திருப்பறியலூர்வீரட்டம்


பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறிய லூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.

குறிப்புரை :

இப்பதிகம் முழுவதும் எல்லாவுயிர்கட்கும் கருத்த னாய், கடவுளாய், விருத்தனாய் இருப்பவன் திருப்பறியலூர் வீரட்டத்தான் என இறைவனியல்பு அறிவிக்கின்றது. திருத்தம் உடையார் - பிழையொடு பொருந்தாதே திருந்தியமனமுடைய அடியார். விருத்தன் - தொன்மையானவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

மருந்த னமுதன் மயானத்துண் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.

குறிப்புரை :

மருந்தன் - பிணி தீர்க்கும் மருந்தானவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதிதேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.

குறிப்புரை :

கொடுஞ்சிலை - வளைந்தவில். விளிந்தான் - இறந் தான். வீந்து எய்த - இறந்து பின்னரும் வர. செற்றான் - கொன்றவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.

பொழிப்புரை :

சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச்செய்யும் ஒளி வடிவினன்.

குறிப்புரை :

பிறப்பாதி எனவே இறப்புமில்லான் என்பதுணர்த் தியவாறு. பிறப்பார் பிறப்பு செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யுந் தேசன் - பிறவியெடுக்கும் உயிர்கள் எய்தும் பிறப்பிற்கும் சிறப்பிற்கும் முதலும் முடிவும் அடையச்செய்யும் ஒளிவடிவானவன். சிறப்பாடு - சிறப்பு. பாடு தொழிற்பெயர் விகுதி. விறல் பாரிடம் - வலிய பூதகணம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.

குறிப்புரை :

கரிந்தார் - இறந்தவர். புரிந்தார் - வினைகளைப் புரிந் தவர். படுதம் - கூத்துவகை. அக்கூத்தினைச் சுடுகாட்டில் விரும்பி ஆடுபவன். புறங்காடு - சுடுகாடு. தெரிந்து ஆர் மறையோர் - ஆராய்ந்தறிந்த அந்தணர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

அரவுற்ற நாணா வனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப்பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.

குறிப்புரை :

அரவு உற்ற நாணா (க) அனல் அம்பு அது ஆக செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான் எனப்பிரிக்க. செரு - போர். வெரு வுற்றவர் - அஞ்சியவர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நரையார் விடையா னலங்கொள் பெருமான்
அரையா ரரவம் மழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.

குறிப்புரை :

நரை - வெண்மை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.

பொழிப்புரை :

பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல் விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலைமலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால்விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.

குறிப்புரை :

வளைக்கும் எயிறு - கோரப்பல். அரக்கன் என்றது இராவணனை. ஏழை அன்னம் திளைக்கும் படுகர் - பெண்ணன்னம் புணரும் ஆற்றுப்படுகர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமை யம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல்வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தையுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான்.

குறிப்புரை :

விளங்கு ஒண்மலர் - விளங்குகின்ற ஒளிபொருந்திய தாமரைமலர். ஓதவண்ணன் - கடல்வண்ணனாகிய திருமால். துளங்கும் - நடுங்கும். மனத்தார் என்றது அயனையும் மாலையும். இணைந்து - ஒரு திருமேனிக்கண்ணே ஒன்றாய். பிணைந்து - இடப்பாகத்து உடனாய்க்கூடி.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதா னடியார் பெருமான்
உடையன் புலியி னுரிதோ லரைமேல்
விடையன் றிருப்பறியல் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.

குறிப்புரை :

சமண் சாக்கியரோடு அடைதற்கு அன்பிலாதான் என்க. பெருமான் - பெருமகன் என்பதன் திரிபு. புலியின் உரிதோல் அரைமேல் உடையன் எனக்கூட்டுக.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவல மறும்பிறப் புத்தானே.

பொழிப்புரை :

நல்ல நீர் பாயும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர்வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

குறிப்புரை :

நறுநீர் - நல்லநீர். வெறிநீர் - மணம்பொருந்திய தேன். நீடவல மறும்பிறப்பு அறும் எனக்கூட்டுக.
சிற்பி