பொது


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

`நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

நாம் முன்முன் பிறவிகளில் ஈட்டிய தீவினைகட்கு ஏற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம் என்று சொல்லும் அடியார்களைப் பார்த்து நீங்கள் உய்வைத்தேடாதிருப்பது ஊனமல்லவா? கைத்தொண்டு செய்து கழலைப் போற்றுவோம்; நாம் செய்தவினை நம்மைத் தீண்டா; திருநீலகண்டம் என்கின்றது. அவ்வினைக்கு - முன்னைய வினைக்கு. இவ்வினை - இப்போது சுரநோயால் வருந்தும் இவ்வினை. உய்வினை - தீரும் உபாயத்தை. கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு `கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே` என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த பெருமானே! நந்தவனம் வைத்தும், குளந்தோண்டியும், பூவெடுத்துக் கட்டி அணிவித்தும் போற்றுவோம்; ஆதலால் தீவினை எம்மை வந்து தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. கா - சோலை. தொட்டும் - தோண்டியும். ஏ வினையால் - அம்பின் தொழிலால்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை `எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே` முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

போகங்கள் எம்மைப் பற்றாவண்ணம் தடுத்தாண்ட பெருந்தகையீர்! சூலம் மழு இவற்றையுடையீர்! எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. விலைத்து அலையா வண்ணம்; அடியேனை விலகச் செய்து அலையா வண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். சிலைத்து - ஒலித்து. விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் `புண்ணிய வடிவமானவர்` என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

வேதியரும் வித்தியாதரர்களும் புண்ணியர் என்று தொழும் புண்ணியரே! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்கின்றது. திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்றது இதுவரை நுகர்ந்த அளவிலேயே அமைவதாக, திருவருள் நோக்கத்தால் அவை மென்மையாயின ஆதலின் இங்ஙனம் கூறினார்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவிகளில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

ஒப்பற்ற மலைபோல் திரண்ட தோளுடையீர்! எம்மையாட்கொண்டும் எம்குறையைக் கேளாதொழிவது பெருமையோ? எல்லாத் துணையையும் விட்டு உமது திருவடியடைந்தோம் ஆதலால் எம்மைத் தீவினை தீண்டப்பெறா. திருநீலகண்டம் ஆணை என்கின்றது. மற்று - வேறு. இணை - ஒப்பு. கிற்று - வலிபடைத்து. சொல்துணைவாழ்க்கை - சொல்லப்படுகிற துணைகள் பலவற்றோடும் கூடிய வாழ்க்கை. செற்று - வருத்தி. எமது வினைகளை வெருட்டும் வலியுடையீர் என்று குறிக்க இணையில்லாமலை திரண்டன்ன தோளுடையீர் என்று குறிப்பித்தது. எமக்கும் தேவரீர்க்கும் உள்ள தொடர்பு ஆட்கொள்ளப்பட்டதால் உண்டான ஆண்டானும் அடிமையுமான தொடர்பு அங்ஙனமிருந்தும் எமது குறையை நீரேயறிந்து நீக்க வேண்டியிருக்க, சொல்லியும் கேளாது ஒழிவதும் தன்மையோ என்றார். துணையென்று சொல்லப்படுகின்ற வாழ்க்கைகளைத் துறந்து உம்திருவடியடைந்தோம் என்றது அகப்பற்றும் புறப்பற்றும் விட்டு உம்மைப் பற்றினோம் என்றது. தீவினை செற்றுத் தீண்டப்பெறா என்றது தீவினைகள் தீண்டுபவற்றைத் தடுத்தலாகாது ஆயினும் அவை வலியிழந்தனவாகத் தீண்டா என்று விளக்கியவாறு. கிற்று - கற்றல் பொருந்திய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக் கொண்டு பூசித்து `உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்` எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

எம்மோடு ஒன்றி வராமல் மறுக்கும் தன்மை வாய்ந்த மனத்தையும் மாற்றி, உயிரை வற்புறுத்தித் தேவரீர் திருவடிக்குப் பிழை ஏற்படாதவண்ணம் மலர் கொண்டேத்தும் அடியேங்களைச் சிறப்பு இல்லாத இத்தீவினைகள் தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. மனத்திற்கு இயற்கை, பற்றியதை விட்டுப் பின்வேறொன்றைப் பற்றி, அதன் மயமாய், பற்றியதையும் மறந்துவிடுதல். அந்த நிலையை மாற்றி என்றார். வற்புறுத்தி - திருவடியையே பற்றிவிடாது நிற்றலின் வினையின் வழிநின்று மலமறைப்பால் தடுமாறும் ஆன்மாவை வற்புறுத்தி. சிறப்பில் இத்தீவினை - சிறப்பற்ற இந்தத்தீவினை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் `தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே!` என உருகிப் போற்றுவோமாயின் சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப்பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து உம் திருவடியை உருகிவழிபடும் எம்மைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. கரு - பிறவிமுதல். செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன். திக்கு விஜயம் பண்ணிப் போரில்லாமையால் தருக்கிக் கயிலையை எடுத்தானாதலின் இங்ஙனம் கூறினார். திரு இல் - சிவனடி வழிபடும் செல்வத்தையில்லாத. கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித் தீவினை - சிவஞானச்செல்வத்தை இல்லதாக்கும் தீவினை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத்தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

மலர்மேலயனும் திருமாலும் தங்களுக்குள் வாது செய்து, அடியும் முடியும் அறியப்படாத தன்மையை யுடையவரே! காணப்பெறினும் பெறுவீர், உம்மைத் தொழுது வணங்குவோம்; சீற்றமாகிய வினை எம்மைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம் என்கின்றது. நாற்றம் - மணம். தோற்றமுடைய - கட்புலனாகிய. சீற்றம் - கோபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

சாக்கியராயும் சமணராகியும் இருமையின்பமும் ஒழிந்தார்கள்; நாங்கள் நும் திருவடி போற்றுகின்றோம்; எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. இருதலைப் போகம் - இம்மை மறுமை யின்பம். தீக்குழித் தீவினை - தீக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

பொழிப்புரை :

மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

குறிப்புரை :

எமது இறைவன் கழலடையப் பிறந்த இப்பிறவியில் சிவபெருமான் திருவடியைப்பேணி, மீட்டும் பிறவியுளதாயின், இம்மொழி பத்தும் வல்லார்கள் வானவர்கோனொடுங் கூடுவர் என்கின்றது. அடைவான் பேணி, வல்லார், பிறவியுண்டாகில் கோனொடுங் கூடுவர் என முடிக்க.
சிற்பி