திருநாவுக்கரசர்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறு

நான்காம் ஐந்தாம் ஆறாம் திருமுறைகள்

திருநாவுக்கரசர் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

``திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்.``

-தி.7 திருத்தொண்டத் தொகை.

திருவவதாரம் :

திருமுனைப்பாடி நாட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் என்னும் ஊரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் திருமகளாய்த் திலகவதியாரும், சில ஆண்டுகள் கழித்து மருணீக்கியாரும் உலகில் அலகில் கலைத்துறை தழைப்பவும் அருந்தவத்தோர் நெறிவாழவும் திருவவதாரம் செய்த னர். பெற்றோர் உரிய நாளில் மருணீக்கியாரைப் பள்ளியில் அமர்த்திக் கலைபயிலச் செய்தனர். எல்லாக் கலைகளையும் திறம்பெறக் கற்றுத் தேர்ந்தார் மருணீக்கியார். திலகவதியார்க்கு வயது பன்னிரண்டு தொடங்கி நடைபெற்றது.

பெற்றோர் தம்மகளார்க்குத் திருமணம் செய்விக்க எண்ணி னர். அவ்வேளையில் குலம், குணம், ஆண்மை, அரன்பால் அன்பு, உரு, திரு ஆகியன ஒருங்கு வாய்க்கப்பெற்றவராய் விளங்கிய கலிப் பகையார் திலகவதியாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிப் பெரியோர் சிலரைப் புகழனார்பால் அனுப்பினார். கலிப்பகையாரின் பண்புகளை அறிந்து பெற்றோரும் இசைவளித்தனர். பெரியோர்கள் இம்மகிழ்வுச் செய்தியைக் கலிப்பகையார்க்கு அறிவித்தனர். திருமணம் நிகழ்வதற்குள் வடநாட்டு மன்னர் சிலரின் படை எழுச்சி காரணமாகத் தமிழ்நில மன்னன் ஒருவன் பேராற்றல் மிக்க கலிப்பகையாரைச் சேனைத் தலைவராக்கிப் படைகளுடன் வடபுலம் செல்ல விடுத்தனன். நீண்டநாள் போர் நடந்தது. இவ்வாறு கலிப் பகையார் போரில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் புகழனார் விண்ணுலகு அடைந்தார். கற்புநெறி வழுவாத அவர் தம் மனைவியாரும் சுற்ற மொடு மக்களையும் துகளாகவே நீத்துக் கணவனாருடன் சென்றார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருணீக்கியாரும் ஆற்றொணாத் துயரில் அழுந்தினர்.

இந்நிலையில், போர்மேற் சென்ற கலிப்பகையாரும் போர்க் களத்தில் பூத உடல் நீத்துப் புகழுடம்பெய்தினார். இச்செய்தியைக் கேட்டுத் திலகவதியார் திடுக்கிட்டார். `என் தந்தையும் தாயும் என்னை அவர்க்குக் கொடுக்க இசைந்தார்கள். அந்த வகையால் அவர்க்கே நான் உரியவள்; ஆகையால் இந்த உயிரை அவர் உயிரோடு இசைவிப் பேன்` என்று கூறி உயிர்விடத் துணிந்தார். மருணீக்கியார் தமக்கையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் புலம்பினார். `தந்தையாரை இழந்த பின் தங்களை வணங்கப் பெறுதலால் யான் இதுகாறும் உயிர் தரித்திருக் கிறேன். இந் நிலையில் என்னைக் கைவிட்டுத் தாங்கள் பிரிவீராயின் தங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன்` என்று உறுதி மொழிந்தார்.

தமக்கையார் தவநிலை :

தம்பியின் மனக்கலக்கம் திலகவதியாரின் மனத்தை மாற்றி யது. `தம்பியார் இவ்வுலகில் உளராக வேண்டும்` என்று எண்ணித் தம் முடிவை மாற்றிக்கொண்டார். அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி மனையின்கண் இருந்து மாதவம் பெருக்கி மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டார். மருணீக்கியாரும் துயர் நீங்கி மகிழ்வுற்றார். வயது ஏற ஏற உலகியல் அறிவும் நன்கு வாய்க்கப்பெற்றார். உலகின் நிலை யாமையை எண்ணி அறப்பணி மேற்கொண்டு அறச்சாலை, தண்ணீர்ப் பந்தர், சோலை, குளம் முதலிய அமைத்தார். வருந்தி வந்தோர்க்கு வேண்டியன ஈந்தார்; விருந்துபுரந்தந்தார். புலவரைப் போற்றினார். சமயங்களின் நன்னெறியினைத் தெரிந்துணர்தற்கு எண்ணினார். சிவபெருமானருள் செய்யாமையால் கொல்லாமை என்னும் நல்லறப் போர்வையில் உலவிய சமண சமயத்தைச் சார்ந்திட எண்ணினார்.

தருமசேனராதல் :

அக்காலத்தில் சமணம் மேலோங்கியிருந்தது. சமண முனிவர்கள் பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளில் தங்கித் தம் மதம் பரப்பிவந்தனர். பள்ளிகளும் பாழிகளும் அமைத்துக் கொண்டு பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமண சமயத்தினைப் பரவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மருணீக்கியார் பாடலி புத்திரம் வந்தார். சமணரின் பள்ளியைச் சார்ந்தார். சமண முனிவரும் தங்கள் தர்க்கவாதத் திறமையால் தங்கள் சமயமே மெய்ச்சமயம் என்று கூறி அவர் அறிவைமருட்டித் தங்கள் மதத்தில் ஈடுபடுத்தினர். மருள் நீக்கியாரும் அம்மத நூல்களில் வல்லவரானார். அதுகண்ட சமணரும் `தருமசேனர்` என்னும் சிறப்புப் பெயர் அளித்து அவரைப் பாராட்டி னர். தருமசேனராகிய மருணீக்கியாரும் புத்தருள் தேரரை வாதில் வென்று சமண் சமயத் தலைவராய் விளங்கிவந்தார்.

சூலை மடுத்து ஆட்கொள்ளல் :

மனையில் இருந்து தவம்பெருக்கிவந்த திலகவதியார், தம்பி புறச்சமயம் சார்ந்த செய்தி கேட்டு மனம் புழுங்கினார். சுற்றத் தொடர்புவிட்டுத் தூயசிவ நன்னெறி சார்ந்து பெருமான் திருவருள் பெற விரும்பித் திருவதிகைவீரட்டானம் அடைந்து சிவசின்னம் அணிந்து திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், மாலை புனைதல் முதலான திருப்பணிகளை மேற்கொண்டு இறைவன் திருவருளைப் போற்றிவந்தார். தீவினைத் தொடர்பால் தம்பி, புறச்சமயம் சார்ந்ததை எண்ணி வருந்தி அதிகைப் பெருமான் திருமுன் நின்று `என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின்வந்தவனைப் புறச்சமயப் படுகுழியினின்றும் எடுத்தாளவேண்டும்` என்று விண்ணப்பம் செய்து வந்தார். பெருமான் திலகவதியார் கனவில் தோன்றி `உன்னுடைய மனக்கவலையை ஒழி. உன்தம்பி முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றவன். அவனை சூலைநோய் தந்து ஆட்கொள் வோம்` என்று அருள்செய்து மறைந்தனன். அவ்வண்ணமே சூலை நோய் தருமசேனர் வயிற்றிடைச் சென்று பற்றியது.

மருணீக்கியாரைப்பற்றிய சூலை வடவைத்தீயும், வச்சிரப் படையும். நஞ்சும் கூடி வருத்தினாற்போலத் துன்பந்தந்தது. தரும சேனர் நடுங்கித் தனியறை ஒன்றில் மயங்கி விழுந்தார். சமண் சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களால் அந்நோயைத் தடுக்கமுயன்றும் அந்நோய் தணியாது மேலும் மேலும் முடுகிவருத்தியது. தரும சேனரின் துயர்கண்ட சமணர் நெஞ்சழிந்தனர். குண்டிகை நீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தனர். பீலி கொண்டு தடவினர். இயன்றன அனைத்தும் செய்து ஓய்ந்தனர். இவற்றிற்கெல்லாம் நோய் மேலும் அதிகரித்ததே ஒழியக்குறையவில்லை. `ஐயோ இனி என்செய்வது` என்று கலங்கி அமணர் அனைவரும் கைவிட்டகன்றனர்.

சூலை நோயினால் சோர்வுற்ற தருமசேனர்க்குத் தம் தமக்கை யாரின் நினைவு வந்தது. தமக்கு அடிசில் அமைப்பவனை அருகில் அழைத்துத் தமக்கையாரிடம் நிலைமையைச் சொல்லி வரும்படி அனுப்பினார். அவனும் அவ்வாறே திருவதிகை வந்து நந்தவனத்திற்கு மலர்கொய்யச் செல்லும் திலகவதியாரைக் கண்டு வணங்கி `நும் முடைய தம்பியாரின் ஏவலினால் இங்கு வந்தேன்` என்றனன். அதுகேட்ட அம்மையார் `தீங்குளவோ` என வினவினார், அவனும் `சூலைநோய் உயிரைமட்டும் போக்காமல் நின்று குடரை முடக்கித் துன்புறுத்தலால் அமணரெலாம் கைவிட்டகன்றனர். இச்செய்தியைத் தங்கட்குச் சொல்லிவிட்டு இருளாகும் நேரத்திலேயே திரும்பி வருமாறு என்னை அனுப்பினார்` என்று கூறி நின்றனன். அது கேட்ட திலகவதியார், `நன்றறியா அமண்பாழி நண்ணேன்` இதை அவனிடம் சொல், என மறுமொழிகூறி அனுப்பினார். அவனும் தருமசேனரிடம் சென்று தமக்கையார் கூறியதை அறிவித்தான்.

தமக்கையார் மறுமொழி கேட்டுத் தருமசேனர் சோர்வுற்றார். இறையருள் கைகூட ``இப்புன்சமயத் தொழியாத என் துன்பம் அழியத் திலகவதியார் திருவடிகளை அடைவேன்`` என்று எண்ணினார். அவ்வளவிலேயே சிறிது நோய் குறைவதாக உணர்ந்தார். குண்டிகை, பீலி, பாய் முதலியவற்றை உதறி எறிந்து வெள்ளிய ஆடை உடுத்து உண்மைப் பணியாளன் ஒருவனைத் துணைக்கொண்டு நள்ளிரவில் சமண் பாழிகளைக் கடந்து திருவதிகையை அடைந்து திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து `நம்குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர்! உய்ந்து கரையேறும் உபாயம் அருள்க` என வேண்டினார்.

திருநாவுக்கரசராதல் :

திலகவதியார் தம்பியை நோக்கி இறைவன் திருவடிகளை எண்ணித் தொழுது `குறிக்கோளில்லாத புறச் சமயப் படுகுழியில் விழுந்து துயருழந்தீர் எழுந்திரீர்` என மொழிய, அவ்வாறே எழுந்து தொழுத மருணீக்கியாரைப் பார்த்துத் திலகவதியார், `சூலைநோய் வருதற்குக்காரணம் இறையருளேயாகும்; தன்னைச் சரணடைந்தாரைக் காக்கும் சிவபெருமானை வணங்கிப் பணிசெய்வீராக` என்று பணித்துத் திருவதிகைத் திருக்கோயிலினுட் புகுதற்குத்தகுதி உடைய ராகும்படித் திருவைந்தெழுந்தோதித் திருவெண்ணீறளித்தனர். திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததென மகிழ்ந்து மருணீக்கியாரும் வாங்கித் தரித்துக்கொண்டு தமக்கு உய்யும் நெறிதரும் தமக்கையார்க்குப் பின் தாமும் புறப்பட்டார்.

மருள் நீக்கியாரின் அகத்திருள் நீங்குமாறு புறத்திருள் நீங்கிப் பொழுது புலர்ந்தது. திலகவதியார்தொண்டு புரியத் திருவலகு தோண்டி முதலியகொண்டு திருக்கோயிலுட் புகுந்தார். தமக்கையார் பின் சென்ற மருள் நீக்கியார் திருக்கோயிலினுட் சென்று வலஞ்செய்து நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இறைவன் திருவருளால் தமிழ்மாலை சாத்தும் உணர்வுவர, சூலையும் மாயையும் நீங்கும் பொருட்டுக் ``கூற்றாயினவாறு`` என்று தொடங்குந் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

திருப்பதிகம் பாடும்பொழுதே சூலைநோய் நீங்கியது. சிவ பெருமான் திருவருட்கடலில் மூழ்கித் திளைத்தார். கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகத் தம்மைப் புறச்சமய இருளிலிருந்து மீட்டருளிய சூலைநோய்க்கு நன்றி தெரிவித்துத் திருவருள் இன்பத்தில் திளைத்து நின்றார். இவ்வேளையில் யாவரும் வியப்ப வானிடை இறைவன் திருவாக்கு எழுந்தது `செந்தமிழ்ச் சொல்மலராலாகிய பாமாலை பாடிய தன்மையால் நின்பெயர் `நாவுக்கரசு` என உலகேழினும் வழங்குக` என்றெழுந்த அருள்மொழி கேட்டு `இப்பெருவாழ்வு அடைதற்குரியதோ` என வியந்து இராவணனுக்கும் அருள்செய்த இறைவனது வள்ளன்மையைப் பாடுவதையே கடமையாகக் கொண்டு அதிகைப்பெருமானை வணங்கிப் போற்றினார்.

இவ்வாறு மருணீக்கியார் இறைவன் திருவருள்பெற்றுத் திருநாவுக்கரசராகப் புறச்சமய இருள்நீக்கப் புறப்பட்டதை எண்ணி உலகம் மகிழ்ந்தது. திருநாவுக்கரசர் சிவ சின்னங்கள் அணிந்து உழவாரப்படை ஏந்தி, முக்கரணங்களாலும் பக்தி செய்ய முற்பட்டார்.

``நாமார்க்கும் குடியல்லோம்`` :

திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் `சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார்` என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். `தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரை யும் இழித்துரைக்கின்றார்` என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர்.

இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். `நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும்` என்றனர் சமணர். மன்னவன் அமைச் சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் `சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம்` என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய `நாமார்க்கும் குடியல்லோம்` என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார்.

நீற்றறை குளிர்ந்தது :

அமைச்சர் அரசதண்டத்திலிருந்து நாங்கள் உய்யுமாறு தாங்கள் எழுந்தருளவேண்டுமென வேண்டினர்.

திருநாவுக்கரசரும் `ஈண்டு வரும் துயர்கட்கு இறைவனுளன்` என்னும் உறுதியோடு அரசன் முன் அடைந்தார். அரசன் சமணர்களைக் கலந்தாலோசித்து நீற்றறையிலிடுமாறு அவர்கள் கூறியபடியே தண்டனை விதித்தான். அவ்வாறே. ஏவலர் சிலர் அடிகளை நீற்றறையிலிட்டுத் தாளிட்டனர். நாவுக்கரசர், பெருமான் திருவடி நிழலைத் தலைமேற்கொண்டு சிவபெருமானைத் தியானித்து இனிதே இருந்தார். வெய்ய அந்நீற்றறை நிலவொளி, தென்றல், யாழிசை தடாகம் இத்தனையும் கூடிய இள வேனிற் பருவத்து மாலைக்காலமாய் இன்பம் செய்தது. ஏழு நாட்கள் சென்றன. சமணர்கள் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணரின் திருவருள் அமுதுண்டு எவ்வகை ஊனமும் இன்றி வீற்றிருந்த திருநாவுக்கரசரைக் கண்டு அதிசயித்தனர், வியந்தனர்.

நஞ்சும் அமுதாயிற்று :

பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று `நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை` என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். `எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம்` என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று.

மதயானை பணிந்தது :

நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று `நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம்,` என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் `சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.

கல் மிதந்தது :

யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் `இனி என்செய்வது` என்று வினவினான். `அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி` என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர்.

உண்மைத் தொண்டின் உறைப்புடைய திருநாவுக்கரசர் எந்தை பிரானையே ஏத்தி இறைஞ்சுவன் என்று கூறிச் `சொற்றுணை வேதியன்` என்று தொடங்கித் திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.

திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ``ஈன்றாளுமாய்`` என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார். அத்தலத்திலேயே சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத் தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார்.

சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். ``தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய்`` திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து ``வெறிவிரவு கூவிளம்`` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சிலநாள் திரு அதிகையிலேயே தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்.

குணபரஈச்சரம் :

சமணர் தூண்டுதலால் தீவினை செய்த பல்லவவேந்தன் தன் பழவினைப் பாசம் நீங்கத் திருவதிகை வந்து திருநாவுக்கரசரை மன்னிப்புவேண்டிப் பணிந்தான். சைவனாக மாறினான். பாடலி புத்திரத்திலிருந்த பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து திருவதிகையில் `குணபரஈச்சரம்` என்ற பெயரில் திருக் கோயில் எடுப்பித்தான். திருநாவுக்கரசர் சிவதல யாத்திரை செய்து திருப்பதிகம் பாடித் திருத்தொண்டு செய்ய விரும்பினார். திருவெண்ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலான தலங்களுக்குச் சென்று திருப்பதிகம் பாடித் திருப்பெண்ணாகடம் அடைந்தார்.

இடபக்குறி சூலக்குறி பெற்றது :

திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். ``பொன்னார் திருவடிக்கு`` என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார். சிலநாள் தங்கி உழவாரப்பணி செய்து சுடர்க் கொழுந்தீசனைப் பாடிப் பரவினார்.

பிறகு, திருநாவுக்கரசர் திருவரத்துறை, திருமுதுகுன்றம் முதலான தலங்களைத் தரிசித்து நிவாநதியின் கரைவழியாகக் கடந்து தில்லையம்பதியை அடைந்தார். தில்லையில் பறவைகளும் சிவநாம முழக்கம் செய்வது கேட்டு இன்புற்று சிவனடியார் பலரும் வரவேற்க சிவமே நிலவும் திருவீதியை அடைந்து திருக்கோயிலுக்குள் புகுந்தார்.

தில்லையம்பலத்தில் திருநடம் புரியும் பெருமானைப் பணிந்து தெவிட்டாத இன்பம் பெற்றார். கைகளைத் தலைமேல் குவித்து, கண்கள் ஆனந்தக்கண்ணீர் சொரிய, கரணங்கள் உருக வீழ்ந்து எழுந்து என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பைப் போற்றி `கருநட்ட கண்டனை`, `பத்தனாய்ப் பாடமாட்டேன்` `அன்னம்பாலிக் கும்` முதலான திருப்பதிகங்களால் பரவிப் பணிந்தார். தில்லையில் சிலநாள் தங்கித் திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலான தலங்களைத் தரிசித்து உழவாரப்பணி செய்து இன்புற்றார்.

சம்பந்தர் சந்திப்பு 1 :

தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, `இவர் எம்பெருமான்` என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி `அப்பரே` என்று அழைக்க, நாவுக்கரசரும் `அடியேன்` என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். அருட்கடல் அன்புக்கடல், சைவநெறி பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு, சிவபிரானது அருளும் அன்னை அருளும், இவைகளின் இணைப்பை இவ்விருவர் கூட்டுறவு அன்பர் கட்கு நினைவுறுத்தியது. திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து `நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக` என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் ``பார்கொண்டுமூடி`` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். பல நாட்கள் திருநாவுக் கரசர் திருஞானசம்பந்தரோடு உடனுறைந்து பிரியாவிடை பெற்றார். சம்பந்தரும் திருக்கோலக்கா வரை உடன்சென்று வழியனுப்பினார்.

அப்பர், ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு கருப் பறியலூர், புன்கூர், நீடூர், குறுக்கை முதலிய தலங்களையும் செம்பொன் பள்ளி, மயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவாவடுதுறை, திருவிடை மருதூர் முதலிய தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளினார்.

திருவடிதீகை்ஷ :

திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து `கோவாய்முடுகி` என்று தொடங்கி `கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக` என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர். சிவக்கொழுந்தீசர் `நல்லூருக்கு வருக` என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். `நினைப்பதனை முடிக் கின்றோம்` என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். ``நினைந்துருகும் அடியாரை`` என்று தொடங்கி இறை அருளை வியந்து ``நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான்`` என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.

அப்பூதி அடிகள் :

நல்லூரிலிருந்து நாவுக்கரசர் விடைகொண்டு திருப்பழனம் முதலான தலங்களைத் தரிசித்துத் திங்களூரை வந்தடைந்தார். திங்களூரில் அந்தணரில் மேம்பட்ட அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று சாலை, குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் முதலான தருமங்ளைத் திருநாவுக்கரசர் பெயரால் அமைத்தும், புதல்வர்களுக்கு அவர் பெயரையே வைத்தும் பக்தி செய் தார். இவற்றை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகள் திருமனையை அடைந்தார். அடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அப்பூதிஅடிகள் வணங்கி வரவேற்றார்.

திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகளைப் பார்த்து `நீர்செய்து வரும் அறப்பணிகளைக்கண்டும் கேட்டும் இங்கு வந்தோம். நீர்செய்த அறப்பணிகளில் நும்பேர் எழுதாது வேறொரு பேர் எழுதிய காரணம் யாது?` என்று கேட்டார். அவ்வளவில் அப்பூதி அடிகள் `திருநாவுக்கரசர் பெயரையா வேறொரு பெயர் என்றீர்! அவர் தம்பெருமையை அறியாதார் யார்? மங்கலமாம் சிவவேடத்துடன் இவ்வாறு மொழிந்தீரே நீர் யார்?` என்று வெகுண்டு கேட்டனர். திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளாரின் அன்பின் திறம் அறிந்து `இறைவன் சூலைதந்து ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான்` எனப் பணிமொழி புகன்று தம்மை அறிமுகம் செய்துகொண்டார். அவ்வுரை கேட்ட அப்பூதி அடிகள் தம் குல தெய்வமே எழுந்தருளினாரென பெருமகிழ்ச்சிகொண்டு மனைவி மக்கள் உற்றார் மற்றோர் எல்லோரையும் அழைத்துவந்து வணங்கச் செய்து தாமும் வணங்கித் தம் இல்லத்தில் திருவமுது செய்தருளும்படி வேண்டினார். அப்பர் பெருமானும் அதற்கு இசைந்தருளினார்.

விடந்தீர்த்தது :

அறுசுவை அடிசில் தயாராயிற்று. தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். மூத்ததிருநாவுக்கரசும் தமக்கு இப்பணி கிடைத்ததே என்னும் பெருமகிழ்வோடு விரைந்துசென்று வாழைக்குருத்து அரியமுற்பட்டார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டியது. ஆனால் மூத்த திருநாவுக்கரசோ அதைப் பொருட்படுத்தாது திருவமுது படைத்தற்கு இடையூறு நேருமோ என்றஞ்சி ஓடிவந்து இலையைத் தாயார் கையில் கொடுத்துக் கீழே விழுந்தார். தந்தைதாயர் இருவரும் `இதனைத் திருநாவுக்கரசர் அறியின் அமுதுண்ண இசையார்` என்று எண்ணித் தன் மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகட்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார்.

திருநாவுக்கரசர் திருவுளத் தில் இறைவனருளால் ஒரு தடுமாற்றம் உண்டாக, மூத்த திருநாவுக் கரசை அழையும் என்றார். அப்பூதியாரோ `இப்போது அவன் இங்கு உதவான்` என்று கூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் `ஒன்றுகொலாம்` என்ற திருப் பதிகம் பாடியருளினர். உறங்கி எழுவாரைப்போல மூத்த திருநாவுக் கரசும் எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.

திருப்பழனத்திலிருந்து திருநல்லூர், வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திரு வாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து ``பாடிளம் பூதத்தினானும்`` என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார்.

சம்பந்தர் சந்திப்பு 2 :

திருவாரூரிலிருந்து வழியில் பல சிவதலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், ``முத்து விதானம்`` என்று தொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட சம்பந்தர் `நானும் திருவாரூர் சென்று மீண்டும் உம்மோடு உடனுறைவேன்` என்று கூறித் திருவாரூர் சென்றார். திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசர் பெருமானை வணங்கிப் பாமாலைகள் பாடியும், உழவாரப்பணிசெய்தும் அங்கிருந்துகொண்டே அருகில் உள்ள சிவதலங்களையெல்லாம் சென்று தரிசித்திருந்தார். திருவாரூர் சென்ற திருஞானசம்பந்தரும் திருப்புகலூர் மீண்டார். இருவரும் முருகநாயனார் திருமடத்தில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.

படிக்காசு பெற்றது :

சிலநாட்கள் தங்கியிருந்து திருப்புகலூரில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சிறுத்தொண்டர், நீலநக்கர், முருக நாயனார் ஆகி யோரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுத் திருக்கடவூர் வந்தனர். குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் உபசரிக்கப் பெற்றுத் தங்கி அமுதகடேசரை வணங்கி இன்புற்று ஆக்கூர் முதலிய தலங்களைப் பணிந்து திருவீழிமிழலைக்கு வந்தனர். விண்ணிழி விமானத்தில் இருக்கும் இறைவனைப் பணிந்து பரவினர். பிறகு இருவேறு திருமடங் களில் திருவீழிமிழலையில் தங்கினார்கள். அந்நாளில் மழையின்மை யாலும் ஆற்றுநீர்ப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாயிற்று. இறைவன் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் கனவில் தோன்றி, `கால வேறுபாட்டால் துன்புற வேண்டாம். அடியவர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் படிக்காசு தருகின்றோம்` என்று கூறி திருக்கோயிலில் மேற்கு கிழக்குப் பீடங்களில் நாள்தோறும் படிக்காசு அளித்தான். அக் காசுகளைப் பெற்று `சிவனடியார்கள் இருபொழுதும் எய்தி உண்க` எனப் பறைசாற்றி அடியார்க்கு அமுதளித்தார்கள். திருநாவுக்கரசர் கைத்தொண்டு புரிவதால் அவர்க்கு வாசியில்லாக் காசும் திருஞான சம்பந்தர்க்கு வாசியுள்ள காசும் கிடைத்தன. சம்பந்தர் இறைவனைப் பாடி வாசி நீங்கப் பெற்றார். சிலகாலம் கழித்து எங்கும் மழை பெய்து வளம் பெருகியது.

மறைக்கதவம் திறப்பித்தது:

திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்ட இருவரும் திருவாஞ்சியம் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருமறைக்காட்டை அடைந்து வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார்கள். பண்டை நாளில் வேதங்கள் இறைவனை வழிபட்டு அடைத்திருந்த திருவாயிற் கதவுகள் அந்நாள்முதல் திறக்கப்படாமலே இருந்தது. அவ்வூர் மக்கள் வேறொரு வழியே சென்று வழிபட்டு வந்தனர். இச்செய்தியை அறிந்த திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி `நாம் நேர் முகவாயில் வழியே சென்று மறைக்காட்டுறையும் பெருமானை வழிபட வேண்டும். ஆதலால் இக்கதவு திறக்கும்படிப் பதிகம் பாடியருளும்` என்று கூறினர். ஆளுடைய பிள்ளையாரின் அருள் மொழிப்படியே அப்பரும், `பண்ணினேர் மொழியாள்` ` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினர். செந்தமிழ்ச் சுவையைத் துய்க்க விரும்பிக் கதவம் திறக்கக் காலந் தாழ்த்தான் இறைவன். நாவுக்கரசர் வருந்தி இறுதித் திருப்பாடலா, ‘இராவணனை அடர்த்த பெருமானே இரக்கம் சிறிதும் இல்லையோ’ என்று பாடினார். அந்நிலையில் கதவுகள் திறந்தன. இருவரும் இறையருளை நினைந்து இன்புற்று நேர்முக வாயில் வழியே சென்று வழிபாடாற்றினர். திருக்கோயிலிலிருந்து வெளியில் வரும் போது அப்பர் பிள்ளையாரை நோக்கித் திருக்கதவம் அடைக்கப் பாடும்படி வேண்டினர். சம்பந்தரும் அவ்வாறே ‘சதுரம்மறை’ என்று தொடங்கிப் பாடிய முதல் திருப்பாடலிலேயே கதவு அடைக்கப் பெற்றது, அன்று முதலாக அக்கதவு அடைக்கவும் திறக்கவும் பெறுவதாயிற்று.

திருவாய்மூரில் திருக்காட்சி:

திருவருள் நலம்பெற்ற இரு பெருங்குரவர்களும் அடியார் புடைசூழத் திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கினர். அன்றிரவு திருநாவுக்கரசர் தாம் அரிதில் திறக்கப்பாடியதையும், ஆளுடைய பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடியதையும் எண்ணித் தம் பாடலுக்குக் கதவு திறக்கக் காலந்தாழ்ந்தமைக்குக் காரணம், இறைவன் திருக்குறிப்பை நாம் உணராது அயர்த்தமையே என்று கவைலகொண்டு திருமடத்தில் ஓர் பால் அறிதுயில் கொண்டார். அவர் கனவில் இறைவன் தோன்றி ‘நாம் திருவாய்மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்து வா’ என்று கூறி மறைய, உடனே துயிலெழுந்து நாவுக்கரசரும் இறைவனைப் பின் தொடர்ந்து ‘எங்கே யென்னை’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே வாய்மூருக்குச் சென்றார். முன்னே சென்று கொண்டிருந்த பெருமான் பொற்கோயில் ஒன்றைக் காட்டி மறைந்தனன். ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வாய்மூருக்குச் சென்றதை யறிந்து அவரைத் தொடர்ந்து வாய்மூரை அடைந்தார். ”திறக்கப்பாடிய என்னினும் அடைக்கப்பாடிய ஞானசம்பந்தரும் வந்துவிட்டார். இனியும் தம்மைக் காட்டாது மறைப்பரோ\" ன்று பாடினார். இறைவன் ஞானசம்பந்தர் காணக் காட்சி வழங்கினன். ஞானசம்பந்தர் காட்ட நாவுக்கரசரும் இறைவன் திருக்காட்சி கண்டு இன்புற்று “பாட அடியார்\" என்று தொடங்கிப் பாடிப் பணிந்தார். திருவாய்மூரில் இருவரும் சிலநாள் தங்கித் திருமறைக் காட்டிற்கு எழுந்தருளினர். அப்போது பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த தூதர் சிலர் ஞானசம்பந்தரைக் கண்டு பாண்டி நாடும் பாண்டியனும் சமணம் சார்ந்து வருந்துவதைக் கூறினர். திருவெண்ணீற்றின் துணையை நினைந்து ஞானசம்பந்தரும் பாண்டி நாட்டுக்குப் புறப்படத் துணிவு கொண்டார். திருநாவுக்கரசர் பிள்ளையாரை நோக்கி, “தீயோராகிய அமணர் வஞ்சனையில் மிக வல்லர். தேவரீர் அங்குச் செல்லல் ஆகாது. மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை” என்றனர். ஞானசம்பந்தர், ‘வேயுறுதோளிபங்கன்’ என்று தொடங்கிக் கோளறு திருப்பதிகம் பாடிக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார்.

அமணர் வஞ்சம் அகற்றியது:

திருநாவுக்கரசர் பின்பு திருமறைக்காட்டிலிருந்து புறப்பட்டு, திருநாகைக்காரோணம், திருவீழிமிழைல, திருவாவடுதுறை முதலான தலங்களை வணங்கிக்கொண்டு, திருப்பழையாறைவடதளி என்னும் தலத்தை அடைந்து திருக்கோயில் விமானத்தைத் தொழுதார். அங்குள்ளோர் இது சமணர் தெய்வத்தின் விமானம் என்றனர். நாவுக்கரசர் மனம் புழுங்கிச் சிவபெருமான் திருவுருவத்தை இக் கோயிலுட் கண்டாலன்றி மேற்போகேன் என்று திருவமுது கொள்ளாது பட்டினி கிடந்தார். அடியார் பசி பொறாது ஆண்டவன் சோழமன்னன் கனவில்தோன்றி ‘நாவுக்கரசன் நம்மைக் காணச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான், அமணர் நம் கோயிலை மறைத்தனர். நீ அவர்களை அழித்து நமக்கு ஆலயம் செய்க’ என்று கட்டளையிட்டனன். அவ்வாறே அரசனும் சமணர் மறைத்திருந்த சிவலிங்கத்தை வெளிப்படுத்தி நாவுக்கரசரை வணங்கினான். அமணர்களை யானையை ஏவி அழிக்கச் செய்தான். வடதளியில் பெரிய சிவாலயமெடுத்துச் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தான். திருநாவுக்கரசரும் ஆலயத்துட்சென்று “தலையெலாம்\" ன்று தொடங்கிப் பதிகம் பாடிப் போற்றினர்.

பொதிசோறு பெற்றது:

திருநாவுக்கரசர் அங்குநின்றும் நீங்கி, ஆனைக்கா, எறும்பியூர், கற்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். பைஞ்ஞீலிக்குச்செல்லும் வழியில் நடையால் வருந்தி இளைத்தும் மனந் தளராமல் சென்றுகொண்டிருந்தார். தொண்டர் வருத்தம் தரியாத பெருமான் அவர் வரும் வழியில் சோலைகுளம் உண்டாக்கி அந்தணர் வடிவோடு பொதிசோறு சுமந்து வீற்றிருந்தார். திருநாவுக்கரசர் அருகில் வந்தவுடன் ‘வழிநடை வருத்தத்தால் மிக இளைத்தீர். என்பால் பொதிசோறு இருக்கிறது. உண்டு இளைப்பாறிச் செல்க’ என்று கூற, அவ்வண்ணமே பொதிசோறு உண்டு இளைப்பு நீங்கிய நாவுக்கரசரும் ‘தாங்கள் யார்? எங்கு செல்கின்றீர்கள்’ என்று கேட்க, அந்தணரும் நாம் திருப்பைஞ்ஞீலி செல்கின்றோம் என்று கூற, இருவரும் திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டனர். அந்தணர் பின்னே அப்பரும் சென்றார். திருப்பைஞ்ஞீலியை அடைந்ததும் இறைவன் மறைந்தான். அப்பர் இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து பாடித் துதித்தார். அங்கு சிலநாள் தங்கித் திருவண்ணாமைலக்குப் புறப்பட்டார். திருவண்ணாமைல, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார். திருக்கயிலைங்கிரியில் இறைவனைக் காணும் பெருவிருப்பு விளைந்தது. அங்கிருந்து திருக்கயிலாய யாத்திரையை மேற்கொண்டார்.

திருக்கயிலைக் காட்சி:

வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு தெலுங்கு, கன்னடம், மாளுவம், இலாடதேசம், மத்தியப் பிரதேசங்களைக் கடந்து காசியை அடைந்து விசுவேசனைத் தரிசித்து இன்புற்றார். அங்கிருந்து அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய், காடுமேடு, மலை, மணல் பரப்புக்களில் நடந்துசென்றார். இரவுபகலாய் நடந்துசென்றதால் நாவுக்கரசரின் திருவடிகள் பரடுவரைதேய்ந்தன. கால்களால் நடக்கலற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முறிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக் கிடந்தார். பெருமான் திருநாவுக்கரசர் இன்னும் சிலகாலம் இவ்வுலகில் தீந்தமிழ்ப் பாமாலை பாடவேண்டும் என்று திருவுளங்கொண்டு அவர் கிடந்த இடத்தின் அருகே தடாகம் ஒன்று தோற்றுவித்து தாம் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று நோக்கினார். ‘அங்கம் சிதைய இவ்வருங்கானில் வந்தது என் கருதி?’ என்று முனிவர் கேட்க, அப்பரும் ‘இறைவனைத் திருக்கயிலையில் கண்டு தரிசித்து இன்புற வேண்டும்’ என்ற விருப்பத்தால் வந்ததைக் கூறினர். எழுந்தருளிய சிவபிரான், ‘திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும், இதுவே தக்கது’ என்று கூற அப்பரும், ‘என்னை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’ என்று உறுதி மொழிந்தார். முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் ‘நாவினுக்கரசனே! எழுந்திரு’ என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து ‘அண்ணலே, கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி’ எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய் ‘இத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்க’ என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். உலகம் வியப்பக் கரையேறி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங் கோயில் கயிலைங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்க, விண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திரு நாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து ’மாதர்ப் பிறைக்கண்ணியானை’ என்ற திருப்பதிகம் பாடித் தொழுதார். பின்னும் பலபதிகங்கள் பாடித் திருவையாற்றில் பலநாள் தங்கி உழவாரப்பணி புரிந்து இன்புற்று இருந்தார். திருவையாற்றிலிருந்து நெய்த்தானம் மழபாடி முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருப்பூந்துருத்திக்கு வந்தார். சிலநாள் பூந்துருத்தியில் தங்கும் விருப்புக்கொண்டார். மிக உயர்ந்த திருமடம் ஒன்று நிறுவினார். அங்குத் தங்கியிருந்து பல்வகைப் பதிகங்களையும் பாடிப் பரவி வந்தார்.

சம்பந்தர் சந்திப்பு 3:

திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியிலிருந்தபொழுது, திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணரை வாதில் வென்று, பாண்டியனையும் மக்களையும் சைவத்தின் சிறப்புணரச்செய்து திரும்பியவர், திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் இருப்பதை அறிந்து அவரைக் காணும் விருப்பம்கொண்டு பூந்துருத்தியை அடைந்தார். ஞானசம்பந்தர் வருகையைக் கேட்ட நாவுக்கரசர் அவரை நேரே காணும் பெருவிருப்போடு திருஞானசம்பந்தரைச் சூழவந்த அடியார் கூட்டத்தை வணங்கி, ஞானசம்பந்தர் ஏறிவரும் சிவிகையைத் தாமும் ஒருவராய்த் தாங்கி வந்தார். பூந்துருத்திக்கு அருகாக வந்ததும் சம்பந்தர், ‘அப்பர் எங்குற்றார்?’ என வினவ, அப்பரும் ‘உம் அடியேன் உமது திருவடிகள் தாங்கும் பெருவாழ்வு வந்து உய்தப்பெற்று இங்குற்றேன்’என்று கூறியருளினர். அதைக்கேட்ட பிள்ளையார் பதைபதைத்து, விரைந்து கீழே இறங்கி அப்பரைப் பணிய வந்தார். அவர்க்கு முன் நாவுக்கரசர் பணிந்தார். இவ்வாறு இருவரும் சந்தித்து இறைவன் திருமுன் சென்று பணிந்து அத்தலத்தில் உடன் எழுந்தருளி அளவளாவியிருந்தனர். திருஞானசம்பந்தர் வாயிலாக மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பெருமையைக் கேட்ட திருநாவுக்கரசர் அவர்களைக் கண்டு மகிழவும் பாண்டியநாட்டுத் தலங்களைத் தரிசிக்கவும் புறப்பட்டார். திருஞானசம்பந்தரும் தொண்டைநாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார்.

பாண்டிநாட்டுத் தலயாத்திரை :

திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட்டுத் திருப்புத்தூர் சென்று பணிந்து பாடி திருவாலவாய்க்குச் சென்றார். செந்தமிழ்ச் சொக்கனையும் அங்கயற்கண்ணியையும் பாடி வணங்கி னார். பாண்டியமன்னன் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் அடிபணிந்துபோற்ற மதுரையில் சிலநாள் தங்கினார். பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூவணம் இராமேச் சுரம் நெல்லை கானப்பேர் முதலிய தலங்களைத் தரிசித்துச் சோணாடு திரும்பினார்.

பல பதிகளையும் மீண்டும் தரிசித்துக்கொண்டு திருநாவுக் கரசர் திருப்புகலூரை அடைந்தார். நாடோறும் இறைவனைப் பல பதிகங்களால் பாடியும் உழவாரப்பணி செய்தும் திருப்புகலூரில் தங்கி யிருந்தார்.

திருப்புகலூரில் திருவடிப்பேறு :

இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய் யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன். அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி `உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன்` என்னும் கருத்தமைந்த `பொய்மாயப் பெருங்கடலில்` என்று தொடங்கும் திருத் தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து அரசை வணங்கி அகன்றனர்.

இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். முன்னுணர்ச்சியால் `புகலூர்ப்பெருமான் சேவடிக்கீழ்த்தம்மைப் புகலாகக்கொள்வான்` என்ற கருத்துப்பட திருவிருத்தங்கள் பலவும் பாடினார்.

எல்லாவுலகமும் போற்ற ``எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ`` என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.

அகச்சான்றுகள் :

காலக் குறிப்பு :

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார்களில் சிறுத் தொண்டரும் சமகாலத்தவர் என்பது வரலாற்றால் இனிது விளங்கும் உண்மை. திருநாவுக்கரசர் முதிர்ந்தவயதிலேயே திருஞான சம்பந்தரைச் சந்தித்திருக்கவேண்டும் என்பதுதெளிவு. சம்பந்தர் நாவுக்கரசரை அப்பரே என்று அழைத்த வரலாற்றுக் குறிப்பும் இதனை வலியுறுத்தும். இவர்கள் காலங்களில் குறிக்கப்படும் மன்னர்கள் பல்லவர்களில் மகேந்திரவர்மனும், பாண்டியர்களில் நெடுமாறனும் சாளுக்கியர்களில் புலிகேசியும் ஆவர்.

மகேந்திரவர்மன் கி.பி.600 முதல் 630 வரை காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவன். சமணர் சொற்கேட்டு திருநாவுக்கரசரைத் துன்புறுத்தியவனும் பின் திருநாவுக்கரசர் பெருமையை உணர்ந்து சிவபிரான் திருவருட்பேற்றுக்குரியவனாய்க் குணபரன் என்ற தன் பெயரால் குணபரஈச்சரம் என்ற திருக் கோயிலைத் திருவதிகையில் கட்டியவனும் இம் மன்னனேயாவன். இவன் ஆட்சிக்காலம் மேலே குறித்துள்ளதாகும். சைவனாக மாறிய பிறகு சமணம் புத்தம் முதலிய மதங்களை இழித்துக் கூறியுள்ளான். தான் நிறுவிய திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலில் தான் சமணனாக இருந்து சைவனான நிகழ்ச்சியைக் குறித்துள்ளான். பாண்டியர்களில் திருஞானசம்பந்தரால் சைவனாக்கப்பெற்ற மன்னன் நெடுஞ்செழியன் கி.பி.640 முதல் 670 வரை ஆட்சி புரிந்தவன்.

நரசிங்கவர்மனது படைத்தலைவராயிருந்து வடபுலத்திற் சென்று செய்த வாதாபிப்போரில் வெற்றி கொண்ட பரஞ்சோதியாரே சிறுத்தொண்டராவர். வாதாபிப்போர் கி.பி.642 இல் நடந்திருக்க வேண்டும். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள இக் குறிப்புக்களைக் கொண்டு கி.பி. 574 க்கும் 655 க்கும் இடையே அப்பர் சுவாமிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கோவைகிழார் ஆராய்ந்து கூறி யுள்ளார். பழைய வெண்பா ஒன்று அப்பருக்கு வயது எண்பத்தொன்று என்று கூறுகிறது.

முன்னைநிலை :

திருநாவுக்கரசர் ஒரு முனிவராய்த் திருக்கயிலையில் தவம் இயற்றிய பெரியார் என்றும் இறைவனருளால் திருநாவுக்கரசராகத் திருவவதாரம் செய்தார் எனவும் பெரியபுராணத்துள் குறிப்பிக்கப் படுகிறது.

``உன்னுடைய மனக்கவலை ஒழிநீஉன் னுடன் பிறந்தான்

முன்னமே முனியாகி எனையடையத் தவம்முயன்றான்``

(தி.12 திருநாவு. புரா. 48)

``நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே பன்னிய நூற் றமிழ்மாலை

பாடு வித்தென், சிந்தை மயக் கறுத்த திரு வருளி னானை`` (அப். தே.)

``நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்

செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை` (அப். தே.)

``மறப்படுமென் சிந்தைமருள் நீக்கினான் காண்`` (அப். தே.)

திலகவதியாரைத் துதித்தல் :

திலகவதியாரே திருநாவுக்கரசரின் முதல் ஆசிரியர். திலகவதியார் திருவைந்தெழுத்தோதிக் கொடுத்ததே இவர்க்குரிய முதல் தீகை்ஷயாயிற்று. திருநாவுக்கரசர் திலகவதியாரைச் சிவனருளே என்று பல இடத்தும் துதிக்கின்றார்.

``ஈன்றாளு மாய்எனக் கெந்தையு மாய்உடன் தோன்றி னராய்

மூன்றாய் உலகம் படைத்துகந் தான்மனத்

துள்ளிருக்க ஏன்றான்`` (தி.4. ப.94. பா.1)

``துணையா யென்னெஞ்சம் துறப்பிப்பாய் நீ``

``எம்மை யாரிலை யானும்உ ளேனலேன்

எம்மை யாரும் இதுசெய வல்லரே

அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கு

அம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே`` (தி.5. ப.7 பா.6)

சூலை நீங்கியது :

திருநாவுக்கரசர் சூலைநோயால் வருந்தியதும் இறையருளால் நீங்கியதும் அவர் பாடிய திருப்பதிகத்துட் குறிக்கப்பெற்றுள்ளது.

``தோற்றாதென் வயிற்றினகம்படியே குடரோடு துடக்கி

முடக்கியிட, ஆற்றேன்`` (தி.4. ப.1. பா.1)

``சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்`` (தி.1. ப.1. பா. 3- 4)

``பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூரர்`` (தி.4 ப.5 பா.3)

``உறுபிணியார் செறலொழிந்திட்டு ஓடிப்போனார்``

(தி.6. ப.98. பா.5)

``சூலைதீர்த்தடியேனை ஆட்கொண்டாரே`` (தி.6. ப.96. பா.3)

சமணராயிருந்தது :

திருவாரூர்த் திருப்பதிகத்துள் எல்லாப் பாடல்களிலும் திரு நாவுக்கரசர் தாம் சமண் சமயம் சார்ந்து வருந்தியதைக் குறிப்பிடு கின்றார்கள். மற்றும் பல பாடல்களாலும் சமணருள் ஒரு பிரிவினரான குண்டர் குழுவிற் சேர்ந்திருந்தமையைக் குறிப்பிடுகின்றார்கள்.

``குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார் நகைநாணாது உழிதர்வேனை`` (தி.4. ப.5. பா.4)

``பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம்

சொல்லிய செலவு செய்தேன்`` (தி.4. ப.39 . பா.7)

``பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்டு

எண்ணில்புகழ் ஈசன்தன் அருள்பெற் றேற்கும்``

(தி.4. ப.101. பா.7)

``குண்டரோடு அயர்த்து நாளும் மறந்தும் அரன் திருவடிகள்

நினையமாட்டா மதியிலியேன்........

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.``

(தி.6. ப.91. பா.8)

என்பன முதலிய பல பாடல்களாலும் தாம் சமணராயிருந்ததையும் மீண்டும் சைவராய் இறையருள் பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசனழைக்க மறுத்தது :

சிவனுக்காட்பட்டுத் தொண்டுபூண்ட உறுதியும் வேந்தர்க்கு அஞ்சாத மனஉறுதியும் பல (ப.98) பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

``நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்``

``துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்

சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே``

``பாராண்டு பகடேறி வருவார்சொல்லும் பணிகேட்கக்

கடவோமோ பற்றற் றோமே``

``நாவலந்தீ வகத்தினுக்கும் நாதரான

காவலரே ஏவிவிடுத் தாரேனும் கடவமலோம்``

``சிவன்என் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன்

தானேவந்து கோவாடிக் குற்றேவல்செய் கென்றாலும்

குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே``

நீற்றறையில் இருந்தது :

திருநாவுக்கரசரைச் சமணர் நீற்றறையில் இட்டனர். அவர் இறைவன் திருவருளால் எத்தகைய துன்பமும் இன்றியிருந்தனர். அந்நீற்றறை இறைவன் திருவடி நிழல் போலக் குளிர்ந்திருந்தது. இவ்வற்புத நிகழ்ச்சியை நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிட்டுள்ளார்.

``சிவசம்பந்தத் திடைத்தவம் செய்து திரியும்

பத்தியிற் சிறந்தவர்

திலகன் கற்றசிட்டன் வெந்தொளிர் திகழும்

பைம்பொடித்த வண்டணி

கவசம்புக்கு வைத்து அரன்கழல் கருதும்

சித்தனிற் கவன்றிய

கரணம் கட்டுதற் கருத்துள களகம்புக்க

நற்கவந்தியன்``

நஞ்சுகலந்தளிக்கப் பெற்றது :

சமணர் நஞ்சுகலந்த பாற்சோறளித்து உண்ணச் செய்தனர் என்பது திருநாவுக்கரசர் பாடலால் தெளிவாகின்றது.

``துஞ்சிருள் காலைமாலை`` என்று தொடங்கும் திருப்பாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

``வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர்தந்த

நஞ்சமு தாக்குவித்தார்`` (தி.4. ப.70. பா.5)

`விடம் அடையார்இட ஒள் அமுதாத்துற்றவன்` எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்காலும இதனையறியலாம்.

மதயானையை ஏவப்பெற்றது :

சினமிக்க மதயானையைத் திருநாவுக்கரசர்மீது சமணர் ஏவினர். நாவுக்கரசர் இறைவன் தமர் நாம். நாம் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்று `சுண்ணவெண் சந்தனச் சாந்தும்` என்ற திருப் பதிகம்பாடி இறைவன் திருவடிகளை எண்ணி இருந்தார். வந்த யானை வலம் வந்து பணிந்து சென்றது. `சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்ற திருப்பதிகத்துள் `அஞ்சுவதியாதொன்றுமில்லை அஞ்ச வருவது மில்லை` என்று அஞ்சாமையும்
``தலைவ னாகிய ஈசன் தமர்களைக்

கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே(ா) ``

என்ற திருப்பாடலில் இந்நிகழ்ச்சியையும் குறிப்பாகப் புலப்படுத்தி யுள்ளார்.

கல்லொடு கடலில் இடப்பெற்றது :

சமண குருமார்களின் சொற்படி பல்லவமன்னன் திருநாவுக் கரசரைக் கல்லொடு பிணைத்துக் கடலில் தள்ளுமாறு கட்டளை யிட்டான். கடலில் இடப்பெறற திருநாவுக்கரசர் திருவைந்தெழுத்தைத் துதித்து `சொற்றுணை வேதியன்` என்னும் திருப்பதிகம் பாடிக் கல்லே புணையாகக் கரைசேர்ந்தார்.

``கற்றுணைப் பூட்டி யோர்கடலில் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே`` (தி.4. ப.11. பா.1)

``கல்லி னோடெனைப் பூட்டி அமண் கையர்

ஒல்லை நீர்புக ஊக்கஎன் வாக்கினால்

நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்

நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேனன்றே`` (தி.5. ப.72. பா.7)

``நெடுநீரில் நின்றேற நினைந்தருளி

ஆக்கினவாறடியேனை``

``நெடுநீரில் நின்றேற நினைந்தருளி உருக்கினவாறடியேனை``

என்பன அகச்சான்றுகள். நம்பியாண்டார் நம்பிகளும் இதனைப் போற்றுவர்.

``தெண்கடலிற்பிணியன கல்மிதப்பித்தன

நாவுக்கரசர் பிரான்றன் அருந்தமிழே``

-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி.

சூலக்குறி இடபக்குறி பெற்றது :

திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத் திருக்கோயிலில் திருநாவுக்கரசர் சூலக்குறி இடபக்குறி பொறிக்கப்பெற்றனர். பிறமதத்துள்ளும் இதுபோன்ற சமயச்சின்ன முத்திரை பொறிக்கும் வழக்கம் உள்ளது.

``மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேற் பொறி``

``இடபம் பொறித்தென்னை யேன்று கொள்ளாய்``

(தி.4. ப.109. பா.1, 10)

திருவடி சூட்டப் பெற்றது :

திருச்சத்தி முற்றத்துள் இறைவனைத் திருவடி தீகை்ஷ செய்யு மாறு வேண்டி இறைவன் அருள்வாக்குப்படித் திருநல்லூர் சென்று சிவபெருமானால் திருவடி தீகை்ஷ செய்யப்பெற்ற வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள்.

``பூவாரடிச்சுவடு என்மேற் பொறித்துவை

. ......திருச்சத்தி முற்றத்துறையும் சிவக்கொழுந்தே`` (தி.4. ப.96. பா.1)

``நனைந்தனைய திருவடி யென்தலைமேல் வைத்தார்

நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே`` (தி.6 ப.14 பா.1, 11)

``காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் வந்தென்

மேலவாய் இருக்கப் பெற்றேன்`` (தி.4 ப.37 பா.1)

``அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என்

தலைமேல் வைத்த தீங்கரும் பை`` (தி.6 ப.68 பா.4)

``பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே`` (தி.6 ப.38 பா.1)

நம்பியாண்டார் நம்பிகளும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

``நற்றவன் நல்லூர்ச்சிவன் திருப்பாதம்தன்

சென்னிவைக்கப் பெற்றவன்``

-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி

விடந் தீர்த்தது :

அப்பூதியடிகள் திருநாவுக்கரசரையே தெய்வமாகக் கருதி அவர் பெயரையே தாம் செய்யும் அறங்களுக்கும் வழங்கியதை வரலாறு கூறுகிறது. நம்பியாண்டார்நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில்

``தனமாவது திருநாவுக் கரசின் சரணமென்னா

மனமார்புனற்பந்தர்வாழ்த்திவைத்தங்கவன்வண்டமிழ்க்கே

இனமாத்தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்

அனமார் வயற்றிங்களூரினில் வேதியன் அப்பூதியே``

-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி

என்று குறிப்பிட்டுள்ளார். அவரைச் சந்தித்தற்குச் சான்றாக ``வஞ்சித் தென்`` என்று தொடங்கும் பாடலில் அப்பூதியாரின் பக்தி போற்றப் பட்டுள்ளது. மூத்த திருநாவுக்கரசரை விடந்தீண்டியதும், திருநாவுக் கரசர் ``ஒன்று கொலாம்`` என்று தொடங்கி விஷம் தீர்க்கப் பாடியதும், பாடியவுடன் சிறுவன் எழுந்து வணங்கினான் என்பதும் வரலாறு.

திருவாதிரைத் திருநாள் :

திருப்புகலூரில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரைச் சந்தித்தபொழுது திருவாரூர்த் திருவாதிரைச் சிறப்பைச் சொல்லி யருளியதற்கு அப்பதிகமே சான்றாக உள்ளது. ``அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்`` என்று முடியும் தொடர் திருவாதிரைச் சிறப்பைத் தெரிவிக்கிறது.

படிக்காசு பெற்றது :

திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தரும் திருநாவுக் கரசரும் நாடோறும் படிக்காசு பெற்றுத் தொண்டர்க்கு அமுதளித்தனர் என்பதும், திருஞானசம்பந்தர்க்கு வாசியுள்ளகாசும், திருநாவுக் கரசர்க்கு வாசியில்லாக்காசும் இறைவனால் அளிக்கப்பெற்றன என்பதும், திருஞானசம்பந்தர் வாசிதீரப்பாடிக் காசுபெற்றார் என்பதும் வரலாறு.

``பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு

வாடிவாட்டம் தவிர்ப்பா ரவரைப்போல்``

(தி.5. ப.50. பா.7)

நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடையபிள்ளையார் திரு வந்தாதியில் இதனைக் குறித்துள்ளார்.

``பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற

நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்

நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்

கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே``.

-தி.11ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி. 80

சேந்தனார் திருவீழிமிழலைத் திருவிசைப்பாவிலும் இச் செய்தியைக் கூறியுள்ளார்.

``பாடலங் காரப் பரிசில்கா சருளிப்

பழுத்தசெந் தமிழ்மலர் சூடி

நீடலங் காரத்தெம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்துநின் றானை``

- தி.9 திருவிசைப்பா. 57

மறைக்கதவம் திறப்பித்தது :

திருமறைக்காட்டில் வேதங்கள் அடைத்த கதவைத் திரு நாவுக்கரசர் ``பண்ணினேர் மொழியாள்`` என்று தொடங்கித் திறக்கப் பாடியதும், திருஞானசம்பந்தர் அடைக்கப் பாடியதும் வரலாறு.

``கண்ணி னால் உமைக் காணக் கதவினைத்

திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே`` (தி.5. ப.10. பா.1)

``திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

உறைப்புப் பாடிஅ டைப்பித் தாருந் நின்றார்`` (தி.5 ப.50 பா.8)

``சரக்க இக்கத வம்திறப் பிம்மினே`` (தி.5. ப.10. பா.11)

நம்பியாண்டார் நம்பிகள் திருவந்தாதியிலும் இச்செய்தி குறிக்கப்படுகிறது.

``மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்

திணியன நீள்கத வம்திறப் பித்தன`` -தி.11 திருத். திருவந்தாதி. 25

வாய்மூருக்குவா என்றழைக்கப்பெற்றது :

திருமறைக்காட்டுத் திருமடத்துள் உறங்கிக்கொண்டிருந்த திருநாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு வருக என்றழைத்ததும் அங்கே காட்சி வழங்கியதும் வரலாறு.

``உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்

தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி

என்னை வாவென்று போனார்`` (தி.5. ப.50. பா.2)

``எங்கேஎன்னை இருந்திடம் தேடிக் கொண்டு

அங்கே வந்தடை யாளம் அருளினார்........

திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று

போனார்`` (தி.5. ப.50. பா.1)

``தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்

அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்``

(தி.5. ப.50. பா.3)

``கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்``

``ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ``

``செந்தமிழ் உறைப்புப்பாடி

அடைப்பித் தாரும் நின்றார் மறைக்கவல் லரோதம்மை``

(தி.5. ப.50. பா.4, 7, 8)

``பாட அடியார் பரவக்கண்டேன்......வாய்மூர்

அடிகளை நான்கண்ட வாறே`` (தி.6. ப.77. பா.1)

உண்ணா நோன்பு மேற்கொண்டது :

பழையாறை வடதளித் திருக்கோயிலுள் இருக்கும் இறைவரை ஒளித்து சமணர் தம் பாழியாகக்கொண்டிருந்தனர். திருவாக்கரசர் அங்குச் சென்றபோது மீண்டும் அக்கோயிலுள் சிவபிரானைத் தரிசித்தாலன்றி உண்பதில்லை என விரதங்கொண்டதும், அரசன் கனவில் இறைவன் தோன்றி மீண்டும் கோயில் எடுக்கச் செய்ததும், சமணர்களை அழிக்கச் செய்ததும் வரலாறு.

``தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்

நிலையி னான்மறைத் தால்மறைக் கொண்ணுமோ``

``ஆளுறா ஆயிரம் சமணும் அழிவாக்கினான்``

``மூக்கினான் முரன்றோதியக் குண்டிகை

தூக்கினார் குலந் தூரறுத்தே தனக்கு

ஆக்கினான்`` (தி.5. ப.58. பா.9,2)

பொதிசோறு பெற்றது :

திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி செல்லும்போது வழிநடை வருத்தமும் பசியும் தீர இறைவன் பொதி சோறு அளித்ததும், திருப்பைஞ்ஞீலி வரை அழைத்துச் சென்று மறைந்ததும் வரலாறு. சேக்கிழார் பெருமான் ``ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை யெனப் பாடல் புரிந்து`` திருநாவுக்கரசர் வணங்கி னார் என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பைஞ்ஞீலித் திருப்பதிகம் ஒன்றே உள்ளது. அதில் இக்குறிப்பில்லை. ஆகையால் இத்திருப்பதிகம் கிடைக்கவில்லை என்றறிகின்றோம். கோயம்புத்தூர் திரு. சீ.கே.எஸ். அவர்களும் இதனைக் குறித்துள்ளார்கள்.

கயிலைக் காட்சி :

திருக்காளத்திமலையில் இறைவனைத் தொழுத திருநாவுக் கரசர்க்குத் திருக்கயிலாய தரிசனம் செய்யவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. ``கனத்தகத்தான் கயிலாயத் துச்சி உள்ளான் காளத்தி யான் அவன் என் கண்ணுளானே`` என்று காளத்தியிலிருந்தே பாடிப் பரவினார். அங்கிருந்து திருக்கயிலாய யாத்திரை சென்றதும் இறைவன் இன்னும் சிலகாலம் தமிழ்மாலை பாடவேண்டுமென்ற கருத்தால் திருநாவுக்கரசரைத் திருவையாற்றில் தோன்றச்செய்து கயிலைக் காட்சி காட்டியருளியதும் வரலாறு.

கயிலைக் காட்சியை அப்பர் நேரிற் கண்டு அதன் இயல்பு களை உள்ளவாறு பாடியருளியதை திருப்பதிகக் குறிப்புக்கள் நன்கு உணர்த்தும். மேலும் காடொடு நாடும் மலையும் கைதொழது போற்றிச்சென்ற திருநாவுக்கரசைரைப் பெருமான் தவமுனிவராய் வந்து பொய்கையில் மூழ்கும்படிச் செய்து திருவையாற்றில் தோன்றச்செய்து கயிலைக் காட்சி வழங்கியருளிய இவ்வரலாற்றினை,

``ஏடுமதிக் கண்ணியினானை ஏந்திழையா ளொடும்பாடிக்

காடொடு நாடும் மலையும் கைதொழுதாடா வருவேன்``

(தி.4. ப.5)

எனவும்,

``யாதும் சுவடுபடாமல் ஐயா றடைகின்றபோது

காதல் மடப்பிடியோடும் களிறுவருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்``

(தி.4. ப.3. பா.1)

``நெடுநீரில் நின்றேற நினைந்தருளி

ஆக்கினவா றடியேனை ஐயாறன்``

``நெடுநீரில் நின்றேற நினைந்தருளி

உருக்கினவா றடியேனை ஐயாறன்`` (தி.4. ப.91. பா.3, 4)

எனவும் கூறிய தொடர்களால் நாம் நன்கு அறியலாம்.

திருவையாற்றில் தென்கயிலை என வழங்குவதும், அப்பர் அடிகள் கயிலைக் காட்சி கண்ட திருவிழாக்கள் முதலிய இத்தலத்து நிகழ்தலும் அறிதற்குரியன.

திருப்புகலூரில் :

திருநாவுக்கரசர் புகலூர்ப்பெருமான் திருவடிகளையே சரணெனக் கொண்டு உழவாரத்தொண்டு செய்து திருப்பதிகங்கள் பாடித் தங்கியிருந்தார். பொறிவாயில் ஐந்தவித்த அவருடைய பற்றற்ற நிலையை இறைவன் பலவாறு வெளிப்படுத்துகின்றான்.

பெண்ணாசை, பொருளாசை இவற்றிலும் தூய்மையுடையார் என்பதை உலகம் அறிய உழவாரம் செய்யும் இடங்களில் பொன்னும் மணியும் தோன்றச்செய்தும், ஊர்வசி முதலான அரம்பையரை ஆடச் செய்தும் இவை இரண்டாலும் இவர்தம் உளஉரத்தைப் புலப்படுத்து கின்றான் இறைவன்.

``பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற

புண்ணியங்காள் தீவினைகாள் ...

இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே`` (தி.6. ப.27. பா.1)

நம்பியாண்டார் நம்பிகள் இவ்வற்புத நிகழ்ச்சியைத் திரு ஏகாதச மாலையில் (பா.2) விவரித்துள்ளார்கள்.

``திருநாவுக் கரசடி யவர்நாடற் கரியவர்

தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்

வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில

வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்

உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்

உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்

குருவாகக் கொடுசிவன் அடிசூடத் திரிபவர்

குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே``

திருப்புகலூரில் இறைவன் திருவடியடையும் முன்னுணர்வு தோன்றப் பல பதிகங்களைப் பாடியுள்ளார் அப்பர்.

``தன்னைச் சரணென்று தாளடைந் தேன் தன் அடியடையப்

புன்னைப் பொழிற்புகலூ ரண்ணல்செய்வன கேண்மின்களோ

என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நகத்

தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே``

(தி.4. ப.105. பா.1)

``உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர்மேவிய

புண்ணியனே`` (தி.6. ப.99. பா.10)

கல்வெட்டுக்களில் :

இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் (கி. பி. 1013 -14) திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருளுவித்துத் திருவிளக்கு அணிகலன் முதலியன அளித்துள்ள செய்தி குறிப்பிடப்படுகிறது.

``பாதாதிகேசாந்தம் இருபத்து இருவிரலே இரண்டுதோரை உயரத்து இரண்டு திருக்கை உடையராகக் கனமாக எழுந்தருளுவித்த திருநாவுக்கரசர் பிரதிமம் ஒன்று; இதனொடுங் கூடச்செய்த எண் விரலே ஆறுதோரைச் சம சதுரத்து நால்விரல் உயரத்து பீடம் ஒன்று`` என்பது கல்வெட்டு வாசகம். மேலும், தஞ்சைப் பெரியகோயிலில் திருமுறை ஓதுதற்கு நாற்பத்தெட்டுபேரும் உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்பார் இருவரும் நியமிக்கப்பெற்றிருந்த செய்தி பிறிதோர் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கல்வெட்டுக்களிலிருந்து இராஜ ராஜசோழன் காலத்தும் இராஜேந்திர சோழன் காலத்தும் சமயாசாரியர் வழிபாடு சிறந்திருந்த செய்தி அறியலாம்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவவதாரத் தலமாகிய திருவாமூர்ப் பசுபதீசுவரர் ஆலயத்தில் குலோத்துங்கன் I காலத்தில் இரவீசுவரம் உடையார் கோயிலில் தாபித்திருக்கும் திருநாவுக்கரைய தேவர் திருக்கோயில் திருப்பணிகளுக்குத் திருமுனைப்பாடி நாட்டுக் கிழாமூர் மக்கள் ஒரு வேலி நிலம் விற்று அளித்த செய்தி காணப்படு கிறது. மேலும் பிற்காலத்து, திருவாமூர்க்கு அருகில் முத்து ரெட்டியார் என்பவர் (1933-1934) மூன்றுகாணித் தோப்பு ஒன்றை விளக்கு வைப்பதற்காக அளித்துள்ளார்.

திருவதிகைக் கோயிலில் குலோத்துங்கன் வாகீசர் மடத்திற்கு நிலம் அளித்த செய்தியும், அவ்வரசன் காலத்தில் அதிராசமாங்கலிய புரத்துக் குடிமக்கள் 4800 குழி நிலத்தைத் திருநாவுக்கரசர் மடத்தில் அன்னதானமளித்தற்கு வழங்கியருளிய செய்தியும் கூறப்படுகிறது. குலோத்துங்கனின் போர்ப்படைத் தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான் செய்த திருநாவுக்கரசர் ஆலயத்தைத் திருப்பணி செய்த விவரம் பாடல்களால் குறிக்கப்பெற்றுள்ளது.

``ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள

மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்

விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ

விளைவித்தான் தொண்டையர் மன்``

என்பது அக்கல்வெட்டுப் பாடல்.

திருவாரூர், தியாகேசர் திருக்கோயிலில் குலோத்துங்கன் II காலத்தில் மூவர் திருவுருவங்களைத் தாபித்து நிலதானம் அளித்த செய்தி காணப்படுகிறது. கல்வெட்டில் வடமொழி வாசகத்தில் திருநாவுக்கரசரை வாக்கதிபதி என்று குறிக்கப்படுகிறது.

திருப்புகலூரில் திருநாவுக்கரசர் கோயிலுக்கு இராஜராஜன் I நித்திய பூஜைக்கு நிபந்தம் அளித்துள்ளான். இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் குளிச்செழுந்த நாயனார் என்று வரும் பெயர் கயிலைகாணச் சென்று தடாகத்து மூழ்கி எழுந்த காரணத்தால் அப்பரடிகளைக் குறிப்பிடும் பெயரெனக் கொள்ளலாம். மேலும் திருமுறை ஓதுவார்க்கு நிபந்தமளித்த செய்தியும் காணப்படுகிறது. மேலும் திருவீழிமிழலை, திருமயானம், தீர்த்தநகரி, திருக்கச்சூர், திருப்புத்தூர், கோயிலூர், சூலமங்கலம், கீரனூர் முதலிய தலங்களில் திருநாவுக்கரசர் தொடர் பான செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இராஜராஜசோழன் II காலத்தில் திருவலஞ்சுழியிலும், குலோத்துங்கன் III காலத்தில் திருக்கச்சூரிலும், குலோத்துங்கன் III காலத்து சித்தூரிலும், இராசேந்திரன் III காலத்தில் கோயிலூரிலும், ஜடாவர்மன் வீரபாண்டியன் காலத்தில் சேரமாதேவியிலும், வீரபாண்டியன் காலத்து தீர்த்தநகரியிலும், விக்கிரம பாண்டியன் காலத்தில் திருப்புத்தூரிலும், பராக்கிரமபாண்டியன் காலத்தில் சூல மங்கலத்திலும் திருநாவுக்கரசர் திருவுருவப் பிரதிஷ்டை திரு விழாக்கள் முதலியன நிகழ்த்திய செய்தியும் நிலதானம் முதலிய வழங்கிய செய்தியும் குறிக்கப்பெற்றுள்ள. திருவீழிமிழலை, திருவதிகை, திருவான்மியூர், திருக் குறுக்கை பூதக்குடி முதலிய இடங்களில் அப்பரடிகளுக்குத் திருமடம் இருந்த செய்தி கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

திருநாவுக்கரசர் திருப்பெயரை மக்கள் பெயராகவும் திரு வீதியின் பெயராகவும் அளவு கருவிகளின் பெயராகவும் வழங்கி வந்தமையும் கல்வெட்டுக்களில் காணலாம்.



சிவமயம்

திருநாவுக்கரசர் பெருமை

தருமை ஆதீனப் புலவர், பல்கலைக்கல்லூரி முதல்வர்,

சித்தாந்த சிரோமணி, சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி, முதுபெரும்புலவர்.

வித்துவான் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்

திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் சைவ வேளாளர் குலத்தில், குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் தோன்றியவர். திலகவதியார்க்குப் பின் வந்தவர். `மருள் நீக்கியார் என்ற பெயரினார். கலை பலவும் நிரம்பக் கற்றவர். இருவரும் பெற்றோரை இழந்தனர்.

திலகவதியாரை மணக்க இசைந்த கலிப்பகையார் சோழ மன்னன் படைத் தலைவர். அவர் சென்று வடநாட்டு மன்னரொடு நெடுநாள் போர் புரிந்து துறக்கம் உற்றார். அதை அறிந்த திலகவதியார் தாமும் இறக்கத் துணிந்தபோது, மருள்நீக்கியார் விழுந்து வணங்கி, `அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உம்மை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன். இனி என்னைத் தனியாகக் கைவிட்டு ஏகுவீர் எனில், யானும் உமக்கு முன்னம் உயிர் நீப்பன்` என்று மொழிந்து இடருள் முழுகினார். திலகவதியாரும் `தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா`, இறப்பை விலக்க, உயிர் தாங்கி, அம் பொன் மணி நூல் தாங்காது, அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி, மனைத்தவம் புரிந்திருந்தார். சிவபெருமான் திருவடிக்கண் அன்பு பூண்டு, திருவருள் நெறி ஒழுகி வாழ்ந்தார். மருள்நீக்கியார் சமண் சமய நூல்களைக் கற்றார். அச் சமயத்தைச் சார்ந்தார். சமணர்க்குத் தலைவராய்த் தருமசேனர் எனப் புகழ் பெற்று விளங்கினார்.

திருவதிகையில் திருத்தொண்டு புரிந்துறையும் திலகவதியார், தம் தம்பியார் பர சமயமான படுகுழியில் வீழ்ந்து கெடுவதை ஆற்றாராய், திருவீரட்டானேசுவரரை நாள்தொறும் வேண்டி, அக் குழியினின்றும் சைவ சமயப் பேரின்பக் கரையில் ஏற்றியருளப் போற்றினார். `சூலை நோய் தந்து ஆட்கொள்வோம் கவலாதே` என்று கனவில் அருளினார் அதிகைப்பிரானார். அவ்வாறே அவர்க்குச் சூலை நோய் உண்டாயிற்று. மந்திரம் முதலியவற்றால் நீக்க முயன்றனர். நோய் மேன்மேல் மிகுந்ததே அன்றிக் குறைந்திலது. மிக வருந்தித் தமக்கையார்க்குச் சொல்லி அழைத்துவர ஆள்விட்டார். அவர் அங்கு வாரேம் என்றார். மருள்நீக்கியாரே தமக்கையார்பால் ஏவலன் துணைக்கொண்டு வந்தார்; கண்டார்; வணங்கினார்.

திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப், பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று உருஆர அணிந்து. உற்ற இடத்து உய்யும் நெறி தரும் அவர், முன் செல்லப் பின்சென்று, திருவீரட்டானத்திறைவர் பெருங்கோயிலைத் தொழுது வலங் கொண்டு இறைஞ்சி நிலமிசை விழுந்தார். தம்பிரான் திருவருளால் தமிழ்மாலைகள் சார்த்தும் உணர்வுற்றார். குருவருள் கிடைக்கப் பெற்றார்.

`கூற்றாயினவாறு விலக்ககிலீர்` எனத் தொடங்கும் திருப் பதிகம் பாடினார். சூலை அகன்றது. திருவருள் பெறத் துணை யாயிருந்த சூலைக்குச் செய்யும் நன்றியை நாடினார். சிவபிரான், செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடை பாடியதற்குத் திருவுளம் மகிழ்ந்ததால், `நாவுக்கரசு என்னும் பெயர் வழங்குக` என்று வானிலே உடலிலியொலியாக ஒரு வாய்மை எழுந்தது. அந்நாள் முதல், முப்பொறித் தூய்மையொடும் திருப்பணி செய்பவராய், சிவ சின்னம் பூண்டு, தியானம் ஞானம் திருவாசகம் உழவாரம் எல்லாம் கொண்டு கசிந்துருகி வழிபட்டு இன்புற்றிருந்தார்.

சமணர் துன்புறுத்த முயன்று, நீற்றறையில் இட்டனர். `ஈசன் அடியார்க்கு ஈண்டு வருந்துயர் உளவோ`? `வீங்கிள வேனிற் பொழுது; தைவருதண் தென்றல்; தண்கழுநீர்க்குளம்போன்று; மொய் ஒளி வெண்ணிலவு அலர்ந்து; மாசில் வீணை யொலியினதாகி; ஈசன் எந்தை இணையடி நீழல் அருளாகிக் குளிர்ந்தது அந்நீற்றறை. மாசிலாமதியும் மங்கையாம் கங்கைப் புனலும் மன்னி வளர் சென்னியன் எனப் பேச இனியானை வணங்கி இனிதிருந்தார் நாவரசர். ஏழுநாள் கழித்து, பல்லவனும் சமணர் பல்லவரும் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். வியந்தனர். இன்ப வெள்ளத்தில் முழுகி அம்பலவாணர் மலர்த் தாளமுதுண்டு தெளிந்து உவந்திருந்த நாவரசரைத் தீய நஞ்சு கலந்த பாலடிசில் உண்ணப் பண்ணினர். எந் நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு, இந் நஞ்சும் அமுதாயிற்று. ஆனது அற்புதமோ? ஆளுடைய அரசரை மிதிக்க யானையை ஏவினர். அது பாகனையும் சமணரையும் சுண்ணம் ஆக்கி, நம் அண்ணலை வணங்கிப் போயிற்று. மந்தரகிரி போலும் அது மன்னனையும் வருத்திற்று.

கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினர் சமணர். சொற்றுணை வேதியன் பொற்றுணைத் திருந்தடி தொழுது நீலக்குடியரன் நல்ல நமச் சிவாய நாமத்தை நவிற்றி நன்றே உய்ந்தார் நாவரசர். மும்மலமான கல்லில் இருவினையான கயிற்றால் ஆர்த்துப் பாவக்கடலிற் பாய்ச்சப் படும் மாக்களை முத்திக் கரையில் ஏற்றியருளும் அத் திருவைந் தெழுத்து, நாவரசை இவ்வுவர்க்கடலின் ஆழாது ஒரு கல் மேல் ஏற்றுதல் வியப்போ? திருப்பாதிரிப்புலியூரை அடுத்த கரையேற விட்ட குப்பமே அவ்வுண்மையைத் தேற்றி நிற்குஞ் சான்றாகும். அத் `தோன்றாத் துணை` யைத் தொழுது உண்மையை உணர்வார் உணர்க.

சொல்வேந்தர் திருவதிகையிற்சென்று வழிபட்டு வாழ்ந்திருந் தார். பல்லவ மன்னன் பல்லவமும் நீங்கி நல்லவனாகி, நாயனாரை வணங்கித் தூயனும் சைவனும் ஆனான். சமணருடைய மடம் கோயில் முதலியவற்றைச் சிவாலயம் ஆக்கினான்.

``பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்

கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச் சரம்எடுத்தான்``

நாவரசர் சிவதலம் பலவ்ற்றை அடைந்து வழிபட்டுப் பாடி னார். சமண்சார்பு தீர நினைந்து வேண்டித் திருத்தூங்கானை மாடத்தில் `வடியேறு திரிசூலக் குறி` `இடபம்` ஆகிய இலச்சினை திருத்தோளிற் பொறிக்கப்பெற்றார். தில்லைச்சிதம்பரத்தை வணங்கி எல்லையில்லா இன்புற்றார். திருக்காழியில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, `அப்பர்` எனப் பெயர் உற்றார். ஆனந்தவுருவானார். அளவில்லாச் சிவதலங்களை வழிபட்டுத் திருச்சத்திமுற்றத்தில் திருவடி சூட்ட வேண்டினார். திருநல்லூரில் நனைந்தனைய திருவடி தலைமேல் வைத்தருளப் பெற்று நம்மையும் வாழ்வித்தார். திங்களூரில் தம்மை மறவாது தம் திருவடியையே என்றும் அன்பால் செப்பும் ஊதியம் கைக்கொண்ட அப்பூதியடிகளாரின் பிள்ளையான மூத்த திருநாவுக்கரசு, நச்சராத் தீண்டி இறக்க, திருவருளைத் துணைக் கொண்டு உயிர்ப்பித்தருளினார்.

திருவாரூர் முதலிய தலங்களைப் போற்றினார். திருஞான சம்பந்தர், முருக நாயனார் முதலோரொடும் திருப்புகலூர் முதலிய வற்றை வழிபட்டார். திருவீழிமிழலையிற் படிக்காசு பெற்றுப் பஞ்சம் தீர்த்து மக்களை வாழ்வித்தார். திருமறைக்காட்டில் விண்ணோர் பூசித்துச் சார்த்திய திருக்கதவு திறக்கப், பண்ணினேர் மொழியாளுமை பங்கரைப் பாடினார். சோணாடு, நடுநாடு, தொண்டைநாடு முதலிய வற்றில் உள்ள பல சிவதலங்களைப் பணிந்தார். திருக்கயிலையை வணங்கப் பெருமுயற்சிகொண்டு பேரிடர்ப்பட்டார். பந்தணவும் மெல்விரலாள் பங்கன் திங்களணி செஞ்சடையன் அந்தணன் ஆகிப் போந்து, உரையாடி, பழுதிலாத் திருமேனியாக்கி, அழுதுருகிநிற்கும் ஐயரை ஐயாற்றிற் சென்று பொய்கையிற் கயிலையைக் காண்க என்று ஏவி, அவ்வாறே காட்டக் கண்டு களித்துப் பாடினார். அங்கு அது திருக்கோயிலாகி இன்றும் இலங்குகின்றது.

திருப்பூந்துருத்தியிற் சென்று வழிபட்டுத் தங்கியிருந்தார். காழிவேந்தர் பூழிவேந்தனை வாழ்வித்து மீண்டு அங்குற்றநாளில், சிவிகை தாங்கிப் புவியில் ஓங்கினார். அவ்வூர்த் திருமடத்தில் வாழ்ந்தனர் இருவரும் சிலகாலம். பாவேந்தர் பாண்டிநாடடைந்தார். திருவாலவாய், திரு விராமேச்சுரம் முதலியவற்றை வழிபட்டார். சோணாட்டை மீண்டும் உற்றார். திருப்புகலூரிலே வழிபாடு செய்துகொண்டிருந்தபோது, உழவாரப்படையால் செதுக்கும் இடங்களில், பொற்குவையும் நவமணிக்குவையும் தோன்ற அவற்றை ஓடும் கல்லுமாக மதித்து வீசி யெறிந்தார் குறைவிலாத நிறைவினார். வானர மகளிர் வந்து வானரச் செயல் பல புரிந்தனர். வாகீசர் மயங்காத மனத்தீசருமாய் விளங்கி னார். மயக்கவலியின்றித் தியக்கம் எய்தி மீண்டனர் அம் மகளிர். திருப்புகலூரிலே இடையறாது வழிபட்டு மன்னிய அன்புறுபத்தி வடிவான வாகீசர் பல பாடி, சிவாநந்த ஞானவடிவேயாகி, அண்ண லார் சேவடிக் கீழ் அமர்ந்துள்ளார். அந்நாள் சித்திரைச் சதயத் திருநாள்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடி வாழ்க!