இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்


பண் :

பாடல் எண் : 1

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. 

பொழிப்புரை :

ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் - உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.

குறிப்புரை :

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்
தாங்காது மன்னோ பொறை. -குறள், 990
என்றவாறு உலகம் சான்றாண்மை குன்றி, அழிவெய்தும் நிலை உண்டாகின்றபொழுது, தனது திருவருள் காரணமாகத் தக்காரை நிலவுலகில் விடுத்து அதனைச் செந்நெறி நிற்கச் செய்பவன் சிவபெருமானே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்க உண்மை என்பது நாயனாரது திருவுள்ளக்கிடை என்பது இதன்கண் இருபொருள் படவைத்த சொற்குறிப்புக்களால் அறியப்படும்.
எனவே, ஒருபொழுது இவ்வுலகம் நடுவு நிலைமை பிறழ்ந்து, மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நிலை யின்றித் (தி.11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, 7) தமக்கும், தம்மைச் சார்ந்தவர்க்கும் உளவாகும் நன்மை ஒன்றே பற்றிப் பிறர்க்குக் கேடு சூழும் தன்மை உடையதாய்த் தீநெறிக் கண் சென்றதாக, அதனைப் பொறாது வேண்டிய நல்லோர் சிலரது தவம் முன்னிலையாகச் சிவபெருமான், உயர்ந்த சிவஞானத்தால் அந் நடுவுநிலை உடைய பெரியார் ஒருவரை விடுத்துச் செந்நெறி நிறுத் தினான் என திருமந்திரம் பிறிதொரு பொருளையே சிறப்பாகத் தோற்றுவித்தல் அறிந்து கொள்க. இதனானே, `உலகில் செந்நெறி பிறழுங்காலத்து அதனை நிலைநிறுத்துதற்குக் கடவுளே வந்து பிறக் கின்றான் என்றல் சிவ நெறிக்கு ஒவ்வாது; கடவுள் தனது திருவருள் வழி நிற்கும் பெரியோரை விடுத்தே செந்நெறி நிறுத்துகின்றான் என்பதே சிவநெறிக்கு ஒப்பது` என்பதும் கூறியவாறாயிற்று.
``எம்பெருமான்`` என்றது விளி. என்ன - என்று சொல்லி முறையிட. இதற்கு, `தேவர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``நடுவுள அங்கி அகத்திய`` என்றதற்கு, `இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய` எனவும், `நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய` எனவும் இரு பொருள் கொள்க. இரண்டாவது பொருட்கு, ``நடுவுள`` என்பது, `அகத்திய` என்பத னோடு இயையும். உடலின் நடுவிடத்து இருக்கும் இருதயத்தை ``நடு`` என்றது ஆகுபெயர். முன் - மேல்நிலம்; முதன்மை இடம்.
சிவபெருமான், மலைமகளை மலையரையனிடம் சென்று மணம் புரிந்த ஞான்று தேவர், முனிவர், கணங்கள் முதலிய பலரும் ஒருங்கு கூடினமையால் நிலம் தென்பால் எழுந்து, வடபால் வீழ்ந்து புரள்வதாகலும், தேவரது வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அகத்திய முனிவரைத் தென்பால் பொதிய மலையிற் சென்று இருக்கச் செய்து, நிலம் முன்போலச் சமனாகும்படி நிறுத்திய வரலாற்றின் விரிவைக் கந்த புராணத்துட் கண்டு கொள்க. `தேவர் முதலிய பலர்க்கு முனிவரொருவர் நிகர்ப்ப இருந்தார்` என்பதனால், சிவனடியாரது பெருமை தோற்றுவித்தவாறாயிற்று. இவ்வரலாற்றுள் நிலம் நிலை குலைந்தமைக்குரிய காரணத்தை நாயனார் எடுத்தோதாது, வரலாறு பற்றியே உணர வைத்தார் என்க.
புராண வரலாறுகள் பலவும், உண்மை நிகழ்ச்சியை மருட்கைச் சுவைபடப் பெரிதும் புனைந்துரைப்பனவும், உண்மைக் கருத்துக்களை உருவகமாக்கி உரைப்பனவும் என இருதிறப்படும். காலப் பழமையால் அவ் இருவேறு திறத்துள் `இஃது இத்திறத்தது` எனப் பகுத்துணர்த்தல் அரிது. ஆயினும் அவ் வரலாறுகளைப் புராணங்கள் பலவிடத்தும், பலகாலத்தும் வலியுறுத்திவருதல், அவற்றின் உண்மை மக்கள் உள்ளத்தில் மறவாது நிற்றற் பொருட்டே என்பது நாயனாரது திருவுள்ளம் என்பதனை இத் தந்திரம் பற்றி உணர்ந்துகொள்க. இத் தந்திரத்துள் குறிக்கப்படும் வரலாறுகளும், இவை போல்வனவுமான தொன்மையான வரலாறுகள் சிவபெரு மானையன்றிப் பிற கடவுளருக்கும் அவர்தம் அடியவர்க்கும் சொல்லப் படாமை கருதற்பாலது என்பது நாயனாரது கருத்து என்க.
இதனால் அகத்திய முனிவர் பொதிகை சென்ற வரலாற்றால் அவரது பெருமை கூறப்பட்டமை வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 

பொழிப்புரை :

`புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.

குறிப்புரை :

`அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியனாகிய, மேல்பால் அங்கி உதயம் செய் (தென்பால்) அவனொடு` எனக் கூட்டுக. `உதயத்தை வளர்க்கும்` என இரண்டாவதும், `அங்கிபோல உதயம் செய்` என உவம உருபும் விரிக்க. மேல்பால் என்றது, சையமலைப் பக்கத்தை. அகத்தியர் முதற்கண் இங்குத் தங்கியிருந்தமையைக் கந்த புராணம் அகத்தியப் படலத்தால் அறிக. மேற்குத் திசை, `குட திை\\\\u2970?` எனப்படுதலால், அகத்தியர் `குடமுனி` எனப்பட்டார். `குடமுனி` என்பதைப் புராணங்கள் `கும்பமுனி` எனப் புனைந்துரைத்தன. `மங்கிய` என்பது ஈறு குறைந்தது. மங்கிய உதயம் - அரிதில் காணப்படுதல். `மங்கி உதயம் செய்` என்பது பாடம் அன்று.
``வடபால்`` என்றதனால், `தென்பால்` என்பது பெறப் பட்டது. `வடக்கில் கயிலாய மலையில் சிவபெருமானும், தெற்கில் பொதிய மலையில் அகத்திய முனிவரும் வீற்றிருத்தலாலே இவ்வுலகம் வளப்பமும், ஞானமும் பெற்றுத் திகழ்கின்றது` என்பதாம். இது மேற்கூறிய வரலாற்றைப் பிறிதொரு வகையால் தொடர்புபடுத்து விளக்கியவாறு.
இதனால், அகத்திய முனிவரது பெருமை கூறும் முகத்தால் சிவபெருமானது மெய்யடியார், உண்மையாகவே சிவனோடு ஒப்பவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 

பொழிப்புரை :

அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது `திருக்கோவலூர் வீரட்டம்` என்னும் தலமாம்.
ஆணவமலம் அறிவை அழித்தல் பற்றி அதற்கு, `மிருத்தியு` என்ற ஒரு பெயர் உண்டு. `அந்தகன்` என்பதற்கு `இறுதியைச் செய்பவன்` என்பது பொருள். அதனால் இவ்விரு பெயர்களும் ஒரு பொருளவாதல் பற்றி, ``கருத்துறை அந்தகன்றன்போல் அசுரன்`` என்றார். கூற்றுவனுக்கு `அந்தகன்` என்ற பெயர் கூறப்படுதலும் இப் பொருள் பற்றியேயாம். அதனால், `மிருத்தியுவைக் கடத்தல்` என்பதற்கு, `ஆணவ மலத்தின் நீங்குதல்` என்பதே உண்மைப் பொருள் என்பர். உபநிடதங்கள் `இருளைக் கடந்து மேற் போகின் றான்` என்றலும் ஆணவ மலத்தின் நீங்கி இறைவனை அடை தலையே யாம். எனவே, சிவபெருமான் அந்தகாசுரனை மூவிலை வேலால் அழித்த வரலாறு, `அவன் ஆணவ மலத்தை இச்சா ஞானக் கிரியை வடி வாய்த் தொழிற்படும் தனது சத்தியைக் கொண்டு அழிப்பவனாவன் என்னும் உண்மையை விளக்கும்` என்பதும், `அப்பயன் கருதி அவனை வழிபடுதலே சிறந்தது` என்பதும் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் அறிக. குருத்து - நுனி. `குருத்தினால்` என உருபு விரிக்க. `உயர் சூலம் கைக்கொண்டு குருத் தினாற் கொன்றான்` எனக் கூட்டுக. இச் செயல் வைரவக் கடவுளைக் கொண்டு செய்வித்ததேயாயினும், `அரசன் ஆலயம் எடுத்தான்` என்பது போல, ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்வித்தமை பற்றிச் சிவபெருமான் தானே செய்ததாக வைத்து அருளிச் செய்தார். ``அந்தகனை அயிற் சூலத் தழுத்திக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.5) என்பது திருநாவுக்கரசர் திருமொழி.
`இரணியன், (இரணிய கசிபு) இரணியாட்சன்` என்னும் இரு வருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்க வனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் வைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகேசுரப் படலத்தில் காண்க. `சிவதீக்கை பெற்றோர் குற்றம் செய்யின், அவர் கூற்றுவனால் தண்டிக்கப்படார்; இவ்வாறு வைரவக் கடவுள் சூலத்தில் ஏற்றித் தண்டிக்கப்படுவர்` என்பது சிவாகம நூற் கருத்து என்பது இங்கு உணர்ந்து கொள்க.
இதனால், சிவபெருமான் அந்தகாசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொழிப்புரை :

தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.

குறிப்புரை :

இவ்வீரச்செயலைக் குறிப்பது திருப்பறியலூர் வீரட்டம்.
கொலையில் - வேள்வியை அழித்தபொழுது. பிழைத்த - பிழை செய்த. பிரசாபதி - பிரமன்; இப்பெயர் அவன் மகனாகிய தக்கனுக்கும் வழங்கும். அதனால், அவனை, `தட்சப் பிரசாபதி` என்பர். பிரசாபதி, இங்கு, தட்சப் பிரசாபதியே. ``தான்`` என்றது வீரபத்திரக் கடவுளை. நிலை - இழிநிலை; இதில் நான்கனுருபு தொகுத்தல். ``தலையை அரிந்திட்டு`` என்பதில், ``ஆட்டுத் தலையை`` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. சந்தி செய்தல் - பொருத்துதல். இவ்வரலாறு கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்படுதல் காண்க. இவ்வரலாறும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் உணர்க.
இதனால் தக்கன் வேள்வியை அழித்த வரலாறும், சிவ நிந்தை உய்தியில் குற்றமாதலாகிய உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே. 

பொழிப்புரை :

ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட் கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திரு மாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது திருக்கண்டியூர் வீரட்டம்.
ஒருமுறை பிரமனும் மாலும் மகாமேரு மலையின் சிகரம் ஒன்றில் சேர்ந்திருந்தபொழுது தேவர், முனிவர் முதலிய பலரும் அங்கு வந்து அவரை வணங்கி, `நீவிர் எங்களைப் படைத்துக்காக்கும் தலைவராதலின், அனைத்துலகிற்கும் முதல்வனாய், உயிர்க்குயிராய் நிற்கும் முதற்கடவுள் யாவன் என்னும் ஐயத்தினையும் நீக்கி உண்மையை உணர்த்தல் வேண்டும்` என வேண்டினர். அதுபொழுது பிரமனும், மாயோனும் தம் அதிகாரச் செருக்கால் மயங்கித் தாங்களே முதற்கடவுளாகத் தனித்தனிக் கூறி வாதிட்டனர். வேதங்களும், மந்திரங்களும் உருவாய் வெளிப்பட்டு, `நும்மில் ஒருவரும் முதல்வரல்லீர்; சிவபெருமானே அனைத்துயிர்க்கும் முதல்வன்` எனக் கூறவும் தெளிவு பெறாது வாதிட்டனர். அதனால், சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளியாய்த் தோன்றி, அதினின்றும் உமையொருபாகனாய் வெளிப்பட, திருமால் தெளிந்து அச்சுற்று, `எம் தந்தையே, பிழைபொறுத்தருள்க` என வணங்கினார். ஆயினும், பிரமன் செருக்கு நீங்காதவனாய், அன்று ஐந்து தலைகளோடு இருந்த அவன், தனது உச்சித் தலை வாயினால், `என் மகனே, வருக` என்று அழைத்து இகழ்ந்தான். அதனால், சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி `நம்மை இகழ்ந்து பேசிய இப் பிரமனது நடுத்தலையைக் கிள்ளிக்கொண்டு, இப்பிரமனே யன்றிச் செருக்கால் மயங்கி நம்மை இகழ்ந்து நிற்போர் யாவராயினும் அவர்தம் உதிரத்தைப் பிச்சையாகப் பிரம கபாலத்தில் ஏற்று, அவரது செருக்கை நீக்கித் தெளிவுபெறச் செய்க` என்று அருளிச் செய்து மறைந்தார். திருமாலும் தம் உலகை அடைந்தார். வைரவக் கடவுள் அவ்வாறே தமது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்த உடன் அவனது உதிரம் உலகை அழிக்கும் வெள்ளம்போல் பெருக, அவன் நினைவிழந்து வீழ்ந்தான். பின்பு வைரவக் கடவுள், தமது நெற்றிக் கண்ணால் உதிர வெள்ளத்தை வற்றச் செய்து, பிரமனையும் உயிர்ப்பிக்க, அவன் நல்லறிவு பெற்று வணங்கிப் பிழைபொறுக்க வேண்டினான். அப்பால் வைரவக் கடவுள் அவனை மன்னித்து, அவனை என்றும் நான்முகனாகவே இருக்கச் செய்து, தாம் ஏந்திய பிரம கபாலத்துடன் தேவர், முனிவர் முதலான வர்களில் செருக்குக் கொண்டவர்பால் சென்று, `எனது கபாலம் நிறைய உங்கள் உதிரத்தைத் தாருங்கள்` என்று கேட்க, அவர்கள் அனைவரும் அச்சத்தால், ஏற்ற பெற்றியில் தம் தம் உடம்பினின்றும் இரத்தத்தைப் பிரம கபாலத்தில் சொரிந்து சோர்வுறலாயினர். பின்பு வைரவக் கடவுள் அவர்களுக்கும் உயிர்ப்பிச்சை தந்து தெளிவை உண்டாக்கி, வைகுந்தம் சென்று, அங்குத் தம்மைத் தடுத்த சேனா முதலியாகிய விடுவச் சேனனைச் சூலத்தின்மேல் கோத்தெடுத்துக் கொண்டு செல்லத் திருமால் இதனை அறிந்து எதிர்வந்து வணங்கி, `எந்தையே நீ வேண்டுவது யாது` என, வைரவக் கடவுள், `உன் கபாலத்தின் வழி யாக எனது பிரம கபாலம் நிறைய உதிரம் தரல் வேண்டும்` என்றார். திருமால் தாமே தமது நகத்தால் தம் நெற்றியி னின்றும் ஒரு நரம்பைப் பிடுங்கிப் பிரம கபாலத்தில் விட, அது வழியாக உதிரம் பல்லாண்டு காறும் ஒழுகிற்று. திருமால் நினைவிழந்து வீழ்ந்தார். ஆயினும், வைர வரது கைக் கபாலம் பாதியாயினும் நிறைந்ததில்லை. அதனைக் கண்ட `சீதேவி, பூதேவி` என்னும் இருவரும் நடுக்கங் கொள்ள, வைரவக் கடவுள் அவர்கள்மீது இரக்கம் வைத்துத் திருமாலை உயிர்ப்பித்துத் தந்து, விடுவச் சேனனையும் சூலத்தினின்றும் இறக்கிவிட்டுச் சிவபெரு மான் முன்பே தமக்காகப் படைத்துக் கொடுத்த கணங்களுடன் தமது புவனத்தில் தங்கி, அண்டங்கள் பல வற்றைக் காத்து வருவாராயினார். இவ்வாறு கந்த புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் இவ்வரலாறு விரித்துப் பேசப்படுதல் காண்க.
``அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற (பின்) அச்சுதனை உதிரங் கொண்டான்`` என்றதனால், `செல்வம், அதிகாரம்` முதலியவற்றால் எழும் செருக்குக் காரணமாக முதல்வனாகிய கடவுளை மறந்து `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கித் திரிவாரை அம்முதல்வனது திருவருள் ஒறுத்து அடக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தவே இவ்வரலாற்றைப் புராணங்கள் வலியுறுத்துகின்றன என்பது உணர்த்துதல் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் பெறப்படும். தக்கன் வரலாறு, என்றும் செருக்குடை யராய் இருப்பவரை ஒறுத்தலையும், இஃது, ஓரோவழிச் செருக்குறு வாரை ஒறுத்தலையும் குறிக்கும். இவையே இவற்றிடை உள்ள வேற்றுமை.
பரத்தல், `இடங்கொடுத்தல்` என்னும் பொருட்டு. இதனால், ஆகாயத்தையும் அடக்கி நிற்றல் பெறப்பட்டது. நிலத்தையும் தாங்குதல் கூறினமையால், அதற்கும் நிலைக்களமாதல் பெறப்பட்டது. `தங்கும் படித்தாகிய தாள்` என்க. அவன் பண்டறி சுட்டு. `உணர் தேவர்கள்` என்னும் முக்கால வினைத்தொகை, அஃது அவர்க்குரிய பண்பாதல் விளக்கி நின்றது. பொங்கும் சினம் - மிகக் கொண்ட சினம். `தேவர்கள் கொண்ட சினம்` என்க. சினம் - பகை. இஃது இங்கு மயக்கத்தால் கொள்ளும் மாறுபாட்டினைக் குறித்தது. ``சினத்துள்`` என்பது வினைசெய்யிடத்தில் வந்த ஏழாம் வேற்றுமை. எனவே, `சினங்கொண்ட பொழுது` என்பது பொருளாயிற்று. முன் - முதலில். ``முன் அயன் தலை அற`` என்றதனால், `பின் அச்சுதனை உதிரங் கொண்டான்` என்பது போந்தது. இதுவும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் அறிக.
இதனால், பிரமனது தலையை அரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

பொழிப்புரை :

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவிற்குடி வீரட்டம்.
ஒருமுறை சிவபெருமான், தமது கயிலைக்கு வந்த இந்திரன் முன், ஒரு திருவிளையாடலால் வேற்றுருக் கொண்டபொழுது, உண்மையறியாத இந்திரன், அப்பெருமானை இகழ்ந்து நோக்க, அதனால் அவர் உருத்திர வடிவுடன் நின்று கொண்ட சினத்தைக் கண்டு இந்திரன் அஞ்சி வணங்கினான். அதனால், சிவபெருமான் தாம் கொண்ட சினத் தீயை மேற்றிசைக் கடலில் எறிய, அஃது ஓர் அசுரக் குழந்தையாயிற்று. அதனைக் கடல் அரசனாகிய `வருணன்` வளர்த்தான். சலத்தால் (நீரால்) தாங்கப்பெற்ற காரணத்தால் `சலந்தரன்` எனப் பெயர் பெற்ற அவ்வசுரன் மிக்க வன்மை உடைய வனாய்த் தேவரைத் துன்புறுத்தத் திருமால் முதலிய தேவர் பலரும் அவனுக்கு அஞ்சி ஓடிக் கயிலையில் வசித்தனர். அதனை அறிந்த சலந்தராசுரன் சிவபெருமானோடு போர் செய்யக் கருதிக் கயிலை நோக்கிச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட அப்பெருமான், அவன் தன்னாலே தான் அழிய வேண்டியவனாதலை உணர்ந்து, ஓர் அந்தண வடிவில் அவன்முன் சென்று, `சலந்தரனே, உனது ஆற்றலை அளந்து காணவே யாம் வந்தோம்; உன்னால் இயலுமாயின், இச்சக்கரத்தை எடுத்துச் சுமக்க` என்று சொல்லித் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறினார். சலந்தரன் செருக்குக் கொண்டு அதனை அரிதில் பெயர்த்து மிக முயன்று உயர எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொள்ள, அச்சக்கரம் சிறந்த படைக்கலமாய் அவன் உடலை இருகூறு செய்து, சிவபெருமானிடம் மீண்டது; தேவர் துன்பம் நீங்கி இன்புற்றனர். இவ்வாறு இவ்வரலாறு கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இது சிவபெருமான், தான் நேரே செய்த வீரச்செயலாதல் அறிக.
`அறம், மறம் அனைத்திற்கும் நிலைக்களமாய் உள்ளவன் இறைவன். அவன் உரிய காலத்தில் மறத்தினை வெளிப்படுத்தி, ஏற்கும் முறையால் அதனை அழித்து அறத்தினை வளர்த்தருளுவான் என்பது இதனால் அறியத் தக்க உண்மை` என்பது நாயனார் திருவுள்ளமாதல், ``எங்கும் கலந்தும் என் உள்ளத்தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதி`` என்ற குறிப்பால் அறியப்படும்.
இதனால், `சலந்தரன்` என்னும் அசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 

பொழிப்புரை :

சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவதிகை வீரட்டம். ஏனைய பலவற்றினும் இது சிறப்புடையதாய்ப் பண்டைத் தமிழ் நூல்களிலும் பயின்று வருவதாகலின், இதன் உண்மையை நாயனார் கிளந்தோதினார் என்க.
``தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர். சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத் திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத் தவர்பால் சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக் காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத் தசுரர் சிவநெறியைக் கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம் சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகராயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.
இதனுள் தேவர் பலரும் சிவபெருமானுக்குக் கருவியா யினமை, `அப்பெருமானே கருத்தா` என்பதை விளக்கும். பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்தமை, அவன் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தானே செய்பவனாதலை விளக்கும். மலையை வில்லாக வளைத்தமை அவன் எல்லாம் வல்லனாதலைக் குறிக்கும். இவ்வாறு இத்திரிபுரம் எரித்த வரலாறு பல அரிய உண்மைகளை விளக்குவதாம். அவற்றுள் சிறந்த தொன்றினை எடுத்தோதியதனானே ஏனையவற்றையும் தழுவிக் கொள்ள வைத்தார்.
இதனால், திரிபுரம் எரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே. 

பொழிப்புரை :

முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.

குறிப்புரை :

`அஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். சிவபெருமான் செய்த இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவழுவூர் வீரட்டம்.
சிவபெருமான் யானையை உரித்த வரலாறு கந்த புராணத்துட் சொல்லப்பட்டது. அதில் அவன் பிறப்பு வரலாறு சொல்லப்பட வில்லை. ஆயினும், நாரத முனிவர் செய்த வேள்வியுள் ஆட்டுக் கிடாய் ஒன்று தோன்றித்தேவர் முதலிய பலரையும் துன்புறுத்தினமை கந்த புராணத்தால் அறியக் கிடப்பதுபோல, முனிவர் சிலர் செய்த வேள்வியுள் கயாசுரனாகிய யானை தோன்றித் தேவர்களைத் துன்புறுத் தினமை இத்திருமந்திரத்தால் அறியக் கிடக்கின்றது. சிவபெருமான் யானையை உரித்த பொழுது அவர் கொண்டிருந்த உருத்திரத் திருமேனியின் ஒளியையும், வீரச் செயலையும் காணமாட்டாது உமாதேவியை உள்ளிட்ட பலரும் நடுக்கங் கொள்ளச் சிவபெருமான் யானையை உரித்து அத்தோலைப் போர்வையாக அணிந்து அவர் களது அச்சத்தைப் போக்கினமை கந்த புராணத்துட் கூறப்பட்டது.
ஐம்பொறிகளை யானையாகக் கூறுதல் மரபாகலின், ஏனைத் தேவர் பலரும் மதங்கொண்ட யானைபோலும் அவ்வைம்பொறிச் சூழலில் அகப்பட்டுச் சுழலும் பசுக்களேயாக, அவற்றை வென்று நிற்கும் பதி சிவபெருமான் ஒருவனே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்கது என்பதை நாயனார் உய்த்துணர வைத்திருத்தலை நுண்ணுணர்வால் நோக்கி உணர்க. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயலாம். இதனைக் காசியில் நிகழ்ந்ததாகவே கந்தபுராணம் கூறிற்று.
கொளுவுதற்கும், முழங்குதற்கும் ``முனிவர்`` என்னும் எழு வாய் வருவித்து, ``கொளுவி முழங்கு`` என இயைக்க. முழங்குதல் - மந்திரத்தை உரத்து உச்சரித்தல். வேள்வியுள் அத்தி - வேள்வியுள் எழுந்த யானை. ``உரி`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகு பெயராய், ``உரித்தவன்`` எனப் பொருள் தந்தது. தாம், அசைநிலை. ``பல தேவர்தாமும்`` என்பது மாறிநின்றது. உம்மை, முற்றும்மை. ``தீயின்`` என்றதும், `தீச் சாலையின்` என ஆகுபெயராயிற்று. `அத்தி யினுள்` என்பதே பாடமாயின், `தீ` என்பது குறுக்கல் பெற்றது என்க. எழுந்து - சென்று தங்கி. ``கொலையே`` என்றதன்பின் `உண்டார்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், சிவபெருமான் யானையை உரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 

பொழிப்புரை :

சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.

குறிப்புரை :

இது காலசங்கார மூர்த்தியைத் திருக்கடவூரில் உள்ள ஓர் யோகிபோல வைத்துச் சிலேடையால் உவமித்தது. இதனை,
யோகிக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`மூலாதாரமாகிய இடத்தில் வைத்துக் கீழ்நோக்கித் துயில் கின்ற நாகராசனை அதன்மேல் உள்ள சுழுமுனைக்கு மேலதாகிய புருவ நடுவாகிய இலாடத் தானத்தை நோக்கி நிற்குமாறு எழுப்பி, அதன்பொருட்டு வாயுக்களுள் முதலாவதாகிய பிராண வாயுவைச் சுழுமுனை நாடியின் அடியில் அசைவற நிறுத்தி, அத்தகைய வாயுப் பயிற்சியாலே, தனக்கு அளந்த வாழ்நாள் எல்லைக்கண் கூற்றுவன் வந்து தன்னை அணுகாதவாறு தடுத்துத் திருக்கடவூரில் நலத்துடன் நீடு வாழ்கின்றமை `வியப்பு` எனவும்,
காலசங்கார மூர்த்திக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`முப்பத்தாறு தத்தவங்களுள் கீழ் நிற்பதாகிய நிலத்தின்கண் அமைந்த கோயிலிலே வழிபாட்டில் முனைந்து நின்ற மார்க்கண்டேய முனிவரை நாதமாகிய மேல்தத்துவ புவனத்தில் மேலான அபர முத்தராய்ச் சென்று வாழுமாறு கடைக்கணித்து, அவர் வழிபட்ட இலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டு அவர்மேல் வந்த காலனைக் காலால் உதைத்துத் தள்ளி, அருளோடு நீடு நிற்றல் வியப்பு` எனவும் உரைத்துக் கொள்க.
நாகராசன், குண்டலினி. இதனைப் பெண்பாலாகக் கூறுதல் மரபாயினும், `நாகராசன்` என்னும் வழக்குண்மை பற்றி ஆண்பாலாக ஓதினார். இரண்டாவது பொருட்கு, துவாரம் - வாயில்; கருவி. முதல் உரையுள் ``நோக்கி`` என்பது, அதன் காரியம் தோன்ற நிற்கும். `சிவபெருமான்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது. `அங் கியோகமாய்` என்பதில், யகரம் வருவழி இகரங் குறுகிற்று(தொல். எழுத்து, 411) `யோகியாய்` எனற்பாலதனை, ``யோகமாய்`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது. இறுதியில் `வியப்பு` என்பது சொல்லெச்சம். இங்ஙனம் சிலேடித்ததனானே, அட யோகம் செய்வார், வாழ்நாள் சிறிது நீட்டிக்கப் பெறுதலையும், சிவயோகம் செய்வார், ஞானம் பெற்று வீடு அடைதலையும் குறிப்பால் உணர்த்திச் சிவனது திருவருட் பெருமையை விளக்கினார் என்க. எனவே, சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த வரலாறு ` யோக மதத்தவர், சிவநெறியாளர்` என்னும் இருதிறத்தார்க்கும் ஏற்ற பெற்றியால் மேற்குறித்த இரண்டு உண்மை களையும் விளக்கி நிற்றல் பெறப்பட்டது.
மிருகண்டு முனிவர் புத்திரப்பேறு இன்மையால் தம் இல்லா ளோடும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யச் சிவபெருமான் வெளிப்பட்டு `உங்கட்கு அறிவிலியாய் நூறாண்டு வாழும் மகன் வேண்டுமோ, அறிவுடையவனாய்ப் பதினாறாண்டு வாழும் மகன் வேண்டுமோ` என வினாவ, தவம் புரிந்த இருவரும், `அறிவுடைய மகனே வேண்டும்` என்றனர். அதன்படி கொடுத்து மறைந்த சிவபெரு மானது வரத்தின்படி அவர்கட்கு மார்க்கண்டேய முனிவர் பிறந்து, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பொழுது பதினாறா வது ஆண்டு வந்து அடைய, பெற்றோர் இருவரும் மகனைக் காணுந் தோறும் வருந்திக் கண்ணீர் விடுத்தனர். மார்க்கண்டேயர் அவர்களது வருத்தத்திற்குக் காரணத்தை அவர்பால் கேட்டறிந்து அவர்களிடம் விடைபெற்றுச் சென்று சிவபெருமானை இலிங்க வடிவில் பூசை செய் திருந்தார். அவருக்கு அளந்த நாள் முடிவில் கூற்றுவன் வந்து அவரை அழைக்க, அவர் சிவபெருமானையே தஞ்சமாக அடைந்து நின்றார். கூற்றுவன் அம்முனிவர் பற்றி யிருந்த இலிங்கத்தோடு அவரைப் பாசத் தாற் பிணித்து இழுத்தபொழுது, சிவபெருமான் அவ் இலிங்கத்தி னின்றும் வெளிப்பட்டுத் தமது இடக் காலால் கூற்றுவனை உதைத்துத் தள்ளி, மார்க்கண்டேயரை என்றும் பதினாறாண்டாக இருக்க அருள் புரிந்து மறைந்தார். இவ்வாறு இவ் வரலாறு கந்த புராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்கடவூர் வீரட்டம் என்பதை நாயனாரே அருளிச் செய்துள்ளார். இது காசியில் கங்கா நதியின் மணி கண்ணிகைத் துறையில் நிகழ்ந்ததாகவே கந்த புராணத்தில் சொல்லப் பட்டது. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால் சிவபெருமான் காலனை உதைத்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.

குறிப்புரை :

`இந்நிலை பல சமயத்தார்க்கும் பொது` என்பது பற்றி, `அருந்தவ யோகம்` எனப் பொதுப்படக் கூறிப் போந்தார். லிங்கம் - குறி. வழி - ஒழுக்கம். சிவபெருமான் காமனை எரித்த வரலாற்றால் அறியக் கிடக்கும் உண்மை வெளிப்படை என்பது பற்றி, இவ்வாறு இனிது விளங்க ஓதியொழிந்தார். ``அங்கண்`` என்றதன்பின் `நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. `குறுக்கை` என்பது, `கொறுக்கை` என மருவிற்று. `குறுக்கை என்பதே பாடம்` எனலுமாம். `சிவபெருமான் கொறுக்கை அமர்ந்தது, இருத்தி, போக்கி, அழித்து நிற்கும் யோகமே` என வினை முடிவு செய்க.
உமாதேவி, `தக்கன் மகள்` என்னும் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பிச் சிவபெருமானது அருளிப்பாட்டின்படி மலை யரையனுக்கு மகளாய்த் தோன்றி வளர்ந்து இமயமலையில் தவம் செய்துகொண்டிருக்க, சிவபெருமான் சனகாதி நால்வர் முனிவர்கட்கு உண்மை ஞானம் உணர்த்த வேண்டித் திருக்கயிலையில் தென்முகக் கடவுளாய் யோக நிலையில் இருந்த பொழுது, திருமாலின் சொற்படி, பிரமன் முதலிய தேவர்கள் தமக்குத் துயர் விளைத்த சூரபதுமனாதி அசுரரை அழித்தற்குச் சிவபெருமான் உமாதேவியாரைக் கூடி முருகப் பெருமானைத் தருதற் பொருட்டு அவருக்குக் காமத்தை விளைக் குமாறு காமவேளை ஏவினர். அவன் சென்று சிவபெருமான்மீது தனது மலர் அம்புகளை விடுத்தபொழுது, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைச் சிறிதே திறக்க, அதினின்றும் புறப்பட்டுப் படர்ந்த தீயால் காமவேள் சாம்பராயினன். இவ்வரலாற்றைக் கந்த புராணம் விரித்துக் கூறும். இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்குறுக்கை வீரட்டம் என்பதையும் நாயனார் தாமே எடுத்தோதினார். இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால், சிவபெருமான் காமனை எரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
சிவபெருமானது அட்ட வீரட்டங்களையும் அவை குறிக்கும் வீரச் செயல்களோடு கூறும் பழைய தனிப்பாட்டு ஒன்று வருமாறு:
பூமன் சிரம்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் கொறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.
-தனிப்பாட்டு
(பூமன் - பிரமன். மாமன் - தக்கன். தேம் மன்னு - தேன் மிகுந்த. சேவகம் - வீரம்)
இவற்றுள் வழுவூர் ஒன்றும் வைப்புத்தலம்; ஏனைய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
இவ்வாறு நாயனார் ``வீரட்டம்`` எனச் சிறப்புப் பெற்றத் தலங்களைக் குறித்தருளினமையால், பிறவகையில் சிவபெருமானது அறக்கருணைச் செயல் மறக்கருணைச் செயல்களைக் குறிக்கும் தலங்களும், அவை பற்றிய வரலாறுகளும் சிவநெறி நிற்பார்க்கு இன்றியமை யாதனவாதல் அறியப்படும். இவ்வாற்றானே சமய குரவர் நால்வரும் தமது திருப்பாடல்களாலும், சென்று வணங்கிய திருநெறி ஒழுக்கத்தாலும், அதியற்புத விளைவுகளாலும் திருக்கோயில்களின் இன்றியமையாமையை இனிது விளக்கினமை கருத்திற் கொள்ளற் பாலது.

பண் :

பாடல் எண் : 1

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே. 

பொழிப்புரை :

உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.

குறிப்புரை :

`அதனால் சிவபெருமான் யாவராலும் வழிபடத் தக்கவன் என்பது விளங்கும்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியை முதலிற்கொண்டு உரைக்க. ``அரசன்`` என்றற்கு ``முடிசேர் மலைமகனார்`` என்றார். ``உமையம்மை`` என்னும் எழுவாய் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உமையம்மையே சிவனை வழிபட்டமை கூறப் பட்டது. இத்தகைய தலங்கள் காஞ்சி முதலியனவாகச் சிறப்புற்று விளங்குதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே. 

பொழிப்புரை :

`முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார் பால் அருளுடையவ னாய் நின்று அவரவர்க்குத் தக்க வகையில் அவன் அருள் செய்வான்.

குறிப்புரை :

புரிவு - விருப்பம்; அன்பு, பொய், இங்கு அருமை. பரிவு - தன்மை; தகுதி. `அவரவர்க்குத் தக அருள்புரிவான்` என்றதனால்,`பயன் கருதியும் அவனை வழிபடலாம்` என்பது உணர்த்தப்பட்டதாம்.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 பா.251) என மேற்குறித்த வழிபாடு அவரவர்க்கு இயலுந் திறத்தால் சிவனுக்குச் செய்தல் தக்கது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. 

பொழிப்புரை :

மிக்க வலிமை பொருந்தித் தம்மில் போர்செய்த பிரமன், திருமால் என்னும் இருவரும் தம்முன் தீப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானைப் பின்பு இலிங்கத் திருமேனியில் நெடுங் காலம் வழிபட, அவர்கட்குச் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல்களைச் செய்யுமாறு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

எனவே, குற்றம் செய்தலை இயல்பாக உடைய உயிர்கள் தாம் செய்த குற்றத்திற்குச் சிறந்த கழுவாய் (பிராயசித்தம்) ஆகச் செய்யத்தக்கதும் சிவ வழிபாடே என்றதாயிற்று. ஆழி இரண்டில் முதற்கண் உள்ளது `ஆழம்` எனப் பொருள்தந்து, மிகுதியை உணர்த் திற்று. வலம் இரண்டில் முன்னது வலிமை. அஃது அதனால் ஆகிய போரைக் குறித்ததது. `கொண்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாள் - படைக்கலம். `வாள் பெற்றான்` என்றே கொள்ளுதலும் பொருந்தும்.
ஒருகற்பத்தில் பிரமனும், மாலும் தாம் தாமே உலகிற்கு முதல்வர் எனத் தருக்கிப் போர்புரிய, அவர்க்கு இடையே சிவ பெருமான் அடிமுடி அறியப்படாத அனற் பிழம்பாய்த் தோன்றியருள, அவ்விருவரும் `இதன் அடி முடிகளை அறிபவரே முதல்வர்` என வரையறுத்துக்கொண்டு அவற்றைக் காண முயன்றனர். திருமால் வராக வடிவங்கொண்டு நிலத்தைப் பிளந்து பல்லாயிரம் யாண்டு கீழ்சென்று அடியைக் காண முயன்று முடியாதவராய், `இது சிவ பெருமானது திருவிளையாடல்` என்று அறிந்து தருக்கொழிந்தார். பிரமன் அன்னப் பறவை உருவங்கொண்டு பல்லாயிரம் யாண்டு மேலே பறந்து சென்றும் முடியைக் காண இயலாதவனாய், திருமால் அடியைக் கண்டிருப்பார் என்னும் கருத்தினால் அவர்முன் வந்து `யான் முடியைக் கண்டேன்` என்று பொய் கூறினான். அவன் பொய்ம் மொழிக்குச் சான்றாகச் சிவபெருமானது முடியினின்றும் வீழ்ந்த தாழை மலர் நின்றது. பிரமன் பொய் கூறுதலைப் பொறாத சிவபெருமான் அக்கினித் தம்பத்தைப் பிளந்துகொண்டு உக்கிரவடிவத்துடன் காட்சி யளித்துப் பிரமதேவனுக்கு இவ்வுலகில் எங்கும் கோயில் உண்டா காதவாறு சபித்தும், தாழை மலரைத் தமக்கு ஆகாது என்று விலக்கியும் ஒறுத்தருளினார். பின்பு பிரமதேவன் அஞ்சி வணங்க, அவனுக்கு அந்தணர் இல்லமே கோயிலாகவும், அவரைப் பிறர் வழிபடும் வழி பாடே அவனுக்குச் செய்யும் வழிபாடாகவும் அருள் செய்தார். பின்பு, மால் அயன் இருவரும் வேண்டச் சிவ பெருமான் தம் வழிபாட்டிற் குரிய இலிங்கவடிவாயினார். அவ் வடிவில் இருவரும் சிவபெரு மானைப் பூசித்துப் பயன் பெற்றனர். இதுவே இலிங்கத் தோற்றத் திற்குப் புராணம் கூறும் வரலாறு. இவ் வரலாற்றை விரித்துக் கூறும் புராணமே இலிங்க புராணம். இதனைக் கந்த புராணம் ஓரளவில் கூறும். ``இலிங்க புராணம்`` என்பது ``சைவ புராணம்`` என்பதன் மறுபெயர்.
பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரமமியாம் பரமமியாம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
- தி.8 தோணோக்கம் , 12
என மாணிக்கவாசகர் இவ்வரலாற்றை எடுத்தோதியருளினார். ``திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி`` - தி.8 தெள்ளேனம், 1 என்று பிறவிடங் களிலும் குறித்தருளுவார். தேவாரத் திருமுறைகளுள் இவ்வரலாறு பயின்று வருதல் வெளிப்படை. திருநாவுக்கரசர் `இலிங்க புராணத் திருக்குறுந்தொகை` என ஒரு திருப்பதிகமே அருளிச்செய்தார்.
இதனால், சிவபெருமானே முதல்வனாதலை விளக்கும் இலிங்க வரலாறு கூறப்பட்டது. இதனானே அப்பெருமான், உயிர்கள் தன்னை வழிபடுதற்குக் கொண்ட வடிவங்களுள் இலிங்கத் திரு மேனியே சிறப்புடையதாதலும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது கயிலைப் பெருமலையைத் தூக்கி எறியக் கருதி இருபது தோள்களாலும் மேல் எழுமாறு தாங்கி எடுத்த இராவணனது நிகரில்லாத பேராற்றலைத் தனது கால் விரலால் விரைய ஊன்றி அவன், இறைவனே என்று அழைத்து அலறி முறை யிட்ட பின் அவனை விடுத்து, அழிவில்லாத வரத்தையும் கொடுத் தருளினான்.

குறிப்புரை :

இவ்வரலாறு இராமாயணம் உத்தர காண்டத்துள் சொல்லப்பட்டது.
இதனால், சிவபெருமான் இராவணனுக்கு மறக்கருணையும், அறக்கருணையும் செய்தமை கூறப்பட்டது. வழிபட்டவர்க்கே அறக்கருணை செய்வான் என்க.

பண் :

பாடல் எண் : 5

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 

பொழிப்புரை :

`செய்யத் தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்கு வதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.

குறிப்புரை :

எனவே, `சிவ வழிபாட்டின் மிக்க வழிபாடும் இல்லை; அதனை இகழ்தலின் மிக்க பாவமும் இல்லை` என்பதும், அங்ஙன மாகவே, `அவ்வழிபாட்டினை இகழ்வார் எவராயினும் அவரைப் பாவிகளாகக் கருதி ஒறுத்தல் பேரறமாம்` என்பதும் குறித்தவா றாயிற்று. தமிழ் நாட்டில் வரலாற்று முறையால் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கி வந்த இவ்வரலாற்றினை நாயனார் இத் திருமந்திரமாக ஆக்கியருளினார். இச்சிறப்புக் கருதித் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு, நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டு மன்றே.
-தி.3 ப.54 பா.7
என்று அருளிச் செய்தார்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
-தி.4 ப.49 பா.3
என அப்பரும் இதனை வகுத்தோதியருளினார்.
இவையெல்லாம் பற்றித் தொகையாகவும், வகையாகவும் அவ்வக்காலத்தில் வெளிப்பட்ட திருத்தொண்டர் வரலாற்றினை விரிவாகச் செய்தருளிய சேக்கிழார் நாயனார் தமது திருத்தொண்டர் புராணத்துள் இவ்வரலாற்றை விரித்தருளியவாறு இது.
`சோழநாட்டில் திருச்சேய்ஞலூரில் வைதிக அந்தணர் குலத்தில் `எச்ச தத்தன்` என்னும் தந்தைக்கும், `பவித்திரை` என்னும் தாய்க்கும், `விசார சருமர்` என்னும் அரும்பெறற் புதல்வர் ஒருவர் தோன்றினார். அவர் முன்னைத் தவமுதிர்ச்சியால் கல்வியைச் சிறக்கக் கற்று, உபநயனம் பெற்று, வேதம் முதலிய கலைகளினும் வல்லவராய், `சிவபெருமானே முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து, அவனது திரு வடிக்கண் அன்பு மீதூர்ந்து நின்றார். அவர் ஒருநாள் பிற மாணாக் கருடன் வேதம் ஓதிச் செல்லுகையில் வழியில், அவ்வூர்ப் பசு மேய்க்கும் ஆயன், தன்னை முட்டிய பசு ஒன்றினைக் கோலால் நன்கு புடைத்ததைக் கண்டு வருத்தமும் சினமும் கொண்டு, `பசுக்களின் பெருமையை அறியாத நீ இனி இவற்றை மேய்த்தல் வேண்டா; இன்று முதல் யானே இவற்றை மேய்க்கின்றேன்` என்று அன்று முதல் அவ் ஆனிரைகளை அவரே மேய்த்து வருவாராயினார்.
அவர் அப்பசுக் களிடத்துக் கொண்ட உண்மை அன்பால் அப்பசுக்களும் அவரிடம் பேரன்பு கொண்டன. நல்ல மேய்ப்பினால் அவை தம்மை உடை யவர்க்கு முன்னையினும் மிகுதியாகப் பால் தந்தன. அதனால், `இம் மாணியின் மேய்ப்பே நல்ல மேய்ப்பு` என ஊர் அந்தணர் பலரும் மகிழ்ந்தனர்.
பசுக்கள் பலவும் விசார சருமரைக் காணும் பொழுது தம் கன்றினைக் கண்டாற்போல அன்பு பெருகி நின்றமையால், அவற்றின் மடியில் பால் தானாகவே விம்மிப் பெருகுவதாயிற்று. சிவ வழிபாடு ஒன்றற்கே உரிய பசுக்களின் பால் வீணாவதைக் கண்ட விசார சருமர், அதனைச் சிவபெருமானுக்கு ஆக்கக் கருதித் தாம் பசுமேய்க்கும் மண்ணியாற்றங்கரையில் மணல் இலிங்கம் அமைத்து அப்பாலைக் குடங்களில் ஏற்று ஆட்டி வழிபட்டார்.
இவ்வாறு நாள் பல செல்ல, இதனை அறிந்த ஒருவன், `பசுமேய்க்கின்ற சிறுவன் பாலைக் கறந்து மண்ணியாற்று மணலில் ஊற்றுகின்றான்` என்று அந்தணர்களிடம் சென்று கோள் உரைத்தான். அந்தணர்கள், தமக்குப் பால் குறைவறக் கிடைப்பினும், விசார சருமரது வழிபாட்டின் சிறப்பை அறியாத வர்களாய் அவர் தந்தையாகிய எச்ச தத்தனிடம் கூறினர். எச்ச தத்தன், `நாளைமுதல் இச்செயல் நிகழாதவாறு செய்கின்றேன்` என்று உறுதி கூறி, விசார சருமர் பசு மேய்க்கச் சென்றபின், அவர் அறியாதவாறு அவர் பின்னே சென்று மண்ணியாற்றங்கரையில் ஒரு குராமரத்தின் மேல் ஏறி மறைந்திருந்து, தன் மகனாரது செயல் பலவற்றையும் நோக்கி யிருந்தான்.
அவர் முன்புபோல மணலால் கோயிலும், இலிங்கமும் செய்து, பாலைக் கொணர்ந்து வைத்துப் பூ முதலியவைகளையும் சேர்த்துக் கொணர்ந்து வழிபாட்டில் அமர்ந்து அன்புடன் வழிபடுவா ராய்ப் பாலை எடுத்துக் குடம் குடமாக ஆட்டும்பொழுது எச்சதத்தன் சீற்றம் மிகுந்து இறங்கிச்சென்று மகனாரைவைது, கோல் ஒன்றினால் முதுகில் புடைத்தும் நின்றான்.
ஆயினும் அவற்றை விசார சருமர் பூசை நினைவால் அறிந்திலர். அதனால் எச்ச தத்தன் கோபம் மூண்டு சென்று, அவர் வழிபடும் மணல் இலிங்கத்தைக் (இலிங்கத்தை இடறினமையை வாயால் சொல்லுதலும் கூடாது என்று சேக்கிழார் பாற்குடத்தை இடறியதாகக் கூறினார்) காலால் சிதைத்தான். அதனால் மிக வெகுண்ட விசார சருமர், தம் பக்கத்திருந்த பசுமேய்க் கும் கோலை எடுக்க, திருவருளால் அது மழுவாயுதமாக மாறிற்று. அதனாலே அவர் எச்சத்தத்தனது இரண்டு கால்களையும் துணிந்து வீழுமாறு வெட்டினார். எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான்.
விசார சருமர், `இனிச் சிவபூசைக்கு வரும் இடையூற்றை நீக்குவதற்குக் கருவியாக இம் மழுப்படை திருவருளால் கிடைத்தது` என்று மகிழ்ந்து மீளவும் சிவபூசைக்கு ஆவனவற்றைச் செய்ய முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் தேவர், முனிவர், கணங்கள் புடைசூழத் தோன்றிக் காட்சியளித்து, `நம் பொருட்டு நின் தாதையைத் தடிந்த நினக்கு இனி நாமே தந்தை; நீ நம் மகன்` என்று திருவாய் மலர்ந்து, தம் கையால் அவரைத் தழுவி எடுத்து மார்போடு அணைத்து, உச்சிமோந்து சீராட்ட, விசார சருமர் முன்னை மாயா உடம்பு நீங்க, அருளுடம்பு பெற்றுச் சிவகுமாரர் ஆயினார்.
பின்பு சிவபெருமான், `நம்மை வழிபடுவோர் நமக்கு ஆக்கிப் பெறும் நின்மாலியப் பொருள்கள் உனக்கு மட்டுமே உரியனவாக` என அருளிச்செய்து, சிவனடியார் பலர்க்கும் தலைமையாய் அவர்கட்கு அவர் தம் திருத்தொண்டின் பயனை வழங்கும் சண்ட பதவியை அவருக்கு அளித்து, அதற்கு அடையாளமாகத் தமது திருமுடியில் உள்ள கொன்றை மாலையை எடுத்துச் சூட்டியருளினார்.
நாயனாரால் தண்டிக்கப் பெற்றமையால், எச்சதத்தனும், அவனைச் சார்ந்தோரும் சிவாபராதத்தால் `எரிவாய் நிரயம் புகாது நீங்கிச் சிவலோகத்தை எய்தினர்`.
`சண்டேசுரர்` என்பது இவரது பதவியாற் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு ஆனிரை மேய்த்து, அத்தண்டே மழுவாகப் பெற்றுப் பிழைசெய்தவனை ஒறுத்தமை பற்றி, `தண்டீசர்` எனவும் அழைக்கப்படுகின்றார். சிவகுமாரர் ஆயினமைபற்றி இவர், `பிள்ளையார் - சேய்ஞலூர்ப் பிள்ளையார்` எனப்படுகின்றார்.
திருத்தொண்டத் தொகை அடியவருள் ஒருவராயினமைபற்றி நாயன்மார்களுள் இவரும் அவருள் ஒருவராய் நின்று திருக்கூட்டத்து வழிபடப்படுதலே யன்றிச் சிவபெருமான் இவருக்கு அளித்த தனிச்சிறப்புக் காரணமாகச் சண்டேசுர நிலையில் நின்று தனி வழிபாடும் பெறு கின்றார்.
அதனால் இவரை நாயன்மார்களுள் ஒருவராகமட்டும் வைத்து வழிபட்டுச் சண்டேசுரராக வழிபடாது ஒழிபவர் சிவபெருமானது அருளாணையைக் கடந்தவராவர். அவர்கட்குச் சிவவழிபாட்டின் பயன் கிட்டுதல் அரிது.
இவ்வரலாற்றால் சிவவழிபாடு வீடுபேற்றைத் தரும் என்பது அறியப்படும். மற்றும், `சிவவழிபாட்டிற்கு இடையூறு விளைப்பாரை ஒறுத்தல் பெருஞ் சிவபுண்ணியமாம் என்பது இதனால் விளங்குவது` எனச் சேக்கிழார் திருப்பாசுரத் திருக்குறிப்பருளலில் குறித்தல் காண்க. (தி.12 திருஞான - 839)
`சிவனடியாரால் ஒறுக்கப்பெற்றவர் தம் குற்றம் முழுதும் நீங்கித் தூயராவர்` என்பது, நாயனாரால் தண்டிக்கப்பெற்ற எச்சதத்தன் குற்றம் நீங்கிச் சிவலோகம் புகுந்தமையால் அறியப்படும். `சிவ வழிபாடு நன்கு நடைபெறுதல் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் யாவும் சிறந்த சிவபுண்ணியங்களே` என்பதை மாணிக்கவாசகர்,
தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் சிவனருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.
-தி.8 தோணோக்கம் ,7
என நன்கு எடுத்து அருளிச்செய்தார்.
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்தசண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூ ருளானே. -தி.7 ப.55 பா.3
என்று நம்பியாரூரர் இனிது விளங்க எடுத்தருளிச்செய்தமை காண்க.
இதனால், சிவபெருமான் சண்டேசுர நாயனாருக்கு வியத்தகும் அறக்கருணை செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.

பொழிப்புரை :

தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.

குறிப்புரை :

எனவே, `இங்கும், மேலேயும் கூறியவாறு தேவர், மூவர், முனிவர், அசுரர், இராக்கதர் முதலிய யாவரும் சிவபெரு மானை வழிபட்டே தாம் கருதிய பயனை அடைந்தனர்` என்பது முடித்துக் கூறியவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொழிப்புரை :

தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.

குறிப்புரை :

இது முதலாகக் கூறுவன பலவற்றையும் கந்த புராணத்துட் பரக்கக் காண்க. `வெந்தழல் ஊடே புறப்பட` என்பதை முதலிற் கொள்க. `குண்டத்தின்` என்பது வருவிக்க. `பிரானை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. வெகுண்டானாகிய தக்கன் என்க. `முந்திய பூசையால்` என உருபு விரிக்க. `முடியார்` என்றது முற்றெச்சம். `கெடுதலால்` என்பது, `கெட்டு` எனத் திரிந்து நின்றது.
இதனால், அச்சம் காரணமாகச் சிவநிந்தையைத் தடுக்க மாட்டாது உடன்பட்டிருந்த தேவரைச் சிவபெருமான் ஒறுத்து முறைப் படுத்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே. 

பொழிப்புரை :

வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன் போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.

குறிப்புரை :

வீரபத்திரர் மாயோனை வெகுளாது சினம் தணிந்தது, அவர் அவனை ஒறுக்கச் சென்றபொழுது சிவபெருமான், வான் மொழியாக, `சினம் தவிர்தி` என்று கூறினமையாலாம். `எழுகின்ற` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. தான், அசைநிலை. உம்மை, சிறப்பு. ``யாமே`` என்ற ஏகாரம் அசைநிலை. இதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது. பந்தம் - சம்பந்தம். `உலகினில் பந்தம்செய் பாதம்` என்றது, அவ்வாறாதலின் அருமை குறித்தவாறு. `பாசம்` என்பது பாடம் அன்று. ``தவம்`` என்பது துதியை.
இதனால், சிவபெருமான் மாயோனது பிழையைப் பொறுத்து அவனுக்கு அருள்செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவ நிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்யமுற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோ டேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.

குறிப்புரை :

`அயன்` என்பது தக்கனுக்கும் பெயராய் வழங்கும். பதி - தலைமை. `அந்நீர்மை` எனற்பாலதனை, ``அது நீர்மை`` என்றார். `அப்பரிசாய அந்நீர்மை` என்க; ஆலித்தல் - மகிழ்தல்; இசைந்திருந்தல். இதனால், சிவபெருமான் அக்கினிதேவனை மன்னித் தருளினமை கூறப்பட்டது. அக்கினி தேவன் கையை வெட்டினமை திருவாசகத்துத் திருவுந்தியாரில் கூறப்பட்டது. `அது பெருந் தண்டம்` அன்று என்னும் கருத்தால் அவனது சுடும் சத்தியை மாற்றாதிருந்தமை கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 4

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே. 

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய் தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனா கிய அக்கினி தேவன், ஏனை இடங் காலங்களிற் போலவே தன் கடமை யுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.

குறிப்புரை :

`காரணமாவது` என்று தொடங்கினமையால், `அலர்ந் திருந்தான்; அதுவே` என உரைக்க. உள நாள் - பிற இடங்களில் உள்ள காலம். ``நாளும்`` என்பது பாடமாயின், ``உள்ள பல நாள்களிலும் போல`` என உரைக்க.
இதனால், தக்கன் வேள்வியில், குற்றத்திற்கு ஆளானவருள் அக்கினி தேவன் முதல்வனாயினமை கூறி, அவ்வாறாகவும் மன்னித் தருளினமை குறிக்கப்பட்டது. அக்கினிதேவன் தன் காரியத்தைச் செய்யாதொழியின், வேள்வி நடத்தற்கே வழி இல்லையாதல் அறிக.
`தேவர் பலர்க்கும் இடும் அவியைத் தான் சுமக்கலாற்றாத அக்கினிதேவன் ஒருமுறை நீருள் ஒளிந்துகொள்ளத் தேவர் பலரும் வருந்தித் தேடியபொழுது மீன்கள் சில அவன் நீருள் ஒளிந்திருத்தலை அறிவிக்க, அறிந்து அவனைப் பிடித்துச் சென்றனர்` என்பதொரு வரலாறு காஞ்சிப் புராணச் சகோதர தீர்த்தப் படலத்துள் கூறப்படுதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே. 

பொழிப்புரை :

அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளி யாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.

குறிப்புரை :

வைதிகருள் கருமகாண்டிகள், தேவர் பலர்க்கும் அவரது அவியைச் சுமந்து சென்று கொடுத்தல்பற்றி அக்கினி தேவனை, `தேவர் பலர்க்கும் கீழ்ப்பட்டவன்` - விண்டு பரமன். அக்கினி அவமன்: அவ்விருவர்க்கும் இடையே எல்லாத் தேவரும் (சிவஞானபோத மாபாடியம் சூ.1 அதி.2) என்பர். அவர் கொள்கையே தக்கன் வேள்விக்குப் பொருந்தியது ஆதலின், ``குலந்தரும் கீழ் அங்கி`` என்றார். `குலத்தால் தரப்பட்ட கீழ்மையை உடைய அங்கி` என்க. கோள் - குற்றம். சிவந்த - கோபித்த. சிவத்தற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. சிவந்த இது - சினந்ததனால் வந்த இத் தீ. `அது` எனின், அக்கினி தேவனைச் சுட்டுமாகலின், `இது` என்றார். ``கீழ் அங்கி`` என்றதற்கு ஏற்ப, ``பரம் இது`` என்றார். கீழான தீ மேலான தீயின்முன் நிற்கலாற்றுமோ என்பது நயம். சிவபெருமானது சினத் தீயாவது, வீரபத்திரரே என்பது வெளிப்படை. ``தீ`` என்றதற்கு ஏற்ப, ``கதுவ`` என்றார்.
இதனால், தக்கன் வேள்வியுள் ஓட்டமெடுத்தவருள் முதல்வன் அக்கினிதேவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொழிப்புரை :

சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலை மகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.

குறிப்புரை :

``தலை`` என்றதைத் திருமாலுக்கு `தலைமை` என்ற வாறாகக் கொள்க. எண்ணொடுவின் பொருட்டாகிய ``உடனே`` என்ற தனால், `சூரிய சந்திரர்` என ஒரு தொகையாக்குக. வாலை - வெண் ணிறம் உடையவள். இதனைத் தக்கன் மனைவிதன் பெயர் என்பாரது உரைக்குச் சான்றில்லை. தக்கன் மனைவி பெயர், `வேதவல்லி` என்றே கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இதனுள்ளன்றித் திருவாசகத்தும்,
``நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகனெரித் துந்தீபற;
தொல்லை வினைகெட உந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 13.
என நாமகள் நாசி அறுபட்டமை கூறப்பட்டது. `முகம்` என்பது `வாய்` எனவும் பொருள்தருமாகலின், அதனை இரட்டுற மொழிந்து, `அருக்கன் (சூரியன்) பல்லிழந்தான்` என்க.
``சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற;
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 15
என்றருளினமை காண்க.
இந்திரன் போகியாதலைக் குறிக்க, `நல் இந்திரன்` என்றார். ``நல்லோர்`` என்றது இகழ்ச்சி பற்றி.
இதனால், தக்கன் வேள்வியில் தேவர் பலரும் பலவாற்றால் ஒறுக்கப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

பொழிப்புரை :

தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூ சுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.

குறிப்புரை :

அவி மந்திரம் - அவிசை வழங்கும் இல்லம். யாக சாலை. அடுக்களை - அட்டில்; என்றது தீக் குண்டத்தை. சவித்தல் - சபித்தல்; இகழ்தல். மூன்றாம் அடியிலும், செவி மந்திரம் என ஓதுதல் பாடம் அன்று. குவி மந்திரம் - குவித்த மந்திரங்கள். ``கொடியது`` என்றது பன்மை மயக்கம். ``ஆம்`` என்றது, `அவை அன்னவாதல் இயல்பு`` என்றவாறு.
இதனால், சிவபெருமானை இகழ்ந்தவர்க்கு மந்திரங்கள் கேடு விளைத்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 

பொழிப்புரை :

நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.

குறிப்புரை :

அவ்வாறாக, அத்தேவர் தக்கன் வேள்வியில் அவியை உண்ண அப்பெருமானை விலக்கித் தாம் மட்டுமே சேர்ந்திருந்தது என்னை` என்பது குறிப்பெச்சம். மாணிக்கவாசகரும் இவ்வாறே,
``சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா இடும்நம் மவர் அவரே``
- தி.8 திருச்சதகம், 4
எனத் தேவரது இரங்கத்தக்க நிலையை எடுத்தோதியருளினார். `நல்லோர் இன்புற` என இயையும். `நவகுண்டம்` என்பது பாடம் அன்று. ``ஒன்பதும்`` என்றது, `முழுதும்` என்றவாறு. `ஒன்பதன் கண்ணும்` என உருபு விரிக்க. நாவலம்பொழில் ஒன்பது கண்டமாதல் பற்றி, உலகத்தை `நவகண்டம்` எனக் குறித்தல் வழக்கு. ஐ - தலைவன். `ஐயே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `பொன்றும்படிக்கு விளங்கு எரி கோத்தனன் வில்லார் வரை ஐ` எனக் கூட்டுக. மூன்றாம் அடியின் பாடம் பலபட ஓதப்படுகின்றன.
இதனால், தேவர்கள் தக்கன் வேள்வியில் சென்றமை நன்றி கோறலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே. 

பொழிப்புரை :

சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெரு மானையே யன்றோ!

குறிப்புரை :

படர்க்கையில் வைத்து வியக்கற்பாலளாய உமா தேவியை முன்னிலைப்படுத்து வியந்தார், அச்சுவை மிக்கு விளங்குதற் பொருட்டு, பின் இரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. நெளிதல் - நெகிழ்தல். `தெளிந்தார்` என்பது பாடம் அன்று. `ஆர் நெளிந்து கலங்கினும்` என மாற்றுக. அளிந்து - அன்பு மிக்கு. `ஆதிப் பிரானையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``விளிந்தான்`` என்றது துணிவு பற்றி எதிர்காலத்தை இறந்த கால மாகக் கூறியது. சுளிந்து - வெகுண்டு. `சுளிந்துகூறி` என ஒரு சொல் வரு விக்க. தக்கன் தனது வேள்வியைத் தொடங்கிய பொழுது, உமை அம்மை தன்னை அவன் அழையாதிருக்கவும் சென்று அவனுக்கு அறிவுரை கூறியும் கேளாமையால், அவனது வேள்வி அழியும்படி சபித்து மீண்டமையும், பின்னர் வீரபத்திரரால் யாவரும் அழிந்து கிடந் தமையைச் சிவபெருமானுடன் அங்கு அவள் எழுந்தருளியபொழுது கண்டு இரக்கம் உற்று அவர்களை உயிர்ப்பித்தருளுமாறு சிவபெரு மானை வேண்டினமையும் கந்தபுராணத்தால் அறிகின்றோம். அம்மையை வியக்கும் முகத்தால் தேவரது இழிபுணர்த்தியவாறு. இதனால், உமாதேவி தனது செயலால் ஏனையோர்க்கு உண்மை யுணர்த்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 

பொழிப்புரை :

கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே (தி.10 பா. 345) காட்டப்பட்டது. கோ - தலைவன். இது பன்மை ஒருமை மயக்கமாயிற்று. `ஆகிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், பிரளய காலத்தில் அயன் மால் இருவரும் இகலினமை இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறிய வாறு அனற்பிழம்பாய்த் தோன்றியபொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப் பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.

குறிப்புரை :

எனவே, `தெறலும், அளியும் அவ்வவர்க்கு ஏற்ற வாற்றாற் செய்யும் அவனது தலைமைப் பாடு இனிது விளங்கும்` என்றவாறு.
`கொள்ளுதலால்` என்பது `கொண்டு` எனத் திரிந்து நின்றது. தான் தலைவன் எனப்படுதலால் அவனுக்கு உளதாவது ஒரு பயன் இல்லை. அனைத்தையும் உய்விக்கும் சுமையே உளதாவது என்றற்கு, ``தலைவன் எனும் பெயர், தான் தலை மேற்கொண்டு`` என்றார். இதற்குக் காரணம் கைம்மாறு கருதாத கருணையே என்பதாம். ``எடுத்துச் சுமப்பான்`` என்றார் திருவருட்பயனில் (பா.65).
இதனால், சிவபெருமான் தெறலும் அளியும் அக்காலத்துச் செய்து நின்றமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடிபுகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.

குறிப்புரை :

`இறைஞ்சுவர்` என்பது பாடம் அன்று.
இதனால், ஊழிதோறும் உயிர்கள் சிவபெருமானது முதன்மையை மறந்து வினையிற் சுழலுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான். இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை ஏற்குமாற்றாற் கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் ஒருபெற்றியனாய் நிற்பவனும் ஆகிய அப்பெருமானை அத்தன்மையன் என்று அறிந்து துதித்து உளத்துள் இருத்த வல்லவர் இவ்வுலகத்து உளரோ! இல்லை.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற்கொண்டு உரைக்க. சயம்பு `சுயம்பு` என்பதன் திரிபு. சுயம்பு - தானே தோன்றியவன். `உலகத்து உளாரே` என்னாது, `உலகத்துள் ஆரே` என்றலுமாம். அது மிகாமை அங்கி வைத்தான் என்க. இக்கருத்து முன்னேயும் (தி.10 பா.57) கூறப்பட்டது. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், சிவபெருமான் ஊழி முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ் வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக் கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.

குறிப்புரை :

``பண் பழி`` என்றதற்கு, `பண்ணாற் பழிச்சுதல்` என உரைக்க. `இப் பழிச்சுதலாகிய வழிபாட்டினைச் செய்தவை வேதங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, ``பண்`` என்றதனை ஆகுபெயராக்கி, `வேதம்` என்று உரைப்பினும் ஆம். முதற்கண் `சென்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். கண் - இடம். சென்ற - கழிந்த. பழியாத - இகழப்படாத; என்றது, `புகழத் தக்க` என்றவாறு. இத்தகைய சிறந்த இடத்தில் இருப்பவன் அதற்கேற்ற அறிவுபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பு. நண்பழி, வினைத் தொகை. ஆளன் - அதனை உடையவன். ``சென்று`` என்றது, சென்று கொய்த தன் காரியம் தோன்ற நின்றது. `சிரத்தின்கண்` என உருபு விரிக்க. பழியாத விருத்தி - இகழாமைக்குக் காரணமான தொழில்.
இதனால், மேல், ``அயன்தலை முன் அற`` (தி.10 பா.337) என ஓதப்பட்ட வரலாறும் இப்பொழுதே நிகழ்ந்தது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

பொழிப்புரை :

`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

குறிப்புரை :

`சக்கரம் மேல்போக ஏழும் படைத்துள்ளான்` என்றாரேனும், `ஏழு பார் போகமும் படைத்து அவற்றை நிலை நிறுத்தச் சக்கரம் மேற்போக அளித்துள்ளான்` என்றல் கருத்து என்க. போதகன் - போதிப்பவன். இதற்கு `அறம்` என்னும் செயப் படுபொருள் வருவித்துக்கொள்க. திருமால் அறத்தைப் போதித்தல் சில நூல்களாலும், கொடியோரை அழிக்கும் செயலாலுமாம். கால் போது - வெளிப்படுத்தும்பொழுது: என்றது, `செருக்கினால் அறத்தை அழிவுசெய்து ஒழுகும்பொழுது` என்றதாம். ``அங்கையினோடு`` என்றது, `வறுங்கையால் போர் செய்யாது வலியதொரு கருவி கொண்டு போர் செய்தற்கு` என்றபடி. அம் - அழகு. தரம் - மேன்மை. `மேல் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுச் சிவபெருமான் உண்டாக்கியதாகக் கூறிய சக்கரத்தைத் திருமால் பெற விரும்பிச் சிவபெருமானை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச் சித்து வழிபட்டு வர, ஒருநாள் அவற்றுள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்தருளத் திருமால், அம்மலருக்கு ஈடாகத் தமது கண்ணைப் பறித்து அப்பெருமான் திருவடியில் சாத்தினார். அதனால் மகிழ்ச்சி யுற்ற சிவபெருமான் அவருக்கு அக்கண்ணை அளித்து, அவர் விரும்பிய அச் சக்கரப் படையையும் அளித்தருளினார்` என்பதும் கந்த புராணத்துள் அங்குத் தானே கூறப்பட்டது. கண்ணைத் தாமரை மலராகச் சாத்தினமையால், திருமாலுக்குச் சிவபெருமான், `பது மாட்சன்` (தாமரைக் கண்ணன்) என்னும் பெயரையும் அளித்தார் என்பது, காஞ்சிப் புராணத் திருமாற்பேற்றுப் படலத்துட் கூறப்பட்டது.
இவ்வரலாறு,
சலமுடைய சலந்தரன்ற னுடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ,
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
-தி.8 திருச்சாழல், 18
எனவும்,
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
-தி.8 திருத்தோணோக்கம், 10
எனவும் திருவாசகத்து எடுத்தோதப்பட்டது.
இதனால், திருமால் தமது காத்தல் தொழிலை இனிது நடத்தற் பொருட்டு அவருக்குச் சிவபெருமான் சக்கரம் அளித்தருளினமை கூறப்பட்டது. இவ்வரலாற்றைக் குறிக்கும் தலங்கள் திருவீழி மிழலையும், திருமாற்பேறுமாம். இதனை ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்களால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே. 

பொழிப்புரை :

சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.

குறிப்புரை :

இவ்வரலாறு இந்நூலாலே அறிகின்றோம். `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``செய்தது`` என்றதன்பின், `வியப்பு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரத்தை அளித்ததேயன்றி, அதனைத் தாங்கும் ஆற்றலையும் அளித்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொழிப்புரை :

சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அவனது கருணைப்பெருக்கு அளவிடற்கரிது` என்பது குறிப்பெச்சம். `சிவபெருமான்` என்பதுதோன்றா எழுவாயாய் நின்றது. `சத்தி` என்பது மூன்றாம் அடி முதலிலும் சென்று இயைந்தது.
இதனால், இயைபு பற்றி சிவபெருமானது வள்ளன்மையின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

பொழிப்புரை :

தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

குறிப்புரை :

இவ்வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க. `வட்கி` என்பது திரிந்து நின்றது. உமிழ்தலுக்கு, `வலிமை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. வாய் உக்கிரம், உங்காரம்.
இதனால், சிவபெருமானது ஆற்றற் சிறப்பு அவ்வாற்றானே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 

பொழிப்புரை :

இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பது பெயர். வினையெச்சமாகக் கொண்டு எழுவாய் வருவித்தலுமாம். வலம் - வெற்றிப்பாடு. `பல் வானவர்` என இயையும். ``வலம்`` என்ற எழுவாய், ``ஆதி`` என்றதன்பின் எஞ்சி நின்ற `என்னும்` என்பதனோடு முடிந்தது.
`சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், ஒருகாலத்தில் சேர இறக்கும் பிரம விட்டுணுக்களது கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான்` என்பது, `அவர் யாவரும் வினைவயத்தால் பல்காலும் பிறந்து இறக்கின்ற பசுக் கூட்டத்தினரேயாகத் தான் ஒருவனே பிறப்பு இறப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் நின்று அனைத்துயிர்கட்கும் பந்தம் வீடுதரும் பதியாகின்றான் என்பதை விளக்கும்` என்பது கூறியவாறு. மாணிக்க வாசகரும்,
நங்காய்இ தென்னதவம், நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ!
கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர்
தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
-தி.8 திருச்சாழல், 11
என்று அருளிச்செய்தார்.
`அரிபிரமேந்திராதி தேவர் பலரும் நிலையாமையுட்பட்ட பசுக்களேயாகச் சிவபெருமான் ஒருவனே என்றும் ஒருபெற்றியனாய பதி` என்பதனைத் திருநாவுக்கரசர்,
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. -தி.5 ப.100 பா.3
என விளக்கியருளினார்.
`எலும்பையும், தலையையும் அணிந்த கோலம் மேற்குறித்த உண்மையேயன்றி, அவன் காரியப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலையும் உணர்த்தும்` என்பது பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது. இதனானே, `சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்` என்பதும் கொள்ளப்படும்.
சிவபெருமான் கங்காளத்தை ஏந்தி நிற்றலைக் குறிக்கும் தலங்களே `காயாரோகணம்` எனப்படுகின்றன. காயாரோகணம், `காரோணம்` என மருவி வழங்கும்.
இதனால், `சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன்` என்பதன் உண்மை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.345) `நானே பிரான்` என மாற்றித் தனித்தனிக் கூட்டி உரைக்க. பின்னும், ``பிரமன் மால்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. தங்கள் தம் பேதைமை - தம் தம் பேதைமை. `பேதைமையாலே நிற்க` என்றது, ``கள்வனால் திரண்டனர் மக்கள்` என்பதுபோல நின்றது. ``அரனடி தேடி`` என, அடியை மட்டுமே குறித்தது, அவ்வரலாற்றைத் தொகுத்துக் கூறியபடி. ``அரற்றுகின்றாரே`` என்பதே பாடமாக ஓது கின்றனர்.
இதனால், சிவபெருமான் பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.

குறிப்புரை :

`அதனால் அவன் இவ்வுலகில் தனக்குக் கோயில் இலனாயினான்` என்பது குறிப்பெச்சம். `அடி, முடி` என்றவற்றை ``அயன் மால்`` என்பவற்றொடு எதிர்நிரனிறையாக இயைத்தல் வேண்டும் என்பது பின்னிரண்டடிகளில் விளங்கும். இத்திருமந்திரம் பாயிரத்ததாகாது, ஈண்டையதே என்பதுமேலே குறிக்கப்பட்டது.
இதனால், மால், அயன் என்னும் இருவரது தகுதி வேறு பாடுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே. 

பொழிப்புரை :

விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்ற ருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண் கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.

குறிப்புரை :

`ஆம், தாம்` என ஓதுவன பாடம் அல்ல. ஆன் - அவ் விடம். இவ்வாறு சேய்மையாகச் சுட்டியது உலகத்தின் பரப்பு உணர்த் துதற்கு. ``யானே அறிந்தேன்`` என்றமையால், பிறர் அறிந்திலர் என்பது இனிது விளங்கிற்று. அடிமுடி காணாமையேயன்றி, `அது சிவ சோதி` என்பதனையும் அறியாது திகைத்தமையின், `பிறர் அறிந்திலர்` என்றும், எவ்விடத்தும் எப்பொருளையும் நாயனார் சிவமாகக் காணுதலால், ``யானே அறிந்தேன்`` என்றும், `சிவனை அறிதல் அவனுக்குத் தொண்டு புரிந்து நிற்பதனாலேயன்றிப் பிற ஆற்றல்களால் அன்று` என்பதற்கு, `அவன் ஆண்மையாலே` என்றும் கூறினார். இக்கருத்தையே திருநாவுக்கரசு நாயனார் தமது இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையிலும் (தி.5.100) பலபட வகுத்தோதினார். சேக்கிழாரும் இவ்வரலாற்று உண்மையை,
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாய கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
-தி.12 பெ.பு. திருஞான., 78
என விளக்கினார்.
தேடிக் கண்டு கொண்டேன்; - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன். -தி.4.ப.9.பா.12
என்று அருளிச்செய்ததும் இக்கருத்தினைப் புலப்படுத்துவதாம். ``அவன்`` என்பதில் தொக்குநின்ற ஆறாவது, நான்காவதன் பொருளது. ஆள்மை - ஆளாம்தன்மை.
இதனால், மாலும், அயனும் அடிமுடி காணமாட்டா ராயதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

பொழிப்புரை :

இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லை யற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.

குறிப்புரை :

`அதனால், அவனது வியாபகத்துள் ஒரு பகுதியிலே அடங்கிக் கிடப்பவராகிய பிரம விட்டுணுக்கள் அவனை அளவிடுதல் எங்ஙனம் கூடும்` என்பது குறிப்பெச்சம். முன்னம் - முன்பே. ``தாணுவும்`` என்புழி, `ஆய்` என்பது விரிக்க.
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 10
``பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
என்றாற்போலும் திருமொழிகளும் சிவபெருமானது அளவிடப்படாத பெருநிலையை விளக்க எழுந்தனவாம். ``ஆகி`` என்றதனை, `ஆக` எனத் திரிக்க. இது முதலாக இவ்வதிகாரத்தில் உள்ள திருமந்திரங்கள், `சாருவோபாதாளம்` என வேறோர் அதிகாரமாகச் சில பிரதிகளில் உள்ளன என்பர். ``திருவுரு`` என்பதில் உரு, நிலை. முன்னை மந்திரத்தில் உள்ள `மணிகண்டன்` என்பதைச் சுட்டுவதாகிய `அவன்` என்பது தோன்றா எழுவாய்.
இதனால், சிவபெருமானது பெருமை கூறும் முகத்தால், பிரம விட்டுணுக்களது சிறுமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான், மண்ணும், விண்ணும் ஆகிய உலகம் முழுதும் நின்றும் வளர்ந்தும் நிற்பவன் அல்லனோ! அதனால், அவனது திருவுருவத்தைக் கண்டு பிரம விட்டுணுக்கள் இருவரும் அஞ்சுதலும், அறியாமையால் அதனை அளந்தறியச் சென்றவழி எய்த்து வருந்துதலும் இயல்பே.

குறிப்புரை :

``அவன்`` என்றதனைத் தாப்பிசையாக முதலிலும் கூட்டி எழுவாயாக்குக. நீளியன் - நீண்டிருப்பவன்; ``திருமுடி மேல் செல, கழலடி நாட ஒண்ணாது`` என்றது, திருமுடியை அறிந்தார் ஒரு வருமிலராயினும், ``திருவடியை அறிந்தார் பலர்; அதுவும் இவர்கட்கு அகப்படாதாயிற்று`` என்றபடி. `கழலடியும்` என்ற உம்மை தொகுத் தலாயிற்று. ஈற்றில் உள்ள ஏகாரமும் தேற்றப் பொருட்டு. திருமுடி முடிவையும், திருவடி தொடக்கத்தையும் குறிப்பனவாதலின், திருவடி சிலராலேனும் காணப்பட்டதாகும். `அவன் வடிவை அஞ்சினராய் அது ஆய்ந்து சென்றார் இருவர் நாட ஒண்ணாதே` என முடிக்க.
இதனால், பிரம விட்டுணுக்களது இயல்பாய சிறுமை, செருக்குக் காரணமாகப் பின்னும் மிகுதிப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

பொழிப்புரை :

சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!

குறிப்புரை :

``முனிவர்`` என்றது, கருமகாண்டிகளை. அவர் தேவரைத் தெளியாராயினும், அவரை நோக்கிச் செய்யும் கருமங்கள் பயன் தரும் என்னும் தெளிவுடையர். இறுதிக்கண் கூறற்பாலராய அவரைச் செய்யுள்நோக்கி இடையே கூறினார். தா அடி, படைவீரர் போர்க்கு அணிவகுத்து நடக்கும் நடை. அஃது இங்குச் செருக்கினால் எதிரிட்டுக் காண முயலுதலைக் குறித்தது. தலைப்பெய்தல் - சந்தித்தல்; காணுதல். இறுதிக்கண், `கூடுமோ` என்பது சொல்லெச்சம். `வான வரும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இதனால், அயன், மால் என்பவரோடு இனம்பற்றிப் பிறரது சிறுமைகளும் தோன்றக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

தானக் கமலத் திருந்த சதுமுகன்
மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. 

பொழிப்புரை :

தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி உள்கத்தக்க பெரும் பொருளாகிய சிவபெருமான், அவர்தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!

குறிப்புரை :

`கமலத் தானம்` என மாற்றிக்கொள்க. `சதுமுகனும்` என்னும் உம்மை தொகுத்தல். மானம் - பெருமை. கருமை, இன அடை. `உணர்கின்றதான` என்பதன் பின் பகரமெய் விரித்தல். ``அண்மையதாமே`` என்புழி, ``அவர்க்கு`` என்பது அவாய் நிலையான் வந்தது. ஏகாரம், எதிர்மறை உணர்த்திற்று. ``தானக் கருங் கடல், ஊழித் தலைவன், தன்மையதாம்`` என்பன பாடம் அல்ல.
இதனால், மாலும் பிரமனும் ஆயினும் சிவபெருமானை உள்குவோரன்றி, அவனால் உள்கப்படுவோர் ஆகாமை கூறி, அவர் அடிமுடி அறியமாட்டாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

பொழிப்புரை :

அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி நின்ற சிவசோதி, அதன்பின் இவ்வாறு பிரம விட்டுணுக்களால் அடிமுடி அறியப்படாத நிலைமையைக் காட்டி நிலைபெறச் செய்த மேலான சிவநெறியை முன்னர் அறிந்து, உலகம் முழுதும் ஒருங்கே வழி படுகின்ற இலிங்க வடிவை வணங்கித் தம் குறையை எடுத்துக்கூறி முறையிட்டு, மக்கள் இவ்வுலகப் பயனையேயன்றி அவன் அருளைப் பெறுதலாகிய ஞானத்தையும் அடையலாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியிலும் முதலில் வந்தசொல் வருதலும், மோனை சிதைதலும் பொருந்தாமையால், அவ்விடத்து `ஆலிங்கனம் செய்து` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிக. ஓலம், `ஓல்` என வருதல் செய்யுட்கண் ஏற்றதேயாம். ஓலம் செய்தல் - முறையிடுதல். கோல் - தறி; இலிங்கம். `அமைந்து` `அமைஞ்சு` எனப் போலியாயிற்று. அமைதல் - மனம்பற்றி வணங்குதல். `அமைஞ்சு ஓல் இங்ஙனம் செய்து அருள்கூடலும் ஆம்` எனக் கூட்டுக.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியால் விளைந்த பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
 

பொழிப்புரை :

சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிட மாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.

குறிப்புரை :

கோள் - கொள்ளப்படும் பொருள். மூன்றாம் அடியிலும் ``ஆள்கொடுத்து`` என ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``கோலிங்கு அமைஞ்சருள் கூடலுமாமே`` என்றவாறும், ``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை அற்சிப்பர்`` (சிவஞானசித்தி சூ. - 2.92) என்றவாறும் இவ்வுலகில் தேவர் பலர் வந்து சிவபெருமானை வழிபட்டமை அறியப்படுகின்ற தாயினும், அவர் தம் வழிபாடு பயன் கருதாத அன்பு வழிபாடாகாமையால், சிவபெருமான் அவர்கட்கு அரியனே ஆகின்றான் என, மால் அயன் என்பவரோடு, இனம்பற்றி ஏனைத் தேவரும் சிவபெருமானை வழிபட்டும் அவனை அறியாரா யினமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 

பொழிப்புரை :

பிரளய வெள்ளத்தில் ஆலிலைமேல் மிதந்து எங்கும் திரிந்து, `இனி என்ன செய்வது` என்று ஆராய்கின்ற திரு மாலுக்கு மகனாக நான்முகன் தோன்றுவான். அதன்பின், ஊழிக் காலத்தில் எரிகின்ற சூரியனது ஒளியையும் வென்ற திருமேனி யனாகிய சிவபெருமான், `அழிந்த இவ்வுலகத்தை நீவிர் மீளப் படைத்துக் காமின்` என்று பணித்தருளுவான். அவ்வாற்றால் பின்பு படைப்பு முதலிய தொழில்கள் நிகழும்.

குறிப்புரை :

இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது. `காமின்` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. வாழி, அசைநிலை. `தாவென்` என்பது பாடம் அன்று. ``விதித்துக் காமின் எனும்`` என்றது, `சதுமுகன் விதித்தலையும், மாயோன் காத்தலையும் செய்க` என்பான் என்றவாறு.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியின் பின்விளைவு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருளைக் கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.

குறிப்புரை :

முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி)
ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல.
பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே. 

பொழிப்புரை :

இதன் பொருளையும் கீழ்வரும் குறிப்புரை பற்றி உரைத்துக்கொள்க.

குறிப்புரை :

மேற்கூறிய `நாதன்` என்னும் சிவன், பொதுவாய் நாத மாத்திரமாய்த் தோன்றிய எழுத்தோசையைச் சிறப்பாகத் தோற்றுவிக்க விரும்பிக் கிரியா சத்தியால் பொதுவாக முயல்வான். அவ்வாறு அவன் பால் எழும் முயற்சியே `விந்து` என்னும் சத்தியாவாள். அவள், மேற் குறித்த நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவத்தைத் தோற்று வித்து, அதன்கண் நிற்பாள். அதனால் ``நாதத்தில் விந்துவும்`` என்றார்.
பின்னர் ``நாத விந்துக்களின்`` என்றதில் இன் சாரியை யின்பின் `கீழ்` எனப் பொருள் தரும் கண்ணுருபு விரிக்கப்படும்.
``ஞானம், கிரியை`` என்றது சிவன் சத்திகளுக்கு நிரல் நிறை. ``சிவன் சத்தி என்ன`` என்றது, `சிவன் என்றும், சத்தி என்றும் இருவர் தோன்றுவர்` என்றவாறு. `பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்` என்றது, `ஆதி சத்தி தானே, ஞானம், கிரியை என்னும் வேறு பாட்டோடு தோன்றுதலால்` என்றவாறு. எனவே, `முதல்வன் ஞான சத்தியால் சிறப்பாக அறியும் நிலையிலே சிவன் என நிற்பான்` என்பதும், `அவன் கிரியாசத்தியால் சிறப்பாக முயலும் நிலையே சத்தி என்னும் நிலை` என்பதும் விளங்கும்.
`சிவன்` எனப் பெயர் பெற்று நின்ற சிவன் மேற்கூறிய விந்து தத்துவத்திலிருந்து `சிவம்` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பான். `சத்தி` எனப் பெயர்பெற்று நின்ற சத்தி, `சிவம்` என்னும் தத்துவத்திலிருந்து `சத்தி` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பாள். இவ்வாற்றால் இத்தோற்றம் பின்வருமாறு அமையும்.
ஆதிசத்தி சுத்தமாயை
ß ß (1) நாதன் நாதம்
ß ß (2) விந்து விந்து
ß ß (3) சிவன் சிவம்
ß ß (4) சத்தி சத்தி
இவற்றுள் சிவன் சத்திகட்கு உள்ள பெயர்களே, அவர்களால் தோற்று விக்கப்பட்டுத் தமக்கு இடமாகக் கொள்ளப்படுகின்ற தத்துவங்கட்கும் பெயராதல் விளங்கும்.
இங்கு இந்நாயனார் கூறிய இம்முறை சில ஆகமங்களுட் கூறியவாறாகும். வேறு சில ஆகமங்கள் இங்கு, `நாதம், விந்து` என்றவற்றை, `சிவம், சத்தி` என்றும், இங்கு, `சிவன், சத்தி` என்ற வற்றை, `நாதம் விந்து` என்றும் மாற்றிக் கூறும். அம்முறை பற்றியே சிவஞானசித்தி (சூ. 2-74),
``சிவம் சத்தி நாதம் விந்து ... ... ... ...
ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும்``
என்று கூறிற்று. எவ்வாறாயினும், `இந்நான்கும் முதல்வனது அருவத்திருமேனிகள்` என்பதில் மாறுபாடில்லை. இனி முன் இரண்டு நிலைகளை முறையே `பரநாதம், பரவிந்து` என்றும், பின் இரண்டு நிலைகளை `அபரநாதம், அபரவிந்து` என்றும் கூறுதல் எல்லா ஆகமங் களுக்கும் ஒப்ப முடிந்தது.
``வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே`` என்றது `சிவம் சத்திகள் தம்மில் தாம் வேறுபட்ட விருப்பம் காரணமாகச் சுத்த மாயை வேறு வேறு நிலைகளாக விருத்திப்பட்டு நிற்கும்` என்றவாறு. இச்சையில் - இச்சையின்படி.
``விந்து`` (பிந்து) என்பது `சுத்தமாயை, அதன் ஒருவகை நிலை, அதனை இடமாகக் கொள்ளும் சத்தி` என்னும் மூன்றற்கும் பெயராகும். அவற்றுள் ஒன்றைக் கொள்ளவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொள்ளலாகாது. இவ்வாறே, `நாதம்` என்பதும், சிவனது நிலைகளில் ஒன்றற்கும், அவன் இடமாகக் கொள்ளுகின்ற தத்துவத்திற்கும் பெயராய் நிற்கும். நாயனார் சொற்சுருக்கம் கருதி ஏற்ற பெற்றியால் பொருள் கொள்ள ஓதினார். எனவே, முன் மந்திரத்தில் ``அதன் பால் திகழ் நாதமே`` என்றதற்கு நேர்பொருளாக, `ஆதி சத்தியினிடமாக நாதம் என்னும் சிவன் தோன்றுவன்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அச்சிவனால் நாத தத்துவம் தோன்றும்` எனவும் கொள்ளப்படும். அவ்வாறே இம் மந்திரத்தில் ``நாதத்தில் விந்துவும்`` என்றதற்கு, நேர் பொருளாக, `நாதம் என்னும் சிவனிடத்து விந்து என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அவளால் நாத தத்துவத்திலிருந்து விந்து என்னும் தத்துவம் தோன்றும்` எனவும், ``நாத விந்துக்களில் சிவன், சத்தி தோன்றும்`` என்றதற்கு நேர்பொருளாக, `நாத விந்துக்களின் கீழ் விந்து` என்னும் சத்தியினின்றும் சிவன் என்னும் சிவன் தோன்றுவான்; அவனிட மிருந்து சத்தி என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `விந்து என்னும் தத்துவத்திலிருந்து சிவம் என்னும் தத்துவமும், சிவம் என்னும் தத்துவத்திலிருந்து சத்தி என்னும் தத்துவ மும் தோன்றும்` எனவும் கொள்ளப்படும் என்க.
`மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அதனைச் சிவபெருமான் தனது இச்சைப்படி ஞானக் கிரியா சத்திகளால் தொழிற்படுத்துவான். அந்த மாயைதான் ஆணவ மலத்தின் தர தம நிலைகளோடு கலந்து தூய்மை இழந்தும் கலவாது தூய்மையாயும் இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும். `மாயை` என்றால் `மயக்குவது` எனக் கருதப் படுவதால், சுத்த மாயையை ஆகமங்கள் `மாயை` என்று குறிப்பதே இல்லை. `விந்து, குடிலை, குண்டலினி` என்றாற்போலவே குறிப் பிடும். மாயை எனக் கூறவேண்டின், `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் குறிப்பிடும். மகத்து - பெரிது. ஊர்த்துவம் - மேல் உள்ளது; வியாபகம் - எனவே, ``மாயை`` என வாளா கூறுமிடத் தெல்லாம், ``அசுத்த மாயை`` என்றே கொள்ளுதல் வேண்டும். சுத்த மாயையை ஆகமங்கள் ``விந்து`` எனக் கூறுதல்போல, அசுத்த மாயையை ``மோகினி`` என்று கூறும். மோகினி - மயக்கற் கருவி. எனவே, ``அசுத்த மாயையே மயக்கத்தைத் தரும்`` என்பதும், ``சுத்த மாயை மயக்கத்தைத் தராது`` என்பதும் அறிந்துகொள்ளப்படும். மயக்கமாவது, ஐம்புல இன்பங்களையே பெரியனவாகக் கருதி, அவற்றால் விளையும் துன்பங்களை அறியாதிருத்தல்.
இறைவன் உலகைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது ``அருவம், அருவுருவம், உருவம்`` என்னும் மூவகைத் திரு மேனிகளைக் கொண்டு விளங்குவன். அங்ஙனம் விளங்குமிடத்துச் சுத்தமாயையினின்று தோற்றுவிக்கப்படுகின்ற தத்துவங்களையே தான் இடமாகக் கொண்டிருப்பன். அதனால் அத்தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்களைப் பெற்று நிற்கும் உயிர்களுக்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை.
முதற்காரணப்பொருள் காரியப்படும் முறைகள் பல. அவற்றுள் சிவாகமங்களிற் கொள்ளப்படுவன, `விருத்தி, பரிணாமம்` என்னும் இரண்டுமேயாம். அவற்றுள் விருத்தியாவது சுருங்கிக் கிடப்பது விரிவடைந்து நிற்றல். இதற்கு, `படம்குடிலானாற்போல` என உவமை கூறுவர். அஃதாவது கட்டிச்சுருட்டி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி, பின், விரித்து அமைக்கும்பொழுது பெரிய கூடாரமாகக் காட்சியளிப்பது போல்வதாம். பரிணாமமாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாய் உருமாறி நிற்பது. மண் குடமாவதும், பால் தயிராவதும் போல்வன இதற்கு உதாரணமாகும். பரிணாமமும், `முழுவதும் பரிணமித்தல், ஒரு கூற்றிற் பரிணமித்தல்` என இருவகைப் படும். பால் தயிராவது முழுவதும் பரிணமித்தல். வெண்ணெயில் புழுத் தோன்றுதல் ஒருகூற்றிற் பரிணமித்தல். இவ்விரண்டனுள்ளும் சிவாகமங்களில் கொள்ளப்படும் பரிணாமம் ஒரு கூற்றிற் பரிண மித்தலே. ``விருத்தி, பரிணாமம்`` இரண்டனுள், சுத்தமாயை காரியப் படுவதெல்லாம் விருத்தி முறையிலாம். அசுத்தமாயை காரியப் படுவதெல்லாம் பரிணாம முறையிலாம். `பரிணாமம் ஒரு கூற்றிற் பரிணமித்தலே` என்பதை மறக்கலாகாது.
முதல்வன் உலகத்தைக் கருதாது பராபர சத்தியோடு கூடிப் பராபரனாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையே இயற்கை நிலை. அதுவே ``சொரூபம்`` எனப்படும். பிறவெல்லாம் உலகத்தைக் கருதி அதற்கேற்ப வேறுபட்டு நிற்கும் நிலையாதலின், அவையெல்லாம் செயற்கை நிலையே. இவை `தடத்தம்` எனப்படும். தடத்தம் - சார்பு பற்றியது. ``சொரூபம், உண்மை; தன்னிலை`` என்பன ஒருபொருட் சொற்கள். முதல்வனை, சொரூப நிலையில் வைத்துக் கூறும் பொழுது, ``சொரூப சிவன்`` என்றும், தடத்த நிலையில் வைத்துக் கூறும்பொழுது ``தடத்த சிவன்`` என்றும் கூறுவர். சொரூப சிவனுக்கு உருவம், பெயர், தொழில், ஒன்றும் இல்லை; தடத்த சிவனுக்கு அளவற்ற உருவம், பெயர் தொழில்கள் உள்ளன என்க. உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன், அவைகளை மேற்கொள்வது உயிர்களை உய்விக்கவேண்டும் என்னும் கருணையினாலேயாம். அதனால், அவ்வுருவம், பெயர், தொழில் யாவும் அருள்மயமானவையே; நம்மனோரது உருவம் முதலியன போல மாயாமயம் ஆனவை அல்ல; அருள் அவனது சத்தியே யாதலால், எல்லாம் வல்ல அச்சத்தியால் தனது இச்சைப் படியான உருவம் முதலியவற்றை அவன் தானே கொள்வன்; அதனால், அவைகளை அவனுக்குப் படைத்துத்தர வேறொருவர் வேண்டுவ தில்லை.
இதனால், படைப்புத் தொடர்ச்சி சிறிது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 

பொழிப்புரை :

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாத சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு இவ்வாறு அச்சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை. எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல், அறிவு, செயல் (ஞானம், கிரியை) என்னும் வேறுபாடுபற்றிக் கொள்ளப்படும் உருவு, பெயர், தொழில் என்பன பற்றியேயாம் என்பதாயிற்று. இவ்வாறு தன்னின் வேறாகாத சத்தியை அதுதானே எல்லாம் செய்யவல்லதாக வேறு நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளை (முதல்வனை) `இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்` (தி. 6 ப.97 பா.10) என்று சொல்லாற் சொல்லி விளக்கப்புகின், அஃது ஒருவாற்றானும் இயலாது. ஏனெனில், சொற்கும், அப்பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

பொழிப்புரை :

சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.

குறிப்புரை :

இங்கு `நாதம், விந்து` என்றது, அபர நாத விந்துக்களை. எனவே, பரநாத விந்துக்களை விதந்திலர் என்க. அபர விந்துவினின்றும் சதாசிவர் தோன்றுவர். அவரிடமிருந்து `மகேசுரர், உருத்திரர், மால், அயன்` என்பவர் முறையே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவரும் முறையே, `நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் பூதங்கட்குத் தலைவராவர். சதாசிவன் முதலிய ஐவர்க்கும் உரிய சத்திகள் முறையே மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் என்பவராவர். இச்சத்திகளெல்லாம் அபர விந்து முதலிய சத்தி பேதங்களினின்றே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். இங்குக் கூறப்பட்ட உருத்திரன், மால், அயன் என்னும் மூவரும் சிவனின் வேறானவர் அல்லர்; சிவன் தானே கொள்ளும் நிலைகளாம். இவ்வாறு சிவன் தானே பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவும், பெயரும், தொழிலும் கொண்டு நிற்றல் `சம்பு பட்சம்` எனப்படும். புண்ணிய மிகுதியால் இந்நிலைகளை ஆன்மவருக்கத்துட் பட்டவருக்கும் முதல் வன் வழங்குதல் உண்டு. அவை `அணுபட்சம்` எனப்படும். அணுபட்ச சம்புபட்சங்களைக் கூறுமிடத்து, `மகேசுரனுக்குக் கீழ் சம்புபட்சம் இல்லை; உருத்திரனுக்கு மேல் அணுபட்சம் இல்லை என்பவரும், சம்புபட்சம் எல்லா நிலைகளிலும் உண்டு என்பவரும், `எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு` என்பவருமாகப் பலதிறத்தர் ஆசிரியர். அவருள் எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு என்பவரது கொள்கையே இந்நாயனாரது கருத்தாகத் தெரிகின்றது.
சார் வத்து - சார்பாய பொருள்; தலைமைப் பொருள். இதன் பின் `ஆக` என்பது எஞ்சிநின்றது. சார்த்துமான் - துணையாக உடன்வைத்து எண்ணப்படுகின்ற பெண்; துணைவி.
சதாசிவமூர்த்தி ஞானம், கிரியை இரண்டும் சமமாய் நிற்கும் நிலையினர். இவர் தோற்றுவித்து இடமாகக் கொள்ளும் தத்துவம் சாதாக்கியம். இது மேற்கூறிய அபரவிந்துவிலிருந்து தோன்றுவதாம். ஞானம் குறைந்து, கிரியை மிகுந்திருப்பதே மகேசுர நிலை. மகேசுரன் சாதாக்கியத்திலிருந்து ஈசுர தத்துவத்தைத் தோற்றுவித்து அதனைத் தனக்கு இடமாகக் கொள்வான். கிரியை குறைந்து ஞானம் மிகுந்த நிலையில் சிவன் வித்தியேசுரன் என நின்று, ஈசுர தத்துவத்திலிருந்து `சுத்த வித்தை` என்ற தத்துவத்தைத் தோற்றுவித்து அதன்கண்ணே `உருத்திரன், மால், அயன்` என மூன்று நிலைகளில் நிற்பன். அதனால், வித்தியேசுரனை வேறு வைத்து எண்ணுதல் இல்லை.
இதுகாறும் கூறிவந்தவாற்றால், பரநாதம், அபரநாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சிவபேதம் ஏழும், `பரவிந்து, அபரவிந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எனச் சத்திபேதம் ஏழும் ஆதல் விளங்கும். எனினும், பரநாதத்திலிருந்து அபரநாதம் தோன்றாமல், இடையே பரவிந்து தோன்ற, அதினின்றே அபரநாதம் தோன்றுதலானும், அவ்வாறே அபரநாதத்திலிருந்து சதாசிவன் தோன்றாமல், இடையே அபரவிந்து தோன்ற, அதினின்றே சதாசிவன் தோன்றுதலானும், பர அபர விந்துக்களாகிய சத்தி பேதங்களையும் சிவபேதமாகக் கூட்டி எண்ணி, `சிவபேதம் நவந்தருபேதம்` என்கின்றன ஆகமங்கள். அதனையே சிவஞானசித்தி (சூ. 2.74) நூல்,
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; உருவம்நால்; இங்கருவம்நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
எனக் கூறிற்று. இதனுள், `பரநாதம், பரவிந்து, அபரநாதம், அபரவிந்து, என மேலே உள்ள நான்கும் அருவத் திருமேனிகள்` என்பதும், `மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனக் கீழே உள்ள நான்கும் உருவத் திருமேனிகள்` என்பதும், `இடையே உள்ள சதாசிவமூர்த்தம் ஒன்றும் அருவுருவத்திருமேனி` என்பதும் கூறப்பட்டவாறு அறிக. அருவுருவத் திருமேனி என்பதே மேல் கூறப்பட்ட இலிங்க வடிவம். எனவே, சதாசிவ மூர்த்தமாவது இலிங்க வடிவமே என உணர்க.
இதனால், சுத்த மாயையில் நிகழும் படைப்புக் கூறி முடிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொழிப்புரை :

`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர் நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரை களே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரையிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன் மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.

குறிப்புரை :

எனவே, `வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும்` எனக் கூறுதல் தூலாருந்ததி நியாயமாகப் பொதுப் படக்கூறுதலே; உண்மையாற் கூறுமிடங்களில் தன்மாத்திரையினின்று பூதங்கள் தோன்றும் என்றே கூறப்படும் என்பதாயிற்று.
`மகத்து` என்னும் வடசொல், தமிழில், ``மான்`` எனப்படும். நம்மனோர் உலகிற்கு இதுவே முதற்காரணமாதலால் இது, `மகத்து` எனப்படுகின்றது. `பிரகிருதி` எனவும், `மூலப் பிரகிருதி` எனவும் கூறப்படுவது இதுவே. சிவாகமங்கள் இதனை, `பிருகிருதி மாயை` எனவும் கூறும். பிற சமயங்கள், `இது பிறவற்றிற்குக் காரணமாவ தல்லது காரியம் ஆகாது` எனவும், `அதனால் இதுவே உலகிற்குப் பரம முதற்காரணம்` எனவும் கூறும். ஆயினும் சிவாகமங்கள், `இது அசுத் தமாயை யினின்றும் தோன்றுகின்ற, கலை என்னும் தத்துவத்தினின்றும் தோன்றும் காரியமே` எனக் கூறும்.
`சுத்த உலகம், மிச்சிர (கலப்பு) உலகம், அசுத்த உலகம்` என உலகம் மூவகைத்து என்பதும், `அதனால், அதற்கு முதற்காரணமும் மூன்றாதல் வேண்டும்` என்பதும், அம்மூன்றாவன, ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்பன என்பதும், ``அவற்றுள் சுத்த மாயையும், அசுத்த மாயையுமே எஞ்ஞான்றும் காரணமாயே நிற்பன; பிரகிருதி மாயை தன் காரியங்களை நோக்கக் காரணமாய் நிற்பினும், அசுத்தமாயையைின் காரியமேயாம்`` என்பதும் சிவாக மங்களின் துணிவு. சுத்த மாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் யாவும், `வைந்தவம்` என்றும், அசுத்த மாயையே `மாயை` எனப்படுதலால் அதன் காரியங்கள் யாவும் `மாயேயம்` எனவும், பிருகிருதியின் காரியங்கள் யாவும் `பிராகிருதம்` எனவும் கூறப்படும். பிராகிருதத்தையும், மாயேயமாக அடக்கிக் கூறுதல் உண்டு.
``மானின்கண் பூதங்கள் ஐந்தும் தோன்றும்`` என்று தொகுத்துக்கூறி ஒழியாது, வகுத்துக் கூறினார், அவற்றின் தோற்ற முறை உணர்த்தற்கு. ``கனலின்கண்`` என்பது திரிந்து நின்றது. `கான் - காடு. அஃது ஆகுபெயராய்த் தீயை உணர்த்திற்று` எனவும் உரைப்பர். ``நீரும்`` என்றதற்கு, `நீர் வெளிப்பட்டபின்` என்பது பொருள். ``கலந்து`` என்றது `அவற்றொடு கூடி, `பூதங்கள் நான்கு` என்று ஆகிய பின்` என்றபடி. ``கடினம்`` என்றது ஆகுபெயரால், அக்குணத்தை யுடைய ``நிலம்``என்னும் பூதத்தை உணர்த்திற்று. ``கடினமாய்`` என்பதில், ``ஆய்`` என்பதனை ``ஆக`` எனத் திரிக்க. ஆதல், தோன்றுதல்.
தேன் வடித்தெடுத்த தேறல் ஆதலின், அதுபோலப் பூதங்களின் நுண்ணிலையாய அவற்றின் காரண நிலையை, ``தேன்`` என்றார். இக்காரண நிலையே தன்மாத்திரையாதல் அறிக. இவற்றைத் தேன் என்றதனானே, காரணத்தன்மை காரியத்தினும் உளதாகும் முறைமை பற்றிச் சத்தம் முதலிய தன் மாத்திரைகளது தன்மை அவற்றின் காரியங்களாகிய வானம் முதலிய பூதங்களினும் காணப்படும் என்பது குறிப்பாற் கூறப்பட்டதாம். `தேனின்கண் செறிந்து பூதமாய்` என்று ஒழியாது, ``ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்`` என இருமுறை தொகை கொடுத்து ஓதினார், `ஒரு தன்மாத்திரையிலே ஐந்து பூதமும் தோன்றுதலும் ஒரு தன்மாத்திரையிலே ஒரு பூதந்தோன்ற, அதன்பின், ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுதலும் இன்றி, வேறு வேறாய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து, ஒரு தன்மாத்திரையில் ஒரு பூதமாக ஐந்து தன்மாத்திரையில் ஐந்து பூதமும் தோன்றும்` என்றற்கு ஐந்தும் தேனின்கண் செறிந்து ஐந்துமாம் என்றது, `ஐந்து பூதங்களும் முன்பு தனித்தனிக் காரணநிலையில் நின்று, பின் காரியமாகத் தோன்றும்` என்றவாறு. இவ்வாறு உரையாக்கால், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``பூதமாய்`` என்பதில் ``ஆனபின்`` என்பது, ``ஆய்`` எனத் திரிந்து நின்றது. `இப்புவனம்` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. இப்புவனம், பிருதிவி தத்துவ புவனம். எனவே, ``இவ்வாறே ஏனைத் தத்துவங்களினும் புவனங்கள் உள`` என்பது குறித்துவாறு காண்க. இவ்வாற்றால் இங்குக் கூறிய தத்துவத்தோற்றம் பின் வருமாறாதல் காண்க.
மான் (பிரகிருதி)
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
(ஓசை) (ஊறு) (ஒளி) (சுவை) (நாற்றம்)
வானம் காற்று தீ நீர் நிலம்
(ஆகாயம்) (வாயு) (தேயு) (அப்பு) (பிருதிவி)
``சுவை ஒளி ஊறோசை நாற்றம்என் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு`` -குறள், 27
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்``
(தொல். பொருள்) என்றற்றொடக்கத்தனவாக இவ்வுலகம் பற்றிப் பெரும்பான்மையாக யாண்டும் யாவரும் அறியக் கூறப்படுவன தன்மாத்திரைகளும், ஐம்பெரும் பூதங்களும் ஆகிய தத்துவங் களேயாதலின், `சிறப்புடைப் பொருளைத் தான்இனிது கிளத்தல்`` என்னும் முறையால் அவற்றின் தோற்றத்தையே சிறந்தெடுத்துக் கூறினார்.
எனவே, மானின்கண் தோன்றுவனவாக (பிரகிருதியின் காரியங்களாக) வேறும் சில தத்துவங்கள் உள என்க. அவை அந்தக் கரணங்களும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுமாம். ஆகவே, மானின் காரியங்கள் அனைத்தையும் பின் வருமாறு கண்டு கொள்க.
மான் (பிரகிருதி)
குணம்

புத்தி
அகங்காரம்
(தைசதம் வைகாரிகம் பூதாதி)
மனம் - செவி, தோல், வாக்கு, பாதம், பாணி,
கண், நாக்கு, மூக்கு. பாயு, உபத்தம்
(ஞானேந்திரியம்) கன்மேந்திரியம்
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி
குணதத்துவமே `சித்தம்` என்னும் அந்தக்கரணமாம். ஆகவே, ``சித்தம், புத்தி, அகங்காரம், மனம்`` என்னும் அந்தக்கரணம் - 4, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5, தன்மாத்திரை - 5, பூதங்கள் - 5, ஆக 24 மானின் காரியங்கள் என உணர்க.
இதனால், பிரகிருதி மாயையில் உளவாகும் படைப்புக் கூறப் பட்டது. இடைநின்ற அசுத்த மாயைப் படைப்பினை நாயனார் இங்கு விதந்திலர். எனினும், அசுத்த மாயா காரியங்களை இங்கு ஒருங்கு இயையக் காட்டுதும்:-
அசுத்த மாயை
1. மாயை
2. காலம், 3. நியதி, 4. கலை,
5. வித்தை பிரகிருதி
6. அராகம்
7. புருடன்
காலம், `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என மூன்றாகி, முறையே ஒரு கன்மத்திற்கு எல்லையையும், மற்றொரு கன்மத்திற்குப் பயனையும், வேறொரு கன்மத்திற்குப் புதுமையையும் உண்டாக்கும். நியதி, அவரவர் செய்த கன்மத்தை அவரவரே நுகருமாறு நியமிக்கும். கலை, வித்தை, அராகம் என்பன முறையே ஆன்மாவின் ``கிரியை, ஞானம், இச்ை\\\\u2970?`` என்னும் சத்திகளை விளங்கச்செய்யும். காலம் முதலிய ஐந்தும் வந்து பொருந்திய பொழுதுதான், ஆணவமல மறைப்பால் சடம்போலக் கிடந்த ஆன்மா கன்ம நெறியில் நின்று ஒன்றை அறியவும், விரும்பவும், செய்யவும் உரியதாய், `புருடன்` எனப் பெயர்பெற்று நிற்கும். அதனால், `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. ஆன்மா காலம் முதலிய ஐந்தோடும் கூடி வினை நெறியில் செல்லும் நிலையே புருட தத்துவமாம். `மாயை` என்பது, காலம் முதலிய ஐந்தும் தோன்றுதற்கு ஏதுவாக அசுத்த மாயையில் பக்குவப்பட்ட ஒரு பகுதியேயாம். எனவே, இது மற்றவைபோலக் காரியமாகாது. காரணமேயாயினும், பக்குவப்பட்டமை பற்றி மற்றைய தத்துவங்களோடு ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது. எனவே, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் ஏழாதல் அறியப்படும். சுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஐந்து. அசுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஏழு, பிரகிருதி மாயையில் தோன்றும் தத்துவம் இருபத்து நான்கு ஆகத் தத்துவம் முப்பத்தாறு ஆதல் காண்க. ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என நின்ற இவை முறையே ``சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம்`` எனப் பெயர்பெறும். இவைகளில் இங்கு எடுத்தோதியவைபோக, ஏனையவற்றை நாயனார் பின்னர் ஆங்காங்கு இடம் வந்துழி வந்துழிக் குறித்தருளுவார்.

பண் :

பாடல் எண் : 6

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. 

பொழிப்புரை :

உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்ற வன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.

குறிப்புரை :

எனவே, `சிவபெருமான் தானே நேர்நின்றும், தக்கார் பிறரைக்கொண்டும் உலகத்தை நடத்துவான்` என்பதாம். தானே நின்று நடத்துதல் சுத்த மாயையில். ஏனை இருமாயைகளிலும் பிறரைக் கொண்டு நடத்துவன் என்க. தோற்றுவிக்கப் படுபவரை, ``புத்திரர்`` என்றார். `படைப்பானும்` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஆகவே, ஏனைநால்வரும் தத்தமக்கு ஏற்ற வகையில் நின்று காத்தல் முதலியவற்றைச் செய்வர் என்பது பெறப்பட்டது.
இதனால், சிவபெருமான் படைத்தல் முதலியவற்றைச் செய்யு மாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

பொழிப்புரை :

புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.

குறிப்புரை :

``இயமானனை`` என்பது குறைந்து நின்றது. இயமானன் - ஆன்மா. ``கலவி`` என்றது, கலத்தலோடு கலந்து நின்று செய்யும் செயலையும் குறித்தது. ``உலகெங்கும் பொருந்தி`` என்றதனால் சிவபெருமான் ஐந்தொழில் செய்யுங்கால் உலகுயிர் களோடு அத்துவிதமாய் (கலப்பினால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய், உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாய்) நின்றுசெய்வன் என்பதும், ``இயமானனை வளர்த்திடும்`` என்றதனால், அவன் அவ்வாறு நின்று ஐந்தொழிலைச் செய்வது உயிர்கட்கு மலபாகம் வருவித்து அவைகளை வீடடையச் செய்தற் பொருட்டே என்பதும், ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, அவன்தான் செய்யும் தொழில்கள் பலவற்றையும் தனது சத்தியால் செய்வன் என்பதும், `பூவில் மணம்போல` என்றதனால், சத்தி அவனின் வேறாகாது, மரமும் காழ்ப்பும்போலக் குணகுணி பாவத்தால் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் நிற்கும் என்பதும் பெறப்பட்டன.
தண்மை, இங்கு எளிமை. ``தண்பதத்தால் தானே கெடும்`` (குறள், 548) என்பதிற்போல. ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, சிவமும் அத்தன்மையதாதல் பெறப்பட்டது. கண்ணுதல் - கருதுதல். கண் இயல்பாய் - கருதுதல் வடிவாய். எனவே, `சிவபெருமான் தான் செய்தனவற்றை நினைவு மாத்திரத்தால் செய்வதல்லது, சில கருவி களைக் கொண்டு செய்பவனல்லன்`` என்பது போந்தது. அக் கருதுதல் தானே அவனது சத்தி வடிவம் என்க. `மண்` என்னும் பூதத்தின் சிறப்புப் பண்பு நாற்றமாதல்பற்றி நாற்றத்தை, ``மண்ணியல்பு`` என்றார். `பூவில் மண் இயல்பாக மலர்ந்தெழும்` என மாற்றி உரைக்க. `மலர்ந்து எழுதல்` பல்வேறு வகைப்பட்ட நினைவுகளாய் விரிந்து, நினைந்தவாறே ஆக்குதல். இத்தகைய சத்தியானே அவன் எங்கும் நிறைந்தவன் ஆகின்றான் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு.
இதனால், ஐந்தொழில் செய்யுமிடத்துச் சிவபெருமான் உயிர்களோடு நிற்கும் முறைமையும், அம்முறைமைக்குத் துணை யாகின்ற அவனது சத்தியின் நிலைமையும், அச்சத்திக்கும், அவனுக் கும் இடையே உள்ள தொடர்பு வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 

பொழிப்புரை :

சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.

குறிப்புரை :

எனவே, `எஞ்சிய நாற்றம் அதன்கண் உள்ளது` என்றாராயிற்று. சுவையை, ``இன்பம்`` என்றார். உயிர்ப் பண்பாகிய உணர்தல் தன்மையில் முதலாவது ஊற்று உணர்வேயாகலின், அதனையே ``உயிர்`` என்றார். ஊற்று உணர்வு முதல் என்பதனை ``ஓரறிவுயிர்`` என்பவை பற்றி அறிக.
``ஓர்வுடை நல்லுயிர்`` எனச் சிறப்பித்தலும் அதுபற்றி. பாதம் - அடி; முதல். அது முதலாவதாகிய பூதத்தை உணர்த்திற்று. ``சத்தி`` என்னும் எழுவாய் இறுதிக்கண் நின்றது. உலகத்தோற்றம் முதலியவற்றை நம்மனோர் காணும் இவ்வுலகியல்பில் வைத்தே உணர்த்துகின்றாராதலின், ``நீரிடைமண்`` எனவும், ``மண்ணின் நிலைப்பிறப்பாம்`` எனவும் கூறினார். மேல், `பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே` (தி.10 பா.382) என்றாற்போல. ``இன்பம், சோதி, உயிர், ஒலி`` என்றவற்றில் `ஆய்` என்பது விரிக்க. மேல், `சிவசத்தியே உலகைப் பலவாறு ஆக்கி நடத்தும்` என்றதற்கு ஏற்ப இங்கு, `சத்தியே இவ்வாறு வெளிப்பட்டு நிற்கும்` என ஒற்றுமைபற்றிக் கூறினார்.
இதனால், மேல் தோற்றம் கூறப்பட்ட பூதங்களின் பயப்பாடு கூறப்பட்டது. இடைநின்ற இரண்டு திருமந்திரங்கள் இயைபுடைய வற்றை இடையே விதந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 9

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. 

பொழிப்புரை :

உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.

குறிப்புரை :

``அதற்குக் காரணம் அறியற்பாற்று`` என்பது குறிப் பெச்சம். பிரகிருதி புவனங்கட்குப் பதியாதல் பற்றித் திருமாலையே உலகினை ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் நிற்பவனாக வைத்து, ``உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்`` எனக் கூறுதல் வெளிப்படை. ``உடனாகி, ஓடு`` என்பன எண்ணின்கண் நின்றன. சிவபெரு மானுக்குரிய ``ஆதி`` என்னும் பெயரை அவனது உருவைப் பெற்ற உருத்திரனுக்கு ஆக்கிக் கூறினார். அதனால் அவனே தேவர் பலர்க்கும் மேலானவன் என்பது விளக்குதற்கு, ``அண்டத்தமரர் தலைவனாம்`` என்றார். கண்டம் - சிறுமை. இறுதியிற் கூறுதல் பற்றி, ``முன்னை இருவரினும் மேம்பட்டவன்`` என்பது படாமைப் பொருட்டு, ``கண்டச் சதுமுகன்`` என்றார்.
இதனால், உலக முதல்வனாகிய காரணனைப் பற்றி ஓர் உண்மை உணர்த்தற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ் வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.

குறிப்புரை :

`அதனால், அவரும் உலக காரணர் எனப்படுகின்றனர்` என்பது குறிப்பெச்சம். மாலும், அயனும் சிவபெருமானது ஆணையை ஏற்ற அதிகார மூர்த்திகளாதலின் அது பற்றி, ``உலக முதல்வன் சிவ பெருமானே`` என்றற்கு இழுக்கில்லை என்பது கருத்து. இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``தானும்`` என்பதில் தான், அசை நிலை. உம்மை, ``அவர் தவம் செய்யத் தானும் அதற்கு இசைந்தான்`` என இறந்தது தழுவிற்று. வீங்கு - மணம் மிக்க. ``உயிர் வைத்தல்`` என்றது, படைத்தல், காத்தல் இரண்டனையும் இரட்டுற மொழிதலால் குறித்ததாம். உணர்ந்தான் - எண்ணினான்; திருவுளம் பற்றினான். உருத்திரனை வேறாக எண்ணுவோர் சிவபெருமானை முதல்வன் என்பாரோடு மாறுபடாமை பற்றி இங்கு மால், அயன் இருவரைப் பற்றி மட்டுமே கூறினார் என்க. எனவே, உருத்திரனும் அத்தகையோனாதல் பெறப்பட்டது. ``அயன், மால், உருத்திரன்`` என்னும் மூவரும் முறையே ``படைப்பவன், காப்பவன், அழிப்பவன்`` என்பது வெளிப்படை.
இதனால், புராணங்களில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற காரணர் மூவர் பற்றிய உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.

குறிப்புரை :

இங்கு, ``முதல் உடம்பு`` என்றது, ஒடுக்கமுறை பற்றி என்க. மேற்கூறிய தத்துவம் முப்பத்தாறனுள், ``ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம் என்னும் பதினைந்தும் தூல சரீரமாம்`` எனவும், ``தன் மாத்திரை ஐந்தும், மனம் அகங்காரம் புத்தி என்னும் அந்தக்கரணங்களும் ஆகிய எட்டும் சூக்கும சரீரமாம் `` எனவும், ``சித்தம், குணம், பிரகிருதி என்று பலவகையாய் நிற்கும் ஒன்றே குண சரீரமாம்`` எனவும் `` வித்தியா தத்துவங்கள் ஏழனுள் மாயை தவிர ஏனைய ஆறுமே கஞ்சுக சரீரமாம்``, ``மாயை காரண சரீரமாம்`` அறிந்து கொள்க. இவற்றுள் நிலமுதல் பிரகிருதி அளவுமே திருமால் வியாபகன் ஆதலின், ``நாரணன் என்றும் நடுவுடலாய் நிற்கும்`` என்றும், நான்முகன் பிருதிவி அளவிலே வியாபகனாதலின், ``நான் முகன் பார் அண்ணல்`` என்றும் கூறினார். சிவபெருமானை விடுத்து இவ்விருவருள் ஒருவனை முதல்வன் எனச் சிலர் மயங்குதலன்றி, உருத்திரனைச் சிவபெருமானின் வேறாக எண்ணி மயங்குவார் இலராதல் பற்றி இவ்விருவரது வியாபக எல்லைகளை மட்டுமே உணர்த்தி அருளினார். சீகண்ட உருத்திரன் மாயாதத்துவங்காறும் வியாபகன் எனவும், மகேசுரன் ஈசுர தத்துவங்காறும் வியாபகன் எனவும், சதாசிவன் நாத தத்துவங்காறும் வியாபகன் எனவும் உணர்ந்துகொள்க.
``அன்பு`` இரண்டில் முன்னது அருள்; பின்னது ஆசை. `அன்பிற் செய்யும்` என இயையும். பதம் - உலகம். செய்தல் - படைத்தல்.
இதனால், சிவபெருமானது முதன்மைக்கண் நிகழும் ஐயத்தினை முற்ற நீக்குதற் பொருட்டு, அதிகார மூர்த்திகளது அதிகார எல்லைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. 

பொழிப்புரை :

பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, அதன் பின், `நம்பப் பயன் எளிதாம் மணி ஒன்றுண்டு` என்பதைக் கூட்டி உரைக்க. பருமாமணி, சிவபெருமான். செம்மை - மாறுபாடின்மை. நயன் - இன்பம். ``ஆகிய`` என்பது ``செய்யிய`` என்னும் வினையெச்சம். நம்புதல் - விரும்புதல். ``நம்பன்`` என்பது பாடம் ஆகாமை வெளிப் படை. ``உண்டு`` என்னும் குற்றியலுகரத்தின்முன் உயிர் உடம்படு மெய் பெற்றது. அங்கே - அவ்வாறே; அறிந்தவாறே. வயன் - வெற்றி. வயணம் - காரணம். படைத்தலைச் செய்பவனையே முதல்வனாக உலகம் மயங்குதல் இயல்பு என்பது பற்றிச் சிவபெருமான் பிரமனுக்கு உள்ளொளியாய் நிற்றலையே விதந்தார்.
இதனால், படைத்தல் முதலியவற்றைச் சிவபெருமான் பிறரால் செய்விக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மாட்டு அருள் கூர்தலால், உலகம் ஒடுங்கல், தோன்றல், நிற்றல் என்னும் செயல்கள் அவனது திருவுள்ளத்தில் எழுந்தபொழுது, எல்லையின்றிப் பரந்து நிற்கின்ற மாயையைத் தனது சிற்சத்தி வழியாகப் பொருந்தி அதனைக் காரியப்படுத்துபவன் அவனே.

குறிப்புரை :

எனவே, `அவனது அதிகார சத்தி பதிவால் அயன், அரி, அரன் என்போர் தமது படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்கின்றனரல்லது, தாங்களே தங்கள் விருப்பப்படி செய்கின்றா ரல்லர்` என்பதாம். ஆக்கம் - வளர்ச்சி. இதனை, ``வரவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `புரிதலால்` என்றது `புரிந்து` எனத் திரிந்து நின்றது. மேக்கு - உயரம். மாயையை `மேக்கு மிகநின்ற எட்டுத்திை\\\\u2970?` என ஆகாயமாக உருவகம் செய்தார். தாக்குதல் - தோய்தல். கலக்குதல் - காரியப்படுத்துதல். இங்கு, `சத்தி வழியாக` என்பது ஆற்றலால் வந்தியைந்தது.
இதனால்,மேல், `ஒளியாய்` எனக் குறிக்கப்பட்ட ஒளியாவது, அதிகார சத்தி என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. 

பொழிப்புரை :

சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.

குறிப்புரை :

`உயிர்களைப் படைத்தல் என்பது, அவைகளை உடலொடு பொருந்தச் செய்தலாம்` என்பது விளக்குதற்கு. ``ஒன்றுயிர்`` என்றார். அளவை - கால வரையறை. ``துயர்`` என்றது அதற்கு ஏதுவான வினைகளை. `உயிர்ப்பிப்பான்` என்னாது `உயிர்ப் பான்` என்றார். அவையே தானாய் நிற்கும் ஒற்றுமை தோன்றற்கு. வினைகளைக் கூட்டுவிப்பவன் முதல்வனாயின், நல்வினை ஒன்றையே கூட்டுவியாது, தீ வினையையும் கூட்டுவித்தல் என்னை என்னும் வினாவை விடுத்தற்கு ``நடுவு நின்றான்`` என்றார். எனவே, படைப்பு ஒருபடித்தாகாது பலபடித்தாய்த் தோன்றுதற்கும், உலகில் நன்மையோடு தீமையும் உளதாதற்கும் காரணங்கூறியதாயிற்று.
இதனால், சிவபெருமான் உலகத்தைத் தொழிற்படுத்தும்வழி நெறியின்றித் தொழிற்படுத்தாது, உயிர்களின் வினைக்கேற்பவே தொழிற்படுத்துவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. 

பொழிப்புரை :

பிறக்கும் தன்மை இல்லாத சிவபெருமான், உயிர் ஓர் உடலை எடுக்கின்ற காலத்து அதற்கு அதனைக் கொடுக்கின்ற தலைவனும், பின்பு அவ்வுயிர் அவ்வுடலை விட்டு நீங்குகின்ற காலத்தில் பின்னர்ச் சென்று புகும் மற்றோர் உடலையும் அதற்குக் கொடுத்து, அங்கும் அதற்குத் துணையாய் நிற்பவனுமாவன்.

குறிப்புரை :

எனவே, `உயிர்களுக்கு வினைக்கீடாகத் தரப்படும் பிறப்பு ஒன்றன்று; பல` என்றவாறு. அக்கு - எலும்பு. செம்பொனின் மேலணி மேனியன் - செவ்விய பொன்னின்மேலே உள்ள அழகு (நிறம்) போலும் மேனியன். `புகுந்த` என்பதன் ஈறு தொகுத்தல்.
இதனால், சிவபெருமான் எண்ணற்ற உயிர்களுள் ஒவ்வொன்றற்கும் எண்ணற்ற உடலைக் கொடுத்துக் கூட்டியும், நிறுத்தியும், பிரித்தும் நடத்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. 

பொழிப்புரை :

ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.

குறிப்புரை :

`சிவம், சத்திகட்கு உலகை மேற்கூறியவாறு பலபடச் செயற்படுத்தல் பெருஞ்செயலாய்த் துன்பம் விளைப்பதன்று; நினைத்த அளவிலே எளிதில் நிகழ்வனவாம்` என்றற்கு ``விளையாடல் உற்றார்`` என்றும், `விளையாட்டு` என்பதேபற்றி, `வீண்தொழில்` என்றாதல், `தம் நலம் கருதியது` என்றாதல் கருதலாகாது என்றற்கு, `எல்லாம் விளைக்கும்` என்றும், `எல்லாம்` எனப் பொதுப்படக் கூறினும், எல்லாப் பயனும், எல்லார்க்கும், எப்பொழுதும் ஆவனவல்ல என்றற்கு, ``பருவங்கள் தோறும் ஆன`` என்றும், `படைப்பின் குறிக்கோள் உயிர்களை வீடடைவித்தலே`` என்றற்கு, ``திரு ஒன்றின் செகம் செய்கை முற்றும்`` என்றும் கூறினார்.
``காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` (தி.8 திருவெம்பாவை, 12) என்றாற் போல, இறைவன் உலகை நடாத்துதலை `விளையாட்டு` என்றல் வழக் காதலும், ``ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்`` (தி.8 திருவெம்பாவை, 11) என்றாற் போல, அவனது செயல் உயிர்களை உய்வித்தற் பொருட்டு நிகழ்வ தாதலும் அறிந்துகொள்க. ``போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7ப.59 பா.1) என்பதனால் `திருவாவது வீடுபேறு` என்பது இனிது பெறப்படும். திரு - நன்மை. வீடுபேறே முடிந்த நன்மையாதல் அறிக. உயிர்கள் வீடு பெற்ற பின்பும் அவ்வின்பத்தை நுகர்தல் முதல்வனது அருட் செயலின்றி அமையாது என்பதனை, ``இன்பம் கொடுத்தல் இறை`` (உண்மை விளக்கம் , 50) எனவும்,
மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயமுடன்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம், 36
எனவும் கூறுமாற்றால் அறிந்து கொள்க. இக்கருத்துப்பற்றியே, ``முதல்வன் செயல் முற்றுப்பெறும்`` என்னாது, ``செகத்தின் செய்கை முற்றுப்பெறும்`` என்றார் என்க. இக்கருத்துணராதார், `உயிர்கள் வீடு பெற்ற பின்னை முதல்வற்குச் செயல் இல்லை போலும்` என மயங்குப.
இதனால், படைப்பு முதலியவைபற்றி அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. 

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் மூவரும் தம் தம் எல்லை யளவும் உயிர்க்குயிராய் நிறைந்து நின்று அங்குள்ள நிலைகளையெல்லாம் நன்குணர்வர். ஆயினும், அவரெல்லாம் எங்கும் அவ்வாறு நின்று உணரும் சிவபெருமானாகிய தலைவனுக்கு உரிய அடியரேயாவர்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அடைதலே வீடுபெறுதலாம்; ஏனையோரை அடைதல் யாவும் பந்தமே` என்பது குறிப்பெச்சம். எனவே, சிவபெருமான் தனது படைத்தல் முதலிய தொழில்களின் பயனாக உயிர்கட்கு முடிவில் தன்னையே வழங்கியருள்வான் என்பது போந்தது. புவனாபதி - உலக காரணியாகிய உமைக்குத் தலைவன். முடி - தலைமை. அது தலைமையை உடையான் மேல் நின்றது.
இதனால், முடிந்த வீடுபேறு (பரமுத்தி) ஆவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே. 

பொழிப்புரை :

ஆணவ மலத் தொடக்கினுள் அகப்பட்டு நிற்கின்ற அந்நிலையில், அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிற்கின்ற அயன், மால், உருத்திரன், சீகண்டர், அனந்தர் என்னும் ஐவரும் பிறரால் கண்காணிக்கப்படும் காரியக் கடவுளரே. இனிக் காரணக் கடவுளராவார், மேற்சொல்லிய அந்நிலைக்குப் பின்னர்த் தாம் முன்னர் மேற்கொண்டிருந்த அத்தொழில்களாலே பக்குவம் முதிரப்பெற்று ஆணவம் நீங்கி அதன் வாதனை மாத்திரம் உடையராய்ச் சுத்த மாயையில் உடம்பு முதலியவற்றைப் பெற்று நிற்பவர்களே.

குறிப்புரை :

அவர், `அணுபட்ச அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவர் என்க. அதில் - அந்நிலையில். காணியர் - காணப்பட்டவர். `காரியர்` என்றேயும் ஓதுப. `கடைமுறை` என்றது, `பின்` என்றவாறு. பின்னர், ``விந்துவிற் பிறந்து`` என்ப தனால், முன்னர், மோகினி மான்களின் நிற்றலைக் கூறுதல் கருத்தாதல் அறிக. ``ஐந்தொழில்`` என்றதற்கு, காரியர் ஐவருள் சீகண்டரை மறைப் பவராகவும், அனந்தரை அருள்பவராகவும் கொள்க. `செலுத்துவோர் காரணர்` எனவும், `செலுத்தப்படுவோர் காரியர்` எனவும் உணர்க. ``பிறந்து நீங்காதவர்`` என்றாராயினும், `நீங்காது பிறந்தவர்` என்றலே கருத்து என்க. நீங்காமை, பற்றறக் கழியாமை. `காரியர் பக்குவம் முதிரப் பெற்றபின் ஞானத்தை அடைந்து வீடு பெறுவர்` என்பதும், `காரணர் ஞானம் முதிரப் பெற்று வாதனை நீங்கியபின் வீடு பெறுவர்` என்பதும் உய்த்துணர வைத்தமை காண்க. அனந்தர் சுத்தமாயையில் உள்ளவராயினும், தூல வாசனை உடையராய் அசுத்த மாயையைத் தொழிற்படுத்துதல் பற்றி ஆணவத் தொடக்குடையவராக ஓதினார்.
இதனால், மேல், `பந்த நிலையினர்` எனக் குறிக்கப்பட்டவரது பந்த நிலைகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. 

பொழிப்புரை :

நிலமுதல் மாயை ஈறாக உள்ள முப்பத்தொரு தத்து வங்களும் அசுத்த மாயையின் காரியங்கள். அதற்கு மேல் உள்ள ``சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம்`` என்னும் மூன்றும் `மகாமாயை` எனப்படும் சுத்த மாயையின் காரியங்கள். சாதாக்கியத்திற்குமேல் உள்ளது விந்து. அவ்விந்துவைப் பெற்ற அந் `நாதம்` என்னும் தத்துவம், பரவிந்துவிற் பிறத்தலால், யாவும், எல்லாத் தத்துவங் களையும் தனது உடைமையாக உடைய பராசத்தியோடு கூடிய பரம சிவனது பழைய திருவிளையாடலேயாம்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தத்துவங்கள் இவை என்பதை மேலே காண்க. (தி.10 பா. 124)
இதனால், அனைத்தையும் தனது விபூதியாக (சிறந்த உடைமையாக) உடையவன் பரமசிவன் என்பது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே. 

பொழிப்புரை :

`வானம், காற்று, தீ, நீர், நிலம்` என்னும் பூதங்கள் ஐந்தற்கும் முறையே, `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்னும் ஐவரும் தலைவராவர் என்று உணர். இவர் அனைவரும், யாதொரு பொருளையும் விட்டு நீங்காது நிறைந்து நிற்கும் சிவசத்தி பதிய ஒருங்குதோன்றியவரே. இவருள் மகேசுரன் முதலிய நால்வரும் உருவம் உடையவர். (சதாசிவன் அருவுருவினன்) இவர் ஐவர் தொழிலும், மேற்கூறிய ஆகாயம் முதல் பூமி ஈறான பூதங்களைக் காரியப்படுத்தலாம்.

குறிப்புரை :

`ஆகாயமாதிக்குச் சதாசிவன் ஆதியோர் தலைவர்` எனத் தொகுத்தலாயும், சொல்லெச்சமாயும் நின்ற சொற்களை விரித்துரைத்துக்கொள்க. என் - என்று உணர். ``உட்போத`` என்பது, ``உட்போந்து`` எனத் திரிந்து நின்றது. மா காயம் - தூலவடிவம்; உருவம். ``அளித்தல்`` என்றது `ஆளுதல்` என்னும் பொருட்டாய் நின்றது. `அளித்தலே தொழில்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், மேல், தத்துவங்களை, `பரமசிவனது விபூதி` என்று கூறியபின், அத்தத்துவத் தலைவர்களும் அவனது விபூதியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே. 

பொழிப்புரை :

சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களமாகத் தோன்றும் சாதாக்கிய தத்துவத்தினைத் தோற்றுவிக்கும். அருள் காரணமாக, `திரிபுரை` என்னும் சத்தி தோன்றுவாள். அவளே அத்தத்துவத்தின் தலைவனாகிய சதாசிவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று, அருளல் முதலிய ஐந்தொழிலையும் செய்வாள்.

குறிப்புரை :

இவளே மனோன்மனி என்பதனை அடுத்து வரும் திரு மந்திரத்துள் அறிக. இவளது சிறப்பை நாயனார் நாலாந் தந்திரத்துள் விரித்தோதுவார். அளி - அருள்.
இதனால், மேற்கூறிய தத்துவங்களும், தத்துவத் தலைவர் களும் பரமசிவனது விபூதியாதற்குக் காரணம் தோன்றுதற் பொருட்டு, அவனது சத்தியே எல்லாம் செய்யும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. 

பொழிப்புரை :

அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.

குறிப்புரை :

`வாரணி - யானைத் தோலைப் போர்த்தவள்` என உருத்திரனது சத்தியைக் குறித்தது. ஆரணி - வேதம் ஓதுபவள். வானவர் மோகினி - தேவர்களை மாயையால் மயக்குபவள். பூரணி - நிறைந்த தலைமை உடையவள். செய்யுள் நோக்கி இவர்களை முறை பிறழ வைத்தார்.

பண் :

பாடல் எண் : 23

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. 

பொழிப்புரை :

மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.

குறிப்புரை :

என்றது, மகேசுரன் முதலாகக் கீழுள்ள நிலைகளே அதிகார நிலை எனக் கூறியவாறு. சதாசிவ நிலை, `போக நிலை` எனவும், அதற்குமேல் உள்ள நிலைகள் இலய நிலை எனவும் உணர்க. இறைவன் உலகத்தைத் தொழிற்படுத்தும் பொழுது இவ்வாறு, `இலயம், போகம், அதிகாரம்` என மூன்று நிலைகளில்நின்று தொழிற்படுத்துவன் என்பது முதல் திருமந்திரத்தே குறிக்கப்பட்டது. இதனை இங்குக் கூறியது, மேற் கூறியவாற்றால், `சத்தியே எல்லாம் செய்யச் சிவன் வாளாவிருப்பான் போலும்` எனவும், `அதனால் அவ்விருவரும் வேறு வேறு நிற்பவரே போலும்` எனவும் ஐயம் நிகழாது, `சத்தியும் சிவனும் யாண்டும் உடனாகியே நிற்பர்` என்பதும், `அதனால் சத்தி செய்வனவெல்லாம் சிவன் செய்வனவே` என்பதும் உணர்த்தற் பொருட்டாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. 

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

குறிப்புரை :

`அவ் வொருவன் சிவபெருமானே` என்பது கருத்து.
இதனால், சிவபெருமானது முழுமுதற் றன்மை வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே. 

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரம தேவனும், மேகம்போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தை யுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.

குறிப்புரை :

முதலில் உள்ள வண்ணம் - அழகு; பொன்னிறம். இறுதியிற் கூறத்தக்க தீவண்ணனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``எம் இறை`` என்றதனை முதலில் வைத்துப் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ``செந்தாமரை வண்ணன்`` முதலிய மூன்றும் `எம் இறையே` என்னும் எழுவாய்க்குப் பயனிலைகளாய் நின்றன. ``முகில் வண்ணன்`` என்பதன் பின், `அவனே` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `ஆடவர்` என்பது சொல்லெச்சம்.
உடம்பின் ஐந்து கூறுகளாவன, ஐங்கோசங்கள். அவை, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` என்பன. இவற்றின், விளக்கம் பின்னர்க் காணப்படும். இவற்றுள் அன்னமய கோசம் பிரம தேவனது ஆளுகைக்கும், பிராணமய கோசம் மாயோனது ஆளு கைக்கும், மனோமய கோசம் சீகண்ட உருத்திரரது ஆளுகைக்கும் ஏனை இரு கோசங்களும் அனந்த தேவரது ஆளுகைக்கும் உட்பட்டு இயங்குவனவாம். இவற்றுள், முதல் மூன்றும் பிரகிருதி மாயையின் காரியங்களும், ஏனை இரண்டும் அசுத்த மாயையின் காரியங்களு மாகும்.
இதனால், படைப்பு வேறுபாடு ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.
இவ்வாறாகவே, `படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் சிவபெருமான் சுத்தமாயையில் தான் நேரே செய்வன்` என்பதும், `அசுத்த மாயையில் அனந்த தேவரை வாயிலாகக் கொண்டு (அதிட்டித்து நின்று) செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழியாகச் சீகண்ட உருத்திரனை வாயிலாகக் கொண்டு செய்வன்` என்பது போதரல் காண்க.
இதனால், சிவபெருமான் மும்மாயையிலும் படைத்தல் முதலியவற்றைச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே. 

பொழிப்புரை :

பல்கோடி அண்டங்களிலும் தனக்காவதொரு புக்கிலை (நிலையான வீட்டைத்) தேடி அலைகின்ற சீவான்மாவின் பொருட்டு, உடலும், உயிரும் கன்மத்தால் தொடர்பு கொள்கின்ற பல பிறவிகளை அவ்வவ்வுயிர்க்கு ஏற்றவாறு மேற்கூறிய வாற்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கின்ற பரமான்மாவாகிய சிவபெரு மான், தான் தனது திவ்வியாகமங்களுள் கூறியுள்ள அப்படைப்பு முறைகளைத் தெளியமாட்டாது அவற்றொடு மாறுபடுகின்றவரது உள்ளத்துள்ளே நின்று, அவரது அறிவோடே ஒத்துக் கூறிய பல சமயக் கொள்கைகளையும் யான் அறிவேன்.

குறிப்புரை :

அக்கொள்கைகளாவன, `பூதங்கள் நான்கே; அவை தம்முட் கூடுதல் பிரிதல்களால் உலகம் தோன்றும்; அழியும். அதனால், அச்செயல்கட்கு முதல்வன் ஒருவன் வேண்டுவதில்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் உலகாயத மதத்தினர்) `வித்தின் கேட்டில் அங்குரம் (முளை) போல எல்லாப்பொருளும் ஒன்றன் கேட்டில் மற்றொன்றன் தோற்றமாக ஒரு கணத்தில் தோன்றி, மறுகணத்தில் அழிந்து செல்லும். இத்தொடர்ச்சி பொருட்பெற்றியானே நிகழும்; இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் புத்த மதத்தினர்) `உளதாதல், இலதாதல் என்னும் இரண்டு தன்மையும் ஒருங்கே உடைமையால் இத்தன்மைத்தென வரையறுத்துச் சொல்லொணாத இவ்வுலகம் உளதாதல் தன்மையால் தோன்றி, இலதாதல் தன்மையால் அழிதல் இயல்பாதலின், இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் சமணமதத்தினர்) `பிரகிருதிக்குமேல் மாயை இல்லை; அதனால், அதன் காரியமாகிய இருபத்து நான்கிற்கு மேல் தத்துவம் இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் ஏகான்மவாதிகள், யோகர், சாங்கியர் முதலிய பலருமாவார். இவருள் ஏகான்மவாதிகள் மாயை `அநிர்வசனம்` - இன்னதெனச் சொல்லொணாதது, எனக்கூறி, அதனுள் சக சீவ பரங்கள் விவர்த்தனமாய் - மயக்கக் காட்சியாய் - தோன்றும்` எனவும், ஏனையோர், `மாயையை உள்பொருள்` எனவும், `அதனால், அதன் காரியங்களும் உள்பொருளே` எனவும் கூறுவர். சாங்கியருள் ஒரு சாரார், `மாயை தானே தனது காரியத்தைத் தோற்றுவிக்கும்; இறைவன் வேண்டா` என்பர்.) இன்னோரன்ன பலவுமாம். மேல் ``பருவங்கள்தோறும் பயன் பலவாகும்`` (தி.10 பா.393) என்று அருளிச் செய்தபடி, சிவபெருமான் அவ்வவ்வுயிர்களின் பரிபாகத்திற்கேற்ப அவற்றின் வழி நின்று துணைபுரிவனாதலின், அதனை, `அவர்தமதுள்ளத்துள் நாடும் வழக்கம்` என்றார். வழக்கம் - மரபு; கொள்கை.
`திசை எட்டும் தேடும் சீவன்` என மாற்றி, `சீவனுக்கு` என நான்காவது விரிக்க. குணம் - பிரகிருதி.
இதனால், `பிறநெறிகளுட் கூறப்படும் முறைமைகள் பலவும் பூர்வபக்கம்` என்பது கூறும் முகத்தால், `சிவநெறியுட் கூறப் படும் முறைமையே சித்தாந்தம்` என மேலன பலவும் வலியுறுத்தப் பட்டன.

பண் :

பாடல் எண் : 27

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. 

பொழிப்புரை :

`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.

குறிப்புரை :

`வேத சிவாகமங்களில் பூதம் முதலிய தத்துவங் கட்கும், பல்வேறு பிறவிகளில் நிற்கும் உயிர்கட்கும், அவற்றது உடம்பில் அமைந்த பல்வேறு உறுப்புக்களுக்கும், அவ்வுடம்புகட்கு நிலைக்களமாய் `அண்டம்` எனவும், `புவனம்` எனவும் பெயர் பெற்று நிற்கும் இடங்கட்கும் தலைமை தாங்கி அவ்வவற்றை ஏற்ற பெற்றி யான் இயக்கும் கடவுளர் எண்ணிறந்தோர் எனக் கூறி, அவர்க்கு உரிய உருவம், பெயர், தொழில் முதலியனவும், இடம் பொருள் ஏவல்களும், அவரை வழிபடும் முறைகளும் பலபட எடுத்துச் சொல்லப்பட்டாலும், அவர் பலரும் தாம் தாம் தம் இச்சைவழி நின்று செயல்புரிவோரல்லர்; சிவபெருமானது அடியவர் குழாங்களே எனத் தெளிவித்தவாறு, `அமைப்பால் வேறுபட்ட பல கூட்டமாயினும், ஒருவனது பணி யாளராம் முறைமையால் ஒரு கூட்டமே` என்றற்கு, ``ஓர் ஆயமே`` என்றார். ஆயம் - கூட்டம்.
இதனால், அனேகேசுர வாதம் பற்றி எழும் ஐயம் பொது வகையான் அகற்றி, மேலே வலியுறுத்தப்பட்டது. மேல் ``ஒருவனுமே`` (தி.10 பா.401) என்ற மந்திரம் ஒருவனே பலராய் நின்று காரியம் செய்தல் கூறியது. இது பலரும் ஒருவனது ஏவலரே எனக் கூறியது. இவை தம்முள் வேற்றுமை.

பண் :

பாடல் எண் : 28

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. 

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருட்கு உரியராயினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங் களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய சிவபெரு மானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.

குறிப்புரை :

கோது - குற்றம்; தீமை. குலம் - நன்மை. இராசதமும், தாமதமும், ``கோது`` எனப்பட்டன. சாத்துவிகம், ``குலம்`` எனப் பட்டது. `ஏனைத் தேவர் பலரும் தலைவராகாதொழியினும், புராணங்களிலும், பிறவிடத்தும் தலைவராகச் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற மூவர் தலைவராகாமை இல்லை போலும்` எனப் பௌராணிக மதம்பற்றி மீளவும் எழும் மலைவை நீக்கியவாறு.
``முக்குணத்தால் உலகை ஆக்குகின்றனர்`` என்ற குறிப்பால் `குணாதீதனாகிய சிவன் முதல்வனாதலன்றிக் குணவயப்பட்ட ஏனையோர் முதல்வராமாறு இல்லை` என வழி வகை கூறித் தெளிவித் தவாறாயிற்று. உருத்திரனைச் சிவபெருமானின் மேம்பட்ட வனாக மயங்கிக் கூறுவார் இன்மையின், அழித்தல் தொழிலைப் பேறாக உடைய உருத்திரனைப் பற்றி விளக்கம் கூறிற்றிலர்.
இதனால், தலைமைபற்றி, `பௌராணிகம், ஐரணியகருப்பம், பாஞ்சராத்திரம்` என்னும் மதம் பற்றி எழும் ஐயத்தைச் சிறப்பு வகையான் அகற்றி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. 

பொழிப்புரை :

`எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங் களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனா கின்றான்.

குறிப்புரை :

``உரைசேரும் எண்பத்து நான்குநூறாயிரமாம் யோனி பேதம்`` (தி.1 ப.132 பா.3) என்றற்றொடக்கத்தனவாகப் பலவிடத்தும் பிறப்பு வகை வேறுபாடுகள் எண்பத்துநான்கு நூறாயிரம் என்பது கூறப்படுதல் காண்க. இவை அனைத்தும், `அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம்` என்னும் நால்வகைத் தோற்றமும், `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுவகைப் பிறப்புமாய் அமைவனவாம். அண்டசம் - முட்டையில் பிறப்பன. சுவேதசம் - வியர்வையில் (அழுக்கில்) பிறப்பன. உற்பீசம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளைப் பிளந்து கொண்டு மேல்நோக்கி முளைப்பன. சராயுசம் - கருப்பப் பைக்குள் உரு நிரம்பிப் பிறப்பன. எண்பத்து நான்கு நூறாயிரமும் எழுவகைத் தோற்றத்துட் பொருந்துமாறு:-
தோற்றிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தாகும்;
ஊர்வபதி னைந்;தமரர் பதினொன்றோ;டுலவா
மாற்றருநீர் உறைவன,நற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து;மானுடர்ஒன் பதுமாம்;
ஏற்றியொரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
-சிவப்பிரகாசம் - 47
என்பதனால் விளங்கும். இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரம்நா லைந்து.
-திருக்குறள், 62. பரிமேலழகர் உரை மேற்கோள்
எனச் சிறிது வேறுபடவும் கூறுவர். எவ்வாறாயினும், `எண்பத்து நான்கு நூறாயிரம்` என்பதில் மாறுபாடில்லை.
`இத்துணை வேறுபட்ட பிறவிகளில் ஏனையவற்றிற் செல்லாது மானுடப் பிறப்பினுள் வருதல் பெரிதும் அரிது` என்பதை,
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தால்
உண்டுபல் யோனி; எல்லாம் ஒழித்துமா னுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்.
எனச் சிவஞான சித்தி (சூ. 2.89) நூல் கூறிற்று.
``மூடி`` என்பது பெயர். `மூடியாய்` என ஆக்கச்சொல் விரிக்க. இனி, வினையெச்சமாகக்கொண்டு, `இருளால் மறைத்து நின்றான்` என உரைத்தலுமாம்.
இதனால், படைப்பு எண்பத்து நான்கு நூறாயிர வேறு பாடுகளை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 

பொழிப்புரை :

அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்து விகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.

குறிப்புரை :

பிறப்பு வகைகள் பலவற்றையும் உபலக்கணத்தாற் கொள்ளுதற்கு, `எண் பாலர்கள்` என்றார். எண் பாலர் - திசைக் காவலர். போதித்த - சிறப்பித்துச் சொல்லப்பட்ட. ஒளி - தேசசு; நெருப்பு. `ஒலி` என்பது பாடம் அன்று. வாதித்த - வாதத்தோடு கூடிய. வாதம் - காற்று. `கூடிய` என்றது, `சொல்லப்பட்ட ஐம்பூதங்களோடும் கூடிய` என்றவாறு. ``சத்தாதி`` என்றதை, `தன்மாத்திரை, விடயம்` என இரட்டுறமொழிந்து கொள்க. ``ஆதி`` என்றதனை, ``வாக்கு`` என்றதனோடும் கூட்டுக. வாக்காதி, `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள்; இவற்றைக் கூறவே `செவி, தோல், கண், மூக்கு, நாக்கு` என்னும் ஞானேந்திரியங்களும், சத்தாதி ஞானேந்திரிய விடயங்களைக் கூறவே, `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்` என்னும் கன்மேந்திரிய விடயங்களும் கொள்ளப்படும். மனாதி, `மனம், அகங்காரம், புத்தி, சித்தம்` என்னும் அந்தக்கரணங்கள். `ஆதித்தன், சந்திரன்` என்றது, உபலக்கணத்தால் தாத்துவிகங்களைக் கொள்ள வைத்ததாம்.
`தத்துவங்கள் முப்பத்தாறு` எனவும், `அவற்றுள், சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தும் சுத்த மாயையில் உள்ளவை; ஏனைய அசுத்த மாயையில் உள்ளவை` எனவும் மேற்கூறியவாற்றால், `சுத்த மாயையில் உள்ள தத்துவங்கள் மேற்கூறிய ஐந்துமே; பிற இல்லை` என்பது பட்டமையின் அதனை விலக்கி, `மேற்கூறிய ஐந்தும் சுத்த மாயையின் சிறப்புத் தத்துவங்கள்; அவை அசுத்த மாயையில் இல்லை; ஏனைய முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தமாயை, அசுத்த மாயை இரண்டற்கும் பொதுத் தத்துவங்கள்; அதனால் அவை அவ் இருமாயையிலும் உள்ளன. சுத்த மாயையில் அவை மலகன்மங்களோடு கலவாமல் சுத்தமாய் உள்ளன; அசுத்த மாயையில் அவை அவற்றொடு கலந்து அசுத்தமாய் உள்ளன; அவ்வளவே வேறுபாடு` எனத் தெரித்துக் கூறியவாறு. `இதுவே சிவாகமங்களின் துணிபு` என்பது.
``காலம் முதல் நிலம் ஈறாகிய தத்துவங்கள் எல்லாம் அசுத்த மாயையிற்போலச் சுத்த மாயையினும் உள; அவை இவை போலன்றிச் சுத்தமாய் உள்ளன என்னும் பௌட்கர வசனத்தான் அசுத்த தத்துவ புவனங்களின் உள்ளன அனைத்தும் சுத்த தத்துவ புவனங்களினும் சுத்தமாய் உளவாம் என்பது போதருதலானும்``
எனச் சிவஞானபோத மாபாடியத்தும் (சூ.2 அதி.2) இனிது எடுத்து விளக்கப் பட்டமை காண்க. அசுத்த மாயா உலகத்தவராகிய அயன், மால், உருத்திரன் முதலியோர்போலச் சுத்த மாயையிலும் அப்பெயர் முதலியன உடையோர் உளர் என்றலும் இதுபற்றி என்க. இனி, பூலோக புவர்லோக சுவர்க்கலோகம் முதலிய உலகங்களில் கீழ் உலகத்துள்ளனபோல மேல் உலகத்தும் உள்ளன பொருள்கள் என்றலும் இவ்வாற்றானே அமைதல் அறிந்துகொள்க.
இனி, `சுத்த மாயை மேலே உள்ளது; அசுத்த மாயை கீழே உள்ளது` எனக் கூறுதல், சூக்கும தூல முறைமையால் வியாபக வியாப் பியமாதல் பற்றியல்லது, ஒருமரத்தில் அதன் அரையும், கிளையும் போல இட வேறுபாடு பற்றியன்றாதலால், சுத்த மாயையில் உள்ளன பலவும் அசுத்த மாயையில் தோய்வின்றி வியாபகமாய் நிற்கும் என்பதும் நுண்ணுணர்வால் உணர்ந்துகொள்க. அங்ஙனம் அல்லாக் கால் மந்திரங்களும், அவற்றிற்கு உரியராய கடவுளரும் அசுத்த மாயா புவனத்தில் உள்ளார்க்குப் பயன் தருமாறு இல்லை என்க.
`மாயையிற் போல` என ஒருசொல் வருவிக்க. ``உற்றது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. `உற்றவே` என ஓதுதலும் ஆம்.
இதனால், படைப்புப் பற்றியதொரு புறனடை கூறப்பட்டது.
சிற்பி