நான்காம் தந்திரம் - 1. அசபை


பண் :

பாடல் எண் : 1

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

பொழிப்புரை :

நமக்கெல்லாம் தலைவனாகிய சிவனுக்குரிய ஓரெழுத்து மந்திரமாம் பிரணவத்தின் சிறப்பே, ஏனை எல்லா மந்திரங்களினும் உயர்வுடையதாதலை இத்தந்திரத்துள் யான் கூறுவேன். அதனானே, ஞானங்கள் பலவற்றினும் மேலானதாக உயர்ந்தோர் சொல்கின்ற சிவஞானத்தைப் புகழ்ந்து பாதுகாப்பவனும், யாவருடைய உள்ளத்திலும், `சிவனது திருவடியே பொருள்` எனத்தெளிவிப்பவனும், சிவயோகத்தையும் சுருங்கக் கூறுபவனும் ஆவேன். பிரணவத்தினை அறிய விரும்புபவர்களே! இதனைச் செவிக்கொண்மின்.

குறிப்புரை :

`நம் பிரான் ஓர் எழுத்தே ஏற்றுகின்றேன்; (அதனால்) புகல் ஞானத்தைப் புகழ்ந்தும் போற்றுகின்றேன்; சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக்கூட்டுக. சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக் கூட்டுக.
``புகழ்ந்தும்`` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஏற்றுதல் - உயர்த்துதல்; என்றது உயர்வை உணர்த்துதலை.
`ஓர் எழுத்து` என்பது ஓகாரத்தைக் குறித்தல் மந்திர நூல் மரபு. `ஏகாட்சரம்` என்பர். யாதொரு மந்திர எழுத்தும் இறுதியில் மகர மெய்யைப் பெற்று நிற்றலும் மந்திர மரபு. அதனால், ஓகாரம் `ஓம்` என நின்று, `ஓங்காரம்` என வழங்கப்படும். மெய்யெழுத்து எண்ணப்படுவ தில்லையாகையால், `ஓம்` என நிற்பினும் ஓரெழுத்தேயாம். `மந்திரம்` என்பது ஓரெழுத்தாலாய மந்திரத்திற்கே சிறப்பாக உரிய பெயராதல் மந்திர நூல்களால் அறியப்படுவது. அவற்றின் இறுதியில் நிற்கும் மகர மெய் `விந்து` (பிந்து) எனப்படும்.
சொல்லுவோன், தனது கருத்தைப் பிறர்க்கு இனிது விளங்க வெளிப்படக் கிளந்து சொல்லுங்கால், புறத்து நிகழ்கின்ற இசையோசையையே ஒற்றுமை பற்றி எழுத்தோசையாக ஆசிரியர் கூறுவராயினும், `உண்மையில் எழுத்தோசை அவ் இசையோசையின் வேறே` என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார், ``அகத்தெழு வளியிசை`` எனவும், `அதனை யான் இங்குக் கூறிற்றிலேன்` எனவும் கூறியுணர்த்தினார். மேற்குறித்த இசையோசையை, ``எழுந்து புறத்திசைக்கும் -மெய் தெரி வளியசை என்றார்.
`நாதம்` என்பது, எழுத்தோசைக்கே பெயராக மெய்யுணர்வு நூல்கள் (தத்துவ சாத்திரங்கள்) கூறும். இசையோசையை `ஓசை` எனவும், எழுத்தோசையை `ஒலி` எனவும் குறியிட்டு, ``ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே`` 2 எனத் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்தார்.
இசையோசை கருவியாக அன்றி எழுத்தோசையை நேரே உணரும் ஆற்றல் உலகர்க்கு இல்லை.
`ஓ` என்பது இசையோசையைக் குறிக்கும் குறிப்பிடைச் சொல் என்பது, `ஓ` என அரற்றினான்` என்பது முதலிய வழக்குக் களால் நன்கு அறியப்படும். அதுபற்றி இசையோசைக்கு முதல் `ஓ` என்பது பட்டு நிற்றலின், இசையோசையானே அறியப்படுகின்ற எழுத்தோசைக்கும், `ஓகாரமே முதல்` எனப்பட்டது. படவே, சொல்லுலகம் முழுவதற்கும் ஓங்காரமே முதலாயிற்று. அதனால், எல்லா மந்திரங்கட்கும் முன்னும், பின்னும் ஓங்காரத்தைக் கூட்டிக் கூறுதல் இன்றியமையாததாயிற்று. இவ்வாற்றால், சொல்லுலகம் முழு வதற்கும் முதலாய் நிற்கும் ஓங்காரத்திற்கு, எல்லாவற்றிற்கும் முதல் வனாகிய சிவபெருமானே முதல்வனாதலும் இயல்பான் அமைந்தது. அதனால், நாயனார் ஓங்காரத்தை, ``நம்பிரான் ஓரெழுத்து`` என்றார். மொழிகளில் உள்ள எழுத்துக்கள் போலச் சொற்கு உறுப்பாய் நின்று பொருள்விளக்காமையால் இதனை `ஊமையெழுத்து` என்பர்.
சொல்லுலகத்திற்கு முதலாய் இதனை நிற்றல்பற்றி ஓங்காரம் `தாரக மந்திரம்` எனவும்படும். பற்றுக் காரணமாகத் தேவர் பிறரை முதற்கடவுளராக எண்ணும் சமயத்தவர் இத்தாரக மந்திரத்திற்கும் தாம்தாம் கொள்ளும் கடவுளரையே முதல்வராகக் கூறி மகிழ்வர். அவையெல்லாம் வெறும் முகமனேயாதல் அக்கடவுளரது இயல் புகளை உள்ளவாறு உணர்வார்க்குத் தெற்றெனவிளங்கும்.
எழுத்தோசையைப் பற்றுக்கோடாகக்கொண்டே மக்கட்கு எண்ணங்கள் பலவும் தோன்றும். புதிது புதிதாகத் தோன்றி வரும் எண்ணங்கட்குக் கடலில் புதிது புதிதாகத் தோன்றிவருகின்ற அலையை உவமையாகக் கூறும் சிவஞானபோதம்.
புதிது புதிதாய்த் தோன்றிவரும் எண்ணங்கட்கு மேற்கூறிய வாற்றால் முதலாதல்பற்றி ஓங்காரம், `பிரணவம்` எனப் பெயர் பெற்றது. நவம் - புதுமை.
சொல்லுலகம் அனைத்திற்கும் முதல் ஓங்காரம் எனப்படுதல் பற்றி, `அனைத்து மந்திரங்களும் ஓங்காரத்தின் சூக்கும பரிணாமமே` என்பர். எனினும், அதன் கருத்து மந்திரங்கள்,
நாதமாய் நிற்கும் சுத்த மாயையின் காரியம் என்பதே. அதனால், `ஓங்காரம்` `ஓரெழுத்து` என்னும் சொற்கள் `ஓம்` என ஒலிக்கும் இசையோசையைக் குறித்தலேயன்றி. சங்கேதத்தால் நாதத்தையும் குறிக்கும்.
அவ்வாறான மந்திரங்களுள் `அம், சம்` என்னும் இரண் டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற மந்திரம் `அம்ச (ஹம்ஸ) மந்திரம்` எனப்படும். அவ்இரண்டெழுத்தும் பிராணாயாமத்துள் இரேசக பூரகங்கட்கு உரியனவாம். இரேசக பூரகங்கள் யோக முறைப்படி அறிந்து செய்யப்படும்பொழுது அம்மந்திரச் சேர்க்கைகளோடு செய்யப்படுதல் சிறப்பு. அது பிற மந்திரங்கள் போலாது பிராணனின் இயக்கமாகவே கொள்ளப்படுதலால், `அசபை` (செபிக்கப்படாமல் தானாகவே இயல்வது) எனப் பெயர்பெற்றது. எனவே, பிராண இயக்கத்தை உடைய ஒவ்வோர் உயிரிடத்தும் இஃது உளதாகக் கொள்ளப்படும்.
திருப்பாற்கடலில் திருமால் கொள்கின்ற அறிதுயிலிலும் இம்மந்திரம் இயல்பாக விளங்கினமையால், `அவரது இதயத்தில் வீற்றிருந்த தியாகேசப்பெருமான் அங்கு அசபா நடனம் புரிந்தனர்` எனவும், அப்பெருமானே முசுகுந்தச் சக்கரவர்த்தியால் திருவாரூரில் கொணர்ந்து எழுந்தருள்விக்கப்பெற்றமையால் `திருவாரூர்த் தியாகேசரது நடனம் அசபா நடனம்` எனவும் கூறுவர்.
அம்ச மந்திரத்துள் `சம்` என்பதை விசர்க்கத்துடன் கூடியதாக ஆக்கி `ச:` என முன்னும், `அம்` என்பதை `அஹம்` என வேறுபடுத்திப் பின்னும் வைத்து உச்சரிக்க வருவதே `சோஹம்` என்பது. `அவன் நான்` என்பது இதன் பொருள். எண் வகை யோகமும் கைவந்த நிலையில் தியானத்தானமாகிய ஆஞ்ஞையில் யோகி இச் சோஹம் பாவனையைச் செய்வானாயின், `அவன்` எனக் கருதுதல் இறைவனையே யாகலின், சாத்திய மந்திரங்களால் மந்திரான்மாவாய் நிற்கின்ற அவ்யோகி பசுத்துவம் நீங்கிப் பதிநிலையை எய்திப் பரமா காச வடிவாக ஆவான். சிவயோகி, `சோஹம்` எனப் பொதுப்படப் பாவியாது, `சிவோஹம்` எனச் சிறப்பாகப் பாவிப்பான். அதனால், அவன் சிவமாய் நின்று சிவானந்தத்தை நுகர்வான். ஞானத்தை எய்தினோரும் நிட்டையில் நிற்கமாட்டாதபொழுது அம்மாட் டாமைக்குக் காரணமாகிய வாசனா மலம் நீங்குதற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை அதற்குரிய முறையில் சுத்தமானதமாகக் கணிக்கும் போது சிவோகம் பாவனையை உடையவராயே இருந்து கணிப்பர். தத்துவமசி முதலிய மகா வாக்கியங்களும் `சோஹம்` என்னும் பொருளையே வேறுவேறு வகையில் கூறுவனவாம். `அம்சம்` என்ப தேயன்றி, இச் `சோஹம்` என்பதும் அசபையாகச் சொல்லப் படும். `சோஹம்`` என்பதன் பொருள் திருவைந்தெழுத்தில் இன்னும் விரிவாக அமைந்துள்ளது. ஆகவே, பிரணவத்தின் காரியங் களுள் அம்சம், சோஹம், திருவைந் தெழுத்து ஆகிய மந்திரங்கள் முதன்மை யுடையன. ஆகவே, அவை யெல்லாம் குறிப்பால் உணரக் கூறுகின்ற இவ்வதிகாரத்தை நம்பிரான் ஓர் எழுத்தைக் கூறுவதாக நாயனார் அருளிச்செய்தார்.
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

பொழிப்புரை :

`ஓம்` என்று ஓரெழுத்தாகச்சொல்லப்படுகின்ற சமட்டிப் பிரணவத்தின் பொருளாகிய `இலய சிவன்` என்னும் அருவ நிலையால் உலகெங்கும் வரம்பின்றி நிறைந்து நின்று பின், `அ, உ` என்று, மகாரம் இன்றி இரண்டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற சூக்கும வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக்களின் பொரு ளாகிய சிவமும், சக்தியும் செம்பாதியான ஒளிவடிவாயுள்ள `போக சிவன்` என்னும் அருவுருவ மூர்த்தியாய் உலகத்தைத் தொழிற் படுத்த நினைந்து, பின், மேற்கூறிய இரண்டெழுத்துடன் மகாரத்தையும் கூட்டி `அ,உ,ம்` என மூன்றெழுத்தாகச் சொல்லப் படுகின்ற தூல வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக் களின் பொருளாகிய `அயன், அரி, அரன்` என்னும் மூவராம் `அதிகார சிவன்` என்னும் உருவ மூர்த்தியாய்ப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் தலைப்பட்டு நிற்கின்ற சிவனை அவனது திருவைந்தெழுத்தில் மகாரத்தின் பொருளாகிய மலத்தின் மறைப்பினால் அறியமாட்டாது உலகம் திகைக்கின்றது.

குறிப்புரை :

எனவே, `பிரணவத்தினை அதன் முறைகளை யெல்லாம் உணர்ந்து ஓதின் அவனைப்படிமுறையால் உணர்ந்து உய்யலாம்` என்பது கருத்தாயிற்று. உணரப்படுபொருளாகிய சிவனது சிறப்பினை உணர்த்தும் முகத்தால் அவனை உணர வேண்டுவதன் இன்றியமையாமையை உணர்த்தவேண்டி இவ்வாறு சிவன்மேல் வைத்து ஓதினாரேனும், பிரணவத்தை ஓதும் முறைமைகளையும், அவற்றது பயனையும் உணர்த்தலே கருத்தென்க.
`இருவராய் இசைந்து` என மாற்றியுரைக்க. ``இசைந்து`` என்ற தனால், அஃது அவ்விருவரும் வேறு நில்லாது ஒன்றாய் இயைந்து நிற்கும் அருவுருவ நிலையைக் குறித்ததாயிற்று. முளைத்தல், உருவாய்த்தோன்றித் தொழில் இயற்றல், `சோதியை` என்பதன்பின், `அறியாது` என்னும் சொல்லெச்சமும், மயக்கம் உறுதற்கு, `உலகம்` என்னும் எழுவாயும் வருவித்துக் கொள்க. இதன்கண் ஈரடி எதுகைவந்தது. உயிரெதுகையுமாம். `மவ்வெழுத்து` என்பது இத்தொடை நோக்கி விகாரமாயிற்று.
இதனால், அசபை சிவபெருமானுக்கு அருள்வாயிலாய் நின்று அவனை உணர்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமானார் தாம் இயல்பாக என்றும் எழுந் தருளியிருக்கின்ற சிதாகாசமாகவே திருவுளத்துக் கொண்டு வெளிநின் றருள்கின்ற தில்லையம்பலமும் மேற்கூறிய ஓரெழுத்தேயாகும்.

குறிப்புரை :

``தேவர்`` என்றது சிவபிரானையே. முதல் மூன்று அடிகளிலும் ```தேவர்`` என்பவற்றின்பின் `தாம்` என்பது வருவிக்க. ``சிற்றம்பலம்`` என்பதில் உள்ள சிறுமை, `நுண்மை` என்னும் பொருளதாய், ``சிதம்பரம்`` என்பதில் உள்ள `சித்து` என்னும் பொருளையே குறிக்கும். உபநிடதத்துள் `தகராகாசம்` எனப்படுவதில் உள்ள `தகரம்` என்பதற்கும் `சிறுமை` என்பதே பொருளாதல் அறிக. ``திருவம்பலம்`` என்பதிலுள்ள `திரு` என்பதும் அருளையே குறிப்பது. `சித்து, அருள்` என்னும் வெளிப்படைச் சொற்களாலும்., `சிறுமை, தகரம்` என்னும் குறிப்புச் சொற்களாலும் உணர்த்தப் படுவது சிவனது சக்தியே. அதனால் ``சிற்றம்பலம், சிதம்பரம், திருவம்பலம், தென்பொது`` என்னும் இந்நான்கும் சிவன் இயல்பாய் இருக்கின்ற பரவெளியாய் நிற்பது அவனது சத்தியே என்பது போந்தது. எனவே, சிவன் நிலவுலகத்தார்க்கு அருள் புரிதல் காரணமாகத் தில்லையம் பலத்தையே தனது பரவெளியாக ஏற்று எழுந்தருளியுள்ளான் என்பதை நாயனார் இம்மந்திரத்துள் முதற்கண் உடம்பொடு புணர்த் தலாற் கூறியருளினாராயிற்று. என்று - என்றுகொண்டு. ஊரின் திசை அதன்கண் உள்ள அம்பலத்திற்குப் புணர்த்துரைக்கப்பட்டது. `பொது வும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதனால் `அசபை மேற் கூறியவாறு, இலய சிவன் முதலியோர் வடிவாதலேயன்றி` என்னும் பொருள் தோன்றிற்று. ``ஆம்` என்பதற்கு `அசபை` என்னும் எழுவாய், அதிகராத்தால் வந்தியைந்தது.
இதனால், அசபை மேற்கூறியாவறு இலயசிவன் முதலியோர் வடிவாதலே யன்றி, இந்நிலவுலகில் அதிகார சிவன் வெளிநிற்கின்ற தில்லையம்பலமாயும் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்றுள்ளதாகிய மேற்கூறிய தென்போது, மேற்கூறியவாறு ஞானமாய் நிற்க. அதன் கண் நின்று சிவபிரான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து, அந்த ஞானத்தின் வழியே விளையும் ஆனந்தமாய் நிகழும். மேலும், அத்திருக்கூத்து இடை யறாது நிகழ்ந்து, ஊழிக்காலம் முழுவதும் உலகைத் தொழிற் படுத்துதலாகிய தூல ஐந்தொழிலை இயற்றுவதுமாம். அதுவேயன்றிச், சருவ சங்காரத்தின்பின், உலகத்தை மீளத் தோற்றுவித்தற்பொருட்டுச் செய்யப்படுகின்ற செயல்களாகிய சூக்கும ஐந்தொழில்களை இயற்றும் திருக்கூத்தும் அதுவேயாம்.

குறிப்புரை :

``பொன்னம்பலம் அற்புதம் ஆமே; திருக்கூத்து ஆனந்தம் ஆமே; அத்தாண்டவமே பிரளயம் ஆகும்`` எனக்கூட்டுக. அற்புதம் - ஞானம். ``பொன்னம்பலம் அற்புதம் ஆமே`` என்றது, திருக்கூத்து ஆனந்தமாதற்குரிய இயைபுணர்த்தற்குக்கூறிய அனு வாதம். அவ்வியைபால் திருக்கூத்து ஆனந்தமாதலை உணர்த்தியவர், அதுதானே தூல ஐந்தொழில் நடன மாதலின் இயைபு உணர்த்தற்கு, அனவரத தாண்டவமாதலை, முன்னர்க் கூறினார். மூன்றாம் அடியில் ``ஆமே`` என்பதன்பின் ``அதனால்`` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``பிரளயம்`` என்றது ``ஊழி`` என்னும் பொருளதாய், ஆகுபெயரால் அதன் கண் நிகழும் தூல ஐந்தொழிலை உணர்த்திற்று. ``ஆம்`` என்பதன்பின் எல்லா இடத்தும் தேற்றேகாரம்புணர்த் தோதினார், அங்ஙனம் ஆகிநின்றதன் அருமை புலப்படுத்தற்கு. ``சங்காரம்`` என்றது அதன் முடிவை. அருமை, காண்டல் கூடாமையை உணர்த்திற்று. ``சூக்குமம்`` என்றவாறு. இச்சூக்கும நடனத்தைக் காண்பவள் அம்மை ஒருத்தியே, அவ்விடத்துப் பிறர் ஒருவரும் இல்லாமையால் தாண்டவம் ஒன்றேயாயினும், அதன் பகுதிகள் பலவாதல் பற்றி, ``தாண்டவங்கள்`` எனப்பன்மையாகக் கூறினார். ஈற்றில் நின்ற ஏகாரம் பிரிநிலையாய், ``அத்தாண்டவம்`` என்றதனோடு இயைவதாய் நின்றது.
அசபை தென்பொதுவாதலின் சிறப்புணர்த்தற்கு அப்பொது வின் சிறப்பை மேலைத்திருமந்திரத்துள் வகுத்தோதிய நாயனார், அசபை அப்பொதுவில் நிகழும் திருக்கூத்துமாய் நிற்றலின் சிறப்பை வருகின்ற திருமந்திரத்தால் உணர்த்தற்கு, அத்திருக்கூத்தின் சிறப்பை இதனால் வகுத்தோதினார் என்க.

பண் :

பாடல் எண் : 5

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

பொழிப்புரை :

மேற்குறித்த அனவரத தாண்டவ உருவாய் நிற்கின்ற ஒப்பற்ற திருவைந்தெழுத் தாவதும் ``ஓர் எழுத்து`` எனப்பட்ட அசபையேயாம். அத்தாண்டவம் உயிர்கட்கு அருள்புரியும் செயலே, அதனால், அஃது ஒப்பற்ற பரம் பொருளால் செய்யப்படுகின்றது. இப்பெருமையை உணர்த்தும் குறிப்பே அத்தாண்டவம் நிகழும் அம்பலம் பொன்மயமாய் நிற்றல்.

குறிப்புரை :

கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தாதல் நன்கறியப்பட்டதாகலின், அதனை அனுவாதமாகக்கூறி, அத்தகைய ஐந்தெழுத்தாய் நிற்பதும் அசபையே என்றார். அதனானே, அசபை கூத்தப்பெருமானது வடிவாதலும் தானே அமைந்தது. ```தனி யெழுத்தும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. இங்ஙனம் உணர்த்திய பின்னர் இயைபு பற்றியும், மேல் வகுத்துக் காட்டிய தாண்டவத்தின் சிறப்பும், அதுநிகழிடம் ஆகிய அம்பலத்தின் சிறப்பும் உணர்த்தினார் என்க.
கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தால் அமைந் திருத்தலை உண்மைவிளக்கம் முதலியவற்றான் அறிக. மேல் ``அன வரத தாண்டவம்`` என்றதனையே இதனுள்``தாண்டவம்`` எனச் சுருங்கக் கூறினாராதலின், ``தாண்டவக் கூத்து`` என்பது இருபெய ரொட்டாம். ``பொன்போற் பொதிந்து`.1 ``பொன்போற் புதல்வர்`` 2 ``பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரை`` 3 என்றாற் போல்வன வற்றால் பொன்னினது சிறப்பினை உணர்க. தற்பரத்தால் செய்யப் படுவதனை, ``தற்பரம்`` என்றார். `ஓரெழுத்` எனத் தகரவுகரமின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், அசபை கூத்தப்பெருமானது வடிவாதற் சிறப்புடைய திருவைந்தெழுத்தாயும் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமான் ஒருவனே தத்துவம் எல்லா வற்றையும் கடந்து நிற்கும் பேரொளிப் பொருளாயும், தத்துவம் எல்லா வற்றிலும் அவையேயாய்க் கலந்துநிற்பவனாயும், பிரணவ மாயும், மூவகை ஐந்தொழிற் கூத்திற்கும் முதல்வனாயும், அக்கூத்து இயற்றுங் கால் தன்னைத் தாங்கி நிற்கின்ற அம்பலமாயும் உள்ளான்.

குறிப்புரை :

``அதனால், பிரணவமாகிய அசபை மேற்கூறிய வாறெல்லாம் நிற்றல் அவனது திருவருட் சங்கற்பத்தாலல்லது தானாக அன்று`` என்பது குறிப்பெச்சம். ``அகார உகாரம்`` என்பது ``பிரணவம்`` என்னும் பொருளதாயும், ``பரஞ்சுடர்`` இரண்டில் பின்னது, ``முதல்வன்`` என்னும் பொருளதாயும் நின்றன. தராதலம் - தாங்குகின்ற இடம். தத்துவக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து.
``அசபை மேற்கூறியவாறெல்லாம் நிற்றல் தானாகவே போலும்`` என மலையாமைப்பொருட்டு ``எல்லா முதன்மையும் உடையவன் சிவன் ஒருவனேயாதலின், அசபையின் காரியமும் அவனன்றி ஆகாது`` என இதனால் ஓர் ஐயம் அறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 7

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.

பொழிப்புரை :

ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடி யாகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும். அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும். அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும்.

குறிப்புரை :

``அதனை யறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்க`` என்பது குறிப்பெச்சம்.
திருவைந்தெழுத்து,
மூலாதார மண்டலத்தில் - நமசிவாய - என்றும்,
அதற்குமேல் அக்கினி மண்டலத்தில் - நமவாசிய - என்றும்,
அதற்குமேல் சூரிய மண்டலத்தில் - வாசிய - என்றும்,
அதற்குமேல் சந்திர மண்டலத்தில் - வாசி - என்றும்
நிற்கும் என்பது இதன் தெளிபொருளாதல் காண்க. ``பிற யோகிகள் யோகத்தை அமந்திரமாகவும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன்`` என்பது குறிப்பால் உணர்த்தியவாறு, இச் சிவயோக நெறியால் பாசமும், அதன்வாதனையால் நிற்கும் பசுத்துவமும் நீங்கச் சிவமாம் தன்மையைப் பெறுவன் என்க.
மூலாதாரத்தை, ``மூலை`` என மறைபொருளாகக் கூறுதல் சித்தமுறை. அது பற்றி,
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற;
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்ற திருவுந்தியாரையும் (பா.12) நோக்குக. தற்பரம் - அதிதெய்வம். மாபரன் - பதியாய் (முழுமுதல் தலைவனாய்) நிற்கும் சிவன். ``தற்பரம், மாபரன்`` என்ற இரண்டும் ஆகுபெயராய் அவர்க்குரிய மந்திரத்தைக் குறித்தது, வாளா, ``தரா தலம்`` என்றாரேனும், `அதற்கு மேல் உள்ள தராதலம் என்றல் கருத்தாதல் அறிக. வெப்பு, இடை நின்ற இரு தராதலம், யோகம் இவையும் ஆகுபெயராய் அவ்விடத்து நிற்கும் மந்திரங்களைக் குறித்தன. யோகம் - கூடுதல். வெப்பு, இருமடியாகு பெயர்.
இதனால், `சிவயோகம் செய்வார் அறிதற்குரிய நான் மண்டல மந்திரங்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

பொழிப்புரை :

பிரணவ யோகிகட்கு அகார உகாரமாய் நிற்கின்ற பிரணவ கலைகள் சிவயோகிகட்கு முறையே திருவைந் தெழுத்தில் சிகார வகாரங்களாய் நிற்கும். (எனவே சிகார வகாரங்களின் பொருள்களாகிய அபர சிவனும், ஆதி சத்தியும் சொல்லால் உணரப் படுபவர் என்பதாம்.) சொல்லால் உணரப்படாத நிலையில் நிற்பவர் பரசிவனும், பராசத்தியுமே. அவர்களது நிலை ஐந்தொழிற்கூத்தொழிய ஞான மாத்திரமாய், மேல் நிற்பதாம். `சிவ கதி` எனவும், ``சிவானந்த மயம்` எனவும் சொல்லப்படுகின்ற பரநிலை அவர்களது நிலையேயாம்.

குறிப்புரை :

`பிரணவ யோகத்தோடு நில்லாது, சிவமந்திர யோகத்தில் செல்வோரே நாதத்தைக் கடந்து, பரநிலையை எய்துவர்` என்பதை உணர்த்துவார், அவர்க்கும் பிரணவம் பயனளிக்குமாற்றை முதற்கண் கூறினார். `அகார உகாரங்கள் சிவங்கள் ஆமே` எனக் கூட்டுக.
சிவங்கள் என்றது, `சிம், வம்` என்னும் எழுத்துக்கள் என்றவாறு. சிகார வகாரங்களைத் தனிப்பட எடுத்துக் கூறுமிடத்து இவ்வாறு விந்துவுடனாகக் கூறுதலும் உண்டு. `அறியா இடம் பரங்களே ஆம்` என்க. இடத்தில் உள்ளவர்களை ``இடம்`` எனவும், பரமாய் நிற்பவர்களை, ``பரம்`` எனவும் கூறினார். சிவனையும், சத்தியையும் வேறுவேறாக வைத்து எண்ணுதலின், ``பரங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். இரண்டாம் அடியின் இறுதியில், `அவையே` என்னும் எழுவாய் வருவிக்க. `இவை அறியா இடம்` எனவே முன்னர்க் கூறியன அறியும் இடமாதல் பெறப்பட்டது.
இதனால், அசபை சிவ யோகிகட்குச் சிவமந்திரமாய்ப் பயன்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தில் துன்பத்தைத் தரும் பாச எழுத்துக்களாகிய நகாரம் மகாரம் இரண்டும் நீங்க, எஞ்சிய மூன்றும் நின்றவழி உளதாவது இன்பமே. அம் மூன்றெழுத்துக்களில் சிகாரமும், வகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்கள் அறிவெழுத்துக்களாம். (சிகாரம் அறிவைச் செலுத்துவதும், வகாரம் செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆம்.) அவற்றுள்ளும் அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்க, சிகாரமும் வகாரமும் ஆகிய இரண்டெழுத்தும் சிகாரமாகிய ஓர் எழுத்தேயாய் விடும். (அதுவே ஆனந்தாதீத நிலையாம்.) இவ்வாறு, `சிவாய` என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தப்பேற்றினை வழங்குவனவாதலை அறிபவர் மிகச் சிலரே. அவற்றை அன்போடு அறிய வல்லவர்கட்கு ஆனந்தம், அம்பலத்தில் கண்கூடாகக் காணப்படும் அருள்நடனத்திலேயே எளிதில் உண்டாகும்.

குறிப்புரை :

``சிவாய`` எனப்பின்னர் வருதலின், முன்னர் வாளா, ``மூன்று`` என்றார். `இரண்டு அறிவு; அவை ஒன்றும் ஆகும்` என்க. `ஒன்றும்` என்னும் எதிர்மறை உம்மையும், `ஆனந்தக்கூத்தாயே` என்னும் பிரிநிலை ஏகாரமும் தொகுத்தல்பெற்றன. `இரண்டு, ஒன்று` என்பன அவ்வவ்வெழுத்துக்களைத் தொகைக் குறிப்பால் உணர்த்தின. ``சிவாய`` என்பதன்பின், என்பதை என்பது எஞ்சி நின்றது. `சிவாய` என்னும் மூன்றெழுத்தில் சிகாரம் பேறும், வகாரம் பெறுவிப்பதும், யகாரம் பெறுவானும் ஆக நிற்கும் நுட்பமும், அம் மூன்றும் உள்ளவழியே ஆனந்தானுபவம் நிகழ்தலும் நல்லாசிரியர் வழி மரபில் நின்று உணர்பவர்க்கல்லது உணர வாராமையின் ``அறிவார் பலர் இல்லை`` என்றார். மூன்றாவதாக வந்த `ஆனந்தம்` அன்பின்மேல் நின்றது, சிவயோகிகட்குத் திருவம்பலக் கூத்து ஆனந்த நடனமாதல் அனுபவமாய் விளங்கலின், ``ஆனந்தக் கூத்தாய் அகப்படும்`` என்றார்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும்`` ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை`` 1
என்ற அனுபவத்தினை இங்கு நினைவு கூர்க.
இதனால், அசபா யோகத்தின் முதிர்ந்த நிலையாகிய சிவ மந்திர யோகத்தினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பொழிப்புரை :

யோக நூல்களிலும், ஞானநூல்களிலும் வல்ல வர்கள் பொருந்துவது ``அம், சம்`` என்னும் இரண்டெழுத்திலும், ஓங் காரத்திலும் திருவைந்தெழுத்திலும் சிவனது அருளல் நடனத்தின் அன்பிலும், அவையெல்லாம் பலவகைச் சக்கரங்களில் பரவி விளங்குகின்ற முறைமைகளிலுமாம்.

குறிப்புரை :

``படுவது`` என்பன தொழிற்பெயர்கள். அவை சொற் பொருட்பின்வருநிலையாய் வந்தன. முத்தொழிலாகக் கூறுமிடத்தில் அருளல் அழிப்பில் அடங்குகின்ற முறை பற்றி, ஐந்தொழிலில் இறுதிக்கண்ணதை, ``சங்காரம்`` என்றார். ``கோணம்`` என்றது பலவகையாக வரையப்படும் சக்கரங்களை, ``இரண்டு, பஞ்சாக்கரம், பத்தி, கோணம், வாறு`` - இவைகளில் ஏழாம் உருபு விரித்துக் கொள்க. ``ஆறு`` என்பது சில இடங்களில் முதற்கண் வகரமெய் பெற்றும் வருதல் உண்டு. சங்கச் செய்யுட்களில் மகரமெய் பெற்று, ``மாறு`` என வருதல் அறியத்தக்கது. ஆறு - வழி; முறை. ``ஓங்கார பஞ்சாக் கரங்கள்`` என அஃறிணை உம்மைத்தொகை பன்மையீற்றொடு வந்தது.
இதனால், மேற்கூறிய மந்திரங்கள், தாண்டவம் இவை யோகத்திற்கும், ஞானத்திற்கும் வாயிலாதல் கூறப்பட்டது. புற வழிபாட்டிற்கும் உரியதாகப் பின்னர்க் கூறப்படும் சக்கரங்களும் இங்கு எதிரதுபோற்றிக் குறிப்பிடப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்துறை பின்னையும்
வாறே திருக்கூத்தா கமவ சனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

பொழிப்புரை :

மேற்கூறிய மூன்று மந்திரங்களும் சதா சிவ மூர்த்தியால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்களின் ஞானப் பகுதி களும், அவற்றால் அடையப்படும் சிவகதியாகிய வளப்பமான கடல் துறையும், அத்துறையில் மூழ்கினோர்க்கு ஐம்பொறி வழியிலும் அவ் வானந்தத்தைத் தருகின்ற திருநடனமும், மற்றும், ஆகமங்களின் கிரியைப் பகுதிகளும், ஞானிகட்கேயன்றிப் பிறர் அனைவர்க்கும் பொதுவாகச் செய்யப்படுகின்ற அம்பலக்கூத்தும் ஆகிய அனைத்து மாய் நிற்கும்.

குறிப்புரை :

``இவ்வாறே`` எனச் சுட்டியுரைத்தல் கருத்தாகலின், ``வாறு`` என்பன மேற்கூறிய மந்திரங்களைச் சுட்டி நின்றன. ``சதாசிவம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகையில் ஈறு கெட்டுப் புணர்ந்தது. ஞானப் பகுதிகள் தம்முள் முரணுதல் இன்மையின், ``மாறிலா ஆகமம்`` என்றது அவற்றை யாயிற்று, ``பின்னையும்`` என்பது ``மற்றும்`` எனப் பொருள் தந்து, ஞானத்தின் வேறாகிய கிரியை முதலியவற்றைக்கூறும் குறிப்புணர்த்தி நின்றது. ``புன்னையும்`` என்பது பாடம் அன்று. இதனை, `திருக்கூத்து` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``அமலம்`` என்பது ஆகுபெயரால் அதனையுடைய கூத்தினைக் குறித்தது.
இதனால், மேலானவற்றின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.

பொழிப்புரை :

``அமலம்`` எனப்பட்ட நடனமே முப் பொருள்களாயும், ஆகமங்களாயும், திரோதான சத்தி அருட் சத்திகளாயும், முப்பாசங்களாயும் நிற்கும். அந்நடனம் நிகழ்கின்ற அம்பலம் அருளே.

குறிப்புரை :

இப்பொருள்களின் இயக்கங்களாய் நிற்றல் பற்றித் திருக்கூத்தினை இப்பொருள்களாகவே கூறினார். `இயக்கம்` என்பதைப் பதியொழிந்தவற்றில் காரியம் காரணமாக உபசரிக்கப் பட்டது என்க. பதி - ஐந்தொழில் செய்பவன். `இத்தகைய கூத்து நிகழ் தற்கு இடமும் தக்கதாயுள்ளது` என்றற்கு அதனது சிறப்பினை இறுதிக் கட்கூறினார். ``ஆமிடந் தானும்`` எனற்பாலதாய எச்சவும்மை தொகுத் தலாயிற்று.
``ஆம்`` இரண்டில் முன்னது முற்று; அதனை, ``காமியம்`` என்பதன்பின்னர்க் கூட்டுக. பின்னதும், ``ஆகும்`` என்பதும் எச்சங்கள். ``ஆகும்`` என்பதில் ஆதல், எல்லையின்றிப்பெருகுதல். மூன்றாம் அடியை ``ஆம்`` என்பதை ஒழித்து ஓதின் தளை சிதைதல் அறிக.
இதனால், மேல் ``திருக்கூத்து`` எனவும், ``அமலம்`` எனவும் முறையே குறிக்கப்பட்ட ஞான நடன ஊன நடனங்களுள் ஊன நடனமும் சிறுமையுடைத்தாகாது பெருமையுடைத்தாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

``திருக்கூத்து ஆமிடம்`` என மேற்குறிக்கப் பட்ட அருளாகிய சத்தி தனக்கு ஒரு தலைவியை வேண்டாது தானே தனக்குத் தலைவியாய் நிற்பாள்; மேலும், தானே தனக்கு இன்றியமையாத பொருள்களாயும், தன்னுள்ளே சூக்குமமாயும் நிற்பாள். இனி, தனக்குத் தலைவனாகிய சிவனும் அவளே.

குறிப்புரை :

முதல் அடியில் ``தலைவனுமாய்`` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தன மலை - செல்வமாகிய மலை; இதனை `விபூதி` என்பர், பின்வந்த ``தனம்``, `தன்னம்` என்பதன் இடைக் குறை.
இதனால், மேல். `அருள்` எனப்பட்ட சத்தியது சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

பொழிப்புரை :

யாதொரு தொழிலுமின்றிச் சிவனாய் நிற்றலே யன்றி ஐந்தொழில் செய்யும் பதியாயும் நிற்கின்ற முதல்வனது தன்மையையும், அம்முதல்வனது தொழில்களில் பிறவற்றின் பயனையன்றி, இறுதித் தொழிலாகிய அருளலின் பயனையும் ஏற்கும் நல்ல கொள்கலமாகிய பக்குவம் வாய்ந்த உயிரினது தன்மையையும் மகரந்தங்களாக உதிர்த்து மலர்கின்ற திருவாய்மலரையுடைய சிறந்த ஞானாசிரியனாயும் நிற்பன சிவனது இரண்டு திருவடிகளே.

குறிப்புரை :

தற் பரம் - தனக்கு (ஆன்மாவிற்கு) மேலானவன். ஆசிரியன் தன்னைச் சிவமாகப் பாவிக்கும் பாவனையில் நின்றே உபதேசித்தல் பற்றி இங்கு, ``தன்`` என்று ஆசிரியனையே சுட்டி, `அவனுக்கு மேலானவன்` என்றார். அபக்குவிகட்கு மேலாய் நிற்றல் பற்றிப் பக்குவியை, ``தலைவன்`` என்றார். ``தாதவிழ்`` என்றதை அவ்வடியின் முதற்கண்வைத்து உரைக்க. அது, ``ஞானத்தலைவன்`` என்னும் முதற்பெயரோடே முடியும். மூன்றாவதாக வந்த ``தலைவன்`` என்பது, ``ஞானாசிரியருள் மேம்பட்டவன்`` எனப் பொருள் தந்தது. இறுதியில் உள்ள `நின்ற` என்பது முற்று. ``தானே`` என்பது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், தடத்த நிலையில் உள்ள சிவனுக்குத் திருவடிகளாய் உள்ளது அவனது `அருள்` எனப்படும் சத்தியே என்பது குறிக்கப் பட்டது. இதனது பயன், வருகின்ற மந்திரம் முதலியவற்றுள், ``இணையார் திருவடி`` என்பனபோலக் கூறும் வழக்கினது உண்மையை உணர்தல்.

பண் :

பாடல் எண் : 15

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

பொழிப்புரை :

சிவனது, இணைதல் பொருந்திய திருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும், பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும், மூல எழுத்துக்களாகிய (மாதுருகாட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும், ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.

குறிப்புரை :

இணை, முதனிலைத் தொழிற்பெயர். `இணையாகப் பொருந்திய` என்றும் ஆம், `இறைவனது ஞான சத்திகிரியா சத்திகளே அவனது இரண்டு திருவடிகள்` என்பது உணர்த்துதற்கு, ``இணையார் திருவடி`` என்றார். ``இணையார் கழல்`` மூன்றும் அடையடுத்த ஆகுபெயர்களாய் நின்றன. எனவே, இணைதல், கழல் என்னும் அணியைச் சிறப்பித்து நின்றனவாம். அங்கு இணைதல், அறியப் படுதல். ``ஏழு`` என்பதும் ஆகுபெயராய் அத்துணைக் கோடியை உணர்த்திற்று. ஆயிரம், பன்மை குறித்தது.
இதனால், எல்லாவற்றிலும் நீக்கம் அற நிறைந்து நிற்கின்ற சிவ சக்திக்குச் சிறப்பிடம் மந்திரங்கள் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.

பொழிப்புரை :

மந்திரங்கள் அளவற்றனவாய் நின்று அளவற்ற உயிர்களில் நிற்பினும் அவை அனைத்தும் ஐம்பதெழுத்திற்குள்ளும், `ஏழு கோடி` என்னும் வகைக்குள்ளும், `ஏழு, இரண்டு` என்னும் வடிவத்துள்ளும், அடங்கி நிற்கும் முறைமை அறியத் தக்கது.

குறிப்புரை :

``எண்ணிலா மந்திரம் ஏழாயிரத்துயிர் ஏழாயிரமாய்`` எனக் கூட்டுக. `எழுவகைப் பிறப்பிலும் பலவாய் உள்ள உயிர்`` என்றற்கு ``ஏழாயிரத்துயிர்`` என்றார். ஏழாயிரத்துயிர்க்கும்` என்னும் நான்கனுருபும், முற்றும்மையும் தொகுத்தல் பெற்றன. ``இருபதாய் முப்பதாய்`` என்றது, `ஐம்பதாய்` என்றவாறு. மாதுருகாட்சரங்களை ஈற்றிலுள்ள க்ஷகாரத்தைக் கூட்டி `ஐம்பத்தொன்று` என்றல், கூட்டாது விடுத்து `ஐம்பது` என்றல் ஆகிய இருமரபுகளும் உள்ளன என்க. உயிர்களைக் குறிப்பதாய் இரண்டாம் அடியில் வந்த ``ஏழாயிரத்தும்`` என்பது சொற்பொருட் பின்வருநிலை. `எல்லாப் பொருள்கட்கும் மந்திரம் உண்டு` என்பதைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தின் இரண்டாவது அதிகரண பாடியத்திற் காண்க.
கோடி - இறுதி. மந்திரங்கள் அனைத்தும் எழுவகை இறுதி உடையனவாம். அவை:- `நம:, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வௌஷட், பட், ஹும்` என்பன. (ஹும், பட்` - இரண்டும் ஓரிடத்தே இணைந்தும் வரும். அவ்விடத்து, `ஹும் பண்` என நிற்றலும் உண்டு.) `ஏழு, இரண்டு` எனப்பட்டவை பஞ்சாக்கர பேதங்கள். மேல் ``எட்டெழுத்து`` என்றதில் வித்தெழுத்து மூன்றனுள் இறுதி நின்றதை நீக்கி, இங்கு ``ஏழு`` என்றார். அவ்வாறு நிற்றலும் உண்மை பற்றி. இரண்டு, சிகார வகாரங்கள். `அறியத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், மந்திரங்கள் விரிந்தும், ஒடுங்கியும் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

பொழிப்புரை :

உண்மையில் உள்ள மந்திரங்கள் அளவற்றன. எந்தப் பொருட்கு மந்திரம் இல்லை! அனைத்து மந்திரங்களும் சிவனது திருமேனியே. அவற்றின் உண்மை இதுவே.

குறிப்புரை :

முன்னிரண்டடிகள், ``கற்றது கைமண்ணளவு; கல் லாதது உலகளவு`` 1 என்பதுபோல, அறியப்படாது பல மந்திரங்கள் உள என்பது உணர்த்தின. சிவனுக்குத் திருமேனியாவது அவனது சத்தியேயாகலின், மூன்றாம் அடி மந்திரங்கள் சத்தியின் வடிவமாதல் குறித்ததாம். அதனானே, மந்திரங்கள் அவனது உறுப்புக்களில் நியசிக்கப்படுவதற்குக் காரணமும் கூறியதாயிற்று. `மந்திரங்கள் சிவ சத்தியே` என்பதனை ஈற்றடி உணர்த்திற்று. மூன்றாம் அடியில், `மந்திரம்` என்னும் வட சொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
இதனால், மேல் `சத்தி மந்திரமாய் நிற்கும்` எனச் சத்திமேல் வைத்துக் கூறியது, `மந்திரங்கள் சத்தியாம்` என மந்திரங்களின்மேல் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

பொழிப்புரை :

சிவன், தானே தான் ஆடத்தக்க கூத்து வகைகளை வகுத்துக்கொள்வான்; பின்பு அக்கூத்துக்களை மந்திரங்களையே வடிவாகக்கொண்டு ஆடுவான். அக்கூத்து வகைகளுள் சத்தியின் கூத்திலும் தான் நிறைந்து நிற்பான். சில கூத்துக்களைத் தன்னுடையன வாகவே ஆடி நிற்பான்.

குறிப்புரை :

`அவனது நிலையை அறிபவர் யார்` என்பது குறிப் பெச்சம். ``அகார, உகாரம்`` என்றது அவற்றை அடியாகக் கொண்டு எழும் மந்திரங்களை உணர்த்திற்று. `ஹ்ரீம்` என்பது சத்தி பீஜம் ஆதலின் அத்தத்துவக் கூத்து சத்தியினுடையதாயிற்று. ``ரீங்காரம்`` என்றது, `அக்கூத்திற்கு மூலம்` என்றவாறு. ``தனி நடம்`` என்றது, தன்னுடை யவற்றை. மூன்றாம் அடியை அகரச்சுட்டின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``சிவன் திருமேனி`` எனக் கூறப்பட்டதில் இடம்பெற்றுநின்ற சிவனது பெருமை கூறப்பட்டது. சத்தியின் பெருமை மேலெல்லாம் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும்
நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

பொழிப்புரை :

``தனிநடம்`` என மேற்குறிக்கப்பட்ட சிவ நடனம் இரு வகைத்து. ஒன்று இன்பத்தையே தரும்; மற்றொன்று துன்பத்தையே தரும். துன்பத்தைத்தருவது மறைத்தலைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும்; இன்பத்தைத் தருவது விளக்கத்தைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும். பின்னதனால் விளைகின்ற நலம் செம்பு பொன்னானது போல அதியற்புதம் உடையதாகும்.

குறிப்புரை :

பிரிநிலை ஏகாரங்கள் பிரித்துக் கூட்டப்பட்டன. நளினம்- இன்பம். நமனது செயலாகிய கொல்லுதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். அதனின் மிக்க துன்பச்செயல் இன்மையின் அதனைக் கூறினார். இன்பம் வீடும், துன்பம் பந்தமும் ஆதல் வெளிப்படை. இக் கூத்து இரண்டும் முறையே, `ஞான நடனம், ஊன நடனம்` எனப்படும். மறைத்தலைச் செய்யும் எழுத்துக்கள்நகார மகாரங்கள். அவை திரோதான சத்தியும், மலமுமாய் நிற்பனவாம். விளக்கத்தைச் செய்யும் எழுத்துக்கள் சிகார வகாரங்களாம். அவை முறையே சிவமும், அருட்சத்தியுமாய் நிற்பன. இவற்றான் அமையும் இரு வேறு வடிவங்களை ``ஆடும் படி கேள்``, ``சேர்க்கும் துடி சிகரம்`` என்னும் உண்மைவிளக்க வெண்பாக்களால் அறிக. `நகை செய்யும் மந்திரம்` என ஓதுதல் பாடம் அன்று.
செய்யுட்கு ஏற்ப ``மந்திரம், லிங்கம்`` என்றவற்றை வேறு வேறிடத்து வைத்து ஓதினாராயினும், இரண்டையும் ஈரிடத்தும் ஒருங்கோதுதல் கருத்தென்க. உருவத் திருமேனியும் `வியத்தலிங்கம்` எனப்படுதல் அறிந்துகொள்க. `ஒன்று நகை செயா மந்திரம்` எனவே, `மற்றொன்று நகை செயும் மந்திரம்` என்பது தானே விளங்கிற்று. ``இரண்டு`` என வந்தவை மூன்றில் முதலது பயனிலையாயும், ஏனையவை ஏழன் உருபேற்ற பெயராயும் நின்றன. உருபேற்றுத் தொடர்ந்த பெயர்களை நான்காம் அடியிலும் கூட்டிப் பொருள் கொள்க. `செம்பு, பொன்` என்னும் உவமைகள் முறையே உயிர்க்கும், சிவத்திற்கும் ஆயின.
இதனால், ``வாறே சதாசிவம்`` என்ற மந்திரத்துள் குறிக்கப் பட்ட இருவகை நடனத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

பொழிப்புரை :

மேற்கூறிய, செம்பு பொன்னாவது போன்ற அதிசயப்பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைத்தற்பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும் செம்பொன் மய மான திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.

குறிப்புரை :

இறுதியில் உள்ள ``செம்பு`` `செம்மை` என்றவாறு, `ஷ்ரீயும், கிரீயும் எனச் செம்பு பொன்னாகும், அது திருவம்பலம் ஆதலால்` என்க. `எனவும்` என்னும் எச்சவும்மை தொகுத்தல். `ஆதலால்` என்பது சொல்லெச்சம்.
இதனால், மேற்கூறிய ஞானநடனத்தின் பயனை எய்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித்
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

சக்கர வழிபாட்டில் திருவம்பலம் அமைதற்கு அச்சிறப்பினதாகிய சக்கரத்தை நெடுக்கில் ஆறு கீற்றும், குறுக்கில் ஆறு கீற்றும் கீறி இருபத்தைந்து அறைகளாகத் தோற்றுவித்து மந்திர எழுத்துக்களை உரிய முறையால் அவ்வறைகளில் பொறித்து வழிபட்டுச் செபிக்க.

குறிப்புரை :

`மந்திரமாவது இது` என்பது வருகின்ற பாட்டிற் கூறப்படும். ``திருவம்பலமாக`` என்பன சொற் பொருட் பின்வரு நிலை. `பொறித்து வழிபடுக` என்பது சொல்லெச்சம். `பொறிக்க` என்றே ஒழிதலும் ஆம்.
இதனால், நடனம் நிகழும் அகண்டமான திருவம்பலத்தைக் கண்டமாகக் கண்டு வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறையால் ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும், தொடரஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லையாகும். அதற்குமுன்னே அவ்வோதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.

குறிப்புரை :

அடுக்கு, பன்முறை கூறுதலை உணர்த்திற்று. பேர், முதனிலைத் தொழிற்பெயர். பேர்தல், உயிர் ஓருடலை விட்டுப் பிறிதோர் உடலைத் தேடிச் செல்லுதல். அஃது இல்லை என்றது, `வீடடையும்` என்னும் பொருட்டாய் நின்றது. `பிறப்பில்லை` என்று மேற்கூறியதனை எதிர்மறை முகத்தான் வலியுறுத்தவாறு.
இதனால், மேற்கூறிய சக்கரத்தில் பொறித்தற்கு உரிய மந்திரமும், அதன் சிறப்பும் பயனும் கூறப்பட்டன. இவ் விரு மந்திரங்களால் சக்கர வழிபாடு பொதுவாக விதிக்கப்பட்டது; விளக்கம் வருகின்ற அதிகாரத்துட் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 23

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

பொழிப்புரை :

பொன்போலச் சிறந்ததாகிய மேற் சொன்ன மந்திரம் வாயாற் சொல்லப்படாது. அதனால், அது மேற்கூறிய சக்கரத்துள் குங்குமத்தால் பொறிக்கப்படும். அங்ஙனம் பொறிக்கப் பட்ட அது தூப தீபங்களை ஏற்று மகிழுமாயின், அவ்வாறு மகிழ்விப் போரது உடம்பு பொன்போல ஒளிவிட்டு விளங்கும். மேலும், அதனை நன்கு வழிபட வல்லவர்க்கு அதனால் விளையும் பெரும் பயன், சிவபெருமானது பொன்போலும் திருவடியை அடைதலாகும்; அஃதாவது, `சிவனது அருள் கைவரப்பெறுதல் கூடும்` என்பதாம்.

குறிப்புரை :

பொறி, முதனிலைத் தொழிற் பெயர். கிஞ்சுகம் - முள்முருக்கு. அஃது அதனோடு நிறத்தால் ஒத்த குங்குமத்திற்கு உவம ஆகுபெயராயிற்று. குங்குமத்தால் எழுதுதல் வெட்டுவாயின்மேல் என்க. ``உடம்பு`` என்பதை, ``பொன்னாகும்`` என்பதன்பின்னர்க் கூட்டி வேறு தொடராக முடிக்க. `பயன்` என்பது சொல்லெச்சமாக எஞ்சிநின்றது.
இதனால், மேலதன் வழிபாட்டுமுறை சிலவும், அதன் பயன்களுள் முதலதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 24

பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

பொழிப்புரை :

திருவருள் கைவரப் பெறுதலால் சிவனுக்கு மைந்தராம் தன்மை உளதாகும்; `செம்பு பொன்னாதல் போல்வது` என மேலெல்லாம் சொல்லிவந்த சிவமாம் தன்மையும் கிடைக்கும். அதனால், மாயாகாரிய உடம்பும் சிவனது அருள்மயமான உடம்பாய்விடும். ஞான நடனத்தின் உண்மை தெளிவாகும்.

குறிப்புரை :

இதனுள்ளும் பொருட் பின்வருநிலையணி வந்தமையின், முதலடியில் `காணலாம்` என ஓதுதல் பாடம் அன்று. ``புத்திரர்`` என்பது பொருளாகுபெயராய் அவரது பண்பின்மேல் நின்றது. அங்ஙனமன்றாயின், `உண்டாகும்` என்பதனோடு இயை யாமை அறிக. `ஆணையாலே` என உருபு விரிக்க. ஈண்டும் ``செம்பு பொன்னாயிடும்`` என ஒட்டணியாக ஓதியது, `இவ்வுலகில் உண்மை யாகவே செம்பைப் பொன்னாக்குதல் முதலிய சித்திகளாகிய இடை நிலைப் பயனும் கூடும்` என்பதும் தோன்றுதற்பொருட்டு. புத்திரராந் தன்மை பெறுதற்கு முத்தினாலான சிவிகை, சின்னம் முதலிய சிறப்புக்களைப் பெற்று ஞானாசிரியத் தன்மைபெற்று விளங்கிய ஆளுடைய பிள்ளையாரிடத்தும், செம்பு பொன்னாவதற்குச் செங்கல் பொன்னாகவும், ஆற்றிலிட்ட பொன் குளத்திற் கிடைக்கவும், தம்மை வழிபட்ட பெருமிழலைக் குறும்பர்க்குச் சிவயோகம் எளிதில் கூடவும் பெற்று விளங்கிய ஆளுடைய நம்பிகளிடத்தும் எடுத்துக்காட்டுக் கண்டுகொள்க. அவ்விருவரையும் திருவருள் கைவரப் பெற்றமை மாத்திரத்திற்கு ஒப்புமைகொள்க. நான்காம் அடியில், `பொற்பாதம் சொல்லும்` என இயையும். ``நடஞ் சிந்தனை`` என்பது தொழிற் பெயரொடு தொக்க இரண்டாவதன் தொகை. ``சிந்தனை`` என்பது அதன் முடிவின்மேல் நின்றது.
இதனால், திருவருளால் மக்கள் எய்தும் பயன்கள் வகுத்தோதப்பட்டன.

பண் :

பாடல் எண் : 25

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவாள் நயந்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் இருபொருள் கொள்ள நிற்பது) ஓர் உரை:- தான் நிற்கும் உடல் துன்பம் உடையதாயும், மற்றோர் உடம்பு இன்பம் உடையதாயும் எவ்வகையாலேனும் தோன்றினால் நிற்கும் உடம்பை விட்டுத் தான்விரும்பிய வேறோர் உடம்பில் புகுந்து இன்புறலாம்; இல்லறத்தில் நிற்க விரும்பினால் நல்ல மனையாள், தன்னை விரும்பி விரைவில் வந்து அடைவாள்; மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் கொடிய நாகமும் தான் சொல்லிய அளவில் கட்டுண்டு அகலும். மேற்சொல்லிய திரு வம்பலச் சக்கரத்து வழிபாட்டின் மறைபொருள் (இரகசியம்) இது.

குறிப்புரை :

``ஒரு கூடு`` என்பதை எடுத்தல் ஓசையாற் கூறி இப்பொருள் காண்க. இப்பயனுக்கு எடுத்துக்காட்டாக இந் நாயனாரையே கொள்ளலாம். `மனம் சொல்லும் ஒரு கூடு` என்க. ``பாசம்`` என்பது `கட்டு` என்னும் பொருளதாய் `கட்டுட்பட்டு` எனப் பொருள் தந்துநின்றது. சுடர், ஆகுபெயர். ``திருக்கூத்து`` என்றது தானியாகு பெயராய் அது நிகழும் இடத்தின்மேல் நின்று, இடஇயை பால் மேற்குறித்த சக்கரத்தைக் குறித்தது. சூக்குமம் - மறைப் பொருள்.
மற்றோர் உரை:- சிறப்பித்துச் சொல்லப்படும் திருவருளாகிய அவ்வுறைக்குள்ளே தனது சீவபோதமாகிய வாள் புகுந்து அடங்கி நிற்றலால், சிவானந்தத்தைத் துய்க்கலாம். அப்பயன் உண்டாகும்படி திரோதான சத்தி நீங்க அருட்சத்தி தன்னை விரும்பி வந்து விரைவில் தன்னிடத்தில் பதியும். திருவைந் தெழுத்தை ஓதுதலானே கொடிய நாகம் போல்வதாகிய ஆணவம் வாதனையும் கெட்டுப் பற்றறக் கழியும். (நான்காம் அடிக்கு மேற்கூறியவாறே உரைக்க.)
இங்கு, ``கூடு`` என்றதை, ``கூட்டில் வாள் சார்த்தி நின்றுந் தீபற`` என்னும் திருவுந்தியார் (30) பகுதியொடு வைத்து உணர்க. தனது போதம் புகுதலை ஒற்றுமை பற்றித் தானே புகுதலாகக் கூறினார். அருட்சத்தி என்பது விளங்குதற்கே, ``நல்ல மடாவள்`` என்றார். பாசப் பாம்பு, உருவகம். இவ்விருவகைப் பயனையும் அவரவர் தகுதிக்கு ஏற்பக் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு புத்தி, முத்தி இரண்டனையும் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல்
சூக்கும மான வழிஇடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதா னந்தமே.

பொழிப்புரை :

மறைவாகச் சொல்லப்படும் மொழியாகிய மேற் சொன்ன மந்திரத்தை இடைவிடாது செபித்தால் உங்கள் தலைமேல் உள்ள நுண்ணிய வழியை அச் செபத்திற்கு இடையே காணுதல் கூடும். அதனால், முன்னே முகந்து கொண்டதனால் நுண்ணியதாய்ப் பொருந்தி நிற்கின்ற பிராரத்த வினையையும் அழிக்க இயலும். அதனை அழிக்கவே, உயிரிடத்து விளைவதாகிய சிவானந்தம் வெளிப்படும்.

குறிப்புரை :

வழி, பிரமரந்திரம். இது ஆதார யோகத் தினின்றும் நிராதாரத்திற்குச் செல்லும் வழியாதல் பற்றி ``வழி`` எனப் பட்டது. சஞ்சிதம் ஞானிகட்கு முன்பே கெடுக்கப்பட்டமையானும், யோகி யர்க்கு இனி வேறோராற்றால் கெடுக்கப்படுமாகலானும் இங்கு ``வினை`` என்றது பிராரத்தத்தையே. அது முகந்துகொள்ளப்பட்ட நிலையில் சூக்குமமாய் நின்று, பயன் தருங்கால் தூலமாய் வந்து பொருந்தும். ஆதலின், ``சூக்குமமான வினை`` என்றார். இம் மந்திரம் ஞானியர்க்கும், யோகியர்க்கும் பொதுப்பட ஓதப்பட்டமையின், `வழி காணுதல், வினையைக் கெடுத்தல்` என்பவற்றை உடனே வீடுபெற விரும்புவார்க்கு, தலையைப் பிளந்துகொண்டு உடலை விட்டு நீங்கும் வழியாகவும், பிராரத்தத்தை நசிக்கச் செய்தலாகவும், சீவன் முத்தர்க்கும், யோகியர்க்கும் முறையே ஆதார யோகத்திலிருந்து நிராதார யோகத்திற் செல்லும் வழியாகவும், பிராரத்தத்தை மெலி வித்து உடல்ஊழாய் ஒழியவும், யோகத்தைத் தடுக்காது நீங்கவும் செய் தலாகவும் விளக்க. சிவானந்த வெளிப்பாடும் முறையே பரமுத்தி யிலும் சீவன் முத்தியிலும், யோக சமாதியிலும் நிகழ் வனவாகவும் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு வீட்டு நெறி நிற்பார்க்கும் உதவுவதாதல் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட
ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும்
ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.

பொழிப்புரை :

`சிவானந்தம் ஒன்றே ஆனந்தம்` என்று உணர, அவ்வானந்தம் விளைவதாம். `ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் என்னும் ஐந்தெழுத்துக்களை அச்சக்கரத்தில் இட்டுச் செபிக்க அவ்வானந்தம் மிக விளையும். அந்த ஐந்தெழுத்துத் தொடரே` திருவைந்தெழுத்துத் தொடருமாம். இனி, அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம்` என்னும் ஐந்தைத்தாமும் மேற்கூறிய `ஆ` முதலிய ஐந்திற்கு ஈடாகவும், திருவைந்தெழுத்திற்கு ஈடாகவும் கொள்ளலாம்.

குறிப்புரை :

முதலடியில் இரண்டாவதாக நின்ற ஆனந்தம்`, சிவானந்தத்தைச் சிறப்பு வகையாற் குறித்தது. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. மூன்றாம். அடியில் பெயர்ப் பயனிலையாய் நின்ற அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. `ஆ` முதலிய ஐந்தும் மகாரத்தைக் கூட்டியும், கூட்டாதும் ஓதப்படும் என்பது உணர்த்துதற்கு முதல்நான்கனை மகாரம் இன்றியும், இறுதியதை மகாரம் கூட்டியும் ஓதினார் `அது அஞ்சும் ஆயிடும்` என மாற்றிக்கொள்க. ஈற்றடியில் நின்ற ``ஆனந்தம்` அதனைத் தருவதாய மந்திரத்திற்கு ஆகி, எழுவாயாய் நின்றது. இவ்வடியில் மூன்றாவதாக நிற்கும் எழுத்தையும் `அம்` என ஓதுதலும், இரண்டாம் நான்காம் அடிகளிலும் அடுக்கிவர ஓதுதலும் பாடமாகா.
இதனால், மேற்கூறிய வழிபாட்டில் செபித்தற்கு உரிய மந்திரங்கள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம்
மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும்
மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.

பொழிப்புரை :

மேலை மந்திரத்தில் உயிரெழுத்துக்களாகவும், திருவைந்தெழுத்தாகவும் சொல்லப்பட்ட இருவகை மந்திரங்களும் சிவனது திருமேனிகளாய் நிற்றற்கு உரியனவாம். அவற்றைப் பிழை யின்றி ஓதுதலைச் செய்தால், சிவனது திருமேனி திரிபின்றி அமையும். இனி அவ்விருவகை மந்திரங்களையும் இருவேறு வகையாக மாற்றி உச்சரிக்க, இறைவனது இருவகை நடனங்களும் அமைவனவாம்.

குறிப்புரை :

``அவிகாரி`` என்றது பன்மை ஒருமை மயக்கம். மேலை மந்திரத்தில் தமிழ் உயிர் நெட்டெழுத்து ஏழில் `ஐ, ஔ` என்னும் இரண்டை ஒழித்து ஏனைய ஐந்தும் முறைப்படியே கூறப் பட்டன. அதனால், அவை மேல், ``வாறே சிவாய நம`` (888) எனக் குறித்த முறையில் அமைந்த மந்திரத்தில் முறையே சிகாரம் முதலிய ஐந்திற்கும் ஈடாக அமைதல் அறியப்படும். அதனானே, மேலை மந்திரத்து இறுதி அடியிற் சொல்லிய `அம்` முதலிய ஐந்தும் அம் முறையில் அமைதலும் பெறப்படும். படவே, இம்மந்திரத்து மூன்றாம் அடியில் ஓதியவாறு உச்சரிக்க ஞான நடனமும், நான்காம் அடியில் ஓதியவாறு உச்சரிக்க ஊன நடனமும் நிகழ்வனவாம் என்க.
மேலை மந்திரத்துள் இரண்டாம் அடியிற் கூறியன தமிழ் கூறுவார்க்காகவும், நான்காம் அடியில் கூறியன ஆரியங் கூறுவார்க் காகவும் என்க. பரதகண்டத்தில் இவ்விரண்டல்லாத பிறமொழிகள் சிறப்பிலவாதல் அறிக. இவை இருதிற எழுத்துக்களும் சங்கேத மாத்திரமாய் நிற்பனவன்றிச் சொற்கு உறுப்பாய் எழுத்தாந் தன்மை யிலவாகலின், இருதிறத்தாரும் `சிவாய நம` என்பதை ஓதுதலே சிறப்பு என்பது கருத்து.
இதனுள், ஞானநடன மந்திரத்தில் ஆன்மஎழுத்தை முன்னர் எடுத்து அது இறையெழுத்தோடு புணரவும் இறை அருளோடு புணரவும், அருள் திரோதானத்தோடு புணரவும், திரோதானம் மலத்தோடு புணரவும் வைத்தல் அறிக. இறுதியில் நின்ற மல எழுத்து, பின் ஆன்மாவோடு புணரும்நிலை உள்ளதாயினும், அது வேறு உருவாகலானும், ஆன்மா இறையை நோக்கிச் செல்லுதலானும் அவ்விடத்து மலம் ஆன்மாவைப் பற்ற மாட்டாமை அறிக.
இனி ஊன நடன மந்திரத்தில் அருளை முன்னர் எடுத்து அது மலத்தோடு புணர்ந்து தோன்றாது நிற்கவும், அந்த மலம் ஆன்மா வோடு புணரவும், ஆன்மா சிவத்தோடு புணரினும் அந்தச் சிவம் அருளோடு புணராது திரோதானத்தோடு புணர்ந்து பந்தத்தை நிகழ்த்துவதாகவும் வைத்தல் அறிக. இவ்இருமுறையும் மேலை மந்திரத்துட் கூறிய மூவகை எழுத்திற்கும் கொள்க. ``என்னும்`` என்பதும், ``கூத்தாம்`` என்பதும் ஏனை இடங்களிலும் சென்று இயையும்.
இதனால், மேற்சொல்லிய மந்திரங்கள் இருவகை நடனத் திலும் நிற்குமாறு கூறப்பட்டது. `சுத்த மானதம்` என்னும் அறிவாற் கணித்தலாகிய ஞானநிலைக்குத் திருவைந்தெழுத்து ஒன்றே மந்திர மாகவும் அஃது ஒன்றே அந்த ஞானத்தின் படிநிலைக்கு ஏற்ப வேறு வேறு நிலையில் நிற்பதாகவும் சொல்லப்படுமாகலின், இங்குக்கூறிய இம்முறைகள் வழிபாட்டு நிலையில் நின்று பயன்பெறுதற்கு உரியன என உணர்க.

பண் :

பாடல் எண் : 29

கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம் மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப் படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்குமாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப் படும்.

குறிப்புரை :

தேற்றேகாரங்களைப் பிரித்துத் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ஏற்புழிக் கோடலால் ஈற்றில் உள்ள கூத்து ஊன நடனமாகவும் ஏனைய மூன்றும் ஞான நடனமாகவும் கொள்ள நிற்றல் அறிக. கூறியது கூறலாகவும், பின்னர்த் திருவைந்தெழுத்துக் குறிலாக வருவதனோடு இயையாதனவாகவும் மூன்றாம் அடியிலும் உயிரெழுத்துக்களை நெட்டெழுத்தாக ஓதுதலும், நான்காம் அடியில் முதல் உயிரைக் குற்றெழுத்தாக ஓதுதலும் பாடம் ஆகாமை அறிந்து கொள்க. `சிவாயநம` என்பதைத் திரும்பத் திரும்ப ஓதினால் மகாரம் சிகராத்தோடு புணரும் நிலை உண்டாகும், உண்டாயினும் அதனால் தீங்கில்லை என்றற்கு `மசி` என்பதையும் முதலடிக்கண் கூறினார். `வாயிடும்` என்பது பாடம் அன்று.
திருவைந்தெழுத்தைப் பீசங்களோடு கூட்டாதது `நிர்ப்பீசம்` என்றும், கூட்டுவது `சபீசம்` என்றும் சொல்லப்படும். சபீசம் உயர்ந் தோர்க்கே உரியன; நிர்ப்பீசம் பிறர்க்கும் உரியன. இப் பீசங்களை மேலை மந்திரத்திற் கூறிய முறையாற் கூறாது வேறுபட ஓதினார், அவை திருவைந்தெழுத்தோடு கூட்டப்படுங்கால் முன்னவை இரண்டினும் பார்க்கப் பின்னவை மூன்றும் திருவைந்தெழுத்தோடு இயையக் கூட்டுதல் பெரும்பான்மை என்பது உணர்த்துதற்கு. உகார ஊகாரங்கள் `ஔ` என்னும் நெட்டெழுத்தாய்ப் பரிணமிக்கின், அதுவும் பெரும்பான்மையதாம் என்க. கோள் ஒன்றும் - பீசங்களைத் திருவைந்தெழுத்துக் கொள்ளுதளைப் பொருந்தும். முதலடி ஒழிந்த அடிகளில் ``கூத்தே`` என்பன கூனாகி நின்றன.
இதனால், திருவைந்தெழுத்தைச் சபீசமாகக் கூறும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட
ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே.

பொழிப்புரை :

ஒன்று முதலாவது; சிவதத்துவம், இரண்டு இரண்டாவது; சத்தி தத்துவம், ஓர் ஒன்று, சத்தி தத்துவத்தின்பின் அடுத்தடுத்து நிற்கின்ற ஒன்றும், ஒன்றும்; சாதாக்கிய தத்துவமும், ஈசுர தத்துவமும். ஒன்றினில் மூன்று. ஈசுர தத்துவத்தை அடுத்துள்ள சுத்த வித்தியா தத்துவத்தில் `அரன், அரி, அயன்` என்பவரது அதிட்டானங் களாகிய மூன்று. ஓர் ஏழு, இந்த ஏழும். ஒன்பது, இவற்றுடன் இவற்றிற் கெல்லாம் மேலே உள்ள நாத விந்துக்கள் கூடிய அனைத்துத் தத்து வங்களும். ஒன்றினால் ஆட - அவை அனைத்தும் அங்ஙனம் ஆடல் மூர்த்தமாகிய ஒன்றினாலே ஆடும்படி இறைவன் மன்றினில் மாணிக்கக் கூத்து ஆடினான்.

குறிப்புரை :

``ஒன்பது உடனாட`` என்பதை, ``ஒன்றினால் ஆட`` என்றதற்கு முன்னே கூட்டுக. `இறைவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போல வரம்பறிய லாகாத தாண்டவம். ஒன்பது தத்துவங்களும் ஆடுதல், (செயற்படுதல்) சம்புபட்சமாயாதல், அணுபட்சமாயாதல் அவ்வப்பெயர் பெற்று நிற்கும் முதல்வராகலாம் ஆதலின், ``ஆட, ஆட`` என வந்தன பலவும் அவர்கள் ஆடலின் வழியாடலேயாம் என்க. எனவே, அனைத்து முதல்வர்களது ஆடற்கும் இவ் ஒரு மூர்த்தத்தின் ஆடலே முதலாதல் அறியப்படும். `மாகேசுர மூர்த்தங்களில் ஒன்றாக எண்ணப்பட்ட வடிவத்தையுடைய கூத்தப்பிரானின் வேறாய்ச் சிவதத்துவத்தில் இலய நிலையில் நிற்கும் கூத்தப் பிரான் ஒருவர் உளர்` என மகுடாகமம் கூறுகின்றது.
தத்பரம் சிவதத்வம் ச பூஜயேத் ஞான மூர்திகம்
ஸர்வகாரண தேவேசம் த்யாத்வா தாண்டவ மீச்வரம்
ஆவாஹயேத் ததோ தேவம் புஷ்பஹஸ்தம் ஸுகாஸந:
இவர் இருக்கும் இடமே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட பரம வியோமம் என்பதும், பிருகதாரணியத்தில் சொல்லப்பட்ட இருதய ஆகாசம் என்பதுமாம் எனவும், இதுவே தமிழில் திருச்சிற்றம்பலம் எனப்படுகின்றது எனவும் இதனால், மேற்கூறிய இடங்களில் முறையே `பிரபஞ்ச அத்தியட்சகர்` என்றும்; `ஈசானர்` என்றும் சொல்லப் பட்டவர் சிவதத்துவத் தாண்டவேசுரரே எனவும் கொள்ளப் படுகின்றன. ஆதலால், இங்கு ``மன்று`` (திருச்சிற்றம்பலம்) எனப் பட்டது பரமவியோமமும் அதன்கண் ஆடுவார் சிவதத்துவத் தாண்டவேசுரரும் எனவே கொள்க. ``அருமறைச் சிரத்தின் மேலாம் - சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம்`` 1 என்ற சேக்கிழார் வாக்கும் இங்கு நினைவுகூரத்தக்கது.
சிற்பி