வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர்
கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர்.
அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு உமையம்மையாரின்
சேடியர்களில் அநிந்திதை கமலினி என்ற மதிமுக நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர்.
ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டு காதல் கொண்டார். அந்நங்கையர் இருவரும்
ஆலாலசுந்தரர்தம் அழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர்
இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர்
கொய்து சென்றனர்.ஆதரித் தீசனுக்கு ஆட்செயு மூர்அணி நாவலூர் என்று ஓதநற் றக்கவன் றொண்டன்ஆ ரூரன்``
(தி.7 ப.17 பா.11)
``நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பிவன்றொண்டன்`` (தி.7 ப.64 பா.10)
``வேந்தராயுலகாண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இவ்வுடல்`` (தி.7 ப.64 பா.6)
இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பெற்றது:
நம்பியாரூரர்க்குத் திருமணம் நிகழவிருக்கும் நற்பொழுதில் சிவபிரான் முதிய வேதியராய்த் தோன்றி ஆளோலை
காட்டி ஆட் கொண்ட செய்தி பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.
``மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலியவந்தெனை ஆண்டுகொண்டானே`` (தி.7 ப.70
பா.2)
``நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன்
தன்னை ஆட்கொண்ட சம்புவே`` (தி.7 ப.69 பா.8)
``வாயாடி மாமறை யோதியோர் வேதியனாகி வந்து ...... வெண்ணெய் நல்லூரில் வைத்து
ஆளுங்கொண்ட`` (தி.7 ப.17 பா.8)
``அடக்கங்கொண் டாவணங்காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்`` (தி.7 ப.17
பா.10)
``வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணங்காட்டி அடியனாவெனை ஆளது கொண்ட
நற்பதத்தை``
(தி.7 ப.68 பா.6)
``ஓர் ஆவணத்தால் எம்பிரானார்வெண்ணெய்நல்லூரில் வைத்
தென்னை ஆளுங் கொண்ட நம்பிரானார்`` (தி.7 ப.17 பா.5)
``அன்று வந்தெனை அகலிடத்தவர்முன் ஆளதாகஎன்று ஆவணங் காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை யொளித்த
நித்திலத்திரள் தொத்தினை`` (தி.7 ப.62 பா.5)
``ஒட்டியாட் கொண்டு போயொ ளித்திட்ட உச்சிப்போதனை`` (தி.7 ப.59 பா.10)
``தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள் சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்`` (தி.7 ப.17 பா.2)
``நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார்`` (தி.7 ப.19 பா.2)
``பித்தரை யொத்தொரு பெற்றியர் நற்றவை யென்னைப்பெற்ற
முற்றவை தம்மனை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்`` (தி.7 ப.18 பா.7)
``ஆவணம் செய்து ஆளுங் கொண்டு`` (தி.7 ப.5 பா.10)
தவநெறி வேண்டுதல்:
திருத்துறையூரில் சுந்தரர் தவநெறி வேண்டிப் பதிகம் பாடினார். அத் திருப்பதிகத்திலேயே தவநெறி வேண்டும்
குறிப்பைத் தெரிவித்துள்ளார்.
``துறையூர்த் தலைவா உனைவேண்டிக்கொள்வேன் தவநெறியே`` (தி.7 ப.13 பா.1-10)
திருவடி சூட்டப் பெறுதல்:
திருவதிகைச் சித்தவட மடத்தில் பெருமான் திருவடி சூட்டி யருளிய நிலையில் பாடிய திருப்பதிகத்தில் சுந்தரர்,
பெருமான் திருவடி சூட்டிய அற்புதத்தைக் கூறியுள்ளார்.
``எம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற
அறிவிலா நாயேன்
எம்மானை யெறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே`` (தி.7 ப.38 பா.1)
காழிக் கடவுள் காட்சி:
சுந்தரர், சீகாழிப் பதியைத் திருவடிகளால் மிதித்தற்கஞ்சிப் புற எல்லையை வலஞ்செய்து வணங்கி நின்றாராக,
காழிப் பெருமான் காட்சி வழங்கினார். அவ்வருட்காட்சியைக் கண்ட அற்புதத்தைப் பாடல் தோறும்,
``கழுமல வளநகர்க் கண்டு கொண்டேன்`` (தி.7 ப.58 பா.1-10)
என்று குறித்துள்ளார்.
தம்பிரான் தோழராதல்:
திருவாரூர்ப் பெருமான் `தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்` என்றருளினார். சுந்தரர் தம்பிரான் தோழரானார்.
இக் குறிப்புப் பல பதிகங்களில் காணப்படுகின்றது.
``தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68
பா.8)
``என்னுடைய தோழனுமாய் யான்செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி`` (தி.7 ப.51 பா.1)
``என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)
பரவையார் திருமணம்:
திருவாரூர்ப் பெருமான் அன்புடைத் தோழராய் நங்கை பரவையாரை வாழ்க்கைத் துணையாகத் தந்தருளியதும், பின்
தூது சென்று இருவரிடை சந்து செய்வித்த அருளிப்பாட்டையும் குறிக்கும் அகச்சான்றுகள் பல.
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. (தி.7 ப.51 பா.10)
``தூதனைத் தன்னைத் தோழமையருளித் தொண்டனேன்செய்த
துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68 பா.8)
``தூதனை என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)
திருத்தொண்டத்தொகை யருளியது:
இறைவனருளால் அடியார்களுக்கு ஆட்பட்ட திறத்தினைக் குறிக்கும் பகுதிகள்:
``ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டு`` (தி.7 ப.21 பா.2)
``பண்டே நின்னடியேன் அடியாரடியார்கட் கெல்லாம் தொண்டே பூண் டொழிந்தேன்`` (தி.7 ப.24
பா.4)
நெல்லிட ஆள்வேண்டிப் பெற்றது:
பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்கு எடுத்து வருதற்பொருட்டுப்
பணியாள் வேண்டிப்பெற்ற குறிப்பு கோளிலித் திருப்பதிகத்திலேயே குறிக்கப் பட்டுள்ளது.
``கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை யெம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே`` (தி.7 ப.20 பா.1-10)
``பரவையவள் வாடுகின்றாள்`` (தி.7 ப.20 பா.8)
``பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே``
(தி.7 ப.20 பா.6,3)
``நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்தேத்திய பத்தும்`` (தி.7 ப.20 பா.10)
கோட்புலியார் புதல்வியரைத் தம் மகளாகக் கருதியது:
திருநாட்டியத்தான் குடியில் கோட்புலியார் மகளிரைத் தம் புதல்வியராகக் கொண்டருளினார் சுந்தரர்.
``கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவார்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன்..`` (தி.7 ப.15 பா.10)
``வனப்பகை யப்பன்`` (தி.7 ப.87 பா.10)
``வனப்பகையப்பன்... சிங்கடிதந்தை`` (தி.7 ப.57 பா.12)
பொன் பெற்றது:
திருப்புகலூரில் சுந்தரர்க்கு இறைவன் செங்கல்லைப் பொன்னாக்கி யளித்தனன். இக் குறிப்பு நம்பியாண்டார்
நம்பிகளால் விளக்கப்பெற்றுள்ளது.
``புகலூர் பாடுமின் இம்மையே தரும் சோறும் கூறையும்`` (தி.7 ப.34 பா.1)
``தென்புகலூர் அரன்பால் தூயசெம்பொன் கொள்ள வல்லவன்``
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, பா.57
பனையூரில் ஆடல் கண்டருளியது:
திருப்புகலூரிலிருந்து திருவாரூர் செல்லும் சுந்தரர்க்குப் பெருமான் திருப்பனையூர் எல்லையில் ஆடல்
காட்டியருளினான்.
``பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற் குழைதூங்கத்
தொண்டர்கள் துள்ளிப்பாட நின்று ஆடுமாறு வல்லார்`` (தி.7 ப.87 பா.1)
மழபாடியை வழிபட்டது:
திருவாலம்பொழிலில் சுந்தரர் தங்கியிருந்த காலத்தில் இறைவன் கனவில் தோன்றி `மழபாடிக்கு வருதற்கு
மறந்தாயோ` என்றருளினான். இக்குறிப்பமைந்த திருப்பாடல் பகுதி:
``மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே`` (தி.7 ப.24 பா.1)
பொற்குவை பெற்றது:
திருப்பாச்சிலாச் சிராமத்தில் இறைவனை இகழ்ந்துரைத்தது போலப் பதிகம் பாடியருளினார் சுந்தரர்.
திருக்கடைக்காப்பில் இகழ்ந்துரைத்ததையும் பொறுத்து அருள்புரிதல் கடமையென்று வற்புறுத்திப் போற்றிப்
பொற்குவை பெற்றார். திருநாவலூர்ப் பதிகத்தில் இகழ்வுரையையும் ஏற்று இறைவன் பொன்னளித்தான் என்று
கூறுகின்றார்.
``புன்மைகள்பேசவும் பொன்னைத் தந்தென்னைப்போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடமாவது நந்திருநாவலூரே`` (தி.7 ப.17 பா.2)
வழித்துணை பெற்றது:
திருமுதுகுன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுந்தரரைக் கூடலையாற்றூர் இறைவர் வழிப்போக்கராய் வந்து
கூடலை யாற்றூர்க்கு அழைத்துச்சென்று மறைந்தருளினார். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் பகுதி.
``கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே`` (தி.7 ப.85 பா.1)
ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடியது:
திருமுதுகுன்றத்து இறைவர்பால் பெற்ற பன்னீராயிரம் பொன்னைச் சுந்தரர் மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூரில்
பரவையார் முன்னிலையில் திருக்குளத்தில் எடுத்தார். அருளால் வாசிதீரப் பெற்றார். இந்நிகழ்ச்சிகளைக் குறிக்கும்
பகுதி,
``முதுகுன்றமர்ந்தீர், மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள்`` (தி.7 ப.25 பா.1)
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர் வம்பமருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங் கெடவே. (தி.7 ப.25 பா.2)
``பூத்தாருங் குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தாதந் தருளாய்`` (தி.7 ப.25 பா.9)
நம்பியாண்டார் நம்பிகளும் இதனைக் குறித்துள்ளார்.
செழுநீர் வயல்முது குன்றினிற்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கையன் ஈந்தபொன்
ஆங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீள் தருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூரன்
என்றுநாம் கேட்டதுவே. (தி.11 தி. திருவந்தாதி, 77)
பொதிசோறு பெற்றது:
திருக்குருகாவூர் இறைவன் சுந்தரருக்குப் பொதிசோறு அளித்த அற்புதத்தைச் சுந்தரர் குறிப்பிடும் பகுதி.
``ஆவியைப் போகாமே தவிர்த்துஎன்னை ஆட்கொண்டாய்`` (தி.7 ப.29 பா.2)
``பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்`` (தி.7 ப.2 பா.93)
சங்கிலியாரை மணந்தது:
திருவொற்றியூர் இறைவனைப் பணிந்து வேண்டிச் சங்கிலியாரை மணந்த செய்தியைக் குறிப்பிடும் பகுதிகள்.
``பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று
சொன்ன வெனைக்காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்ன வல்ல பெருமானே`` (தி.7 ப.89 பா.9)
``மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றவருள் செய்தளித்தாய்`` (தி.7
ப.89 பா.10)
``நொய் யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப் புணர்த்த தத்துவனை`` (தி.7 ப.51 பா.11)
``பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே`` (தி.7 ப.46
பா.11)
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூரையன் அருளேத. (தி.7 ப.45 பா.4)
துணையும் அளவுமில்லாதவன் றன்னருளே துணையா கணையுங் கதிர்நெடு வேலுங்கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகட் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையுமவன் திருவாரூரனாகின்ற அற்புதனே.
- திருத்தொண்டர் திருவந்தாதி, 40
கண்களை இழந்து வருந்துதல்:
சுந்தரர் சங்கிலியாருக்குச் செய்த சபதம் பிழைத்த காரணத் தால் கண்களை இழந்து வருந்தினார். அதைக் குறிக்கும்
பகுதிகள்.
``வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நானறியேன் மறுமாற்றம்
ஒழுக்க என்கணுக்கொரு மருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறைவானே`` (தி.7 ப.54 பா.1)
``மூன்று கண்ணுடையாய் அடியேன்கண்
கொள்வதே கணக்கு வழக்காகில்`` (தி.7 ப.54 பா.4)
``கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்துநீ அருளாயின செய்யாய்`` (தி.7 ப.54 பா.5)
``அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையேல் போகுருடா எனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்`` (தி.7 ப.54 பா.9)
``தண்பொழி லொற்றி மாநகருடையாய்
சங்கிலிக்கா வென்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே`` (தி.7 ப.69 பா.3)
``கண்மணியை மறைப்பித்தாய்`` (தி.7 ப.89 பா.6)
ஊன்றுகோல் பெற்றது:
சுந்தரர் திருவெண்பாக்கத்து இறைவரை வழிபட்டு ஊன்றுகோல் பெற்றதைக் குறிப்பிடும் பகுதிகள்:
``ஊன்று கோலெனக் காவ தொன்றருளாய்``(தி.7 ப.54 பா.4)
மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றஅருள் செய்தளித்தா யென்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீ ரென்றானே. (தி.7
ப.89 பா.10)
இடக்கண் பெற்றது:
காஞ்சிபுரத்திறைவரை வழிபட்டுச் சுந்தரர் இடக்கண் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்:
``ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்ணடியேன் பெற்றவாறே`` (தி.7 ப.61 பா.1)
``கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண்ணடியேன் பெற்றதென்று`` (தி.7 ப.61 பா.11)
உடற் பிணி நீங்கப் பெற்றது:
திருத்துருத்தி இறைவரைப் பணிந்து திருக்குளத்தில் நீராடி உடற்பிணி நீங்கப் பெற்றதை அறிவிக்கும்
பகுதிகள்:
``கண்ணிலேன் உடம்படு நோயால்
கருத்தழிந்து உனக்கே பொறையானேன்`` (தி.7 ப.10 பா.2)
``என்னுடம்படும் பிணியிடர் கெடுத்தானை`` (தி.7 ப.74 பா.1)
``உற்றநோய் இற்றையே அறவொழித்தானை``(தி.7 ப.74 பா.5)
``தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர் வறுத்தானை`` (தி.7 ப.74 பா.3)
வலக்கண் பெற்றது:
சுந்தரர் திருவாரூரை யடைந்து இறைவனைப் பணிந்து வலக் கண் பெற்றார். இக்குறிப்பைத் தெரிவிக்கும் பகுதிகள்:
விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன் குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தை யாக்கினீர்
எற்றுக்கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக்கண் தான்தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. (தி.7
ப.95 பா.2)
``பாரூர் அறியஎன்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்`` (தி.7 ப.95 பா.2)
``காணாத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே`` (தி.7 ப.92 பா.8)
ஏயர்கோன் பிணி நீக்கியது:
ஏயர்கோன் கலிக்காமரை அடைந்து சுந்தரர் இறையருளால் நட்புக்கொண்டனர். அதனைக் குறிக்கும்
பகுதி:
``ஏதநன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து`` (தி.7 ப.55 பா.3)
மூவேந்தருடன் வழிபட்டது:
சுந்தரர், சேரமான் பெருமாளோடு மதுரை சென்று பாண்டியன், சோழன் ஆகிய மன்னர்களோடு பல தலங்களையும்
வழிபட்டனர். இதனைக் குறிக்கும் பாடல்.
அடிகேளுமக் காட்செய அஞ்சுது மென்று
அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும் படியா இவை கற்றுவல்ல அடியார்
பரங்குன்றம் மேய பரமனடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
குலவேந்த ராய் விண்முழு தாள்பவரே. (தி.7 ப.2 பா.11)
ஐயாற்றிறைவரை வழிபட்டது:
காவிரியில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை விலக்கி ஐயாற் றிறைவனைச் சென்று வழிபட்டார் சுந்தரர். இதனைக்
குறிக்கும் பகுதி.
``விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம்
பரந்து நுரைசிதறி
அதிர்க்கும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ`` (தி.7 ப.77 பா.9)
வழிப்பறி செய்த பொருள்களை மீட்டது:
சுந்தரர் திருமுருகன்பூண்டி வழியாக வரும்போது வேடர் களால் பறிக்கப்பெற்ற பொருள்களை இறைவனை
வேண்டிப் பெற்றார். இதனைக் குறிக்கும் பகுதிகள்.
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. (தி.7 ப.49
பா.1)
``எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும்
கூறைகொண்டு
ஆறலைப்பாரிலை`` (தி.7 ப.92 பா.3)
முதலையுண்ட பாலனை மீட்டது:
அவினாசியில் முதலையுண்ட பாலனைச் சுந்தரர் இறைவன் அருட்டுணைகொண்டு மீட்டருளினார். இதனைக்
குறிக்கும் பகுதிகள்.
உரைப்பார் உரையுகந் துள்கவல்லார் தங்க ளுச்சியாய்
அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவினாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே. (தி.7 ப.92 பா.4)
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவதழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளியூ ரிற்குளத்திடை இழியாக் குளித்த மாணி யென்னைக்கிறி செய்ததே. (தி.7 ப.92
பா.2)
``புள்ளேறு சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்னைக்கிறி செய்ததே`` (தி.7 ப.92 பா.9)
கயிலைக்கு எழுந்தருளியது:
திருவஞ்சைக் களத்திறைவனிடம் சுந்தரர், உலக வாழ்வில் வெறுப்புற்றதை எடுத்துக்கூறி ஆட்கொண்டருள
வேண்டினார். சிவ பெருமான் தேவர்களை அனுப்பிச் சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்துவரச் செய்தான். சுந்தரர்
வெள்ளையானைமீது திருக் கயிலைக்குச் சென்றருளினார். இதனைக் குறிக்கும் பகுதிகள்:
``வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்`` (தி.7 ப.4 பா.8)
``வானை மதித்தமரர் வலஞ்செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்
மலைஉத்தமனே`` (தி.7 ப.100 பா.2) ``விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளையானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே`` (தி.7 ப.100 பா.5)
``வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே`` (தி.7 ப.100 பா.1)
``துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனைதந்தான்
நொடித்தான்மலை உத்தமனே`` (தி.7 ப.100 பா.6)
``நிலைகெட விண்ணதிர நிலமெங்கு மதிர்ந்தசைய
மலையிடை யானையேறி வழியே வருவே னெதிரே அலைகட லாலரையன் அலர்கொண்டு முன்வந்திறைஞ்ச`` (தி.7
ப.100 பா.7)
``வரமலிவாணன் வந்து வழிதந்தெனக் கேறுவதோர்
சிரமலியானை தந்தான்`` (தி.7 ப.100 பா.8)
இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே. (தி.7 ப.100 பா.9)
வருணன் திருப்பதிகத்தை வெளிப்படுத்தியது:
சுந்தரர் பாடிய நொடித்தான்மலைத் திருப்பதிகத்தை வருணனிடம் கொடுத்தருள அவன் அத்திருப்பதிகத்தைத் திரு
வஞ்சைக்களத்தில் கொண்டுவந்து சேர்ப்பித்தனன். இதற்குரிய அகச்சான்று,
ஊழிதோறூழி முற்றும் உயர்பொன் நொடித்தான்மலையைச்
சூழிசையின் கரும்பின்சுவை நாவலவூரன் சொன்ன
ஏழிசையின் றமிழால் இசைந்தேத்திய பத்தினையும்
ஆழிகடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே. (தி.7 ப.100 பா.10) சேரர்கோன் திருக்கயிலை சென்றது:
சேரமான் பெருமாள் சுந்தரருடன் கயிலை சென்றனர் என்ற வரலாறு, நம்பியாண்டார் நம்பிகள் வாய்மொழிகளால்
விளங்குகிறது. திருவிசைப்பாப் பாடற் பகுதியும் இதனை வலியுறுத்தும்.
``சேரற்குத் தென்னா வலர்பெருமாற்குச் சிவனளித்த
வீரக் கடகரிமுன்புதம் பந்தி யிவுளி வைத்த
வீரற்கு..``
- தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86
ஞான ஆரூரரைச் சேரனையல்லது நாமறியோம்
மானவ ஆக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்
வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86
``களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள``
- தி.9 திருவிசைப்பா, 189
இவ்வாறுள்ள பகுதிகள் சுந்தரர் வரலாற்றை விளக்கும் அகச்சான்றுகளாகும்.