திருக்கானூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வானார்சோதி மன்னுசென்னி வன்னி புனங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை திங்க ளொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலை யாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி யானூர் செல்வரே.

பொழிப்புரை :

திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றி யினை உடையவரும், ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர், வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி, காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, திங்கள் ஆகியவற்றைச் சூடி, மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக்காலத்தில் நடனம் புரிபவராவர்.

குறிப்புரை :

கானூர் மேவிய செல்வர், சென்னியிலே வன்னி, கொன்றை, திங்கள், கங்கை சூடி அம்மைகாண ஆடுவார் என்கின்றது. வானார்சோதி - வானிலுள்ள ஒளிப்பொருளாகிய சூரியனும் சந்திரனும். சென்னி - திருமுடி. வன்னி - வன்னிப் பத்திரம். மானேர் நோக்கி - மானை ஒத்த கண்களையுடைய பார்வதி. ஆன் ஊர் செல்வர் - இடபத்தை ஊர்ந்த செல்வர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலாரப்
போந்தமென்சொ லின்பம்பயந்த மைந்தரவர் போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே.

பொழிப்புரை :

காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர், தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.

குறிப்புரை :

கானூர்மேவிய செல்வர், கங்கையினையுடைய சடையின் மேல் பிறையும் கொன்றையும் பொருந்த, இன்சொல்லால் இன்பம் பயக்கும் இறைவர்போலாம் என்கின்றது. நீந்தலாகாவெள்ளம் மூழ்கும் நீள்சடை - நீந்தமுடியாத அளவு வேகத்தோடு வந்த கங்கை வெள்ளம் மூழ்கி மறைந்துபோன சடை. ஏய்ந்த - பொருந்திய. போந்த - தன்வாயினின்றும் வந்த. மென்சொல் - மெல்லிய சொற்களால்; என்றது நயந்து பின்னிற்றலால் இன்பந்தந்த தலைவர் என்றவாறு. இது வழிநாட் புணர்ச்சிக்கண் பிரிந்த தலைமகன் காலம் நீட்டிக்க, கவன்றதலைவி தலைநாளில் மென்சொல்லால் இன்பம் பயந்தமை எண்ணி நைகின்ற நிலையை அறிவிக்கின்றது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு மால்விடை மேல்வருவார்
இறையார்வந்தெ னில்புகுந்தென் னெழினல முங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே.

பொழிப்புரை :

கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இதுமுறையோ?.

குறிப்புரை :

கானூர்மேவிய பிறையார், சடையார், விடைமேல் வருவாராய் என் வீட்டில் புகுந்து என் நலத்தைக் கொண்டார் என்று தலைவி அறத்தொடு நிற்பதாக எழுந்தது. சிறை - சிறகு. மறை ஆர் பாடல் - வேதப்பாடல். மால்விடை - பெரிய இடபம். இறையார் - சிவன். எழில்நலம் என்பது எழிலும் நலமும் என உம்மைத் தொகை. கறையார் சோலை - இருள் சூழ்ந்த சோலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை மாலை யதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன் சடைதாழ
எண்ணாவந்தெ னில்புகுந்தங் கெவ்வ நோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே.

பொழிப்புரை :

இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகிய வற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரகவேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?

குறிப்புரை :

வீட்டில் கன்னம்வைத்துப் புகுந்த கள்வனின் அடை யாளங் கூறுவார்போலத் தலைவி, இல்புகுந்து எவ்வஞ்செய்த தலைவனின் கண்ணி அணி அடையாளங்கள் இவற்றைக் கூறுகின்றாள். விண் - ஆகாயம். கண்ணி - தலைமாலை. தண் ஆர் அக்கு - குளிர்ச்சி பொருந்திய எலும்புமாலை. எண்ணாவந்து என் இல் புகுந்து எவ்வ நோய் செய்தான் - யான் அறியாமையால் எண்ணாதிருந்தபோதிலும், வலியவந்து இல்லில் புகுந்து கலந்து பிரிந்த மிக்க துன்பத்தைச் செய்தான்; என்றது ஆன்மா தலைவனை, தானே சென்று அடைதற்கும், கலத்தற்கும், பிரிதற்கும் என்றும் சுதந்திரமில்லாதன என்று அறிவித்தவாறு. கண் - இடம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண் மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேட ராய்வந்து
ஊர்கள்தோறு மையமேற்றென் னுள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண் டத்தாரே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர், கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி, சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என் மனத்தகத்தே கொடிய விரகவேதனையைத் தந்து சென்றார்.

குறிப்புரை :

பிச்சை ஏற்பார்போல் வந்து என் மனத்திற்குப் பெரு நோய் செய்தார் என்கின்றது. இதுவும் தலைவி கூற்று. தார் - மார்பின் மாலை. கண்ணி - தலையிற்சூடப்படும் மாலை. சேடர் - காதலால் தூது செல்லும் தோழர். உள் - மனம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

முளிவெள்ளெலும்பு நீறுநூலு மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போ லையமென்றெ னில்லே புகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேற லார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய வொளிவெண் பிறையாரே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, `ஐயம் இடுக` என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.

குறிப்புரை :

இதுவும்; பிச்சை என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்து என்னுடைய தெளிவையும் நாணத்தையுங்கொண்ட கள்வர் இவர் என்கின்றது. முளி - காய்ந்த. எளிவந்தார்போல் - இரங்கத் தக்கவர்போல். உள்ளத் தெளிவும் நாணுங்கொண்ட கள்வர் என்றது தன்னுடைய நிறையும் நாணும் அகன்றன என்பதை விளக்கியது. தேறல் - தேன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய தேவ தேவரே.

பொழிப்புரை :

தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றைமாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து, பொய்கலந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.

குறிப்புரை :

இவர் வரும்போது பிறைசூடி, கொன்றை மாலை யணிந்து, புன்சிரிப்புச் செய்துகொண்டே வந்தார்; பல பொய்யைப் பேசிக்கொண்டே போவார்போல என் மனத்தை மயக்கிப் புகுந்து கொண்டார் என்கின்றது. மூவா வண்ணர் - மூப்படையாத அழகை உடையவர். முறுவல் - காமக்குறிப்புத் தோன்றும் சிரிப்பு. பொக்கம் - பொய். உள்ளம் புக்க புரிநூலர் என்றது புரிநூல் அணிந்ததற்கேலாத செயல் செய்தார் என்னுங்குறிப்பு. தேவு - தெய்வத்தன்மை; தேன் வார் சோலை என்றுமாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தமிழினீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மை யதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே.

பொழிப்புரை :

மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.

குறிப்புரை :

இவர் பல வாத்தியங்கள் முழங்கப் பாடிக்கொண்டும் இனிமையாகப் பேசிக்கொண்டும் வந்தார்; வந்தவர் இடம் விட்டுப் பெயராராய் என்னுடைய அழகைக் கவர்ந்து கொண்டு குமிழம்பூ நிறத்தைக் கொடுத்துவிட்டார் என்கின்றது. தமிழின் நீர்மை - இனிமை. கோலம் - அழகு. பவளவண்ணரே என்றாள், அவர்மேனியின் நிறத்தில் ஈடுபட்டு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அந்தமாதி யயனுமாலு மார்க்கு மறிவரியான்
சிந்தையுள்ளு நாவின்மேலுஞ் சென்னியு மன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலை யாடுவான்
கந்தமல்கு கானூர்மேய வெந்தை பெம்மானே.

பொழிப்புரை :

மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந் தையாராகிய பெருமானார், அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளு கின்றார்.

குறிப்புரை :

அயனுக்கும் மாலுக்கும் அறியப்படாத இறைவன் எனது சிந்தையிலும், நாவிலும், சென்னியிலும் திகழ்கின்றான்; என் மனத்திற் புகுந்து காலையும் மாலையும் உலாவுகின்றான் என்கின்றது. அந்தம் ஆதி - முடிவும் முதலும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஆமையரவோ டேனவெண்கொம் பக்கு மாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல வுள்வெந் நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் கோணா கணையானும்
சேமமாய செல்வர்கானூர் மேய சேடரே.

பொழிப்புரை :

வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங் களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மனவேதனையைத் தந்தார்.

குறிப்புரை :

எலும்பு முதலியவற்றை அணிந்து வெள்ளை உள்ளம் படைத்தவர்போல வந்து கள்வராய் மனவேதனையைத் தந்தார் என்கின்றது. அவர்கொண்ட வேடத்திற்கும் செயலுக்கும் பொருத்தமில்லை என்றபடி. ஓமம் - ஆகுதி. கோண் நாகணையான் - வளைந்த பாம்பைப் படுக்கையாகக்கொண்டவன். சேமம் - பாதுகாப்பு. சேடர் - கடவுள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொற் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கு மன்புசெய்வார் அல்ல லறுப்பாரே.

பொழிப்புரை :

பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

குறிப்புரை :

இத்தோத்திரங்களைச் சொல்லித் துதித்து ஆனந்தத் தால் அழுதும் சிரித்தும் நிற்பவர்கள் துன்பம் அறுப்பார் என்கின்றது. கழுது - பேய். பொழுது - முப்பொழுதிலும்.
சிற்பி