முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு


பண் :

பாடல் எண் : 1

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 

பொழிப்புரை :

இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்புமாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.

குறிப்புரை :

எடுத்துக்காட்டுவமைக்கு ஏற்ற பொருள்கள் இசையெச்சமாய் நின்றமையின், அவை விரித்துரைக்கப்பட்டன. `வெய்தாக` என ஆக்கம் வருவித்து உரைக்க. இதனால் வரைவின் மகளிரை அவரது வடிவழகு பற்றியும், பொய்ச்செயல் பற்றியும் விரும்புவார், பின் தீங்குறுவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 

பொழிப்புரை :

இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும்பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக்கொள்வதுபோல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொது மகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.

குறிப்புரை :

மனை, மனைவி ஆகுபெயர்கள். முன்னர், ``மனை புகுவார்கள்`` என்றும், ``மனைவியை நாடில்`` என்றும் கூறினமை யால், பின்னர், `பிறர்` என்பதும் பொதுமகளிரை நாடில் என்பதும் பெறப்பட்டன. உண்மையை, ``நனவு`` என்றார் உண்மையாகாமை யின், `போல` என்றார். உம்மை, மாற்றி உரைக்கப்பட்டது. அற நெறி யில் நிற்கும் ஆடவர் தம் மனைவியரைப் பிரிய மாட்டாமையை அகத் திணையுள், செலவழுங்கல், இடைச்சுரத் தழுங்கல் முதலிய துறை களில் வைத்து இனிது விளங்கப்பாடுவர் நல்லிசைப் புலவர்.
இதனால், பொது மகளிரது உள்ளத்து அன்பின்மை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 

பொழிப்புரை :

ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம்கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில் லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.

குறிப்புரை :

`இவ்விரண்டனுள் முன்னது பொருள் இருந்த காலத்து நிலைமை; பின்னது பொருள் அற்ற காலத்தில் உண்டாம் நிலைமை` என்பது கருத்து. இளம்பிடி, நடைக்கு உவமை, அன்னதொரு நடையாலும் ஆடவரை மயல்கொள்ளச்செய்தல் குறித்தவாறு. `மயலால்` என உருபு விரிக்க. அயல் - அயன்மை. அஃது உறுமாறு பேசி அகன்றமையைக் கோவலன் வரலாற்றாலும் உணர்க. அயலுறப் பேசுதல், அவர் பொருளுடையார் பக்கம் போதலைக் காணும் பொழுதாம். ஆகவே, `பொருட் பெண்டிராகிய அவரது பொய்ம் முகத்தால் மயங்கலாகாது` (குறள் - 913) என்பதாம்.
இதனால், பொதுமகளிரது நிறைஇன்மை கூறி, மயக்கத்தால் அவ்விழிபினை மறந்து அவரை விழைதல் கூடாது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே. 

பொழிப்புரை :

நிலவுலகத்தில் வாழும்பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ் கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப் பட்ட வேம்பு போல்வதுமாகும்.

குறிப்புரை :

``கூடி என்`` என்றது, அவ்வின்பம் கணத்தில் அழியும் சிற்றின்பமாதலேயன்றிப் பின்னரும் பல இடர்விளைத்தல் பற்றியாம். விதியின் பயனாகிய காரியத்தை, ``விதி`` எனக் காரணமாக்கிக் கூறினார். ``சாறுகொள்`` என்றது ஒட்டணி. ``வைத்த விதி`` எனவும், ``வேம்பதுவாம்`` எனவும் கூறியவாற்றால், அவ் வின்பத்தை அறம் பொருள்கட்குத் துணையாக அமைந்த மனைவியிடத்து நுகர்தலோடு ஒழியாது, அறத்தோடும், பொருளோடும் சிறிதும் இயைபில்லாத பொதுமகளிடத்தும் நுகர விரும்புதல் பெரும் பேதைமைத்து என்றவாறாம்.
இதனால், `பொதுமகளிரது இன்பம் வேண்டத்தகாத தொன்று` என்பது கூறப்பட்டது. இத்திருமந்திரம், காமவின்பத்தினை முற்ற விலக்கும் நோக்குடைத்தாதலும் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 

பொழிப்புரை :

வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக் கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.

குறிப்புரை :

எனவே, `படுகுழியில் வீழ்வாரை விலக்காதொழிந்த பாவம் அறிவுடையோர்க்கு உண்டாகும்` என்பது கருத்தாயிற்று. கோழை - உரன் (திட்பம்) இன்மை. அஃதாவது மனத்தை அடக்கும் வலி இன்மை. `ஒழுக்கத்தால்` என உருபு விரிக்க. `குளம் மூடு பாசியில்` என்றாராயினும், `பாசி மூடு குளத்தில்` என்றலே கருத்து என்க. இஃது உருவகம், `நாடுவார்` என்பது குறுகிநின்றது. நாடுவார், முற்றெச்சம். குளம், இயல்பால் விரும்பி ஆடத்தக்கதெனினும், பாசியால் மூடப்பட்டவாற்றால் இகழ்ந்தொதுக்கப்படுதல் போல, மகளிர் இயல்பால் விரும்பிக் கூடத்தக்கவர் எனினும், வரைவில் ஒழுக்கத்தால் இகழ்ந்தொதுக்கப்படுவர் என்றற்குப் பொதுமகளிரை, பாசி மூடிய குளமாக உருவகித்தார். இக்குளத்தில் மூழ்கினார் மாசு தீராமையேயன்றி மாசு மிகப்பெறுதலும் உடையாராவர் எனினும், ஒருகால் மீண்டு வருதல் உண்டு; பொதுமகளிர்தம் இன்பத்தில் ஆழ்ந்தவர் பழி பாவங்களை எய்தன்மேலும், மீள அறம் பொருள்கட்கு உரியராகாது வெறுவியராவர் என்றற்கு, ``பூழை நுழைந்தவர் போகின்றவாறே` என வேறும் ஓர் உவமை கூறினார். இவற்றையும் கோவலன் வரலாறு முதலியவற்றான் அறிந்துகொள்க.
இதனால், பொதுமகளிரது கூட்டம் உய்தியில் குற்றமாய் முடியும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 

பொழிப்புரை :

`பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

குறிப்புரை :

மலைவு, அறத்திற்கு நேர்மாறாதல், எனவே, `பெருந் தீவினை` என்றவாறாம். இவற்றை, `பஞ்ச மாபாதகம்` என்பர். `அவை நீக்கி` என்பது பாடம் அன்று. தலையாயதனை, `தலை` என்றார். ஆம் - உண்டாகும். ``அவை நீக்கத் தலை ஆம்`` என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``இலையாம்`` என்றதில் ஆம், அசைநிலை. இறுதிக்கண், `உளதாம்` என்பது சொல்லெச்சம். ``இன்பம் சார்ந்தோர்க்கு`` என்றது, கொலை முதலியன தோன்றாமைக்கு ஏது உணர்த்தற்பொருட்டும், ``ஞானானந்தத்திருத்தல்`` என்றது, அவையே யன்றிப் பிற தீங்கு நலங்களுள் யாதொன்றும் இல்லை என்பது உணர்த்தற்குமாம். எனவே, `சிவனடியைச் சாராதவழி இவற்றை முற்றக்கடிதல் இயலாமையின், அவற்றை அடைதலே தக்கது` என்பதும், `அவற்றை அடைந்தவழித் தீமை நீங்குதலேயன்றி, நன்மை பெருகுதலும் உளவாம்` எனவும் கூறியவாறாயிற்று.
இதனால், `பெரிதும் குறிக்கொண்டு கடியத்தக்க பெருங் குற்றங்கள் இவை` என மேற்போந்தவைகளைத் தொகுத்துக் கூறி, அவற்றை முற்றக் கடிதற்கு வழியும் கூறப்பட்டது. களவையும், பொய் கூறலையும் வழிமொழிதல் வகையாற் கூறினார் எனவும் கள் உண்டலை எதிரது போற்றிக் கூறினார் எனவும் கொள்க. பின்னர் வரும் வாய்மை பொய் கூறாமையாகாது வேறாதல் அறிக. இதனானே, இத்திருமந்திரம் இவ்விடத்ததாதலும், `புலால் மறுத்தலின்` கண்ணது ஆகாமையும் அறிந்துகொள்க.
சிற்பி