காழி (சீகாழி சீர்காழி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்


மரம்: பவழமல்லி
குளம்: பிரம தீர்த்தம்

பதிகங்கள்: தோடுடையசெவி -1 -1 திருஞானசம்பந்தர்
மைம்மரு -1 -4 திருஞானசம்பந்தர்
வண்டார் -1 -9 திருஞானசம்பந்தர்
பிறையணி -1 -19 திருஞானசம்பந்தர்
பூவார்கொன் -1 -24 திருஞானசம்பந்தர்
விதியாய் -1 -30 திருஞானசம்பந்தர்
பல்லடைந்த -1 -47 திருஞானசம்பந்தர்
வண்டரங்க -1 -60 திருஞானசம்பந்தர்
எரியார்மழு -1 -63 திருஞானசம்பந்தர்
பங்கமேறு -1 -66 திருஞானசம்பந்தர்
நறவநிறை -1 -74 திருஞானசம்பந்தர்
காலைநன் -1 -75 திருஞானசம்பந்தர்
அயிலுறுபடையினர் -1 -79 திருஞானசம்பந்தர்
நல்லார்தீமேவு -1 -81 திருஞானசம்பந்தர்
அரனையுள்குவீர் -1 -90 திருஞானசம்பந்தர்
எய்யாவென்றி -1 -97 திருஞானசம்பந்தர்
உரவார்கலை -1 -102 திருஞானசம்பந்தர்
ஆடலரவசைத்தான் -1 -104 திருஞானசம்பந்தர்
வாருறுவன -1 -109 திருஞானசம்பந்தர்
காடதணி -1 -117 திருஞானசம்பந்தர்
பந்தத்தால் -1 -126 திருஞானசம்பந்தர்
பிரமபுரத் -1 -127 திருஞானசம்பந்தர்
சேவுயருந் -1 -129 திருஞானசம்பந்தர்
செந்நெலங்கழ -2 -1 திருஞானசம்பந்தர்
நல்லானை -2 -11 திருஞானசம்பந்தர்
நிலவும்புன -2 -17 திருஞானசம்பந்தர்
உகலியாழ்கட -2 -25 திருஞானசம்பந்தர்
முன்னியகலைப் -2 -29 திருஞானசம்பந்தர்
எம்பிரான் -2 -40 திருஞானசம்பந்தர்
பண்ணினேர் -2 -49 திருஞானசம்பந்தர்
உருவார்ந்த -2 -54 திருஞானசம்பந்தர்
நலங்கொள்முத் -2 -59 திருஞானசம்பந்தர்
கறையணிவே -2 -65 திருஞானசம்பந்தர்
பிரமனூர் -2 -70 திருஞானசம்பந்தர்
விளங்கியசீர்ப் -2 -73 திருஞானசம்பந்தர்
பூமகனூர் -2 -74 திருஞானசம்பந்தர்
விண்ணியங்கும் -2 -75 திருஞானசம்பந்தர்
பூதத்தின் -2 -81 திருஞானசம்பந்தர்
நீலநன்மா -2 -83 திருஞானசம்பந்தர்
அறையும்பூம் -2 -89 திருஞானசம்பந்தர்
பொங்குவெண்புரி -2 -96 திருஞானசம்பந்தர்
நம்பொருள் -2 -97 திருஞானசம்பந்தர்
அன்னமென் -2 -102 திருஞானசம்பந்தர்
பொடியிலங்குந் -2 -113 திருஞானசம்பந்தர்
விடையதேறி -2 -122 திருஞானசம்பந்தர்
பந்துசேர் -3 -2 திருஞானசம்பந்தர்
இயலிசையெனு -3 -3 திருஞானசம்பந்தர்
தக்கன்வேள்விதகர்த்த -3 -5 திருஞானசம்பந்தர்
கண்ணுதலானும் -3 -7 திருஞானசம்பந்தர்
மின்னன -3 -13 திருஞானசம்பந்தர்
மண்ணிநல்ல -3 -24 திருஞானசம்பந்தர்
கரமுனம்மலராற் -3 -37 திருஞானசம்பந்தர்
சந்தமார்முலை -3 -43 திருஞானசம்பந்தர்
இறையவனீ -3 -56 திருஞானசம்பந்தர்
சுரருலகு -3 -67 திருஞானசம்பந்தர்
எந்தமது -3 -75 திருஞானசம்பந்தர்
சங்கமருமுன் -3 -81 திருஞானசம்பந்தர்
பெண்ணியலு -3 -84 திருஞானசம்பந்தர்
விண்ணவர்தொழு -3 -94 திருஞானசம்பந்தர்
கரும்பமர் -3 -100 திருஞானசம்பந்தர்
வரமதே -3 -110 திருஞானசம்பந்தர்
உற்றுமைசேர் -3 -113 திருஞானசம்பந்தர்
யாமாமாநீ -3 -117 திருஞானசம்பந்தர்
மின்னியவர -3 -118 திருஞானசம்பந்தர்
பார்கொண்டு -4 -82 திருநாவுக்கரசர்
மாதியன்று -5 -45 திருநாவுக்கரசர்
சாதலும்பிறத் -7 -58 சுந்தரர்
திருவளர் பவளப் -11 -27 பட்டினத்தடிகள்

முகவரி: சீர்காழி அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609110
தொபே. 04364 270235

மயிலாடுதுறை - சிதம்பரம் பாதையில் சீகாழி தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே சுமார் 1.5.கி.மீ தூரத்தில் இருக்கின்றது.

மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்துச் சாலையில் உள்ளது. இது காவிரிக்கு வடகரையில் பதினான்காவது தலமாகும்.

பிரமபுரத்தில்: இறைவரது திருப்பெயர் பிரமபுரீசுவரர். இறைவியாரது திருப்பெயர் திருநிலைநாயகி.

தோணிபுரத்தில்: இறைவரது திருப்பெயர் தோணியப்பர். இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி.

தீர்த்தம் பிரமதீர்த்தம். இது வடக்குக்கோபுரவாயிலுக்குத் தென்கிழக்கில், திருநிலை அம்மையார் கோயில் திருமுன்புள்ளது. திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு ஞானப்பால் ஊட்டப் பெற்றது இத்தீர்த்தக்கரையில்தான்.

இதுவன்றி, சூலதீர்த்தம், ஆனந்ததீர்த்தம், காளிதீர்த்தம், வைணவதீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழிதீர்த்தம், சங்கதீர்த்தம், சுக்கிரதீர்த்தம், பராசரதீர்த்தம், அகத்தியதீர்த்தம், கௌதமதீர்த்தம், வன்னி தீர்த்தம், குமாரதீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேதுதீர்த்தம், அண்டதீர்த்தம், பதினெண்புராணதீர்த்தம், புறவநதி, கழுமலநதி, விநாயகநதி என்னும் தீர்த்தங்கள் இருக்கின்றன.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திரு அவதாரஞ் செய்தருளப் பெற்ற பதி இது. அவர் மூன்றாம் ஆண்டில் நீராடச் சென்ற தந்தையாருடன் சென்று, பிரமதீர்த்தக்கரையில் பசித்திருக்க அம்மையப்பரால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற பெருமை வாய்ந்தது. ஞானசம்பந்தப் பெருந்தகையாருடைய பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு நாயனார் சீகாழிக்கு எழுந்தருளிவந்து அவரை வணங்கி அவருடைய நட்பைப் பெற்றதோடு அவரால் அப்பர் என்னும் திருநாமத்தைப் பெற்ற சிறப்புடைய பதி இது.

சுந்தரமூர்த்தி நாயனார் சீகாழிக்கு எழுந்தருளியபோது, இது ஞானசம்பந்தப் பெருந்தகையார் அவதரித்த திருப்பதி என்று மிதித்தற்கு அஞ்சி நகர்ப்புறத்து நின்று பாட இறைவர் அங்குக் காட்சி தரக்கண்ட பெருமை வாய்ந்தது.

திருநீலகண்டயாழ்ப்பாணர் எழுந்தருளி ஆளுடைய பிள்ளையாரை வணங்கி அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து அவருடன் இருக்கும் பெருமை பெற்றது. கணநாத நாயனார் அவதரித்த திருப்பதியும் இதுவே.

இத்தலத்தில் திருத்தோணியப்பர் பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குரு வடிவமாய் அமைந்திருக்கின்றார். பஞ்சகிருத்தியங்களைச் செய்தருளுதற்குப் பிரமபுரீசுவரர் மூலலிங்கமாய் எழுந்தருளியிருக்கிறார்.

திருத்தோணிக்குத்தென்பால் சட்டைநாதர் பேரின்ப சித்திகளை அருளுதற்பொருட்டுச் சங்கமவடிவாய் விளங்குகின்றார். ஆதலால் இது குருலிங்கசங்கம பதியாய்ச் சிறந்து விளங்கும் பெற்றிவாய்ந்தது.

சந்திரன், முருகவேள், ஆதிசேடன் முதலானவர்களும் பூசித்துப் பேறு பெற்ற சிறப்பினையுடையது. மூவர் முதலிகள் பாடிய எழுபத்தொரு பதிகங்களை உடைய தனிச்சிறப்பு இப்பதிக்கு உரியதாகும்.

இக்காழியில் முக்கிய தெய்வமாக விளங்குகிறவர் சட்டைநாத சுவாமி. இவரது மூர்த்தம் சிவமூர்த்தங்களுள் ஒன்று. இரணியனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக்கொண்ட காரணத்தால் இவர் இப்பெயர்பெற்றார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் அர்த்த சாமத்தில் இவருக்குச் சிறந்த வழிபாடு நடைபெற்றுவருகிறது.

இங்கு வடுகநாதருக்கு நித்தியபூசையும், வெள்ளிக்கிழமை தோறும் நைமித்திகபூசையும், சித்திரைமாதத்துப் பரணியில் விசேட பூசைகளும் நடைபெற்றுவருகின்றன.

இது சீகாழி என்னும் தலமாகும். காளி, சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, இத்தலத்தில் இலிங்கமொன்றை எழுந்தருளுவித்து வழிபட்டுப் பேறுபெற்றமையால் இது காளிபுரம் என்னும் பெயர் எய்திற்று.

ஸ்ரீகாளி என்னும் பெயரே சீகாழி என மருவியது. ஸ்ரீபாதம் - சீபாதம்; ஸ்ரீமாந் - சீமான்.

சென்னைப்பட்டினம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவேட்டீசுவரன்பேட்டை, இராயப்பேட்டை, கோமளேசுவரன் பேட்டை, இராயபுரம், எழும்பூர் முதலான பல ஊர்களையும் சேர்த்து இக்காலம் சென்னை என வழங்குவதுபோல, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயர்களைத் தனித்தனியே கொண்ட பன்னிரண்டு தலங்களும் வெவ்வேறாய் இருந்து வழங்கிவரப்பெற்ற பதிகளைச் சீகாழி என ஒரு தலத்தின் பெயரைச் சொல்லுதலாலே ஏனைப் பதினொன்றையும் உணர்த்தும் வழக்கம் நேர்ந்தது.

இரண்டாவது திருமுறையுள் காழி, கொச்சைவயம், சிரபுரம், பிரமபுரம், புகலி, பூந்தராய் என்னும் ஆறு மட்டும் உள்ளன. இவற்றுள் பிரமபுரம் (பிரமாவால் பூசிக்கப்பெற்றது). இது சீகாழி பெரிய கோயிலுள் பிரமேசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை உடைய பகுதியாகும்.

தோணிபுரம் என்பது பிரளயகாலத்தில் தோணி போல மிதந்த காரணம்பற்றியதாகும். இது சீகாழி பெரிய கோயிலில் தோணியப்பர் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் தோணி வடிவமாய் அமைந்த திருக்கோயில் உள்ள பகுதியாகும்.

சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளி, திருஞான சம்பந்தப்பெருந்தகையார்க்குக் காட்சிதந்தருளிய அருள் வெளிக்கு ஞாயிறுகாணி என்று பெயர்.

இங்குள்ள நந்தவனத்திற்கு இந்திர நந்தவனம் என்னும் பெயர் இன்றும் வழக்கில் இருக்கிறது. இது சிவ பூசைக்காக முற்காலத்தில் இந்திரன் அமைத்ததாகும்.

வலம்புரி மண்டபத்தில் பல சித்திரங்கள் பழங்காலத்தில் எழுதப்பெற்றிருக்கின்றன. அவற்றுள் கிள்ளிவளவனைப் பற்றிய செய்திகள் காணப் படுகின்றன.

பட்டினத்து அடிகள் இத்தலத்திற்கு மும்மணிக்கோவை இயற்றியுள்ளார்கள். அது திருக்கழுமல மும்மணிக்கோவை என்னும் பெயருடையது. இது பதினொன்றாந் திருமுறையில் சேர்க்கப் பெற்றுள்ளது.

இத்தலபுராணம் சீகாழி அருணாசலக் கவிராயரால் எழுதப் பெற்றது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சீகாழிக்கோவை என்னும் நூலை இயற்றியுள்ளார்கள்.அது வலம்புரி மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. இப்புராணமும் கோவையும் அச்சில் வெளிவந்துள்ளன.

1937 இல் வெளிவந்துள்ள சீகாழித் தலபுராணத்தில் வசனமும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. அதை எழுதியவர் வித்துவ சிகாமணி, திரு. ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளை ஆவர்.

இத்தலம் தருமை ஆதீன அருளாட்சியிலுள்ளது. கோயில் மிகத் தூய்மையாக இருக்கின்றது. இருபத்தாறாம் பட்டத்து எழுந் தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் பிற்காலத்துச் சோழமன்னர்கள் செய்தது போலத் திடீரென்று ஆலயத்திற்கு எழுந்தருளி நித்தியநைமித்திகங்கள் எல்லாம் குறைவற நடக்கின்றனவா எனக் கவனித்தருளுகின்றார்கள்.

இங்குச் சித்திரையில் நடைபெறும் பிரமோற்சவத்தின் இரண்டாம்நாள் விழாவே திருமுலைப்பால் விழாவாகும். இவ்விழா நாட்களில் கூடும் பெருந்திரளான மக்கள் பயனுறும் பொருட்டுத் திருமுறை மாநாடுகளை ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஆண்டுதோறும் கூட்டுவித்தருளுகின்றார்கள்.

திருமுறை இசைவாணர் ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி பட்டமும் ரூ. 1000 அடங்கிய பண முடிப்பும் அளித்தருளுகின்றார்கள்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்களுள் பரகேசரிவர்மன், இராஜகேசரிவர்மன் முதலான சோழமன்னர் காலங்களிலும், பல்லவ அரசனாகிய கோப்பெருஞ் சிங்கன் காலத்திலும், விஜயநகரவேந்தர்களுள் வீரவிருப்பண்ண உடையார் வீரப்பிரதாப கிருஷ்ணதேவமகாராயர் வேங்கடதேவ மகாராயர் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற நாற்பத்தாறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவற்றுள் திருக்கழுமலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருத்தோணிபுரம் உடையார்.

இறைவியார் பெரியநாச்சியார்.

திருஞானசம்பந்தர் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருப்பெயர்களால் கூறப்பட்டுள்ளனர். இக்கல்வெட்டுக்கள் பெரும்பாலும் இறைவருக்குத் திருநந்தவனம், திருநந்தாவிளக்குக்கள், அடைக்காயமுது, இலையமுது முதலியவைகளுக்கு நிபந்தங்கள் அளிக்கப்பெற்ற செய்திகளை உணர்த்துவதோடு, இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளநாடு இராஜாதிராஜ வளநாடு என்னும் பெயர்பெற்றிருந்தது என்பதையும் தெரிவிக்கின்றன.

இக்கோயிலில் ஆளுடையபிள்ளையாரை எழுந்தருளு வித்தவர் உய்யவந்தாள் இராசவிச்சாதிரி என்னும் அம்மையார் ஆவர். இவர் திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டானின் அடுக்களைப் பெண்டுகளில் மூப்புவாய்ந்தவர் ஆவர்.

அடுக்களைப் பெண்டிர் என்பவர் அரசனது அரண்மனையில் சமையல் செய்பவர். விச்சாதிரி (வித்யாதிரி) எனப் பட்டம் பெற்றிருப்பதால் இவர் இசைபாடுதலில் வல்லவர் என்றும் பெறப்படுகின்றது.

ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் முதல் பிராகாரத்துத் திருமதில் திருப்பணியைப் புரிந்தவர் கங்கைகொண்ட சோழபுரத்துக் கங்கைகொண்ட சோழன் திருமதிலுக்குள் வடகூரில் உத்தமசோழப் பெருந்தெருவிலிருந்த வானமாளிகை உடையான் வேம்பன் வைசியார் மகன் நுரம்பூண்டான் ஆவன்.

ஆளுடையபிள்ளையார்க்கு அர்ச்சனைகளுக்காக உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டு மாத்தூரில் மாத்தூருடையான் கோவன்நம்பி காணி நிலத்தில் நாலுவேலி நிலத்தை அர்ச்சனாபோக இறையிலியாக, திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் அவன் ஆட்சியின் ஆறாம் ஆண்டு நாள் நூற்றுத் தொண்ணூற்று மூன்றில் அளித்துள்ளான்.

இந்த நிவந்தத்தை அரசன் திருக் காளத்திக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்தே விட்டுள்ளான். சோழவளநாட்டு ஆக்கூர்நாட்டுத் தலைச்சங்காட்டுச் சபையார் தங்கள் ஊரில் மும்முடிச்சோழன் பேரம்பலத்தில் கூடியிருந்து கழுமலத்து ஆளுடையபிள்ளையார்க்குத் திருப்பாற் போனகம் அமுது செய்தருளுகைக்குத் திருமடைப்பள்ளிப் புறமாகத் தலைச்சங்காட்டைச் சேர்ந்த சிற்றூராகிய சோழ பாண்டிய நல்லூரில் கண்ணாறு என்று பெயரிட்டு அழைக்கப் பெற்ற விளைநிலமும் குளமும், திடலும் ஆகக் குழி பதினாயிரமுள்ள ஐந்துவேலி நிலத்தைக் கொடுத்துள்ளனர்.

வீரஹரிஹரராயர் குமாரர் ஸ்ரீ வீரவிருப்பண உடையார் கி.பி. 1393 இல் தில்லைவிடங்கன்நல்லூரில் நூற்றுநாற்பதுமா நிலத்தை ஆளுடையபிள்ளையார்க்குச் சர்வமான்யமாகக் கொடுத்துள்ளார்.

வெண்மணிகிழான் ஆட்கொண்டநாயகன் திருநட்டப் பெருமான் ஆளுடையபிள்ளையார்க்கு நாள் அமுதுக்கும், சிறப்புத் திருநாள்களுக்கும், ஆண்டுத் திருநாள்களுக்கும் கறியமுதாக அமுது செய்தருளுதற்குத் திருக்கழுமலத்தில் முக்காணி அரைக் காணிக்கீழ் ஒருமா நிலத்தை விட்டுள்ளான்.

நடராசப்பெருமானைப்பற்றியது: சோழநாட்டில் சுத்தமலி வளநாட்டு வெண்ணிக்கூற்றத்து குணநாடான உடையான் அரையன் தேவும் திருவும் உடையானான பொத்தப்பிச்சோழன் வீரபாண்டியனை வென்று பாண்டியநாட்டிலிருந்து கூத்தாடுந் தேவரையும் (நடராஜரையும்) அவர்தம் நாச்சியாரையும் கொண்டுவந்து திருத்தோணிபுரமுடையார் கோயிலில் திருநடை மாளிகையில் எழுந்தருளுவித்து அவர் பூசைக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு ஆக்கூரில் இரண்டுவேலி நிலத்தை அளித்துள்ளான். இது நிகழ்ந்தது இராஜாதிராஜதேவரின் பதினொன்றாம் ஆட்சியாண்டாகும்.

இத்திருக்கோயிலில் திருக்கைகொட்டியில் திருமுறைகள் எழுந்தருளுவிக்கப் பெற்றிருந்தன. அவைகள் பழுதடையும் போது புதுப்பிப்பதற்கும், அவைகளைப் பூசித்து இருக்கைக்கும் கிராம காரியஞ் செய்கிற பெருமக்கள் நிலம் அளித்துள்ளனர்.

ஆளுடைய பிள்ளையார் கோயில் மங்கையர்க்கரசி நாச்சி யாரை முன்னரே எழுந்தருளுவிக்கப் பெற்றிருந்தனர்.

அவ்வம்மையார்க்கு அமுதிசைந்தருளுகைக்குத் திருமடைப்பள்ளிப் புறமாகத் திருக்கழுமலநாட்டு வீரசோழநல்லூரிலிருந்து சுவாமி சந்தோஷப் பல்லவ அரையர் முதலானோர் திருபுவனச் சக்கரவர்த்திகள் ராஜராஜதேவரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் நிலம் அளித்திருந்தனர்.

இவ்வூரில் திருநெறிமாளிகை மடம் என்று ஒன்று இருந்தது. இதை இவ்வூரில் உள்ள வீரவிருப்பண உடையார் கல்வெட்டுத் தெரி விக்கின்றது.

 
 
சிற்பி சிற்பி