முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்


பண் :

பாடல் எண் : 1

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 

பொழிப்புரை :

எட்டிமரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிந்தாலொப்பனவாகிய, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மிகப் பெறுதலாலே குவிந்து, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டொழிவதேயாகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.

குறிப்புரை :

``பழுத்த`` என்றது, முதல்மேல் நின்ற சினைவினை. `வீழ்ந்தன` என்பதே பாடம் எனினும், பொருள் இதுவே என்க.
`மண் ணின் இடும்` என இயையும். முகத்தல், மண்ணைப் பறித்தல். `இடும்` என்பது செயப்பாட்டு வினையாய் நின்றமுற்று.
பட்டி - பட்டிமை; அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
``பாதகர்`` என்பது குறுகி நின்றது. கடன் கொடுப்பார் வட்டி பெறுதல் இயல்பாய் இருக்க அதனை மிகைபடக் கூறலாக எடுத்தோதிய அதனால், ``வட்டி`` என்று அளவிற்கு மேற்பட்டதனைக் குறித்தது. `ஆகலான்` என்பது சொல்லெச்சம்.
இதனால், அறஞ் செய்யாதவரது பொருள் போமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 

பொழிப்புரை :

உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும், உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும், தாம் எண்ணிய எண்ணங் களும் கைகூடாது கனவுபோலக் கழிதலையும், பசி பிணி பகை முதலியவற்றால் பெருந்துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்க, சாறுபிழியப்பட்ட கரும்பின் கோதுபோலாகி வலியழி தலையும் கண்டுவைத்தும் மக்களிற் பலர் அறத்தை நினைக்கின்றிலர்.

குறிப்புரை :

`இஃது அறியாமையின் வலி` என்பது குறிப்பெச்சம். ``ஒழிந்தன`` முதலிய அத்தொழில்மேல் நின்ற வினைப்பெயர். முற்றாக வைத்து, `அவற்றை` என்பது வருவித்து, அச்சுட்டு அத் தொழிலைக் குறித்ததாகவும் உரைப்பர்.
ஊழி பல நீங்குதல் உரை யளவையால் அறியப்பட்டது. ஏனைய காட்சியால் அறியப்பட்டன. வேண்டுமிடங்களில் எச்ச உம்மை விரிக்க.
இதனால், அறஞ் செய்யாதவரது அறியாமை மிகுதி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 

பொழிப்புரை :

அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.

குறிப்புரை :

அறம் என்பது, சிவபெருமான் தனது திருவுளத்தின் விருப்பத்தைக் கூறியதேயாகலான், அதனைச் செய்யாதே நிகழ்த்தும் பிற செயல்கள் அவனது வழிபாடாம் எனக் கருதுதல் அறியாமை யாதல்பற்றி, ``அறம் அறியார், அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார்`` என்றார். மறம் செய்வார் யாவராயினும் அவரைச் சிவபிரானது மறக்கருணை நரகிற் செலுத்தும் என்பதனை,
``இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க் கருளும் வைத்தார்;
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்;
.... .... .... .... .... .... ஐயன் ஐயாறனாரே`` -தி.4 ப.38 பா.10
எனத் திருநாவுக்கரசரும் வலியுறுத்தோதினார். திருமூலரும், திரு நாவுக்கரசரும் முதலிய சிவநெறிப் பேரருளாசிரியர்கள் அறத்தினை இத்துணை வலியுறுத்தி அருளிச்செய்திருக்கவும், `புறநெறியின்கண் உள்ளது போலச் சிவநெறியில் அறம் அத்துணை வலியுறுத்தப் படவில்லை` என்பார் உளராயின், அவரதுநிலை இரங்கத்தக்கதாம் மறம் (பாவம்) மன்னுதல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.
இதனால், `அறநெறி சிவநெறிக்கு இன்றியமையா உறுப்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே. 

பொழிப்புரை :

பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையை யும் அவை நோக்கா.

குறிப்புரை :

இரண்டாம் அடியை ஈற்றடியின் முன்னே வைத்து உரைக்க. உரும் இடி - பேரிடி. நாகம் - பாம்பு. உரோணி - ரோகிணி; நோயுடையாள்; அஃது ஆகுபெயராய் அவளால் வரும் நோயைக் குறித்தது. இனி, `உரோணியால் வரும்கழலை` என்றலுமாம். கழலை - கட்டி. பக்கல் - திசை. இருமல் முதலியன இன்னவாதல் சிவ பெருமானது சீற்றத்தாலும், அருளாலுமாம்.
இதனால், அறம் செய்யாதவர்க்கும், செய்பவர்க்கும் இம்மை யில் உளவாகும் நலந் தீங்குகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.

பொழிப்புரை :

வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களே, நீவிர் யாவராலும் போற்றப்படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை; இரப்பார்க்கு ஈதலும் இல்லை; குடத்தால் நீர்முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை; ஆகவே, இறந்தபின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?

குறிப்புரை :

இவற்றுள் ஒன்றே செய்யினும் அறமாம் என்னும் கருத்தால் இவ்வாறு கூறினார். ``ஈதலும் ஈயார்`` என்பது, ``உண்ணலும் உண்ணேன்`` (கலி - பாலை 22) என்பதுபோல நின்றது. `தானே மரங்களை வைத்தா யினும், முன்பு உள்ள மரங்கட்கு நீருற்றியாயினும் வளர்த்தலே அறம்` என்றற்கு, `கரகத்தால் நீரட்டி` என்றார்.
இக்காலத்தார் இவற்றைச் செய்யாதொழியினும் வளர்ந்துள்ள மரங்களை வெட்டா மலேனும் இருப்பார்களா என்பது தெரியவில்லை.
``நரகத்தில் நிற்றிரோ`` என்றது ``கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` என்னும் (தி.4) அப்பர் திருமொழியை நன்கு வலியுறுத்துவதாகும். `ஏத்தார்` என்பனபோலப் படர்க்கையாக ஓதுவன பாடம் அல்ல.
இதனால், அறம் செய்யாதார் நரகினை எய்துதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.

பொழிப்புரை :

உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.

குறிப்புரை :

இத்திருமந்திரத்துள் பாடங்கள் பல்வேறு வகை யாய்க் காணப்படுகின்றன. அவை, `கடந்தார் - நடந்தார், கரும் பாரும் - கருப்பாரும், மழி - வழி, மாசற ஓட்டிட்டு ஒழி நடப்பார் வினை ஓங்கி நின்றாரே - மாசற ஓட்டிட வழிநடக்கும் மளவீழ்ந்தொழிந்தாரே` என்பன.
கழி` என்பது, `கழிய` எனப் பொருள் தந்தது. கரும்பார் - இருளுலகம். மழி - மழித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஒளி` என்பது, எதுகை நோக்கி `ஒழி` எனத் திரிந்து நின்றது. ஒளி - ஞானம்.
இதனால், ஞான நெறியில் நிற்பார்க்கு அறம் தானே உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான்.
ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.

குறிப்புரை :

கெடுவதும் ஆவதும் என்னும் எழுவாய்கள் `நடு` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டன.
`நடு` என்னும் இடப்பெயர் முன்னர் அதன்கண் நிற்றலைக் குறித்துப் பின்நின்று செய்தலைக் குறித்தது. ``செய்து`` என்றது, ``நாட`` என்பதனோடு முடிந்தது. ``நாடவும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``அது பசுவாம்`` என மாற்றுக.
பசு, ஆகுபெயர்.
இதனால், அறம் செய்பவரையே இறைவன் விரும்புதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார்.

குறிப்புரை :

இதனால், இப்பிறப்பில் விளையும் நலந் தீங்குகட்குக் காரணம் அற மறங்கள் என்பதும், அறத்திற்குக் காரணம் அன்பு என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. 

பொழிப்புரை :

அறிவுடையீர், சிலவிடத்துச் சிலராகவும் சில விடத்துப் பலராகவும் வாழ்வாரது பெருவாழ்வாகிய செல்வத்தைக் கண்டு, அதனானே அவர் ஈவர் என்று கருதி அற்பராயிருப்பாரைப் புகழ்ந்து, பயன் கிடையாமையால் பின் மெலிவடைதலைச் செய்யாமல், நுமக்குப் புக்கிலாம் வீடு கருதி இறைவனைத் துதியுங்கள். அதுவே வில் வல்லோன் எய்த அம்புக் குறிபோலத் தப்பாது பயன் தருவதாகும்.

குறிப்புரை :

`செல்வங் கருதி` என்பதனை, ``வாழ்வெனும்`` என்பதற்குப் பின்னர்க் கூட்டியுரைக்க. `செல்வத்துப் பயன் ஈதலே` என்பதை அறியாது, ஈட்டலும், நுகர்தலுமே எனக் கருதுவாரை, ``புல்லறிவாளர்`` என்றார். `சிலரும் பலரும் ஆகியோரது வாழ்வு` என்க. `உயிர்க்கு உடம்பு துச்சில்` எனவும், `வீடுபேறே புக்கில்` எனவும் திருவள்ளுவர் (குறள், 340) கூறுமாறு காண்க. இலக்கு - இலக்காய பொருள். ``விற்குறி`` என்பதில், வில் ஆகுபெயர்.
இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. -குறள், 1054
என்பராகலின், கரப்பார் மாட்டுச் சென்று இரத்தலே வறியார்க்கு இரப்பு என்னும் இழிதொழிலாதல் பெறப்பட்டது.
இதனானே,
இரப்பன் இரப்பாரை யெல்லாம், இரப்பிற்
கரப்பார் இரவன்மி னென்று. -குறள், 1067
எனவும் கூறுப.
அதனால், `கரப்பார்பால் சென்று இரவாமையே வறியார்க்கு ஓர் அறம்` என்பார் ``புல்லறிவாளரைப் போற்றிப் புலராமல்`` என்றும், `பொருளிலார்க்கு ஈதலாகிய அறம் கூடா தாயினும், இறைவனை ஏத்துதலைவிட வேண்டாவன்றோ` என்பார், ``இறைவனை ஏத்துமின்`` என்றும் கூறினார்.
இதனால், வறியார்க்கு ஆகும் அறம் கூறப்பட்டது. ``தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்`` (தி.7 ப.34 பா.1) என்னும் சுந்தரர் திருப் பதிகம் இத்திருமந்திரத்தொடு வைத்து நோக்கற்பாற்று.

பண் :

பாடல் எண் : 10

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :

பொருள் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர்.
அவன் திருவடியல்லாத பிற பொருள்களில் ஆசை நிறைந் தவர், தாம் இறக்குங்காறும் தமக்கு உய்யப்போவதொரு நெறியும் இன்றி, அறிவின்மை காரணமாக, தம்பால் வந்து இரப்பவரிடத்தும், `இரப்பவர்க்கு இல்லை என்னாது ஈக` என்று அறிவுறுப்பாரிடத்தும் கொள்கின்ற சினமாகிய தீயில் விழுந்து அழிவர்.

குறிப்புரை :

காண்டல் - பொதுவகையான் உணர்தல். துணை - அளவு. உம்மை முற்றும்மை. ஒன்று - ஒருநெறி. மெலிந்த சினம் - அறிவு குறைந்தமையால் விளைந்த சினம். `வீழ்ந்தார்` என்பது குறிப்பு உருவகம்.
இதனால் அறத்திற்கு முதலாவது அன்பு என்பதும், அவ்வன்பு தானே இறைவனை அடைதற்கும் வழி` என்பதும் கூறப்பட்டன. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப் பட்டது.
இவ்வதிகாரத்தின் இறுதி நான்கு திருமந்திரங்கள் சில பதிப்பு களில் முறைமாறிக் கிடக்கின்றன.
சிற்பி