முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு


பண் :

பாடல் எண் : 1

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொழிப்புரை :

அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை `அவர் நல்லர் இவர் தீயர்` என அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள்.
காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.

குறிப்புரை :

`ஆர்க்கும் இடுமின், பார்த்திருந்துண்மின், பழம் பொருள் போற்றன்மின்` என்பவற்றால் முறையே `தாழ்ந்தோர், உயர்ந் தோர், ஒத்தோர்` என்னும் முத்திறத்தார்க்கும் உதவுதல் கூறப்பட்டமை காண்க.
தாழ்ந்தோர்க்கு உதவுதலே ஈகை அல்லது தருமம். அஃது `அற்றார் அழிபசி தீர்த்தலே` (குறள், 226) ஆகலின், அதற்கு ஏற்பாரது தகுதியை ஆராயவேண்டுவதில்லை என்றார்.
``பார்த்திருந்து உண்மின்`` என்றதனால், `தக்கார் வரின், மகிழ்ந்து வரவேற்று அவரோடு உண்டலும் வாராதவழி வாராமைக்கு வருந்தித் தாமே உண்டலும் செய்க` என்றதாயிற்று. இதுவே `விருந்தோம்பல்` என்றும், `தானம்` என்றும் சொல்லப்படும். இவர்க்குப் பொருளும் கொடுக்கப்படும் ஆதலின், தகுதி வேண்டப்படுவதாயிற்று. திருவள்ளுவரும் `தக்க விருந்தினரையே ஓம்புக` எனக் கூறுதல் அறிக. (குறள், அதி. 9)

``பழம்பொருள் போற்றன் மின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. சுற்றம், அடுக்கிய சுற்றமாய் வருதலின், (குறள், 525) பழம் பொருளைப் போற்றாது வழங்குதலை அதற்கே கூறினார். எனினும் பொதுப்படவே ஓதினமையால், பிறவற்றிற்கும் கொள்ளப்படும். காக்கை கரைந்துண்ணுதலைத் திருவள்ளுவர் சுற்றந்தழாலுக்கே உவமையாகக் கூறுதலும், (குறள், 527)
காக்கை தனது இனம் ஒன்றையே கரைந்து உண்ணுதலும் அறிக. ``காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே`` என்றாராயினும், `உண்ணுங் காலம் காக்கை கரைதல் அறிமின்` என்றலே கருத்து என்க.
இதனால், `தேடிய பொருளைப் பிறர்க்குப் பயன்படச் செய்தல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் செய்யுமாறும் கூறப் பட்டன.
சிற்பி