தி, தொன்று தொட்டு வருகின்ற எனது `அவா` என்கின்ற பகையை அறுத்து அருள் செய்தற் பொருட்டே என் உள்ளத்தில் இனிது வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஆதலின், அவளை நீங்களும் உங்கள் உள்ளத்துள் இருக்கச் செய்தால் உங்கட்கும் அவ்வாறு அருள் செய்வாள்` என்பது குறிப்பெச்சம்.
``இன்பம் இடையறா தீண்டும் அவாஎன்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்`` 1
என்ப ஆகலின், அவாவே பெரும்பகையும், அதனைப் போக்குதல் முதற்பயனும் ஆயின. `அவா` என்பதன் ஈற்றில் ஓர் உகரம் கூட்டி ஓதினார். இதனை, `பண்டைய ஆயு` எனவும், `பண்டைய வாயு` எனவும் தாம் வேண்டுமாறே ஓதி, அவற்றிற்கு ஏற்ப உரைப்ப. இதனுள்லும் இனவெதுகை வந்தது.
இதனால், இச்சத்தி வழிபாடு ஆசையை அறச்செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 74

இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் இருக்கின்ற இவளே எட்டுக் கைகளை உடையவளாயும், அக்கைகளில், `தாமரை மலர், கிளி, பாசம், மழு, வாள், எதிர்வரும் கருவியைத் தடுக்கின்ற கேடகம், வில், அம்பு` என்ற இவைகளை ஏந்தி வீரநடனம் புரிபவளாயும் விளங்குவாள்.

குறிப்புரை :

கைகளின் பரப்பை அவற்றில் உள்ள படைக்கலங்கள் மேல்வைத்து ஓதினார். `பரந்த இருநாலுகையில்` எனக் கூட்டினும் ஆம். உரம் இங்கு, வீரம். இதன்பின் உள்ள `தங்க` என்பதன்ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இவ் அடியில் மோனை ஈற்றயற்சீரின் இறுதி அசைக்கண் வந்தது.
இதனால், நவாக்கரி சக்கர சத்தியது மற்றொரு வடிவு வேறுபாடு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 75

உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய வீர சத்தி பச்சை நிறங்கொண்டவள்; பொன்முடியை விரும்பிக் கவித்தவள்; ஆரமாகப் பரந்த முத்துக் களையும், பவளங்களையும் அணிந்து, பட்டாடை உடுத்து, புடை பரந்த கொங்கைகளின்மேல் இரத்தினக் கச்சு அணிந்து, மிகவும் பொலிவுடன் விளங்குவாள்.

குறிப்புரை :

`தான் பச்சையாம்` என்பதை முதலிற் கொள்க. அவ்வாறின்றி முதற்கண் எழுவாய் வருவித்துரைத்தலுமாம். தான், மேற்கூறப்பட்டவள். `பச்சையம்மன்` என ஒரு தேவி தமிழ்நாட்டில் இருத்தல் இங்கு நினைக்கத்தக்கது. `பச்சையம்மாள், பச்சையப்பன்` என்னும் பெயர்கள் இவளை ஒட்டியே மக்களுக்கும் இடப்படுகின்றன. இது மூன்றாமெழுத்தெதுகை பெற்றது.
இதனால், மேற்கூறிய சத்தியது வடிவழகு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய்
எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

பச்சை நிறம் உடைய இச்சத்திக்குப் பொதுமைப் பாங்கியர் நாற்பத்தெண்மரும், அணுக்கப்பாங்கியர் எண்மரும் சேர்ந்து பணிவிடை புரிந்து வருதலால், அவர்கள் எம்மருங்கும் பெரிய காவலாய் இருக்க இவள் பெருமையோடு வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

மேல் (1363) `ஐம்பத்தறு சத்திகள்` எனப்பட்டார் இங்ஙனம் நாற்பத்தெண்மரும், எண்மருமாய்ப் பிரிந்து நிற்கின்றார் என்க. எண்மர், முதற்கண்நிற்கும் அகாரத்திற்கும். இறுதி இரண்டெழுத் திற்கும் சூக்கும பஞ்சாக்கரத்திற்கும் உரியவராகக் கொள்ளுதல் பொருந்தும். கொச்சையார் - கொஞ்சிப் பேசும் சொற்களை யுடையவர். இப்பெயரும், ``கச்சணி கொங்கைகள்`` என்றதும் பாங்கிமார்களையே. ``கொங்கைகள்`` என்ற பன்மை மகளிர் மேலது. கை - பக்கம்; என்றது திசைகளை எனவே, எட்டுத் திசைக்கும் எண்மர் உளர் எனவும், ``ஆறெட்டு`` என்றதனால், `அவருள் ஒருத்திக்கு அறுவர் துணை, யாவர்` எனவும் கொள்க. `எய்த்த` என்பது ``எச்சை`` எனப்போலியாயிற்று.
இதனால், இச்சத்தி தனது முதன்மை தோன்ற வீற்றிருக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 77

தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

பொழிப்புரை :

நாவடியில் பொருந்திய ஒளிவடிவாய் விளங்கு கின்ற சத்தியைப் பிராண வாயுத் துணையாக, `கம், ஜம்` என்று செபிக்கும் செபத்தால் தலைப்பட்டு அன்போடு வழிபட்டு, அதன் பயனாக மிக்க ஒளியுடைய உடம்போடு வானத்தில் இயங்கும் (ஆகாய கமனம் செய்யும்) ஆற்றலைப் பெறுவாயாக.

குறிப்புரை :

அந்தாதி நயம் வேண்டி, சிறுபான்மை லகரத்திற்கு ளகரம் போலியாகும் முறைமையை மேற்கொண்டு. `தாலது` எனற் பாலதனை, ``தாளது`` என ஓதினார். `கம்` என்பதும் ஆகாயத்திற்குரிய பீசமாகும். `ஜம்` என்பது ஜகத்துக்குத் தலைவியாம் ஜகதா தேவிதன் பீசம். இவற்றைச் செபித்து இவளை வழிபடவே வான்வழி இயங்கும் ஆற்றல் உண்டாவதாம். `ஜம்` என்னாது, `ஐம்` என்ப பொதுப்பட ஓதுதல் பாடமாகாது. இனி, `கம்ஜம்` என்பதன் கருத்து அறியாதார். `கலந்து கொள்` எனப் பாடம் வேறாக ஓதுவர். மிக்க ஒளியது நிறம் வெண்மையாகலின், ``பாலதுபோலப் பரந்து`` என்றார். முதலடி இனவெதுகை.
இதனால், இச்சத்தியை ஒரு சிறப்புப் பயன் கருதி வழிபடும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 78

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக் கண்ணமர் கூபம் கலந்து வருதலால் பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

பொழிப்புரை :

நன்கமைந்த சூரிய மண்டலமானது பிராணவாயு கும்பிக்கப்பட்டுத் தங்கியிருக்கின்ற, கொப்பூழின் அடியாகிய சுவாதிட் டானத்திற்கும், இருதயத்திற்கும் இடைக்கண் உள்ள மணிபூரகத்திலும் கலந்து நிற்றலால், குளிர்ச்சியுடைய அந்த மணிபூரகமும் சிறந்து நிற்கின்றது.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. ``ஆங்கு`` என்றது, `அவ்விடங்கட்கு` எனப் பொருள்தந்தது. சூரியமண்டல மாவது, `மணிபூரகம், அநாகதம்` என்னும் இரண்டு ஆதார எல்லைக் குட்பட்ட பகுதி. அஃது அன்னதாதலாலே நீர்மண்டலமாய் உள்ள மணி பூரகமும் சிறப்பதாயிற்று` என்றவாறு. நீர்மண்டலமே இன்னதாயிற்று என்றதனால், பிற மண்டலம் அதனால் சிறப்படைதல் கூறவேண்டா வாயிற்று. `ஞாயிற்று மண்டலத்தாலே யாவும் நலமுறுகின்றன` என்றவாறு. இங்ஙனமாகவே மேற்கூறியவாறு வானில் இயங்கும் வன்மை பெற்றவர் நலம்பல எய்துவர் என்பதாம். நீர்மண்டலமாயதை, ``கூபம்`` என்றார்.
இதனால், மேற்கூறிய பயனைப் பெற்றாரது சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.

பொழிப்புரை :

சூரிய மண்டலத்துச் சத்தியின் கூறு மணிபூரக சத்தி யோடு கலந்து நிற்றலால், மணிபூரக சத்திக்குப் பத்து முகங்கள் உள்ளன வாம். பத்து முகங்கள் உளவாகவே கைகள் இருபது உள்ளன. பாபத்தை அறுப்பது சூலம் ஆதலால், சூலங்கள் பல கைகளில் உள்ளன.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. `ஆபத்தைப் போக்குகின்ற கைகள்` என்க. `பாபத்தை` என்னும் ஐகாரம் தொகுத்தலாயிற்று. `பாசம் அறுக்க` என்பது பாடம் அன்று.
இதனால், ``தழைத்தது`` என மேற்கூறிப்பட்ட ஆதாரத்தில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 80

சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம்
வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

பொழிப்புரை :

மேற்கூறிய சத்திதன் கைகள் இருபதில் மேற்கூறிய வாறு பல சூலங்களுடன், `தண்டு, வாள், நெருப்பு, மேலான ஞான மாகிய வேல், அம்பு, தமருகம், கிளி` வில், செண்டு, தாமரை மலர், பாசம், மழு, கத்தி, சங்கு என்பன உள.

குறிப்புரை :

சுடர், ஆகுபெயர். குவிந்த - குவிந்தன; சேர்ந்தன. `கை எண்ணதில் சேர்ந்தன` என்க. எண் - தொகை. சூலமல்லாது இங்குக் கூறப்பட்டவை பதினான்கு. அபயமும், வரதமும் இயல்பாக உள்ளன. ஆகவே, எஞ்சிய நான்கு கைகளிலும் சூலமே உளவாதல் மேலை மந்திரத்தால் பெறப்பட்டது. செண்டு, ஓர் ஆயுதம். `கொண்டு` என்பது பாடம் அன்று. இரண்டாமடியில் முதல் இரு சீர்களை வகையுளி செய்து கொள்க.
இதனால், மேற்கூறிய சத்தியின் கைகளில் உள்ளவை கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 81

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய்
எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.

பொழிப்புரை :

தியானத்திற்குப் பொருந்திய சுவாதிட்டானம் முதலிய நான்கு ஆதாரங்களில் உள்ள தாமரையிதழ்கள் நாற்பத்து நான்கில் அமர்ந்திருக்கும் நாற்பத்து நான்கு சத்திகளோடும் தானும் நாற்பத்து நான்கு சத்தியாய் அந்த நாற்பத்து நான்கு இதழ்களிலும் வீற்றிருக்கின்ற சிவ சத்தி, அவ்வாதாரங்களில் வைத்துத் தியானிக் கின்ற தியானத்தைக் கடந்தவளாவாள்.

குறிப்புரை :

`அஃதாவது, ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் இருப்பவள்\\\' என்பதாம், எண் - எண்ணம்; முதனிலைத் தொழிற் பெயர். அஃது எண்ணத்திற்கு உரிய இடத்தை உணர்த்திற்று. \\\"சத்திகள்\\\" இரண்டில் முன்னது, சத்திகளைப் பெற்று நின்றவரைக் குறித்த முகமனுரை. அவர்களை அஃறிணை போலவே கூறியதும் இதுபற்றி. மேல் நிலத்தில் உள்ள சத்தி, கீழ்நிலங்களில் உள்ள தெய்வங்களிடமாக நின்று அருள்புரியும் முறை கூறியவாறு.
இதனால், இச்சக்கர வழிபாட்டில் நிகழும் பல தியானங் கட்குப் பயன் தருபவள் சிவசத்தியாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

பொழிப்புரை :

கீழ் நிலங்களைக் கடந்து மேல் நிலத்தில் இருப் பவளாகிய அச் சத்தி அடியவர் பொருட்டு, தலையிற் கவிக்கும் முடி பொன்னால் இயன்றதும், காதில் அணியும் தோடு மாணிக்கத்தால் இயன்றதும், கழுத்து முதலியவற்றில் தொடரப் பொருந்திய அணிகள் முத்துக்களால் இயன்றனவும், கச்சுப் பவளத்தால் இயன்றதும், அரையில் உடுத்திய உடை பட்டினால் இயன்றதும், பாதத்தில் அணிவது சிலம்புமாக, இளம் பெண்ணாய்க் கீழ் நிலங்களிலும் வந்த நிற்கின்றாள்.

குறிப்புரை :

``பொன் முடி, மாணிக்கத்தோடு`` முதலியவற்றை. `முடி பொன், தோடு மாணிக்கம்` முதலியனவாக மொழிமாற்றி, எல்லா இடங்களிலும் `ஆக` என்பதை இயைத்துக் கொள்க. `அல்குல் ஆடைபட்டு` எனக் கூட்டுக. பாதம் ஆகுபெயர். ``மடந்தை சிறியவள்`` என்பது இருபெயரொட்டு. `சிறியவளாய்` என ஆக்கம் வருவிக்க. சிறியவள், வாலை. ``சிறியவளாய்`` என்பதை, `சிறீயினில், குமீறியில், கமீறியில்` என்பனவாக வேறு வேறு ஓதி, `அவ்வப் பீசாக்கரத்தில் வந்து நின்றாள்` எனவும் பொருள்கொள்வர். கும் - க்ரோம்.
இதனால், மேலைச்சத்தி கீழ் நிலங்களில் இளையவளாய் நிற்றலும், அவளது வடிவமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 83

நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.

பொழிப்புரை :

படிமுறையால் மேருவின்மேல் ஏறிச் சென்று, முடிவாகப் பார்க்கின்ற அதன் உச்சியில் அணிமா ஆதி அட்ட சித்திகளும் கைவந்தவனாய் நின்று, பழைய வெளியிடத்தில் உள்ள புறக் கவர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி அவ்விடத்தில் பொருந்திய ஒளியை உணர்ந்து நிற்பவனுக்கு, மேற் சொல்லிய சத்தி இடையறாது உடன் நிற்றல் உளதாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகச் சென்று, ``உண்டாம்`` என்பதனை முதலடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. இதன்கண் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய சத்தி, என்றும் உடனாகப்பெறும் பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.

பொழிப்புரை :

சதாசிவனது சத்தியாகிய சதாசிவைக்கு (அவனைப் போலவே) யாவரும் காண உள்ள முகங்கள் ஐந்து. எனினும், ஆறாவதாக அதோமுகம் ஒன்றும் (அங்ஙனமே) உண்டு. மேலான அந்தமுகமே, மேல் ``சிறியள்`` (வாலை - 1382) எனப்பட்ட சத்தி. இனிச் சதாசிவைக்கு முகம் ஆறானதற்கு ஏற்பக் கரங்களும் ஒருமுகத்துக்கு இரண்டாகப் பன்னிரண்டு ஆயின.

குறிப்புரை :

``சதாசிவ நாயகி கொண்ட முகம் ஐந்து`` என்பதனை முதலில்வைத்து. அதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. `உத்தம மான அது` என்பதில் ஓர் அகரமும், `அதுவே` என்னும் ஏகாரமும் தொகுத்தல் பெற்றன. ``கொண்ட`` என்பதற்கு. `யாவரும் அறியக் கொண்ட` என்பது ஆற்றலால் வந்தது. `ஒன்றுக்கு` என நான்கவாது விரிக்க.
மூன்று நால் - பன்னிரண்டு ஈற்றடி எண்ணலங்காரமாயும் நின்றது. இரண்டாம் தந்திரத்துள், `சிவனுக்கு அதோமுகம் ஒன்று உண்டு` என்பதும், `அதுவே நிலவுலகத்தார்க்கு முருகன் முதலாக வந்து அருள் புரிவது` எனவும் கூறியவாறே 1 இங்கும் கூறப்பட்டமை நோக்கத் தக்கது. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், மேல் நிலச் சத்தியது முழு நிலையின் பகுதியே கீழ் நிலத்திற்கு வந்து அருளுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 85

நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.

பொழிப்புரை :

சதாசிவையின் கைகளில், `நல்ல ஒலியை எழுப்பு கின்ற மணி, சூலம், கபாலம், கிளி, பாம்பு, மழு, கத்தி, பந்து, தாமரை மலர், தமருகம்` என்னும் இவைகள் இருத்தலாலும், பொன்னாலும், மணியாலும் ஆகிய அணிகலன்கள், மாலைகள் என்பவற்றை அவள் அணிந்திருத்தலாலும் அவனது கூறாகிய சத்திகளது வழிபாட்டிலும் இவை கொள்ளப்படும் பொருள்களாயின.

குறிப்புரை :

``பன் மணி`` என்றது நாகத்திற்கு அடை. `ஆகும் தாமரை` என இயையும். ஆகும் - ஏந்துதற்குப் பொருந்திய, கன்மணி தாமரை - மாணிக்கக் கல்போலும் செந்தாமரை மலர். மணி முதலிய பத்துடன், அபயமும், வரதமும் கூடக் கைகள் பன்னிரண்டாதல் அறிக. பூணும், ஆரமும் மேனியில் அணியப்படுவன. `பூசனை யானதே` என்பது பாடம் அன்று.
இதனால், மேற்கூறிய சத்திகள் பலரது வடிவுகள் அவ்வாறானமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 86

பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே
நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர்
மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரங்களின் அடியில் சதுரமாய் உள்ள `பூபுரம்` என்பதின் நான்கு மூலைகளிலும் ஒரு மூலைக்குப் பதின் மராக, வழிபடுதற்குறிய நாற்பதின்மர் தேவியர் சூழப் பொருந்தி யிருப்பவர்கள், அருள்வடிவாகிய சிவசத்திக் கூறுகள் தங்களிடம் சேர்ந்திருத்தலாலே, இடையூறின்றி, மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`கன்னிகள், சத்திகள்` என்பவற்றை அடிமாற்றி ஓதுதல் பாடமன்று. ``காசினிச் சக்கரத்துள்ளே`` என்பதை முதலில் வைத்தும், ``கலந்தவர்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டியும் உரைக்க.
இதனால், நவாக்கரி சக்கரங்களின் பூபுரத்தில் தேவியர் பலர் இருத்தல் கூறப்பட்டது. ``நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதா - மாசடையாமல் மகிழ்ந்திருந்தார்களே`` என்றது, இவர்கட்கும் சிவசத்தியது அருள் இன்றியமையாததனை நினைவுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 87

தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட
ஏரது ஒன்றி எழுந்த மனோமயம்
காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.

பொழிப்புரை :

மேற்கூறிய பூபுர தேவியர்பால் விளங்குகின்ற ஒளிவடிவான சிவசத்தியை உடன்பின் அகத்திலே ஆதாரங்களில் தியானிக்கின். எழுச்சி பெற்றுப் புற விடயங்களின் மேல் செல்லுகின்ற மனம், நிலத்திற் கலந்த நீர் அந்நிலத்தின் தன்மையதே ஆனாற் போலத்தியானிப்போனது தன்மைக்கு மாறாகாமல் அவனோடே பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

தாரம் - ஆதாரம், இது மேற்கூறிய சக்கரங்களுக்கு உரியதாயப் பூபுரத்தைக் குறித்துப் பின் அவற்றில் உள்ள தேவியர்களைக் குறித்தது. பாரம் - பருவுடல். ``பரந்து`` என்பதை, `பரக்க` எனத் திரிக்க. `மண்ணிலே காரது போலக் கலந்தெழும்` என மாற்றிக் கொள்க. கார் - மேகம்; அது நீருக்கு ஆயிற்று. `தாரம் மூலாதாரம்` எனவும், `சோதி அதன் கண் உள்ள தீ` எனவும் கொண்டு, `யோகமுயற்சியால் மனோலயம் உளதாம்` என்பதே இம்மந்திரத்திற்குப் பொருளாக உரைப்பாரும் உளர். அது, மேல் பலவிடத்துங் கூறப்பட்டதன் மேலும், இவ்விடத்திற்குச் சிறிதும் பயனுடைத் தாகாமை அறிக.
இதனால், இச்சக்கர வழிபாட்டில் சிவ சத்தியை மறவாமை வேண்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 88

மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

பொழிப்புரை :

பிருதிவி மண்டலமாகிய மூலாதரத்தினின்று பிரணவமாகிய சூக்கும எழுத்தாய்ப் புறப்பட்ட நாதம், பின் வளர்ச்சி யுற்று ஆகாச மண்டலமாகிய ஆஞ்ஞையில் `சிவாய நம` என்னும் தூல எழுத்தாய் வெளிப்பட்டு, அதற்குப் பின் கண்ணில் ஒளி வடிவாயும் என்னிடத்துப் பதிந்து நின்றது. ஆதலின் ஒளிக்காட்சி ஒருவராலும் காணப்படாதது அன்று; மற்றும் அது தன்னைக் காணுலுறுவார்க்குக் காட்சி தரவேண்டும் என்றே முன் வரும் இயல்புடையது.

குறிப்புரை :

`விண்ணில் சிவாய நம என்று எழுந்து கண்ணில் எழுந்தது` என்க. பூபுர சத்திகட்கு உள்ளாயிருக்கும் சிவ சத்தியது காட்சி நாத தரிசனத்தின் வழிக் கூடும் என உணர்த்தியவாறு. தோற்ற முறைபற்றி, `அகார உகார மகாரம்` என்றலேயன்றி, ஒடுக்கமுறை பற்றி `மகார உகார அகாரம்` என்றலும் கூடுமாதலின், `மகாரம் உகாரங்கள்` என்றார். மோனை நயம் வேண்டாது, `அகார உகாரங்கள் ` என்றேயும் பாடம் ஓதுப. கொல், அசை.
இதனால், மேல், ``தாரத்தினுள்ளே தயங்கிய சோதி`` எனப் பட்ட சத்தியைத் தரிசிக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.

பொழிப்புரை :

சூரிய மண்டலமாகிய விந்துத் தானத்தில் உள்ள சிவசத்தி, தன்னிடத்தில் காணப்படும் கரங்களில் இரண்டில் வெள்ளி யாலான மண்டையிலும், பொன்னாலான மண்டையிலும் வைத் திருப்பது அழகிய அமுதமே.

குறிப்புரை :

`அதனை அவள் அடியவர்க்கு அள்ளிவழங்குவாள்` என்பது குறிப்பு. விந்துத் தானத்தில் அமுதம் உளதாதல் பற்றி அதனை ``அமுத கலை`` என்றார். `தானம் அமுதம்; தானும் அமுத பயோதரி; அவற்றுக்குமேல் அவள் இரு கைகளில் அமுத பாத்திரத்தைக் கொண்டுள்ளாள்; அவள் தன் அடியவர்க்கு அமுதத்தை வழங்கத் தடை என்னை` என்பது நயம். `கரத்தில்` என உருபுவிரிக்க. `இரு மண்டைவாய்` என இயையும். அமுதத்திற்கு அழகு வெண்மை. இஃது இன எதுகை பெற்றது.
இதனால், ஆஞ்ஞையில் உள்ள சத்தியை அடைவோர் அமுதுண்ணப் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 90

அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுமும தாகிய கேடிலி தானே.

பொழிப்புரை :

ஆம்பல் போலும் வாயிடத்துக் குளிர்ந்த முத்துப் போலும் நகைபொருந்தி விளங்கும் அந்நிலையினளான, அழிவற்ற அச்சத்தி, தன் அடியவர்க்குச் சந்திர மண்டலத்து அமுதம் உளதாகும் படி தனது அழகிய மேனி படிகம்போல்வதாகக் கொண்டு அவர்தம் அகத்தே நிறைந்து விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. குமுதமும், முத்தும் உவம ஆகுபெயர்கள். கெழுமுதல் - பொருந்துதல். ``அது`` நான்கில், முன்னைய மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள்; இறுதியது `அந்நிலை` என்னும் பொருட்டு. `கெமுதமுது` என்பது பாடம் அன்று. நான்காமடி மூன்றாமெழுத்தெதுகை பெற்றது. இரண்டாமடியும் அன்னதுபோலும்!
இதனால், அச்சத்தி அவர்க்கு அமுதம் வழங்குமாறு கூறப் பட்டது. இதனுள் அவளது திருக்கோலமும் உடம்பொடு புணர்த்தலால் கொள்க.

பண் :

பாடல் எண் : 91

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

பொழிப்புரை :

வியட்டியாய் நின்ற சிவ சத்திகள் முப்பத்தறுவரும், அவரைத் தேட வேண்டாது தம்மிடத்தே பொருந்தப் பெற்ற தேவியர் முப்பத்தறுவரும் ஆகப் பூபுரத்தை யிடமாகக் கொண்டு விளங்கும் தாமரைமலர்களின் இதழ்களில் உள்ள இவர்கள் நாள் வரையறையின்றி எந்நாளும் வழிபடுகின்ற அடியவன்பால் பொருந்தி நிற்பார்கள்.

குறிப்புரை :

``முப்பத்தறுவர்`` எனவே, இவர்கள் தத்துவங்களைச் செலுத்துவோராதல் பெறப்படும். படவே, இவர்களது விளக்கத்தைப் பெற்றோன் தத்துவத் தொடக்கின் நீங்குதல் விளங்கும். பின்னிரண் டடிகளில் உயிரெதுகை வந்தது.
இதனால், நவாக்கரி சக்கர வழிபாட்டை வாழ்நாளளவும் செய்ய, மாயைத் தொடக்கு நீங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.

பொழிப்புரை :

இயல்பாக உள்ளத்தில் உள்ள, நிரம்பிய விளக் கொளியாகிய சத்தி, நவாக்கரி சக்கரத்தில் கட்புலனாம் விளக்கொளி யாய் விட்டது. இனி அவ்வொளி உள்ளத்திலும் தோன்றி விளங்குதற்கு வேண்டப்பட்ட காலம் ஓராண்டு. அப்பயன் கைக்கூடுதற்குத் துணை யாகவே மேற்கூறப்பட்ட ஔகாரம் முதலிய பீசாக்கரங்கள் அச் சக்கரத்தில் விளங்கி நிற்கின்றன.

குறிப்புரை :

`நின்றதாகிய வன்னி` என இயையும். வன்னி, ஆகுபெயர். `கண்டதாகிய சோதியாயிற்று` என்க. கொண்டது. வேண்டப்பட்டது. `ஔகாரம்`` என்றது, `அது முதலாகிய அக்கரங்கள்` எனப் பொருள் தந்தது. `கூடி வருகைக்கு அவை விளங்கின` எனவே, ஓராண்டுக் காலம் அவற்றைக்கணிக்க` என்றதாயிற்று. முதலடி இனவெதுகை.
இதனால், அவ்வழிபாட்டினை ஓராண்டுச் செய்வார் பெரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 93

விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

பொழிப்புரை :

ஒளிவிட்டு விளங்குகின்ற வானுலகத்தில் உள்ள தேவர் யாவரும் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரம் மக்கள் உள்ளத்தில் நிலைபெற்ற பின் அதனால் உண்டாகும் இன்பம் மிகுகின்ற நன்மைகள் பரம பதத்தில் இருக்கும் மாயோனுக்கு உள்ள நன்மைகளை ஒக்குமாயின், அவற்றின் பெருமைகளை வினைத்துன்பத்தில் நின்று கொண்டு சொல்ல இயலுமோ!

குறிப்புரை :

``மன்னுயிர்`` என்றது தலைமை பற்றி மக்களுயிரைக் குறித்தது. ``ஆக`` என்பதை `ஆனபின்` எனவும் ``ஒத்து`` என்பதை. `ஒக்கின்` என்வும் திரித்துக் கொள்க. ``நாரணன்`` ஆகுபெயர். சுணங்கு - நலிவு. ஒன்று, மூன்று அடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், இச்சக்கர வழிபாடு போகத்தை மிகத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 94

ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

பொழிப்புரை :

பிரணவ கலைகளுள் உகாரகலை மிகுந்து ஓங்கி முற்றுகின்ற சந்திர மண்டலம் நெற்றிநடு முதலாகிய மேல் நிலங்களில் அமுதமாய், கீழ்நோக்கியுள்ள ஆயிர இதழ்த் தாமரையாய் விளங்கும். சோலைகளில் வெளிநிற்கின்ற கற்பகத் தருபோலும் சிவசத்தி, அச்சந்திர மண்டலத்தின் கீழுள்ள தாமரை மலர்களில் தேவியர் பலராய் விளங்குவாள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, ``மேலே அமுதமாய் அதோமுகம் ஆம்` எனக் கூட்டி உரைக்க. `தானேயாய்` என ஆக்கம் வருவிக்க. தானேயாதல், மிகுந்திருத்தல், அகார கலை பிரணவத்தின் தொடக்கமாக உகாரகலையே அதன் எழுச்சியாதல் அறிக.
சத்தி எழுந்தருளியிருத்தற்குச் சிறந்தது சோலையாதலின், அவளை அவ்விடத்து வெளிநிற்பவளாகக் கூறினார். இது சிறப்பாகக் கடம்பாடவியைக் குறிக்கும் என்பர். ``கற்பகம்`` என்றது உருவகம். சந்திர மண்டலத்தில் நேரே விளங்குகின்ற சிவசத்தி. கீழ் ஆதாரங்களில் தேவியர் பலரிடமாக விளங்குவாள் என்றபடி. முதலிரண்டடிகளில் இது குறிப்பால் உணர்த்தப்பட்டது. இரண்டாமடி இன எதுகைபெற்றது. `தாமே` என்பது பாடமன்று.
இதனால், `ஆதார யோக முறையால் சத்தியை அடைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 95

பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

பொழிப்புரை :

ஆதாரங்களில் விளங்கும் சாதன தேவியரைச் சிவச் சத்தியுடன் கூட வழிபடின், போக்குதற்கரிதாகிய அகங்காரம் நீங்கும். அங்ஙனம் வழிபட்டவன் அகங்காரத்தினின்று நீங்கி, நிறைந்த அமுதக்குடம்போலும் சந்திர மண்டலத்தில் சாத்திய தேவியாகிய சிவசத்தியைத் தலைப்படுவான்.

குறிப்புரை :

``பொற்கொடியாளுடன்`` என மேற்போந்ததனை அனு வதித்ததனால், பூசிக்கப்படுவார் சாதன தேவியராதல் பெறப்பட்டது. அகரம், பண்டறிசுட்டு. ``அக்களியாகிய ஆங்காரம்``, இருபெய ரொட்டு. மத் கடமாகிய மண்டலம், சந்திர மண்டலம் சத்தியத்தை, ``பின்`` என்றார்.
இதனால், ஆதார தேவியரது வழிபாட்டின் இன்றியமை யாமை கூறிப்பட்டது. இரண்டாம் அடி இன எதுகை.

பண் :

பாடல் எண் : 96

பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை இவளுக்கு மன்னும் திலகமாக்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

பொழிப்புரை :

பெண்ணாகக் காணப்படுகின்ற இச் சத்திக்கு அங்ஙனம் காணப்படுதலே ஏற்புடைத்து. இவளுக்குத் தலைவனாய் உள்ள சிவன் அங்ஙனம் தலைவனாதலேயன்றித் தந்தையாயும் நிற்கும் இயல்புடையவனாவான். அழகியாய் உள்ள இச்சத்திக்கு இப்பூ மண்டலமே நெற்றித் திலகமாய் நிற்க, எண்ணிறந்த சத்திகள் சூழ்ந்து பணி செய்ய, இவள் உயரிய ஆசனத்தில் வீற்றிருக்கும் பெருமையுடையள்.

குறிப்புரை :

`அப்பெண்மையே` எனச் சுட்டுவருவித்துத் தேற்றே காரம் விரிக்க. `பெண்மையே ஏற்புடைத்தாம்` என்றது, சிவத்தின் வழிநிற்பவளாதல் குறித்து. எனினும், இவளும், சிவனும் உலகத்துப் பெண்டிரும் ஆடவரும்போல இருவேறுபட்டவர்கள் அல்லர்` என்றற்கு, ``தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்`` என்றார். தாணு - தலைவன். தாணு தாதையுமாய் நிற்கும்` என மாறிக் கூட்டுக. மாது - அழகு. ஐகாரம் சாரியை. அழகு இயற்கையாலும், செயற்கையாலும் உள்ளது. அவற்றுள் செயற்கை `அழகில் பூமியே திலகமாகின்ற அத்துணைப் பெரியாள்` என்பதை மூன்றாம் அடியிலும், பிறர் யாவரும் இவளுக்குக் கீழ்பட்டவர்களே` என்பதை நான்காம் அடியிலும் குறித்தார். குவிதல் - இங்கு, உயர்தல், `குவிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 97

குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.

பொழிப்புரை :

சிவ சத்தியின் கூறாகிய முப்பத்திருவர் சத்திகள் தலைமை பெற்று நிற்கின்றனர். அவர்கள் வழிப்பட்டு முப்பத்திருவர் தேவியர் ஒழுகுகின்றார்கள். இவ்இருதிறத்தாரும் ஒரு தாமரை மலரில் சூழ விரிந்தபல இதழ்களில் இடம் பெற்று இருக்கின்றனர்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தாமரை மலர் மேற்காட்டிய சக்கரங் களில் உள்ளனவாம். அவற்றின் இதழ்கள் எட்டாகும். அவற்றில் அகம், நுனி, இருபுறம் என்பவற்றால் இடங்கள் முப்பத்திரண்டாம். அம் முப்பத்திரண்டிலும் தேவியர் முப்பத்திருவர் இருக்க, அவர் களிடமாகச் சத்திகள் முப்பத்திருவரும் உளர் என்க. இம்முறை ஆதார பங்கயங்கட்கும் பொருந்துவதாம். `பரந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இதன் கண் மூன்றாமெழுத்தெதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளும், அவர்கள் வழியொழுகும் தேவியரும் சக்கரங்களிலும், உடம்பகத்து ஆதாரங்களிலும் நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 98

கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.

பொழிப்புரை :

சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்று.

குறிப்புரை :

``கூத்தன் ஒளியினை`` என்பதையும், காரணத்துள்ளது` என்பதையும் அவ்வவ் வடியின் முதலிற் கூட்டி யுரைக்க. காரணத்து - காரணமாகின்ற நிலையில், நான்காமடி இன எதுகை பெற்றது.

பண் :

பாடல் எண் : 99

இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.

பொழிப்புரை :

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணை வியைப் பெற்றால், அவளுக்கேயன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. (எல்லா நன்மைகளும் குறைவின்றி உள வாம்.) அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.

குறிப்புரை :

இல் - இல்லாள். `மனமாகிய இல்லத்தை நன்முறையில் ஆண்டு துணைபுரியும் அளவில் சிவ சத்தி தன் அடியவனுக்கு வாழ்க்கைத் துணைவிபோல்வாள்` என்பது பற்றி, ``இல்லதென் இல்லவள் மாண்பானால்`` எனவும், ``இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை`` எனவும் போந்த உலகியல் முறையை எடுத்தோதி, சத்தியது அருள் கிடைக்கப் பெறுதல் பெரும்பேறாதலை விளக்கினார். ஈற்றில் வருவித்து உரைத்த `உவமிக்க` என்பது சொல்லெச்சம்.
இவை இரண்டு மந்திரங்களாலும் மேற்கூறியோரை, மேற் கூறிய இடங்களில் வழிடுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 100

ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

பொழிப்புரை :

ஐம்புலன்களாகிய யானைகளையும் மயங்கி அடங்கச் செய்து கட்டி வைக்கும் அறுபத்து நான்கு தறிகளாயும், இடப வாகனத்தில்மேல் வருகின்ற தலைவனாகிய சிவபிரானிடத்தில் உள்ள அறுபத்து நான்கு சத்திகளாயும் விளங்குவன. பிரணவத்தை முதலாகக் கொண்ட பிராசாத மந்திரத்தின் அக்கரங்கள் அடங்கிய சக்கரத்தில் உள்ள அறுபத்து நான்கு அறைகள். அவ் அறைகளை யுடைய சக்கரத்தை வழிபட்டால், மத யானையும் வணங்கும் கடவுள் தன்மையைப் பெறலாம்.

குறிப்புரை :

``ஆனை`` நான்கில் இரண்டாவதை, `ஆன்+ஐ` எனப் பிரித்துப் பொருள்கொள்க. ஏனைய மூன்றும் சொல் ஒன்றாயினும் வேறு வேறு பொருளைக் குறித்தலின் சொற்பின் வருநிலை. இரண்டாம் அடி, மடக்கு. முதலடியில், உள்ள ஆனை. உருவகம். மூன்றாம் அடியில் உள்ள ஆனை உவம ஆகுபெயராய் அதனோ டொத்த ஓங்காரத்தைக் குறித்தது. நான்காம் அடியில் உள்ளது அஃறிணை இயற்பெயராய், ஆற்றலால், மதங்கொண்ட யானையைக் குறித்தது. கோடுதல் - வளைதல்; வணங்குதல். `ஆனையும், அதன் கொம்பும் அறுபத்து நாலு அறைகளில் அடங்கிவிடும்` என்பது நயம். ``அறுபத்து நால்`` என்பது அதன் வழிபாட்டின்மேல் நின்றது. அதில் உள்ள `இல்` ஏதுப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. அறுபத்து நான்கு அறைகளும் அறுபத்து நான்கு சத்திகளாதல் இரண்டாமடியில் கூறப்பட்டது. இச்சக்கரம் எட்டெழுத்துக்களால் ஆவதாகலின், `அட்டாட்சரி சக்கரம்` எனவும் அவை பிராசாத அட்சரங்கள் ஆதலின், `பிராசாத சக்கரம்` எனவும் சொல்லப்படும். அஃது, கீழே தனியே தரப்பெற்றுள்ளது.
இதனுள், அக்கரங்கள் இடந் தொட்டு வலமாகச் செல்லும் வரிகளை முறையே நோக்கினும், மேற்றொட்டுக் கீழாக வரும் வரிகளை முறையே நோக்கினும் ஒருவகையாகவே இருத்தல் அறியத் தக்கது. அதனால், அவ் அக்கரங்களை ஒருமுறை இடமிருந்து வலமாகவும், மறுமுறை மேற்றொட்டுக் கீழாகவும் மாறிமாறி நோக்கிக் கணித்து வழிபடின் பயன் கூடும்.
இதனை, இத்தந்திரத்தின் முடிவாக இறுதிக்கண் அனைத்தும் அடங்கக் கூறினார் என்க.
சிற்பி