திருப்பரங்குன்றம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலனஞ்சொ லணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

பொழிப்புரை :

நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண் பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.

குறிப்புரை :

பிறை, கொன்றை இவைகளைச் சூடியவனும், எரி யேந்தியும், இடுகாட்டில் நட்டமாடுபவனும், உமாதேவியாரை ஒரு பாகம் வைத்து ஆடுபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள நகரம் திருப்பரங்குன்றம் என்கின்றது. சூடலன் - சூடுதலையு டையவன். அம் சொல் அணியிழையாளை எனப் பிரிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

அங்கமொராறும் மருமறைநான்கும் மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம்.

குறிப்புரை :

வேதம் அங்கம் இவைகளையருளிச் செய்து, பூணுநூல் நீறணிந்த மார்பில் விளங்க, பாம்பும் மதியும் சென்னியிற்சூடிய உமையொருபாகன் நகர் இது என்கின்றது. பொங்கும் வெண்ணூல் - அழகுமிகும் பூணுநூல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே னிரைகொன்றை
சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே யுமையொருபாக முடனாகிப்
பாரிடம்பாட வினிதுறைகோயில் பரங்குன்றே.

பொழிப்புரை :

கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம்.

குறிப்புரை :

கங்கை சூடிய திருச்சடையில் கொன்றையையணிந்த எம்மிறைவன் உறைகோயில் பரங்குன்றுபோலும் என்கின்றது. நீர் - கங்கை. நிரை கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. பாரிடம் - பூதம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போன்மேனித் தையனல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.

பொழிப்புரை :

வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.

குறிப்புரை :

கோங்கம் மாதவி மல்லிகை இவைகள் செறிந்த சாரலையுடைய பரங்குன்றம், பெண்ணொருபாகன் பேணிய நகராம் என்கின்றது. இவன் போகியாதற்கேற்பக் குன்றமும் மல்லிகை முதலிய மணந்தரும் பூக்கள் மலிந்துள்ளமையும், புணர்ச்சி நலமிகும் சாரலோடு கூடியமையும் குறிக்கப்பெற்றன.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.

பொழிப்புரை :

பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங் கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடு பொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந் தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.

குறிப்புரை :

சோதி வடிவாகிய ஈசனும் வேதம் அருளிச் செய்தவனும் ஆகிய நட்டமாடியின் பரங்குன்றைத் தியானிப்பவர்கட்கு நோயில்லை என்கின்றது. பொறி - படப்பொறி. உன்னிய - தியானித்த. உறுநோய் - மிக்கநோய்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனன்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்ற னன்னகர்போலும் பரங்குன்றே.

பொழிப்புரை :

வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.

குறிப்புரை :

திரிபுரம் எரிய அம்புதொடுத்த வில்லினனும், பூதம் பாட இடுகாட்டில் நடமாடும் சூலபாணியுமாகிய இறைவன் நகர் பரங்குன்று என்கின்றது. கடி அரண் - காவலோடு கூடிய அரண். தொடை - அம்பு. புடை - பக்கம். நவில்வான் - விரும்பியவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அயிலுடைவேலோ ரனல்புல்குகையி னம்பொன்றால்
எயில்படவெய்த வெம்மிறைமேய விடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.

பொழிப்புரை :

கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசைபாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும்.

குறிப்புரை :

எறியம்பு ஒன்றால் எயில் எய்த இறைவன் எழுந் தருளியுள்ள இடம் பரங்குன்று என்கின்றது. அயில் - கூர்மை. பட - அழிய. ஆண்மயில் தன்னுடைய பெடையைத்தழுவிக் கொண்டு நடமாடும் சோலையிலே, பெடையோடு கூடிய வண்டுகள் பாடுகின்றன என்பதால் இன்பமயமாதல் எடுத்துக் காட்டப்பெற்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

பொழிப்புரை :

மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட்போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின் சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல்நில்லா.

குறிப்புரை :

பரங்குன்றைச் சிவபெருமானே என்றெண்ணி மனம் ஒன்றி நாள்தோறும் வழிபட நமது வினைகள் அழியும் என்கின்றது. மைத்தகுமேனி வாள் அரக்கன் - கரியமேனியை உடைய கொடிய அரக்கன்; என்றது இராவணனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

முந்தியிவ்வையந் தாவியமாலு மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த வுரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.

பொழிப்புரை :

மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகியகையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.

குறிப்புரை :

அயனும் மாலும் மனத்தாலும் அறியமுடியாத சோதி வடிவாகிய இறைவனது பரங்குன்று இது என்கின்றது. உந்தி - கொப்பூழ். உரவோன் - அறிஞன்; என்றது பிரமனை. பந்து இயல் அங்கை - மங்கைக்கு அடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டானீழன் மேவியவீசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

பொழிப்புரை :

பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன் மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மரநிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறுவன மெய்யில்லாதன; ஆத லால் பரங்குன்று ஈசன் பாதத்தைப் பணிசெய்து தொழவே பழவினை பறக்கும் என்கின்றது. குண்டாய் - பருத்த உடலராய். மிண்டர் - வழக் குரைப்பார். பண்டு ஆல் நீழல் மேவிய எனப்பிரிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாக மரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை மிக்கோரே.

பொழிப்புரை :

பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப்பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் சொன்ன பரங்குன்றப் பாடல் பத்தும் வல்லவர் தம்முடைய துன்பம் எல்லாம் தொலைந்து நீலகண்டனது அருளைப் பெறும் தகுதி உடையோராவர்.
சிற்பி