திருமாந்துறை
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 1
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்   செருந்திசெண் பகமானைக்
 கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
 அம்பொன் நேர்வரு காவிரி வடகரை   மாந்துறை யுறைகின்ற
 எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.
பொழிப்புரை : 
வேங்கை ,  ஞாழல் ,  செருந்தி ,  செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் ,  சந்தனமரம் ,  மாதவி மலர் ,  சுரபுன்னை மலர் ,  குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம் .
குறிப்புரை :
வேங்கை பொன்போல் பூக்கும் .  வேங்கை முதலியவை காவிரி வெள்ளத்தால் உந்தப்பட்டுவருவன . 
 ஆரம்  -  சந்தனம் .  பொன் நேர்வருகாவிரி :- ` பொன்னி `.
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 2
விளவு தேனொடு சாதியின் பலங்களும்   வேய்மணி நிரந்துந்தி
 அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
 துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
 அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.
பொழிப்புரை : 
விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் ,  மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை ,  அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம் .
குறிப்புரை :
விளவு  -  விளா .  வேய்மணி  -  மூங்கில்முத்து .  துளவ மால் மகன்  -  துழாய் அணிந்த திருமாலுக்கு மகனான .  அளகம்  -  கூந்தல் .  ஈற்றடியைச் சைவர் மறத்தல் கூடாது . ( பா . 3, 4  பார்க்க ).
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 3
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
 ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
 வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
 கேடி லாமணி யைத்தொழல் அல்லது   கெழுமுதல் அறியோமே.
பொழிப்புரை : 
தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம் .
குறிப்புரை :
வாடினார்தலை :-  பிரம கபாலம் .  கேடிலாமணி  -  இத் தலத்து இறைவர் திருப்பெயர் .  மாந்துறைமணி என்பன முன் வழங்கி யவை .  கெழுமுதல்  -  நிறைவு ,  பொருத்தம் .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 4
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை   யிளமரு திலவங்கம்
 கலவி நீர்வரு காவிரி வடகரை   மாந்துறை யுறைகண்டன்
 அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
 மலையை வானவர் கொழுந்தினை அல்லது   வணங்குதல் அறியோமே.
பொழிப்புரை : 
இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை ,  பிறை ,  அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .
குறிப்புரை :
இலவம் முதலியவை மரங்கள் .  ஈஞ்சு  -  ஈந்து ;  போலி .  கண்டன்  -  தலைவன் .  புனல்  -  கங்கை .  அம்புலி  -  பிறை .  மலை .- ` அருள் நிதிதரவரும் ஆனந்த மலையே `  திருப்பள்ளியெழுச்சி .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 5
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி   குரவிடை மலருந்தி
 ஓங்கி நீர்வரு காவிரி வடகரை   மாந்துறை யுறைவானைப்
 பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
 தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.
பொழிப்புரை : 
கோங்கு ,  செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை ,  தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர் .
குறிப்புரை :
குரவு  -  குராமரம் .  பாங்கு  -  சிவாகம விதி .  பாட்டு  -  தோத்திரம் .  அவி  -  நிவேதனம் .  தாங்குவார்  -  சிவபூஜாதுரந்தரர் .  தலைப்படல்  -  சேர்தல் .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 6
பெருகு சந்தனங் காரகில் பீலியும்   பெருமரம் நிமிர்ந்துந்திப்
 பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
 பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
 மருத வானவர் வழிபடு மலரடி   வணங்குதல் செய்வோமே.
பொழிப்புரை : 
சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி ,  மதி ,  மன்னர்கள் ,  மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம் .
குறிப்புரை :
பரிவு  -  பக்தி .  இரவி  -  சூரியன் .  மருதவானவர்  -  மருத்துக்கள் . இதில் ,  இத்தலத்தை வழிபட்டவர்களை உணர்த்தி யருளினார் .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 7
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும்   நாண்மல ரவைவாரி 
  இறவில் வந்தெறி காவிரி வடகரை   மாந்துறை யிறையன்றங்
 கறவ னாகிய கூற்றினைச் சாடிய   அந்தணன் வரைவில்லால்
 நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.
பொழிப்புரை : 
மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும் ,  மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .
குறிப்புரை :
நறவம்  -  தேன் ,  மணம் ,  மௌவல்  -  காட்டு மல்லிகை .  இறவில்  -  மிகுதியில் .  அறவணாகிய கூற்று  -  தருமராசன் .  வரைவில்  -  மேருவாகியவில் ,  வாங்கி  -  வளைத்து .  எயில்  -  திரிபுரம் .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 8
மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட   மந்திகள் மாணிக்கம்
 உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
 நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
 சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.
பொழிப்புரை : 
மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை ,  நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர் .
குறிப்புரை :
மந்தம்  -  தென்றல் .  நிந்தியா  -  நிந்தித்து .  சிந்தியா மனத் தார்  -  சிந்திக்காத மனமுடையவர் . 
 தீநெறி  -  நரகிற் செலுத்தும் தீயகதி .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 9
நீலமாமணி நித்திலத் தொத்தொடு   நிரைமலர் நிரந்துந்தி
 ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
 மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளும்
 கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்   கூற்றுவன் நலியானே.
பொழிப்புரை : 
நீல மணிகளையும் ,  முத்துக்களையும் ,  மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள் .  நம்மைக் கூற்றுவன் நலியான் .
குறிப்புரை :
நித்திலத்தொத்து  -  முத்துக்கொத்து .  ஆலியா  -  துளித்து .  இணை  -  இரண்டு .  நாளும்  -  நாடோறும் .  கோலம்  -  சிவக் கோலம் .  நலியான்  -  வருத்தமாட்டான் .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 10
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்   நெடுங்கழை நறவேலம்
 நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
 ஒன்றி நேர்வரு காவிரி வடகரை   மாந்துறை யொருகாலம்
 அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.
பொழிப்புரை : 
சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர் .  நீண்ட மூங்கில் ,  தேன் பொருந்திய வேலமரம் ,  மாங்கனி ,  வாழைக் கனி ,  நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது .
குறிப்புரை :
கழை  -  மூங்கில் .  கரும்பு .  நறவு  -  மணம் ,  கதலி -  வாழை .  பலம்  -  பழம் .  ஒருகாலம் அன்றி :-  எக்காலத்தும் . 
 உள் அழிந்து எழும் பரிசு  -  நெஞ்சுருகி எழுகின்ற தன்மை .  அது  -  அப்பரமானந்தநிலை .
 பண் :நட்டராகம்
பாடல்  எண் : 11
வரைவ ளங்கவர் காவிரி வடகரை   மாந்துறை யுறைவானைச்
 சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
 அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
 பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்   பாவமும் இலர்தாமே.
பொழிப்புரை : 
மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில்  -  மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய் ,  சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர் .
குறிப்புரை :
வரைவளம்  -  மலைவளங்களை ,  மறை நிறைநாவன்  -  வேதங்கள் நிறைந்த நாவினர் .  அர :-  அரகர என்னும் முழக்கம் .  இப்பணியில் வல்லமை நல்லுயிர்க்கே உண்டாகும் .